நெஞ்சுக்கு நீதி
இடைத் தேர்தல் - திருவண்ணாமலை · 126 / 391
இடைத் தேர்தல் - திருவண்ணாமலை இடையில், திருவண்ணாமலை இடைத் தேர்தல்! கழக வேட்பாளர் நண்பர் ப.உ.சண்முகம்! 29-6-63-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் பணிகள் என்னை பெரிதும் ஆட்கொண்டன. காங்கிரஸ் ஆட்சியோ கட்டவிழ்த்து விட்டிருந்தது தன் அதிகார பலம் அனைத்தையும். என்றாலும் வெற்றிக்கனி கிட்டியதோ கழகத்திற்கே! இறுமாந்து கிடந்த காங்கிரஸ் எதேச்சதிகாரத்திற்கு நண்பர் ப. உ. சண்முகத்தின் வெற்றி பலத்த அடி மட்டும் அல்ல.
பின்னர் அந்தக் கட்சிக்குத் தொடர்ந்து ஏற்பட்டிருந்த தோல்வி மாளிகைக்குப் போடப்பட்ட முதல் படியும் ஆகும். கழகத்திற்கு வாய்த்திட்ட அந்தத் திருவண்ணாமலை வெற்றித் தீபத்திலே காங்கிரஸ் ஆட்சியின் எல்லாவித 'மவுசு'களும் கரைந்துருகின மெழுகாக. ஜூன் 30-ல் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பொழுது அண்ணா மாயவரத்தில் இருந்தார். இனிப்புச் செய்தியினை நான் அவருக்கு நேரிலே சென்று வழங்கிய போது அவர் சொன்னார், "இன்று எல்லா வகைகளிலும் நான் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்" என்று.
அண்ணாவின் வளர்ப்பு மகன்கள் பரிமளம், இளங்கோ ஆகிய இருவருக்கும் அன்றுதான் திருமணம் உறுதி செய்யப்பட்டிருந்தது. அதனையும் மனதிற்கொண்டுதான் அவர் அப்படிக் குறிப்பிட்டார். கழகம் வெற்றி பெற்றது குறித்துக் கருத்தினை அறிந்திட முற்றுகையிட்டனர் செய்தியாளர்கள். "ஏதாவது அறிக்கை இருக்கிறதா?"
என்று கேட்டனர். நாங்கள் யாருமே அறிக்கையாக எந்தச் சேதியும் தந்திடவில்லை. காங்கிரஸ் காளைகளின் கழுத்திலே விழுந்து விட்ட தோல்விப் புண்ணின் ஆழத்தை நாங்கள் தெளிவாகவே அறிந்திருந்தோம். எனவே, மேலும் அதனைக் குத்திக் காட்டிக் 'காக்கை வேலை' செய்து களிப்பிலே மிதக்க நாங்கள் நினைத்திடவில்லை. திருவண்ணாமலையில் அண்ணாவும் நானும் கலந்து கொண்ட இடைத் தேர்தல் வெற்றி விழா மிக எளிமையாகக் கொண்டாடப் பட்டது. விளக்குகள் கூட அதிகம் இல்லாமல் அந்த விழா ஏற்பாடாகியிருந்தது.
நான் அங்கு பேசும்போது, "குழந்தை பிறந்தவுடன் பத்து நாள் அது அறையில் இருக்கிற வரையில் குழந்தையின் மீது பழைய கம்பளித் துணியைத்தான் போர்த்தியிருப்பார்கள். அறையை விட்டு வெளியே வந்து கொஞ்ச காலமான பிறகுதான் பட்டுச் சொக்காய் தைத்துப் போடுவார்கள். அதுபோல திருவண்ணாமலை வெற்றிக் குழந்தைக்கு இன்று எளிய முறையில் விழா எடுக்கப்படுகிறது" என்று குறிப்பிட்டேன்.
திருவண்ணாமலை இடைத் தேர்தல் கழகத்தின் நெற்றியிலே வெற்றித் திலகம் இட்டதைப் போலவே, அண்ணாவின் அடக்கப் பண்பிற்கு - அகிம்சை நெறிக்கு - ஒரு புதிய புகழ் முடியை நாம் புனைந்து மகிழ்ந்திடவும் வழி வகுத்தது. எப்போதுமே காங்கிரஸ்காரர்கள், கழகத் தொண்டர்களுக்குக் கொடுக்கிற தொல்லைகள் ஏராளம், நமது கூட்டங்கள் நடைபெற முடியாதவாறு செய்திடும் கலகங்களும் கணக்கிலடங்கா. திருவண்ணாமலை இடைத் தேர்தலின்போது அவை இன்னும் அதிகமாகவே தலைவிரித்தாடின.
என்றாலும் அடக்கமே உருவான அண்ணாவின் அறிவுரைப்படியே அமைதி காத்தனர் கழகத் தோழர்கள். இதைப் பற்றி ஜூலை 2-இல் கோவையில் நடைபெற்ற கூட்டத்திலும் அண்ணா குறிப்பிட்டார். "திருவண்ணாமலை இடைத் தேர்தலின்போது, கழக மேடைகளில் காங்கிரஸ்காரர்கள் கொடியேற்றிக் கலகம் விளைவிக்க முயன்றிருக்கிறார்கள். என்றாலும், கழகத் தொண்டர்கள் பொறுமையையே கடைப்பிடித்திருக்கிறார்கள். ஆத்திரம் கொண்டிடவில்லை. அது எங்களுக்கு அதிக பலத்தைக் கொடுத்தது."
அண்ணாவின் இந்தச் சொற்களிலிருந்தே அமைதி வழியில் அவருக்கிருந்த ஈடுபாட்டை-காந்தியடிகளின் அகிம்சை நெறிக்கு அவர் அளித்த அளப்பரிய மதிப்பினை -நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். உலகிலே எந்தப் பகுதியிலாவது ஓர் அரசியல் மாற்றமோ விடுதலைப் போராட்டமோ நிகழும்போது அங்கே- வன்முறையே கொக்கரிக்கும்! வாள்களே வக்கணை பேசும்! குண்டுகள் எலும்பைத் துளைக்கும்! குருதியோ ஆறாய்ப் பாயும்! -இவைதான், வரலாற்று அத்தியாயங்கள் நமக்குக் காட்டிடும் வாடிக்கையான படங்கள்- பாடங்கள்.
ஆனால், காந்தியடிகளோ இந்திய விடுதலை இயக்கத்திற்கு ஒரு புதிய பாதையினை - புதுமையான நெறியினை-வகுத்தளித்தார். அது தான் அகிம்சை நெறி; அதுவே 'இந்தியாவின் தந்தை'க்கு அகிலப் புகழை அள்ளிக் கொண்டு வந்து சேர்த்தது; அதுவே பல 'புதிய காந்திகள்' அவருடைய வழித் தோன்றல்களாக ஆங்காங்கே உருவெடுக்கவும் உதவியது. எடுத்துக்காட்டாக 'எல்லைக் காந்தி' ஆனார் கான் அப்துல் கபார்கான். 'தென்னாப்பிரிக்கக் காந்தி' ஆனார் ஆல்பிரட் லுத்துலி.
'அமெரிக்கக் காந்தி', 'நீக்ரோ காந்தி' என்று அழைக்கப் பட்டார் மார்ட்டின் லூதர் கிங். 'ஈழத்துக் காந்தி' ஆனார் எஸ். ஜே. வி. செல்வநாயகம். இவர்கள் எல்லாரும் எந்த அகிம்சைத் தத்துவத்தினைத் தத்தம் இயக்கத்தவருக்கு எடுத்துச் சொன்னார்களோ அதையே தான் கழகத் தோழர்களுக்கும் அறிவுறுத்தினார் அண்ணா. வன்முறை நன்முறையல்ல. அது புன்முறை, அறவே புதைக்கப்பட வேண்டிய முறை என்பதனை வற்புறுத்துவதிலே அவர் குறியாக இருந்தார்.
அதனால்தான் திருவண்ணாமலைத் தேர்தல் முடிவிற்குப் பிறகு அந்த அடக்கத்தின் பிறப்பிடத்தைத் 'தென்னாட்டுக் காந்தி' என்று நான் அடிக்கடி அழைப்பதற்குத் தலைப்பட்டேன். 'முரசொலி' ஏட்டிலும் இதனை அதிகமாகக் குறிப்பிட்டு எழுதினேன். திருவண்ணாமலை இடைத் தேர்தல் இன்னொரு வகையிலும் எங்கள் சிந்தனையைக் கிளறிவிட்டது. காங்கிரஸ் கட்சியினரின் தாக்கும் சக்தியைக் கணக்கிடவும். கழகத்தவரின் தாங்கும் சக்தியைக் கணித்திடவும் அந்தத் தேர்தல் பெருமளவு துணை புரிந்தது அத்தகைய கணக்கை-கணிப்பை -அப்போதே சரியாகச் செய்து, அதற்கேற்பத் திட்டங்களைத் தீட்டத் தவறினால் அடுத்து வரும் பொதுத் தேர்தலில் ஆளும் காங்கிரசை வீழ்த்துவது எவ்வளவு கடினமாகிவிடும் என்பதைப் பற்றி நான் எண்ணிடலானேன்.
இதிலே கழகப் பொருளாளர் என்கிற முறையிலே எனக்குரிய கடுமையான உழைப்பையும், பொறுப்பையும் நான் உணர்ந்தேன். எதிரியின் மூல பலம் எது, எங்கே என்றெல்லாம் புரிந்திடாமல் போருக்குப் புறப்படுவது பொருளற்ற வேலையல்லவா? ஆகவே, ஆளும் காங்கிரஸ் கட்சியின் மூலபலம் பற்றிய ஆராய்ச்சியில் நானும் ஈடுபட வேண்டியதாயிற்று. கழைக் கூத்தாடிகள் கயிற்றின் மேல் நடந்து காட்டிட அதன் இரு நுனிகளையும் இழுத்துக் கட்டுவதற்குக் கம்பங்களை நட்டு வைப்பார்கள் அவ்வாறு கயிற்றின் இரு நுனிகளையும் இழுத்துப் பிடிக்கும் கம்பங்களைப் போலத்தான் காங்கிரசின் மூல பலம் இரண்டு சக்திகளில் கால் கொண்டிருப்பதாக நான் உணர்ந்தேன்.
ஒன்று: அதனுடைய ஆட்சி அதிகாரம். மற்றது; அதனுடைய பண பலம். ஆட்சி அதிகாரத்தைக் தகர்ப்பதென்பது கழகத்தின் மொத்தக் குறிக்கோள்; அந்தக் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ளவோ தக்க பண வலிமை வேண்டும். விளம்பரத் தட்டி வைப்பது முதல் மேடைக்கு விளக்கலங்காரம் செய்வது வரை எத்தனை எத்தனை சில்லறைக் காரியங்களுக்கெல்லாம்கூடக் காசை வாரி இறைக்க வேண்டும் என்பதைப் பொது வாழ்க்கையிலே முழுமையாக ஈடுபட்டவர்கள் தான் புரிந்து கொள்ள முடியும் சரியாக.
தமிழகத்தின் எல்லாத் தொகுதிகளிலும் தனித்தோ, தோழமைக் கட்சிகளுடனோ கழகம் காங்கிரசைப் பொருத வேண்டுமென்றால், தேர்தல் யந்திரம் முறையாக முடுக்கி விடப்பட வேண்டும். அதற்கு ஒவ்வொரு தொகுதியிலும் ஓடியாடி உழைக்கும் தொண்டர்களுக்குக் குறைந்த பட்சம் தேநீர் கொடுப்பதற்கேனும் கணிசமான அளவுகையிலே காசு வேண்டாமா? எனவே போதுமான அளவிற்கு நிதி திரட்டினால் தான், செல்வச் சீமான்களின் வேடிக்கைக் கூடாரமாகி விட்ட காங்கிரசை வீழ்த்திட முடியும் என்பது எனக்குத் திண்ணமாகப் பட்டது.
என் எண்ணத்திற்கு ஏற்றதொரு வடிவம் கொடுப்பதற்குரிய வாய்ப்பும் விரைவிலேயே வந்தது. அதுதான் 7-7-1963இல் சென்னைக் கடற்கரையிலே நடைபெற்ற 'திருவண்ணாமலை வெற்றிவிழாப் பொதுக் கூட்டம்'. அதிலே கலந்து கொண்டு உரையாற்றிய நான் இவ்வாறு என் கருத்தினை வெளிப்படுத்தினேன்: "...... 1967-ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் தி.மு.கழகம் தமிழகத்தினுடைய ஜனநாயகத்தைக் காப்பாற்றவும். தி.மு. கழக அரசு தமிழகத்தில் அமைந்தது என்கிற நல்ல செய்தியை அனைத்துலகத்துக்கும் அறிவிக்கின்ற சூழ்நிலை ஏற்படவும் வேண்டுமானால், நீங்கள் திருவண்ணாமலைத் தொகுதி இடைத் தேர்தலுக்குக் கழகம் திரட்டி வந்த தேர்தல் நிதிக்குச் சென்னையிலிருந்தும் தூத்துக்குடியிலிருந்தும் காணிக்கை அளித்து வந்தது போல், தொடர்ந்து தி.
மு. கழகத்தின் தேர்தல் நிதிக்குக் காணிக்கை அளித்துத் தீர வேண்டும்." "நமக்குச் சேருகின்ற பணம் எல்லாம் ஒரு காசு - இரண்டு காசாகச் சேருகின்ற பணம். இன்னும் இரண்டொரு இடைத் தேர்தலைத் தாங்கும். அந்த அளவுக்கு நாம் இந்த இரண்டு மாதங்களில் சேர்த்திருக்கிறோம்; முழுவதையும் நாம் திருவண்ணாமலையிலேயே செலவழித்து விடவில்லை. அதே போல், பொதுத் தேர்தலில் தி.மு.கழகம் வெற்றிபெற வேண்டுமானால், இருநூறு தொகுதிகளிலும் தி.
மு. கழகம் போட்டியிட்டாக வேண்டும். ஒரு தொகுதிக்கு ஐயாயிரம் என்று கணக்கு வைத்தாலும் சுமார் பத்து லட்சம் ரூபாய் பொதுத் தேர்தலில் நிதியாகத் திரட்டியாக வேண்டும். "ஆகவே அந்தப் பத்து லட்சம் ரூபாயைத் திரட்டுகின்ற வேலையை இந்த மேடையிலே நான் - பொருளாளர் என்ற முறையில் - தொடங்கி வைக்கின்றேன்."
-நான் இப்படித் தேர்தல் நிதி திரட்டும் பணியை - அதுவும் பத்து லட்சம் ரூபாய் சேர்க்கின்ற வேலையைக் குறிப்பிட்டதும், மேடையிலிருந்த அத்தனை அத்தனை பேருமே அதிர்ச்சிக்கு ஆளானார்கள். அறிஞர் அண்ணாவும் திகைத்துப் போனார். மேடைக்கு எதிரிலே அமர்ந்திருந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கழக முன்னணியினர் முகத்திலோ வியப்புக் குறிகள் உருவெடுத்து அவை வேதனைக் குறிகளாக மாறிக் கொண்டிருந்தன. இப்படி அறிவிக்கப் போவதை அண்ணா அவர்களிடம் கூட நான் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை.
ஏன் தெரியுமா? இவ்வளவு பெருந்தொகையைத் திரட்ட வேண்டிய ஓர் இமாலயத் திட்டத்தை அறிவிப்பதற்கு அண்ணா அவர்களின் ஒப்புதல் கிடைக்காது என்பது என் உள்ளத்திற்குத் தெளிவாகத் தெரியும். மற்ற நண்பர்களிடமும் இதைப் பற்றி நான் தெரிவிக்கவில்லை. எங்கே என்னுடைய குவிக்க வேண்டும் நிதியை என்னும் குன்றாத ஆர்வத் துடிப்பிற்கு மற்றவர்களுடைய உற்சாகமில்லாத மொழிகள் - அவநம்பிக்கையான உரைகள் - அணை போட்டு விடுமோ என்கிற அச்சமே இதற்குக் காரணம்.
அதனால்தான் திடீரென்று பொதுக் கூட்டத்தில் அறிவித்து, அடுத்த 1967 வரை கழகத்தின் முக்கியப் பணிகளில் ஒன்றாகப் பத்து லட்சம் ரூபாய் திரட்டுவதையும் உள்ளடக்கி விட வேண்டும் என்பதே என்னுடைய திட்டம். நடைபெற்றதோ திருவண்ணாமலை வெற்றி விழாக் கூட்டம். நான் கழகத்தவரின் நெஞ்சிலே விதைத்ததோ இவ்வளவு பெருந்தொகையைத் திரட்ட முடியுமா என்கிற மேகமூட்டம். ஆனால் அந்த மேகமூட்டத்திலே கழக வெற்றியே நம் வாழ்க்கை இலட்சியம் என்கிற ஆர்வமும் அயரா உழைப்பும் காற்றாகப் படுமானால் கண்டிப்பாக பெய்யும் நிதி மழை என்கிற தன்னம்பிக்கை என்னுள்ளே தாராளமாக வளர்ந்து கொண்டிருந்தது.
அதே சமயம், அண்ணா என்ன சொல்லப் போகிறாரோ என்கிற அச்சமும் என் உள்ளத்திலே சுமையேற்றுவதையும் நான் உணராமல் இல்லை. கூட்டம் முடிந்தது. மேடையிலே இருந்தவர்கள் எல்லாரும் கீழே இறங்கி வந்தோம். உடனே என்னை நோக்கி அண்ணா தொடுத்த முதல் கேள்வி, "பத்து லட்சம் சேர்க்க நம்மால் முடியுமா?"
- என்பதுதான். நாவலர், என். வி. என்., வெற்றி வீரர் என்று அந்த மேடையில் அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர் ப.உ. சண்முகம் முதலான அனைவருமே "முடியுமா? முடியுமா?" -என்றே என்னைக் குடைந்தெடுத்துவிட்டனர், கேள்விக் கணைகளால். அப்போது அவர்களுக்கு நான் என்ன விடை சொல்ல முடியும் - புன்னகையைத் தவிர? ஆயினும், 'முடியுமா?'
என்கிற அந்தச் சொல் என் செவிகளைச் சுற்றியே வளைய வளைய வந்தது, வண்டாக! அண்ணாவும் சரி, மற்ற கழக நண்பர்களும் சரி, தேர்தல் நிதி பற்றிய என்னுடைய அறிவிப்பைக் கேட்டுத் திகைப்பிலே திணறியதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. பத்து லட்சம் என்பது கழகத்திற்குக் கற்பனைத் தொகையாகவே இருந்த காலம் அது. அவ்வளவு பெருந்தொகையைத் திரட்டுவது பற்றித் தினையளவுகூட நினைக்க முடியாத நேரமும் ஆகும் அது. என்றாலும், திருவண்ணாமலை இடைத் தேர்தலில் கழகம் கற்ற பாடங்கள்-சந்திக்க நேர்ந்த அனுபவங்கள் - அந்தத் தொகையாவது இருந்தால் தான் 1967 தேர்தலில் காங்கிரசின் யதேச்சாதிகாரப் போக்கினுக்குச் காற்புள்ளி அல்ல, முற்றுப் புள்ளியே வைக்க முடியும் என்கிற கணிப்பினை எனக்குக் கொடுத்தன.
இதனையே பிறகு நான் மற்றவர்களிடம் விளக்கிச் சொன்னேன். என்னதான் நான் விளக்கங்களை எடுத்து வைத்தாலும், கழக முன்னணியினர் இந்தத் தொகையைச் சேர்த்து முடித்து விட்டால் அது ஒரு பெரிய அற்புதமே என்பதாகக் கருதினர்; பேசினர். அண்ணாவும், தொடக்கத்தில்தான் என் அறிவிப்பைக் கேட்டு மலைத்தாரே தவிர, என்னுடைய முனைப்பான முயற்சிக்குத் தம்முடைய முழு வாழ்த்தையும் பிறகு வழங்கினார். அவருடைய ஒத்துழைப்பும் உறுதுணையும் இறுதி வரை எனக்கு இருந்தன.
என்னுடைய நிதி திரட்டும் பணியினை அவ்வப்போது நெஞ்சாரப் பாராட்டிய அவர், "பத்து லட்சத்திற்கு இன்னும் எவ்வளவு தொகை குறைகிறது?" என்று அடிக்கடி கேட்பதையும் தமது வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அந்தக் கடற்கரைக் கூட்டத்திற்கு அடுத்த இரண்டொரு நாட்களிலோ, ஒரு வேதனையைத் தாங்கிக் கொள்ள வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது அண்ணாவுக்கு. இந்தித் திணிப்பு அண்ணாவின் இதயத்தில் பாய்ச்சிய கூரான ஈட்டிகள் - அவை ஏற்படுத்திய எரிச்சல் மிகுந்த புண்கள் - எண்ணுக்குள் அடங்காதவை!
நான் குறிப்பிட்டது அந்த உள்ளத்தின் வேதனையை அல்ல உடலின் வேதனை ஒன்றை. அண்ணா அவர்களின் பின் கழுத்தில் - பிடரிப் பகுதியில் - கட்டி யொன்று புறப்பட்டிருப்பதைக் கண்டதும் எங்களுக்குக் கலக்கம் கவ்விக்கொண்டது. காரிருள் சூழ்ந்து கொண்டது. அந்தக் கட்டி சிறியதே ஆயினும் அறுவைச் சிகிச்சை மூலம்தான் அதனை அகற்றிட வேண்டும் என்பதை அறிந்ததுமே எங்கள் விழிகள் குளமாக, நாங்கள் அடைந்திட்ட அதிர்ச்சியினைத் துடித்த துடிப்பினைச் - சொல்லிலே வடித்திட இயலாது ஏனெனில், அண்ணா அவர்களை, எங்களை விட்டுத் தனித்தியங்கும் மனிதராக என்றுமே நாங்கள் எண்ணியதில்லை.
எங்களோடு இரண்டறக் கலந்து நின்ற அந்த இதயத் தெய்வத்திடம் நாங்கள் கொண்டிருந்த உள்ளப் பிணைப்பின் - ஒன்றிய - நினைப்பின் - விளைவுதான் அவருக்கு அறுவைச் சிகிச்சை என்றதுமே எங்களுக்கு ஏற்பட்ட கவலை - கண்ணீர் - கதறல் - பதறல்! தனியார் மருத்துவமனை ஒன்றில்தான் அவர் சேர்க்கப்பட்டிருந்தார். 1963 ஜூலை 12-ஆம் நாள் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. கட்டி அகற்றப்பட்டது. அண்ணா, மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தது உடல் வேதனைக்காகத்தான்.
எனினும், தம்முடைய உள்ளத்தைக் குடைந்துகொண்டிருந்த வேதனையான இந்தித் திணிப்பு பற்றியும், அதனை எப்படி எதிர்த்துத் தகர்ப்பது என்பது பற்றியும் அவர் சிந்திக்கத் தவறிடவில்லை.
