உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/போராட்டக் குழுத் தலைவர் நான் !
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

போராட்டக் குழுத் தலைவர் நான் ! · 125 / 391

போராட்டக் குழுத் தலைவர் நான் ! கழக வரலாற்றிலே இந்தக் கூட்டம் அதிகமான பரபரப்பினை ஏற்படுத்தியதாகும். கழகத் தோழர்களை விடக் கழகத்திற்கு எதிரிகள் இந்தக் கூட்டத்து முடிவுகளை ஆவலோடு எதிர்பார்த்தார்கள். எங்களுக்கு நாங்களே மரண தண்டனை விதித்துக் கொள்ளும் கூட்டமாக இது முடியும் என்றுகூட அவர்கள் கருதினார்கள். எங்களுக்கு ஏற்படுத்திவிட்ட ஆத்திரத்திலும் அச்சத்திலும் அனைத்தையும் கண்ணை மூடிக்கொண்டு அழித்து விடுவோம் என்பது அவர்கள் முடிவு.

ஆனால், அப்படிப்பட்டவர்கள் முழுதுமாக ஏமாந்தார்கள். இந்தப் பரிசோதனையிலும் வழக்கம் போல் அண்ணா அவர்களின் தொலை நோக்கும் கழகத் தோழர்களின் கட்டுப்பாட்டு உணர்வும் பிரமாத வெற்றி பெற்றன. தங்களுக்காகத் தாங்களே உருவாக்கிய இயக்கத்தைத் தங்களுடைய தியாக உணர்வுகளின் மூலம் கட்டிக் காப்பதற்குத் தயாராகிவிட்ட பொதுக் குழு உறுப்பினர்களின் ஆணித்தரமான கருத்துரைகள் அங்கு கேட்டன. கழகத்தைக் காப்பதற்கும் இந்தித் திணிப்பை எதிர்ப்பதற்கும் முதல் களப்பலி யார் என்பதில் எங்களுக்குள்ளாகவே ஒரு வகைப் போட்டியே அங்கு நடந்தது.

இந்தியை எதிர்த்து அதுவரை கண்டிரா அளவுக்கு-போராட்டத்தை நெடுங்காலம் நடத்திடத்தக்க அளவுக்கு-செயல் திட்டங்களை வகுப்பதற்காக அந்தப் பொதுக்குழு அமைத்த போராட்டக் குழுவுக்கு என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். 1953-ல் நடைபெற்ற சிதம்பரம் மாநாட்டில் கல்லக்குடிப் போராட்டத்திற்குத் தலைவராக என்னை அண்ணா அவர்கள் அறிவித்தபோது எனக்கேற்பட்ட அளவிடா மகிழ்ச்சியே பெரிதென அதுவரை நினைத்திருந்த நான், இந்தி எதிர்ப்புப் போராட்டச் செயல் திட்டக் குழுவின் தலைவராக என்னைத் தேர்ந்தெடுத்ததும் பொதுக் குழுவினருக்கு நன்றி கூறிடவும் திணறிடும் அளவுக்கு மகிழ்ச்சியில் மூழ்கிவிட்டேன்.

"...அண்மையில் நிறைவேற்றப்பட்டுவிட்ட மசோதாவின் மூலம் 1965-ல் இந்தியை ஆட்சி மொழி ஆக்கிடவும், ஆங்கிலத்தை ஒதுக்கி விடவும் செய்யப்பட்டுள்ள அக்கிரமத்தை இப்பொதுக்குழு வன்மை- யாகக் கண்டிக்கிறது. இந்நிலையில், மாநில ஆட்சி மொழியாக இருப்பதும் திராவிட மொழிகளில் தலையாயதுமான தமிழையும் மத்திய ஆட்சி மொழியாக ஏற்க வேண்டுமென்று வற்புறுத்துவதுடன், அதை ஒப்ப மாநில ஆட்சி மொழிகளையும் ஏற்றுக்கொள்ளும் வரை ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக இருந்து வர வேண்டும் என்று இப்பொதுக் குழு வற்புறுத்துகிறது.

"ஆட்சி மொழிகள் மசோதாவும், அரசாங்க உத்தரவுகளும் திட்டங்களும் இந்தித் திணிப்பைத் தீவிரப்படுத்துகின்ற காரணத்தால், நமது மொழி உரிமைகளைக் காக்கவும், இந்தி ஆதிக்க ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தவும், நம்மை இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் சூழ்ச்சியை எதிர்த்து ஒழிக்கவும், தென்னக மக்கள் உரிமையை நிலை நாட்டவும், தி.மு.க.கழகம் நேரடிப் போராட்டத்தைத் துவக்கி விட வேண்டும் என இப்பொதுக்குழு முடிவெடுக்கிறது."

"இதற்கெனத் தோழர் மு. கருணாநிதி அவர்கள் தலைமையில் தோழர் என். வி. நடராசன் அவர்களும், மாவட்டச் செயலாளர்களும், மாநில அமைப்பாளர்களும் கொண்ட ஒரு போராட்டக் குழுவை இப்பொதுக் குழு அமைக்கிறது" என்கிற அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் பேராசிரியர் அன்பழகன் அவர்களாவார். தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியதாக அவைத் தலைவர் நாவலர் அவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து எழுந்த மகிழ்ச்சிக் கரகோஷத்தில் என்னையே நான் மறந்து போனேன்.

எப்படிப்பட்ட பொறுப்பு; எப்பேர்ப்பட்ட பேறு! 1953-ல் கழகம் நடத்திய மும்முனைப் போராட்டத்தின்போது ஒரு போராட்டக் களத்தின் தலைவராகப் பொறுப்பு ஏற்கும் பேற்றினைப் பெற்றேன். அதேபோல், 1963-ல் தமிழகத்தின் நெடுங்கால அரசியலைச் செப்பனிடக்கூடிய வகையில் கழகச் சார்பாகத் துவக்கப்படுகின்ற இரு போராட்ட களங்களில் இந்தி எதிர்ப்புக் களத்திற்குத் தலைவராக என்னை ஏகமனதாக என் அண்ணனின் தலைமையிலான என் கழகம் தேர்ந்தெடுக்கிறது!

என எண்ணங்கள் எங்கெங்கோ சிறகடித்துப் பறக்கின்றன. உயர் நிலைப்பள்ளி மாணவனாக இருந்தபோது இந்தியை எதிர்ப்பதில் என் பங்கையும் செலுத்திடும் நினைவில் நான் நடத்திய சிறு சிறு கிளர்ச்சிகள் என் நினைவுத் திரையில் நிழலாடின. என் மனத்தில் முழு நிறைவு தளும்பும்படிச் செய்த ஒரு சில சம்பவங்களில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் ஒன்றாகும். "அண்மையில் நிறைவேற்றப்பட்ட அரசியல் சட்ட 16-ஆவது திருத்த மசோதா, எந்த ஜனநாயக ஆட்சியும் மதிப்பளித்து நிலை நாட்டித் தீரவேண்டிய அடிப்படை உரிமைகளைக் குறைத்துப் பொருளற்றதாகவும் பயனற்றதாகவும் ஆக்கிவிடுவதுடன், ஜன நாயகப் பண்பாட்டை அழித்து, ஒரு கட்சி சர்வாதிகாரத்திற்கு வழி வகுப்பதாக அமைந்துள்ளது என்பதைப் பொது மக்களுக்கு இப்பொதுக் குழு சுட்டிக் காட்டுகிறது.

ஜனநாயகப் பண்புடனும், அறநெறி நின்று பணியாற்றி மக்களின் பேராதரவினைப் பெறுவதில் தொடர்ச்சியான வளர்ச்சியைப் பெற்றுத் தமிழகச் சட்ட மன்றத்திலே எதிர்க்கட்சியாக விளங்கி, காங்கிரஸ் எதேச்சாதிகாரத்தை வீழ்த்தும் வல்லமையைப் பெற்றுக் கொண்டு வருவதும், திராவிடத்தின் உரிமை காத்திடும் பாசறையாக அமைந்திருப்பதுமான தி.மு. கழகத்தை அரசியல் சட்ட 16-ஆவது திருத்தத்தைக் கருவியாகக் கொண்டு அழித்து விடுவதற்குக் காங்கிரஸ் ஆட்சி முனையுமானால், தி.மு.

கழகம் மூலாதாரக் கொள்கையைப் பாதுகாத்துக் கொள்ளவும், அமைப்பு அழிக்கப்பட்டு விடாமலிருக்கவும் அரசியல் - நீதியியல் - கிளர்ச்சியில் - ஆகிய பல்வேறு முனைகளில் மேற்கொள்ள வேண்டிய வழி வகைகளை நிலைமைக்கு ஏற்ப எடுத்துச் செயல் படுத்தும் உரிமையைப் பொதுச் செயலாளருக்கு (அதாவது அண்ணா அவர்களுக்கு) அளிப்பதுடன், இந்தப் பிரச்சினை பற்றிய எல்லா முனைகளையும் ஆராய்ந்து அறிந்து, பொதுச் செயலாளருக்குக் கருத்தறிவிக்கத் தோழர் இரா. செழியன் அவர்கள் தலைமையில் தோழர்கள் மதியழகன், டி.

கே. சீனிவாசன், அரங்கண்ணல், தில்லை வில்லாளன் ஆகியோர் கொண்ட ஒரு குழுவை அமைக்கிறது" என்பதாக அந்தத் தீர்மானம் நிறைவேறிற்று. இந்தத் தீர்மானங்களின் மூலம் பொதுக் குழு, இந்தியை எதிர்ப்பதில் நீண்ட காலப் போராட்டத்திற்கான திட்டவட்ட முடிவினை மேற்- கொண்டது. பிரிவினைத் தடைச் சட்டம் பற்றி நிலைமைக்கு ஏற்பச் செயல்படுவதற்கு அண்ணா அவர்களுக்கு அதிகாரமளித்தும், மேலும் அந்தப் பிரச்சினை பற்றிப் பல்வேறு முனைகளிலும் பரிசீலனை நடத்திப் பார்க்கவும் வழி வகுத்தது.

பொதுக்குழு முடிந்ததும் ஜூன் 10ஆம் தேதி மாலை சென்னை எஸ். ஐ. ஏ. ஏ. திடலில் பொதுக்குழுத் தீர்மான விளக்கக் கூட்டம் நடைபெற்றது. நான் அந்தக் கூட்டத்தில் பேசும்போது, "திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தவிருக்கிற மிக முக்கியமான போராட்டம் இது. நம்முடைய நாடு மட்டுமல்ல - இந்தத் துணைக் கண்டமே - அனைத்துலகமே - மிக ஆவலோடு எதிர்பார்க்கின்ற இந்த மிகப் பிரம்மாண்டமான போராட்டத் திட்டத்தை வகுக்கவும் வகைப் படுத்தவும் ஆலோசனைகளை மேற்கொள்ளவும் உருவாகியிருக்கின்ற குழுவிலே தலைமை வகித்து நடத்துகின்ற பொறுப்புக்கு - அந்தக் குழுவின் தலைவர் பொறுப்புக்கு - நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை என் வாழ்நாளில் பெற்றுள்ள பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்" என்று தொடங்கிக் காலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது எனக்கு ஏற்பட்ட உள்ளக் கிளர்ச்சியை வெளிக்காட்டினேன்.

இந்தக் கூட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் பேசிய பேச்சு, திடீர்க் கிளர்ச்சி - திடீர்ப் புரட்சி என்று இன்றைக்குப் பசப்பித் திரிவோர் மனத்தில் பதிய வைத்துக் கொள்ள வேண்டியதாகும். "நமது போராட்டம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்துப் புதன் கிழமை தலை தேய்த்து முழுகுவதற்கு வீட்டிற்கு வந்து விடக் கூடியதாக இருக்காது. கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை விட்டு விட்டுச் சிறை செல்பவர்கள் 'குழந்தை பிறந்து தொட்டிலில் படுத்திருக்கும்போது சிறையிலிருந்து வந்து விடலாம்' என்று கருத வேண்டாம்.

"இந்தப் போராட்டம் ஒரு நித்திய நிகழ்ச்சியாக-மாதக் கணக்கில் ஆண்டுக்கணக்கில் நடைபெறும். இந்தப் போராட்டத்தில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் ஈடுபட்டால் போதாது. ஆர்வமும் அவசரமும் கலந்தால் பயனில்லை. யாருடைய ஆர்வம் நீடித்து இருக்கிறதோ-யார் யாருடைய வீர உணர்ச்சி நிலைத்து இருக்குமோ-யார் யார் கஷ்ட நஷ்டங்களை ஏற்றுக்கொள்ள முடியுமோ, அப்படிப்பட்டவர்கள்தாம் போராட்டத்தில் ஈடுபடலாம்."

அடுத்த நாளே நான் போராட்டக் குழுத் தலைவர் என்ற முறையில் முறையான பணிகளைத் தொடங்கி விட்டேன். வாலிப வயதும், வசதி வாய்ப்பும், கஷ்ட நஷ்டங்களை ஏற்றுச் சமாளிக்கும் துணிவும், தேவையானால் தடியடிபட்டோ குண்டடிபட்டோ சாவதற்கும் தயாரான பக்குவத்தினைப் பெற்றும் என்னோடு போராட்டக் களத்தில் இந்தியை எதிர்த்துப் பொருதுவதற்குத் தோழர்களின் பட்டியலைத் திரட்டி உடன் அனுப்பி வைக்குமாறு கழக அமைப்புகளை வேண்டிக் கொண்டேன்.

அதற்கேற்றாற்போல், இரண்டு நாட்களில் ஜூன் 13 அன்று பண்டித நேரு வந்தார். சென்னையில் அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோதும் பொதுக் கூட்டத்தில் பேசியபோதும் இந்தி பற்றிக் கழகம் எடுத்துள்ள முடிவும் அமைத்துள்ள போராட்டக் குழுவும் மட்டுமே தனது சிந்தனையை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது போல் நடந்து கொண்டார். "இந்தியை எதிர்த்து நேரடி நடவடிக்கை என்பதெல்லாம் வெறும் அரசியல் தந்திரம்" என்று அவர் ஆத்திரமாகக் குறிப்பிடடார்.

"அந்நிய மொழியான ஆங்கிலம் பல்கலைக் கழகங்களிலும் நீதி மன்றங்களிலும் பயன்படட்டும்; பொறுத்துக் கொள்வோம். ஆனால் இந்தியாவின் ஆட்சி மொழி அது என்பதைப் பொறுக்கவே முடியாது. காரணம் அது அன்னிய மொழி. அது என்றென்றும் நீடிக்க முடியாது. அது நமக்குப் பெருமை ஆகாது" என்றெல்லாம் அவர் பொதுக் கூட்டத்தில் ஆவேசமாகப் பேசினார். நேருவின் வருகையும், அவர் பேசிய இத்தகு பேச்சுக்களும் இந்தி எதிர்ப்புப் போராட்டப் பணிகளுக்கு உறுதுணையாக அமைந்ததாகவே நான் கருதினேன்.

ஆட்சி மொழி பற்றிய நேருவின் பேச்சுக்கள் தென்னக மக்கள் மனத்திலே கசப்பையே தெளித்தன. கழகத் தோழர்களுக்கோ கொதிப்பையே கொடுத்தன. அத்துடன் கழகச் சார்பற்ற ஏடுகள் பலவற்றின் எதிர்ப்புக் கணைகளுக்கும் அவை இலக்காகத் தவறவில்லை. அந்த நேரத்தில் வெளியிடப்பட்ட சில தலையங்கங்கள், கருத்துச் செறிவுள்ள கட்டுரைகள் இன்னும் என் நெஞ்சத் திரையிலே நிழலாடுகின்றன. ".......யாருடைய விருப்பத்திற்கும் மாறாக யார் மீதும் இந்தி திணிக்கப்படமாட்டாது என்று நேருவும், லால்பகதூர் சாஸ்திரியும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால் யூனியன் சர்க்கார் இலாகாக்கள் அவ்வப்போது இந்தியைப் பற்றிப் பிறப்பிக்கும் உத்தரவுகளும் சுற்றறிக்கைகளும் இதற்கு நேர் விரோதமாக இருக்கின்றன. ஏற்கனவே யூனியன் சர்வீசில் இருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்தி கற்றுக் கொள்ள வேண்டுமென்றும், இல்லாவிடில் அவர்களுக்குச் சம்பள உயர்வு கிடைக்காதென்றும் சுற்றறிக்கைகள் முளைத்துக் கொண்டேயிருக்கின்றன. இந்த நயவஞ்சகத்தை ஆட்சேபிக்கும் கூக்குரல்கள்தான் ஸ்ரீ நேருவின் காதில் விழும் 'ஹூ.

ஹா' சப்தங்கள்... ஆட்சி மொழி மசோதா கொண்டுவரப்பட்டதென்பது உண்மைதான். ஆனால் பிரதம மந்திரியின் வாக்குறுதி அதில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றதென்று சொல்லுவது 'வெள்ளைக் காக்கை பறக்கும்' கதையைப் போன்றது தான். பெரும் கிளர்ச்சிகளுக்குப் பிறகுதான் மொழிவாரி ராஜ்யங்கள் பிரிக்கப்பட்டன; மொழி விஷயத்திலும் அத்தகைய நிலைமை ஏற்படும்படி இருக்கக் கூடாதென்பதே நமது விருப்பம்."

-இவ்வாறு 14-6-63 தினமணி சித்தூர் இதழ் தலையங்கம் தீட்டிற்று. "........(நேருவின்) முன்னுக்குப்பின் முரணான கருத்துக்கள் மக்களிடையே பேரச்சத்தையே ஏற்படுத்தியிருக்கின்றன. இதே போக்கில் சென்றால் நேருவுக்குப் பின் எதிர்காலத்தில் நிலைமைகள் எப்படியிருக்குமோ என்ற பீதி அதைவிட அதிகமாக நிலவுகிறது. தலைமை அமைச்சரின் சென்னைப் பேச்சு, ஆங்கிலத்திற்கு ஆதரவான இயக்கத்தை முன்பு இருந்ததைவிடச் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் தீவிரப்படுத்த வேண்டும் என்பதையே தெளிவுபடுத்துகிறது."

இவை, 14-6-63 'டெக்கான் ஹெரால்ட்' ஆங்கில நாளேட்டின் தலையங்கத்தில் வந்த சில வரிகள். "...தீவிர இந்திவாதிகள், ஆங்கிலத்தை அடியோடு அழித்து இந்தியை ஏகதேசமாகத் திணிக்கவே முயலுவார்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை...இந்தி வெறியர்களின் வெற்றியாகத்தான் ஆட்சி மொழி மசோதா உருவெடுக்கும் என்பதிலும் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த வெற்றியின் கூலி மிகவும் பயங்கரமாக இருக்கும்."

இது (இன்றைய அல்ல) அன்றைய 23-6-63 'கல்கி' இதழில் ஆங்கிலோ இந்தியரின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திலே அங்கம் பெற்றிருந்த திரு. பிராங்க் அந்தோணி தீட்டிய கட்டுரையிலே காணப்படும் எச்சரிக்கையாகும். அந்த எச்சரிக்கை எத்துணை தீர்க்க தரிசனமானது, தொலை நோக்குடையது என்பதனைப் பின்னர் ஏற்பட்ட கள பலிகள் நாட்டிற்கு மெய்ப்பித்துக் காட்டின. அவருடைய கூற்றுக்கு ஏற்பவே நான் முன்னர் குறிப்பிட்டதைப் போல, இந்திக்காரர்களின் ஆதிக்க வெறியினை எதிர்த்துப் பொருதிட-இணையற்ற 'விலை' கொடுத்திட-கழகம் கச்சை கட்டிற்று.

கழகக் காளைகள் தோள் தட்டிப் போர் முரசம் கொட்டினர். அறப்போருக்கான ஆயத்த வேலைகளில் 'இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழுவின் தலைவன்' என்கிற முறையில் நான் முழுமூச்சாக ஈடுபட்டேன்.