உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/கழகத்தைக் கலைத்தல் முடியுமா ?
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

கழகத்தைக் கலைத்தல் முடியுமா ? · 124 / 391

கழகத்தைக் கலைத்தல் முடியுமா ? இதன் மீதான விவாதத்தில் மசோதாவைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒருவர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தார்கள். மக்கள் சபை உறுப்பினர்கள் அடங்கிய குழு உருவாக்கித் தென்னக மக்களை நேருக்கு நேராகச் சந்தித்து அம்மக்களின் உள்ளக் கிடக்கையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியவர் அறிஞர் அண்ணா அவர்கள். தலைமை அமைச்சர் நேரு அவர்கள் 1945-ஆம் ஆண்டில் கபூர்தலா நகரில் வெளியிட்ட கருத்தைச் சுட்டிக் காட்டிக் கூறியதாவது: "இந்திய அமைப்பிலிருந்து பிரிந்து செல்ல ஒவ்வொரு உறுப்புக்கும் (மாநிலம்) உரிமை உண்டு எனத் தலைமை அமைச்சர் எடுத்துக்கூறியிருப்பதைக் காணுங்கள்.

இந்திய அரசியல் அமைப்பு போன்றதொரு ஐக்கிய அரசியல் அமைப்பானது என்றும் பிரிக்க முடியாதது என்ற வாதம் உண்மைக்கு மாறானதாகும். எடுத்துக் காட்டாக, ஸ்காண்டினேவிய நாடுகள் (சுவீடன்-நார்வே டென்மார்க்-ஐஸ்லாந்து) ஐக்கிய ஏற்பாட்டிலிருந்து பிரிந்து, தனித் தனி அரசுகளான வரலாற்றை நாம் சிந்திக்க வேண்டும். "இந்த மசோதாவைக் கொண்டு வருவதற்கு முன் இத்தகைய மசோதாவிற்குத் தேவையிருக்கிறதா என்பதை நூறு முறை உள்துறை அமைச்சர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்."

அண்ணா அவர்கள் மேலும் பேசுகையில் கூறியதாவது: "பொதுவுடமை உறுப்பினர் திரு புபேஷ் குப்தா கூறியதைப் போல் இச்சிக்கல் அரசியல் அளவில் போராட வேண்டியதாகும். இப்போதுள்ள கூட்டமைப்பு ஆட்சியின் அரசியல் அமைப்பு நிலை தங்களுக்கு நன்மை அளிக்காது என்று என் பகுதியைச் சேர்ந்த மக்கள் மிக உறுதியாயும், மிக ஆழ்ந்த முறையிலும் கருதுகின்றனர். ஏதாவது தீவிரமான கருத்தை மேற்கொண்டாலன்றியும், ஏதாவது ஒரு புதியமுறை அரசியல் அமைப்பை ஏற்படுத்தினாலன்றியும், இக்கூட்டமைப்புப் பளுவையும் நெருக்கடிகளையும் தாங்க முடியாது என்று எனது கட்சி உறுப்பினர்கள் மட்டும் கருதவில்லை; கட்சியில் சேராத வேறு பலரும் இவ்வாறு கருதுகின்றனர்.

பிரிவினைப் பிரச்சாரம் அரசியல் சட்டத்திற்கு எதிரானதா என்பது பற்றிச் சட்ட நூல் அறிஞர்களிடையே வேறுபட்ட கருத்து நிலவுகின்றது. "இச்சபை உறுப்பினரான வழக்குரைஞர் திரு. பி. என். சாப்ரூ பிரிவினையை எதிர்த்து எழுதியுள்ள ஒரு கட்டுரையில், அரசியல் சட்ட முன்னுரையைத் திருத்த முற்பட வேண்டும்' என்று கூறியுள்ளார்.

"நாட்டு மக்களில் ஒரு பகுதியினர், மற்றவர்கள் அனைவரையும்விட நேர் எதிரான கருத்துக்களைக் கொண்டிருக்கும் காரணம் பற்றி உறுப்பினர்கள் யோசிக்க வேண்டும். இதற்கு மனநிலை அம்சங்கள் உள்ளன. வட்டாரப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும், மொழி வேறுபாடுகளும் நிலவுவதை நாம் புறக்கணிக்கவே முடியாது. 'ஆட்சி உரிமையும் மக்களாட்சியும் அரசியல் சட்டத்தின் இரு முக்கியக் கொள்கைகள்' என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

"அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் ஒரு மசோதாவைக் கொண்டு வருவது ஆட்சி உரிமையோ, மக்களாட்சி முறையோ அல்ல. ஆட்சி உரிமை என்பதற்கு அதிகாரம் ஓர் இடத்தில் மட்டுமே குவிந்திருக்க வேண்டும் என்பது பொருளல்ல" என்று விளக்கினார் அண்ணா அவர்கள்.

ஆனால், இந்த விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றிய மத்திய அரசு உள்துறை ராஜாங்க அமைச்சர் திரு. ஹசர்நவிஸ் பேசுகையில் "திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக இந்த மசோதாவை அரசு கொண்டு வந்திருப்பதாக அண்ணாதுரை நினைப்பது தவறு" என்றார்.

ஆனால், பிரிவினைத் தடைச் சட்டம் பற்றிக் கழகம் என்ன செய்யப் போகிறது என்பதை விட, கழகத்திற்கு இப்படி யெல்லாம் சங்கடங்களை உருவாக்குகிறார்களே என்றுதான் மக்கள் ஆயாசப்பட்டார்கள். கழகத்தின் செயல் முறைகளைவிடக் கழகம் இருப்பதுவே மக்களுக்குப் பெரியதொரு கருவூலமாக, பாதுகாப்பாகத் தமிழ் மக்கள் கருதுவதை அப்போது நாங்கள் தெளிவாக அறிந்தோம். இதனை நாங்கள் அவ்வப்போது அறிஞர் அண்ணா அவர்களிடமும் தெரிவித்துக் கருத்துப் பரிமாறிக்கொள்வோம்.

இதுபோன்ற விவகாரங்களில் நாங்கள் சொல்வதைச் சற்று மிகையாகவே கருதி, தாமே நேரில் அறிவதற்கு முயல்வது அண்ணாவின் வாடிக்கை. இதன்படியே 1963 மே திங்கள் இறுதி வாரத்தில் நீண்டதொரு சுற்றுப் பயணம் வகுத்து, என்னையும் உடன் அழைத்துச் சென்றார். கழகம் சொல்லி வரும் மாறுதல்களை அதிகம் ஏற்றுக் கொள்ளாத விவசாயிகள் நிறைந்த பகுதி என்று அப்போது கருதப்பட்ட தஞ்சை மாவட்டத்திலேயே அந்தச் சுற்றுப்பயணம் தொடங்கிற்று.

இந்தச் சுற்றுப் பயணத்தின் போது 22-5-63 அன்று குடந்தையில் அறிஞர் அண்ணா அவர்கள் பேசிய பேச்சைத் திரித்து "தி. மு. கழகத்தையே கலைத்து விடுவதாக அண்ணாதுரை கூறினார்" என்பதாகச் சென்னை இதழ்கள் சில செய்தி வெளியிட்டன. எத்தகு கேலி கிண்டல்களையும் தாங்கிக் கொள்ளும் அண்ணா அவர்களுக்கு இந்தச் செய்தியைப் படித்ததும் ஏற்பட்ட கோபத்தை எதிரிலிருந்து பார்த்த நான் அதிர்ச்சி அடைந்தேன். அடுத்த நாள் இதுபற்றிக் குறிப்பிட்டுச் சென்னையில் பேசுகையில் அண்ணா அவர்கள் குறிப்பிட்டது இன்றைக்கும் பொருந்தும்.

"தி.மு. கழகத்தைக் கலைத்துவிட மாட்டேனா என்று ஆவலுடன் எதிர்பார்த்துச் சிலர் ஏங்குகிறார்கள். நானா கழகத்தைக் கலைத்து விடுவேன்? நான் கலைக்க நினைத்தால்தான் முடியுமா? அப்படி எதிர்பார்ப்பது ஜனநாயகம் தெரிந்தவர்களின் செயல் அல்லவே! தி. மு. கழகம் என்ன, என் வீட்டு மாட்டுக் கொட்டடியா நான் நினைத்ததும் கலைத்து விடுவதற்கு? மக்களால் கட்ட ப்பட்டதல்லவா அது! "குறைந்தது 25 பேர்களைக் கொண்ட 4000-க்கு மேற்பட்ட (1963-ல் 4000; இப்போது சுமார் 20,000) கிளைக் கழகங்கள் சேர்ந்து அமைத்த வட்டக் கழகங்கள்; அவற்றிற்கு மேலே மாவட்டக் கழகங்கள்; அவற்றிற்கு மேல் பொதுக்குழு; செயற் குழு; தலைமைக் கழகம்.

இப்படி அடியிலிருந்து ஜனநாயகக் கோவையாக அமைக்கப்பட்டிருப்பது தி. மு. கழகம். இதை எப்படி ஒருவர் நினைத்தால் கலைக்க முடியும்?" ஆம், அண்ணா அவர்களே நினைத்தாலும் கலைக்க முடியாது என்று ஒப்புக்கொள்ளப்பட்ட தி. மு. கழகத்தை - அவரால் உழைத்துப் போற்றி வளர்க்கப்பட்ட கழகத்தை - யாரால்தான் அழிக்க முடியும்? சிதைக்க முடியும்? பிரிவினைப் பிரச்சாரத் தடைச் சட்டத்தின் நோக்கம் கண்டிப்பாகத் தோற்கடிக்கப்பட்டேயாக வேண்டும் என்பதில் கழகத்தவர் மட்டுமல்ல, பொதுமக்களும் குறியாக இருந்தார்கள் என்பதைச் சுற்றுப் பயணம் அண்ணாவுக்கே தெளிவாக நிரூபித்தது.

கழகத்தைக் கலைக்க வேண்டும். பிரிவினைப் பிரச்சாரத் தடைச் சட்டத்தை எதிர்க்க வேண்டும். கழகத்திற்கு ஊறு நேராமல் பிரிவினைப் பிரச்சாரத் தடைச் சட்டத்தையும் சமாளிக்க வேண்டும். என்பன போன்று மூன்று வகையான கருத்துக்களைக் கழகத்தைப் பற்றி அப்போது விமரிசனம் செய்தவர்கள் தெரிவித்தார்கள். முதல் இரண்டு வகையான கருத்துக்களைத் தெரிவிப்பதில் காங்கிரஸ் கட்சியினரும், கழகத்தை எப்படியாவது ஒழித்து அழித்து விட வேண்டும் என்று நச்சு மனப்பான்மை கொண்டவர்களும் பலமாக வலியுறுத்தினார்கள்.

மூன்றாவது கருத்தைப் பற்றிக் கழகத் தலைவர்களும், தமிழர் நலன் நாடும் பெருமக்களும் தீவிரமாகச் சிந்தித்து வந்தார்கள். இந்த நேரத்தில், தமிழகத்திற்கு வெளியிலுள்ள மாநில இதழ்கள் அனைத்தும் கழகத்தைப் பற்றிப் பரிவோடும், பாராட்டும் வகையிலும் கருத்துக்களைப் பெருவாரியாகத் தெரிவித்தன. குறிப்பாக இந்தியை எதிர்ப்பதிலும் தமிழகத்திற்கு எப்போதும் உறுதுணையாக நிற்கும் வங்காளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் சில ஏடுகள் கழகம் எப்படியும் காப்பாற்றப்பட வேண்டும் என்கிற கருத்தைக் கழகத்தவரே நன்கு புரிந்து கொள்ளும் வகையில் வெளியிட்டன.

"பிற்போக்குவாதிகள் என்றும், வலது சாரிகள் என்றும். தி. மு. கழகத்திற்கு கம்யூனிஸ்டுகள் சூட்டும் பட்டங்கள் சரியானவை அல்ல; இப்படிக் கம்யூனிஸ்டுகள் மாறுவதற்கு அடிப்படை, அவர்களுக்குள்ள அச்ச உணர்வேயாகும். தங்கள் 'கர்ஜனை'களுக்கு எங்கே இடமில்லாமல் போய்விடுமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். தி. மு. கழகப் பிரிவினைக் கொள்கை எப்படி இருந்தாலும், நடுநிலையற்ற அரசியல் பார்வையாளர்கள் அந்த இயக்கத்திலுள்ள புரட்சிகரமான எழுச்சியைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.

டாக்சி டிரைவர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள், பெட்டிக்கடைக்காரர்கள், ஏழை எளியவர்கள், பொதுவாக வாழ்வில் வளம் காண முடியாதவர்கள் ஆகியோரின் கண்களில், தி. மு. கழகம்தான் தற்போதைய ஆட்சி அமைப்பு முறையை எதிர்த்துத் தங்களுக்காக இருக்கிற இயக்கம் என்றும், தி. மு. கழகம் தான் ஏழைமக்களின் குரல் என்றும் தெரிகிறது. 'வர்க்க பேதம்' பெற்ற தொழிலாளர்களின் (புராலடேரியேட்) இடையே முக்கியமாக வேரோடித் தழைத்திருப்பது இந்த இயக்கந்தான்!

இது கிராமப் பகுதிகளிலும் மிக வேகமாக வளர்கிறது" என்று மே இறுதிவார இதழில் பெங்களுர் 'டெக்கான் ஹெரால்ட்' கட்டுரை எழுதிற்று. அதே போல் இந்தியாவின் பெரும் அரசியல்வாதியாகத் திகழ்ந்த திரு கே. எம். முன்ஷி போன்றவர்களும் கழகத்தின் சமுதாயக் கொள்கையில் எவ்வளவுதான் வேறுபாடு கொண்டு இருந்தாலும் பிரிவினைத் தடைச் சட்டத்தை வன்மையாகக் கண்டித்தார்கள். "பிரிவினையைத் தடுக்க அரசியல் சட்டத்தைத் திருத்தியிருப்பது அடிப்படை உரிமையைப் பாதிக்கிறது.

ஒவ்வொரு தடவை அரசியல் சட்டத்தைத் திருத்தும்போதும் மக்களின் உரிமை பறிக்கப்படுகிறது. அடிப்படை உரிமைகளைப் பறிப்பதன் மூலம் மெதுவாகச் சர்வாதிகார ஆட்சி புகுத்தப்படுகிறது. இதை நாம் எதிர்த்தே தீர வேண்டும்" என்று ஜூன் 3 அன்று திருச்சூரில் செய்தியாளர்களிடம் திரு கே.

எம். முன்ஷி குறிப்பிட்டார். பிரிவினைத் தடைச் சட்டம் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கிறதா இல்லையா என்பதை முன்ஷி போன்றவர்கள் மக்களுக்குத் தெரிவிக்கட்டும் என்ற முடிவில், இப்படி அடிப்படை உரிமைகளைப் பல்வேறு முலாம் பூச்சு மூலம் பறித்து மெதுவாகச் சர்வாதிகார ஆட்சிக்கு வித்திடும் காங்கிரஸ் கட்சியின் மூலபலத்தை முறியடிப்பதில் நாங்கள் அப்போது கவனமாகப் பணியாற்றினோம். சர்வாதிகாரத்தைத் தடுக்க வேண்டுமானால், ஒன்று கன வேகத்தில் காரியம் ஆற்ற வேண்டும்.

அல்லது கடலினும் பெரிதான பொறுமையைக் கைக்கொண்டு போராட வேண்டும். இழப்பும் தியாகமும் இரண்டிலும் ஒரே மாதிரிதான் அமையும் என்றாலும், கழகத்தின் அறவழிப்படிப் பொறுமையாகத் தொண்டாற்றியே நாட்டுக்கும் கழகத்திற்கும் எதிர்நிற்கும் பீடைகளை ஒழித்துக் கட்டுவதற்காக 63 ஜூன் 8, 9, 10 ஆகிய நாட்களில் கழகத்தின் தலைமைச் செயற்குழுவும் பொதுக்குழுவும் கூட்டப்பட்டன.