உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/'மே'யும் 'ஷெல்'லும்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

'மே'யும் 'ஷெல்'லும் · 123 / 391

'மே'யும் 'ஷெல்'லும் சி ல ஆண்டுகளுக்கு முன்பு புது டெல்லியில் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அந்த அடிக்கல் நாட்டுவதற்கு அப்போது குடியரசுத் தலைவராக. இருந்த பாபு இராசேந்திரப் பிரசாத் ஒப்புதல் கொடுத்திருந்தார். ஆங்கிலம் தெளிவாக விளங்கிக் கொள்ளக்கூடிய மொழி என்பதால் அந்த அடிக்கல்லில் பொறிக்கப்பட வேண்டிய வாசகங்கள் ஆங்கில மொழியிலேயே இருக்கவேண்டும் என்று முதலில் முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் குழப்பத்திற்கு உள்ளாகிவிட்டது. இராசேந்திரப் பிரசாத் அவர்களுக்கு இந்த மொழியின் பேரில் இருக்கும் பற்றுதலைக் கருதி, நாட்டப்படும் அடிக்கல்லில் இந்தியில் வாசகங்கள் பொறிக்கப்பட்டு இருந்தால் அவர் பெரிதும் மகிழ்வார் என்று யாரோ கருத்தறிவித்தனர். அந்த அடிக்கல்லில் பொறிக்கப்படவிருந்த ஆங்கில வாசகத்துக்கு உரித்தான இந்தி மொழி பெயர்ப்பினைத் தருவதற்குத் தன்னால் இயலாது என்று புதுடெல்லி அனைத்திந்திய வானொலி நிலையம் அறிவித்துவிட்டது.

இதற்குப் பின்னர் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலுள்ள இந்தி மொழி பண்டிதர்களின் உதவி, இது சம்பந்தமாக நாடப்பட்டது. குறிப்பிட்ட வேளையில் மூன்று இடங்களிலிருந்தும் மூன்று மொழி பெயர்ப்புகள் கிடைத்தன. அந்த மூன்று மொழி பெயர்ப்புகளும் மூன்று வகையாக, ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டிருந்தன: இது கண்டு அலுவலக அதிகாரிகள் குழம்பினர். இறுதியாக, இராசேந்திர பிரசாத் அவர்களையே மொழிபெயர்த்துத் தருமாறு கேட்டுவிடுவது என்று முடிவு செய்து அதன்படி குடியரசுத் தலைவரையே வேண்டிக் கொண்டனர்.

அவரும் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, காலம் தாழ்த்தாது தமது இந்தி மொழி பெயர்ப்பினைத் தந்தார். அவர் தந்த இந்தி வாசகங்கள்தாம் அடிக்கல்லில் செதுக்கப்பட்டன. ஆனால் குடியரசுத் தலைவர் தந்த இந்தி மொழிபெயர்ப்பு முன்பு பெறப்பட்ட மூன்று இந்தி மொழிபெயர்ப்புகளிலிருந்தும் மாறுபட்டதாக இருந்தது. இதுதான் இந்தி மொழி; இவர்தான் இராசேந்திரப்பிரசாத், டாக்டர் பிரசாத் அவர்களுடைய மறைவும், சட்ட மன்றத் தொடர் கூட்டத்தால் ஏற்பட்ட வேறுபட்ட சூழ்நிலைகளும் ஆங்கில நீடிப்பு மசோதாவை நிறைவேற்ற மறுக்கும் பண்டித நேரு அவர்களின் பாங்கினைத் தமிழகத்தில் தெளிவாக்கிவிடுவதில் தி.மு.

கழகம் சற்று நிதானம் காட்டிற்று. மசோதாவை நிறைவேற்றுவதில் தாமதம் காட்டுவதற்கான காரணங்களை நேரு அவர்கள் நாளுக்கு ஒன்றாகச் சொல்லி கொண்டிருந்தார். அவைகள் எவையும் தென்னாட்டு மக்களால் ஒப்புக் கொள்ளக்கூடியவையாக அமையவில்லை. "தென்னக மக்கள் விரும்பும் காலம் வரை ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக இருந்து வரும்" என்று அடிக்கடி உறுதி மொழி கொடுத்து வந்த நேரு அவர்கள், அந்த உறுதிமொழியைச் சட்ட பூர்வமாக்கும் காலம் வரும்போது தயக்கம் காட்டினார்.

இதற்குக் காரணத்தை ஆராய்ந்து கொண்டிருந்தனர் மற்ற கட்சியினரும், கற்றுணர்ந்தவர்களாகச் சொல்லிக்கொண்டிருந்தவர்களும். கழகம் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை. கொடுத்த வாக்குறுதி நேருவால் நிறைவேற்றப்பட்டேயாக வேண்டும் என்று உறுதியாகத் தெரிவித்து அதற்கான போராட்டத்தில் இறங்கிற்று. இந்தப் போராட்டத்தின் முதல் முழக்கமாக 18-4-63 அன்று சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற இந்தித் திணிப்புக் கண்டனக் கூட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் வீர உரையாற்றினார்கள்.

இந்திக்கு எவ்வளவு இடம், ஆங்கிலத்துக்கு எதுவரை இடம் என்பதை 18-4-63 கடற்கரைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்தாம் இன்றளவும் வரையறுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றன என்றால் அது மிகையல்ல. 18-4-63 கடற்கரைக் கூட்டத்தில் இந்தியை எதிர்ப்பதற்குத் தமிழகத்தில் ஐந்தாவது போராட்டக் களம் அமைக்கப்பட்டது என்று சொல்லலாம். அன்று தொடங்கிய இந்தி எதிர்ப்புப் பணிகள் தாம் இன்றளவும் தொடர்கின்றன. 1938-40 முதற் களம்.

1948-50 இரண்டாவது களம். 1953-56 மூன்றாவது களம். 1959-61 நான்காவது களம். 1963 முதல் இன்றுவரை ஐந்தாவது களம் என்றுதான் தமிழகம் தொடர்ந்து இந்தி மொழித் திணிப்பினை எதிர்த்து வரும் போராட்டங்களை வரலாறு வரிசைப்படுத்தும். கடற்கரைக் கூட்டத்தை அடுத்து 20-4-63 அன்று சென்னை இராயப்பேட்டை, லட்சுமிபுரம் யுவர் சங்கத்தின் சார்பாக மொழிப் பிரச்சினை பற்றிய தலைப்பில் பேசுவதற்கு ராஜாஜி அவர்களும், நானும், நண்பர் சம்பத்தும் அழைக்கப்பட்டிருந்தோம்.

சம்பத் அவர்கள் அப்போது அண்ணாவைத் 'திருவாளர் அண்ணாதுரை' என்று கூறுவதற்காகவே ஒரு கட்சியை ஆரம்பித்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அந்தக் கட்சியின் பெயர் தமிழ் தேசியக் கட்சி. அந்தக் கட்சியின் சார்பில் அவர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். மக்கள் நிரம்பி வழிந்த அந்தக் கூட்டத்தில் ராஜாஜி அவர்களும், நானும் பேசியதைவிட வெகு வேகமாகவும், ஆவேசத்தின் உச்சக்கட்டத்திலும் நண்பர் சம்பத் இந்தியை எதிர்த்துப் பேசினார்.

எப்பொழுதுமே கட்டு மீறிய உச்சக்கட்டத்தில், அது மித வாதமானாலும் சரி அல்லது பிற வாதமானாலும் சரி, பேசுகிறவர்கள் அல்லது எழுதுகிறவர்கள் அந்தக் கொள்கையில் நிலையாக இருக்க மாட்டார்கள் என்பதற்குத் தோழர் சம்பத் ஒரு நல்ல உதாரணமாவார்! ஏனெனில் வன்மையாக இந்தியை எதிர்த்து முழங்கிய அவர் அதற்குப் பிறகு இந்திக்கு ஆலவட்டம் சுழற்றும் காங்கிரஸ் கட்சிக்கே போய்விட்டார் இந்தித் திணிப்பினால் தமிழனுக்குத்தான் ஆபத்து, தமிழுக்கு ஆபத்தில்லை என்று மூதறிஞர் ராஜாஜி அடிக்கடி கூறி வந்தார்.

அவரும் நானும் கலந்துகொண்ட கோகலே மண்டபக் கூட்டத்தில் ராஜாஜியின் அந்தப் பேச்சிற்கு விளக்கம் சொன்னேன். "பானைக்கு ஆபத்து என்றால் பானையில் இருக்கிற பாலுக்கும்தான் ஆபத்து. அதை மனத்தில் வைத்துக்கொண்டுதான் ராஜாஜி அவர்கள் இந்தியாவில் தமிழனுக்கு ஆபத்து என்கிறார். தமிழனுக்கு ஆபத்து என்றால் தமிழுக்கும்தான் ஆபத்து" என்று நான் குறிப்பிட்டேன்.

இராயப்பேட்டைக் கூட்டத்துக்குப்பின் சென்னையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்ட ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் அண்ணா அவர்களும், ராஜாஜி அவர்களும், காயிதே மில்லத் அவர்களும், சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களும், மற்றக் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டார்கள். இந்தியை எதிர்த்துத் தமிழகமே போர்க்கோலம் பூண்டுவிட்டது என்ற முரசு டெல்லியை நோக்கி அதிர்ந்தது. 'மே', 'ஷெல்' ஆகிய ஆங்கிலச் சொற்கள் அப்போது இந்தியாவில் படாதபாடு பட்டன அவைகளுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கங்களைக் கேட்டு, ஆங்கில மொழி ஜான்சனும், ஷேக்ஸ்பியரும் கூடத் திணறிப் போயிருப்பார்கள், அவர்கள் உயிரோடிருந்தால்!

'மே' என்பது இந்திப் பகுதிக்காரர்களுக்குப் பிடித்தமான சொல்லாகவும், 'ஷெல்' என்பது இந்தி எதிர்ப்பாளர்கள் வலியுறுத்திய சொல்லாகவும் இருந்தன இந்த உணர்வின் அடிப்படையில் 1-5-63 அன்று சென்னையில் நடைபெற்ற மே தினவிழாத் தொழிலாளர் கூட்டத்தில், இதுவரையில் மே தினத்தின் மாண்பு குறித்துப் பேசினேன். இனி 'மே' என்பதால் ஏற்பட்டுள்ள எதிர்ப்புக் குறித்துப் பேசுகிறேன். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மொழி பற்றிய முடிவில் ஆங்கிலம் நீடிக்கலாம் (English may continue) என்று இருக்கிறது.

(English shail continue) ஆங்கிலம் நீடிக்க வேண்டும் என்று நாட்டிலுள்ள பல கட்சியினரும் கருத்து அறிவித்து வருகின்றனர்" என்று நான் சுட்டிக்காட்டியது எனக்கு நினைவுக்கு வருகிறது. சீன ஆக்கிரமிப்பின்போது 'மா' என்றாலே இந்தியர் அனைவரும வெறுத்ததைப்போல, 1963 துவக்கத்தில் 'மே' என்றாலே தென்னக மக்கள் முகம் சுளித்தனர். இந்த 'மா'வும் 'மே'யும் எத்தகு விமரிசனங்களுக்கு ஆளானாலும் ஆளாகட்டும் என்று தமது காரியத்திலேயே குறியாக இருந்த காங்கிரஸ் கட்சியினர் 3-5-1963 அன்று பிரிவினைத் தடை மசோதாவை எல்லாச் சடங்குகளுடனும் இறுதியாக நிறைவேற்றினர்.

பிரிவினை உணர்வு ஏற்பட்டதற்கு ஆன காரணத்தைக் கண்டு பிடித்து அதற்கான ஜனநாயக வழி அணுகுமுறைகளைக் கைவிட்டு விட்டுத் திடீரென "சட்டம் கொட்டும்" என்று டெல்லி ஆர்ப்பரித்தது கண்டு தி.மு. கழகம், தன் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் வகையில், அந்த மசோதா நிறைவேறும்போது கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளி நடப்புச் செய்தார்கள். திருச்செங்கோட்டில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திரு சி. சுப்பிரமணியம் அவர்கள், "இது கழகத்திற்கும் காங்கிரசுக்கும் நடக்கிற போட்டியல்ல, 'திராவிட நாடு வேண்டுமா?'

வேண்டாமா? என்ற கேள்விக்குக் கிடைக்கப் போகிற பதில்" என்று ஆவேசமாக அறைகூவல் விடுத்தார். திருச்செங்கோட்டு மக்கள் கழக வேட்பாளர் நண்பர் கந்தப்பனுக்குத்தான் வெற்றியைத் தந்தனர். அந்தத் தீர்ப்பைப்பற்றி அன்றைய மத்திய அமைச்சர் சுப்பிரமணியம் பிறகு வாய் திறக்கவே இல்லை. சட்டம் தான், தன்னுடைய அகன்ற வாயைத் திறந்தது. திருச்செங்கோடு தேர்தல் எப்படிப்பட்ட சூழ்நிலையில் நடந்தது? விலைவாசி உயர்வைக் கண்டித்துத் தி.

மு. கழகம் ஒரு போராட்டத்தை நடத்தியது. தமிழகத்தில் அரிசிக்கு மக்கள் அவதிப்பட்டனர். பட்டினிச் சாவுகள் பல ஏற்பட்டன. ஆறு அவுன்ஸ் அரிசி கூட, அறிவித்தபடி அரசாங்கத்தால் தரமுடியவில்லை. ஒரு கல் தொலைவு மக்கள் 'கியூ' வரிசையில் நின்று அரிசி கிடைக்காமல் திரும்பினர். அரிசி கேட்டு ஊர்வலம் சென்ற ஒரு கூட்டத்தின் மீது கோவையில் போலீசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்து அர்ச்சுனன் என்ற ஒருவர் பலியானார். கிணற்றில் விழுந்து மடிந்தோர், தூக்குக் கயிற்றில் தொங்கியோர் என்று பட்டினிப் பிணங்கள் குவிந்தன.

சுயராஜ்யம் கிடைத்தால் சுகராஜ்யம் கிடைக்கும் என்று கூவிய காங்கிரஸ் ராஜ்யத்தின் நிலை இது. இந்தக் கொடுமைகளையெல்லாம் கண்டித்துக் கழகம் அறப்போரில் குதித்தது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி, ஆம், காங்கிரஸ் கட்சியின் ஆட்சி. அந்த ஆட்சியைக் கண்டித்து நடத்திய அறப் போராட்டம் ஒரே ஒரு நாள்தான். அந்த ஒரு நாள் அடையாள மறியலில் சிறைப்பட்டோர் இருபதாயிரத்துக்கு மேற்பட்டோர். அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், மற்றும் கழக முன்னணியினர் வேலூர், சென்னை, சேலம், மதுரை கோவைச் சிறைகளில் அடைக்கப் பட்டனர்.

ஐயாயிரம் பேருடன் நான் திருச்சி சிறையில் இருந்தேன். ஒரு நாள் அடையாள மறியலுக்குத் தண்டனை மூன்று மாதங்கள்! தொண்டர்களைப் போராட்டத்திற்கு அனுப்பிவிட்டுத் தலைவர்கள் வேடிக்கை பார்க்கும் போலில்லாமல், தலைவர்களே முதலில் சிறை புகுந்து காட்டுவதில் தி.மு.கழகம் கம்பீரமாக நெஞ்சுயர்த்தி நின்றது. அயராது பணிகளை ஆற்றிடும் பாங்கும், அடக்கப் பண்பும் பொருந்திய என். வி. நடராசன் அவர்களும், விரல் விட்டு எண்ணக்- கூடிய கழக முன்னணியினர் சிலரும்தான் சிறைப்படாமல் வெளியில் இருந்து, திருச்செங்கோடு இடைத் தேர்தல் வேலைகளைக் கவனித்தனர்.

பிரிவினைப் பிரச்சாரம் செய்வதையும் அதற்கான முறையில் செயலாற்றுவதையும் தடுக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கவும், 'அரசியல் அமைப்பு (16 ஆவது திருத்த) சட்டம் 1963-என்ற சட்டம் நாடாளுமன்றத்தில் 1963-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 5-ஆம் நாள் நிறைவேறியது. இதன்படி அரசியல் சட்டத்தின் 19-ஆவது பிரிவிலும், 84-ஆவது பிரிவிலும்,173-ஆவது பிரிவிலும் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. நாடாளுமன்றம், சட்ட மன்றம், சட்டப் பேரவை ஆகிய தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடியில் கண்டவாறு உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும்; "மாநில சட்டப் பேரவையின் ...

தொகுதி வேட்பாளராக முன் மொழியப் பெற்றுள்ள......என்கிற நான் அரசியல் சட்டத்தில் நம்பிக்கை உள்ளவனாகவும், அதற்குக் கட்டுப்பட்டவனாகவும் இருப்பேன் என்றும், இந்தியாவின் மேலாதிக்க உரிமையையும (Sovereignty) ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பேன் என்றும் உறுதி மொழி கூறுகிறேன்."

இதன் தொடர்பாகத்தான். 30-12-1967 அன்று, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று, 1967-ஆம் ஆண்டின் சட்ட விரோதச் செயல்கள் (தடுப்புச்) சட்டம் அமுலுக்கு வந்தது. அதன்படியே சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் ஏழு ஆண்டுச் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். (இந்தச் சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு உதவினால் ஐந்து ஆண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.) 16-ஆவது திருத்தச் சட்டம் மசோதாவாக மாநிலங்கள் அவையில் 1963-ஆம் ஆண்டு மே திங்கள் 9-ஆம் நாள் நிறைவேறியது.