நெஞ்சுக்கு நீதி
அரசியல் சட்டப் பதினாறாவது திருத்தம் · 122 / 391
அரசியல் சட்டப் பதினாறாவது திருத்தம் "நா ன் எப்படி இருக்கிறேன் என்பதும், எப்படி இருக்க வேண்டும் என்கிற என் நம்பிக்கைகளும் என் அருமை அன்னைக்கே உரியவை ஆகும்" என்பது அடிமை விலங்கொடித்த ஆப்ரகாம் லிங்கன் அடிக்கடி சொல்லி வந்த வாசகம். அமெரிக்காவில் 16-ஆவது ஜனாதிபதியான லிங்கனின் இந்த வாசகத்தை நினைத்து என் அம்மாவின் இழப்புக்குச் சமாதானம் தேடிக் கொண்டு, இந்திய அரசியல் சட்டத்தின் 16-ஆவது திருத்தம் பற்றி நாட்டில் எழுந்துள்ள சர்ச்சையில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.
பல்வேறு இன-மொழி-கலாச்சாரங்களைக் கொண்ட இந்தியா போன்ற நாட்டின் மக்களுடைய அடிப்படை உரிமைகளை இந்த 16-ஆவது திருத்தம் எவ்வளவு தூரம் பாதித்தது என்பது இன்னமும் சரியாக உணரப்படவேயில்லை. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு இந்தத் திருத்தம் உணர்வு பூர்வமான நன்மைகளை ஏற்படுத்தவில்லை. சீன ஆக்கிரமிப்பின் காரணமாக நாடே ஒருமுகமாகத் திரண்டிருந்த நேரத்தில், இந்தச் சட்டம் அவசர அவசரமாகக் காங்கிரஸ் கட்சியினரால் நிறைவேற்றப்பட்டது.
மேலும் மற்ற எந்தத் திருத்தத்தைக் காட்டிலும், இதுதான் நாட்டில் பலமான வாதப் பிரதிவாதத்தைக் கிளப்பி விட்டதாகும். இதன் நோக்கம் எப்படிப்பட்டது என்பதைவிட இது அவசரமாக நிறை வேற்றப்பட்ட நேரம் இன்றளவும் நாகரிக அரசியல்வாதிகளின் மனத்தைக் குடைந்து கொண்டிருக்கிறது. "முடிவுகளைக் காட்டிலும் முறைகள்தாம் முக்கியம்" என்கிற காந்தீயத் தத்துவத்திற்கு இந்தத் திருத்தம் எதிரானது என்பதில் ஐயமே இல்லை. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், கட்டுக்கோப்புக்கும் இந்தத் திருத்தம் அவசியம் என்று காங்கிரஸ்வாதிகள் வாதிட்டனர்.
அதே நேரத்தில் ஒரு பகுதியினரின் மொழி-கலாசார ஆதிக்கத்திற்கு அரசியல் சட்ட ரீதியான பாதுகாப்பு தேடிடும் முயற்சியாக இந்தத் திருத்தம் தென்னக மக்களால் கருதப்பட்டது. மத்திய அரசுக்கு எதிராக, அல்லது உரிய நியாயம் கேட்டு எத்தகு குரல், எந்தப் பகுதி மக்கள் எழுப்பினாலும் அதற்குப் 'பிரிவினை வாதம்' என்று பெயர் சூட்டிவிடுவதற்கு இந்தத் திருத்தம் மத்திய ஆட்சியில் இருப்போருக்கும் அதனை நடத்திச் செல்லும் கட்சியினர்க்கும் சாதகமான வழி வகுத்துக் கொடுத்தது.
'பல்வேறு மாநிலங்களுக்கு இடையிலே உள்ள வேறுபாடான சூழ்நிலைகளையும் எடுத்துச் சொல்லி வாதாடுவதற்கு இந்தச் சட்டம் வாய்ப்பூட்டு'ப் போட்டது என்பதுதான் உண்மை. ஆங்கில ஏகாதி பத்திய ஆட்சியின் கீழ் அதிகப்படியான காலம் (அதாவது துவக்கம் முதல் இருந்த பகுதிகள்) அதிகமான வறுமைக்கும் செழிப்பற்ற தன்மைக்கும் உள்ளாயிற்று என்பது பண்டித நேரு அவர்களின் ஆழமான கருத்தாகும். இதனை மிகத் தெளிவாக அவர் தனது Discovery of India என்கிற நூலிலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கருத்துப்படி சென்னை (இப்போதைய தமிழ்நாடு), ஆந்திரம், கேரளத்தின் ஒரு பகுதி, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகள்தாம் மற்றப் பகுதிகளை விட ஆரம்பம் முதல் அதிகப்படியான காலம் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கீழ் வதங்கி வாடின. இந்தப் பகுதிகளின் முன்னேற்றமும், நியாயமான விருப்பங்களும் மத்திய அரசினால் என்றைக்கும் தனிச் சலுகையோடு கவனிக்கப்பட வேண்டியவை ஆகும். இந்தச் சலுகைகளை உரத்துக் கேட்கக் கூடாது என்பதற்காகவே, அரசியல் சட்டத்தின் 16-ஆவது திருத்தத்தைக் கொண்டு வருவது போல், பண்டித நேருவின் தலைமையிலான மத்திய அரசு அவசரம் காட்டிற்று.
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தத் திருத்தம் விவாதிக்கப்பட்டு வரும்போது, ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கீழ் அதிக காலம் அவதிப்பட்ட ஆந்திரமும் வங்காளமும் உரிமைக் குரலை உரத்து எழுப்பிக் கொண்டிருந்தன. 1963 ஜனவரி 28-இல் ஆந்திர மாநிலக் காங்கிரஸ் குழுத்தலைவரான திரு. பிரமையா ஐதராபாத்தில் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையைச் செய்தியாளர்களிடம் எடுத்துக் காட்டி வெளிப்படையாகச் சாடினார். "ஆந்திர மாநிலத்தை மத்திய அரசு மாற்றாந்தாய்ப் போக்கில் நடத்தி வருகிறது.
இன்று நேற்று முதல் அல்ல; கடந்த பதினைந்து ஆண்டு காலமாகவே ஆந்திர மாநிலம் மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது" என்று போர்க் குரல் கொடுத்தார். அதேபோல் மேற்கு வங்கமும் வேறு முறையில் மத்திய அரசிடம் போராடிக் கொண்டிருந்தது. "மாநில மக்களின் உரிமைகளில் கை வைப்பது ஒரு புறமிருக்கட்டும், மாநில அரசுக்கு சொந்தமான உடைமைகளின் மீது கைவைக்கவும் மத்திய அரசுக்கு அதிகாரமில்லை" என்று மேற்கு வங்க அரசு மத்திய அரசின் பேரில் இந்தியத் தலைமை நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து விவாதித்துக் கொண்டிருந்தது.
மத்திய அரசின் மீது மேற்கு வங்கம் தொடுத்த இந்த வழக்கும்-அதில் பேசப்பட்ட வாதங்களும் இப்போது நினைவு கூறத்தக்கவை. ஏனென்றால் மத்திய அரசு மாநிலங்களுக்கான அதிகாரத்தில் கைவைப்பதே இல்லை என்றும் அப்பட்டமான கூட்டாட்சித் தத்துவம் தான் மத்திய அரசால் கடைப்பிடிக்கப்படுகிறது என்றும் சிலர், கழகம் தீவிரமாக வலியுறுத்தும் மாநில சுயாட்சிக் கொள்கைக்கு எதிராகப் பேசி வருகின்றனர். அவர்கள் புரிந்துக் கொள்வதற்கு இந்த வழக்கின் நடவடிக்கைகள் உதவி செய்யும்.
நிலக்கரி சுரங்கப் பகுதிகளை மேற்கொள்ளுதல், அபிவிருத்தி செய்தல் ஆகியவை சம்பந்தமாக மத்திய அரசின் 1957-ம் ஆண்டுச் சட்டத்தை எதிர்த்து முதன் முறையாக மேற்கு வங்க அரசு, இந்திய உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. "இந்திய அரசியல் கூட்டாச்சி அமைப்பு முறையைக் கொண்டது. இந்த அமைப்பில் நாட்டின் சுயாதிபத்தியத்தை மாநிலங்கள் பங்கிட்டுக் கொண்டுள்ளன. இந்த நிலையில் சுயாதிபத்தியத்தின் ஓர் உறுப்பாக விளங்கும் மாநிலத்தின் உடைமையை மேற்கொள்வதற்கு மற்றொரு உறுப்பு (மத்திய ஆட்சி) முயல்வது பொருத்தமற்றதாகும்.
ஆனால் குறைந்த பட்ச ஒப்பந்தங்கள் இருந்தாலன்றி, அவசர காலச் சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலன்றி- இத்தகு முயற்சிகள் சட்டபூர்வமற்றவை ஆகும்" என்பது மேற்கு வங்க அரசின் வாதமாக இருந்தது. இந்த கருத்துக்கு எதிராக "மாநில அரசுகள் சுயாதிபத்திய உரிமை படைத்தவைகள் என்று கூறப்படுவது சரியல்ல" என்று மத்திய அரசுதரப்பில் திட்டவட்டமாக வாதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இந்தியத் தலைமை நீதி மன்ற நீதிபதிகள் கருத்து மாறுபட்டனர். தலைமை நீதிபதியாக இருந்த திரு. பி.பி. சின்கா பெரும்பான்மையோரின் சார்பில் தீர்ப்பளித்தார். அதில் அவர் குறுப்பிட்டது இன்றைக்கும் மாறுபட்டுப் போகவில்லை. அவர் குறிப்பிட்டார் : "1858-ஆம் ஆண்டிலிருந்து பிரிட்டிஷ் மன்னர் ஆட்சியில் மாநிலங்கள் இருந்த நிலையிலிருந்து தெளிவானது என்னவென்றால், இந்திய அரசு ஒன்றிப்பு ஆட்சி அமைப்பைக் கொண்டதாகவும், அதிகாரம் ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட நிலையிலும் இருந்தது என்பதாகும்."
"இந்திய அரசியல் சட்டம் 1935-ஆம் ஆண்டின் இந்தியச் சட்டத்தினை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே, இந்திய அரசியல் சட்டமானது முறையான கூட்டாட்சி முறையைக் கொண்டதல்ல." "மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கிற வகையில் சட்டம் செய்வதற்கு பாராளுமன்றத்திற்கு உரிமை உண்டு."
இதுதான் மேற்கு வங்கம் தொடுத்த வழக்கில் நம்முடைய அரசியல் சட்டத்தைப் பற்றி அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்ட உண்மை. 1935 ஆம் ஆண்டின் இந்தியச் சட்டத்தின் அடிப்படையில் அமைந்த அரசியல் சட்டத்தைத் திருத்துமாறும், மாநிலங்களுக்கான அதிக அதிகாரம் தருமாறும் நாம் கேட்பதைத்தான் இன்று பிரிவினை வாதம் என்று திசை திருப்புகிறார்கள். ஆந்திரமும் வங்கமும் எப்படிக் குரல் கொடுத்த போதிலும், தி. மு. கழகத்தின் நடவடிக்கைகளை ஒடுக்கி விடலாம் என்கிற ஒரே நப்பாசையின் காரணமாகவே 16-ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
இந்த அறைகூவலைத் தி. மு. கழகம் மிகத் தைரியமாக ஏற்றுக் கொண்டது. அதே நேரத்தில் "16- ஆவது திருத்தத்தில் காண்பிக்கப்பட்ட அவசரம், இந்தித் திணிப்பினைத் தவிர்க்கும் ஆங்கில நீட்டிப்பு மசோதா நிறைவேற்றுவதில் காண்பிக்கத் தவறுவது ஏன்?" என்று தி. மு. கழகம் பண்டிதர் நேருவுக்கு பதில் அறைகூவல் விடுத்தது. 16-ஆவது திருத்தத்தை நிறைவேற்றிய உண்மையான நோக்கம் பற்றிய பல்வேறு விளக்கங்களைக் காங்கிரசார் சொன்ன போதிலும் ஆங்கில நீட்டிப்பு மசோதாவை நிறைவேற்றுவதில் காலதாமதப் படுத்துவதற்கு பண்டிதர் நேருவினாலேயே சரியான சமாதானம் சொல்ல முடியவில்லை.
வழக்கம்போல இந்தப் பிரச்சனையில் தி. மு. கழகம்தான் முன்னின்று விளக்கம் கேட்க வேண்டியதாயிற்று. நாட்டின் சீன ஆக்கிரமிப்பு அபாயம் மத்திய அரசுக்கு எதிராக எத்தகு கிளர்ச்சி- அல்லது விமரிசனம் செய்யும் போக்கைக் கையாண்டாலும், அவை எதிரிக்கு சாதகமாகி விடுமோ என்று எல்லா அரசியல் கட்சிகளும் எண்ணிடும் சூழ்நிலை. இந்தச் சந்தடியில் தென்னக மக்களின் நியாயமான முறையீடுகளை ஒடுக்கும் வகையில், 16-ஆவது திருத்தம்; ஆங்கில நீடிப்பு மசோதா நிறைவேற்றுவதில் தாமதம்.
1963 துவக்கத்திலேயே இத்தகு நெருக்கடிகளைச் சமாளித்துக் கழகத்தை காப்பாற்றி அதன் மூலம் தமிழகத்தை காப்பாற்றும் மிகப்பரிய பணிகளில் அண்ணா அவர்களுடன், அனைவரும் கடுமையாகப் பணியாற்ற வேண்டி ஏற்பட்டது. பண்டித நேருவின் புகழையும் பெருமைகளையும் சீன ஆக்கிரமிப்பு கணிசமாக வெளிநாடுகளில் குறைத்து விடடது. அதே போல், ஆங்கில நீடிப்பு மசோதாவை நிறைவேற்றுவதில் காட்டிய தயக்கம் காரணமாக உள் நாட்டிலும் அவர் செல்வாக்கு மங்கத் தொடங்கியது.
அவர் கற்ற பரந்த கல்வி-பெற்ற அரசியல் திட்பம்-பயின்ற ஜனநாயக முறை-அத்தனையும் 1963-இல் இந்தி ஏகாதிபத்தியவாதிகளிடம் பின்வாங்கின. பிப்ரவரி 17-இல் கூடிய காங்கிரஸ் பாராளுமன்றக் கட்சிக் கூட்டத்தில், ஆங்கில நீடிப்பு மசோதா பற்றிய பிரச்சினையை, திரு கே. அனுமந்தையா அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தார். இது சம்பந்தமாகத் தென்னாட்டில் தி.மு. கழகம் தெரிவித்து வரும் கருத்துக்களையும் இதழ்களின் கருத்தையும் அந்தக் கூட்டத்தில் அனுமந்தையா நேருவின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
அத்துடன் அடுத்து கூடும் பாராளுமன்ற தொடரிலேயே மசோதா கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் அப்போது வலியுறுத்தினார். ஆனால், நேருவின் பதில், பிரச்சினையிலிருந்து நழுவுவதாக அமைந்தது. "நடைபெறும் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் முக்கிய அலுவல்கள் முடிந்து விட்டால், ஏப்ரல் 20-க்குப் பிறகு இந்த மசோதா கொண்டு வரப்படலாம்" என்பது நேருவின் மழுப்பல். இது குறித்து வழக்கத்திற்கு மாறாக, 'இந்து' பத்திரிக்கையே சற்று ஆத்திரமாக எழுதிற்று.
20-2-63 நாளன்று வழக்கை முடிக்கவும்' (Close the case) என்கிற தலைப்பில், அந்த இதழ் தீட்டிய தலையங்கத்தில், "1965-ஆம் ஆண்டுக்குப் பிறகும், காலக்கெடுவின்றி ஆங்கிலம் தொடர்ந்து ஏற்றுக் கொள்ளப்படும் திருத்த மசோதா விரைவில் சட்ட மாக்கப்படவேண்டும் என்கிற கோரிக்கை வலியுறுத்தப்படுகிறது. இந்தி வெறியர்களின் கரம் வலுப்பெறுவதற்கு வாய்ப்பு அளிக்காமல் தடுக்க வேண்டுமானால், ஆங்கில நீடிப்பு மசோதாவை விரைவில் சட்ட மாக்குவதுதான் சிறந்த வழியாகும்.
"தேவைப்படுகின்ற இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டு காலம் (1965வரை) அவகாசம் இருக்கிறது என்று கூறப்பட்டாலும், சமீப காலத்தில் மொழிவெறியர்களின் 'விகார சொரூபம்' தலையெடுத்துள்ளதால், அச்சக்திகளோடு போராடுவதில் ஒரு நிமிடத்தைக் கூட இழந்து விடக்கூடாது" என்று அந்த இதழ் எழுதிற்று.
தி.மு. கழகம் ஒரு நிமிடத்தையும் வீணாக்காது இந்தப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. 1953-இல் கழகம் மும்முனைப் போராட்டத்தின் மூலம் அநீதிகளை எதிர்த்தது. 1963-இல் நீதியைக் கேட்டுப் போராடிற்று. இந்தி வெறியைப் பற்றியும், அந்த மொழி அகில இந்திய மொழியாக அரசியல் சட்டத்தில் இடம் பெறுவதற்குக் காரணமான சக்திகளைப் பற்றியும், கழகம் தனது விளக்கங்களை நாட்டு மக்களிடம் எடுத்து வைக்க ஆயுத்தமான போது, டாக்டர் இராசேந்திரப் பிரசாத் பிப்ரவரி 28-இல் காலமானார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் என்ற முறையிலும் சரி, தேசியப் போராட்ட வீரர் என்பதிலும் சரி, இராசேந்திரப் பிரசாத் அவர்கள் ஒரு சிறந்த மனிதர். அவரது மறைவுச் சூழ்நிலையில் நாடு துக்கம் கொண்டாடும் நேரத்தில் இந்தி மொழி ஆதிக்கம் குறித்து அவ்வளவாக பேச வேண்டாம் என்று அறிஞர் அண்ணா கருத்தறிவித்தார். ஏனென்றால், இந்திதான் தேசிய மொழி என்று அரசியல் சட்டத்தில் இடம் பெற்றுக் கொண்டதற்கு இராசேந்திர பிரசாத் அவர்கள் முக்கியக் காரணமாக இருந்தார்.
