நெஞ்சுக்கு நீதி
அன்னையை இழந்தேன் · 121 / 391
அன்னையை இழந்தேன் ஜனவரித் திங்கள் என் இதயத்தில் அடுக்கடுக்காகச் சோகத்தை நிரப்பிய திங்களாகும். ஜனவரி 18-இல் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் ப.ஜீவானந்தம் திடீரென இயற்கை எய்தினார். தமிழகத்தின் தேசிய இழப்புகளில் ஒன்றாக அதனைக் கருதவேண்டும். டார்வின் தத்துவமான பரிணாம வளர்ச்சியில் படிப்படியாக மனிதன் இன்றைய உருவம் பெற்றிருப்பதைப் படித்திருக்கிறோம். அதைப் போலவே படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி பெற்றுப் பக்குவப்பட்ட கம்யூனிஸ்ட் சிந்தனையாளரைத் தோழர் ஜீவானந்தத்திற்குப் பிறகு அதிகம் பேரை நாம் சந்தித்திருப்பதாகச் சொல்ல முடியாது.
தோழர் ஜீவா இருதயம் உள்ள மனிதர். அதுவும் சராசரி மனிதனுக்கு இருக்கவேண்டிய இடத்தில் இருதயத்தைப் பெற்றிருந்தவர். 'மதம் மக்களுக்கு அபின்' என்று சொன்ன மார்க்சின் உண்மையான உணர்வுகளைத் தமிழகத்தின் பட்டி தொட்டிகள் தோறும் பிரதிபலித்தவர் அவர்.
மார்க்சும், லெனினும் தமிழகத்தில் சரியாக அறிமுகமானதற்குப் பெரும் பங்கினை ஏற்ற, கம்யூனிஸ்ட் தலைவர் அவர்தான் என்று கூறலாம். கொள்கையின் உறுதியும், நட்பின் பெருமையும் அவரை மக்களிடத்தில் மரியாதைக்குரியவர் என்று உணர்த்தின. தமிழகத்தில் கம்யூனிசத்தைக் கொண்டு வருவதில் அவருக்கு இருந்த ஆர்வமும் பொறுப்பும் போற்றத்தக்கவை. லெனின் மறைவிற்குப் பிறகு மார்க்சிசத்திற்குச் சரியான தலைமை கிடைத்ததா என்பது விவாதத்திற்கு உரிய விஷயம்.
ஆனால் தோழர் ஜீவாவின் மறைவிற்குப் பிறகு தமிழகத்தில் கம்யூனிஸ்ட்டுகளுக்குச் சரியான, திறமையான தலைமை இன்னமும் கிடைத்ததாகக் கூற இயலாது. "காலுக்குச் செருப்புமில்லை கால் வயிற்றுக் கூழுமில்லை பாழுக்குழைத்தோமடா -என் தோழனே பசையற்றுப் போனோமடா" -என்று தொடங்கும் அவரது பாடல் அன்று எழுப்பிய உத்வேகமும், எழுச்சியும் கொஞ்சமல்ல, "ஜீவாவின் சம்மட்டி அடிகளைப் பெற்றுச் சரிந்த சூதுக்கோட்டைகள் பல" என்று அண்ணா அவர்கள் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.
அதற்கு மாறாக இன்றையக் கம்யூனிஸ்டுகள் சிலர் சூதுக் கோட்டைகளின் வாயில் காப்போர்களாக அல்லவா சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்? ஜீவா மறைந்தார் என்று செய்தி கேட்டதும் அண்ணாவும் நானும் சென்னைப் பொது மருத்துவ மனைக்கு விடியற்காலையிலேயே ஓடோடிச் சென்றோம். "நாமணக்கும் நல்ல தமிழ் மணக்கும் நாஞ்சில் என்ற பேர் மணக்கும் பாமணக்கும் பூதப்பாண்டி எனும் ஊர் மணக்கும் பண்பாளர் ஜீவா புகழ்பாடுகின்ற வாய் தேன் மணக்கும்" -எனத் தொடங்கி, "குருதி யெல்லாம் புரட்சி மணம் கமழுகின்ற வரிப் புலியைக் கொள்கையிலே உறுதி கொண்ட தமிழ்க் கவியைக் கொள்ளையடித்து மகிழ்ந்ததோ கொடுஞ்சாவு எனக் கேட்டுக் குமுறுகின்றார் நாட்டு மக்கள்!
வாழ்க ஜீவா! வாழ்க என்றும்!" -என முடியும் கவிதை ஒன்றை நான் அன்றைய தினம் இரங்கல் செய்தியாக வெளியிட்டேன். 1963 ஜனவரி 6-இல் நாடு காக்கும் பணிக்காக மதுரையில் போர் நிதி திரட்டும் பணிகளில் நான் ஈடுபட்டிருந்தபோதுதான். வீடுகாக்கும் என் அம்மா நோய்வாய்ப்பட்டார்கள் என்ற சேதி கிடைத்தது. வெகு விரைவிலேயே அம்மா என்னைப் பிரிந்து விடுவார்கள் என்று நான் அப்போது நினைக்கவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சற்றுத் தேறிவந்து அந்த ஆண்டுப் பொங்கல் திருநாளை வழக்கம்போல் எங்களுடன் மகிழ்ச்சியாகவே கொண்டாடினார்கள்.
பொங்கல் கழிந்த இரண்டொரு நாட்களில் ஜனவரி 17 அன்று மீண்டும் உடல் நிலை மோசமாகவே டாக்டர் வீரா ரெட்டி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அம்மாவின் உடல் நிலை விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்கிற எண்ணத்தில் டாக்டர் வீரா ரெட்டி அவர்களும் தம்மாலான முயற்சியைச் செய்தார். நண்பர்களும் தோழர்களும், "பயப்படும்படியாக ஒன்றுமில்லை" என்று ஆறுதல் கூறினார்கள்.
ஆனால் எனக்கு என்னவோ, "ஒரு பெரிய இழப்புக்கு ஆளாகப் போகிறோம்" என்கிற உணர்வு உறுத்திக் கொண்டே இருந்தது. அதற்கேற்றாற்போல் அம்மாவும் தன்னுடைய உடல் உபாதைகளை மறந்து, நான் எப்படி இருக்கிறேன்? என் முகம் எப்படி இருக்கிறது? அடிக்கடி வழக்கம்போல் சிரித்துப் பேசுகிறேனா? என்பதையெல்லாம் கண்காணிப்பதிலேயே கண்ணாக இருந்தார்கள். தான் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கும்போதும் தன் மக்களின் முகம் சுண்டக் கூடாது என்பதில் குறியாக இருக்கும் தாய்க் குணம் அல்லவா அது!
ஜனவரி 17 முதல் என்னை விட்டுப் பிரியாமலும், அம்மாவின் உடல் நிலையை டாக்டர்களை அடுத்துக் கவனித்துக் கொண்டும், பல நண்பர்களும் தோழர்களும் உறக்கமின்றி மருத்துவ மனையையே இருப்பிடமாகக் கொண்டனர்; இவர்கள் என் பேரில் பற்றுதல் கொண்டோர் என்பதைவிட அம்மாவின் அன்பிலும், பண்பிலும் அரவணைப்பிலும், ஆதங்கத்திலும் திளைத்தவர்களாவர். நாளுக்கு நாள் அம்மாவின் உடல் நிலை தேறி வருவதாகவே வெளிக்குத் தெரிந்தது.
பத்திரிகைகளும் அவ்வாறுதான் செய்திகளை நாள்தோறும் வெளியிட்டன. என் தமக்கைகளையும் குழந்தைகளையும் ஆறுதல் படுத்துவதற்காக நானும் அதை நம்புவதாகப் பாவனை செய்தேன். ஜனவரி 22-இல் அம்மாவின் உடல் நிலை மேலும் சீர்கெட்டது. உடனடியாகப் பெரியதோர் அறுவைச் சிகிச்சை செய்தே ஆகவேண்டும் என்று டாக்டர்கள் கருதி, ஸ்டான்லி மருத்துவ மனைக்குக் கொண்டு போனார்கள். அங்கு கொண்டு சென்று உடனடியாக அறுவைச் சிகிச்சையும் ஆரம்பமாயிற்று.
ஜனவரி 22-இல் அறுவைச் சிகிச்சை என்ற பெயரால் என் அம்மாவின் உடம்பில் கத்தி பாய்ச்சப்படுவதை அறைக்கு வெளியில் நின்று நினைத்து நினைத்துச் சொல்லொணா வேதனையில் நான் துடித்துக் கொண்டிருந்த அதே நாளில் அதே நேரத்தில்தான் என்னுடைய மற்றொரு தாய் போன்ற கழகத்தின் முதுகில் கத்தி பாய்ச்ச நினைத்த காங்கிரஸ்காரர்கள், அரசியல் சட்டத்திருத்தம் என்ற பெயரால் டெல்லி பாராளுமன்றத்தில் முடிவு எடுத்துக் கொண்டிருந்தார்கள். தி.
மு. கழகத்தின் பிரச்சாரத்தையும் வளர்ச்சியையும் கண்டு பொறாத காங்கிரஸ்வாதிகள், கழகத்தின் மூல முழக்கமான திராவிட நாடு கோரிக்கையைச் சட்ட விரோதமாக்கும் வகையில் அரசியல் சட்டத்தின் 9-ஆவது பிரிவைத் திருத்தும் மசோதாவை (அரசியல் சட்டத்தின் 16-வது திருத்தம்) பாராளுமன்றக் கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்புவதாக அன்றுதான் பாராளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டது. அம்மாவின் உடல் அறுபடுவதைக் கண்டு சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் ஓர் அறைக்கு வெளியே மவுனமாக நான் குமுறிக் கொண்டிருந்த அதே நேரத்தில் கழகத்தின் குரல் வளையை நெறிக்கச் சதி செய்த காங்கிரஸ்காரர்கள் கழகத்தின் முதுகில் கத்தி பாய்ச்சும் செய்கையை, என் ஆருயிர் அண்ணா அவர்களும் பாராளுமன்றத்தின் பார்வையாளர் இருக்கையில் அமர்ந்து மவுனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஜனவரி 17-இல் என்னைப் பெற்ற தாய்க்கு அறுவைச் சிகிச்சை! மற்றொரு தாய்க்குக் கத்திக் குத்து! மறக்க முடியுமா இந்த நாளை? அறுவைச் சிகிச்சைக்கு உட்பட்ட அம்மாவைக் காப்பாற்றும் சக்தியோ, மருத்துவத் துறை அனுபவமோ எனக்கு இல்லை. அது முழுக்க முழுக்க டாக்டர்களின் பொறுப்பு. ஆனால், என் மற்றொரு தாய் ஆகிய தமிழகத்திற்கு விழுந்த கத்திக் குத்திலிருந்து அதனைக் காப்பாற்றும் பெரும் பணியில் ஈடுபட என்னால் முடியும்.
அஞ்சுகத் தாய் என்னைப் பெற்று வளர்த்தார்கள்! கழகமோ என்னைப் போன்றவர்களால் பேணி வளர்க்கப்பட்டது. என்னைப் படைத்த தாய் படும் வேதனைக்குப் பரிகாரம் காண்பதில் நான் விவரமறியாத சிறுவனாக இருக்கலாம்! ஆனால் என் போன்றவர்கள் படைத்துக் காத்திட்ட கழகத்திற்கு நேர்ந்த ஊறுகளைக் கிள்ளி எறிய எங்களுக்குத் திறமையும், துணிச்சலும், தியாக உணர்வும் இல்லாமல் போய் விடுமா? எனவேதான், அன்று காலை அறுவைச் சிகிச்சைக்கு ஆளாகி மரணப் படுக்கையில் போராடிக்கொண்டிருக்கும் அம்மாவின் நினைவு கண்களைக் குளமாக்கியபோதும், கழகத்திற்கு வந்துள்ள புதிய கேட்டினைக் களைவதற்குத் தோழர்கள் தயாராகித் தீரவேண்டும் என்ற உணர்வோடு அன்று மாலையே இராயபுரம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டேன்.
இராயபுரம் பனைமரத்தொட்டி மீனவ நண்பர்களுடன் அளவளாவி இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டது எனக்கு எல்லா வகையிலும் சற்று நேரம் இதமாகத் தெரிந்தது. அன்று காலையிலிருந்து மாலைவரை இரத்தக் கண்ணீர் வடித்த என் கண்களில் அந்தக் கூட்டத்தில் பேசும்போது தீப்பொறி பறந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். கண்களில் தீப்பொறி பறந்ததாகச் சொன்னார்களே தவிர, நான் பேசிய பேச்சுக்களில் அண்ணா போதித்த அமைதித் தன்மை நிரம்பி வழிந்தது.
துன்பம் வரும்போது ஞானம் பிறக்கும் என்கிறார்கள். ஆனால் அன்று எனக்கிருந்த அத்தனைத் துயரத்திற்கும் இடையில் மக்கள் மத்தியில் அமைதியையும் பொறுமையையும் நான் போதித்து தீரவேண்டும் என்ற உணர்வு மேலோங்கி நின்றது. அன்று நாடு நெடுகிலும் கழகத் தோழர்கள் உணர்ச்சிப் பிழம்பாகக் காட்யளித்தார்கள். 'யாருக்கு யார் தடை போடுவது?'
'ஜனநாயகத்தில் பாராளுமன்றத்தின் செய்கைக்கு உள்ள இலக்கணம் என்ன?' என்றெல்லாம் தோழர்கள் கேள்விக் கணைகளை அடுக்கிக் கொண்டிருந்தார்கள். அரசியல் சட்டத்தின் அடிப்படையே பலமான விவாதத்திற்கு உள்ளாகிக் கொண்டிருந்தது. தனிப்பட்ட முறையில் எனக்கிருந்த சூழ்நிலை எதுவாயினும், நாடு இருக்கும் நிலையில் என்னைப்போன்றவர்கள் எதைப்பேசவேண்டும் என்பதைப் பயிற்றுவித்த ஆசான் என் அண்ணன். உள்ளுக்குள் துன்ப துயரங்கள் ஊற்றாகப் பெருக்கெடுக்கும் போது மனிதனுக்கு அமைதியான போக்கும் ஏற்பட்டு விடுவதை அன்று நான் அனுபவத்தில் உணர்ந்தேன்.
அந்தக் கூட்டத்தில் என்னைச் சந்தித்த நண்பர்கள் அனைவரும் அம்மாவின் உடல் நிலை குறித்துக் கவலை தெரிவித்தார்கள். என்னுடைய கவலை அப்போது வேறாக இருந்தது. அரசியல் சட்டத்தின் 16-ஆவது திருத்தம் பற்றிய கவலைதான் என்று சொல்லவும் வேண்டுமா? அந்தக் கூட்டத்தில், "இவ்வளவு ஜனநாயகப் பண்பு படைத்த, நாகரிகம் படைத்த கழகத்தை, ஜனநாயக வழியில் நாகரிகமாக மேடையிலும், எழுத்திலும் சந்திக்க முடியாதவர்கள், 'சட்டநாதனை'த் துணைக்கு அழைக்க முற்பட்டிருக்கிறார்கள்.
இந்தச் சட்டத்தால் அழிந்து விடுவோமோ என்று நம்மில் யாரும் வருத்தப்படவில்லை. எல்லாப் பிரச்சினைகளையும் மறந்து விட்டு, முதுகில் சீனர் ஏறி உட்கார்ந்திருப்பதையும் மறந்து விட்டுக் கழகத்தை அழிக்கத் திட்டம் தீட்டும் இவர்களைப் பார்த்து அல்லவா உலகம் சிரிக்கப் போகிறது! மாற்றார் நினைப்பது போல் நாம் அழிவோமா இல்லையா என்பதைக் காலம்தான் தீர்மானிக்கப் போகிறது. நாம் அப்படி அழிந்துதான் தீரவேண்டும் என்றால், நாம் அழிந்தாலும், நாம் வளர்த்து விட்ட உணர்வுகளை, உள்ளத்து உணர்ச்சிகளை இவர்களால் அழிக்க முடியுமா?
அவசரப்பட்டதால்தான், இலக்கியத்தில் அமராவதி பூக்களைத் தவறாக எண்ணியதால்தான் அம்பிகாபதி தலை உருண்டு, அவர்கள் காதல் நிறைவு பெறாமல் போயிற்று. ஆகவே, புதுச் சட்டத்தைக் கண்டு யாரும் ஆத்திரமோ, அவசரமோ கொள்ள வேண்டிய அவசியமில்லை. பொறுமையுடனும், பதட்டமில்லாமலும் பூக்களை எண்ணி வையுங்கள்."
"1962-இல் சட்டமன்றத்தில் 50 பூக்களை எண்ணி வைத்தீர்கள். 1967-இல் பதட்டம் இல்லாது பொறுமையுடன் 180 பூக்களை எண்ணி வையுங்கள். அப்படிப் பொறுமையாகச் சரியாகப் பூக்களை எண்ணி வைத்துவிட்டால், அம்பிகாபதி அழிய வேண்டியதுமில்லை; அமராவதி சாக வேண்டியதுமில்லை."
-என்று பொறுமையையும் நிதானத்தையும் பற்றிப் பேசினேன். இன்று கழகத்தின் முக்கியக் கொள்கையாக விளங்கும் மாநில சுயாட்சிக்கான சூசகம் அண்ணா அவர்களால் 1963 ஜனவரி 25 அன்று மாநிலங்களிள் அவையில் முதன் முதலாகத் தெரிவிக்கப்பட்டது. பிரிவினைத் தடைச் சட்டத்தை எதிர்த்து மாநிலங்கள் அவையில் சுருக்கமாகப் பேசிய அண்ணா அவர்கள்: "பிரிவினைத். தடை மசோதாவைக் கொண்டு வருவதற்குப் பதிலாக, எல்லா அரசியல் கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்றை நிறுவி எங்களுடன் விவாதிக்க வேண்டும்.
இன்றுள்ள அரசியல் அமைப்பு முறையைத்தான் தி.மு. கழகம் எதிர்க்கிறதே ஒழிய, நாட்டின் ஆதிபத்திய உரிமையை எதிர்க்கவில்லை. ஆகவே, நாட்டின் ஆதிபத்திய உரிமைக்கு நாங்கள் அபாயத்தைக் கொண்டு வரவில்லை. கூட்டு ஆட்சி செயல்படும் முறை மீதுதான் எங்களது கட்சி குறைபட்டுக்கொள்கிறது. கடந்த 13 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அரசியல் அமைப்பு முறை மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாநிலங்களை டில்லி ஏதோ மாநகராட்சி மன்றங்கள் போலத்தான் நடத்தி வந்திருப்பதாகக் கருத வேண்டியிருக்கிறது."
-என்று பேசி, மாநிலங்களுக்கான அதிக அதிகாரங்கள் கோரிப் பின்னர் கழகம் வலியுறுத்துவதற்கான அடிப்படையைக் கோரி, அன்று தான் அதிகாரப்பூர்வமாக அறிஞர் அண்ணா உருவாக்கினார். அம்மா அவர்கள் மரணத்தோடு போராடிக் கொண்டிருந்த நாட்களில்தான், இவைபோல் கழகத்தின் எதிர்கால வாழ்வைக் கணிக்கும் அடிப்படைகள் உருவாயின. இத்தகைய பரபரப்பான சூழ்நிலைகள் எனக்கும் சற்றுக் கவலைகளை மறக்கச் செய்தன என்றாலும், ஜனவரி 27- இல் எங்கள் குடும்பத்தில் பேரிடி விழுவதைத் தடுக்க முடியவில்லை.
ஜனவரி 27 அன்று விடிந்தபொழுது என்னைப் பொறுத்தவரை, 'கரிநாளாகப்' புலர்ந்தது. இப்போதும் ஜனவரி 27 வரும்போதெல்லாம் என் தாயின் பக்கத்தில் அமர்ந்திருப்பதாக ஏற்படும் உணர்வினை என்னால் அடக்க முடியவில்லை. 72 வயதாகியும் அந்த என் குலதெய்வம் கடைசி மூச்சு வரையில் நான் சார்ந்துள்ள கழகத்தின் நடவடிக்கைகளையும், அவற்றில் நான் பெறும் பங்கு பற்றியும் அறிந்து மகிழ்வதற்குத் தவறுவதே இல்லை. மிக ஆபத்தான சூழ்நிலையில் அம்மா படுத்திருந்த போதும், தம்மைக் காணவந்த அப்போதைய நல்வாழ்வுத் துறை அமைச்சர் திருமதி ஜோதி வெங்கடாசலம் அவர்களிடம் அரசியல் குறித்து நகைச்சுவை பொங்கப் பேசியதைக் கண்டு அம்மையார் வியந்து போனார்கள்.
"இந்த நிலையிலும் இவ்வளவு நகைச்சுவையோடு பேசும் இந்தத் தாய், இன்னமும் நீண்ட நாள் நம்மிடையே இருக்க வேண்டும். இவர்களுக்கு மகனாகப் பிறந்த நீங்கள் கொடுத்து வைத்தவர்" என்று அவர்கள் உருக்கத்தோடு சொன்னார்கள். அடுத்த இரண்டொரு நாட்களில் "நாம் கொடுத்து வைத்தது இவ்வளவுதானா"? என்று என் வீட்டார் கதறியதைக் கண்டு நானும் கல்லாய்ச் சமைந்து நின்றேன். அம்மா இறந்த செய்தி அறிந்ததும் நாடு நெடுகிலுமுள்ள கழகத் தோழர்கள் அனைவரும் தத்தமது குடும்பத்தில் ஒரு பேரிழப்பு நேர்ந்ததாகவே கருதி எனக்கு ஆறுதல் தெரிவித்தார்கள்.
அம்மாவின் மறைவு நாட்டில் உணரப்பட்டதைப் பார்த்ததும் எனக்கே பெருமையும், பிரமிப்பும் ஏற்பட்டன. அந்த அளவுக்கு அம்மா கழகத் தோழர்களிடம் கனிவையும் பாசத்தையும் பொழிந்தார்கள். அதிலும் கழகம் என்றாலோ, அறிஞர் அண்ணா என்றாலோ, அம்மா என்னைக்கூட மறந்து விடுவார்கள். கழகத்தோடு வளர்ந்து கழகத்தோடு இணைந்து பிணைந்துவிட்ட குடும்பம் என் குடும்பம் என்று தோழர்களிடையே அசைக்கவொண்ணா நம்பிக்கை ஏற்பட்டதற்குக் காரணமே அம்மா அவர்கள்தான்.
அம்மாவின் இறுதி யாத்திரை இதனைத் தெளிவாக்கிற்று. ஒரு பெரிய அரசியல் தலைவருக்குச் சேர்க்கின்ற சிறப்பினை அம்மாவின் இறுதி யாத்திரையின்போது
தமிழகம் அவருக்குச் சேர்த்தது. அம்மா இறந்த செய்தி கேட்டதும் அண்ணா அவர்கள் டெல்லியில் தமக்கிருந்த மிக முக்கியமான அலுவல்களையும் மறந்து சென்னைக்கு விரைந்தார். அம்மாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு ஆறுதல் அளித்தது எனக்கு இதமாக இருந்தது. மோதிலால் நேரு அவர்களின் இறுதி ஊர்வலத்தின் போது காந்தி அடிகள் கலந்து கொண்டது தன்னுடைய துக்கத்தைப் பெருமளவு குறைத்ததாக நேரு சொன்னார். அதேபோல், அண்ணா அவர்களின் பரிவான அரவணைப்பும் எங்கள் குடும்பத்தினரிடையில் ஏற்பட்ட இழப்பைத் தாங்கிக் கொள்வதில் பெரும்பலத்தை அளித்தது.
அது மட்டுமல்ல; அம்மா மறைவினைக் குறித்து அறிஞர் அண்ணா தெரிவித்த கருத்துக்களையும், அளித்த ஆறுதல் மொழிகளையும் இன்னமும் என் குடும்பக் கருவூலமாகப் போற்றிப் பாதுகாத்து வருகிறேன். அம்மாவைப்பற்றி அறிஞர் அண்ணா எழுதியது, என்னைப் பொதுத் தொண்டுக்கு ஆளாக்க அம்மா அவர்கள் எத்தகு காரணமாக இருந்தார்கள் என்பதைத் தெளிவாகத் தெரிவித்தது. "கண்டவுடன், மேயர் நம்ம கட்சிதானே வரும்? அதைவிடக் கூடாது! புதுசாச் சட்டம் வருகிறதாமே, என்ன செய்யப்போறீங்க?
நம்ம கட்சியைக் கேலி பண்ணிப்படம் போட்டாங்களாமே, பார்த்தீங்களா? அதுக்கு என்ன செய்யப் போறீங்க?" என்று இவைபோன்ற கேள்விக் கணைகளைக் கேட்டு ஆர்வத்தைப் பொழிந்த ஓர் அன்னையை நான் கண்டதில்லை. இப்படிப்பட்ட தாய்ச் செல்வம் பெற்றிருந்த காரணத்தால்தான் தம்பி கருணாநிதிக்கு 'நிதி' என்று பெயரிட்டார்கள் போலும்!
"வயது எழுபத்திரண்டு; தோற்றம் அப்பழுக்கற்ற கிராமிய முறை; அணிகலன் கிடையாது; அந்த வீட்டிலே மூதாட்டி அஞ்சுகம் அம்மையார் கழக மாநாட்டிற்காக வெளியூரிலிருந்து வரும் தாய்மார்களில் ஒருவர் போல இயக்கப் பேச்சு ஒன்றிலேயே தமக்குச் சுவை தேடிக்கொண்டு உலவி வந்தார்கள் அவர்களை அறிந்த அனைவர் உள்ளத்திலும் அவர்களைப் பற்றிய நினைவு என்றும் இருக்கும்."
அம்மாவைப் பற்றி இப்படி எழுதிய அண்ணா அவர்கள், எனக்கும் அண்ணாவுக்கும் இருந்த பாசத்தை-பந்தத்தை-உறவு முறையை அம்மா எவ்வாறு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதையும் அண்ணாவே கூறுகிறார். கருணாநிதி திருச்சி சிறையிலிருந்து விடுதலையானபோது நான் சென்றிருந்தேன். வரவேற்று மகிழ்ச்சி பெற அம்மா வரவில்லை. சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள், வீட்டிலே கண்டு கேட்டேன்; 'மகன் ஜெயில்லேருந்து வெளி வருவதைப் பார்க்க வரவில்லையே, ஏன்?
என்று. 'நான் வேறு அல்ல, அந்தக் குடும்பத்தில் நான் ஒருவன்' என்று என்னை உணர்ந்துகொள்ளச் செய்யும் விதமாக அமைந்தது அவர்களின் பதில்! 'நீங்க போனீங்க இல்லே, அது போதாதா?' என்று கேட்டார்கள். எத்தகைய பண்பு! எத்துணைப் பரிவு!" என்று அண்ணா சொல்கிறார்; என்னைப் பெற்ற தாயாக இருக்கலாம்; என்னை அரசியலில் ஆளாக்கிவிட்ட என் அண்ணன் இப்படிப் புகழும் ஒரு தாயை நான் பெற்றிருந்தேன் என்பதில் இன்றும் எனக்கு நினைக்குந்தோறும் பெருமைதான்!
அண்ணா மேலும் சொல்லுகிறார்: "அஞ்சுகம் அம்மையாருக்கு இருந்த தெளிவு. திடம், ஆர்வம் மறைந்து விடவில்லை. எங்கள் மூலமாக அவை தழைத்துப் பூத்துக் காய்த்துக் கனிந்து இருப்பதைக் காணுங்கள் என்று கருணாநிதி, மாறன், அமிர்தம், செல்வம் ஆகியோர் கூறவேண்டும். கதறிக்கிடப்பதை, கலங்கித் தவிப்பதை, அஞ்சுகம் அம்மையார் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். எனக்கு அந்தக் குடும்பத்திடம் ஏற்பட்டுள்ள பிணைப்பு இயற்கையானது என்று எண்ணுகிறேன்.
எனவே கருணாநிதியும் மற்றவர்களும் தாயை இழந்த தவிப்பை, என் துணையும் பற்றும் உண்டு என்ற நினைப்பினால், அம்மையாரின் புகழினை ஒளிவிடச் செய்யும் மணிகளாக விளங்கி வரவேண்டும் என்று என் அன்புரையைத் தெரிவித்துக் கொள்கிறேன்." அண்ணாவின் இத்தகு அன்புரை, ஆதரவு, அரவணைப்புகளுக்குப் பிறகும் நான் அம்மாவின் இழப்புக்காக வருந்தியே காலங்கடத்துவது முறையாகுமா? மக்களை இழந்த பெற்றோர்களுக்குக் கிரேக்கப் பெருமகன் பெரிகிள்ஸ் அளித்த ஆறுதலைப் போலவே தாயை இழந்த எனக்கு அண்ணாவின் ஆறுதல் மொழி புதிய வேகத்தை அளித்தது.
அந்தக் கணமே என் மனநிலையை எழுத்திலே வடித்து, என்னை முழுவதும் தேற்றிக்கொண்டேன். "அம்மா, நீ பிரிந்ததை நான் நம்பவில்லை. நீ என்னைப் பிரியமாட்டாய்; நீ என்னோடு கலந்துவிட்டாய்." இப்படி எழுதத் தொடங்கிய நான் கண்ணீரோடுதான் எழுதினேன். இருந்தாலும் மனத்தில் ஏறிய இழப்புச் சுமையை அந்தக் கண்ணீரில் கரைத்துப் பேனாவை ஓட்டினேன். எழுதும்போது ஏதேதோ எண்ணங்கள்! எப்போதோ நடந்த சிறு நிகழ்ச்சிகள் அனைத்தும் மனக் கண்ணில் நிலைகுத்தி நின்றன அப்போது நான் எழுதவில்லை.
அம்மாவிடம் பேசினேன்: "இலைமுன் உட்கார்ந்து உணவு அருந்தும்போதுகூட உன் இடுப்பில் இருந்து அம்புலி பார்க்கும் குழந்தையாகத்தானே என்னை நீ எண்ணிக்கொள்வாய்! உறங்கும்போது உன் இதயம் எனக்குத் தாலாட்டும். நான் உழைக்கும்போது உன் மூச்சு எனக்குத் தென்றல்; இத்தனையும் நிறுத்திவிட்டு நீ எப்படி அம்மா என்னைப் பிரிவாய்? நீ பிரியவில்லை! நீ என்னோடு கலந்து விட்டாய்!"
"உன்னிடம் கற்றுக்கொண்ட கனிவு, கருணை, எளிமை, இனிமை, பண்பு, பழக்கம், பகைவரிடமும் பரிவு காட்டும் தன்மை இவைகளை வளர்த்து வளர்த்து நான் முழுமை பெறுவதற்குத் துணையாக நீ என்னோடு கலந்துவிட்டாய் என்பதுதான் அம்மா உண்மை!" இப்படி நான் எழுதியபோது, இல்லை, அம்மாவுடன் பேசியபாது, அந்த நேரத்திற்கான ஆறுதல் பெறுவதற்காக அல்ல. இவைகளை என் வாழ்க்கையின் குறிக்கோள்களாகவே கருதி உறுதிமொழி எடுத்துக்கொண்டேன் என்பதுதான் உண்மை.
"நீ கடைசி மூச்சு விடுத்தபோது நீ என்னைப் பிரிந்து விட்டாய் என்றுதான் கதறினேன். அது கடைசி மூச்சல்ல: காலியாகிவிட்ட என் சுவாசப் பைக்கு நீ அளித்த உயிர் மூச்சு: அந்த மூச்சை எனக்கு வழங்கி என்னை வாழவைக்க நீயும் என்னோடு கலந்துவிட்டாய். நான் கொண்ட இலட்சியத்திற்காக மேலும் பல கொடுமைகளைச் சந்திக்க நான் வாழ்ந்து தானே தீரவேண்டும் என்று எண்ணிவிட்டாய் போலும். அதனால்தான் எனக்கு உயிர் தந்துவிட்டாய் அம்மா!
உன் கண்ணை மூடிக்கொண்டு என் கண்ணால் பார்க்கிறாய்! உன் வாயை மூடிக்கொண்டு என் வாயால் பேசுகிறாய்! 'அம்மா!' என்கிறேன். குரல் தழுதழுக்கிறது. உன் நாவுக்குள்ள நயம் முற்றிலும் எனக்குக் கிட்ட அருள் புரிவாய், அம்மா!" என்றும் அன்று வேண்டிக்கொண்டேன். "மற்றவர்களை, 'அழாதீர்கள்' என்று சொல்லும் ஆற்றலைப் பெற்று விட்டேன்.
அந்த ஆற்றலை நீ எனக்கு அளித்து விட்டாய்! தாமதமாக நீ எனக்கு அளித்தது இது ஒன்றுதான் தாயே! நான் இனி மற்றவர்களுக்கு ஆறுதல் கூறுவேன். உன் இருதயத்தை என் இருதயத்தோடு ஒட்டி விட்டாய். இனி நான் அழமாட்டேன். நீ என்னைப் பிரியவில்லை. என்னோடு கலந்துவிட்டாய்!"
-என்று எழுதிவிட்டு, எனக்கு ஏற்பட்ட இழப்பின் துக்கச்சாயலை, வேகமான கழகப் பணிகளினால், என் குடும்பத்து மூத்த செல்வம் மாறனின் திருமணத்து வேலைகளினால் வெகுவாக மாற்றிக்கொள்ள முனைந்தேன். அந்தத் தாயின் இருதயம்தான் எனக்கு இப்போதும் உயிர்ப்புச் சக்தியாக விளங்குகிறது. நான் முதலமைச்சர் பொறுப்பில் நாட்டுக்கு ஏதாவது நன்மை செய்கிறேன்-செய்ய முயல்கிறேன் என்றால், அது என்னை ஆளாக்கிய அண்ணனின் பயிற்சி மட்டுமல்ல, என் அன்னையின் இருதயத்துப் பண்பும் ஆகும் என்று சொல்வது மிகையல்ல.
