நெஞ்சுக்கு நீதி
தங்கக் கட்டுப்பாடு · 120 / 391
தங்கக் கட்டுப்பாடு தொ டர்ந்து கழகம் போர் நிதி திரட்டும் காரியத்திலும், போர்ப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டது. இதற்கிடையே மத்திய அரசின் தங்கக் கட்டுப்பாடு சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. வெறும் வரட்டுச் சித்தாந்தங்களும், நடைமுறைக்கு ஒவ்வாத முழக்கங்களும் அவசரப்பட்டுச் செயல்படுமேயானால் நாட்டு மக்களுக்கு எத்தகைய இன்னல்கள் வந்து சேரும் என்பதற்குத் தங்கக் கட்டுப்பாடு சட்டம் ஒரு சான்றாகும். மக்கள் மனத்தினைப் பிரச்சாரத்தால் மாற்றிப் படிப்படியாக வர வேண்டிய நிதி நியதியைத் திடுமெனச் சட்டத்தின் மூலம் சாதிக்க நினைப்பதில் உள்ள கேடுபாடுகளைத் தங்கக் கட்டுப்பாடு சட்டம் நன்கு உணர்த்தியது.
இந்தச் சட்டம் நாட்டில் உருப்படியாகச் சாதித்துக் கொடுத்தது என்ன என்பது இன்னமும் விடுவிக்கப்படாத புதிர்தான். அதே போல, இன்று அந்தச் சட்டம் என்னவாயிற்று என்பது தேடி விடைகாண வேண்டிய ஒன்றாகும். ஆனால் திடீரென வந்த அந்தச் சட்டம் லட்சோப லட்சம் மக்களைத் திக்கு முக்காடித் திணறச் செய்து விட்டது. இந்தச் சட்டத்தால் வடக்கில் பெரும் பணக்காரர்களும் தங்கக் கடத்தல் பேர்வழிகளும் பாதிக்கப்பட்டார்களா என்பது ஆய்ந்து பார்க்கவேண்டிய செய்தி.
ஆனால் லட்சக்கணக்கான ஏழை எளிய பொற்கொல்லர்கள் பட்டினியாலும், வறுமையாலும் வாடி நொடித்ததும், மடிந்ததும் நாடறிந்த உண்மையாகும். பல லட்சம் பேர் இந்த சட்டத்தால் தமிழகத்தில் பாதிக்கப் பட்டனர். மாநில ரீதியான விவகாரங்களைக் கணக்கில் கொள்ளாமல் மத்திய அரசு ஒட்டு மொத்தமாகச் செய்து விடும் சில முக்கிய முடிவுகளின் காரணமாக அந்தந்த மாநிலத்துச் சமுதாயப் பொருளாதார நிலைமைகளே சரிந்து விடுவதற்குத் தங்கக் கட்டுப்பாடு சட்டமும் ஓர் எடுத்துக் காட்டு.
பொற்கொல்லர்கள் செய்வதறியாது தேம்பினர். குடும்பம் குடும்பமாய் வாழ்வுக்கு மன்றாடினர். பரதிக்கப்பட்ட பொற்கொல்லர்களுக்கு வழி செய்ய வேண்டுமென்று கழகம் பலமாக வாதாடிற்று. "சிக்கனத்தின் சின்னம்", "நாகரிக உலகிற்கு ஏற்ற நடவடிக்கை" என்றெல்லாம் அந்தச் சட்டத்தைக் கொண்டு வந்த மொரார்ஜி தேசாயைக் காங்கிரஸ்காரர்கள் பாராட்டினார்கள் என்றாலும், தமிழ் நாட்டிலே உள்ள காமராசரைப் போன்ற தலைவர்கள் வெளிப்படையாக எந்தக் கருத்தும் அறிவிக்கா விட்டாலும், அந்தச் சட்டம் அப்போது தேவையில்லாத ஒன்று என்பதைத் தனிப்பட்ட முறையில் முணுமுணுத்துக் கொண்டு இருந்தார்கள்.
ஆனால் அதை எதிர்த்து வாதாடுகின்ற வல்லமையைக் காமராசர் போன்றவர்கள் அப்போது பெற்றிருந்ததாகத் தெரியவில்லை. அந்நாளில் முதலமைச்சர் இடத்தில் காமராசர்தான் அமர்ந்திருந்தார். திருச்சி நகரத்தில் ஒரு விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார். பொற்கொல்லர்கள் தங்கள் கோரிக்கையைத் தெரிவிக்கக் காமராசர் இருக்கும் இடத்திற்கு ஊர்வலமாக வந்தனர். கொளுத்தும் வெயிலில் ஊர்வலம் வந்த பொற்கொல்லர்களில் ஒருவர் வெப்பம் தாங்காது சுருண்டு விழுந்து மடிந்தார்.
காமராசர் இடத்தில் மனுக் கொடுத்த ஒருவர், கொடுத்த இடத்திலேயே தாக்கப்பட்டார். மனுக் கொடுத்தவர்களிடம் ஒரு முதலமைச்சர் இப்படி நடந்து கொள்ளலாமா என்று சட்ட மன்றத்தில் திருச்சி நகரத்துச் சட்ட மன்ற உறுப்பினர் தோழர் எம். எஸ். மணி கேட்டார். அதற்கும் காமராசரிடமிருந்து பொறுமையான பதில் வரவில்லை. கனல் தெறிக்கப் பதில் சொன்னார். நான் இடையில் குறுக்கிட வேண்டியதாயிற்று. எனக்கும் காமராசருக்கும் இடையே சட்டப் பேரவையில் சில நிமிடங்கள் கடுமையான வார்த்தைகள் துள்ளித் தெறித்தன.
