நெஞ்சுக்கு நீதி
தென் மண்டலக் குழு · 119 / 391
தென் மண்டலக் குழு இதற்கிடையில், சீனாவைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்ற மறுத்த ஆலப்புழை நகராட்சித் தலைவரான ஒரு கம்யூனிஸ்ட் தோழரின் நடவடிக்கையைப் பீகிங் ரேடியோ பெரிதாகப் புகழ்ந்தது. தினந்தோறும் அந்த வானொலியில் ஒரு தமிழ்ப் பெண்ணின் ஒலிபரப்பு நாட்டையே பரபரப்பில் ஆழ்த்திற்று. சீனாவுக்கு ஆதரவாக மட்டுமல்ல, மத்திய அரசுக்கு எதிராக ஒரு சாதாரணக் கருத்து வெளியிடப்பட்டாலும், அதற்குப் பீகிங் வானொலியில் பிரமாத விளம்பரம் கொடுக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலை மற்றவர்களைக் காட்டிலும் அறிஞர் அண்ணாவுக்கு மிகத் தெளிவாகப் புரிந்தது. ஆகவே, சீனாவைக் கண்டிக்கும் அதே வேகத்திலேயே பண்டித நேருவின் கரத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளையும், ஆதரவாக மக்களை அணிவகுக்கச் செய்யும் பிரச்சார அமைப்பையும் உருவாக்கினார். தெற்கு முனையில் ஏற்படும் சிறு சலனத்தையும் மிகச் சரியாகக் கண்காணிப்பதற்குச் சீனா இலங்கையில் பலமான ஏற்பாடுகளையே செய்திருப்பதாகவும் அப்போது தகவல் கிடைத்தது.
ஆகையால், இமயம் எப்படி உறுதியான அரணாக இந்தியாவுக்கு இருக்கிறதோ, அதே போலக் குமரி முனையும் அசைக்கவொண்ணாக் கோட்டையாக நம் நாட்டைக் காவல் காத்து வருவதாக, டெல்லிப் பட்டணம் அல்ல, பீகிங் பட்டணம் அறிந்திட வேண்டும் என்பதற்காகக் கழகம் எடுத்துக் கொண்ட பிரச்சார முயற்சிகள் அதிகம். அப்போது தமிழகத் தொழில் அமைச்சராக இருந்த திரு ஆர். வெங்கட்ராமன் அவர்கள் சென்னையில் ஒரு நாடகத்திற்குத் தலைமை தாங்கினார்.
அவர் பேசுகையில், "சீனா ஏன் பின் வாங்கிவிட்டது தெரியுமா? தென்னிந்தியாவில் திராவிடஸ்தான் கேட்பவர்கள் இருக்கிறார்கள். வடக்கே நாகநாடு கேட்பவர்கள் இருக்கிறார்கள். இப்போது நாம் படை எடுத்தால் அந்த இரு கோஷ்டியினரும் உள்நாட்டுக் குழப்பம் செய்வார்கள். நமக்கு அது சாதகமாக இருக்குமென்று சீனர்கள் கருதியிருக்கலாம். ஆனால், நிலைமை அவர்கள் நினைத்தபடி நடக்கவில்லை. எங்களுக்குள் எவ்வளவு பிணக்குகள் இருந்தாலும் இந்தியாவை இழக்க மாட்டோம் என்று இரு சாராரும் அரசுடன் ஒத்துழைப்பதைப் பார்த்ததும்தான் சீனாக்காரன் பின் வாங்கிவிட்டான் என்று நினைக்கத் தோன்றுகிறது" என்று பேசினார்.
திரு வெங்கட்ராமன் போன்று நுணுக்கமான அரசியல் தெரிந்தவர்களே உணர்ந்து பாராட்டும் அளவுக்குக் கழகத்தில் நாட்டுப்பற்றும் நல்ல எண்ணமும் அந்நியன் நுழையக் கூடாது என்பதற்காகத் தனது உயிர் லட்சியத்தைக் கூட விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் அப்போது வெளிப்பட்டன. அது மட்டுமா? பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக அப்போது தி. மு. கழகம் இருந்தது. எதிர்ப்படும் எல்லாத் தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடுவது தவிர, வேறு அறியாத அமைப்பாக இந்த நாட்டு மக்களின் செல்லப் பிள்ளையாக, உலா வந்தது.
இருந்தும், அப்போது நடந்து தீர வேண்டிய நகராட்சித் தேர்தலையே ஒத்திப்போட வேண்டும் என்று கழகம் வாதாடியது. "இன்று எல்லா வகையிலும் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு உடன்பாடு காண வேண்டும். நகராட்சித் தேர்தல்களில் சுயேச்சைகளே போட்டியிடட்டும். இல்லையேல் தேர்தலையே தள்ளிப் போட வேண்டும்" என்று அறிஞர் அண்ணா அவர்கள் சென்னைக் கூட்டம் ஒன்றில் பேசினார்.
இதற்கேற்ப நகராட்சித் தேர்தல்களை ஒத்திவைக்கும் மசோதா ஒன்று சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எதிர்க் கட்சித் துணைத்தலைவராக இருந்த நான், மசோதாவை ஆதரித்துப் பேசுகையில்- "இந்தியத் துணைக் கண்டத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக சாமானிய-சாதாரண மக்களாகக் கொண்ட தி. மு. கழகம் தன்னால் இயன்ற உதவியைச் செய்து வருகிறது. புராணத்திலே இராமர், இலங்கைக்கு அணை கட்டும் போது அணில் உதவி செய்தது என்றும், அந்த அணிலின் முதுகில் இராமர் தடவிக் கொடுத்தார் என்றும், அப்படித் தடவியதால் ஏற்பட்டவைதான் அணிலின் முதுகில் உள்ள மூன்று கோடுகள் என்றும் கூறப்படுகிறது.
அணிலைப் போன்று உதவி புரியும் எங்கள் முதுகில் நீங்கள் தடவிக் கொடுக்காவிட்டாலும் நெற்றியிலே மூன்று கோடு போடாமல் இருந்தால் அதுவே. போதும்" என்று குறிப்பிட்டேன். மசோதா நிறைவேறியது. மசோதா பேரில் நான் பேசியபடியே, சில நாட்களில் காங்கிரஸ்காரர்கள் கழகத்தின் முதுகில் தடவிக் கொடுக்கவில்லை. நெற்றியிலே சூட்டுக் கோலால் கோடு போடும் கொடூரத்தைச் செய்வதற்குத் துணிந்துவிட்டார்கள். போர் முயற்சிக்கு ஆதரவாகவும் மக்களின் தன்னம்பிக்கையை மேலும் வளர்ப்பதற்கு வழி காணவும், 1962 டிசம்பர் 28, 29 நாட்களில் கழகத்தின் பொதுக் குழு சேலம் நகரில் கூடிற்று.
அதில், "படைவீரர்களுக்குப் பாராட்டும் நன்றியும்", "அரசுக்கு வேண்டுகோளும் உறுதி மொழியும்" என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கையிலேயே கன்னியாகுமரியில், டிசம்பர் 29, 30 நாட்களில் கூடிய தென்மண்டலக் குழுக் கூட்டத்தில் நான்கு மாநில அமைச்சர்களும் உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களும் கலந்து கொண்டனர். "இந்தியாவிலிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்று கோருவது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது" என்று சட்டமியற்றும் ஆலோசனைக்குத் தென்மண்டலக் குழு ஒருமனதாக ஆதரவு தெரிவித்தது.
"முடிந்தால் அடுத்த பாராளுமன்றக் கூட்டத்திலேயே இது தொடர்பான மசோதா வரலாம்" என்று லால்பகதூர் சாஸ்திரி நிருபர்களிடம் டிசம்பர் 30-ஆம் தேதி மாலை தெரிவித்தார். சீனா எதை நம்பிப் படை எடுத்தது என்பது அரசியல் ரீதியாக அதுவரை வரையறுத்துச் சொல்லப்படவில்லை. ஆனால் அந்தப் படை யெடுப்புச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கழகத்தின் குரல் வளையை நெரிப்பதற்குத் துணிந்துவிட்டது காங்கிரசுக் கட்சி. கழகத்தின் கண்ணும் கருத்தும் வடக்கே இமயமலை அடிவாரத்தில் இருந்தபோது, குமரிமுனையில் தென் மண்டலக் குழு என்ற பெயரால் காங்கிரஸ் முதலமைச்சர்கள் செய்த முடிவு தி.
மு. கழகத்தின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே அமைந்ததாக நாடு உறுதி செய்து கொண்டது. தேவையே இல்லாத நேரத்தில் வீணான பிரச்னைகளை விடாப்பிடியாகப் பேசிக் கொண்டிருப்பது காங்கிரஸ் கட்சியின் அரசியல் பண்பாடாகி விட்டதால், பிரிவினையைத் தடுப்பதாகக் கூறிக் கொண்டு அவர்கள் எடுத்த முடிவு அதையே எதிரொலித்தது. ஆனால் கழகம் இந்த முடிவைக் கண்டு கலங்கிடவில்லை. காங்கிரஸ் கட்சியின் போக்கினைக் கேலி செய்யும் வகையில் கழகத்தின் உணர்வுகளும், செயல்களும் பெருந்தன்மையோடு எழுந்து நின்றன.
நாடு, எல்லை, சீன ஆக்கிரமிப்பு, நேருவுக்கு ஆதரவு, போர் முயறசியில் பெரும் பங்கு என்பதுதான் கழகத்தின் அப்போதைய சிந்தனை, சொல், செயலாக மிளிர்ந்தன. ஆத்திரமூட்டப்பட்ட நேரத்தில் எல்லாம் பொறுமைக் காட்டிக் கழகம் தன் புகழை வளர்த்ததைப் போலவே இந்த நேரத்திலும் எதிர்க் கட்சியினர் வியக்கும்படியாகக் கழகம் பொறுப்புணர்வோடு பணியாற்றியது. தென் மண்டலக் குழுவின் முடிவை யொட்டிக் கழகம் எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று காங்கிரஸ் கட்சி நினைத்ததோ அதற்கு நேர்மாறாகச் செயல் பட்டு, அதனை ஏமாற செய்ய வேண்டும் என்பதுதான் கழகத்தின் திட்டம்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற இடைத் தேர்தலில் கழக வேட்பாளர் ப. உ. சண்முகம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரைத் தோற்கடித்ததைத் தொடர்ந்து கழக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்ற சூழ்ச்சி எண்ணம் தென்மண்டலக் குழுவின் வாயிலாக வெளிப்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. பிரிவினையைத் தடுப்பதற்குக் காங்கிரஸ் முதல்வர்களின் குழு முடிவெடுத்த நேரத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் விடுத்த அறிக்கையில், "மண்டலக் குழு சட்ட நிலைப்படி பிரிவினைப் பிரச்சாரத்தைத் தடை செய்ய முடிவெடுத்துள்ளது.
ஆனால் உண்மை நிலைப்படி பார்த்தால் பிரிவினைப் பிரச்சாரம் நிறுத்தப்பட்டு விட்டிருக்கிறது. இவ்வாறிருக்கையில் மண்டலக் குழு இப்படி ஒரு முடிவெடுக்கத் தேவையில்லை என்று கருதுகின்றேன்" என்று குறிப்பிட்டார்.
