நெஞ்சுக்கு நீதி
நாமும் அமெரிக்காவும் · 118 / 391
நாமும் அமெரிக்காவும் அன்று நான் என்னுடைய முதன் முதலான அமெரிக்கச் சுற்றுப் பயணத்தை முடித்து நாடு திரும்பும் வழியில் இருந்தேன். நான் சென்னைக்கு வரும் அன்றே டிசம்பர் 5-இல் எனக்கு வரவேற்பு அளிப்பதற்காக நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியைப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் கண்டனக் கூட்டமாக மாற்றுமாறு வெளிநாட்டிலிருந்தே கேட்டுக் கொண்டேன். பாகிஸ்தான் இந்தியா மீது நேரடிப் போரைத் துவக்கியதும் இந்தியாவிலேயே முக்கிய அரசியல் கட்சிச் சார்பாக முதன் முதலில் நடை பெற்ற கண்டனக் கூட்டம் அதுதான் என்பது என் கருத்து கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் நான் பேசுகையில் என்னுடைய சுற்றுப் பயண அனுபவத்தைச் சுருக்கமாக விளக்கிவிட்டு, அமெரிக்காவில், நிக்சன் நிர்வாகம் மட்டுந்தான் இந்தியாவுக்கு எதிர்ப்பாகச் செயல்படுவதாகவும், அமெரிக்க மக்களும் அதன் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் இந்தியாவின் சார்பாகவே ஆதரவும் அனுதாபமும் காட்டி நிற்பதாகவும், நான் அங்கு சந்தித்த அரசியல் கட்சித்தலைவர்கள், செனட்டர்கள் ஆகியோரின் பெயரைச் சொல்லி, இந்தியா-பாகிஸ்தான் போர் பற்றி அவரவர் தெரிவித்த கருத்துக்களையும் விளக்கினேன்.
அது மட்டுமல்ல; "சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் தூங்குகின்ற புலியை இடறியிருக்கிறார் பாகிஸ்தான் சர்வாதிகாரி. இதற்குள்ளாகவே அவர் இழந்து விட்டவை அநேகம். இந்த இழப்புக்கள் ஆரம்ப இழப்புக்கள்தாம். இழப்பின் முடிவு எதுவாக இருக்கும்? ஒரு வேளை பாகிஸ்தான் நாடு முழுவதுமாகவே இருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை" என்று குறிப்பிட்டு என் பேச்சை முடித்தேன்.
கலைவரணர் அரங்கில் நான் பேசிய கருத்துக்களைத்தான் தொடர்ந்து சட்ட மன்றத்திலும் வானொலியிலும் வலியுறுத்தினேன். ஆனால், என் கருத்துக்களைத் திரித்துக் காங்கிரஸ் கட்சியினரும், கம்யூனிஸ்டுகளும், தி.மு. கழகத்திற்கு எதிர்ப்பான ஏடுகளும் செய்த பிரச்சாரம் என்ன? என்னை "அமெரிக்கதாசன்" என்றார்கள்.
"ஆறு வாரகால விருந்தினராக அழைத்ததாலேயே நமது முதலமைச்சர் அமெரிக்காவுக்கு வால் பிடித்து நம் தேசத்துக்குத் துரோகம் செய்கிறார்" என்ற பொருளில் காமராசர் ஏடு ஒன்று தலையங்கமே தீட்டிற்று. இதைவிட அவதூறான வார்த்தைகளால் என்னைப் பழித்துப் பேசுவதற்குக் கம்யூனிஸ்டுகள் அப்போதையப் போர் ஆதரவு மேடைகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. இந்தப் பழிச் சொற்களை நாடு செவி சாய்த்துக் கேட்டதா என்பதற்குக் கிடைக்கும் விடை "பூஜ்யம்" தான்.
என்றாலும், இவைகளைக் கேட்டபோது, 1962-இல் சீனப் போரின் போது, அமெரிக்க அதிபராகயிருந்த கென்னடி நம் போரில் காண்பித்த அக்கறையும், நாம் கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்திலேயே போர்த் தளவாடங்களை அனுப்பிக் கொடுக்கக் காண்பித்த ஆர்வமும் என் நினைவுக்கு வரும். 1971-இல் இந்தியாவுக்கு எதிராக-பாகிஸ்தானுக்கு ஆதரவாக-செயல்பட்ட நிக்சன் நிர்வாகத்தைக் கழகத்தைக் காட்டிலும் கண்டித்தவர்கள் வேறு இல்லை.
சட்டமன்றத்திலும் வானொலியிலும் அமெரிக்க அரசாங்கம் இந்தியாவுக்குச் செய்யும் அநீதியை என்னைக் காட்டிலும் அழுத்தமாக யாரும் கண்டிக்கவில்லை. ஆனால், அமெரிக்க மக்களையே நமது பிறவிப் பகைவர்களாகப் பிரச்சாரம் செய்த கம்யூனிஸ்டுகளின் மாய்மாலத்தை நானும் கழகத் தோழர்களும் ஒப்புக்கொள்ளவில்லை. 1971-இல் நிக்சனின் நிர்வாகம் செய்கின்ற தவற்றினை மட்டும் கண்டு, 1962-இல் கென்னடி நிர்வாகம் நமக்குச் செய்த உதவிகளை மறப்பது கூடாது; ஜனநாயகத்தில் அவ்வப்போது மாறுபடும் அரசாங்கத்தின் செயல் முறைகளை வைத்து அந்த நாட்டு மக்களையே வெறுக்கும் மனப்போக்கு கூடாது என்பதுதான் ஜனநாயக மேதையான என் அண்ணனின் போதனை.
இதைப் பின்பற்றித்தான் என் கருத்துக்களை வலியுறுத்தினேன். 1971-இல் ஜனநாயக அரசியல் நடத்தும் நாடுகளின் அரசாங்கத் தவறுகளைக் காட்டியே, அந்த நாடுகளின் ஒட்டு மொத்தமான மக்களிட மிருந்து நம்மைத் தனிமைப்படுத்தும் முயற்சியை மேற்கொண்ட கம்யூனிஸ்டுகள் தோல்வியுற்றார்கள் என்றே சொல்ல வேண்டும். என் நாட்டுப்பற்றையே திரித்துக் குறை கூறித் திசை திருப்ப முயற்சி செய்த கம்யூனிஸ்டுகள், 1962 சீனப் போரின் போது காண்பித்த நாட்டுப்பற்று என்ன?
அவர்களுடைய அபிமான நாடுகள் நமக்கு அப்போது அளித்த ஆதரவுகளின் தன்மை என்ன? சீன ஆக்கிரமிப்புப் போரின் போது ரஷ்யா நடந்துகொண்ட முறை பாராட்டத்தக்கது அல்ல. இந்தியாவுக்குக் கொடுப்பதாக ஏற்கெனவே அது வாக்களித்திருந்த விமானங்களை அனுப்புவதற்குக்கூட அது தயக்கம் காட்டிற்று. சீனா பிடித்துக் கொண்ட நிலப் பகுதிகள் சீன நாடுகளுக்குச் சொந்தமானவையே என்று கருத்தறிவிக்கும் பாவனையிலும் அது செயல்பட்டது. திடீரெனச் சீனாவுடன் நமக்கு ஏற்பட்ட போரில் துவக்கத்தில் திகைத்துத் திணறினோம்.
ஏராளமான போர் வீரர்களைப் பலி கொடுத்தோம். தேஜ்பூர் வரை சீனர்களின் ஊடுருவல் நம்மைப் பயமுறுத்திற்று. "இன்றைய உலகத்தின் பிரத்தியேக நிலைமைகளை உணராமலேயே கற்பனையான- செயற்கையான மனப் போக்கில் இதுகாறும் காலங்கடத்தி வந்திருக்கிறோம்" என்று பண்டித நேரு இந்தச் சந்தர்ப்பத்தில் அடிக்கடி மனம் குமுறினார் இந்தக் குமுறலை மேலும் அதிகப்படுத்துவதாகவே ரஷ்யாவின் நடவடிக்கைகள் இருந்தன.
ரஷ்யாவின் தூதுவராக அப்போது இந்தியாவில் இருந்த பெனடிக்டோவ் என்பவர் தமது அரசாங்கச் சார்பில் தேருவிடம் தெரிவித்த கருத்துக்கள் நமக்கு எரிச்சலைக் கொடுத்தன என்பதும் உண்மை. சீனர்கள் ஆக்கிரமித்துள்ள இடங்களை மீட்பதற்காக (1) மேற்கத்திய ஆயுத உதவி கோரி இந்தியா முயற்சி செய்யக் கூடாது. ஏனென்றால், மேற்கத்திய அரசுகளுக்கிடையில் இருந்து வரும் கெடுபிடிப் போரில் இந்தியாவையும் சிக்கச் செய்யும் செயலாக இது முடியும்.
(2) எல்லையில் நடைபெற்றுள்ள ஆக்கிரமிப்பு பற்றி, இந்தியா ஐ. நா. சபையில் பிரச்சினை எழுப்பவே கூடாது; ஏனென்றால் ஐ.நா. சபையில் இதுபற்றிய விவாதம் எழுந்தால் ரஷ்யா சீனாவைத்தான் ஆதரிக்கும். (3) சீனாவுடன் இந்தியா தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும். இவைதான் சீனப் போரின்போது ரஷ்யா நமக்குத் தந்த 'அறிவுரைகள்.'
இந்தப் போதனைகள் அனைத்துமே ஜனநாயக நாட்டுக்கு ஒரு சர்வாதிகார நாடு விடுக்கும் அறைகூவலாக அப்போது நாம் எடுத்துக் கொண்டோம். கம்யூனிச நாடுகள் பற்றியே மக்களிடையில் பலமான மறுபரிசீலனை உணர்வு எழுந்தது. கம்யூனிஸ்டுக் கட்சி, கம்யூனிஸ்ட் தோழர்கள் என்றாலே மக்கள் வெறுப்போடு பார்க்கும் சூழ்நிலை நிலவிற்று. டெல்லியிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை அலுவலகத்தைத் தாக்கி மக்கள் தீயிடவும் முயன்றனர். இந்தச் சம்பவத்தின்போது அந்தக் கட்டத்திற்குள் சிக்கிக் கொண்டு திண்டாடியவர்களில் நமது தமிழ்நாட்டுக் கம்யூனிஸ்டுத் தலைவர்களும் சிலர் இருந்தார்கள்.
செய்திகள் வெளிவந்தன. ஆக்கிரமிப்புச் செய்த நாடாகச் சீனாவைக் கருதி, அதனைக் கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றக்கூட, கம்யூனிஸ்டுகள் கைவசம் இருந்த ஆலப்புழை நகராட்சி போன்ற அமைப்புகள் மறுத்தன. "சீனா ஒரு 'போதும் தவறு செய்யாது' ஏனென்றால், அது நமக்கு சகோதரன்" என்று சில கம்யூனிஸ்ட் தோழர்கள் வாதிட்டனர்.
"என்றைக்கு இருந்தாலும் சீனர்கள் நமக்கெல்லாம் வழிகாட்டிகள் என்பதை மறந்துவிடக் கூடாது. அனைத்து நாட்டுக் கம்யூனிசத்தை மேலோங்கச் செய்வதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு முன்மாதிரியாக விளங்குகிறது" என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை, தன் கட்சியினருக்கு ஓர் இரகசியச் சுற்றறிக்கை அனுப்பியதாகவும் அப்போது பத்திரிகைகள் அம்பலப் படுத்தின.
நமது கம்யூனிஸ்ட் கல்யாணசுந்தரம் அவர்கள், "நம்மைத் தாக்கியது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அல்ல; சீனத் துருப்புக்களே" என்று தனக்கே உரிய 'தீட்சண்யப் பார்வையால்' அறிந்து தமிழகக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் முழக்கினார். "கல்யாணசுந்தரம் போன்றவர்கள் நடவடிக்கையும் பேச்சுக்களும் 'கம்யூனிஸ்ட் கட்சியினர்' என்றாலே 'மாஸ்கோவுக்கு ஏஜண்டுகள்' என்று சொல்லப்படுவதை உறுதிப்படுத்தவில்லையா?"
என்று கேட்டு அப்போது தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளராக இருந்த பெரியவர் மணலி கந்தசாமி அவர்களும் உள்பட கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களே கடிதங்கள் எழுதினார்கள். ஆனால், அறிஞர் அண்ணாவோ, தி.மு. கழகமோ அன்று முதல் இன்றுவரை வேற்று நாடுகளுக்கு விசுவாசம் காட்டுவதாகவோ, வெளிநாட்டு 'இசங்' களுக்கு வியாக்கியானம் செய்வதையே கொள்கையாகக் கொண்டிருப்பதாகவோ எந்தக் கருத்துக் குருடனும் மனமாரச் சொல்ல முடியாது சுருக்கமாகத் தமிழில் விளக்கிச் சொல்லக் கடினமான சில ஆங்கில வார்த்தைகளில், "Son of the Soil" என்பது ஒன்று.
இந்தப் பட்டம் எல்லாத் தலைவர்களுக்கும் எளிதாகக் கிடைப்பதில்லை. ஆனால், அறிஞர் அண்ணா அவர்களிலிருந்து தி. மு. கழகத் தோழர்கள் அனைவருக்குமே இந்தப் பட்டம் இயல்பாகப் பொருந்தும். இதைத்தான் 1962 சீன ஆக்கிரமிப்பின் போது, நாங்கள் அறிஞர் அண்ணா தலைமையில் துல்லியமாக நிரூபித்தோம். "கழகத்தின் உயிர் கொள்கையாக இருந்த திராவிட நாடு பிரிவினைத் திட்டத்தைப் போர் மேகம் கலைகின்றவரை கண்டிப்பாக வலியுறுத்தப் போவதில்லை" என அறிஞர் அண்ணா திட்டவட்டமாக அறிவித்து அதில் உறுதியோடு நின்றார்.
மூன்று மாதச் சிறைவாசத்திற்குப் பிறகு, முதன்முதலாக 1962 நவம்பர் 5-ஆம் நாளன்று அறிஞர் அண்ணா டெல்லிக்குப் போனார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளில் ஒன்றுக்குப் பதில் அளிக்கையில், "இந்திய எல்லையில் சீன ஆக்கிரமிப்பு ஒழிக்கப்படுகின்ற வரை திராவிடநாடு பிரிவினை பற்றிப் பேசமாட்டோம். நாங்கள் நினைப்பதைச் சொல்வோம் - சொல்வதைச் செய்வோம்" என்று சொன்னார்.
சொல்வதைச் செய்து காட்டுவதில் கழகமும் எடுத்துக் கொண்ட முயற்சி பெரிது. சீன ஆக்கிரமிப்பின் கேடுபாடுகளை விளக்கும் அதே வேகத்தில், அதே வகைத் தெளிவுடன் பிரிவினைத் திட்டத்தை வலியுறுத்தாத நிலைமைகளையும் நாங்கள் ஒவ்வொருவரும் மேடைதோறும் விளக்கிடத் தவறியதில்லை. அறிஞர் அண்ணாவும் நானும் பிறரும் சிறையிலிருந்து வெளி வந்தவுடன் ஓய்வு ஒழிச்சலின்றிப் போர் ஆதரவு முயற்சியில் ஈடுபட்டுப் பணியாற்றி, 'உதட்டளவு தேசியவாதிகள்' வெட்கும்படி செய்து கொண்டிருந்தபோது, நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும் நவம்பர் 8-ல் விடுதலை செய்யப்பட்டார்.
சில நாள் முன்னதாக வெளிவந்த அண்ணாவும் நானும் பிறரும், சீன ஆக்கிரமிப்புப் பற்றியும், திராவிடநாடு பிரிவினைக் கொள்கை பற்றியும் என்ன கருதுகிறோம் என்பதைக் கலந்துபேசி அறிந்திடாத நிலையிலேயே நாவலர் அவர்கள் சிறை நீங்கி வெளிவந்ததும் விடுத்த அறிக்கையில் எங்கள் கருத்தையே எதிரொலித்தார். இதனைக் கண்டு அறிஞர் அண்ணா மகிழ்ந்தார். வேலூர் சிறையில் அண்ணா என்ன சிந்தித்தாரோ அதையே நான் திருச்சி சிறையில் நினைத்தேன்.
நாவலர் சென்னைச் சிறையில் யோசித்தார். இத்தகைய கருத்து ஒற்றுமையைத்தான் 'குடும்பப் பாசம்' 'அண்ணன் தம்பிகள் உறவு' என்று அடிக்கடி அண்ணா சொல்லி மகிழ்வார்.
