உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/திருச்சியிலிருந்து விடுதலை பெற்றேன்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

திருச்சியிலிருந்து விடுதலை பெற்றேன் · 117 / 391

திருச்சியிலிருந்து விடுதலை பெற்றேன் அறிஞர் அண்ணா விடுதலை செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 26-ல் நான் திருச்சி சிறையிலிருந்து விடுதலையானேன். சிறை வாசலில் அறிஞர் அண்ணா என்னை வரவேற்றார். நான் விடுதலையான அக்டோபர் 26-இல்தான் நாட்டில் நெருக்கடி நிலைமை குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன் அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்டது. தண்டனைக் காலம் முழுவதும் முடிவுற்றது. திருச்சியில் நான் சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் இந்தச் செய்தி அண்ணாவுக்குக் கிடைத்தது.

உடனே என்னைப் பார்த்து, 'நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தித் தான் உன்னை வெளியே விடுகிறார்கள் பார்த்தாயா?" என்று அண்ணா அவர்கள் தமக்கே உரிய புன்சிரிப்போடு கேலியாகக் குறிப்பிட்ட காட்சியினை என்னால் மறக்க முடியுமா? அதே போல் அடுத்து அக்டோபர் 28 அன்று அறிஞர் அண்ணாவுக்கும் எனக்கும் சென்னையில் நடைபெற்ற ஊர்வலத்தையும் நண்பர் என். வி. என். தலைமையில் சென்னைக் கடற்கரையில் மக்கட்கடல் திரண்டு அளித்த வரவேற்பின் மாட்சியினையும் என்னால் மறக்க முடியாது.

1962 அக்டோபர் 26-ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட நான் நேரே சென்னை வந்து என் வருகையை எதிர்பார்த்து மனத்திற்குள்ளேயே குமைந்து கிடந்த என் அன்னையைப் பார்க்க முடியாமல் தோழர்களின் அன்புத் தொல்லை என்னைத் தடுத்துவிட்டது. விடுதலையானவுடன் திருச்சியில் என்னை வரவேற்று நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டேன். அன்று மாலை தஞ்சையிலும், மறுநாள் திருவாரூரிலும் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றேன்.

இடையேயுள்ள ரயில் நிலையங்கள் அனைத்திலும் ஆயிரக்கணக்கான கழக மக்கள் திரண்டிருந்து என்னைக் கண்டு வாழ்த்துக் கூறி மகிழ்ந்தனர். 28-ம் நாள்காலை திருவாரூரிலிருந்து புறப்பட்டு நேரே சென்னைக்குத்தான் வந்திருக்க வேண்டும். ஆனால் அண்ணா அவர்கள் காஞ்சியில் தங்கியிருந்தார்கள். "மதிய உணவுக்குக் காஞ்சிக்கு வந்துவிடு. மாலையில் இருவரும் புறப்பட்டு சென்னை சேர்ந்து ஊர்வலத்தில் கலந்து கொள்ளலாம்" என்று ஆணை பிறப்பித்தார் அண்ணா.

அவ்வாறே சென்று, சென்னை ஊர்வலமும் பொதுக்கூட்டமும் முடிந்து, நள்ளிரவில் வீட்டுக்குச் சென்றேன். என்னையீன்றெடுத்த அன்புத் தெய்வம் வெளிப்புறத்துக் கூடத்தில் கண்ணுறங்காமல் வெற்றிலை உரலுடன் அமர்ந்து காத்திருந்தது. என்னுடன் வந்த அண்ணா அவர்களைப் பார்த்து, "அண்ணா தம்பி! உங்கள் அம்மா உங்களை ஒரு நாள் பிரசவ வேதனையோடு பெற்றிருப்பார்கள். அதனால் நீங்கள் வேலூரிலிருந்து விடுதலையானவுடன் நேரே காஞ்சிபுரம் சென்று உங்கள் அம்மாவைப் பார்த்தீர்கள்.

ஆனால் என் பிள்ளையை நான் பல நாள் இடுப்பு வலி-பிரசவ வேதனைகளுக்குப் பிறகு பெற்றெடுத்தேன். அதனால்தான் திருச்சியில் விடுதலையான என் பிள்ளை மூன்று நாள் கழித்து அவசரமாகத் தன் அம்மாவைப் பார்க்க வந்திருக்கிறதோ?" என்று வேதனை கலந்த தனது ஆற்றாமையை வேடிக்கை போலக் குறிப்பிட்டார்கள். அக்டோபர் 28 கடற்கரைக் கூட்டத்தில் தான் "வீடு இருந்தால்தானே ஓடு மாற்ற முடியும்? வீட்டுக்கே அல்லவா ஆபத்து வந்திருக்கிறது?"

என்ற புகழ்பெற்ற சொற்பொழிவை அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றினார்கள். லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரையைப் போல, லெனின் பேசிய பெட்ரோகிராட் சொற்பொழிவைப் போல, சர்ச்சிலின் பதவியேற்புப் பேச்சினைப்போல அறிஞர் அண்ணாவின் இந்தப் பேச்சு எங்கள் நெஞ்சத்தில் நீங்காத இடம் பெற்றுவிட்டதாகும். அந்தக் கூட்டத்தில் தான், "இப்போது நடப்பது ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் நடைபெறும் தத்துவப் போராட்டம் ஆகும். ஜனநாயகம் சிரித்த முகத்தோடு இருக்கும்.

ஆரம்ப சூரத்தனம் அதனிடத்தில் இருக்காது. எனினும், அது ஆழ்ந்த ஆறு போன்றதாகும். அதில் ஆழம் தெரியாது இறங்கினால் அழுந்திப் போவார்கள். "ஜனநாயகத்துக்குத் தாங்கும் சக்தியும் உண்டு; தாக்கும் சக்தியும் உண்டு. இன்றைக்கு பீக்கிங்கிலே இருப்பது ஜனநாயகம் அல்ல சர்வாதிகாரம் தேர்தல் நடக்கும். ஆனால் ஒரே கட்சிதான் போட்டியிடும். ஒரே தலைவர்தான் இருப்பார். அவர் அறிக்கை விடுவார். அதை மக்களுக்குப் படித்துப் பொருளும் சொல்லி விடுவார்கள்.

அடுத்த அறிக்கை வந்தாலும் அதற்குப் பொருளும் கூடவே வரும்." சீனாவின் ஆக்கிரமிப்புப் பற்றியும், அதன் விளைவு பற்றியும், ஆக்கிரமிப்பை முறியயடிக்க வேண்டியதைப் பற்றியும், 'பேச வேண்டியவர்கள் பேசத் தொடங்கி விட்டார்கள்' என்பதை இந்தப் பேச்சு நூற்றுக்கு நூறு மெய்ப்பித்துக் காட்டிவிட்டது. இமயத்தின் உச்சியில் நடைபெறும் ஜனநாயக-சர்வாதிகாரப் போராட்டத்திற்குத் தெற்கே குமரி முனையிலிருந்து தான் சரியான விளக்கமும் மக்கள் புரிந்து கொள்ளும் மகத்தான சங்கதிகளும் நாள் தோறும் வெளிவரத் தொடங்கின.

சீனரின் ஆக்கிரமிப்பு இந்தியாவை அதிர்ச்சியுறச் செய்தது என்றால், அது சம்பந்தமாகக் கழகம் மேற்கொண்ட திட்டவட்டமான முடிவுகளும், கழகத் தலைவர்கள் பேசிய பேச்சுக்களும், அனைவரையும் வாய் பிளக்கச் செய்து வியப்பில் ஆழ்த்தின. சீன ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு உறு துணையாகவும் 1962-இல் முதலில் நடைமுறை சாத்தியமான குரல் கொடுத்தது தி.மு. கழகம்தான். அது மட்டுமல்ல; சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்ற இந்திய வீரர்களில் முதல் நாளிலேயே இதில் களப்பலியானவரும் ஒரு தமிழ் மகன் தான்.

தூத்துக்குடியைச் சேர்ந்த வீரன் செல்வராஜ் என்பவர்தான் அந்த மாவீரன். இரண்டாவதாகப் பலியான தமிழ் மகன் தஞ்சை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அப்துல் வகாப். பிரிவினைக்கு வித்தூன்றுவதாகப் பேசப்பட்ட தமிழகத்திலிருந்து தான் எல்லையைக் காப்பதற்குக் களப்பலியும், கருத்துரைகளும், நிதித் தொகையும் முதன் முதலாக வேகமாக வெள்ளம் போல் பெருக்கெடுத்த இமயத்தின் முடியைத் தொட்டன. நாட்டிலேயே, தனியானதொரு கட்சியின் சார்பில் ஒருநாள் சில மணி நேரத்தில் பெருந்தொகையைப் பாதுகாப்பு நிதியாகத் திரட்டி அளித்திட்ட பெருமையும் தி.மு.

கழகத்திற்கு மட்டுமே கிடைத்திருப்பதாக நான் கருதுகிறேன். டிசம்பர் 2-இல் கழகப் பொருளாளர் என்ற முறையில் நான் பொறுப்பெடுத்து எஸ். ஐ. ஏ. ஏ. திடலில் ஏற்பாடு செய்த பாதுகாப்பு நிதி வசூல் கூட்டத்தில் சில மணி நேரத்திலேயே 35,000 ரூபாய்க்கு மேல் திரண்டது. இந்திய அரசியல் கட்சிகள் திரட்டிக் கொடுத்த பாதுகாப்பு நிதி வசூலில் இது ஒரு சாதனை என்று அப்போது பேசப்பட்டது இந்தச் சாதனை மட்டுமல்ல; தி.மு. கழகத்திற்கு இந்தச் சந்தர்ப்பத்தில் வேறொரு சாதனையும் சாத்தியமாயிற்று.

நெடுகிலும் இந்தித் திணிப்பை எதிர்த்து வந்திருக்கும் தி.மு.கழகத்தின் உணர்ச்சிகளையும் அது நாட்டுப் பாதுகாப்புக்கு அளிக்கும் உருப்படியான ஒத்துழைப்பையும் புரிந்து கொண்ட பண்டித நேரு அவர்கள் தமிழகத்திற்காக மட்டுமே பிரத்தியேகமாக மத்திய அரசின் சார்பான விளம்பரம் ஒன்று வெளிவர ஏற்பாடு செய்தார். அது மட்டுமல்ல, வழக்கத்திற்கு மாறாக இந்த விளம்பரம் தி.மு. கழக ஏடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுக் கட்டாயம் வெளியிட்டே ஆகவேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

"பிரதம மந்திரியின் உத்தரவாதம்" என்பது அந்த விளம்பரத்தின் தலைப்பு. ஆங்கிலம் ஓர் இணை மொழியாக நீடித்து இருக்கும். இந்திமொழி பழக்கத்தில் இல்லாத பிராந்தியங்களின் மக்கள் விரும்பும் வரை ஆங்கில மொழியை அகற்ற மாட்டேன்-இங்ஙனம் 'ஜவஹர்லால் நேரு" என்பதுதான் அந்த விளம்பரம். இந்த விளம்பரத்தின் வாசகங்கள் தான் அடுத்து வந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் போதும்-குறிப்பாக 1965-இல் கழகத்தோழர்களுக்குப் பலமான-வலிவான-கேடயமாக அமைந்தன.

இவை போல் பல முனைகளிலும் ஆக்ரமிப்பாளர்களுக்குத் தோல்வியைக் கொடுக்கவும் கழகத்தின் உன்னதக் கொள்கைகளுக்கு வலிவு பிறக்கவும் கழகமும் கழகத் தலைவர்களும் பணியாற்றி வந்த நேரத்தில் தான் பரிதாபத்துக்கு உரிய முறையில் திடீர் விபத்துக்கு உள்ளாகி உருவத்தைச் சிதைத்துக் கொண்டனர் கம்யூனிஸ்டுகள். "சீன ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டுப் பரிதாபமாகத் தோற்றமளிப்பது கம்யூனிசமும்-கம்யூனிஸ்டுகளுமே," என்று கிருஷ்ணமேனன் அகற்றப்பட்டதும் பாதுகாப்பு அமைச்சராக்கப்பட்ட சவான் அவர்கள் பதவியேற்றதும் முதலில் பேசிய பேச்சிலேயே கேலி பொங்கக் குறிப்பிட்டார்.

கம்யூனிசம் தலை குனிந்தது. கம்யூனிஸ்டுகள் தலை எது- கால் எது' என்று தங்கள் உடலுறுப்புகளுக்குள்ளாகவே சந்தேகப்பட்டுச் சண்டை போட்டுச் கொள்ளத் தலைப்பட்டுவிட்டனர். இந்த அவல நிலைக்கு இமயத்தின் உச்சியில் ஆக்கிரமிப்புப் போர் நடத்திய சீனர்கள் மட்டுமல்ல; அதே 1962 அக்டோபர் அட்லாண்டிக் மாகடலின் ஆழப் பகுதியான பன்றி விரிகுடா (Bay of Pigs)வில் ரஷ்யாவின் போர்த் தளவாடக் கப்பல்களை முற்றுகையிட்டு நிறுத்திய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கென்னடியின் நடவடிக்கையும் ஒரு காரணமாகும்.

கம்யூனிச உலகத்தை இரு கூறுகளாகப் பிடித்து உடைத்துப் பலமற்றுப் போகுமாறு செய்ததில் நேருவின் ஆர்வமும், கென்னடியின் துணிச்சலும் சரிபங்கு எடுத்துக்கொண்டன. 1971-இல் வங்க நாட்டு மக்களின் விடுதலைக்காக நாம் மேற் கொண்ட மனிதாபிமான மிக்க நடவடிக்கைகளைக் கண்டு பொறாத பாகிஸ்தான், டிசம்பர் 3-ஆம் தேதி வாக்கில் இந்தியா மீது போர்ப் பிரகடனம் செய்து, நேரடி மோதலில் இறங்கியது.