நெஞ்சுக்கு நீதி
சீனப் படையெடுப்பை எதிர்த்துக் கழகம் · 116 / 391
சீனப் படையெடுப்பை எதிர்த்துக் கழகம் சீ ன ஆக்கிரமிப்பை எதிர்த்து இந்தியப் பிரதமருக்கு எல்லா வகையான ஆதரவும் தரப்படும் என்று தி. மு. கழகம் அறிக்கை வெளியிட்டது. அந்த நல்ல எண்ணத்தை மதிக்கின்ற வகையில் சிறையில் இருந்த அண்ணா அவர்களோ அல்லது ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்களோ விடுதலை செய்யப்படவில்லை. அனைவருடைய தண்டனைக் காலமும் முடிவுற்ற பிறகே விடுதலை செய்யப்பட்டோம். இது அன்றிருந்த காங்கிரஸ் ஆட்சியின் கொடுங்கோன்மைக்கும் பெருந்தன்மையற்ற போக்கிற்கும் ஓர் உதாரணமாகும்.
தண்டனைக் காலம் முடிந்து வேலூர் சிறையிலே இருந்து வெளிவந்த அண்ணா அவர்கள் சீன ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து வேலூர் கோட்டை வெளிமைதானத்தில் போர் முழக்கம் செய்தார். முன்னேற்றக் கழகம் தன்னுடைய முழு ஆதரவையும் அந்த யுத்தத்தில் இந்திய சர்க்காருக்கு அளிக்க முன் வந்தது. கழகத்தின் சார்பில் நன்கொடைகள் திரட்டப்பட்டு, போர் நிதியும், தங்க நகைகளும் வழங்கப் பெற்று, அவைகளை நாவலரும் நானும் முதலமைச்சர் காமராசர் இல்லம் சென்று அவரிடத்திலே அளித்தோம்.
இந்தியாவின் மீது போர் தொடுத்த நிகழ்ச்சி தமிழ் நாட்டில் அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. தி. மு. கழகம் தன்னுடையகொள்கை முழக்கமாகக் கொண்டிருந்த திராவிட நாடுப் பிரிவினையைக் கைவிட வேண்டிய சூழ்நிலைக்கு இந்தியாவின் மீது சீனர் தொடுத்த போர் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. சீனப் படையெடுப்பு இந்தியாவில் ஏற்படுத்திய அதிர்ச்சி பல முனைகளிலும்-பல துறைகளிலும் எதிரொலித்தது.
தமிழகத்தில் மாலிக் காபூர் படை நடத்தி வந்தபோது ஏற்பட்ட சலனமும் விளைவுகளும் எப்படிப்பட்டவை என்பதைப் படித்திருக்கிறேன். அதே போன்றதொரு சூழ்நிலை 1962 அக்டோபரில் நிலவிற்று. சீனாவைத் 'தூங்கும் அரக்கன்' என்று வர்ணித்தான் நெப்போலியன்!
'அது விழித்தெழுந்தால் உலகமே அதிரும்' என்றும் அவன் அப்போது சொல்லிவைத்தான். சீனா தூங்கிக் கொண்டு இருந்தபோது இந்தியா என்ன செய்துகொண்டிருந்தது என்கிற சேதி எல்லாம் ஆதிக்க வரலாறு கூறுகிற கசப்பான உண்மைகள். ஆனால் சீனா விழித்து எழுவதற்கு வேகமும், விசையும், வலிவும் தன்னம்பிக்கையும் ஊட்டுவதில் இந்திய அரசியலின் நெளிவு-சுளுவுகளுக்கும் பெரும் பங்கு உண்டு. சீனத்து விடுதலை வீரன் சன்யாட்சன் 'சீனத்துக் காந்தி' என்று அழைக்கப்படுவதும் ஒரு மரபு.
ஆகவே சீனா, சுதந்திரமாகவே இருந்ததாகப் பாவிக்கப்பட்டாலும் அடிமையாக இருப்பதன் கேவலத்தையும், அதிகாரமில்லாத தன்னரசின் சங்கடங்கள் எவை என்பதையும் சரியாக அது கற்றுக்கொண்ட இடம் இந்தியா தான்! சீனாவின் 'ஆத்மிக பலம்' நம் நாட்டுப் புத்தரால் முழு வளர்ச்சியினைப் பெற்றதாகச் சொல்கிறார்கள். அதனுடைய அரசியல் தூக்கம்-அதன் மயக்கம்-தாழ்வு மனப்பான்மை-அத்தனையையும் உதறித் தள்ளிச் சீனா சிலிர்த்து எழுவதற்கும் நாம் முக்கிய காரணமாக இருந்திருக்கிறோம்.
அதனை 'அரக்கன்' என்று வருணித்த மேற்கத்திய அரசியல்வாதிகளை நாம் நிரம்பவும் கேலி பேசினோம். "அதனுடைய உருவம்தான் அப்படி உள்ளமோ அதன் உருவத்தைக் காட்டிலும் பெரிது-பரந்தது" என்று பேசிப் பேசி உலகத்தின் கண் முன்னால் சீனத்தை நல்லபிள்ளை ஆக்கிக் காட்டுவதற்கு நமது பிரதமர் நேரு அவர்களும், அவருடன் சேர்ந்து நாமும் செய்த முயற்சி கொஞ்சமல்ல.
உலகத்துச் சமாதான வாழ்வே சீனாவை ஐ.நா. சபையில் அங்கீகரித்திடும் செயலில்தான் அடங்கியிருப்பதாக நாம் விடாப்பிடியான உறுதி காட்டி நின்றோம். இந்தப் பிடிவாதத்தின் காரணமாக நமக்கு தேசிய மட்டத்தில் ஏற்பட்ட இழப்புகளும் கணிசமானவை. எது எப்படி ஆனாலும் இந்தியா-சீனா நட்புணர்வு 'சயாமிய இரட்டையர்களைப்' போல் பிரிக்க முடியாதது என்று நாம் துணிச்சலாக நம்பிய காலமும் உண்டு. அதிலும் பாண்டுங் மாநாட்டின் போது, சீனப் பிரதமர் யார்-இந்தியப் பிரதமர் யார்-என்பதில் மேற்கத்திய நாட்டவர் குழப்பம் அடைந்திடும் விதமாகவே நடவடிக்கைகள் காணப்பட்டன.
மேற்கத்தியத் தொழிலாளர்களிடத்தில் தோற்றுப்போகும் கம்யூனிஸ்டுகள் கைவரிசை கிழக்கிந்திய விவசாயிகளிடத்தில் எப்படி வெற்றிக் கொடியினை நாட்டுகிறது பாரீர் என்று சீனாவைப் புகழ்ந்து தமிழ் நாட்டு மேடைகள் கூட அப்போது அதிர்ந்தன. பழம்பெரும் நாடுகள் இரண்டுக்கும் புத்துலகம் காண்பதில் இருக்கிற குறிக்கோள் ஒன்றே. "அதுதான் சமாதான சகவாழ்வு" என்றெல்லாம் நமது நேரு உள்பட அனைவரும், கேட்போர் காதுகள் அடைத்துப் போகும்படி முழங்கினோம்.
அது மட்டுமா? 1. போரைத் தவிர்த்து உலகத்தில் சமாதானம் நிலவிடப் பாடுபடுதல், 2. அந்தந்த நாட்டுத் தேசிய எல்லைகளை மதித்தல் 3. எந்தப் பிரச்சினையையும் கூடிப் பேசித் தீர்த்துக் கொள்ளுதல், 4. போர்த் தளவாடங்களைக் கண்மூடித்தனமாகக் குவித்துக் கொண்டிருக்கும் வல்லரசுகளின் சார்பாகச் சேர்ந்திடாமல், நடுநிலை வகிப்பது- என்பனவற்றில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்தோடு இருப்பதாகவே அன்றைய உலகம் நம்பிற்று! நாமும் அதனையே நம்பிச் சீனாவை ஆதரிப்பதும், அதன் நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதிருப்பதும் தான் நம்முடைய அயல் நாட்டுக் கொள்கையென்று ஆக்கிக் கொண்டிருந்தோம்.
இந்தக் குருட்டுத்தனமான நம்பிக்கைக்கு நேரு மட்டுமே முழுப் பொறுப்பு அல்லவென்றும், அவருடைய அயல் நாட்டுக் கொள்கையின் ஒலி பெருக்கியாக இருந்த கிருஷ்ண மேனனுக்கும் முக்கியப் பங்கு இருந்ததாகவும் பின்னர் அனைவரும் உணர்ந்தோம். அது மட்டுமல்ல; கே. பி. எஸ். மேனன் என்பவர் இந்தியாவைப் பற்றி சோவியத் ரஷ்யா கொண்டிருப்பதாகத் தெரிவித்த கருத்துக்களும் நாம் மேற்கத்திய நாடுகளுக்கு எதிர்ப்பாகவும் கம்யூனிஸ்டு சார்பு நாடுகளுக்கு கண்மூடித்தனமாக ஆதரவினைக் கொடுத்தும் நடந்து வந்ததற்குக் காரணமாக இருந்தது.
இப்படி ஏற்பட்ட பல்வேறு கோளாறுகள் சேர்ந்து நமது மனிதாபிமானத்திற்கு அறைகூவலாய், சீனப் படையெடுப்புத் திடுமென எதிர்ப்பட்டது. "சகோதர பாசம்." "சமாதானச் சக வாழ்வு." "தேசிய 'எல்லைகளின் மதிப்பு." "கூடிப் பேசிப் பிரச்சினைகளை தீர்க்கும் பொறுமை" ஆகிய உபதேசம் அத்தனையும் 1962 அக்டோபர் 20-ஆம் நாளன்று உலகத்துக் கூரையாம் இமயத்தில் வெடித்திட்ட துப்பாக்கிச் சத்தத்தில் அழுந்தி விட்டன! ரஷ்யா அது சம்பந்தமாக இந்தியாவுக்கு எதுவுமே ஆறுதலாக ஒரு வார்த்தை சொல்வதற்கும் கண்டிப்பாக மறுத்து விட்டது.
'கம்யூனிச அகிலத்தின்' அரசியல் வறுமை அப்போது நமக்குத் தெளிவாயிற்று. "கொண்டவன் சரியாக இருந்தால் கூரையேறிச் சண்டை போடலாம்" என்று தமிழகத்தில் வழங்கப்படும் கிராமியப் பழமொழி! அப்போது நமக்குக் 'கொண்டவர்கள்'சரியில்லாததால் நமது கூரையில் சண்டை தொடங்கிற்று. அக்டோபர் 2-ஆம் நாளன்று இந்தியாவில் வடமேற்கு லடாக் பகுதியிலும், வட கிழக்கு நேபா பகுதியிலும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புப் போரைத் துவக்கிவிட்டனர்.
நாடே திகைத்தது. நம்ப முடியாத கதை நடந்து கொண்டிருப்பதாக ஒவ்வொருவரும் திடுக்கிட்டனர். தேசியத்தைப்பற்றி வாய் கிழிய அதுவரை பேசியது தவிர தேசிய எல்லைகளை பலப்படுத்திக் காப்பதற்குத் தவறிவிட்ட குற்றம் மக்களுக்கெதிரில் அம்மணமாக நின்றது. இந்தப் பிரச்சினையில் தி.மு.கழகமும் அறிஞர் அண்ணா அவர்களும் தொடர்ந்து வற்புறுத்தி வந்த அறிவுரைகளுக்குச் செவி மடுத்திருந்தால் சீனப் படையெடுப்பைத் தடுக்க முடியாது போயிருந்தாலும் ஆக்கிரமிப்பை எதிர்த்து நொறுக்குவதற்கு நாம் அப்போது முழுத்தயாரில் இருந்திருக்கலாம்.
அறிஞர் அண்ணா எப்போதுமே கம்யூனிசத்திற்கு ஆதரவானவர். ஆனால் கம்யூனிஸ்டுகளை நம்பாதவர்; ஜனநாயகவாதிகளைப் போற்றுபவர். ஜனநாயகத்தின் குறைபாடுகளையும் குளறுபடிகளையும் நன்கு அறிந்தவர். ஜனநாயக முறையில் கம்யூனிசத்தின் உண்மையான பலன்களைச் சேர்ப்பதில் தான் அவருக்கு ஆர்வம் அதிகம். அந்த அடிப்படையில் தான் கழகத்தின் கொள்கைகளும் எங்களுடைய நடை முறைகளும் இன்றளவும் இயங்கி வருகின்றன. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருந்த எல்லைத் தகராறுகளின் தன்மைகளைத் தி.
மு. கழகத்தைப் போல் சரியாக உணர்ந்திருந்த அரசியல் கட்சிகள் அப்போது மிகக் குறைவு. ஆதலால்தான் 1961-ல் மதுரையில் நடைபெற்ற கழக மாநாட்டிலேயே, "ஐ. நா. மன்றத்தில் சீனாவுக்காகப் பல முறை வாதாடி வரும் இந்தியா எந்த வல்லரசுகளுடனும் கூட்டுச் சேராமல் உலக அரசியலில் நடுநிலைமை வகித்து வந்தும்-இந்தியத் துணைக் கண்டத்து மக்களுக்குப் பேரதிர்ச்சியை உண்டாக்கும் வகையில் இந்தியாவின் வட எல்லையின் சில பகுதிகளில் செஞ்சீனா புகுந்து ஆக்கிரமித்துக் கொண்டிரு்ப்பது இரு நாடுகளுக்குமிடையே உள்ள நட்புறவு கெடுவதற்குக் காரணமாக இருப்பதால் அச் செயலை இப்பொது மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது என்று அந்தத் தீர்மானம் கூறிற்று.
இது அறிஞர் அண்ணா எழுதிய தீர்மானம். செஞ்சீனா ஆக்கிரமிக்கிறது. இந்தியத் துணைக் கண்டத்து மக்களுக்குப் பேரதிர்ச்சியை உண்டாக்கும் வகையில் அது செயல்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு கெடுவதற்குச் சீனா வழி கோலுகிறது; சீனாவின் செய்கை வன்மையாகக் கண்டிக்கத் தக்கது என்ற கருத்துக்கள் 1961-லேயே தி. மு. கழகத் தீர்மானத்தில் துணிச்சலாகப் பிரதிபலிக்கும் நாட்டுப் பற்று இழை பின்னிக் கிடப்பதை அப்போது கம்யூனிஸ்டுகள் கேலி பேசினர்.
காங்கிரஸ்காரர்கள் நேருவுக்கு எதிராகப் போடப்படும் தீர்மானம் என்று கூறினர். நெடு நாட்களுக்கு முன்பே சீனாவை ஆக்ரமிப்புப் போர் துவக்கும் நாடாகப் பிரகடனப்படுத்திய கழகத் தலைவர்களை அக்டோபர் 20-ல் சீனா போர் துவங்கிய பின்னரும் சிறையிலிருந்து விடுதலை செய்யும் பெருந்தன்மை காங்கிரஸ் ஆட்சிக்கு ஏற்படவேயில்லை. தி.மு.கழகம் நெடு நாட்களுக்கு முன்பு சொன்னதையே 1962 அக்டோபர் 22 அன்று வானொலியிலும் நாடாளுமன்றத்திலும் பேசுகையில், "இதுவரை ஏற்பட்டிராத பேராபத்து சீனரின் ஆக்கிரமிப்பு மூலமாக இப்போது ஏற்பட்டிருக்கிறது.
இப்போர் நீடிக்கக் கூடும். மனநிலைகளிலும் பிற முறைகளிலும் நாம் இதற்கு ஆயத்தமாக வேண்டும்" என்று பண்டித நேரு பேசினார். இந்தப் பேச்சில் நேரு அவர்கள் வஞ்சிக்கப்பட்ட மனிதராக மட்டும் தோற்றமளித்திடவில்லை. புகழேணியின் உச்சியிலிருந்து பல படிகள் சடாரெனச் சரிந்து கீழே இறங்கி விட்டவராகவும் ஆகவிட்டார். போலந்தின் மீது இட்லர் படையெடுத்தவுடன் இங்கிலாந்தின் பிரதமர் சேம்பர்லேன் மதிப்பு மங்கிடத் தொடங்கி விட்டதைப் போலவே அக்டோபர் 20 அன்றே பண்டித நேரு பலவிதக் கடுமையான விமரிசனங்களுக்கு ஈடு கொடுக்கக் கூடிய பரிதாப நிலைக்கு இறங்கி விட்டார்.
அதுவரையில் அவர் கொண்டிருந்த நம்பிக்கைகள்-பயின்றிட்ட அரசியல் துறைகள்-சேர்ந்திட்ட புகழ்-சேமித்த செல்வாக்கு அத்தனையும் நொறுங்கத் தலைப்பட்டன என்றே சொல்ல வேண்டும். அக்டோபர் 22-ல் பண்டித நேரு மேலும் பேசுகையில், "நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும், குழுக்களும் இந்த நிலையில் ஒன்றுபடும் என்று நான் உண்மையாக நம்புகிறேன். அவை தங்களிடையே உள்ள தகராறுகள், வாதங்கள் ஆகியவற்றைக் கைவிட்டு, நமது சுதந்திரம், நேர்மை ஆகியவற்றை அபாயத்தில் இழுத்து விடுவோரை ஒற்றுமையாகவும் உறுதியாகவும் சமாளிக்கும் என்று நம்புகிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
இப்படிக் குறிப்பிட்டாரே தவிர. அறிஞர் அண்ணா அவர்களின் ஒத்துழைப்பைக் கோரி நேரு அவர்கள் அண்ணாவைப் பூட்டியிருந்த சிறைச்சாலை முகவரிக்குத்தான் தந்தி கொடுத்தார். அந்தத் தந்திக்கு அறிஞர் அண்ணா அவர்கள், ' என்னைச் சிறையிலிருந்து விடுவிக்க மனமில்லை. ஒத்துழைப்பைக் கோருவது என்ன நியாயம்?'
என்று கேட்கவில்லை! மாறாக, 'உங்கள் தந்திக்கு நன்றி. நான் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருப்பதால் வர இயலாமைக்கு வருந்துகிறேன். நிலைமைகளை எளிதாக்கத் தகுந்த வழிமுறைகளைக் கையாளும் உங்கள் திறமையில் எனக்குள்ள நம்பிக்கையினைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தான் பெருந்தன்மையோடு பதில் தந்தி கொடுத்தார்.
அடுத்து, இரண்டு நாள் கழித்துத் தண்டனைக் காலம் முடிந்ததும் அறிஞர் அண்ணா 97 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு வேலூர் சிறையிலிருந்து 24-10-62 அன்று விடுதலை ஆனார். அன்று மாலையே வேலூர் கோட்டை வெளி மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சீன ஆக்ரமிப்புப் பற்றிய பிரச்சினையில் தி.மு. கழகத்தினர் நிலை என்ன என்பதைத் திட்டவட்டமாக, வேறு வகை வியாக்கியானத்திற்கு இடமே இன்றி தெளிவாகத் தெரிவித்தார். "சீனர்களின் ஆக்கிரமிப்பை நாம் ஒரு போதும் சகித்துக் கொண்டிருக்க மாட்டோம்.
ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள சீனர்களின் காலடி திருப்பி எடுக்கப்படும் வரை திராவிட முன்னேற்றக் கழகம் நேருவின் கரத்தை வலுப்படுத்தும்... டெல்லியில் இருப்பவனையே நமக்குப் பிடிக்கவில்லை என்றால், எங்கோ-பீகிங்கில் இருப்பவனையா நமக்குப் பிடிக்கும்? "எதிரிகளிடமிருந்து முதலில் நாட்டை மீட்ட பிறகு தான், நாட்டுப் பிரிவினையே தவிர, எல்லையில் எதிரிகளை நுழைய விட்டா, பிரிவினை வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்க முடியும்?
'வடக்கே நடக்கிற யுத்தம் பற்றி மக்களுக்கு ஒன்றும் புரியவில்லையே' என்கிறார்கள். எப்படிப் புரியும்? பேச வேண்டியவர்கள் கேட்டால் தானே புரியும்?" ஆம்! பேச வேண்டிய அறிஞர் அண்ணாவும், தி.மு.கழகத் தலைவர்களும் பேசிய பின்னர் தான் தமிழகத்தில் மட்டுமல்ல; வடக்கிலும் -ஏன் யுத்த களத்திலும் கூட- சீனரின் ஆக்கிரமிப்பைப் பற்றி மக்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளத் தொடங்கினார்கள்!
