நெஞ்சுக்கு நீதி
கழகம் கொட்டிய குருதி வெள்ளம் · 115 / 391
கழகம் கொட்டிய குருதி வெள்ளம் பே ரணியின் எழுச்சியும், சிறப்பும் எங்களையெல்லாம் மகிழ்வித்துக் கொண்டிருந்த நேரத்திலேதான், மறுநாள் இரவு மயிலாடி மாரியப்பன் என்ற கழகக் காளையை மாற்றுக்கட்சி வெறியர்கள் கொலை செய்து விட்டனர் என்ற சோகச் செய்தி வந்து சேர்ந்தது. கழகம் வளர மயிலாடி மாரியப்பன் மட்டுமல்ல; ஆலந்தூர் சின்னான், நெல்லிக்குப்பம் மஜீது, சென்னை கோ. சு. மணி, கோவை ஆரோக்கியசாமி, குடந்தை ராமலிங்கம், உடையார்பாளையம் வேலாயுதம், தூத்துக்குடி சாமி, தாளமுத்து நடராசன், வட சென்னை பாண்டியன், ஆலங்குடி சிதம்பரம்.
நெடுஞ்சேரி இராமநாதன், நாகர்கோவில் கிட்டு, சென்னை மொய்தீன் பிச்சை, ராமப்பட்டணம் லத்தீப், தளபதி பிரதாபசந்திரன் - இப்படி எத்தனையோ பேர் தங்கள் இன்னுயிரைத் தத்தம் செய்திருக்கிறார்கள். அவர்களின் குருதி வெள்ளத்தில் நனைக்கப்பட்டதே கழகத்தின் லட்சியக் கொடியாகும். அந்தக் கொடி ஏந்திய கைகளுடன் கொள்கை வீரர்கள் 1962 தேர்தலில் கழக வெற்றிக்கு உழைத்தனர். தஞ்சையில் பரிசுத்த நாடார் என்னும் பெரும் பணக்காரரும் செல்வாக்குப் படைத்தவருமான காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து நான் போட்டியிட வேண்டுமென்று கழகம் முடிவு செய்தது.
அறிஞர் அண்ணாவை எதிர்த்துக் காஞ்சிபுரத்தில் ஒரு பெரிய பஸ் முதலாளி காங்கிரஸ் சார்பில் நிறுத்தி வைக்கப்பட்டார். அண்ணா அவர்களைத் தோற்கடிக்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி தன் முழு பலத்தையும் பயன்படுத்தியது. தஞ்சைத் தேர்தலில் வாக்குப் பதிவு முடிந்து, இரண்டு நாட்களுக்குப் பிறகே காஞ்சியில் தேர்தல். காஞ்சிபுரத்தைக் காங்கிரசார் மூர்க்கத்தனமாக முற்றுகையிட்டுக் கொண்டனர். நானும் நண்பர்களும் காஞ்சித் தேர்தல் பணிகளில் கடைசி நேரத்தில்தான் கலந்துகொள்ள முடிந்தது.
தமிழகமே கண்ணீர் சிந்தும் வண்ணம் காஞ்சித் தொகுதியில் அண்ணா வெற்றி வாய்ப்பை இழந்தார். ஓராயிரம் எண்ணங்களைத் தொகுத்துச் சொல்லிச் சட்டமன்றத்தில் அண்ணா உரை நிகழ்த்துவாரே; அந்தப் பெருமகனின் இடத்தில், ஒரு நாள் கூடச் சட்ட சபையில் வாய் திறக்காத ஒரு பஸ் முதலாளி வந்து உட்கார்ந்திருந்தார். நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தலைவராகவும், நான் துணைத் தலைவராகவும் சட்ட சபை தி. மு. க. கட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அண்ணா அவர்கள் வழியனுப்பி வைக்க: ஐம்பது பேர் ச்ட்டப் பேரவைக்கும், எட்டுப் பேர் நாடாளு மன்றத்துக்கும் கழகத்தினர் சென்ற காட்சியைச் சென்னைக் கடற்கரையில் லட்சக் கணக்கில் கூடியிருந்த மக்கள் கண்டு, களித்தனர்.
அப்பொழுது அண்ணா தான் தோற்கடிக்கப்பட்டதைப் பற்றிக் கூறியவை என்றென்றும் மனத்தில் கொள்ளவேண்டிய மணி வாசகங்களாகும். "என்னைத் திட்டமிட்டு ஒழித்துக் கட்டுவார்கள் என்பது முன்பே தெரியும். நமது நெடுஞ்செழியனிடமும், கருணாநிதியிடமும் நான் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்திருக்கிறேன். "எப்படி எங்கள் பதினைந்து பேரையும் 'ஒழிப்போம்' என்று கூறி ஐம்பது இடங்களைக் கோட்டை விட்டார்களோ, அதேபோல அடுத்த தேர்தலில் 'இந்த ஐம்பது பேரையும் ஒழிப்போம்' என்று கூறி இன்னொரு எழுபத்தைந்து இடங்களைக் கோட்டை விடுவார்கள்.
"ஆளைத் தேள் கொட்டினால் 'ஆ' என்று அலறுகிறான். அதனால் ஆளைவிடத் தேள் பெரியது என்று யாரும் சொல்லமாட்டார்கள். அதைப்போல நான் தோற்றதால் தோல்வி என்னை அழுத்திவிடும் என்று யாரும் கருதாதீர்கள்." தலைவனின் தோல்வி கண்டு வேதனையில் ஆழ்ந்திருந்த கழகத்தினருக்கு இந்தப் பேச்சு தெம்பு அளித்தது. தீமையிலும் ஒரு நன்மை என்பது போல் அண்ணா அவர்களைச் சட்டப் பேரவைக்குள் நுழைய விடாமல் தடுத்த காங்கிரசாருக்கு எதிராக அண்ணாவை டில்லி மாநிலங்கள் அவைக்கு அனுப்பி வைக்க நாங்கள் முடிவு எடுத்தோம்.
அண்ணா முதலில் அந்த வேண்டுகோளை ஏற்க மறுத்தார். எங்களின் தொடர்ந்த வற்புறுத்தலுக்குப் பிறகு ஒருவாறு இணக்கம் தெரிவித்தார். "தெருவோரத்து மனிதர்களின் பிரதிநிதியாக நான் வந்திருக்கிறேன்" என்று மாநிலங்களின் அவையில் அண்ணா அவர்கள் தன்னைக் குறிப்பிட்டுக் கொண்டு ஆற்றிய உரை வரலாற்றுப் புகழ்மிக்கதாகும்.
தமிழ்நாட்டிலே உள்ள காங்கிரஸ் மட்டுமல்லாமல், டில்லியிலே உள்ள காங்கிரஸ் தலைவர்களும் தி.மு. கழகத்தை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கியது அண்ணாவின் மாநிலங்கள் அவையின் உரைக்குப் பிறகுதான். இந்தியா முழுவதும் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் பண்டித நேரு, பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். நாடு விடுதலை பெற்ற பதினைந்து ஆண்டு காலமாக நாட்டு மக்களுக்காக அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் ஒரு புறம் வறுமை வாட்டவும், மற்றொரு புறம் விலைவாசி ஏற்றம் தாக்கவும், மக்கள் அவதிக்காளாயினர்.
மத்திய அரசு விலைவாசிகளைக் குறைக்கத் தனக்குள்ள பொறுப்பைத் தட்டிக் கழித்தது. இங்குள்ள மாநில அரசோ அது யார் பொறுப்பு என்பதைச் சுட்டிக் காட்டத் தவறியது. ஆகவே தி. மு. கழகம் தமிழ்நாட்டு மக்களின் ஏகக் குரலைப் பிரதிபலிக்கும் கதாநாயகனாக எழுந்து நின்றது. எங்கு பார்த்தாலும் அரிசிப் பஞ்சம், காலை முதல் மாலை வரை 'க்யூ' வரிசையில் அரிசி வாங்கக் கால் கடுக்க மக்கள் காத்து நிற்கும் பரிதாபம், பட்டினிச் சாவுகள், பெற்றெடுத்த குழந்தைகளைக் கிணற்றிலே தள்ளி விட்டுத் தாங்களும் தற்கொலை செய்து கொண்ட தாய்மார்களின் கண்ணீர்க் கதைகள், நல்லதங்காள் புராணமாக இல்லாமல் நாட்டின் நடைமுறை நிகழ்ச்சிகளாகிவிட்டன.
சட்டப் பேரவையில் கழகத்தின் சார்பில் இந்தக் கொடுமைகள் பற்றி எவ்வளவுதான் எடுத்துச் சொன்ன போதிலும் முதலமைச்சராக இருந்த காமராசர் அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அந்த நேரத்தில் மத்திய நிதியமைச்சர் மொரார்ஜி தேசாயின் தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் வேறு பிரகடனப் படுத்தப்பட்டு விட்டது. அதனால் வாழ்விழந்த பொற்கொல்லர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் தமிழ் நாட்டில் தணல் வீழ் புழுவாயினர். அவர்கள் சார்பில் கழகம் எடுத்துச் சொன்ன எந்த முறையீடுகளையும் மொரார்ஜி தேசாய் கேட்கவும் இல்லை; முதலமைச்சர் காமராசர் அதனை லட்சியம் செய்யவுமில்லை.
மத்திய சர்க்காரின் மூலம் தமிழ் நாட்டிற்குக் கிடைத்த சில திட்டங்களையும் உயர்நிலைப் பள்ளி வரையில் வழங்கிய இலவசக் கல்வி முறையையும் ராஜாஜியால் கொண்டு வரப்பட்ட கல்வித் திட்டத்தைத் தானும் எதிர்த்தார் என்ற பெருமையையும் முதலாகக் கொண்டு காமராசர் தன்னுடைய செல்வாக்கைத் தமிழ்நாட்டில் அதிக அளவில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தாரே தவிர, தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக நீதி காக்கப்படவும், பிற்படுத்தப்பட்ட எல்லா வகுப்பினரின் முன்னேற்றம் முகிழ்த்திடவும் அவர் தன்னுடைய சுட்டு விரலையும் அசைத்தாரில்லை. நாளுக்கு நாள் உணவுப் பஞ்சமும், விலைவாசி ஏற்றமும் தமிழ் நாட்டை அலைக்கழிக்கத் தொடங்கின.
கோரிக்கைகளின் தன்மையையும் உண்மையையும் புரிந்து கொள்ளக்கூட முன்வராத காங்கிரஸ் அரசை எதிர்த்துக் கழகம் போர்க்கொடி தூக்கியது. நாடெங்கும் விலைவாசி உயர்வு எதிர்ப்புப் போராட்டம். இருபதினாயிரத்துக்கு மேற்பட்ட கழகத் தோழர்கள் சிறைப்பட்டனர். அண்ணா அவர்கள் வேலூர் சிறையிலும், நாவலர் அவர்கள் சென்னைச் சிறையிலும், நான் திருச்சிச் சிறையிலும் கழக முன்னணியினர் பல்வேறு சிறைச்சாலைகளிலும் அடைக்கப்பட்டோம்.
மூன்று மாதம், நான்கு மாதம் என்று இருபதினாயிரம் பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த நேரத்திலேதான் சீன ஆக்கிரமிப்பு இந்தியாவின் எல்லையோரத்தில் ஆரம்பமாயிற்று. பிரதமர் பண்டித நேரு இந்தியாவின் வெற்றிக்கு எல்லாக் கட்சிகளின் துணையையும் நாடினார் அப்போது டாக்டர் சுப்பராயன் மராட்டிய மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டு விட்டதால், திருச்செங்கோடு தொகுதியில் நாடாளுமன்ற இடைத் தேர்தல்; அந்த இடைத் தேர்தலில் மாநில அரசின் அமைச்சர்களும், மத்திய அரசின் அமைச்சர்களும் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்து குவிந்தனர்.
கழகச் சார்பில் போட்டியிட்ட நண்பர் கந்தப்பன் காங்கிரசைத் தோற்கடித்து 720 வாக்கு வித்தியா சத்தில் வெற்றி பெற்றார். அவருடைய வெற்றிச் செய்தியை நாங்கள் சிறைச்சாலையிலிருந்து கேட்டு மகிழ்ந்தோம். கழகத்தின் முன்னணித் தலைவர்களில் திரு என். வி. நடராசன் அவர்கள் மட்டுமே வெளியில் இருந்து மற்ற கழகத் தோழர்களின் துணையோடு திருச்செங்கோடு தேர்தலைப் பொறுப்பேற்று நடத்தினார். அந்த வெற்றி கண்டு காமராசரும், டில்லி வட்டாரமும் திடுக்கிடும் நிலை பிறந்தது.
'திராவிட நாடு பிரிவினை வேண்டுமா, வேண்டாமா என்பதற்காக நடைபெறும் தேர்தல் திருச்செங்கோடு தேர்தல்' என்று சி, சுப்பிரமணியம் தேர்தல் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
