உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/சம்பத்துக்கு அண்ணனின் அறிக்கை
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

சம்பத்துக்கு அண்ணனின் அறிக்கை · 114 / 391

சம்பத்துக்கு அண்ணனின் அறிக்கை "தூ ய உள்ளத்தோடும் தோழமை உணர்வோடும் நீண்ட பல ஆண்டுகளாக உங்கள் அனைவருடைய விருப்பத்தை அறிந்தும் கொள்கை நாட்டம் கொண்டும், பொது மக்கள் நட்புணர்ச்சி காட்டத்தக்க விதத்திலும் கூடிப் பணியாற்றியவன் என்ற உரிமையோடும் இதை எழுதுகிறேன்" என்று அறிக்கை தொடங்கி "நான் இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் நமது கழகம் மேற்கொண்ட கொள்கை, திட்டம், போர் முறை ஆகிய எதிலாகிலும் என் இச்சைப்படி 'எவரையும் கேட்க வேண்டியதில்லை' என்ற போக்கில் எதேச்சாதிகாரமாக 'எல்லாம் எனக்குத் தெரியும்; மற்றவர் அறியார்' என்ற மமதையுடன் நடந்து கொண்டதுண்டா?

என்னை உங்களிடம் ஒப்படைத்து விட்டவன். உங்கள் எண்ணங்களை என்னுடையதாக்கிக் கொண்டவன். நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டங்களை நாட்டுக்கு அறிவிப்பவன். உங்களோடு சேர்ந்து அந்தத் திட்டங்கள் வெற்றி பெற உழைப்பவன். கோபத்துக்கு இடையிலேயும், என் வார்த்தைகளை முன் தொடர்புகள் கருதியேனும், தோழர் சம்பத்தும் மற்றத் தோழர்களும் அருள் கூர்ந்து யோசித்துப் பார்த்துத் தமது முடிவுகளை மாற்றிக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

(அவரால்) எந்த யோசனையும் தரப்பட்டு, விட்டுவிடப் படவில்லை. கொள்கையிலே மாற்றம்வேண்டும் என்று கூறப்பட்டதில்லை. பிரிந்து போக வேண்டிய காரணம் என்ன இருக்க முடியும்? "அனைவரும் சுமுகமாக ஒன்றுபட்டு இனித்தொடர்ந்து பணியாற்று வதென உறுதி எடுத்துக் கொண்டது திருவொற்றியூர் காவலர் கூட்டத்தில் 26-2-61-ல்; தோழர் சம்பத்தும் மற்றவர்களும் கழகத்தை விட்டு வெளியேறுகிறோம் என்று அறிவித்தது 9-4-61-இல் இந்த 42 நாட்களிலா கழகம் திருத்தப்பட முடியாத அளவுக்குக் கெட்டு விட்டது?

நாடு நம்பும் என்று எதிர்பார்க்கலாமா? நமது நெஞ்சமே நம்பாதே? "தாளமுத்து நடராசனிலிருந்து கோவை ஆரோக்கிய சாமி வரையில் தியாகிகள் கொட்டிய குருதி குழைத்துக் கட்டப்பட்ட கழகத்துடன், துவக்கம் முதல் இடம் பெற்றவர்களா இப்படி மின்னல் வேக நடவடிக்கையில் ஈடுபட்டுக் கழகத்தை விட்டு வெளியே செல்வது? "திரும்பி வாருங்கள்-திட்டவட்டமாக நமது கருத்தைப் பொதுக் குழுவுக்குக் கூறுங்கள்-பொதுக்குழு ஏற்றுக்கொண்டால் நான் குறுக்கே நிற்க மாட்டேன்.

ஏற்றுக் கொள்வேன். பொதுக்குழு உங்கள் திட்டங்களை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை என்றால், உங்கள் சீரிய பணியினால் தோழமை உணர்வால் வெகு விரைவில் பொதுக் குழுவை உங்கள் பக்கம் அழைத்துச் செல்ல முடியும். "நமக்குள்ள வேற்றுமைகள் மிகச் சாதாரணம்; கொள்கை சம்பந்தப்பட்டவை அல்ல என்று ஆயிரம் தடவை சொல்லியிருப்பீர்கள். அதை எண்ணிப் பாருங்கள். "ஒரு பெரிய அமைப்பிலே ஈடுபடும் போது நமக்கென்று தோன்றும் எண்ணங்கள் சரியானவை-நியாயமானவை-தேவையானவை என்று தோன்றினால் அந்த அமைப்பு அவைகளை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கான முறையில் காரிய மாற்றி வெற்றி காண்பது தான் ஜனநாயகக் கடமை"- என்றெல்லாம் உருக்கமாக ஒரு தலைசிறந்த ஜனநாயகவாதிக்குரிய பண்புக் குரலில் வேண்டுகோள் விடுத்து விட்டு, "அப்படிப்பட்ட ஜனநாயக வாதிகள் அனைவருக்கும் ஏற்ற இடம் திராவிட முன்னேற்றக் கழகம்.

அதனை வலிவாக்குங்கள், புதுப்பொலிவு பெறச் செய்யுங்கள்; வாரீர்-ஒன்று சேர்ந்து உழைத்து நாட்டுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமையைச் செய்வோம்என்று அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்" என்று முடித்தார். இந்தப் புனித உள்ளத்தின் அழைப்பினைச் சம்பத் ஏற்றுக் கொள்ளவில்லை. சம்பத்தோடு முதலிலே இணைந்து நின்று அண்ணாவோடு மாறுபட்டுக் காட்சியளித்த கழகக் காவலர்கள் சிலரும் சம்பத்தை விட்டுப் பிரிந்து அண்ணாவின் அன்புக் கரங்களின் தழுவலுக்குத் தங்களை ஆளாக்கிக் கொண்டார்கள்.

எத்தனையோ பேர் எடுத்துச் சொல்லியும் கேளாமல், நடந்ததை எல்லாம் மறந்து விடுவோம்; நடப்பவைகளை நல்லவையாக ஆக்குவோம்' என்று நான் சம்பத் அவர்களைத் தனியே சந்தித்துக் கேட்டுக் கொண்டதையும் புறக்கணித்து, அண்ணாவின் தம்பி என்ற பட்டியலிலிருந்து தோழர் சம்பத் தன்னை விலக்கிக்கொண்டு, கழகத்திலிருந்து வெளியேறி விட்டார்.

அவரோடு விலகியவர்களில் நாட்டிற்கு அறிமுகமான மற்றொருவர் என்னுடைய இனிய நண்பர் கவிஞர் கண்ணதாசன் ஆவார்கள். விலகிச் சென்ற வேகத்தில் தமிழ் தேசியக் கட்சி என்ற ஒரு கட்சியை உருவாக்கினார்கள். அந்தச் சமயத்தில் அவர்களுடை தவறான பிரச்சாரங்களுக்குப் பெரும் விளம்பரங்கள் கொடுத்து வந்த பத்திரிகைகளுக்குப் பதில் அளிக்க ஏதுவாக 'முரசொலி'யை 1960 செப்டம்பர் 17-ஆம் நாளிலிருந்து நாள் இதழாக வெளியிடத் தொடங்கியிருந்தேன்.

தமிழ் தேசியக் கட்சி தி.மு. கழகத்தைத் தாக்குவதற்காகக் காங்கிரசின் நிழலைத் தேடி ஓடியது. வெகு விரைவில் குட்டிக் காங்கிரஸ் என்கிற பட்டப் பெயரோடு தமிழ் தேசியக் கட்சி 1962-ஆம் ஆண்டிற்கான தேர்தலிலும் குதித்தது. "சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று அதனை அடக்குகிறேன்" என்று முழங்கியவாறு தென் சென்னைப் பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க வேட்பாளரை எதிர்த்து சம்பத் போட்டியிட்டார்.

அவர் பெரும் தோல்வியடைந்தது மாத்திரமல்ல; அவரது கட்சியினர் போட்டியிட்ட எல்லா இடங்களிலும் ஜாமீன் தொகை பறி போயிற்று. தனியாக நின்று தாக்குப்பிடிக்க முடியாது என்று கண்ட தமிழ் தேசியக்கட்சி தன்னைக் காங்கிரசோடு இணைத்துக் கொண்டது. பொதுத் தேர்தலுக்கு முன்பு கழகத்திலிருந்து விலகிய சம்பத் எம்.பி.யும், இரு எம். எல். ஏ.க்களும் கழகத்தின் செல்வாக்கினால் பெற்ற தங்கள் எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமாச் செய்யாமலேயே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கொண்டார்கள்.

இன்றைக்குக் காங்கிரஸ் கட்சியின் மாநாடுகளிலும் அதனுடைய தலைவர்களுடைய பேச்சுக்களிலும் வெளிப்படுகிற பொன் மொழி, "ஒருவர் ஒரு கட்சியை விட்டு இன்னொரு கட்சிக்குச் சென்றால் அந்தக் கட்சியின் மூலம் பெற்ற பதவிகளை ராஜினாமாச் செய்வது தான் நாணயமாகும்" என்பதாகும். எவ்வளவு பெரிய அரசியல் பண்பாட்டில் முரண்பாடுகள் நாட்டில் நிலவுகின்றன என்பதற்கு இந்த எடுத்துக்காட்டுப் போதுமானதல்லவா? "திருவொற்றியூர் காவலர் கூட்டத்திற்கும், 'தி.மு.க.

வரலாறு, வெளியீட்டு விழாவுக்கும் இடையிலே நாற்பத்து இரண்டு நாட்கள் தானே! அதற்குள்ளாகவா கழகம் திருத்த முடியாத அளவுக்குக் கெட்டு விட்டது?" என்று அண்ணா சம்பத்தைப் பார்த்து 1961-ஆம் ஆண்டு கேட்டாரே; அதே கேள்வியைத் தான் 1972 அக்டோபர் எட்டாம் நாளன்று கழகத்தைப் பற்றி அவதூறு கூறிய நண்பர் எம். ஜி.ஆர். கோஷ்டியினரைப் பார்த்து இப்போது நாடு கேட்கிறது. 1972 ஆகஸ்டு மாதம் முதல் வாரம் மதுரை மாநாட்டில் கழகம் ஒரு களங்கமற்ற பாசறை-கழக அரசு தூய்மையான மாளிகை என்று யார் பேசினாரோ; அதே எம்.

ஜி. ஆர். அறுபது நாட்கள் இடைவெளிக்குப் பிறகு கழகத்தையும் கழக அரசையும் வீழ்த்தியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு புறப்பட்டுவிட்டார். ஆம், அன்று கழகத்தைக் காட்டிக்கொடுக்க சம்பத்தின் உருவிலே புறப்பட்ட துரோகம், பத்தாண்டு காலம் கழித்து எம்.ஜி.ஆர். உருவிலே கிளம்பியது அவ்வளவுதான். ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு ஒரு முறை கழகத்திற்கு ஒரு சோதனை ஏற்படுவதுண்டு. 1949-ல் தோன்றிய தி. மு. கழகத்திற்கு 1960-ல் ஒரு சோதனை-அடுத்து 1972-ல் மற்றொரு சோதனை.

இரு சோதனைகளும் ஒரே விதமான 'அழிவு' மனப்பான்மையுடன் தோன்றியவைகளே! தமிழகத்தில் உருவாகி வரும் பெரும் சக்தியைப் பிளப்பதற்கும், அதனால் பேரானந்தம் கொள்வதற்கும் யார் துடியாய்த் துடித்தார்களோ அவர்களுக்குப் பலியாவதற்குச் சில தமிழர்களும் தயாராகவே இருந்தார்கள் என்பது தமிழினத்தில் நீண்ட கால தமிழர்களும் வரலாற்று உண்மைகளாகும். இறுதி வெற்றி தமிழர்க்குத்தான் எனினும் இடையில் எதிர்ப்படும் 'எட்டப்பர்'களையும் சந்தித்து விட்டுத்தானே, பயணத்தைத் தொடர வேண்டியிருக்கிறது?

அறுபதாம் ஆண்டில் விளைவிக்கப்பட்ட துரோகப் பயிர், கழகம் என்னும் களிற்றின் கால் பட்டு, மிதிபட்டு, அழிந்து போயிற்று. விழியில் கனலையும் நெஞ்சில் அனலையும் நிறைத்துக் கொண்டு கழகத் தோழன் கச்சை கட்டிப் பணியாற்றிடத் தொடங்கினான். அவனுக்கு முன்னால் தமிழினம் தெரிந்தது, தமிழினத்திற்காக அண்ணன் உருவாக்கிய கட்சியும் அவர் கையிலேந்திய கொடியும் தெரிந்தன. எரிச்சல் கொண்டோர், ஏமாற்றமடைந்தோர், எகத்தாளம் செய்வோர், சிண்டு முடிவோர், சீறிப்பாய்வோர், சிறுமதியாளர், பண்புகள் அற்றோர், பதவிப் பித்தர், நன்றி மறந்தோர், நரிக் குணம் கொண்டோர், மிரள விழிப்போர், மிரட்டிப்பார்ப்போர்-இத்தகை யோரின் எழுத்தும் பேச்சும் கணையும் கண்டனமும் கழகத் தோழர்களின் அலட்சியச் சிரிப்புக்கு முன்காய்ந்த புல்லின் மீது தீப்பட்டது போல் ஆயிற்று.

நெஞ்சு நிமிர்த்தி நடைபோட்டான். துரோகிகளால் கழகம் துவளவில்லை. துரோகிகள்தான் துவண்டார்கள். அதற்கு எடுத்துக் காட்டுத்தான் 1962 பொதுத் தேர்தலில் கழகம் பெற்ற பெரும் வெற்றியாகும். கழகம் இரண்டாகி விட்டது; இனி சட்ட சபையில் பதினைந்தாக நுழைந்தவர்கள் இரண்டு, மூன்று பேர்கள் கூட வென்றிட மாட்டார்கள் என்று அரசியல் ஆருடங்கள் கணிக்கப்பட்டன. அதற்கு மாறாகக் கழகம் 1962 தேர்தலில் ஐம்பது இடங்களில் வெற்றிக் கொடி நாட்டியது.

துரோகிகள் பிரிந்த அடுத்த திங்கள், இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்துத் தி. மு கழகம் 1961-ஆம் ஆண்டு மே திங்கள் ஒன்பதாம் நாள் மாபெரும் பேரணியொன்றைச் சென்னை நகரில் நடத்திக் காட்டியது. அதே ஊர்வலத்திற்குப் பொதுச் செயலாளர் நாவலர். நெடுஞ்செழியன் அவர்கள் தலைமை வகித்தார்கள். அண்ணாவும் கழகத் தலைவர்களும் கலந்து கொண்ட அந்தப் பேரணி, கழகத்தின் வலுவை மட்டுமின்றி, தமிழர்களைக் கொடுமைப் படுத்தும் இலங்கை அரசுக்கு எதிராகத் தமிழகம் விடுக்கும் கண்டனத்தையும், உலகிற்குத் தெளிவாக அறிவித்தது...

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தி. மு. க. நிறைவேற்றிய தீர்மானம் சென்னையில் உள்ள இலங்கை அரசின் துணைத் தூதுவரிடம் வழங்கப்பட்டது.