உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/பகைமைத் தீயும் பண்புப் புனலும்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

பகைமைத் தீயும் பண்புப் புனலும் · 113 / 391

பகைமைத் தீயும் பண்புப் புனலும் கனன்று கொண்டிருந்த கழகப் பிளவாளர்கள் உள்ளத்தில் அண்ணா எனக்குக் கணையாழி அளித்த நிகழ்ச்சி என்னைப் பற்றிய கண்டனக் கணைகளைக் கழகத் தோழர்கள் மத்தியில் எழுப்புவதற்கு எரிச்சல் களங்களை உருவாக்கிற்று. அது எதுவரையில் போய் நின்றது, என்னைப் பற்றி எந்த அளவிற்குத் தவறான பிரச்சாரங்கள் செய்தனர் என்பதையெல்லாம் இன்றைக்கு நினைத்தால்கூட என் நெஞ்சம் 'பகீர்' என்கின்றது. விபத்தின் காரணமாக என் இடது கண்ணில் அடிபட்டு நீண்ட நாள் சிகிச்சைக்குப் பிறகு நலமுற்றிருந்தேன் என்றாலும் என்னுடைய சுற்றுப் பயணங்களின்போது சிறிய கார்களைப் பயன்படுத்துவது நல்லதல்ல என்றும், பெரிய கார்களில் செல்வதால் பிரயாணத்தின்போது ஏற்படுகின்ற அதிர்ச்சியிலிருந்தும் விடுபடலாம் என்றும், ஆகவே கண்ணின் நலம் வேண்டி சற்றுப் பெரிய காரைப் பயன்படுத்துமாறும் டாக்டர்கள் எனக்கு எச்சரிக்கை செய்து வலியுறுத்தியிருந்தார்கள்.

அதன் காரணமாக 1960-ல் நான் ஒரு பெரிய கார் வாங்க நேரிட்டது. கலையுலகத்தில் திரைப் படத்திற்கான உரையாடல் எழுதித் தருவதன் மூலம் கிடைத்த வருமானத்தில் தான் அந்தக் காரை வாங்கினேன். கழகத்திலேயே இருந்த என்னுடைய எதிர்ப்பாளர்கள் அந்தக் காரில் நான் பிரயாணம் செய்வது பற்றித் தங்களுடைய மனிதாபிமானமற்ற விமரிசனங்களைக் கழகத்தின் தோழர்களிடத்தில் ஆங்காங்கு செய்யத் தொடங்கினார்கள். அதில் என்னிடம் மிக நெருங்கிப் பழகி வந்த நண்பர் சம்பத் அவர்களே முதலிடம் வகித்துப் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனால் அவரும் அவரைப் போன்றவர்களும் என் காரைக் காட்டி நான் எளிமையாக வாழத் தெரியாதவன் என்று செய்த தவறான பிரச்சாரத்தைக் கழகத் தொண்டர்கள் ஏற்றுக் கொண்டார்களா என்றால் இல்லை. அவர்களுடைய பிரச்சாரம் எந்த அளவுக்கு மக்களையோ சகோதரத் தொண்டர்களையோ மாற்றியமைக்கக் கூடிய சக்தி பெற்றிருக்கிறது என்பதையும் நான் உணராமல் இல்லை. இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம், தமிழ்நாட்டில் ஒரு காலக் கட்டத்தில் அரசியலில் எவ்வளவு கீழ்த்தரமான, மனிதாபிமானமற்ற காழ்ப்பு உணர்ச்சிகள் தலைநீட்டின என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத்தான்.

(இப்போது மட்டும் என்ன என்று நீங்கள் கேட்பீர்கள்!) அதே நேரத்தில் குடும்பப் பாசத்தோடு தி.மு. கழகம் வளர்க்கப்படுகிறது என்பதற்கும், இதற்குள் குள்ள மனம் படைத்தவர்கள் யார் இருந்தாலும் அவர்களை நல்ல மனம் படைத்தவர்கள் வென்றுவிடுகிறார்கள் என்பதற்கும் உணர்ச்சிப் பூர்வமான உதாரணங்கள் நிறைய உண்டு. 1970-ஆம் ஆண்டு மீண்டும் என் இடது கண்ணில் தொல்லை ஏற்பட்டு மருத்துவ மனைக்குச் சென்றிருந்த நேரத்தில் அதனை மன மகிழ்ச்சியோடு விமரிசித்துக் காட்டிய 'நல்ல' உள்ளங்களும் உண்டு.

அதே நேரத்தில் அன்பினைக் காட்டி நான் நலம் பெற வேண்டுமென்று வாழ்த்திய உள்ளங்களும் ஏராளமாக உண்டு. நான் மருத்துவ மனையில் இருந்தபோது எனக்கு வந்த கடிதக் குவியல்களில் ஒன்றிரண்டை வெளியிடுவதன் மூலம் நமது கழக்க குடும்பத்தில் பெருக்கெடுத்தோடும் அண்ணன்-தம்பி என்கிற பாச உணர்ச்சியை அனைவரும் உணர்ந்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன். முகவை மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பத்தூர் படிப்பகம் ஒன்றின் செயலாளர் தோழர் துரைசாமி கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்: நமது நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்ற மாமேதை பேரறிஞர் அண்ணா அவர்களுக்காக வைத்திய அறிக்கைகளைப் பார்த்து, கேட்டு, உள்ளம் ஒடிந்து இறுதியில் இழக்கக் கூடாத ஒன்றை இழந்து ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தங்களையும் மருத்துவ மனையில் வைத்துக் கொண்டு வைத்திய அறிக்கைகளை அடிக்கடி கேட்கக் கூடிய நிலையினை ஏற்படுத்த வேண்டாம் எனத் தங்களை மிகவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

தங்களுக்கும் ஏதாவது ஒன்று என்றால் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியத் துணைக் கண்டமும், கடல் கடந்த நாடுகளும் கலங்கிடும். ஆகவே அண்ணா! தாங்கள் பூரண ஓய்வு பெற வேண்டுகிறேன். சிற்சில நிகழ்ச்சிகளில் தவிர்க்க முடியாமல் கலந்து கொள்வதைத் தவிர, மூன்று மாதங்களாவது வெளியூர்ப் பயணங்களை ஒத்தி வைக்க வேண்டுகிறேன். தங்கள் அருமைத் தம்பியாகிய நான் கூறும் இவற்றை அறிவுரைகளாகக் கருதாமல் கனிவான வேண்டுகோளாகக் கருதி ஓய்வெடுக்க வேண்டுகிறேன்.

பத்திரிகைகளில் தாங்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைப் பார்க்கும்போது கண்ணீர் வடிக்கிறேன்," திருச்சி மாவட்டம் ஜெயங்கொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த வட்டச் செயற்குழு உறுப்பினரும், கழகப் பேச்சாளருமான வெற்றி கொண்டான் என்னும் நண்பர் எழுதியுள்ள மடலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "எங்கிருந்தாலும் இறைவன் என்னை இரட்சிப்பான் என்ற இலட்சியத்தோடு தொழுது நிற்கும் பக்தனைப் போல உள்ள நான் இக்குறிப்பை அனுப்பியுள்ளேன்.

சட்டப் பேரவையில் எதிர் முகாமில் இருப்போர் தங்களைப் பார்த்துக் 'குளிர் சாதனம் பொருந்திய கார் உமக்கு ஏன்?' என்று கேள்வி எழுப்புவதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். தந்தையாக அண்ணனும், தாயாக நீங்களும் எங்களுக்குக் கிடைத்தீர்கள். உங்கள் இருவரையும் உணர்ச்சி பொங்க வாழ்க, வாழ்க என முழங்கி தூரமாக நின்று கண்டு கண்டு மகிழ்ந்து கிடந்தோம். காலனுக்குப் பொறுக்கவில்லை. தந்தையை இழந்தோம், தாயின் கதகதப்பில் இன்று வாழ்கிறோம்.

அந்தத் தாயையும் இழந்து விட்டு அனாதைகளாய்ச் சித்தம் கலங்கிப் பித்துப்பிடித்து அலையத்தான் பிறந்தோமா? தாயின் ஆரோக்கியத்தில் ஒரு துளி பாதித்தாலும் அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை இனி எங்கே பெறுவோம்? தாயின் அருமை பிள்ளைக்குத் தெரியும்! இதயம் உள்ளோருக்குத் தெரியும்; பிறருக்கு என்ன தெரியும்! அவர்களும் கேள்வி கேட்கும் உரிமைக்கு உரிய அந்தக் கார் இருப்பதால் தானே கேட்கிறார்கள்? அவர்களுக்குக் கேள்வி கேட்கும் உரிமை வழங்கும் அந்தக் கார் வேண்டாம்.

எங்களின் தெய்வத்திற்கு நாங்கள் கோயில் கட்டிக் கொள்கிறோம். எங்களின் நெற்றி வியர்வையால் பெற்ற சொத்துக்களை விற்றாவது தருகிறோம். உங்களுக்கு உதவாத ஒன்று, ஒரு சொத்து எங்களுக்கு ஏன்? மண்டியிட்டு வேண்டுவதெல்லாம் மறுத்து விடாதீர்கள் என்பதேயாகும். எங்களின் கண்ணீரைத் துடைத்திடும் பொற்கரங்களைப் பெற்று நிற்கும் தங்களின் தம்பிமார்களின் இந்த வேண்டுகோளை இதயம் கனிந்து ஏற்றுக்கொள்ளுங்கள்."

அடுத்து கழிஞ்சூரைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் மு.கோதண்டன் அவர்கள் தீட்டியுள்ள மடலில், "உங்களுக்குக் கண் வலி என்றால் எனக்கு நெஞ்சு வலி ஏற்படுகிறது. எனக்கு மட்டுமா? உங்கள் மீது உயிரையே வைத்திருக்கும் எண்ணற்ற கழகத் தோழர்களுக்கும் இதே நிலைதான். இனி நீங்களாகவே சில கட்டுத் திட்டங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஆறு மாதத்திற்கு ஒரு கூட்டத்தில் நீங்கள் பேசினால் போதும். எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் 10 அல்லது 15 நிமிடத்திற்கு மேல் கண்டிப்பாகப் பேசாதீர்கள்.

நாட்டிற்கும் கழகத் தோழர்களுக்கும் முக்கிய விளக்கம் தேவைப்படும் போது அறிக்கை; செய்தியாளர் பேட்டி-என்ற முறையில் அவற்றைத் தாங்கள் அளித்தால் போதுமானது. ஏடுகளில் இரண்டு, மூன்று பக்கங்கள் நீங்கள் எழுதுவதைக்கூடக் குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உடல் நலத்துடன் இருந்தால் நாடே நலத்துடன் இருப்பதாகப் பொருள். ஈரோடு நகரத்தில் நிலவிய பெரிய கருத்து வேற்றுமையை உங்களால் தீர்த்து வைக்க முடிந்தது என்றால், மற்ற மாவட்டங்களில் உள்ள சிறிய கருத்து வேற்றுமைகளையும் நீங்கள் நான்கு வார்த்தைகள் கூறினால் தீர்த்து வைத்து விடலாம்.

தாங்கள் உடல் நலத்துடன் இருந்தால் கழகம் மேலும் வளர வழி பிறக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். சென்னை பழைய வண்ணைப் பகுதியைச் சேர்ந்த ஆர். திரவியம் என்கிற ஒரு நண்பர் எந்த அளவுக்குத் தன்னுடைய உணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதற்கு அவரது கடிதம் சான்று: "கழகக் காவலரே, அண்ணாவுக்குப் பின் எங்களுக்கெல்லாம் தெம்பு தந்து கழக வளர்ச்சியில் அண்ணா இருந்தால் எப்படிச் செய்வார், என்னென்ன செய்வார் என்பதைச் செயலில் செய்து காட்டி அவர் இல்லாத குறையை நீங்கள் தீர்த்து வைக்கிறீர்கள்.

அதனால் உங்களை இழக்க யாரும் துணிய மாட்டோம். ஆதலால், நான் எனது இடது கண்ணைத் தங்களுக்குத் தர எந்த நிமிடமும் தயாராக இருக்கிறேன், எந்த நிபந்தனையும் இல்லாமல்! நான் 25 வயது நிரம்பிய கழகக் காளை: என்னை யாரும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள். நான் தனிச் சுதந்திரமான இளைஞன். தாங்கள் லண்டனில் உள்ள டாக்டரிடம் கேட்டாவது என் கண்ணைப் பெற்று தங்கள் இடது கண்நோயிலிருந்து விடுபட்டு நாட்டிற்கு நல்லது செய்ய விரும்புகிறேன்.

இதை எந்தக் காரணத்தைக் கொண்டும் விளம்பரப்படுத்த வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உதவக் காத்திருக்கிறேன்" இந்தக் கடிதத்தை நான் வெளியிட்டது அவரது அன்பைக் காட்டிக் கொள்வதற்காக, விளம்பரப்படுத்துவதற்காகவல்ல. எழுதியவர் என்னை மன்னிப்பார் எனறு கருதுகிறேன். இதே கருத்தினை அரக்கோணத்தைச் சேர்ந்த கே. எஸ். சிவா என்ற நண்பர் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டு, தன்னுடைய கண்ணைப் பெற்றுத் தனக்குப் பெருமை அளிக்க வேண்டும் என்று வெகு நீண்ட கடிதம் எழுதியிருக்கிறார்.

சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஈ. ராசகோபால் என்ற நண்பரும் "என் கண்ணில் எதை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்" என்று எழுதியுள்ளார். அப்பர் கோதையாற்றில் உள்ள சி. எஸ். மணியன் என்கிற தொழிலாள நண்பர் ஒருவர் எழுதிய கடிதத்தில் "என் அண்ணனாகிய தங்களைக் காலன் கைப்பற்றிக் கொள்ளக்கூடாதே என்கிற பயத்தில் என் உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுவும் வாழ்க பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறது. பிஞ்சு இதயங்களின் எதிர்காலம் உங்கள் கையில்!"

என்பது போன்ற உணர்ச்சிகளைக் கொட்டியுள்ளார். இந்தக் கடிதங்கள் எல்லாம் எதை உணர்த்துகின்றன? இந்தக் கடிதங்கள் ஒவ்வொன்றையும் நான் படித்த நேரத்தில் என் உள்ளம் எவ்வளவு நெகிழ்ந்து இருக்கும்! என் கண்கள் எப்படிக் குளமாகி இருக்கும்! என்னைப் பெற்ற தாய் உயிரோடு இருந்தால் என்ன சொல்வார்களோ அதை அல்லவா எங்கோ தொலைவில் இருந்து என்னை நம்பிக் கொண்டிருக்கிற தோழர்கள் சொல்கிறார்கள்? ஆருயிர் மனைவி, "அத்தான், என் கண்ணையெடுத்து உங்கள் கண்ணில் வைத்தால் குணமாகி விடாதா?"

என்று அன்புப் பெருக்கால் கண் கலங்கக் கேட்பது போல் அல்லவா அந்தக் கழகக் கண்மணிகள் தங்கள் கண்மணியைத் தர மனநிறைவோடு கடிதம் எழுதுகிறார்கள். அந்தப் பாச உணர்ச்சியின் பாசறைதான் தி. மு. கழகம். அந்த உணர்ச்சிகளை இந்தக் கழகக் குடும்பத்திற்கு வழங்கியவர் தான் மாபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணா. அவர் மீதும், என் மீதும் கழகத்தினர் காட்டிய அன்பினையும், ஆர்வத்தினையும் குலைப்பதற்காகத்தான் சம்பத் குழுவினர் திட்டமிட்டுத் தீவிரமாகப் பணியாற்றினர்.

அவர்களுடைய விபரீதப் பிரச்சாரங்கள் மேலோங்கி நின்ற நேரத்தில் மாயவரத்தில் நடைபெற்ற பொதுக் குழுவில் வைக்க சம்பத் ஒரு புதிய தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அதன்படி எம்.எல்.ஏ.க்கள், எம். பி. க்கள் கழகத்தின் பொறுப்பான பதவிகளில் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. அந்தத் தீர்மானத்தை ஏன் கொண்டு வந்தார் என்பதை அண்ணா அவர்களும் நானும் பொதுக்குழு உறுப்பினர்களும் தெளிவாகப் புரிந்து கொண்டோம்.

நான் எம். எல். ஏ.யாக இருக்கிறேன்; நான் பொதுச் செயலாளராக வருவதற்கான சூழ்நிலைகள் உருவாகின்றன; நான் பொதுச் செயலாளராக வருவதைத் தடுக்க வேண்டும்; ஏனெனில் நான் அண்ணாவிற்கு எதிராக நண்பர் சம்பத்துடன் ஒத்துப் போக மறுத்து விட்டேன். ஆகவே நான் பொதுச் செயலாளராக வருவதற்கு முட்டுக்- கட்டையாக அந்தத் தீர்மானத்தை அவர் கொண்டு வந்தார். அதிறகு மிகக் கஷ்டப்பட்டு ஆதரவு திரட்டத் தொடங்கினார். அதனைத் தோற்கடித்துவிடக் கூடிய வலிவு பொதுக்குழுவில் இருந்தது; என்றாலும் அண்ணா அவர்கள் என்னையழைத்து, "அந்தத் தீர்மானத்தை நீயே ஆதரித்துப் பேசிவிடு" என்று ஆணையிட்டார்கள்.

நானும் அண்ணா அவர்களின் சொற்படி தோழர் சம்பத்தின் தீர்மானத்தை ஆதரித்துப் பேசி, அதனைப் பொதுக் குழுவில் ஏகமனதாக நிறைவேற்றும் நிலையை உருவாக்கினேன். மாயவரம் பொதுக் குழுவிற்குச் சில நாட்களுக்கு முன்புதான் 'முரசொலி' பொங்கல் மலரில் அண்ணா அவர்கள் எழுதிய கட்டுரையில் நானும் அண்ணாவும் காட்டூர் என்ற கிராமத்தில் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை அண்ணா அவர்கள் சுட்டிக் காட்டி, "தம்பியின் புன்னகைக்குப் பொருள் புரிகிறதா?

மிகப் பெரும் பொறுப்புகளைத் தம்பியின் தோளில் சுமத்துவதாக இருக்கிறேன்" :என்ற கருத்துப்பட நீண்ட கட்டுரையை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையின் தலைப்பு "நகை விடு கணை" என்பதாகும். அண்ணாவின் அழகு தமிழ் ஓவியம் வருமாறு: (1959 'முரசொலி' பொங்கல் மலரில் வெளி வந்தது.) "ஆரூருக்கு அணித்தே உள்ள சிற்றூர்-சீரூர் என்று பெயரிட்டிருக்கலாம். ஆனால் யாது காரணமோ அறியேன். பெரியோர் அதனைக் காட்டூர் என்றே வைத்தனர்.

அங்கு நண்பர் ராமய்யா அவர்கள் இல்லத்திலே அமர்ந்திருந்த வேளை தம்பி கருணாநிதி மலர்ந்த முகத்துடன் என்னைக் கண்டு பேசிடும் காட்சியைக் காணுகின்றீர். நேர்த்தியான முறையில் அமைந்த படம் என்பீர்! விரிந்த மெத்தையில் அமர்ந்துள்ளார்கள் என்று பேசுவீர்! ஆனால் என் நகையின் பொருளும், தம்பி தன் கண்களிலே காணக் கிடக்கும் ஒளியின் பொருளும் அறிந்திடல் எளிதன்று; அறிவித்து அகமகிழவே இது. ஆரூர் மாநாடு, கண்டோர் களிப்புறும் வகையில் வெற்றி தந்தது.

வீரர் கோட்டமாகவும், புலமை மன்றமாகவும், வரலாற்று வரை கூடமாகவும், மகிழ்ந்துரையாடும் மாடமாகவும் இரு நாட்கள் மாநாடு செவ்வனே விளங்கிற்று. அதன் பிறகு சந்திக்கிறோம். "அண்ணா;" என்றழைத்தான் தம்பி. "கைத்திறனைக் கண்டீரா? கண்ட மாசு ஏதேனும் உண்டோ என்று கண் பேசக் கண்டேன். நானா எளிதிலே வலைபடும் இயல்பினன்? "ஏன்? என்று சிறிதளவு அதட்டும் குரலை வருவித்துக் கேட்டேன். பாழும் சிரிப்பு, என் திட்டத்தை வெட்டும் திறத்ததாகி வெளிவந்தது.

படம், அதைக் காட்டிவிடுகிறது. பார்த்தால் புரியும். "கேட்டதற்கும் மேலாகப் பணம் தந்தோமன்றோ?" என்பது தம்பியின் கேள்வி. "தரத் தக்கது இம்மட்டோ?" என்பது என் நகை'விடுகணை. "மகிழ்ச்சிதானே?" என்கிறான் தம்பி. "மேலும் மேலும் தேடித் தரவேண்டாமா?"

என்று கேட்கிறேன் நான். அங்ஙனம் கேட்கிறேன் என்பதால், அவர்கள் பெற்றுத் தந்ததால் பெருங்களிப்பு பெற்றேனில்லை என்று பொருள் கொள்ளற்க. மேலும் பெற வேண்டும் எனும் விழைவும், மேலும் அவர்களால் தேடித் தர இயலும் என்ற நம்பிக்கையுமே என்னை அவ்வாறு கேட்கச் செய்கிறது. நம்மில் எவரும், ஒருவரை ஒருவர் காணும் போது இந்தப் படத்திலே காணப்படுவது போன்றேதான் கண்கள் களிநடம் புரிகின்றன; முகம் மலர்கிறது; காரணம் அகத்திலே ஒரு மகிழ்ச்சி பெருக்கெடுக்கிறது.

அதற்குக் காரணம் 'இவர்மாட்டு உள்ள திறம் மிகக் குறைவு. இவர் கொண்ட பணியோ மிகப் பெரியது. எங்ஙனம் வெ

ற்றி காண்பர்?' என்று நாடே கேட்டிட்ட வேளையில், நாம் பணியிலே ஈடுபட்டோம்; புதியதோர் அணியாகி வெளிவரும் நிலையும் ஏற்பட்டு விட்டது. எனினும் நம்மை ஆட்கொண்ட அருங்கொள்கை நமக்கு அளித்த உரமும், ஊக்கமும், உணர்ச்சியும், பணியாற்றும் திறனும், பகை வெல்லும் ஆற்றலும் நம்மைப் புது மனிதர்களாக்கி விட்டது. மணற்கேணி தோண்டும்காலை, காய் கதிரோனின் கொடுமையைத் தாங்கிக் கொண்டு கடினமாக உழைக்கவேண்டி இருக்கிறது.

பிறகோ! குளிர் நீர் கிடைத்திடும் நிலை. அது இளநீர் என்று இனிக்கிறது. அஃதே போன்று நாம் இனியன பல காண்கிறோம்; 'என்னாகும் இவராலே?' என்று கேட்டோர் கண் முன்னால், சீர் பல பெற்றிருக்கிறோம். இதனைக் காண முடிந்த காரணத்தால்தான் இதனினும் மேலானவற்றினைக் காண இயலும் என்ற நம்பிக்கை எழுகிறது. காண வேண்டும் என்ற உறுதி பிறக்கிறது. அதற்கான திறம் இவரிடத்தில் என்னென்ன முறையிலே இருக்கிறது என்று கண்டாராயத் தோன்றுகிறது.

அங்ஙனம் நான் ஆராயப் புகும்போதுதான் ஆயாசப்படுவது போலவும், அலுத்துக் கொள்வது போலவும், கோபிப்பது போன்றும் பலருக்குத் தோன்றும். அத்தனையும் அப்பழுக்கற்ற அன்பின் விளைவு என்பதை அறியாதோர் மிகச் சிலரே. அறிந்ததால்தான் தம்பியின் கண்களிலே களிப்பொளி காண்கிறீர்கள். என் நகையிலும் ஒரு பொருள் தெரிந்திடக் காண்கிறீர்கள். ஆரூர் நமக்களித்த அருந்தம்பி உள்ளத்தில் தேங்கியும் தூங்கியும் உள்ள திறமத்தனையும் கல்லி எடுத்திட்டால் காணலாம்.

மேலும் பல வெற்றிகள்! படத்திலே என்னைக் காண்கிறீர்களே, பார்வையின் பொருள் அது தான்; கல்லி எடுக்க முயல்கிறேன்! "எத்தனை பெருங்கூட்டம், ஏனண்ணா?" என்று எனைக் கேட்டான் தம்பி. நான் இது கேட்டேன். "கூட்டம் குறையவில்லை: கூடுவதும் கூடிடுது; "ஓட்டு" வாங்க வரும் வேளையிலே என்ன நிலை?"

தம்பியின் சிரிப்பிலே விடை உண்டு. கண்டறிவீர். திருவாரூர்த் தம்பி மட்டுமல்ல; அனைவரும் பதிலிலுக்க வேண்டிய கேள்வி அது. விளக்கமுரைத்திடவும், உரையில் சுவை கூட்டவும், கொள்கையை விளக்கவும், மறுப்பினை மறுத்திடவும், வல்லவரான நல்லோர் பலர் நமது இயக்கத்திலே இன்று உளர். அவர்களின் அருந்திறனால் நாட்டவர் பெறும் பயன் பெரிது. அவராற்றிய தொண்டின் விளைவாக இன்று நாம் மேற்கொண்ட பணிக்கு ஒரு நல்லிடம் கிடைத்தும் விட்டது.

நரம்பு தடவினோம், நாதம் கிளம்பி விட்டது: பண்ணமைப்போம் வாரீர்-என்று அழைத்திடத் துணிவும் பிறந்து விட்டது, பண் அமைத்திட இயலும் என்பதனை அறிவிக்கும் முறையில் 'முரசொலி' இல்லமெங்கணும் இன்னிசையாகி நல்லோர் யாவரையும் ஒன்றுபடுத்தி நமது குறிக்கோள் வெற்றி பெற வழிகாண வேண்டும் - 'முரசொலி' எனும் இந்த ஏடு என்று மட்டும் கூறுகிறேன் என்றெண்ணாதீர். இதனை எழிலுள்ளதாக்கி, எனை நோக்கி, "கண்டீரோ கைத்திறனை?"

என்று விழியால் கேட்டிடும் தம்பியையுந்தான். அதைத் தான் கூறுகிறேன். பார்வையால் தம்பி அறிந்து தான் மகிழ்கிறான். நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் காணும் பொழுது இதே நிலை தான்! அந்த இன்ப நிலையிலிருந்து எழும் வலிவுதான் நாட்டுக்கே புதிய பொலிவாகிறது. மகிழ்ச்சி பொங்குகிறது."

இந்தக் கட்டுரையின் வாயிலாக அண்ணா அறிவித்த கருத்துக்கள் கட்சிக்குள்ளே சம்பத் போன்றவர்களுக்கு எரிச்சலை உருவாக்கி, அதனால் அவர்கள் என் மீது பகை கக்கிடக் கிளம்பினர். எனக்குப் பொதுச் செயலாளர் பொறுப்பை அளிக்க அண்ணா எண்ணிவிட்டார் என்பதைப் புரிந்து கொண்டுதான் மாயூரம் பொதுக் குழுவில் சம்பத் கோஷ்டியினர் அந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். அதை நானே ஆதரித்ததும் அவர்கள் தாங்கள் வெற்றி பெற்றதாக வெளியில் சொல்லிக் கொண்டாலும், வெட்கத்தாலும், வியப்பாலும் ஒருவருக்கொருவர் தங்கள் திகைப்பினைக் காட்டிக் கொண்டார்கள்.

1960-ஆம் ஆண்டு சென்னை மேயராகத் தோழர் வி. முனுசாமியும் துணை மேயராகத் தோழர் செல்வராசும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பல ஆண்டு காலமாக 'மதராஸ் கார்ப்பரேஷன்' என்று ஆங்கிலப் பெயர் தாங்கியிருந்த மாநகராட்சிக்கு 'சென்னை மாநகராட்சி' என்று அதிகாரப் பூர்வமாகப் பெயர் மாற்றப்பட்டது.

தி.மு. கழகத்திற்குத் தமிழையும், தமிழ் உணர்வையும் நாடெல்லாம் நல்லோர் உள்ளமெல்லாம் பரப்ப வேண்டும் என்று உள்ள ஆர்வத்தின் அடையாளம் தான் அந்தப் பெயர் மாற்றமாகும். 1961 ஜனவரித் திங்கள் 20-ஆம் நாள் அன்றுதான் அமெரிக்காவின் 35-வது ஜனாதிபதியாகக் கென்னடி பதவியேற்றுக் கொண்டார். அவருடைய பதவியேற்பு உரையில் அமெரிக்க நாட்டு மக்களைப் பார்த்து, "நாடு உனக்காக என்ன செய்தது என்று கேட்காதே; நாட்டுக்காக நீ என்ன செய்தாய் என்று கேட்டுக் கொள்" என்பதாகக் குறிப்பிட்டார்.

அந்தக் கருத்தின் அடிப்படையிலேதான் கழகக் கூட்டங்களில் நான் பேசும்போதெல்லாம், 'கட்சி உனக்காக என்ன செய்தது என்று கேட்காதே; கட்சிக்காக நீ என்ன செய்தாய் என்று உன்னையே கேட்டுக் கொள்' என்று குறிப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

கட்சி தனக்கு இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்த தோழர் சம்பத்தும், அவரைச் சார்ந்த சிலரும் 1961 ஜனவரி 21, 22 தேதிகளில் வேலூரில் நடை பெற்ற செயற்குழுவில் தங்கள் முழு உருவத்தையும் வெளிப்படுத்தினார்கள். செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் கண்டனக் கணைகளைத் தாங்க முடியாத தோழர் சம்பத், தான் வகித்துவந்த கழக அவைத் தலைவர் பதவியை ராஜினாமாச் செய்ய முன்வர வேண்டிய நிலைமைக்கு ஆளானார்.

அவர் எழுதிய அந்தக் கடிதத்தில், தாம் சில காலமாக மேற்கொண்ட முடிவுகள், பேசிய பேச்சுக்கள், எழுதிய எழுத்துக்கள் ஆகியவற்றில் கழகத் தோழர்கள் மனம் புண்பட்டு மாற்றாருக்கு இடம் கொடுக்கும் நிலைமையை ஏற்படுத்திவிட்டதை உணர்வதாகவும், அதற்காக வருந்துவதாகவும், இனி அத்தகைய முயற்சிகளில் ஈடு படாமல் கழகப் பணியாற்ற வசதியாக இருக்கும் வகையில் பொறுப்பு- களிலிருந்து விலகுவது தான் சரி என்ற கருத்தில் அவைத் தலைவர் பதவியையும் சாதாரண உறுப்பினர் பதவியைத் தவிர, மற்ற கழகத்திலுள்ள பதவிகளையும் விட்டு விடுவதாகக் குறிப்பிட்டிருந்தார். வேலூரில் நடைபெற்ற செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களைப் பற்றி சம்பத்தும் அவரைச் சார்ந்தவர்களும் கட்டிவிட்ட தவறான புனை கதைகளை மாற்றுக் கட்சி ஏடுகள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டதை மறுத்து 25-1-61 ஆம் நாள் அன்று அண்ணா அவர்கள் ஓர் விரிவான அறிக்கையை வெளியிட்டார்.

அந்தக் கூட்டங்களில் பொருளாளர் என்ற முறையில் என்னைக் குறித்து நடைபெற்ற விவாதங்களையும் சுட்டிக் காட்டியிருந்தார். "தேர்தல் நிதி அறிக்கையைக் கொடுத்துக் கருணாநிதி பேசினார். 20-1-61 வரை தேர்தல் நிதியாகக் கிடைத்துள்ள விவரங்களை மாவட்ட வாரியாகப் படித்துக் காண்பித்து மொத்தம் ரூபாய் 61,140 சேர்ந்திருப்பதாகவும், அந்தப் பணம் முழுவதும் ராயபுரம் இந்தியன் பாங்கில் இருக்கிறது என்றும் அறிவித்து வங்கியின் பாஸ் புத்தகத்தையும், செலான் புத்தகங்களையும் அவைத் தலைமைப் பொறுப்பேற்றிருந்த திரு ஜி.பி.

சோமசுந்தரம் அவர்களிடம் கொடுத்தார். "அவைத் தலைவர் தொகை பற்றிய விவரத்தையும் வங்கி புத்தக விவரத்தையும் சரி பார்த்துச் செயற்குழுவின் சார்பில் ஏற்றுக்கொண்டார். தேர்தல் நிதி பற்றிய குறிப்பை கருணாநிதி படிக்கும் போது ஆந்திர மாநிலத்திலிருந்து ரூபாய் 55 மட்டுமே கிடைத்திருப்பதாகக் குறிப்பிட்டதும், ஆந்திர மாநிலத் தோழர்கள் பதறியெழுந்து, எங்கள் மாநிலத்தில் ஏகாம்பரக்குப்பத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் மிச்சப்பட்ட தொகை ரூபாய் ஆயிரத்தைத் தோழர் சம்பத் அவர்களிடம் கொடுத்திருக்கிறோமே, கணக்கிலே ஏன் இல்லை என்று கேட்டார்கள்.

தம்மிடம் அந்தத் தொகை வந்து சேரவில்லை என்ற தகவலைக் கருணாநிதி கூறினார்." -இவ்வாறு அண்ணா அவர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்தி எதிர்ப்பு நிதியாகவும், கோடம்பாக்கம் இந்தி எதிர்ப்பு மகாநாட்டில் மிச்சத் தொகையாகவும், அறிக்கையிலே குறிப்பிட்டுள்ளதைப் போல் தேர்தல் நிதியாகவும், தோழர் சம்பத் வசம் சேர்ப்பிக்கப்பட்ட பல ஆயிரம் ரூபாய்களுக்கு விவரமே இல்லாமல் போயிற்று! இந்த நிலைமையிலேதான் தேர்தல் நிதியாகக் கழகத்திற்குச் சேரும் தொகையை நான் சினிமா படம் எடுக்கும் செலவிற்குப் பயன்படுத்திக் கொள்வதாக சம்பத்தும், அவரைச் சார்ந்தவர்களும் பலமான அவதூறுப் பிரச்சாரத்தில் அப்போது இறங்கியிருந்தார்கள்.

அந்தத் தப்புப் பிரச்சாரத்தைத் தகர்த்தெறியத்தான் பாங்க் பாஸ் புத்தகம் உட்படத் தேர்தல் நிதி விவரத்தைச் செயற்குழுவிலும் பொதுக்குழு- விலும் நான் தாக்கல் செய்தேன். மேலும் இன முழக்கம் என்ற இதழின் பொங்கல் மலரில் தோழர் சம்பத் ஒரு கட்டுரை எழுதியிருத்தார். அந்தக் கட்டுரையில் அறிஞர், கலைஞர், நாவலர் என்றெல்லாம் கழகத் தலைவர்களுக்கு மக்கள் ஆசையாக வழங்கிடும் சிறப்புக்களை வன்மையாகக் கண்டித்தார்.

ஆனால் அதே இதழில் அவரைப் பற்றி அந்த செய்திகளில் 'சொல்லின் செல்வர் சம்பத்' என்று சிறப்புப் பெயர் போடப்படுவதை அனுமதித்தார். அறிஞர் அண்ணா அவர்கள் ஜனநாயகத்தின் சிறப்புக்களைத் தமக்கே உரிய முறையில் 'திராவிட நாடு' இதழில் தொடர்ந்து ஒரு கட்டுரை மூலம் எழுதி வந்தார். அந்தக் கட்டுரை தன்னைத் தாக்குவதற்குத்தான் எழுதப்படுவதாக சம்பத் நினைத்து, 'அண்ணாவின் மன்னன்' என்ற தலைப்பில் அண்ணாவின் கட்டுரையை மறுத்து எழுதத் தொடங்கினார்.

இதில் அண்ணா அவர்களை நேரடியாகவே தாக்கினார், இது கழகத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கிற்று. சம்பத்தோடு ஏற்பட்ட கூடா நட்பினால் கவிஞர் கண்ணதாசனும் கழகக் கொள்கைகளுக்கு விரோதமாகவும், அண்ணாவுக்கு எதிராகவும் பொதுக் கூட்டங்களில் பேசத் தொடங்கினார். 1961 பிப்ரவரி 20-ல் திருச்சியில் நடைபெற்ற. ஒரு பொதுக் கூட்டத்தில் அண்ணா அவர்களைத் தாக்கிப் பேசிய கண்ணதாசனை ஆத்திரம் கொண்ட ஒரு தோழர் தாக்க முனைந்ததாக வெளிவந்த செய்தியைக் கண்டு காஞ்சியில் இருந்த அண்ணா அவர்கள் பதறிப்போய் அந்தச் செயலைக் கண்டித்து ஓர் அறிக்கை வெளியிட்டார்கள்.

தான் கொண்ட கொள்கைக்குக் கழகத்தவர்களிடத்தில் ஆதரவில்லை என்பதையும் அண்ணாவைக் குறை கூறித் தான் தலைவராகலாம் என்ற நினைப்பிற்குக் கழகத்தலைவர் ஒரு துளியும் இடம் தரமாட்டார்கள் என்பதையும் புரிந்து கொண்ட தோழர் சம்பத் அவர்கள் திடீரென்று ஒரு நாள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். அதையொட்டி பிப்ரவரி 26-ஆம் நாளன்று திருவொற்றியூரில் கழகக் காவலர் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அண்ணா அவர்களின் விளக்கவுரை கேட்டு, சம்பத்தின் குழுவிலே இருந்த கண்ணதாசனும் மற்றவர்களும் கண்ணீர் மல்கி அண்ணாவின் கரங்களை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு உணர்ச்சிப் பிழம்புகளாக ஆனார்கள்.

கழகத்தினுடைய பிளவுகள் மறைந்தன. அனைவரும் ஒன்றாயினர் என்ற மகிழ்ச்சிச் செய்தியை மக்களுக்கு அறிவிக்கும் வகையில் பிப்ரவரி 27-ஆம் நாள் அன்று மயிலாப்பூரில் தோழர் டி.கே.கபாலி தலைமையில் மாபெரும் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் அண்ணா அவர்கள் பேசும்போது, "இனி, துளியும் கழகத்திற்குள்ளே பிளவு மனப்பான்மை வளரவிட யாரும் எண்ணாதீர்கள். நம்முடைய லட்சியத்தில் வெற்றி பெறுவதாயின் அனைவரும் சேர்ந்து நின்று வெற்றி பெறுவோம்.

இல்லையாயின் நாம் அனைவரும் ஒரு மண்டபத்திற்குள்ளே அடைபட்டுக்கொண்டு விஷப்புகை பிரயோகிக்கச் செய்து, ஒன்றாகவே செத்து மடிவோம்! இந்த உணர்வோடு கழகத் தோழர்களே ஒற்றுமையைக் கடைப்பிடியுங்கள்" என்று நா தழுதழுக்க. கண்களிலே நீர் துளிர்க்கக் கூடியிருந்தோர் அனைவரும் விம்மியழும் வண்ணம் குறிப்பிட்டார்கள். அதன் பின்னர் அதே ஆண்டு 7-ஆம் நாள் அன்று தோழர் டி. எம். பார்த்தசாரதி அவர்கள் தொகுத்து வெளியிட்ட 'தி.

மு.க. வரலாறு' என்ற புத்தக வெளியீட்டு விழாவிற்கு எதிர்பாராத காரணத்தினால் அண்ணா அவர்கள் வந்து கலந்து கொள்ள முடியவில்லை. அதை ஒரு பெரும் காரணமாகச் சொல்லித் தோழர் சம்பத் அவர்கள் 9-4-61 அன்று கழகத்தின் சாதாரண உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகி விட்டதாக இதழ்களில் அறிக்கை வெளியிட்டார். 18-4-61 அன்று அண்ணா அவர்கள் கழகத்திலிருந்து விலகியவர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் விரிவான ஓர் அறிக்கையை வெளியிட்டார்கள்.

அந்த அறிக்கையில் அண்ணா அவர்கள் குறிப்பிட்டிருந்த கருத்துகளை நினைவூட்டுவது அவரது அரசியல் பண்பாட்டிற்கும்,அரசியல் திாவகள் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல உணர்விற்கும் எடுத்துக்காட்டாக அமையும் என்று நான் நம்புகிறேன்.