நெஞ்சுக்கு நீதி
கட்டுப்பாட்டின் எடுத்துக்காட்டு · 110 / 391
கட்டுப்பாட்டின் எடுத்துக்காட்டு நா டெங்கும் தோழர்கள் கைது செய்யப்பட்டதைப் போலவே, நாடெங்கும் கழகத் தோழர்கள் பேரில் பல்வேறு பிரிவுகளின்படி வழக்குகளும் தொடுக்கப்பட்டன. அன்றாடம் தங்கள் வீடுகளில் அடுப்புப் புகைவதற்காகவே பெரும்பாடு பட்டுக்கொண்டிருக்கும் பெருவாரியான கழகத் தோழர்களின் பேரில் தொடுக்கப்பட்ட வழக்குகள் பெருந்தொகை செலவிட்ட பிறகே நீதிமன்றங்களில் நியாயத்தைப் பெறக்கூடியனவாக இருந்தன!
இந்த வழக்குகளின் காரணமாகத் தோழர்கள் செலவுக்குப் பணந் தேடி அலைந்ததைப் பார்த்த பிறகு, கழகத்தின் பொருளாதார நிலை எவ்வாறு வலிவானதாக இருக்க வேண்டும் என்பதையே பெரிதும் சிந்திக்கத் துவங்கினோம். வழக்குத் தொடுக்கப்பட்ட தோழர்களுக்கெல்லாம் கழகமே பொருளாதார உதவி புரியக்கூடிய நிலையில் அப்போது இல்லை. தோழர்கள் படுகின்ற சங்கடங்களும் பெரியவையாக இருந்தன. இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட தோழர்கள் காண்பித்த உறுதி பாராட்டத் தக்கது.
தோழர்களின் உறுதி மட்டுமல்ல; அந்த உறுதிக்குப் பின்னால் இருந்த தியாக உணர்வையும் அறிஞர் அண்ணா அவர்கள், கறுப்புக் கொடி நிகழ்ச்சிக்குப் பிறகு கடற்கரையில் கூட்டப்பட்ட மாபெரும் பொதுக் கூட்டத்தில் தெளிவாகத் தெரிவித்தார். "எத்தனையோ அடக்குமுறைகளை நாம் பார்த்திருக்கிறோம். இந்த அடக்குமுறைகளையெல்லாம் கண்டு உள்ளம் வெதும்பிட மாட்டோம். ஆனால் 'பஸ் வண்டியைக் கொளுத்தினார்கள்; கல் வீசினார்கள்' என்று ஆட்சியாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
அப்படி யாராவது செய்திருந்தால் அவர்கள் கழகத் தோழர்களாகவும் ஆகமாட்டார்கள். அவர்களை என் தம்பிகளாகவும் மதிக்க மாட்டேன். நம்மிலே பத்துப் பேர் செத்தார்கள் என்பதைக் கேட்டால் என் இதயம் வெடித்து விடாது; சாகத்தான் அழைக்கிறேன் உன்னை! பத்துப்பேர் அடக்கு முறைக்கு ஆளாகித் தாக்கப்பட்டு இறந்தால் அதனால் தமிழ்நாட்டுக்கு இழப்பு ஒன்றுமில்லை. இரத்தம் சிந்தத்தான் நான் உங்களை அழைக்கிறேன். திருப்பித் தாக்குவதற்கில்லை.
வன்முறையில் ஈடுபடுவதற்கு அல்ல," ஒத்துழையாமை இயக்கத்தின்போது நடைபெற்ற 'சௌரி சௌரா' நிகழ்ச்சியைத் தொடர்ந்து காந்தியடிகள் அறிக்கை விட்டதைப்போல், இத்தாலியப் புரட்சி வீரன் அவலத்திற்கு ஆட்பட்டுக் கந்தையும் அழுக்கும் எலும்பும் தோலுமாகத் தன்முன் நின்ற புரட்சிப் படை வீரர்களைப் பார்த்துச் சொன்னதைப்போல், 14-1-58 அன்று பல இலட்சம் மக்களைப் பார்த்து அறிஞர் அண்ணா பேசினார். அதற்குப் பின்னர் நடைபெற்ற போராட்டங்களின்போது கழகத் தோழர்கள் நடந்துகொண்ட கண்ணியமான நடவடிககைகளில் அறிஞர் அண்ணா அவர்கள் அன்று பேசிய கண்டிப்பின் பின் விளைவு தன்றாகத் தெரிந்தது.
14-1-58ல் நடைபெற்ற சென்னைக் கடற்கரைக் கூட்டம் மறக்க முடியாத கூட்டமாகும். நியாயத்தின் சார்பாகப் பெரியதொரு புரட்சியில் ஈடுபட்டு, அதன் இலாப நஷ்டங்களைக் கணக்குப்போட்டுப் பார்க்கும் கூட்டமாகவே அது இருந்தது. அன்று அறிஞர் அண்ணா பேசிய பேச்சில் தொனித்த கண்டிப்பும், உறுதியும் நெடுங்காலத்திற்குக் கழகத் தோழர்கள் உள்ளத்தில் நிழலாடிக் கொண்டிருந்தன தனக்குள்ள பிரச்சினையைப்பற்றி எதிரிலிருக்கும் மக்களிடம் நேரடியாகவே நியாயம் கேட்டு ஒப்புதல் பெறுவதென்பது அறிஞர் அண்ணா அவர்களுக்குப் பழக்கமானதே.
ஆனால். 14-1-58 கூட்டத்தில் தான் முதன் முதலாகத் தனக்கு மக்களிடம் எவ்வளவு பிடிப்பும் மரியாதையும் இருக்கின்றன என்பதை ஆட்சியாளருக்குத் தெளிவாகவே உணர்த்தும் செய்கையை மேற்கொண்டார். "அண்ணாதுரைக்கென்ன, அவர் நாட்டிலே ஒரு பெரிய சக்தியை வளர்க்க மட்டும் கற்றுக் கொண்டிருக்கிறாரே தவிர, அதனைக் கட்டிக் காக்கவும் கட்டுப்படுத்தவும் அவரால் ஆகுமா?"
என நாட்டில் சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்குப் பதில் சொல்லும் வகையில் அண்ணாதுரைக்குச் சக்தியை வளர்க்க மட்டுமல்ல; அதனைக் கட்டிக் காக்கவும் கட்டுப்படுத்தவும் தெரியும் என்பதைக்கூறும் வகையில் நான் 'எழுந்திருங்கள்' என்பேன்; நீங்கள் அனைவரும் எழுந்திருக்கவேண்டும். உட்காருங்கள்' என்பேன்; அனைவரும் உட்கார வேண்டும்" என்று கூறி அண்ணா அவர்கள், "எழுந்திருங்கள்" என்றார்.
உடன கடற்கரையில் திரண்டிருந்த அத்தனை லட்சம் மக்களும் எழுந்து நின்றனர். அதே போல் அண்ணா சொன்னதும் உட்காரவும் செய்தனர். அங்கிருந்த என் கண்கள் பனித்து விட்டன. மக்கள் அனைவருக்கும் ராணுவக் கட்டுப்பாடு பழக்கமாகி விடவில்லை. ஆனால் அண்ணா அவர்களைத் தங்கள் பெரும் தலைவராக மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்பதை இந்த நிகழ்ச்சி நிரூபித்து விட்டது. அதற்குப் பிறகு அண்ணா அவர்களின் ஒவ்வொரு செய்கையிலும் பொறுப்பும், அதே நேரத்தில் பலமான உறுதியும் காணத் தொடங்கின.
1967-ல் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று கழகம் உறுதியான நம்பிக்கையை அவ்வப்போது தெரிவித்து வந்ததற்கும் முன் மாதிரியாக இந்தக் கடற்கரைக் கூட்ட நிகழ்ச்சிதான் அமைந்தது என்று சொன்னால் அது மிகையல்ல. அந்தக் கூட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் என்னைப் பற்றித் தனியாகவே பல முறை குறிப்பிட்டார்கள். "3-ஆம் தேதியன்று என்னைப் பின் தொடர்ந்து வந்த காரிலிருந்த கருணாநிதியைக் கைது செய்தார்கள். அந்தக் காரை ஓட்டி வந்த ரங்கன் என்ற டிரைவரையும் கைது செய்தார்கள்.
இந்த சர்க்கார் எவ்வளவு கேலிக்குரியதாக நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். 'கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்' என்பார்களே அதைப் போல கருணாநிதி வீட்டுக் கார் டிரைவரும் சர்க்காருக்கு எதிரியாக அச்சமூட்டக் கூடியவராகக் காணப்படுகிறார்! இவ்வளவு அச்சம் எதற்காக? இப்படி அஞ்சி அஞ்சிச் சாவதைவிட ஒரு முழுக் கயிறு கிடை க்க வில்லையா?"
இவ்வளவு கோபக் குரலோடு எப்போதாவது அபூர்வமாகத் தான் பேசுவார். அந்தக் கோப உணர்விலும் என்னைப்பற்றி நெக்குருகக் கூறியதைக் கேட்ட எனக்கு மகிழ்ச்சி கரைபுரண்டது. "ஒரு முழக் கயிறு கிடைக்கவில்லையா?" என்று அண்ணா கேட்ட தற்காக நாடு முழுவதும் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு வலைபின்னிக் காட்டி அண்ணனை மகிழ்விக்க வேண்டும்; மேலும் கடுமையாகப் பணியாற்ற வேண்டும் என்று அப்போது நான் பெரும் உறுதி எடுத்துக்கொண்டேன்.
அதிலிருந்து காங்கிரஸ் ஆட்சியை ஒழித்துக் கட்டுவதற்கான முயற்சியில் தான் கழகத் தோழர்களின் பணிகள் அமைந்தன. கலையுலகத்தில் எனக்கிருந்த தொடர்புகளையும் அதிலிருந்து கொஞ்சம் குறைத்துக் கொண்டு, முழுக்க முழுக்க அரசியலில்-அது என் சொந்த வாழ்க்கையை, குடும்பத்தின் தேவைகளைப் பெருமளவு பாதித்தாலும் -ஈடுபடத் துவங்கி விட்டேன். கழகத்தின் பணிகளில் அப்போது நான் முன்னணியில் இருந்தாலும் எனக்கிருந்த வேறு பல பொறுப்புகளும் கடமைகளும் சில நேரங்களில் குறுக்கிடுவதாக இருந்தன.
இந்தக் 'குறுக்கீடு'களைக் குறைத்துக் கொண்டதும் முழு நேரக் கழகத் தொண்டனாக, அறிஞர் அண்ணா அவர்களின் அருகிலிருந்தே அவர் ஆணையை நிறைவேற்றும் முன்னணித் தொண்டனாக, அதிலிருந்து நான் பணியாற்றத் தொடங்கினேன். அடுத்து 1958 பிப்ரவரி 15, 16 நாட்களில் நடைபெற்ற சேலம் மாவட்ட 3-வது மாநாட்டிற்கு நான் தலைவராகப் பொறுப்பேற்றேன். சேலம் மாவட்டத்தில் ஒரு மூலைப்பகுதியில் வசதிகள் அவ்வளவாக இல்லாத சிறு நகரமான வேலூரில் அந்த மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் நாங்கள் யாருமே எதிர்பார்க்காத அளவு கூட்டம் திரண்டது. சேலம் மாவட்டத்தில் பொதுவாகக் கழகத்திற்கு அப்போது ஆதரவு இருந்தது என்றாலும், வேலூர்- சேலம் மாநாடு, அதற்கு மேலும் கழகத்திற்குப் பெருகியுள்ள புதிய சக்தியைப் புலப்படுத்துவதாக அமைந்தது.
