உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/உதய சூரியன்-நாடகமும், சின்னமும்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

உதய சூரியன்-நாடகமும், சின்னமும் · 111 / 391

உதய சூரியன்-நாடகமும், சின்னமும் இதற்கிடையில் கலையுலகத் தொடர்பை அரசியல் பணிகள் காரணமாகக் குறைத்துக் கொண்டாலும், அந்தத் துறையின் பிடிப்பு என்னை விடவில்லை! 'உதய சூரியன்' நாடகம் அப்போது ஒரு வார காலத்தில் என்னால் எழுதப்பட்டு, கழகப் பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக அது ஆங்காங்கு நடத்தப்பட வேண்டும் என்பதும் முடிவாயிற்று. அண்ணா அவர்கள் தமக்கு அந்த நாடகம் மிகவும் பிடித்ததாகத் தெரிவித்தார். கறுப்புக் கொடி நிகழ்ச்சிக்குப் பிறகு முதன் முதலாக நடைபெற்ற வேலூர்-சேலம் மாநாட்டியே 'உதய சூரியன்' நாடகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அனால் அந்த மாநாட்டிற்குத் தலைவராக நான் இருந்ததால் நான் நடிப்பது அவ்வளவு நன்றாக இராது என்பதால் அடுத்த மாநாடுகளிலிருந்து அது நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 'உதய சூரியன்' நாடகம், கழகப் பிரச்சாரத்தில் கலையின் வாயிலாக ஒரு திருப்பத்தை உருவாக்கி இருப்பதாக அண்ணா அவர்களே கருத்தறிவித்தார்கள். அடுத்து வந்த தோதல்களில் காங்கிரஸ் பலத்தை வீழ்த்துவதற்கு அந்த நாடகமும் பெருங்காரணமாக அமைந்திருந்தது என்பது கழகத் தோழர்களின் கருத்து.

நான் தலைமை வகித்த அந்த மாநாட்டில்தான், கழகச் சார்பாக முதன் முதலாகப் 'பஞ்சாயத்துத் தேர்தல்களில் பஞ்சாயத்துத் தலைவர்களை நேரடியாக மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும்' எனறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசாங்கத்திறகு அனுப்பப்பட்டது, நடைபெற்ற மாநாட்டில் முதன்முதலாக நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானம் நான் முதலமைச்சராக வந்த பிறகு முதன் முதலாக அமுலுக்கு வருவதும் சரித்திரத்தின் மற்றொரு விசிததிரம் போலும்! "தமிழை ஆட்சி மொழியாக வைத்திருக்கிறோம் என்று தம்பட்டம் அடிக்கிறார்கள்.

ஆனால அவர்கள் கொடுத்த நாட்குறிப்பு ஏட்டில் பார்த்தால், சகம்', 'மாகம்' 'பால்குணம்,' 'சைத்ரம்', இப்படி வாயில் நுழைய முடியாத சொற்கள் வருடங்களாகவும் மாதங்களாகவும் ஆக்கப்பட்டு அதிலே காணப்படுகின்றன" என்று வேலூர்-சேலம் மாநாட்டில் என் தலைமையுரையில் குறிப்பிட்டது எனக்கு நினைவிருக்கிறது.

இந்த நினைவுதான் பின்னர் இவை போன்ற பெயர்கள் அரசாங்க முடங்கல்களில் இருக்கத் தேவையில்லை என்ற அரசாங்க உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு க் காரணம் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். வேலூர்-சேலம் மாநாடு சிறப்பிலும் மக்கள் ஆதரவிலும் சொல்லப்பட்ட கருத்துக்களிலும் பெருமைப்படத்தக்கதாக இருந்தது. என்றாலும் கழகத்திற்கான நிதி வருவாயில் தளர்ந்து காணப்பட்டது. இது நான் கழகத்தின் பொருளாதார நிலைமையைப் பற்றித் தீவிரமாகச், சிந்தித்துக் கொண்டிருந்த அப்போதையச் சூழ்நிலையில் எனக்குச் சற்று குறையைக் கொடுத்தது.

அடுத்து தேவகோட்டையில் இராமநாதபுரம் மாவட்ட மாநாடு அதே பிப்ரவரி 22, 23 நாட்களில் நடைபெற்றது. தலைவர் பேராசிரியர் அன்பழகன்; திறப்பாளர் இலட்சிய நடிகர் இராசேந்திரன். இந்த மாநாட்டில்தான் நான் எழுதி நடித்த 'உதய சூரியன்' நாடகம் நடத்தப்பட்டது. செட்டி நாட்டில் கழகத்தின் கொள்கைகளை வலியுறுத்தும் மாநாடு சிறப்புற நடைபெற்றது என்பதில் இந்த மாநாட்டைத் தொடர்ந்து நாங்கள் திருப்தியுற்றோம். அதைத் தொடர்ந்து நிதி திரட்டும் பணிகளில் 'உதய சூரியன்' நாடகமும் ஒரு சிறந்த கருவியாகப் பயன்பட்டது.

அடுத்தடுத்துக் கழகத் தோழர்கள் பேரில் தொடுக்கப்பட்ட வழக்குகளின் செலவுக்காக 'உதய சூரியன்' நாடகம் நடத்தி வசூலித்துக் கொடுத்து என் மனததிற்குத் திருப்தியைத் தேடிக்கொண்டேன் நான். 'உதய சூரியன்' நாடகத்தை அதிகமாக நடத்தத் தொடங்கியதை அடுத்து 1-3-58-ல் கழகத்தின் தேர்தல் சின்னமாக 'உதய சூரியன்' அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டதாக டெல்லியிலிருந்து தகவல் கிடைத்தது. 'உதய சூரியன்' நாடகம் கொடுக்கும் வெற்றியைக் காட்டிலும் 'உதய சூரியன்' சின்னம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, எனக்குப் பெரும்மகிழ்ச்சியை அந்நேரத்தில் ஏற்படுத்திற்று.ஏனென்றால், அந்தக் குறிப்பிட்ட சின்னமே கிடைக்க வேண்டும் என்பது அறிஞர் அண்ணாவின் விருப்பம்; எங்களுடைய விழைவு.

'உதய சூரியன்' நாடகத்தில் செய்யப்பட்ட கழகப் பிரச்சாரம் ஒருபுறமிருந்தாலும் அதன் பெயரே பிரச்சாரமாக அமைந்துவிட்டது. நான் முதலில் மாநாட்டில் 'உதய சூரியன்' நாடகம் நடத்தியது தேவகோட்டையில். அந்த மாநாடு நடைபெற்ற ஒரு வாரத்தில் 'உதய சூரியன்' கழகத் தேர்தல் சின்னமாயிற்று. அதே போல் முதன் முதலாகக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான சின்னமாகிய 'உதய சூரியன்' சின்னத்தில் கழகம் போட்டியிட்டதும் தேவகோட்டைத் தொகுதி இடைத் தேர்தலில் தான்.

ஏப்ரல் 5-ல் நடைபெற்றது இந்தத் தேர்தல். அடுத்து பழனியில் மதுரை மாவட்ட தி.மு.க. மாநாடு (மார்ச் 8, 9), கருநாடக மாநாடு (ஏப்ரல் 26, 27) நடைபெற்று, அடுத்து மே 10, 11 நாட்களில் தஞ்சை மாவட்ட மாநாடு திருவாரூரில் நடைபெற்றது. திருவாரூர் மாநாட்டுக்கு நான் பொருளாளராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றினேன். கழகத்தின் பொருளாதார வளத்தையே அதிகமாகச் சிந்தித்துக் கொண்டிருந்த எனக்கு, அந்த மாநாட்டின் பொருளாளர் பொறுப்பு, 'பரிசோதனைத் தளமாக'ப பயன்பட்டது.

மாநாடு போன்ற பொது நிகழ்ச்சியை எவ்வளவு சிக்கனமாகவும், அதே நேரத்தில் சிறப்பாகவும் நடத்த முடியும் என்பதை நிரூபித்துக் காண்பித்தது அந்த மாநாட்டில்தான். எதை எதைச் சிக்கனப்படுத்த முடியும், சிக்கனப்படுத்த வேண்டும் என்பதில் அந்த மாநாட்டில் பெற்ற பயிற்சிதான், பின்னர் கழகப் பொருளாளராகப் பொறுப்பேற்று, அண்ணா அவர்களின் பாராட்டையும் கழகத் தோழர்களிடம் சில நேரங்களில் 'கடுமையானவர்' என்ற பெயரையும் கழகத்திற்கு நிறைவான பொருளாதார பலத்தையும் சேர்க்கும் வகையில் பணியாற்றுவதற்கு உறுதுணையாக அமைந்தது.

திருவாரூர் மாநாட்டில் நான் பொருளாளராகப் பொறுப்பேற்று மிச்சப்பட்ட தொகை ரூபாய் இருபது ஆயிரம். அதுவரையில் கழக வரலாற்றிலேயே மாவட்ட மாநாட்டில் இவ்வளவு பெருந்தொகை மிச்சப்பட்டதில்லை. 1959-ஆம் ஆண்டு நகராட்சி மன்றங்களில் தேர்தல் வந்தது, நகராட்சிகள், ஊராட்சிகளுக்கு நடைபெறும் தேர்தல்களில் கட்சிச் சார்பற்ற முறையில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மற்றக் கட்சிகளுக்குக்- குறிப்பாகக காங்கிரஸ் கட்சிக்கு வேண்டுகோள் விடுக்கபபட்டது.

அதனை மற்றக் கட்சிகள் ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால், கழகமும் நகராட்சி மன்றத் தேர்தல்களில் கட்சிச் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது என்று முடிவு செய்தது. மாவட்டந்தோறும் வேட்பாளர்களைத் தோந்தெடுக்கத தேர்வுக் குழுக்கள் சென்றன. திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் நகராட்சித் தேர்தல்களில் போட்டியிடும் கழக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க என் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி மன்றத் தேர்தலில் தலைமைக் கழகப் பிரதிநிதியாகவும், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்வுக் குழுவின் தலைவராகவும் நான் நியமிக்கபு பட்டேன்.

இதற்கிடையே அந்த ஆண்டு பிப்ரவரி 7.,9 நாட்களில் புதுக்கோட்டையில் கழகத்தின் பொதுக்குழு நடைபெற்றது. 6-ஆம் நாள் நடைபெற்ற தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தான் முதல் முதலாகத் தோழர் சம்பத் தன் சுய உருவத்தைக் காண்பித்தார். தமிழ்நாடு தவிர்த்த மற்ற மாநிலங்களில் கழகம் பரவுவதற்குச் சரியான முயற்சி எடுக்கவில்லையென்றும், அந்த முயற்சி எடுக்காததற்கு அண்ணா அவர்களும் பொதுச் செயலாளர் நாவலர் அவர்களும் காரணம் என்றும் கற்பனையான குற்றச்சாட்டுகளை வாரியிறைத்துச் சற்று வழி தவறிப் பேசத் தொடங்கினார்.

அதற்குப் பதிலளித்த அண்ணா அவர்கள் தமிழகத்திலிருந்து நாம் கொள்கைகளையும் திட்டங்களையும் தரலாமேயல்லாமல், ஆந்திர,கேரள, கன்னடிய மக்களுக்காகவே ஏற்படக் கூடிய அரசியல் விழிப்பில் தான் அங்கு கழகம் வளருவது நியாயமானதாகவும், நிலையானதாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டார். அதற்கு சம்பத் அவர்கள் மறுப்புரைத்துத் தன்னைத தவிர வேறு யாரும் தொலை நோக்கோடு பிரச்னைகளை அணுகுவதில்லை என்று அனைவரையும் குற்றஞ்சாட்டத தொடங்கினார்.

தமிழகத்தில் திடமாகவும், சீராகவும் நியாயத்தின் பேரிலும் வளருவதே மற்ற மாநிலங்களில் கழகக் கொள்கையை விரைவில் பரப்ப உதவும்; மற்ற மாநிலங்களில் அரசியல் பிரச்சினைகள் வேறு வேறாக இருக்கின்றன. ஆகவே அங்கு தற்போதைக்குக் கழகத்தின் சமுதாயக் கொள்கைகளையும் அரசியலில் காங்கிரசின் எதிர்ப்புக் கொள்கைகளையும் பிரச்சாரம் செய்து வருவதோடு கொஞ்ச நாட்களுக்கு இவ்வாறு செயல்படுவதில் தவறு ஏதுமில்லை. அடுத்து வரும் 1962 பொதுத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் நிலைமைகள் மாறுவதையொட்டியும், தமிழகத்தில் நமது கழகம் வலுப்பெறுவதையொட்டியும், மற்ற மாநிலங்கள் நமது கழகத்தின் கொள்கைகளை வலிய வந்து அணைத்துக் கொள்கிற காலம் உதயமாகும் என்ற கருத்தினை நானும் நாவலர் அவர்களும் அந்தச் செயற்குழுவில் தெரிவித்தோம்.

சொல்லப் போனால் புதுக்கோட்டைப் பொதுக் குழுக் கூட்டத்திலிருந்தே சம்பத் அவர்களும் அவரைச் சார்ந்து நின்ற இரண்டொருவரும் தங்களுக்கு அண்ணா மீதான வெறுப்பை மெல்ல மெல்லக் காண்பிக்கத் தொடங்கினர். ஓர் அரசியல் தலைவருக்கு அந்தக் கட்சியினுடைய தொண்டர்கள் மட்டத்திலும், அந்தக் கட்சி வளர்கின்ற நாட்டு மக்களின் உள்ளத்திலும் வலுவான இடம் உருவாகிற நேரத்தில் அந்தத் தலைவரைப் பற்றி வெளிப்படையாகப் பேசி மற்றவர்கள் வெறுப்பைத் தேடிக் கொள்ளப் பயப்படுகிறவர்கள் அந்த அரசியல் தலைவருக்கு எதிரான திண்ணைப்பேச்சிலும், சிறு சிறு குழுக்களைக் கூட்டி வைத்தும் தலைவரைப் பற்றிய கருத்துக்களை எடுத்துச் சொல்வது அரசியல் வரலாறு கண்ட உண்மை!

அந்த உண்மைக்கு உரம் ஊட்டுவது போல் சம்பத்தும் அவரைச் சார்ந்தவர்களும் நடந்து கொண்ட விதம் அமைந்தது. அண்ணா அவர்களிடமிருந்து என்னை எப்படியாவது பிரித்துவிட வேண்டுமென்று சம்பத்தும், அவரது தோழர்களும் பெரிதும் முயன்றார்கள். கழகத்தின் அடுத்த பொதுச் செயலாளராக நானே வரவேண்டும் என்று சம்பத் அவர்கள் என்னை வலியுறுத்திக் கூறிக் கொண்டே இருந்தார். சூட்சுமத்தை உணர்ந்து கொண்ட நான் மிக விழிப்போடு இருந்தேன்.

அண்ணா அவர்களின் தலைமைக்கு எதிராக ஒரு சதி நடப்பதை என்னால் உணர முடிந்தது. தமிழ் நாட்டில் பல பகுதிகளில் நண்பர் சம்பத்தும், அவரைச் சார்ந்த சிலரும் கூட்டங்களுக்குச் செல்லும்போது, கூட்டம் முடிவுற்றதும் அந்த ஊர் செயலாளர்கள், கழக நண்பர்கள் ஆகியோரிடம் தனிமையிலே உரையாடுகிற நேரத்தில் எல்லாம் அண்ணாவைப் பற்றிப் பழிகூறத் தொடங்கினார்கள். என்னதான் அவர்கள் திரை மறைவுக் கூட்டங்களை நடத்தியபோதிலும் அந்த ரகசியக் கூட்டங்கள் நடைபெற்ற இரண்டொரு நாட்களுக்கெல்லாம் செய்தி எனக்கு வந்துடும்.

நான் அதனை அண்ணாவின் காதில் போடாமல் மறைத்து வைத்திருப்பேன் என்றாலும், எனக்கு முன்பே அந்தச் செய்திகளை அண்ணா அவர்களும் அறிந்து வைத்துக் கொண்டிருந்தார் என்பதைப் பிறகு நான் புரிந்து கொள்ள முடிந்தது. தம்மைப் பற்றித் தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தோழர்களை நேரில் காணும்பொழுது அண்ணா அவர்கள் புன்னகை தவழப் பேசுவார். தனக்கெதிராக அரசியலில் சதி வேலை பண்ணிக் கொண்டிருந்த சம்பத்திடம் ஏராளமான அன்பைப் பொழிவதைக் கண்டு எங்களுக்கெல்லாம் எரிச்சல் கூட வரும்.

தமக்குப் பொல்லாங்கு நினைப்பவர்களிடம் பொறுமை காட்டுவதும், புன்னகை புரிவதும் அண்ணாவின் அரசியல் நாகரிகம். தனிப் பண்பு. அந்தப் பண்பைப் பெற்றவர்களை எப்படிப் பட்ட அரசியல் பகாசூரர்களாலும் எந்தக் காலத்திலும் வென்று விட முடியாது!