நெஞ்சுக்கு நீதி
காரைக் கைது செய்த காவலர்கள் · 109 / 391
காரைக் கைது செய்த காவலர்கள் எது எப்படியானாலும் தடை செய்யப்பட்ட கூட்டத்தில் 3-ஆம் தேதி கலந்துகொண்டு பேசுவது என்று அறிஞர் அண்ணா அவர்களே தீர்மானித்ததைக் கேட்டுத் தமிழகமே சிலிர்த்து எழுந்தது. 'அண்ணா பேசும் கூட்டத்திற்கா தடை! அமைதி காக்கப்படுவதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சிக்கா தடை?'
என்று தமிழகத்தின் ஒவ்வொரு உள்ளமும் தனக்குத் தானே கேட்டுக் கொண்டது. அண்ணா அவர்கள் மட்டுமே பேசுவதாக இருந்த அந்தக் கூட்டத்தில் தடை, விதிக்கப்பட்ட நிலைமையின் காரணமாகத் தோழர்கள் சம்பத், ஆசைத்தம்பி, இரா. செழியன் ஆகியோர் தம்முடன் பேசட்டும் என்று அண்ணா அவர்கள் முடிவு செய்து, அதற்கேற்ப அறிக்கையும் விடுத்தார்கள். ஒருக்கால் இவர்கள் கைது செய்யப்பட்டால், அடுத்து நான் கூட்டத்தில் பேசுவதாகவும் ஏற்பாடாயிற்று.
3-ஆம் தேதி காலை முதலே கடற்கரையில் மக்கள் அனுமதிக்கப் படாமல், வெறும் போலீஸ் மயமாகக் காட்சியளித்தது. பிற்பகலில் கடற்கரைக்குச் செல்லும் பாதைகளும் அடைக்கப்பட்டன. பிற்பகலிலிருந்தே கடற்கரை நோக்கிப் போகத் துடித்த மக்களுக்கும் போலீசாருக்கும் ஆங்காங்கு தகராறுகள் மூண்டன. பைகிராப்ட்ஸ் சாலையில் ஓரிரு முறை கண்ணீர்ப் புகைக் குண்டு வீசியும் கடற்கரைக்குப் போக விருந்த மக்களைக் கலைக்க வேண்டிய கட்டாயத்திற்குப் போலீஸ் ஆளாயிற்று.
சரியாக 5.30 மணிக்கு அறிஞர் அண்ணா அவர்களும், அவருடன் பேசுவதாக இருந்த மற்ற மூவரும் கழகக் கொடி பறக்க விடப்பட்ட காரில் கடற்கரை நோக்கிச் சென்றனர். அந்தக் காருக்குப் பின்னால் நான் தனிக் காரிலும், நாவலர், என். வி.என்., பேராசிரியர் அன்பழகன், மதியழகன், அண்ணன் சி. பி. சி., மதுரை முத்து, அன்பில் ஆகியோர் தனித் தனிக் கார்களிலும் பின்தொடர்ந்தோம். ஜெனரல் ஆஸ்பத்திரி சந்திப்பில் அண்ணா அவர்களும் அவருடன் சென்ற மூவரும் போலீசாரால் கைது செய்யப் பட்டனர்.
அதற்கு அடுத்துச் சென்ற காரிலிருந்த நானும், என்னுடன் வந்த தோழர்கள் இரா. தருமலிங்கம், பண்ணை முத்துக் கிருஷ்ணன், அரங்கண்ணல், அன்பில் தருமலிங்கம், சண்முக வடிவேல் ஆகியோரும், காரோட்டி ரங்கசாமியும், காரோடு கைது செய்யப் பட்டதாலே போலீசாருடன் பின்தொடர்ந்து செல்ல வேண்டியதாயிற்று. நாங்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டோம் என்பதே கழகத் தோழர்களுக்கு இரவு நெடுநேரம் வரை புரியாத புதிராகவும், தெரியாத இடமாகவும் இருந்தது.
'அண்ணா அவர்கள் எங்கு கொண்டு போகப்பட்டார்?' என்று சென்னை நகரமே சில மணி நேரம் திகைத்துப் பின்னால் எங்களுக்குத் தெரிந்தது. அடையாறு போலீஸ் நிலையத்தில் அன்றிரவு நாங்கள் காவலில் வைக்கப்பட்டோம். அடுத்த நாள் பகல் ஒரு மணிக்கு அறிவகத்தில் நாவலர் கைது செய்யப்பட்டார். அவருடன் தோழர்கள் என். வி. நடராசன். ஏ. கோவிந்தசாமி, எம். பி. சுப்ரமணியம், சி. நடராசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதே போல் அன்றிலிருந்து இரண்டு மூன்று நாட்கள் அறிவகத்திற்குள் நுழையும் அத்தனை பேரும் கைது செய்யப் பட்டனர்.
கடற்கரைக் கூட்டம் தடைப்பட்டதால், 4-1-58-ல் பெரம்பூர் ஏரிக் கரையில் நண்பர் ப.உ.ச., திருமதி சத்தியவாணிமுத்து, எஸ். சந்தானம் ஆகியோர் தடை மீறிப் பேசுவதென்றும், 5-1-58-ல் ராயபுரத்தில் நண்பர் மதியழகன், எம்.பி. சுப்பிரமணியம், இருசப்பன் ஆகியோர் பேசுவதென்றும் முடிவு செய்யப்பட்டது. அனைவருமே கைது செய்யப்பட்டு விட்டதால் அந்தக் கூட்டங்களும் நடைபெறாமற்போயின. ஜனவரி 6-ல் கழகத்தின் முக்கியத் தலைவர்களோ, முன்னணித் தோழர்களோ, சட்ட மன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களோ வெளியில் விட்டு வைக்கப்படவில்லை.
கறுப்புக் கொடி நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க முடிவு செய்யப்பட்டிருந்த உறுப்பினர்களில் தோழர் எம். ஆனந்தன் அவர்கள் மட்டுமே, 6-ந் தேதி காலை மீனம்பாக்கத்தில் கறுப்புக் கொடி காட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்றும், வெற்றிச் செல்வி, அன்பழகன், அ. பொ . அரசு, செங்குட்டுவன் ஆகியோரும் வழி நடத்தினர் என்றும் பின்னர் தெரிந்தது. தலைவர்கள் அனைவருமே கைது செய்யப்பட்டதால், கறுப்புக் கொடி காட்டும் நிகழ்ச்சி 6-ஆம் தேதி தடம் புரளுமோ என்று அனைவரும் அஞ்சினோம்.
ஏனென்றால் நாங்கள் வெளியில் இருக்கும்போதே தோழர்களின் உணர்ச்சி கட்டுப்படாமல தத்தளித்தது. கவிஞர் கண்ணதாசன் அவர்கள், தமது 'தென்றல்' இதழில் கறுப்புக் கொடி நிகழ்ச்சி பற்றி வெளியிட்ட கவிதை, தமிழ் நயம் சொட்டுவதாகவும், அதே சமயம் வன்முறை தூண்டுவதாகவும் இருந்தது. அதனைக் எண்ணுற்ற அறிஞர் அண்ணா அவர்கள், அந்த இதழ் வெளியில் வரக்- கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். அச்சான அத்தனை இதழ்களும் கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எரிக்கப்பட்டு, வேறு கவிதையைத் தாங்கி அவ்வார இதழ் வெளிவந்தது.
ஜனவரி 6-ல் புலர்ந்தபொழுது, தமிழகத்தின் மானம் காப்பதாகவும், வன்முறைக்கு வழி வகுக்காததாகவும் இருக்கவேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்பினோம். 6-ஆம் தேதி காலை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சுமார் இருபதாயிரம் பேர் திரண்டு கறுப்புக் கொடி காட்டினர். போலீசாரின் அடக்கு முறையும் அதிகமாக நடைபெற்றது. 'கண்டதும் அடி' என்ற போக்கில் மக்களைப் போலீஸ் வதைத்தது. காலையிலிருந்து இரவு வரை நேரு செல்லும் இடமெல்லாம் கறுப்புக் கொடி மயமாகவும், கையுடைந்தோர், கால் உடைந்தோர் மயமாகவும் இருந்தன.
சென்னை நகரின் ஒரு பகுதி அன்று ரத்தத்தில் திளைத்தது. கண்ணீர்ப் புகைக் குண்டும் தடியடியும் தன்னிச்சையாகப் பிரயோகிக்கப்பட்டன. கறுப்புக் கொடி காண்பிக்க வந்த கழகத் தோழர்களும் பொது மக்களும் அறிஞர் அண்ணா விடுத்த ஆணைக்கிணங்கவே அமைதியைக் கடைப்பிடித்தனர். அன்று கூடிய மக்கட் கூட்டத்திற்கும் அரசாங்கத்தரப்பில் கையாளப்பட்ட வன்முறைச் சம்பவத்திற்கும் இடையில் கணக்குப் பார்த்தால், தமிழகம் அவமானப்படுத்தப்பட்டதை முதல் முறையாக அமைதியோடு எதிர்த்து நின்றது என்று பெருமையாகச் சொல்லலாம்.
எனினும் தடியடியின் காரணமாகவும், கூட்ட நெரிசலில் சிக்கியும் கழக அனுதாபி மொய்தீன் பிச்சை என்பவரும் தையற்கடைத் தொழிலாளி கோவிந்த ராவ் என்பவரும் இறந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இவைகளின் காரணமாகச் சிறையிலிருந்த நாங்கள் வருந்தினாலும் மொத்தத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் திருப்தியடைந்ததாகவே பிறகு தெரிவித்தார். கழகத் தோழர்கள் தாம் கைது செய்யப்பட்டும், காயப்பட்டும் அவதியுற்றனரே தவிர, எதிர்தரப்பில் - அதாவது அடக்கு முறையைப் பிரயோகித்த அரசாங்கத் தரப்பில் எந்தவிதமான சேதமோ வன்முறையால் உண்டாகக் கூடிய இழப்போ ஏற்படவில்லை என்பதை நினைத்து எல்லாரும் திருப்தியுற்றோம்.
எங்களுக்குத் தேவைப்பட்டது இதுதான். எங்களில் பலர் மாண்டாலும் பாதகமில்லை; அரசாங்கத்தின் ஆட்களுக்கோ சொத்துக்கோ அபாயம் நேருவதாக அமையக் கூடாது என்று விரும்பினோம். அந்த விருப்பம் 6-ஆம் தேதி கறுப்புக் கொடி நிகழ்ச்சியைப் பொறுத்தவரை நிறைவேறியதாகவே கொள்ளலாம். பல ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது அந்த ஜனவரி 6-ஐப் பற்றிச் சொல்வதும், கேட்பதும் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் அன்று கழகம் ஒரு பெரிய பரிசோதனையில் பெரு வெற்றி பெற்றதாகவே சொல்ல வேண்டும்.
காந்தியடிகள் (1930) தண்டி யாத்திரையின்போது அடக்கு முறைகளுக்கிடையில் காங்கிரஸ் தொண்டர்கள் காண்பித்த அமைதியும் கட்டுப்பாடும் எத்தகையதென்று நான் படித்திருக்கிறேன். சுமார் அறுபதாயிரம் பேர் ஈடுபட்ட அந்த உப்புச் சத்தியாக்கிரகத்தில் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டாலும், போலீசாருக்கு எத்தகு சேதமும் ஏற்படவில்லை என்றும் சொல்கிறார்கள். காந்தியடிகளுக்கே முழு மன நிறைவு அளித்தது அந்த ஒரு போராட்டம் தான் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
1958 ஜனவரி 6-ல் சென்னையில் கழகச் சார்பாக இருபதாயிரம் பேர் கலந்துகொண்ட கறுப்புக் கொடிப் போராட்டமும் அதற்குச் சமமானதே. தண்டி உப்புச் சத்தியாக்கிரகத்தின்போது காங்கிரஸ் தொண்டர்கள் நடந்து கொண்ட கட்டுப்பாட்டைக் கவனித்த காந்தியடிகள், நாடு அறப் போராட்டத்திற்குத் தன்னைத் தயாராக்கிக் கொண்டதாக நம்பிக்கை தெரிவித்தாராம். நாங்களும் ஜனவரி 6-கறுப்புக் கொடிப் போராட்டத்திற்கும் ஈடு கொடுக்கக் கூடியதுதான் என்று முடிவு செய்தோம்.
உப்புக்கும் உறைப்பு சொரணைக்கும் சம்பந்தமிருக்கிறது. அதேபோல், உப்புச் சத்தியாக்கிரகத்திற்கும் தமிழர்களின் 'உறைப்பு' உணர்வைக் காட்டிக்கொள்ள நடைபெற்ற கறுப்புக் கொடிப் போராட்டத்திற்கும் அநேக ஒற்றுமைகள் எனக்குத் தெரிந்தன. அறிஞர் அண்ணா அவர்களின் அன்பு வேண்டுகோள்-நாங்கள் வளர்த்த கழகக் கட்டுப்பாடு வீண் போகவில்லை; உயிர்ப்புச் சக்தியோடு விளங்கும் என்று நாங்கள் ஜனவரி 6 இரவு நிம்மதியடைந்தோம்.
பதினைந்து நாட்கள் ரிமாண்டில் நாங்கள் வைக்கப்பட்டிருந்தும், ஐந்து நாட்களுக்குப் பிறகு 8-1-58 அன்று அறிஞர் அண்ணா, நான் மற்றும் தோழர்கள் விடுதலை செய்யப்பட்டோம். விடுதலையாகிச் சிறையிலிருந்து வெளி வந்ததும் முதல் வேலையாக ஜனவரி 6-ல் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தோழர்களைப் போய்ப் பார்த்து வருமாறு அறிஞர் அண்ணா என்னைப் பணித்தார். அதன்படி தோழர்கள் ஆசைத்தம்பி, முரசொலி மாறன், கவிஞர் ஆனந்தம், பாண்டியன் ஆகியோருடன் நான் மருத்துவ மனைகளுக்கும் தோழர்கள் காவலில் வைக்கப்பட்டிருந்த இடங்களுக்கும் சென்ற பார்த்து ஆறுதல் கூறினேன்.
காயம்பட்ட தோழர்களின் உடம்பெல்லாம் இரத்த மயமாக இருந்தது. உடைகளெல்லாம் இரத்தத்தில் தோய்ந்து செந்நிறமாக மாறிவிட்டிருந்தன. 'இரத்தக்கவுல்' என்பார்களே அது நாங்கள் போன இடமெல்லாம் நீக்கமற வீசிக்கொண்டிருந்தது. அடிபட்டுப் படுத்துக் கிடந்த தோழர்களைப் பார்க்குந்தோறும், அறிஞர் அண்ணா போராட்டம் நடந்ததில் திருப்தி தெரிவித்ததில் இருந்த உண்மை எனக்கு விளங்கிற்று. 'எவ்வளவு மிருகத்தனமாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள்?
இருந்தும் எவ்வளவு பொறுமையைக் கடைப்பிடித்திருக்கிறார்கள்?" என்று வியந்தேன். நம் தோழர்கள் இன்னல்களையும் துன்ப துயரங்களையும் நாட்டுக்காகத் தாங்கிக் கொள்வதில் எவ்வளவு கட்டுப்பாடான பயிற்சி பெற்றிருக்கிறார்கள் என்று மகிழ்ந்தேன். ஏனென்றால் நானும் அவர்களில் ஒருவன்; அறிஞர் அண்ணாவிடம் பயிற்சி பெற்றுள்ள கழகத் தொண்டன். கறுப்புக் கொடி நிகழ்ச்சியில் ஈடுபட்டதற்காகவும், ஈடுபட்டனர் என்று சந்தேகப்பட்டும், கழகத் தோழர்களையும், பொது மக்களையும் காங்கிரஸ் ஆட்சி எத்தகு கொடுமைகளுக்கு ஆளாக்கியது என்பதை நான் விடுதலை செய்யப்பட்டு வெளி வந்ததும் ஆங்காங்கு மருத்துவ மனைகளில் போய்த் தோழர்களைச் சந்தித்தபோது அறிந்து பெரிதும் கலங்கினேன்.
மனிதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயர்ந்த பட்ச உறுதியையும் சகிப்புத்தன்மையையும் கழகத் தோழர்கள் வெளிக்காட்டியிருந்தார்கள். அதேபோல் மனிதனால் எவ்வளவு கொடுமைகளைத் தாங்கிக் கொள்ள முடியுமோ அவ்வளவையும் தாங்கி, தம்மால் முடிக்கப்பட்ட பெருமையான பணியைப்பற்றிய பெருமிதமான நினைவில் தோழர்கள் மருத்துவ மனைகளில் படுத்துக் கிடந்தார்கள். அவர்களில் யாரும் எந்தவித வன்முறைக் கிளர்ச்சியிலும் ஈடுபடாமல் இப்படிப்பட்ட தாக்குதலுக்கு ஆளானார்களே என்று நாடே கண்ணீர் வடித்தது.
1921 டிசம்பரில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய இளவரசர் (எட்டாம் எட்வர்ட்) இந்தியா வந்தபோது, எதிர்ப்புத் தெரிவித்த காங்கிரஸ் தொண்டர்கள் மாதிரியிலேயே 1958 ஜனவரியில் நேருவுக்குக் கறுப்புக் கொடி காண்பித்த கழகத் தோழர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். கல்கத்தாவுக்கு இளவரசர் போகிறார் என்பதற்காக, பம்பாயிலும், பாட்னாவிலும், அமிர்தசரசிலும் காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுக் காராக்கிரகத்தில் பூட்டப்பட்டதைப் போலவே, நேரு சென்னை வரும் போது கறுப்புக் கொடி காட்டப்படும் என்று கழகம் எடுத்த முடிவுக்காக, கன்னியாகுமரியிலும் திருச்சியிலும், சேலத்திலும், சென்னையிலும் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
போலீசாரின் கொடுமைகளுக்கெல்லாம் "வேல்ஸ் இளவரசர் மீது பொறுப்பைச் சுமத்துவதற்கில்லை. அவர்மீது குற்றஞ் சொல்லவும் முடியாது.. ஆனால் நாளும் இழந்து வரும் செல்வாக்கை எப்படியாவது மீண்டும் நிலை நாட்டிக் கொள்வதற்காக, வேல்ஸ் இளவரசரின் உருவத்தைப் பயன்படுத்திக் கொள்ளச் செய்த முயற்சிதான் அது" என்று 1921 டிசம்பரில் இந்திய அரசாங்கப் போலீஸ் நடவடிக்கைகள் பற்றி நேரு எழுதியிருக்கிறார்.
அதே நேருவின் உருவத்தைப் பயன்படுத்தி 1958-ல் இந்த மாநிலத்தின் காங்கிரஸ் அரசாங்கம் நாளும் இழந்து வந்த தனது செல்வாக்கைப் பயன்படுத்தத் தலைப்பட்டது சரித்திரத்தின் விசித்திரமே ஆகும்.
