உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/நேருவுக்குக் கறுப்புக் கொடி
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

நேருவுக்குக் கறுப்புக் கொடி · 108 / 391

நேருவுக்குக் கறுப்புக் கொடி ஆதிக்கந் தேடித் தென்னகத்தில் பெரும் பலத்துடன் நுழையும் இந்தியை எந்த விலை கொடுத்தாகிலும் ஒழித்தே தீருவோம் என்று குளுரைத்து, உறுதி தெரிவித்துத் திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநாட்டில் முடிவெடுத்த பிறகு தமிழ்நாடு குமுறும் எரிமலையாகக் காட்சியளித்தது. அக்டோபர் 13-ல் நடைபெற்ற 'இந்தித் திணிப்புக் கண்டன நாள்' கூட்டங்கள் கழகத்தின் உறுதியை மட்டுமல்ல, தமிழகத்தின் விருப்பத்தையும் தெளிவாகப் பிரதிபலிப்பதாக அமைந்தன.

"இன்று நாம் இந்தியை எதிர்த்திட எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள் என்ற கணக்கை எடுக்கிறோம். வெறும் பட்டியல் காட்ட அல்ல. பட்டியலைக் காட்டி விட்டு, அர்த்தராத்திரியிலே போராட்ட நிறுத்த அறிக்கை கொடுத்து விட அல்ல. அத்தனை பேரும் உறுதியோடு நின்று இந்தியை எதிர்க்க வேண்டும். இன்று இல்லையேல் இன்னொரு நாள் இந்திப் படை எடுப்பு நம்மைத் தாக்கியே தீரும். எனவே, இன்றைக்கே நம்மை நாம் 'இந்தியை எதிர்க்கத் தயாரா?'

என்று கேட்டுக் கொள்ள வேண்டும்" என்று நான், இந்தித் திணிப்புக் கண்டன நாளையொட்டிய பெத்துநாய்க்கன் பேட்டைப் பொதுக் கூட்டத்தில் பேச்சைத் துவக்கினேன். ஆயிரமாயிரமாண்டுகளாக எத்தனை படையெடுப்புக்களையும் எதிர்த்துச் சமாளித்துச் சீரிளமைத் திறம் பொங்க வாழும் என் தமிழ் மொழிக்குத் தீமை வருமோ என்று எண்ணுந்தோறும் எனக்கு இயல்பாக எழும் உணர்ச்சியும் குமுறலும் அன்றையக் கூட்டத்திலும் பிரதிபலித்தது. நான் மட்டுமல்ல, கழகத் தலைவர்கள் அத்தனை பேரும் அக்டோபர் 13-ஆம் நாள் கூட்டத்தில் அப்படித்தான் பேசினோம்.

இருபதாண்டுகளுக்குப் பிறகு, இந்தியை மீண்டும் எதிர்க்கும் பலத்த 'ஆவேசம்' அன்று தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் கரை புரண்டது. கட்டுப்பாடு-கண்ணியத்தை மீறிடாமல். கழகத்தின் இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்குப் பிறகு, குறிப்பாக அக்டோபர் 13-ஆம் நாள் கூட்டங்களுக்குப் பிறகு தமிழகமே குமுறும் எரிமலையாகக் காட்சியளிக்கத் தொடங்கிற்று. தமிழுக்கு அழிவைச் சேர்க்க வரும் இந்தி மட்டுமல்ல; நாட்டைப் பீடிக்கும் அத்தனை தீய சக்திகளும் பட்டியல் போட்டுப் படம் பிடித்துக் காட்டப்பட்டன.

இந்தியை எதிர்ப்பதற்காகத் தி.மு. கழகம் தனது போராட்டக் கொடியைப் பட்டி தொட்டிகள்தோறும் உயர்த்திடத் தொடங்கிற்று. 'தமிழகத்தின் வடவெல்லையை மீட்போம்' என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் கட்சி வடக்குப் பகுதியில் பாடி வீடமைத்துக் கொண்டு, போர்ப் பயிற்சி செய்து கொண்டிருந்தது. தென்பாண்டி மண்டலத்தில் மூண்ட பெரும் அவமானத்தைச் சேர்த்த சாதிக் சண்டையைக் கணக்குப் போட்டுப் பார்த்துப் பெரியார் அவர்களின் தலைமையிலான திராவிடர் கழகம் சாதி ஒழிப்புப் போராட்டத்திற்கான நாளையும் முறைகளையும் பிரகடனப்படுத்திற்று.

கம்யூனிஸ்டுகள் கூடத் திபெத்தில் கம்யூனிஸ்டுச் சீனா கையாளும் அடக்குமுறைகளைக் கண்டு தங்கள் கட்சிக்குள்ளாகவே ஒரு வகை 'மனப் போராட்டம்' நடத்திக் கொண்டிருந்தார்கள். காங்கிரஸ் ஆட்சிகூட, இருக்கும் பீனல்கோடு சட்டங்கள் போதுமா, மேலும் அடுக்கலாமா என்று சிந்தனைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. இவை அனைத்துக்கும் மேலாக மக்களும், பதினைந்து பேருக்குப் பதிலாக ஐம்பது பேர், அறுபது பேர் கழகச் சார்பாக சட்டமன்றம் சென்றிருந்தால் ஏற்படும் சூழ்நிலைகளில் எவ்வகையான பாதுகாப்புத் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் என்று ஒப்புவமைப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.

ஏனென்றால் நாங்கள் போகும் இடந்தோறும் மக்களின் மனப்போக்கு இதை நன்கு வெளிப்படுத்திற்று. 'இந்திக்கு' எதிரான போராட்டத்தை நாம் கைவிட்டு விடக் கூடாது என்று வற்புறுத்த விரும்புகிறேன்' என்று ராஜாஜி அவர்கள் கூடப் போராட்ட முரசு கொட்ட முன் வந்த அற்புதம் அப்போது தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது.

1857-58-ல் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த போராட்ட நிலைமைக்குச் சரியாக 1957-58-ஆம் ஆண்டுகளிலும் இருந்தது. திருவண்ணாமலை மாநாட்டை அடுத்துத் தென் கோடி நாகர்கோவிலில் கழகத்தின் இரண்டாவது மாநாடு 1957 டிசம்பர் 27-28 ஆம் நாட்களில் நடைபெற்றது. இந்த மாநாட்டையொட்டி 29-ஆம் நாளன்று கழகப் பொதுக குழுக் கூட்டமும் நாகர்கோவில் நகரிலே நடந்தது. கழகத்தின்பால் தமிழர்களின் ஆசையும்-ஆசியும் எவ்வாறு பரிபூரணமாக நிரம்பி இருக்கின்றன என்று நாகர்கோவில் மாநாட்டில் தெளிவாகத் தெரிந்து கொண்டேன்.

கொட்டும் மழை வீதிகளில் வழிந்தோடும் தண்ணீர்-வழுக்கும் சக்தி-நடுங்கும் குளிர்-ஊசியைப் போல் உடலைத் துளைக்கும் ஊதல் காற்று ஆகியவைகளையும் பொருட்- படுத்தாமல், குமரி மக்களுக்கே உரிய வியப்புக் குறிகள் மின்னித் தெளிக்கும் முக'பாவத்'தோடும், கைகளில் குடைகளோடும், முழங்காலுக்கு மேல் வேட்டியை மடித்துக் கட்டிச் செம்மாந்து நின்று மாநாட்டில் எங்கள் பேச்சுக்களைக் கேட்ட சிறப்பை என்னால் மறக்க முடியாது' கழகத்தின் மாவட்ட மாநாடுகள் தொடர் வரிசையிலேயே அதுவரை நான் காணாத அளவுக்குத் தாய்மார்கள் பெருவாரியாகக் குழுமியிருந்தது அந்த மாநாட்டில் தான். மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய தோழர் ஈ.வெ.கி.

சம்பத் சம்பத் அவர்கள் அங்கு பேசிய பேச்சுக்களை, அடுத்த சில மாதங்கள் கழித்து, அவர் முற்றிலும் மாறுபட்ட மனிதராகி உதிர்த்த வாசகங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அதிகாரப் பசிக்கு ஆளான மனிதர்களின் முரண்பாடுகள் அனைத்தும் பளிச்சிடுவதைக் காணலாம். வடகோடியிலுள்ள டெல்லிப் பட்டணத்தை அன்றே 'முற்றுகை' இட வேண்டும் என்பதைப் போல் தென்கோடி நாகர்கோவிலில் ஆவேசமாகத் தலைமையுரை நிகழ்த்தினார். "நேருவை இந்த நாட்டில் நடமாட நாம் அனுமதிக்கின்ற ஒரே தாராள குணத்தைப் பலவீனமாகக் கொண்டுதான் நேரு பேசுகிறார்" என்றெல்லாம் தோழர் சம்பத் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

தமிழகம் வந்து சென்ற நேரு தமிழகத்தின் தலைவர்களைக் குறிப்பிட்டு நாத்துடுக்காகச் சில வார்த்தைகள் பேசினார். ரோமானியச் சக்கரவர்த்திகள் தமது கீழ்த்திசை நாட்டுப் பிரஜைகளைச் சாடியதைப் போல் நேரு நடந்து கொண்டார். சாதி ஒழிப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பெரியார் அவர்களை 'பைத்தியக்காரர்' என்று இழிவு தொனிக்கக் குறிப்பிட்டார்.

கழகத்தின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைச் 'சிறுபிள்ளைத்தனமானது' என்று வர்ணித்தார். வடக்கெல்லைப் போராட்டத்தில் ஈடுபட்டு ரயில் நிறுத்தக் கிளர்ச்சி செய்த சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்களின் செயலை 'அறிவிலித்தனம்' என்று ஏசினார்.

தனது தகுதிக்கும் மரியாதைக்கும் மீறி இப்படியெல்லாம் பேசிய நேரு அவர்களின் போக்கு பற்றித் தான் முழுக்க முழுக்க நாகர்கோவில் மாநாட்டில் சிந்திக்கப்பட்டது. தமிழகமே அவருடைய பேச்சுக்களால் புண்பட்டுப் போயிருக்கிறது என்பது அங்கு தெளிவாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்குப் பரிகாரம் அடுத்த நாள் 29-12-57-ல் நடைபெற்ற கழகப் பொதுக் குழு தனது முக்கியமான தீர்மானமொன்றின் மூலம் நாட்டுக்கு அறிவித்தது. "நேரு பண்டிதர் தமிழர்களையும் தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தலைவர்களையும் கேவலமாகப் பேசி வருவதைக் கண்டிக்கும் வகையில் தமிழ் மக்களின் அருவருப்பைக் காட்டிட, வரும் ஜனவரி முதல் வாரம், நேரு பண்டிதர் சென்னை வரும்போது, அவருக்குக் கறுப்புக்கொடி காட்டுவது என்றும், அந்நிகழ்ச்சியினைச் சென்னைச் சட்ட மன்றத்தில் உள்ள தி.மு.க.

உறுப்பினர் பதினைந்து பேரும் பாராளுமன்ற உறுப்பினர் இருவரும் முன்னின்று நடத்துவதென்றும் தீர்மானிக்கிறது" என்பது. 'தமிழகத்தின் தன்மானத்தில் அக்கறை கொண்ட அனைவரையும்' அந்தத் தீர்மானம் அன்போடு அழைத்தது. தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்துத் திருவண்ணாமலை மாநாடு குரல் கொடுத்தது. அதற்கடுத்து நாகர்கோவில் மாநாடு, தமிழகத்திற்கு நேர்ந்த அவமதிப்பைத் துடைத்தெறிய முடிவு எடுத்தது. தமிழகம் அநீதியைக் காட்டிலும் அவமதிப்பைத் தாங்கிக் கொள்வதில் கொஞ்சம் கூட விட்டுக் கொடுத்ததில்லை.

சேரன் செங்குட்டுவன் வீரப்படையெடுப்பிலிருந்து, நேருவின் ஏளனப் பேச்சை எதிர்த்துக் கண்டிக்கக் கழகம் முடிவெடுத்தது வரை தமிழகத்தின் போராட்டங்களில் அவமதிப்பை எதிர்ப்பதுதான் அதிகமானதாக இருக்கும் என்பது வரலாறு. அடிமைத்தனத்தைக் கூடத் தமிழகம் பொறுமையோடு சகித்ததுண்டு. அவமானத்தை அது சகித்துக் கொண்டது என்பதற்குச் சான்றுகளே கிடையாது. வீரபாண்டியக் கட்டபொம்மன் கூட, அடிமைத்தனத்தால் அவ்வளவு விரைவாகச் சூடேறிப் பொருதவில்லை!

அவமானப்படுத்தப் பட்டதுதான் அவன் பீரிட்டுக் கிளம்பியதற்கு முக்கியக் காரணம். கனகவிசயன் அவமானப்படுத்திய காரணத்திற்காக இமயம் வரை தமிழன் படை கொண்டு சென்றான். நேரு ஏற்படுத்திய அவமானத்திற்குப் பரிகாரம் சென்னையிலேயே தேடிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது; ஏனென்றால், ஜனவரி 6-ஆம் நாளன்று பண்டித நேரு அவர்கள் சென்னைக்கு வருவதாகப் பயணத் திட்டம் போடப்பட்டிருந்தது. ஜனவரி 6-ல் சென்னை வரும் நேருவுக்குக் கறுப்புக் கொடி காட்டுவதன் மூலம், தான் பட்ட அவமானத்துக்கு அமைதி தேடிக் கொள்ளத் தமிழகம் தயாரானது.

"பண்டித நேரு நாராச நடையில், நாட்டினரின் நன் மதிப்பைப் பெற்ற எவரையும் 'எடுத்தேன், கவிழ்த்தேன்' என்று ஏசிடும் போக்கைக் காட்டி வருகிறார். அவரிடம் ஏசல் கேளாதவர்கள் அவர் அடி பணிந்து இட்ட கட்டளையை நிறைவேற்றும் மந்திரிகள் மட்டும் தாம். மற்ற எவரும், அவர்கள் எத்துணைப் பெரிய அறிவாளர்கள்- அனுபவமிக்கவர்கள் ஆக இருப்பினும் துச்சமென்று எண்ணித் தூற்றித் திரிகின்றார். இம்முறை, இதுவரை நாம் நடத்தியிராத அளவில், ஆனால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு குலையாத முறையில் பண்டித நேருவுக்குக் கறுப்புக் கொடி காட்ட வேண்டும்" என்று பொதுக் குழுத் நீர்மானத்தையொட்டி அறிஞர் அண்ணா தமது வேண்டுகோளில் குறிப்பிட்டார்.

"கறுப்புக் கொடி காட்டுவது என்பது பண்டித நேருவின் போக்கில் நாம் கொண்டிருக்கும் அருவருப்பை, வெறுப்பை. எதிர்ப்பை அவருக்கும் உலகுக்கும் காண்பித்துக் கொள்ளும் ஜனநாயக வழிப்படி அமைந்த அமைதியானதொரு முறையாகும். எனவே யாதொரு விதமான வன்செயலுக்கும் இடமளிக்காத வகையில், கட்டுப்பாடு குலையாமல் கடமை தவறாமல் கறுப்புக் கொடி காட்டவும், கறுப்பு கொடி ஊர்வலம் நடத்தவும் முயலுமாறு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன்" என்று பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.

இந்த இரண்டையும் எழுத்துக்கு எழுத்து அப்படியே நான் குறிப்பிடுவதற்குக் காரணம் தமிழர்தம் வழி மரபான போராட்டத்தில் ஒரு புதுமையான திருப்பத்தைக் கழகம் முதன் முதலாக உருவாக்குவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சியில் உள்ள சிறப்பினை எடுத்துக் காட்டவேயாகும். இந்தியத் துணைக்கண்டத்தின் மிக உச்சாணிக் கொம்பில் இருந்தவர் பண்டித நேரு. 'அவர் விரலசைத்தால், இமயமலை கூட இடம் பெயரும்' என்று வர்ணிக்கப்பட்ட பிரதமர் அவர்.

அதே போல் தமிழர்கள் தங்களால் தாங்கிக் கொள்ள முடியாத அவமான உணர்ச்சி காரணமாக அவரை எதிர்ப்பதில் எத்தகைய நாகரிகம், ஜனநாயகப் பண்பாடு காணப்பட வேண்டும் என்பதில் கழகம் நிரம்பவும் கவலை எடுத்துக் கொண்டது. ஆயிரம் கொடுமைகளை அமைதியாகச் சகித்துக் கொண்டாலும் அவமானப்படுத்தப்பட்டதை 'ஆயுதந்தாங்கித்தான் தீர்த்துக் கொள்வது' என்ற பண்பாட்டில் ஊறிப் போன இந்தச் சமுதாயத்தை, அவமதிக்கப்பட்டதற்கும் அமைதி முறையிலேயே தீர்த்துக் கொள்ள முடியும் என்பதை உலகிற்குக் காட்டுவதற்குக் கழகம் பெரு முயற்சி எடுத்துக் கொண்டது.

ஆனால், அவமதிக்கப்பட்ட சமுதாயம் தான் அமைதி காத்தது. அவமதித்தவரின் 'ஏஜண்டு'களான காங்கிரஸ் அமைச்சர்கள் நாட்டில் ரத்தக்களறியை உருவாக்கினர். இந்தக் கறுப்புக் கொடிப் போராட்டம் என் நெஞ்சில் என்றும் நீங்காத நினைவாக இருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. அதுவரை கழகம் அநேகவிதமான எதிர் நடவடிக்கைகளில்-கறுப்புக் கொடிப் போராட்டங்களில்-ஈடுபட்டிருக்கிறது. ஆனால், இது தனது கட்சி நலனை முன்னிட்டோ, அல்லது கட்சிக் குறிக்கோளையொட்டியோ நடத்தப்படவில்லை.

பாண்டியனை இகழ்ந்த கனக விசயர்களைச் சேரன் செங்குட்டுவன் சென்று அடக்கியதைப் போல் தமிழகத்தின் பல்வேறு தலைவர்களை இகழ்ந்த பண்டித நேரு அவர்களுக்குக் கழகம் 'படிப்பினை' போதிக்க முனைந்த சம்பவம் அது. இதே போல் கறுப்புக் கொடிப் போராட்டத்தைச் சட்ட மன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களே முன்னின்று நடத்துவர் என்று வகுக்கப்பட்டதற்குக் காரணம், போராட்டத்தில் உள்ளத்தின் உணர்வும், தமிழர்கள் நெடுநாள் பழகிப் போன மானத்தின் உணர்வும் சாதாரணமானவை அல்ல என்பது நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.

முதுகில் வேல் பாய்ந்து தன் மகன் இறந்தான் என்று கேள்விப் பட்ட தமிழ்க் கிழவி "இவனுக்கா என் வீரப் பாலைப் புகட்டினேன்?" என்று சினம் பொங்கக் கேட்டு, மான உணர்வு விம்மிப் புடைக்க, தன் ஒட்டிப் போன மார்பகத்தை அறுத்தெறிய ஆயத்தமான கதையை வழிவழியாகக் கேட்டு வரும் சமுதாயத்தின் அதே மானாபிமான சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு-அதுவும் நாட்டிலேயே ஒப்பாரும் மிக்காரும் இன்றி உலா வரும் நேருவுக்கு எதிர்ப்புக் காட்டுவதில், மக்களுடைய மன உணர்ச்சி மாறுபட்டு விடக்கூடாது என்பதில், அறிஞர் அண்ணா பெருங்கவனம் செலுத்தினார்.

தங்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிக்கப்பட்டதைத் தங்களுக்கு நேர்ந்த அவமானமாக அமெரிக்கர்கள் நினைத்துக் கிளர்ந்தெழுந்து 'பாஸ்டன் டீ பார்ட்டி' நடத்திய செயலுக்கு ஒப்பாகவே 1957 ஜனவரி 6-ல் கழகம் நடத்திய கறுப்புக் கொடிப் போராட்டத்தை நான் இப்யோதும் கருதுகிறேன். ஜனவரி 6-ல் கறுப்புக் கொடி காட்டித் தனது எதிர்ப்பை நேருவுக்குத் தெரிவிக்கத் தமிழகம் தயாராகி வருவதை நாங்கள் கண்டோம். வெளியூர்களிலிருந்து படை படையாகச் சென்னை நகருக்கு நாள்தோறும் தோழர்கள் வந்தவண்ணமிருந்தனர்.

அன்று காலையிலிருந்து மாலை வரை நேரு சென்னையில் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிகளும் வழக்கத்துக்கு மாறாக அதிகமாகவே இருந்தன. அதே போல் போராட்டத்தைச் சாக்காக வைத்துத் தமிழகத் தோழர்களை ஒடுக்கி விடலாம்; அடக்கலாம் என்ற போக்கில் காங்கிரஸ் ஆட்சி ஆயத்தமாகி வருவதும், அது காண்பித்த பல்வேறு கெடுபிடிகள் மூலம் தெரிந்தன. இவற்றைக் கவனித்த நானும், மற்றத் தலைவர்களும் போராட்டத்திற்கு இரண்டொரு நாள் முன்னதாகப் பொதுக் கூட்டத்தில் போராட்ட முறைகளையும், போராட்டத்தில் கழகத் தோழர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அமைதி, கண்ணிய முறைகளையும் தெளிவாக வரையறுத்து அறிஞர் அண்ணா அவர்கள் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும் என்றும் அண்ணா அவர்களைக் கேட்டுக் கொண்டோம்.

தோழர்களும் இதனையே விரும்பினர். இதற்கேற்ப ஜனவரி 3-ஆம் நாள் கடற்கரையில் கூட்டம் நடத்துவதென்றும், அதில் அறிஞர் அண்ணா அவர்கள் மட்டுமே 'நேருவுக்குக் கறுப்புக் கொடி' என்கிற தலைப்பில் பேசுவதென்றும் முடிவு செய்யப் பட்டது. இந்தக் கூட்டம் நடைபெற்றிருந்தால், ஜனவரி 6-ல் நடை பெற்ற பல்வேறு அசம்பாவிதங்

கள் தடுக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்தக் கூட்டம் நடத்தப் போலீசாரால் தடை விதிக்கப்பட்டு விட்டது. அன்று கூட்டம் நடைபெற்றிருந்தால் எங்களுக்கு அறப் போர் முறைகள் குறித்து அறிஞர் அண்ணா அவர்களிடமிருந்து மேலும் அருமையான கருத்துக்கள் கிடைத்திருக்கும். 3-ஆம் தேதி கூட்ட அனுமதி மறுக்கப்பட்டதால், கழகத் தோழர்களின் ஆத்திர உணர்வு அதிகப்பட்டது. மானாபிமானப் பிரச்சினையுடன் கூடவே, பேச்சுரிமைப் பிரச்சினையும் தோழர்களின் உள்ளங்களில் தீப்பிழம்பாகச் கனன்றது.

"கறுப்புக் கொடி நிகழ்ச்சி மிக அமைதியான, கண்ணியமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதை நான் இந்த நேரத்தில் மக்களிடம் எடுத்துக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். இதைத் தடுப்பதைச் சகிக்க முடியாத சர்வாதிகாரப் போக்கு என்று நான் கருதுகிறேன். எனவே போலீஸ் அனுமதி கிடைக்காவிட்டாலும், ஜனவரி 3 மாலை 5-30 மணிக்குத் திருவல்லிக்கேணி கடற்கரையில் பொதுக் கூட்டத்தில் பேசுவது என்று நான் முடிவு செய்து விட்டேன்.

பொதுக் குழுவினரின் ஒப்பமும் பெற்று விட்டேன். என்ன நேரிடுவதாக இருப்பினும் அன்றையக் கூட்டம் மிக மிக அமைதியான முறையில், துளியும் பலாத்காரம், அருவருக்கத் தக்க செயல் இன்றி நடைபெற வேண்டும். எந்தவித அடக்கு முறை நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் தமிழகத் தோழர்கள் மனம் பதறாமலும், கொதிப்படையாமலும், அமைதியும் ஒழுங்கும் பாதிக்கப்படாமலும் நடந்து கொள்ள வேண்டும். பண்டித நேரு பண்பிழந்து பேசுகிறார் என்று கண்டனம் காட்டும் நாம், பண்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

அப்போதுதான் தமிழகத்தின் தனிச் சிறப்புத் திகழும்" என்று அறிக்கை விடுத்து வேண்டிக் கொண்டார் அண்ணா.