நெஞ்சுக்கு நீதி
இங்குமா வகுப்புக் கலவரம்? · 107 / 391
இங்குமா வகுப்புக் கலவரம்? இல் அந்தப் பகுதி சேர்த்த இழுக்கும் நெடுங்காலத்திற்கு மறக்கக் கூடியதல்ல. மனிதன் தன்னுடைய ஆழமான துனா துயரங்களை மோசமான சில்லறை இன்பங்களால் மறைக்க முயலுவதைப் போல, அந்தப் பகுதியில் இரு பெரும் சமுதாயங்கள் தங்களுக்கிடையே ஆழப் பதிந்து போயிருந்த வெறுப்பைக் கொலை, கொள்ளைகளால் காட்டிக்கொள்ள அப்போது பகிரங்கமாக முனைந்து விட்டன. இளநீர் சீவப்படுவது போல் மனிதத் தலைகள் சீவிச் சாய்க்கப் பட்டன.
சிறுவர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்வதைப்போல் மனிதர்களோடு வீடுகளைக் கொளுத்தி, அந்தத் தீயில் கோழிக் குஞ்சுகளை வதக்கிக் கொஞ்சமும் இரக்கமில்லாமல் விருந்து சாப்பிட்டனர். கன்னிப் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். தாய்மார்கள் மானபங்கப்படுத்தப் பட்டனர். தாயின் கண்களுக்கு முன்னாலேயே குழந்தைகள் நார்போல் கிழிக்கப்பட்டும், கை கால்கள் துண்டிக்கப்பட்டும் சாகடிக்கப்பட்டனர். கணவனின் கண்ணெதிரிலேயே மனைவிகள் ஆடைகள் களையப்பட்டு நிர்வாணக் கோலத்தில் சித்திரவதை செய்யப்பட்டது.
தைமூர், தாமர்லேன், செங்கிஸ்கான் போன்ற கொள்ளைக் கூட்டத்தார் செய்ததாக நாம் படித்த அத்தனை அநியாயங்களும், மிருகச் செயல்களும், இந்த நாளில் - அதுவும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த காமராசர் முதலமைச்சராகக் கொலு வீற்றிருந்தபோது நடைபெற்றன. சாதியின் பேரால், தேர்தலின் காரணமாக நடைபெற்ற கோரங்களைக் காங்கிரஸ் ஆட்சி இருபது நாட்களாக கட்சி லாபத்தையே கருதி, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. கலவரத்தையும், அதில் காணப்பட்ட மிருகத்தனங்களையும் அடக்குவதற்குப் பதிலாக, ஒருதலைப் பட்சமாகவே அன்றையக் காங்கிரஸ் ஆட்சி போலீஸ் படையைப் பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்டது.
தங்கள் கட்சி வெறியைக் காட்டிக் கொள்வதற்கு இரு சமூகங்களின் இடையே 'குருட்சேத்திரப் போரை' உருவாக்கி, இறுதியில் சிலரைப் பழிவாங்கிக்கொண்டது காங்கிரஸ் ஆட்சி. கலவரத்தில் ஈடுபட்ட ஒரு பிரிவினரைச் சார்ந்தவர்கள் ஐந்து பேர்களைக் கைகளைக் கட்டி நிற்க வைத்து சுட்டுச் சாகடித்தனர். காங்கிரசாட்சியினர் இப்படிப் பல சம்பவங்களை நடத்தியதாகச் சொல்லப்பட்டாலும், இந்த ஒரு சம்பவம் அம்பலத்திற்கு வந்தது. அதனை மறைப்பதற்குக் காமராசரும் அப்போதிருந்த காங்கிரஸ் அமைச்சர்களும் கோழைத்தனமான சமாதானம் சொல்லத் தலைப்பட்டார்கள்.
உத்திரப் பிரதேசத்திலும், வங்காளத்திலும், பஞ்சாபிலும் பிரிவினையின்போது நடைபெற்ற கொடூரங்கள் நமது மாநிலத்திலேயே நடக்கத் தலைப்பட்டு விட்டதையும், அதைக் காமராசர் ஆட்சி வெகுவாக ரசித்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததையும் நினைத்து நாங்கள் குமுறினோம். பரமக்குடி, முதுகளத்தூர், சிவகங்கை, அருப்புக்கோட்டை ஆகிய நான்கு வட்டங்கள் (கிழக்கு ராமநாதபுரம்) முழுவதும் இந்த அவலம்- மிருகத்தனம்- தொடர்ந்து ஒரு மாதத்திற்குமேல் தாண்டவமாடிற்று.
அரசாங்கம் இருக்கிறதா என்பதே அந்தப் பகுதி மக்களுக்கு ஐயத்தைக் கிளறும் அளவுக்குக் காங்கிரஸ் ஆட்சி தூங்கி வழிந்தது. கலவரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வீடுகளும், தேவர் சாதியினர் வீடுகளும் சாம்பலாக்கப்பட்டன. தமிழகம் கொடூரமான சாதிச் சண்டையைக் கண்டது. 1957-ல் முதுகளத்தூர் பகுதியில் அப்போது கழகம் வளரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கழகக் கிளைகளோ கழக உறுப்பினர்களோ இல்லாத அந்தப் பகுதிதான் சாதிச் சண்டையின் களமாக அமைந்திருக்கிறது என்பதைக் கவனித்த எங்களுக்கு, தமிழகத்தின் மூலை முடுக்குகளிலும் கழகக் கிளை அமைய வேண்டிய அவசியம் தெளிவாகப் புரிந்தது.
இது சம்பந்தமாக அந்தப் பகுதியில் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொண்டும், கிளைகளை அமைக்கத் தோது பார்க்குமாறும் அறிஞர் அண்ணா அவர்கள் என்னைப் பணித்தார்கள். கலவரம் ஒருவாறு தணிந்த 10, 15 நாட்களில் நான் சிவகங்கை, பரமக்குடி முதலிய ஊர்களில் சென்று தங்கி நிலைமைகளைக் கண்டறிந்தேன். தோழர் செ. மாதவன், தென்னரசு, பாண்டியன், சவுந்தர பாண்டியன் ஆகியோரிடம் பேசினேன்.கழகவளர்ச்சிக்கான ஆலோசனைகளைத் தெரிவித்ததுடன், அறிஞர் அண்ணா அவர்களிடமும், இதைப் பற்றி விளக்கினேன்.
இந்த ஆலோசனை விளக்க அடிப்படையில்தான், தோழர் தென்னரசு மாவட்டச் செயலாளராக ஆகவேண்டும் என்று விரும்பப்பட்டது. 1957 கலவரத்திற்குப் பிறகு, அங்கு மீண்டும் சாதிச்சண்டை தலையெடுக்காது போனதற்கான பல்வேறு காரணங்களில் கழகக் கிளைகளைத் துவக்கி, கழகப் பிரச்சாரத்தை அதிகப்படுத்தியதும் முக்கியமான காரணமாகும். கழகப் பிரச்சாரம் ஆழமாகவும், அதிகமாகவும் நடைபெறும் பகுதிகளில் சாதிப் பாகுபாடும், அரசியல் குரோதங்களும் அவ்வளவாகத் தலைதூக்க முடியாது என்பதற்கு இதை விட வேறு சான்று எங்களுக்குத் தேவைப்படவில்லை.
முதுகளத்தூர் கலவரம் குறித்து அக்டோபர் இறுதியில் கூட்டப்பட்ட சட்டமன்றத்தில் நாங்கள் அலசி ஆராய்ந்து கேள்விக்கணைகளைத் தொடுத்தோம். நாட்டில் இன்னமும் வேரூன்றி நிற்கும் சாதிப் பாகுபாடுகளைக் காங்கிரஸ் ஆட்சி எவ்வாறு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறது என்பதும், மனித உயிர்கள் காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு எவ்வளவு அற்பமாகத் தெரிகின்றன என்பதும் சட்டமன்றத்தில் நாங்கள் எடுத்த நடவடிச்கைகள் மூலம் நன்கு வெளிப்பட்டன.
விவாத முடிவில் எதிர்க் கட்சிகளால் கொடுக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் பேரில் அண்ணா பேசினார். அதனைத் தொடர்ந்து கழக உறுப்பினர்கள், அனைவரும் வெளிநடப்புச் செய்தோம். இதன் பேரில், கழக உறுப்பினர்களும், அறிஞர் அண்ணா அவர்களும் சட்டமன்றத்தில் பேசிய பேச்சுக்கள் சாதிப் பிரச்சினை ஒழிவதற்குச் சரியான பார்த்தாலும் இலக்கணம் வகுப்பதாக இருந்தன. அவைகளை இப்போது படித்துப் புத்துணர்ச்சி தருவதாக இருக்கும்.
நாங்கள் என்ன பேசினோம் என்பதைக் காட்டிலும், நாங்கள் பேசியதற்கு அப்போதைய போலீஸ் அமைச்சராக இருந்த பக்தவத்சலம் அவர்கள் அளித்த விளக்கமும் பதிலும் சுவையானவை. தி.மு. கழக ஆட்சியில் எந்த ஓர் அசம்பாவிதம் நடந்தாலும் 'சட்டம் போச்சு, அமைதி போச்சு' என்று வெறும் கூச்சல் போடுகிறார்களே, காங்கிரசார் காங்கிரஸ் கட்சியின் அமைச்சராகப் பன்னெடுங்காலம் பதவி வகித்த பக்தவத்சலம் அவர்கள் 25-10-57-ல் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை இது.
"1957 ஜூலை 4-ந் தேதி முடிவுற்ற உபதேர்தலின் காரணமாக அந்தப் பிரதேசத்தில் பகை எழுந்தது. தேவர் மக்கள், அரிசன மக்களில் ஒரு பகுதியினர், காங்கிரஸ் கட்சியை ஆதரித்துத் தேவர் மக்களைத் தோற்கடித்துவிட்டனர் என்ற எண்ணத்தில் பகை ஏற்பட்டது. இதன் காரணமாகத் தேவர்களில் பலர் அரிசன மக்களைத் தாக்கினர். இதிலிருந்து செப்டம்பர் மாதம் 10-ந் தேதிவரை அப்பகுதியில் கொள்ளையடித்தல், சட்டவிரோதமான முறையில் அடைத்து வைத்தல், களவு, சொத்துக்களைக் கவர்ந்துகொள்ளுதல் போன்ற பல வழக்குகள் நடந்துகொண்டிருந்தன.
"செப்டம்பர் 10-ந் தேதியன்று மாவட்டக் கலெக்டர் அப்பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருந்த சம்பவங்களினால் ஏற்பட்ட நிலைமைகளைச் சரிப்படுத்துவதற்காக நடத்திய 'சமாதான மாநாட்டில்தான்' சட்டத்திற்கு முரண்பட்ட நிலைமை (அமளி) ஏற்பட்டது. இதற்கு அடுத்த நாள் இம்மானுவேல் என்பவர் பரமக்குடியில் கொலை செய்யப்பட்டார். செப்டம்பர் 13-ந் தேதி பகல் 11 மணிக்கு ஒரு கூட்டம் வேல், கம்பு, அரிவாள் இவைகளுடன் அருங்குளத்திலுள்ள அரிசனங்களைத் தாக்கியது.
ஐந்து பேர்களைக் கொலை செய்தது. இந்த ஐந்து பேரில் ஒருவர் பெண். மேலும் 24 அரிசன வீடுகளுக்குத் தீ வைத்தது. நான்கு பிணங்களை அந்தத் தீயில் விட்டெறிந்தது. "இந்தச் சம்பவங்களினால் அரிசன மக்கள் திரண்டெழுந்து தேவர்களைத் தாக்கினார்கள். மூன்று பேர்களைக் கொலை செய்தார்கள். அவர்களில் இரண்டு பேர் பெண்கள். அவர்களுடைய வீட்டுக்குத் தீ வைத்தார்கள். பிணங்களை அந்தத் தீயில் விட்டெறிந்தார்கள் செப்டம்பர் 14-ந் தேதி காலையில் ஒரக்குடி கிராமத்தில் தேவர்களுக்கும் அரிசன மக்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
அதில் நான்கு பேர்கள் (அரிசனங்கள்) காயமுற்றனர். அதே நாளில் கீழத்தூவல் என்ற கிராமத்துக்கு இம்மானுவேல் கொலை வழக்கு சம்பந்தமாகக் குற்றவாளிகளைத் தேடுவதற்குப் போலீஸ் பார்ட்டி சென்றபோது, நூற்றுக்கணக்கானோர் அடங்கிய ஒரு கூட்டம் போலீசைத் தாக்கியது. "போலீஸ் பார்ட்டி தப்பித்துக் கொள்வதற்காகச் சுட்டார்கள். அதில் ஐந்து மறவர்கள் கொல்லப்பட்டனர். அரிசனங்களும், இரண்டு தேவர்களும் காயமடைந்தனர். அதே நாளில் தேவர்கள் கூட்டம் ஒன்று இருளாண்டிப்பட்டி, சேந்தக்கோட்டை முதலிய கிராமங்களில் உள்ள சுமார் அறுபது வீடுகளைக் கொளுத்தினர்.
இதில் மூன்று அரிசனங்கள் கொல்லப்பட்டனர். ஓர் அரிசனப் பெண் அபாயகரமான காயம் அடைந்தார். "செப்டம்பர் 18-ந் தேதி மாலை நாலுமணிக்குப் பெரும் கூட்டம் மூன்று அரிசனங்கள் வீடுகளுக்குத் தீயிட்டது. அதே நாளில் ஆங்காங்கே பல இடங்களில் தீ வைத்ததாகத் திருப்பச்சேரி, நல்லூர், திருப்புவனம், வாடி, பிரமனூர் முதலிய கிராமங்களிலிருந்து போலீசுக்குத் தகவல் வந்தது. "உனித்தம்பாடி என்ற கிராமத்தில் கூட்டம் ஒன்று போலீசுடன் மோதியது.
அந்தக் கூட்டம் ஆயுதங்களால் போலீசைத் தாக்கத் துவங்கியதால், போலீஸ் சுட்டது. அதில் நான்கு பேர் கொல்லப் பட்டனர். அதே நாளில் வீராம்பாள் என்னும் இடத்தில் ஒரு கொடுமையான சம்பவம் நடந்தது. இளைஞ்சாம்பூர் என்ற கிராமத்திலிருந்தும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும் இருநூறுபேர் அரிவாள் கத்திகளுடன் வீராம்பாள் என்ற இடத்தில் உள்ள அரிசன மக்களைத் தாக்கினர். இதைக் கண்டு பயந்துபோன அரிசன மக்கள் அங்குள்ள சர்ச்சுக்குள் சென்று கதவுகளை அடைத்துக்கொண்டு உள்ளே இருந்தனர்.
ஆனால் கூட்டத்தினர் விடாமல் சன்னல்களை உடைத்து, கதவுகளை எரித்து உள்ளே இருந்த அரிசன மக்களைச் சுட்டனர். இதில் இருவர் இறந்தனர். முப்பத்திரண்டு பேர் காயமுற்றனர். காயமுற்றோரில் பிறகு ஒருவர் மாண்டு போனார். "இரண்டு பிரிவினருக்கும் நேரிடையாக ஏற்பட்ட தாக்குதல்களின் காரணமாகப் பதினெட்டு அரிசன மக்களும், ஐந்து. தேவர்களும் கொல்லப்பட்டனர். "போலீசார் மீது ஏற்பட்ட தாக்குதல் காரணமாகவும், அதன் விளைவாக ஏற்பட்ட போலீசார் துப்பாக்கிச் சூட்டினாலும் பதிமூன்று பேர் கொல்லப்பட்டனர்; அந்தப் பதிமூன்று பேரும் தேவர்கள்."
கட்சிக் கண்ணோட்டத்தோடு கலவரத்தை அணுகிய காங்கிரஸ் அமைச்சர் தந்த அறிக்கை இது. சட்டம்-ஒழுங்கு பற்றியே கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கும் இன்றையக் காங்கிரஸ்வாதிகள் இந்தக் கலவரத்தின்போது எவ்வளவு கேவலமாக நடந்துகொண்டார்கள்? 1968 மார்ச் திங்களில் சென்னை நகர பஸ் தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்பட்ட ஒரு நாள் மோதல் பற்றி வாய் கிழியப் பொய்ப் பறை சாற்றிய காங்கிரஸ்காரர்களுக்கு இதனையே 21-4-68-ல் சென்னையில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் எடுத்துக் கூறிக் கவனப்படுத்தினேன்.
இப்போதும் இது கவனப்படுத்துவதற்குரிய கடந்த கால 'சட்டம்-ஒழுங்கு' வரலாறு என்பதால் குறிப்பிடுகிறேன்.
