உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/இந்திச் சக்கரம் சுழன்றது
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

இந்திச் சக்கரம் சுழன்றது · 106 / 391

இந்திச் சக்கரம் சுழன்றது எங்களுக்குக் கலைவாணரின் மறைவால் நேர்ந்த பேரிழப்பின் காரணமாகக் குமுறிக் கொண்டிருந்த போதும், கலங்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு ஏறக்குறைய இருபதாண்டு காலத்திற்கு முன்னால் 1938-39-ல் இந்த நாட்டு மக்களின் பேரெதிர்ப்பின் காரணமாக அலறிப் புடைத்துக் கொண்டு ஓடிய இந்தி மொழி மீண்டும் முறுக்கோடு-வெகு மிடுக்கோடு தமிழகத்தில் நுழையப் பார்த்ததைத் தடுத்து நிறுத்தும் பணியைக் கவனிக்கத் தொடங்கினோம். 1950-ல் நிறைவேற்றப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தில் 15 ஆண்டுகளுக்குள் அதாவது 1965-ஆம் ஆண்டுக்குள் ஆங்கிலம் இருந்த அத்தனை இடத்திலும் இந்தி மொழியே இருக்கும் என்கிற வகையில் ஏமாற்றுத்தனமாக-ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் சட்டம் இயற்றப்பட்டு விட்டதும், அதுபற்றி அவ்வப்போது இந்தி பேசாத மாநில மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததும் அனைவருக்கும் தெரிந்தவை தான்.

1965-க்குள் நாட்டில் அரசாங்கத் துறைகள், கல்விக் கூடங்கள் அனைத்திலும் முழுவதுமாகத் திணிக்கப்பட்டு விட வேண்டிய இந்தி மொழியின் 'விஸ்தரிப்பு' இலட்சணம் எப்படி இருக்கிறது? எந்தெந்த முறையில் இந்தித் திணிப்பை வேகமாக்கலாம்? எந்தெந்தத் துறையில் மின் வேகத்தில் அதனைப் புகுத்தலாம் என்றெல்லாம் ஆராய்ந்து அறிக்கை தருவதற்கு மத்திய அரசாங்கத்தாரால் நியமிக்கப்பட்ட 'கேர் குழு' தனது திட்டத்தைத் தாக்கல் செய்தது.

இந்த அறிக்கை பற்றியும் அதில் குறிப்பிட்டிருந்த திட்டங்கள் பற்றியும் கழகம் தனது கண்டனத்தைப் பலமாகத் தெரிவித்தது. ஆனாலும் மத்திய ஆட்சியிலுள்ள இந்தி வெறியர்கள் தங்கள் திட்டத்தை வெகுவேகமாக நிறைவேற்றத் தலைப்பட்டதைக் கண்டதும் அதனை நாடு முழுவதும் எடுத்துரைத்து மக்களின் ஆதரவினைத் திரட்டி எதிர்த்தொழிப்பதற்குக் கழகம் ஆயத்தமானது. "சரித்திரம் சக்கரம் போன்றது. அது திரும்பும்-சுழலும்" என்பது ஹெகல் தத்துவத்தின் முக்கியப் பகுதி என்கிறார்கள்.

இது எப்படி இருந்தாலும் 1937-ஆம் ஆண்டின் இந்தி எதிர்ப்புச் சரித்திரம் 1957-ஆம் ஆண்டில் தமிழகத்தில் மீண்டும் சுழன்றது. அடுத்தடுத்துப் படையெடுத்து வந்த பாரசீகர்களின் பேரில் ஒவ்வொரு போராட்டத்திலும் கூடுதலான பலத்தோடு மோதிப் பொருதிய கிரேக்க மக்களைப் போல் 1937-ஆம் ஆண்டைக் காட்டிலும் அதிகப்படியான பலத்தோடும் - உறுதியோடும் இந்தியை இந்தத் தமிழகத்தில் நுழைய விடாமல் எதிர்ப்பதற்குக் கழகம் உறுதி எடுத்துக் கொண்டது.

அதன் காரணமாக 1957 செப்டம்பர் 21 - ஆம் நாள் அன்று திருவண்ணாமலையில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. 1776 ஜூலை 4-ஆம் நாளன்று பில்டெல்பியாவில் வெளியிடப்பட்ட அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் இன்றளவும் உலகத்தில் ஜனநாயகவாதிகளுக்கு உற்சாகமூட்டி வருவதைப் போல் - 1917 நவம்பர் 7-ஆம் நாளன்று பெட்ரோகிராட் நகரில் வெளியிடப்பட்ட லெனினின் பிரகடனம், ஒடுக்கப்பட்ட பாட்டாளி மக்களுக்கு இன்றளவும் எழுச்சியைத் தருவதைப்போல்- திருவண்ணாமலையில் 1957 செப்டம்பர் 21-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டின் நடவடிக்கைகளும் முடிவுகளும்தான் இன்றளவும் இந்தியை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் எங்களுக்கெல்லாம் உற்சாகத்தையும் பலத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

முத்தமிழ்ச் சங்கங்களிலும் முழக்கப்படாத அளவுக்குத் தமிழ் மொழியின் சிறப்பும் மாண்பும் அன்று முழங்கப்பட்டன. மூவேந்தர் காலத்திலும் இல்லாத அளவுக்கு அன்று தமிழகத்தின் அரசியல் வழி முறை பேசப்பட்டது. இந்தியை எதிர்ப்பதற்குக் கழகத்திற்குக் கிடைத்த திட்டங்களையும், வழி முறைகளையும், நியாயங்களையும் உருவாக்கித் தந்தது 1957 செப்டம்பரில் நடந்த திருவண்ணாமலை மாநாடுதான் என்றால் மிகையல்ல. மாநாட்டுக்குத் துறவி அருணகிரி அடிகள் தலைமை தாங்கினார்.

காஞ்சித் தோழர் சி. வி. எம். அண்ணாமலை அவர்கள் மாநாட்டைத் திறந்து வைத்தார். தோழர் ப.உ. சண்முகம் அவர்கள் வரவேற்புக் குழு செயலாளராக இருந்தார். அந்த மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் பேசிய பேச்சு, இன்றளவும் இந்தியை எதிர்த்து நிற்பவர்களுக்கு 'பைபிள்!'

என்னைப் பொறுத்தவரை அறிஞர் அண்ணா அன்று பேசுவதற்கு எடுத்துக்கொண்ட நேரத்தைப் போல வேறு எந்த மாநாட்டிலும், நிகழ்ச்சிகளிலும் எடுத்துக்கொண்டதில்லை. கட்டுப்பாட்டோடும் தெளிந்த சிந்தனையோடும் காட்டப்படும் எதிர்ப்பில் வழிந்தோடும் உணர்ச்சி வெள்ளம் எத்தகு 'விளைச்சலை'ப் பெருக்கும் என்பதற்கு இன்றளவும் நான் திருவண்ணாமலை மாநாட்டை நினைத்துப் பார்க்கிறேன். அதில் பேசிய அனைவரும் ஒளிப் பிழம்பாக நின்றார்கள்.

யாரையும் பொசுக்கிப் போடும் வெப்பம் வெளியாக்கப்படவில்லை. எதிரில் உயர்ந்து நின்ற மலையே குலைந்தாலும் மனங்குலையாத அழுத்தம் அங்கு நிலவிற்று. அந்த அழுத்தத்தில் எதனையும் போட்டு மிதிக்காத பண்பாடும் அங்கு காணப்பட்டது. "வீட்டைத்தான் துறந்து சென்றேன், என் தாய்நாட்டை மொழியை, என்னுடைய இனத்தைத் துறந்து சென்றுவிடவில்லை. என்னுடைய இனந்தானே இன்றைக்கு, எனக்குச் சோறு போடுகிறது?"

என்று கேட்டார் மாநாட்டுத் தலைவர் துறவி அருணகிரி அடிகள். "துறவிக்கு வேந்தனும் துரும்பு என்று சொல்வார்கள். ஆனால் அந்தத் துறவிகளும் என் தாய்மொழி - தமிழ் மொழிக்கு அடிமைகள்தாம்", என்று அவர் சொல்லக் கேட்டபோது, துறவிகளின் உண்மை இலக்கணமே அதுதானா அல்லது தமிழ் மொழியின் சிறப்பு அத்தகையதா என்பதை நினைத்துப் பெருமிதம் அடைந்தேன் மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்களும் நாங்களும் பேசிய பேச்சுக்களைத் தமிழகம் நினைவில் வைத்துக் கொண்டிருக்கும் என்றே கருதுகிறேன்.

அந்த மாநாட்டில்தான் அண்ணா அவர்கள் அழுத்தந் திருத்தமாகக் கூறினார்கள். "எங்களுக்கு இந்த உலகத்தில் இரண்டு எஜமானர்கள் தாம் உண்டு. ஒன்று எங்கள் மனச்சாட்சி. மற்றது இந்த நாட்டு மக்கள்." அறிஞர் அண்ணா சுட்டிக் காட்டிய இரண்டும்தாம் இன்றைக்கு எனக்கும் கழகத் தோழர்களுக்கும் எஜமானர் அந்தஸ்தில் அதிகாரம் செய்துகொண்டிருக்கின்றன. இவற்றைத்தவிர, நாங்கள் அஞ்சும் பொருள் வேறு இல்லை. அக்டோபர் 13-ஆம் நாளன்று நாடெங்கும் கண்டனக் குரல் எழுப்பி மக்களின் ஆதரவை இந்திக்கு எதிராகத் திரட்டுவது என்று மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

அன்று இந்த நாட்டில் துவக்கப்பட்ட இந்தி எதிர்ப்புப் போர் எத்தகு வெற்றிகளையும், அதே போல் கழகத்திற்கு எத்தனை துன்ப துயரங்களையும் ஏற்படுத்திற்று என்பதை நாடு அறியும். அன்று தூக்கிப் பிடித்த இந்தி எதிர்ப்புப் போராட்டக் கொடி இன்றளவும் எங்கள் கரத்திலிருந்து விழவில்லை; இந்தியை எதிர்த்து என்றும் போராடியே தீருவோம். அண்மையில் நிலவுக்குச் சென்ற அப்போலோ வீரர்களும் பழங்கால மூட நம்பிக்கைகளுக்கேற்பவே 13 என்பதற்கு மெருகேற்றினார்கள் என்று சொல்லப் படுகிறது.

ஆனால் 13-ஆம் நாளன்று கழகம் துவங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இதுவரை பெற்ற வெற்றிகளையும். இனி பெறப்போகிற இறுதி வெற்றியையும் காணிக்கையாக்கி அந்த மூடநம்பிக்கையைத் தகர்த்துக் காட்டத்தான் போகிறோம்! வடக்குப் பகுதியிலிருந்து ஆதிக்கம் தேடி நாய் போல் அலைந்து வரும் இந்திப் பீடையை எதிர்த்தொழிக்க நாங்கள் ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது, தெற்குப் பகுதியிலிருந்து அழிவைக் கொணரும் பேய்போல் வெறியாட்டம் போட்ட சாதிச் சனியன் எங்களைத் திகைக்க வைத்துவிட்டது.

தமிழகத்தின் தென்பாண்டி மண்டலம் வரலாற்றில் சேர்த்துள்ள புகழும் பீடும் கொஞ்சமல்ல.