உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/அதிகார அரசியலில் அண்ணன்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

அதிகார அரசியலில் அண்ணன் · 105 / 391

அதிகார அரசியலில் அண்ணன் -ஆம் ஆண்டு மே திங்கள் துவக்கத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசுவதில் தனது சட்டமன்றப் பணியைத் துவக்கிய கழகம், இந்த நாட்டுப் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்றளவும் மேலும் மேலும் பொன்னேடுகளைச் சேர்த்து வருகிறது. "திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் கருத்துக்களை எடுத்துக் கூறுவதில் நான் பெருமைப்படுகிறேன்" என்றுதான் அறிஞர் அண்ணா அவர்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பேச்சைச் சட்ட மன்றத்தில் தமது முதல் பேச்சாகத் துவக்கினார்.

அந்தப் பேச்சில்-வால்டேர் வரலாறு எப்படி எழுதப்பட வேண்டுமென்று விரும்பினாரோ, அந்த விருப்பங்கள் அத்தனையும் பிரதிபலித்தன. மக்களின் அன்றாட வாழ்க்கைக் கொடுமைகள் -அவர்களுடைய ஆசாபாசங்கள்-சமுதாயத்தின் நெளிவு சுளிவுகள்- காங்கிரஸ் ஆட்சியாளரைப் பற்றி மக்களின் சிந்தனையோட்டம் ஆகிய அத்தனையும் அண்ணா அவர்கள் பேச்சில் அழகுறப் படம் பிடித்துக் காட்டப்பட்டன. சாதாரண மக்களின் நெடுநாள் கொந்தளிப்பு அவர் பேச்சில் நிழலாடிற்று; நிலப் பிரபுக்களின் கெடுபிடி அவர் பேச்சில் விளக்கமாக விமரிசிக்கப்பட்டது.

அனைத்துக்கும் மேலாகக் காங்கிரஸ் கட்சியினரின் பல்வேறு 'மாய்மால' முகமூடிகள் சுக்கு நூறாக உடைக்கப்பட்டன. அதுவரையில் ஒவ்வொரு நாள் மாலையும் ஓராயிரம் மேடைகள் போட்டு இலட்சோப இலட்சம் மக்களிடம் நாங்கள் பேசி வந்த பேச்சுக்கள்-துவக்கிவைத்த வாதங்கள்-அத்தனையும் புதுப்பிரவாகத்தோடு நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒருசேரச் சென்று அடைவதைக் கண்டு பிரமித்தோம். ஆபிரகாம் லிங்கன், லெனின், மாஜினி போன்ற மா மனிதர்கள் தங்கள் கொள்கைகளுக்கு வலிவு அப்போது தேடி அதிகார அரசியலையே குறி வைத்தது எதற்காக என்பதும் எங்களுக்குத் தெளிவாகப் புரிந்தது.

நாட்டின் நலிவையும், மக்களின் கண்ணீரையும் தினமும் கண்டு கலங்கிப் பழக்கப்பட்டுப் போயிருந்த நாங்கள் அவைகளை ஒழிப்பதற்கு உரிய இடத்தைக் கண்டு பிடித்த திருப்தியில், அறிஞர் அண்ணா அவர்களின் அன்றையப் பேச்சை மிக ஆவலோடு கேட்டோம். ஆயிரம் முறை அறிஞர் அண்ணா அவர்கள் பேசுவதைக் கேட்டிருக்கும் எனக்கு, அன்றையப் பேச்சு புது வேகத்தையும், உற்சாகத்தையும் கொடுத்தது. ஏனென்றால், அவர் அன்று பேசிய பேச்சு அப்படிப்பட்டது; அவர் பேசிய இடம் அப்படிப்பட்டது.

"செஞ்சிக் கோட்டைமீது ஏறியவர்கள் எல்லாம் தேசிங்கு ராஜாக்களா?" என்று முதன் முதலாகக் காங்கிரஸ் அமைச்சர்களின் முகத்துக்கு நேராகக் கேட்டார். அவர் தொடர்ந்தார்: "அதேபோலக் காங்கிரசில் இருப்பவர்கள் எல்லாரும் பெரும் தியாகிகள் அல்ல. இதனை மறந்து எங்களை, 'இவர்களெல்லாம் ஏகாதிபத்திய தாசர்கள்' என்று பேசுவதனால், எங்களுடைய முகம் அல்ல-அந்தப் பக்கத்தில் (காங்கிரஸ் பக்கம்) உட்கார்ந்திருக்கிற பலருடைய முகம் சுருங்குவதை நான் காண்கிறேன்."

இவ்வாறு கூறியதும் நான் சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பக்கம் பார்த்தேன். அறிஞர் அண்ணா அவர்கள் பேச்சுக்களை அருகிலிருந்து அவர்கள் கேட்பதும், அந்தப் பேரறிஞருடைய 'தாக்குதல்'களை நேருக்கு நேராக அனுபவிப்பதும் எனக்குப் புது அனுபவமாகத் தோன்றியது. காமராசர் அவர்கள் சிலைபோல் இருந்தார். சுப்பிரமணியம் அவர்கள் லேசாகச் சிரித்துக்கொண்டார். பக்தவத்சலம் அவர்கள் முகத்தில் கோபம் பொங்கிற்று. மற்ற அமைச்சர்களின் முகங்களைப் பார்க்க எனக்குத் தோன்றவில்லை.

"காங்கிரஸ்காரர்கள் தங்களின் பழம் பெருமைகளைப் பேசிப்பயனில்லை. ஜமீந்தார்கள், சிற்றரசுகள் காலம் வேகமாக ஓடி மறைந்துகொண்டிருக்கும் இந்த நாளில், அரசியலிலும் ஜமீந்தாரி முறையைக் கையாள விரும்பினால் சீக்கிரமே அதற்கு முடிவு கட்டப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். அண்ணா தொடர்ந்து பேசிக்கொண்டே போனார். அன்று. அவர் எச்சரிக்கையைக் காங்கிரசார் எடுத்துக்கொள்ளவில்லை. தங்கள் வழியே தொடர்ந்து நடந்தார்கள்.

அறிஞர் அண்ணா அவர்களும் அன்று விடுத்த எச்சரிக்கையைத் திரும்பப் பெறவே இல்லை. அதனைச் செயல்படுத்தியே கண் மூடினார். அறிஞர் அண்ணா அவர்கள் பேசியதை அடுத்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறுவதற்குத் தயாரானது. இந்தத் தீர்மானத்திற்குப் பலரும் பல திருத்தங்களைக் கொடுத்தனர். "இந்த மாநிலத்திற்குத் 'தமிழ்நாடு' என்று பெயரிடாததற்கு வருந்துகிறோம்" என்ற திருத்தத்தை அறிஞர் அண்ணா அவர்கள் கழகத்தின் சார்பாகக் கொடுத்திருந்தார்கள்.

மற்ற திருத்தங்கள் அவரவர்களால் இறுதியில் திரும்பப் பெறப்பட்டன என்றாலும், இந்தத் திருத்தம் மட்டும் அறிஞர் அண்ணா அவர்களால் வற்புறுத்தப்பட்டது கழகம் முதன் முதலாகச் சட்டமன்றத்தில் நுழைந்து பணியாற்றத் தலைப்பட்டதும், முதல் தீர்மானமாகக் கொடுத்தது, நம் தாயகம் தனது இயற்பெயரால் அனைவராலும் அழைக்கப்பட வேண்டும் என்பதுதான். 'சென்னை மாநிலம்' என்பது 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றப்பட வேண்டும் என்று 7-5-57 அன்று சட்டமன்றத்தில் வாக்கெடுப்புக்கு உள்ளான தீர்மானத்திற்கு ஆதரவாக 42 வாக்குகளும், எதிர்ப்பாக 127 வாக்குகளும் கிடைத்தன.

தீர்மானம் தோல்வியுற்றது. 'தமிழ்நாடு' என்று நம் தாயகத்திற்குப் பெயர் சூட்டவேண்டும் என்றுகூட அல்ல; அதுபற்றிக் கவர்னர் உரையில் குறிப்பிடாததற்கு வருத்தம் தெரிவித்தால் போதும் என்று கொண்ட வரப்பட்ட தீர்மானத்திற்குக் கூடக் காங்கிரஸ் கட்சியினர், தமக்கிருந்த பலத்தின் எண்ணிக்கையில் இறுமாந்து, துரோகத்தனமாக நடந்து கொண்டனர்.

அறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்ற நுழைவைத் தொடர்ந்து முதன் முதலில் கொடுத்த தீர்மானம் எதுவோ, அதுவே, பேரறிஞர் அண்ணாவின் கைக்கு அரசியல் அதிகாரம் மாறி நிறைவேற்றப்பட்டுச் செயலாக்கப்பட்ட நாளில் கலந்து கொண்டதுதான் அவருடைய இறுதி அரசியல் நிகழ்ச்சி என்பதை நினைக்கிறேன். கண்களில் நீர் தளும்புகிறது. 20-12-68 அன்று சிறுவர் அரங்கத்தில் ('இன்றைய கலைவாணர் அரங்கத்தில்) 'தமிழ்நாடு' பெயர்சூட்டு விழாவில் அவர் ஆற்றிய உரையையும், 1957 மே 7-ல் அண்ணா தீர்மானம் தோல்வியுற்றதையும் இணைத்துப்பார்த்தால் 'வால்டேரின் வரலாறு' குறித்த விளக்கத்தை அறிஞர் அண்ணா அவர்கள் எவ்வளவு துல்லியமாகப் பிரதிபலிக்கிறார் என்பது தெரிகிறது.

அதிகார அரசியலில் அடி எடுத்து வைத்து, அரசியல் அதிகாரத்தை மேற்கொண்ட 10 ஆண்டு காலத்தில் கழகமும் அதற்குத் தலைமை தாங்கிய அறிஞர் அண்ணா அவர்களும் 'எழுதி'யிருக்கும் சரித்திரம் வால்டேர் போன்ற மாமனிதர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகவே இருக்கிறது. இந்த நாட்டைப் பற்றிய வரலாறுகள் எவையும் 1957-67-க்குள் அடங்கிய பத்தாண்டு கால மாறுதல்களையும், அந்தப் பெரும் மாறுதல்களுக்கு அத்தாட்சியாக இருந்த அண்ணா அவர்களையும் கழகத்தையும் விடுத்து எழுதப்படவே முடியாது தமிழ்நாடு உள்ள வரையில் தமிழர்கள் வாழ்வார்கள்.

'தமிழ்நாடு' என்ற பெயர் பொலிவுற்றுத் திகழும் வரையில் அறிஞர் அண்ணா பெயரும்; கழகமும் நினைவு கூரப்படும். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது பேசிய அறிஞர் அண்ணா அவர்கள் மத்திய-மாநில உறவுகள் பற்றியும் தெளிவாகக் குறிப்பிட்டார். "தொழில் துறை முன்னேற்றத்தில் தமிழ்நாடு மாற்றந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுகிறது. இதனைப் பொறுத்து நாங்கள் கூறுவது பற்றிக்கூட ஆட்சியாளர் கவலைப்பட வேண்டாம்.

ஆனால் இப்படி ஒரு கூட்டம் இருப்பதாகச் சொல்லி மத்திய சர்க்காரிடம் தமிழ்நாட்டுக்கு நியாயம் கிடைப்பதற்காகப் போராடலாமே?" என்று குறிப்பிட்டு, காங்கிரஸ் அமைச்சராக இருந்த ரோச் விக்டோரியா அவர்கள் 1957 தேர்தல் காலத்தில் வெளியிட்டிருந்த துண்டு அறிக்கை பற்றியும் விரிவாகக் குறிப்பிட்டார். சட்ட மன்றத்தில் ஏற்பட்ட புதிய அனுபவம் எங்களுக்குப் பல விவரங்களைத் தெளிவாகத் தெரிவித்தது. அதுவரையில், கழகம் மக்களைத் திருத்துவதற்கும், உலகத்தோடு சரிசமமாக இந்தச் சமுதாயம் முன்னேற வேண்டும் என்பதற்கும் பாடுபட்டு வந்தது.

மக்களின் கருத்தில் மகத்தான புரட்சியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நாங்கள் எங்கள் கருத்துக்கும் செயல் திட்டங்களுக்கும் மக்களைத் திருப்ப வேண்டும் என்பதில் முழுக் கவனம் செலுத்தத் தொடங்கினோம். சில சந்தர்ப்பங்களில் பெர்னார்ட் ஷா பாணியில் கடிந்து கொண்டு மக்களைத் திருத்த வேண்டும் என்ற போக்கில் நாங்கள போய்க் கொண்- டிருந்தது போய், லிங்கன்பாணியில் அவர்களை வழி நடத்திச் செல்ல, அதுவரையில் நான் கூட நெருப்புக் குழம்பாக, புரட்சித்தனம் படைத்த வாலிபனாக இருந்தேன்.

மக்கள் திருத்தப்பட வேண்டும் என்று நினைத்திருந்த காலம் அது. மக்களைத் திருத்தி வழி நடத்திச் செல்ல வேண்டும் என்பது இரண்டாம் பட்சமாகவே அப்போது எங்களுக்குத் தோன்றிற்று. சட்ட மன்றத்துக்குள் நுழைந்து, அங்கு ஆதிக்கம் செலுத்திய ஆணவத்தையும், அதிகார பலத்தையும் கண்கூடாகக் கண்ட பிறகு கழகப் பிரச்சாரத்தின் போக்கே குறிப்பிடத்தக்க மாறுதல் அடையத் தொடங்கியது. "மக்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்லர்.

அவர்கள் சரியாக, திறமையாக வழி நடத்தப்பட வேண்டியவர்கள்" என்பதை என் போன்ற துடிக்கும் மனப்பான்மை கொண்ட வாலிபர்கள் புரிந்து கொண்டோம். அதுவரையில் நலிவுகளுக்குக் காரணம் என்ன என்பதையே அதிகமாகச் சிந்தித்துக் கொண்டிருந்த நிலை மாறி, நலிவுகளைப் போக்குவது எப்படி என்பதைக் கழகம் திட்டம் போட்டு விளக்குவதில் முனைந்தது. இருபதாம் நூற்றாண்டில் அரசியல் அதிகாரம்தான் அனைத்துப் பீடைகளையும் ஒரே நொடியில் ஒரே வரியில் ஒழித்துக்கட்ட முடியும் என்பது உறுதியாக்கப்பட்டு விட்டிருப்பதைச் சட்ட மன்ற நுழைவுக்குப் பிறகே சரியாகத் தெரிந்து கொள்ள முடிந்தது என்பது முற்றிலும் உண்மை.

ஆகவே, அறிஞர் அண்ணா அவர்களும், அவர் அடியொற்றி நாங்களும், முதல் சட்ட மன்றக் கூட்டம் முடிவடைந்ததும், நாட்டு மக்களை நோக்கிப் புறப்பட்டோம். அரசியல் அதிகாரத்துக்கு ஊற்றுக்காலான சாதாரண மக்களின் ஆதரவு திரட்டும் பணிதான் முக்கியமெனக் கருதிப் பணியாற்றினோம். தொழில் துறை வளர்ச்சி பற்றி மத்திய அரசு காட்டும் அலட் சியத்தைச் சட்ட மன்ற நிகழ்ச்சிகள் மூலமும், அமைச்சர்கள் அளித்த பதில்களாலும் சரியாகத் தெரிந்து கொண்ட நாங்கள் அது பற்றியும் மக்களின் சிந்தனைக்கு விவரங்களை எடுத்து வைத்து முடிந்த அளவு துறைகள் தோறும் போராடுவது என்று தீர்மானித்தோம்.

1957 மே முதல் வாரத்தில் சேலம் மாவட்ட ஆட்சி மன்றத்தில் கழக உறுப்பினர் ஒருவர் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் அடுத்த 13 ஆண்டுக் காலத்திற்கு நாட்டில் பெரும் வாதப் பிரதிவாதத்தை உருவாக்கும் தீர்மானமாக அமைந்தது. அப்போது சேலம் மாவட்ட ஆட்சிக் கழகம் (ஜில்லாபோர்டு) காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்தில் இருந்தது. இருந்தும் கழக உறுப்பினரின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் இன்று செயல் முறைக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதால் இப்போது இதனைக் குறிப்பிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

சேலத்தில் கிடைக்கும் இரும்புக் கனியைத் தனிப்பட்டோர் வெட்டி எடுக்கக் கூடாது. அதை வெட்டி எடுப்பதற்கு அரசியலார் முன்வர வற்புறுத்த வேண்டும் என்று ஒரு தீர்மானமும் 'சேலத்தில் இரும்பு எஃகுத் தொழிற்சாலையொன்றை அரசியலார் ஏற்படுத்த வேண்டும்' என்று வற்புறுத்தி ஒரு தீர்மானமும் அப்போது கழக உறுப்பினராக இருந்த தாண்டவன் என்பவரால் கொண்டுவரப்பட்டது.

இதை எதற்காகக் குறிப்பிடுகிறேன் என்றால், வாய்ப்புக்கிடைக்கும் இடங்களிலெல்லாம் காங்கிரஸ் ஆட்சியின் அலட்சியத்தை- ஆணவத்தை எதிர்த்துப் போராடிக் காங்கிரஸ்காரர் வாங்கியதாகச் சொல்லிக் கொள்ளும் 'சுதந்திரம்' உண்மையான நல்வாழ்வைத் தேடித் தரவில்லை என்பதை மக்களிடம் விளக்க வேண்டும் என்கிற ஆர்வம் எங்களுக்கு மேலோங்கி இருந்த தன்மையை வெளிப்படுத்தவே ஆகும். இந்த நாட்களில் அண்ணா அவர்கள் நாள்தோறும் பேசி வந்த பேச்சுக்களும் என் போன்றவர்களின் வேகத்தை மட்டுப்படுத்தி அரசியல் அதிகாரத்தைப் பெறுவது தான் சிறந்த வழி என்ற முடிவுக்கு வரச் செய்தன.

"இன்று நம் மீது வெறுப்புக் காட்டுகிறவர்கள் நம்மிடம் வரவேண்டியவர்கள். அவர்கள் நம்மோடு வருவார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. "நம்மிடத்தில் இந்தக் கட்டத்தில் இரண்டு சுபாவங்கள் கட்டாயமாக இருந்தாக வேண்டும். ஒன்று, எவரிடத்திலும் நமக்கு விரோதம் கூடாது. மற்றொன்று, நம்மீது வெறுப்புக் காட்டுபவர்களிடம் கூடக் கழகத் தோழர்கள அன்பு காட்ட வேண்டும். வெறுப்பு என்பது என்ன? தலைகீழான அன்பைத்தான் அப்படிச் சொல்கிறார்கள்.

அவர்கள் அப்படி, வெறுப்பதற்குக் காரணம், நாம் அவர்களிடம் இல்லையே என்பதைத் தவிர வேறென்ன காரணத்தால் வெறுப்புக் காட்டுகிறார்கள்? நம்மை வெறுப்பதன் மூலம் அவர்கள் தங்கள் மனத்திற்குச் சாந்தி தேடிக் கொள்கிறார்கள். அவ்வளவு தான். அதனால்தான் நம் கழகத் தோழர்கள் எந்த அரசியல் கட்சிக்காரர்களிடத்திலும் விரோதம் காட்டக் கூடாது."

அரசியல் அமைதிக்குக் கழகத்தில் காரணம் கண்டுபிடிக்கப் பாடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் அறிஞர் அண்ணா அவர்களின் இந்தப் பேச்சைக் காணிக்கையாக்குகிறேன். பெரும் பலம் படைத்த கட்சித் தலைவர் ஒருவர் தம் கட்சிக்காரர்களுக்கு இத்தகைய அறிவுரைகளைச் சொல்வது ஜனநாயக அரசியலில் புதுமையல்லவா? காந்தியார் கூட, வன்முறையில் இறங்குவதைக் கண்டித்தாரே தவிர, வெறுப்பதற்கும் வெறுக்கக் கற்றுக் கொள்ளுவதற்கும் இதுபோல் கண்டிப்பான கட்டுப்பாடு விதிக்கவில்லை.

தென்னாட்டுக் காந்தி என்று அறிஞர் அண்ணா அவர்களைக் கழகத் தோழர்கள் பெருமை பொங்கக் குறிப்பிடுவதைக் கேலி பேசும் மாற்றுக் கட்சித் தோழர்கள் 1957-ல் தமிழகத்தில் கழகத்தைக் காட்டிலும் பெரிய அரசியல் சக்தி வேறு இல்லை என்ற நிலைமை இருந்த போது, இப்படிப் பேசி, அமைதிகாத்து, அதன் காரணமாக உறுதியான பலன்களைக் கொண்டு சேர்க்கப் பாடுபட்ட தலைவரை வேறு எப்படி அழைப்பது என்பதைத் தயவு செய்து தெரிவிக்க வேண்டும். கழகத்தின் தீவிரவாதிகளை அண்ணா அவர்களின் இது போன்ற ஆணைகள் வெகுவாகக் கட்டுப்படுத்தின.

அது மட்டுமல்ல; "வெறுக்கக் கற்றுக் கொள் வெற்றி பெறுவாய்" என்று அறை கூவல் விடும் கம்யூனிஸ்டுகளும், அறிஞர் அண்ணா அவர்களிடத்தில் இங்குதான் பின்வாங்கினார்கள். விவசாயிகள் பிரச்சினையையும் உள்ளடக்கி, மார்க்சிசத்துக்கு லெனின் புதிய மெருகையும் பொலிவையும் ஊட்டியதைப் போல், இந்த நாட்டுக்கு ஏற்ற வகையில், தமது அன்பு வழி- அற வழி- ஜனநாயக வழியின் மூலம் உண்மையான கம்யூனிசத்தைப் பரப்ப அறிஞர் அண்ணா விரும்பினார்.

இந்த நாட்டில் ஏற்படப் போகும் சமதர்மச் சமுதாயம் வெடிகுண்டு வழியிலா? அறிஞர் அண்ணா காட்டிய அன்பு வழியிலா? என்பதற்கு நாட்டில் நாள்தோறும் நடைபெற்று வரும் சம்பவங்கள் நன்றாக விடை அளித்து வருகின்றன. கம்யூனிசம் தோற்று விடும் என்பதாக ஏகாதிபத்தியவாதிகளும் முதலாளித்துவப் பேதைகளும் சொல்லி வருகிறார்கள். ஆனால் கம்யூனிஸ்டுகள் இந்த நாட்டில் தோற்றால் அது அறிஞர் அண்ணா அவர்கள் காட்டியுள்ள அறவழியைப் பின்பற்றாத கார

ணந்தான் என்பதை வருங்காலம் மெய்ப்பிக்கத்தான் போகிறது. "நீர்த்துளியிலும் நெருப்புப் பொறி பறப்பதுண்டு" என்ற இக்பாலின் கவிதையை நாங்கள் மேடைகளில் அப்போது அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. ஆனாலும் நெருப்புப் பொறி பறந்த எங்கள் நெஞ்சங்களில் நீர்த்துளி கசிந்த சம்பவங்களும் 1957-ல் நிரம்ப நடை பெற்றன. முதல் சட்ட மன்றக் கூட்டம் முடிவுற்றது. அதில் நாங்கள் அறிந்த 'படிப்பினை'களிலிருந்து நாட்டு மக்களிடையில் இனி எங்கள் பிரச்சாரம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்ற திருப்பு முனையும் உருவாயிற்று.

எங்களில் ஒவ்வொருவரும் ஒரு மூலைக்குச் சென்று சூறாவளியாகச் சுற்றிக் கொண்டிருந்தோம். காங்கிரஸ் ஆட்சியாளரின் அடக்கு முறைகளுக்கும் ஆணவத்திற்கும் நாங்கள் எங்களுடைய பேச்சையும் எழுத்தையுமே மாற்று ஆயுதங்களாகப் பயன்படுத்தி வந்த நிலையில் மேலும் பெருஞ்சூடு பிடித்தது. வாள் வலிமையைக் காட்டிலும் பேனா வலிமை பெரிது; அதை விடப்பெரிது நாவின்வன்மை என்பதில் எங்களுக்கேற்பட்டிருந்த உறுதி மேலும் இறுகிக் கெட்டித்துக் கொண்டு வந்தகாலம் அது.

சந்திரனுக்குச் சென்று வந்தவர்கள் அங்கு கண்ட காட்சிகளையும் பொருட்களையும் புது வகை உத்வேகத்தோடு சொல்வது போல், நான் சட்டமன்றத்தில் சந்தித்த சம்பவங்களை, பேச்சுக்களை, மக்களின் நலத்தில் ஒரு துளியும் அக்கறையில்லாத காங்கிரசாரின் கபட நாடகத்தை நேருக்கு நேராகக் கண்டு வந்த புது அனுபவங்களை- நாளொன்றுக்கு எட்டுக் கூட்டம், பத்துக் கூட்டம் என்கிற அளவிலும் பேசினேன். தமிழகமே என் கண்களுக்கு எப்போதுமில்லாத அளவுக்கு பரிதாபகரமானதாகத் தெரிந்தது.

வயற்புற உழவர்கள், நகர்ப்புறத் தொழிலாளர்கள், கல்லூரிக் காளைகள், துவக்கப்பள்ளித் துளிர்கள் துன்பங்களின் சுமைகள் எவ்வளவு தாம் அழுத்தினாலும் ஒடிந்து விழாமல் வளைந்து கொடுத்தே வாழ்க்கையை ஓட்டி வரும் தாய்மார்கள் ஆகிய அனைவருமே என் கண்களுக்குப் புது மாதிரியாகத் தெரிந்தார்கள். அது வரையில் என்னைப் பொறுத்த வரை இவர்கள் உலகத்தோடு ஒட்டி ஒழுகத் தெரிந்து கொள்ளாத, தெளிவு பெறாத மக்களாகவே எனக்கிருந்த சமுதாயச் சீர்திருத்த நோக்கத்தோடு பார்த்து வந்தேன்.

ஆனால் 1957-ல் இவர்கள் அனைவரும் எனக்கு வேறு விதமாகத் தெரியத் தொடங்கினர். அரசியல் ரீதியில் அவர்கள் எவ்வாறு வஞ்சிக்கப்படுகின்றார்கள்? சட்ட ரீ தியாக அவர்கள் எத்தகு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள்? இவர்களுக்கு எதிர் காலத்தில் எவ்வாறு பணியாற்றி மகிழ்ச்சியைச் சேர்க்கமுடியும் என்பதிலேயே என் எண்ணங்கள் செல்லத் தொடங்கின. என் முயற்சியில் துவளாத ஊக்கத்தோடும், கழகத்திற்கு வெற்றி கிடைக்கும் என்பதில் நிறைவான உறுதியோடும் சுழன்று பணியாற்றிக் கொண்டிருந்த போது, ஒருநாள் பேரிடியான செய்தி கிடைத்தது.

1957 ஆகஸ்டு 30-ல் கலைவாணர் என். எஸ். கே. காலமானார் என்ற செய்தி கேட்டு ஒவ்வொருவரும் கலங்கினோம். கண்ணீர் சிந்தினோம். கலைவாணர் மறைவோடு தமிழகத்தின் பல்வேறு துறைகளிலும் ஒரு சகாப்தம் முடிவுற்றதாகவே அப்போது கருதப்பட்டது. என்னைப் பொறுத்த வரை தனிப்பட்ட இழப்பாகவே அதனைக் கருதினேன். எத்தகைய அற்புத மனிதர் அவர்! "சிந்திக்கக்கற்றுக் கொள் - சீர் பெறுவாய்" என்று நாங்கள் செய்து வந்த பிரச்சாரத்திற்கு உற்ற துணையாகச் "சிரிக்கக் கற்றுக் கொள்- விரோதமும் குரோதமும் உன்னை விட்டு விலகி நிற்கும்" என்று கலைத்துறையில் அவர் ஆற்றிய தொண்டு இந்தச் சமுதாயத்தால் மறக்கக் கூடியதா?

"சிரிக்கத் தெரிந்து கொள்ளா காரணத்தால் தான் ஒரு சாம்ராஜ்யத்தையே இழக்குமாறு நேர்ந்தது" என்று ஜெர்மனியச் சக்கரவர்த்தி கெய்சர் வில்லியம் குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கேலியாகக் குறிப்பிடுவதுண்டு. பெர்னார்ட் ஷா கூட அவரைச் சிரிக்க வைப்பதில் வெற்றி பெறவில்லை என்று சொல்லப்பட்டது. கடுகடுத்த முகத்திற்கும், அசுரத்தனமான நினைவுகள்-பழக்கங்களுக்கும் அநேகமாக நெருங்கிய தொடர்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.

சர்வாதிகாரிகள் சிரிப்பதில்லை; அப்படிச் சிரித்தாலும் வெளிப்படையாக மக்கள் பார்க்குமாறு நடந்து கொள்வதில்லை. சிரிக்கத் தெரிந்த மனிதன் தான் உலகத்தின் மனிதத் தன்மைகளை உணர்ந்தவன் என்பது முழுவதும் உண்மையானால், அத்தகு மனிதர்களை உருவாக்கி, ஒரு சமுதாயத்தையே ஒரு தலைமுறைக்கும் மேலாகக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைத்த கலைவாணர் மறுமலர்ச்சிச் சிற்பி என்பதில் யாருக்கும் மாறுபாடு இருக்க முடியாது.

தமிழகத்தில் பெரியார் ராமசாமி, சாக்ரடீஸ் போன்று வலம் வந்தார்; அறிஞர் அண்ணா, பிளாட்டோ போன்று அறிவுலக மேதையாகத் திகழ்ந்தார். கலைவாணர் இவர்களுக்குச் சமகாலத் தலைவரான அரிஸ்டோபேன்ஸ் என்று தாராளமாகச் சொல்லலாம்.