உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/இணையற்ற நங்கவரம் போராட்டம்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

இணையற்ற நங்கவரம் போராட்டம் · 104 / 391

இணையற்ற நங்கவரம் போராட்டம் இப்போது நங்கவரம் பண்ணை குறித்தும், நிலச்சட்டம் குறித்தும் இவ்வளவு குறிப்பிடுவதற்குக் காரணம், கழக அரசு நிறைவேற்றியிருக்கும் நிலச் சீர்திருத்தச் சட்டத்தைப் பற்றி வெளியிடப்படும் விமரிசனங்களின் தன்மையே ஆகும். காங்கிரஸ்காரர்கள் விமரிசனம் செய்வதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால், கம்யூனிஸ்டுகள் போக்குத்தான் முரணாகத் தெரிகிறது. பிறக்கும்போதே அறிவாளிகளாகப் பிறப்பதாக யாரும் ஒப்புக்கொள்வதில்லை.

ஆனால், கம்யூனிஸ்டுகள் தாங்கள் புரட்சி வீரர்களாகவே பிறந்ததாகக் கருதிக் கொள்வது சகஜமாகப் போய் விட்டிருக்கிறது. தொழிலாளர் நலனுக்கும், விவசாயிகள் பிரச்சினைக்கும், நிலச்சீர்திருத்தம் போன்று சொத்துப் பாத்தியதைகளுக்கு வரம்பு கட்டுவதிலும் தாங்கள்தாம் மெத்தத் தெரிந்தவர்கள் என அவர்கள் உருகிக்கொண்டிருக்கிறார்கள். இது தவறு என்று அவர்களுக்கு நான் பணிவோடு தெரிவித்துக் கொள்வதற்குப் பல சந்தர்ப்பங்களை உபயோகித்துக் கொண்டுள்ளேன்.

விவசாயத் தொழிலாளர்கள் சார்பாகக் கம்யூனிஸ்டுகள் நடத்திய எந்தவிதமான கிளர்ச்சிகளைக் காட்டிலும், நங்கவரம் உழவர்கள் அறப்போர் குறைந்த பெருமை உடையதல்ல. உழவர்கள் போராட்ட சரித்திரத்திலேயே பெரும் வெற்றியையும் அதனால் உழவர் பெருங்குடி மக்களுக்குப் பெரும் நம்பிச்கையையும் உருவாக்கிக் கொடுத்த போராட்டம் அது. அரிவாளைக் கையிலேந்தி வேலை செய்யும் உழவர்களும், அறப்போர் முறையிலேயே தங்கள் கோரிக்கைகளை, உரிமைகளை நிலைநாட்டி வெற்றி கொள்ள முடியும் என்பதற்கு, நங்கவரம் உழவர் அறப் போராட்டம் இன்றளவும் முன்மாதிரியாகவே திகழ்கிறது.

அந்தப் போராட்டத்தில், மிராசுதாரர் எவருக்கும் கை வெட்டுப்படவில்லை. கால் பழுதடையவில்லை. ஊர் மக்கள் வெளிவரப் பயந்து அஞ்சவில்லை பெண்கள் கேலி செய்யப்படவில்லை. அவர்கள் பெருமைக்கும் மானத்திற்கும் இழுக்கு நேரும் தோதுக்கள் ஏற்படவே இல்லை. இங்கு உழவர் பெருமக்கள் பட்டினி கிடந்தார்கள்; குழந்தைகள் பசியால் அலறியதைக் கண்களில் நீர் கலங்கப் பார்த்துப் பதறினார்கள். ஆனால், யாருக்கெதிராகவும் அவர்கள் கைகள் ஓங்கவில்லை.

"ஒற்றுமை ஓங்குக!" "கட்டுப்பாடு ஓங்குக!" என்று சில நேரங்களில் தங்கள் வயிற்றுப் பசியையும் மறந்து முழக்கமிட்டார்களே தவிர, அவர்கள் கையிலிருந்து அரிவாளோ, கடப்பாறையோ, கைத்தடியோ ஓங்கவில்லை; ஓங்கவே இல்லை. அத்தகு போராட்டம் காந்தியார் கண்ணெதிரில் நடந்திருந்தால், பூரித்துப் போவார். அவருக்குப் பதிலாக, அண்ணா அவர்களின் மகிழ்ச்சியை அறிந்து நான் பெருமைப்பட்டேன். அத்தகு போராட்டத்திற்குத் தலைமை தாங்கியவன் நான் என்பது கம்யூனிஸ்டுகளுக்கு மறந்து போயிருந்தாலும், உழவர் பெருமக்களின் போராட்ட வரலாறு மறக்காது.

அந்தப் போராட்டம் காலையில் துவங்கி, மதியத்திற்குள் இரண்டொருவரைப் பலிவாங்கி, அதற்குப் பதிலாக மாலைக்குள் மேலும் சிலரைப் பழிவாங்கி, இரவுக்குள் இருளோடு இருளாக மறைந்துவிட்ட போராட்டம் அல்ல. 23-8-57-ல் தொடங்கி, 9-9-57 வரை சுமார் இருபது நாட்கள் நடைபெற்றது. விவசாயிகள் போராட்ட வரலாற்றில், உழவர்கள் உரிமைப் போர் வரலாற்றில், ஒரு குறிப்பிட்ட பகுதியில், குறிப்பிட்ட உழவர்களால் இத்தனை நாட்கள் ஒரு சிறு அசம்பாவிதமும் இன்றி ஆட்சியாளரின் அடக்குமுறைக்கும், மிராசுதாரர்களின் ஏளனத்துக்கும் ஈடு கொடுத்து வெற்றிகரமாகவும், கோரிய பலன்களைப் பெற்றதாகவும், வேறு ஒரு போராட்டம் பற்றிக் கம்யூனிஸ்டுகளால் கணக்குத் தரமுடியாது என்றே நான் கருதுகிறேன்.

"யாருக்கும் போராட்டத்தை வைத்துக் கட்சிக்குப் புகழ் தேட வேண்டுமென்று விழைவு இல்லை. உழவனின் கண்ணீர் துடைக்கப் பட்டால் போதும் என்பதே நோக்கமாக இருந்தது" என்று நங்கவரம் உழவர் போராட்டம் வெற்றிகரமாக முடிவடைந்ததையொட்டி, போராட்டத் தலைவர் என்ற முறையில் வெளியிட்ட அறிக்கையில் நான் குறிப்பிட்டேன்.

கழகமும், அதன் சார்பாக என் போன்றவர்களும் ஈடுபடும் எல்லா வகையான புனிதப் பணிகளிலும் காணப்படும் நோக்கம் ஒன்றுதான். ஏழைகளின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும். யாருடைய கண்ணிலும் நீரை வரவழைத்துப் பிறகு துடைப்பது அல்ல கழகத்தின் வேலை எங்கள் தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் அதனை எங்களுக்குக் கற்றுத் தரவே இல்லை. 'சரித்திரம் என்பது என்ன? மன்னர்களின் எதேச்சாதிகார விளையாட்டுக்களையும், பெரும் போரையும், பூசலையும் விவரிப்பதுதானா அது?

நான் எழுத விரும்பும் வரலாற்றில் மன்னர்களின்-பிரபுக்களின்' போராட்டங்கள் தவிர்த்த மக்களின் அன்றாட வாழ்க்கைக் கொடுமைகளையும், அழகுகளையும் விவரிக்கும் குறிப்புகளை எழுதவே பெரிதும் விரும்புகிறேன். சமுதாயத்தின் வளைவு நெளிவுகள், குழந்தை குட்டிகளோடு குடும்ப வாழ்வில் குமையும் சாதாரண மக்களின் சிந்தனை ஓட்டங்கள், நெக்குருகும் எத்தகு சூழ்நிலையிலும், அந்த மக்கள் சாதிக்க விரும்பும் பண்பாடுகள் மட்டுமே எனக்குச் சரித்திரத்துக்குரிய கருவாகத் தெரிகின்றன.

"சரித்திரத்தின் வழக்கமான அம்சங்களை விடுத்து, நான் கேட்க விரும்புவதெல்லாம். காட்டுமிராண்டித்தனத்திலிருந்து நாகரிகப் பண்பாட்டுக்குச் சிறுகச் சிறுக இந்த உலகை இழுத்து வந்த சாதாரண மக்களின் சிந்தனைக் கருவூலத்தை எந்த வரலாற்று ஆசிரியனாவது விளக்கமாகச் சொல்கிறானா?"

என்று-அன்று கோபமாகக் கேட்ட மாமனிதன் வால்டேரிடம் ஐரோப்பிய சரித்திர ஆசிரியர்கள் என்ன பதில் சொன்னார்களோ? ஆனால், அறிஞர் அண்ணா அவர்களும், அவருடன் முதன் முதலாகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பதினான்கு பேரும் வால்டேரின் இந்தக் கேள்வியில் காணப்படும் ஒவ்வொரு வாசகத்துக்கும் விளக்கமான பதிலைச் சட்டமன்றத்தில் சாதாரண மக்களின் சார்பாகத் தெரிவித்தோம்.