நெஞ்சுக்கு நீதி
கன்னிப் பேச்சு · 103 / 391
கன்னிப் பேச்சு சட்ட மன்றத்தில் நுழைந்து முதன் முதலாக நான் 4-5-57 அன்று கவர்னர் ஜான் அவர்கள் உரைமீது நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசினேன். அதுதான் என்னுடைய முதல் சட்டமன்றக் கன்னிப் பேச்சு. அன்று, விவாதத்தில் நான் கலந்து கொண்டபோது, என்னுடைய சிந்தனையை, கவனத்தை, அவசிய உணர்வை, ஆட்கொண்டிருந்தது கவர்னர் உரையோ, சட்டமன்றக் கட்டுத் திட்டங்களோ, 'கன்னிப் பேச்சு' ஆனதால் கவனமாகப் பேச வேண்டுமே என்பதோ அல்ல.
என்னுடைய தொகுதியில் அப்போது நடைபெற்றுவந்த விவசாயிகள் பிரச்னை ஒன்றுதான் என் கவனத்தை ஆட்கொண்டிருந்தது. அந்தப் பிரச்சினைக்கு எப்படியாவது, 'சட்டமன்ற விவாத' அந்தஸ்து வாங்கிக் கொடுத்துவிட வேண்டுமென்ற துடிப்புத் தான் மேலோங்கியிருந்தது. ஆம்; நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள இந்த நாளில் நிலச் சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் காட்டும் அக்கறையும் ஆர்வமும் நான் முதன் முதலாக சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, என் குளித்தலைத் தொகுதியில் விவசாயப் பெருங்குடி மக்கள் அத்தனை பேரும் ஆதித்திராவிடப் பெருங்குடி மக்கள்-பெரு நிலச்சுவான்தாரர்களிடம் பட்ட பாட்டினையும், அனுபவித்த பசி-பட்டினிக் கொடுமைகளையும் கண்ணாரக் காண்பதற்குக் கிடைத்த அனுபவமே காரணமாகும்.
குளித்தலைத் தொகுதி பொதுவாகப் பிற்பட்ட பகுதியாக இருந்தாலும், அங்கு 'நிலச்சுவான்'தார்களுக்குப் பஞ்சமே இல்லை. அந்த நிலச்சுவான்தார்களுக்கு, விவசாயிகள்-விவசாயக் கூலிகள் என்பவர்கள் பேரில் இருந்த துவேஷத்துக்கும் அலட்சியத்துக்கும் அப்போது பஞ்சமே இல்லை. நங்கவரம் பண்ணை என்ற பெரு நிலக்கிழார் ஒருவருக்கு ஏராளமான நிலங்கள் உண்டு. அதிலும், மற்ற விவசாயப் பகுதிகளில் இல்லாத விசித்திரமான முறையாகக் கையேர் வாரம், மாட்டேர் வாரம் என்று சாகுபடியில் பங்கு பிரிக்கும் வார முறையும் அங்கு உண்டு.
நங்கவரம், திம்மாச்சிபுரம் நிலச்சுவான்தாரர்கள் தங்களிடமிருந்த விவசாயக் கூலிகளிடமும், பரம்பரையாக ஒரே நிலத்தில் பாடுபட்டு வயிறு வளர்த்தும் வந்த குத்தகைதாரர்களிடமும் தகராறும் பிணக்கும் செய்துகொண்டிருந்தனர். இது அந்தத் தொகுதியில் நான் தேர்தலுக்கு நிற்பதற்கு முன்பிருந்தே புகைந்துகொண்டிருந்தது. ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்தில், ஆலோசிக்கப்பட்டு, காமராசர் காலத்தில் முதன் முதலாக முதலமைச்சராக விளங்கிய காலத்தில் நிறைவேற்றப்பட்ட 'நியாய வார' சட்டத்தில் காணப்பட்ட சில ஓட்டைகளைப் பயன்படுத்தி நிலச்சுவான்தாரர்கள் ஆட்டம் போட்டனர்.
பரம்பரையாகத் தங்களிடத்தில் குத்தகைதாரர்களாகவும் கூலிகளாகவும் இருந்துவந்தவர்களை நிலத்தில் அடி வைக்காமல் செய்தும், வேறு ஊர்களிலிருந்து குறைந்த கூலிக்கு ஆட்களைக் கொணர்ந்து நேரடியாகச் சாகுபடி செய்தும் தகராறுக்கு வித்திட்டனர். அதற்கேற்றாற்போல் நான் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களுக்கெல்லாம் அங்குள்ள நிலச்சுவான்தாரர்கள் செய்தது சரியென்ற மாதிரியிலும் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது.
அறுவடையான நெல் மணிக் கதிர்கள் களத்து மேட்டிலேயே குவிந்து கிடந்தன. நிலச்சுவான்தாரர்கள் சட்டத்தின் மூலமாகவே தாங்கள் செய்தது நியாயம் என்பது உறுதிப்பட்டுவிட்ட திருப்தியில் உறுமிக்கொண்டிருந்தனர். களத்துமேட்டில் நெல் மணிக்குவியல்களையும், தங்கள் வீட்டில் புகையாத அடுப்புகளையும் தங்கள் மனைவி, மக்களுடைய ஒட்டிப் போன வயிறுகளையும் பார்த்துப் பார்த்து விவசாயப் பாட்டாளி மக்கள் குமுறிக்கொண்டிருந்தனர்.
அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் இதனைத் தீர்த்து வைப்பது என்னுடைய பொறுப்பாக இருந்தது. அதுவரையில் அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் நான் செய்த முயற்சி எதுவும் பலனளிக்காமல் போயின. அன்று கவர்னர் உரையின் பேரில் நான் விவாதத்தில் கலந்து கொள்வதற்கு வாய்ப்புக் கிடைத்தபோது, மற்ற எல்லாவற்றையும் விட நங்கவரம் விவசாயிகள் பிரச்சினைதான் எனக்கு நினைவில் நின்றது. அன்று நான் முதன் முதலில் பேசிய பேச்சு விவசாயிகளின் அவல நிலையையும், நிலம் படைத்தோரின் மனிதாபிமானமற்ற போக்குகளையும் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்தது.
இது பின்னர், நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில் தீவிரமாகச் செய்து முடிக்கும் நிலச் சீர்திருத்தப் பிரச்சினைக்கு முன்னுரையாம். வரலாற்றுப் போக்குப்படி தொடக்கப் பணியாய் அமைந்திருப்பதை இப்போது நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது. மாவீரன் லெனின், தனது அண்ணன் அலெக்சாண்டர் 1887-ல் ஜார் மன்னன் ஆணைப்படி தூக்கிலிடப்பட்டபோது, பதினேழு வயதான லெனின், "இதற்குப் பதிலாக ஜார் மன்னனைப் பழிவாங்கியே தீருவேன்" என்று உரத்துக் கூறி சபதமேற்றானாம்.
"எப்படி உன்னால் பழிவாங்க முடியும்?" என்று அருகிலிருந்தவர்கள் கேட்டதற்கு, முடியும்; பொறுத்துப் பாருங்கள்" என்றானாம். நான் லெனின் அளவுக்கு உயரவில்லை. அதேபோல் நங்கவரம் பண்ணையும் ஜார் அளவுக்கு இருக்கவில்லை. ஆனால் 1957-ல் நான் இந்த விவசாயிகளுக்கு நிரந்தரமான பரிகாரம் காணவேண்டும் என்று நினைத்தேன். நிலச் சொந்தக்காரர்கள் மீது எத்தகைய கோபமோ தாபமோ எனக்கு அப்போதும் சரி, இப்போதும் சரி, இருந்ததே இல்லை.
எனக்கு இருந்த கவலைகளெல்லாம் பாடுபடும் விவசாயிகளுக்குப் பலன் மொத்தமாகக் கிடைக்கவேண்டும் என்பதும், அதற்கேற்றாற் போல் சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதும் தான். இதன்படி நான் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இப்போது நிறைவேற்றியுள்ள சட்டத்தால் ஏதாவது நன்மை கிட்டியதாக உணரப்படுமானால், 1959-ல் நங்கவரம் உழவர் பெருங்குடி மக்கள் அனுபவித்த பசி, பட்டினிக் கொடுமைகளுக்குப் பரிகாரம் தேடிவிட்ட திருப்தி கொண்டவனாவேன்.
அன்று நான் பேசியது இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. பின்னர் ஒரு முறை சட்டமன்றத்தில் நிலச் சீர்திருத்தச் சட்டம் விவாதிக்கப்பட்ட போதும் என் நினைவில் சுழன்று கொண்டிருந்தது. "இந்தப் பகுதிகளில் 'கையேர் வாரம்', 'மாட்டேர் வாரம்' என்று இரு வகையான விவசாயம் உண்டு.
இந்த இருவகை விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள், பாட்டாளி வர்க்கத்தினர், சட்டங்களின் மூலம் பலனடையவில்லை என்பது மட்டுமல்ல. பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தார்கள். இவர்களுக்கு நியாய வாரம் கிடையாது. அவர்கள் சட்டப்படி நியாய வாரம் பெற முடியாது... இந்தப் பெருமக்கள் வயிற்றிலோ பசிப் புயல் குமுறிக்கொண்டிருக்கிறது... சர்க்கார் எந்த வகையில் இவர்களுக்கு வாழ்வளிக்கப் போகிறது?"
என்று நான் பேசிக்கொண்டே போனேன். எதிரே இருந்த சபாநாயகரோ அமைச்சர்களோ எனக்குத் தெரியவில்லை. நங்கவரம் களத்துமேடு, அங்கு யாருக்கும் பயன்படாமல் குவிந்திருக்கும் கதிர் மணிகள், அதனையே ஏக்கத்தோடு பார்த்துப் பசித்த வயிற்றைத் தடவிக் கொடுத்துக் கொள்ளும் விவசாயப் பாட்டாளிகள், அவர்களுக்கும் நெற் கதிர்களுக்கும் இடையே வேலிபோல் காவல் காக்கும் காவல் துறையினர், வெற்றிலையைக் குதப்பிக்கொண்டே பெருமிதம் பொங்க விஷமச்சிரிப்புச் சிரிக்கும் நிலச்சுவான்தாரர்கள்-என் கண்முன் அப்போது தெரிந்தன; தெரிந்தனர்.
என்னுடைய கன்னிப் சேச்சு என் கண்ணீர்ப் பேச்சாக அமைந்தது. ஆனால், பின்னால் என் இரத்தத்தையே குடிக்கத் தயாராக இருந்த காங்கிரஸ்காரர்கள் அப்போது என் கண்ணீர்ப் பேச்சைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் எனக்கு அடுத்து, இரண்டொரு நாட்களுக்குப் பிறகு, 6-5-57 அன்று முதன் முதலாகச் சட்டமன்றத்தில் பேசுவதற்கு எழுந்த அறிஞர் அண்ணா அவர்கள், தான் பேசியதைத் தொடர்ந்து, நிலச் சீர்திருத்தத்தைப் பற்றிய கருத்துக்களை மழை போல் பொழிந்தார்.
"உண்மையில் நிலச் சீர்திருத்தத்தில் சர்க்காருக்கு நம்பிக்கை இருக்குமானால், அவற்றை உடனடியாகச் சட்டமாக்குவதற்குத் தயங்குவானேன்? யாருக்காக இந்தச் சர்க்கார் பயப்படுகிறது? சர்க்கார், 'நிலச் சீர்திருத்தம் செய்யப் போகிறோம்' என்று பேசிக்கொண்டே காலம் தாழ்த்தி வருகிறது.
இதனை மறைப்பதற்கு ஒரு திரையாகவே சர்க்கார் வினோபாவையும், அவருடைய பூதான் இயக்கத்தின் பெயரையும் பயன்படுத்துகிறது." அறிஞர் அண்ணா இப்படிப் பேசியது இரண்டு நாட்களுக்கு முன்பு நான் பேசியதை உறுதிப்படுத்துவதாகவும், விரிவுடன் எடுத்துச் சொல்வதாகவும் அமைந்தது. நான் பெருமையால் பூரித்துப் போனேன். அறிஞர் அண்ணா குறிப்பிட்டபடி வினோபாவின் புனிதப்பணிகளைக் காங்கிரஸ் அரசாங்கம் தனக்குத் தேவையான பிரச்சாரச் சாதனமாகவே பயன்படுத்தி வந்தது.
காந்தியாரின் படமும், நேருவின் பெருமைகளும், வினோபாவின் இலட்சியப்பணிகளைப் பற்றிய அரசாங்கத் தரப்பான பிரச்சாரமும் காங்கிரஸ்காரர்களுக்கு நெடு நாட்களுக்குக் கைகொடுத்தன. பல்வேறு அநியாயங்களின் திரையாகப் பயன்பட்டது. தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்த வினோபா அவர்களைப் கம்பராசபுரம் என்னும் சிற்றூரில் அறிஞர் அண்ணா சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, நிலச் சீர்திருத்தம் பற்றி வினோபா அவர்களின் பேச்சில் காங்கிரஸ்காரர்களின் குட்டை உடைப்பதாகவே கருத்துக்கள் வெளிவந்தன.
சிறுநல்லூர் என்ற இடத்தில் வினோபா பேசும் போது, "நிலச் சட்டம் பற்றி இந்தச் சர்க்கார் பேசியே காலம் கடத்துகிறது. இதனால், நிலப் பிரபுக்களை ஊக்குவித்து அவர்கள் தங்களுக்கிடையே நிலத்தைப் பங்கிட்டுக் கொள்ளவோ, அல்லது விற்றுவிடவோ வழி செய்து தருகிறது சர்க்கார்" என்று குறிப்பிட்டார்.
இந்தக் குறிப்பையும் அறிஞர் அண்ணா அவர்கள் தமது முதல் உரையில், நிலச் சீர்திருத்தத்தை வலியுறுத்திப் பேசிய பகுதிகளின் போது பயன்படுத்திக் காமராசரையும், சி. சுப்பிரமணியம் அவர்களையும் திக்குமுக்காடச் செய்தார்.
