உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/முதல் சட்டமன்ற நுழைவு
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

முதல் சட்டமன்ற நுழைவு · 102 / 391

முதல் சட்டமன்ற நுழைவு பதினைந்து பேர் வெற்றி பெற்றனர் என்றாலும், காமராசரும், கம்யூனிஸ்டுகளும் தங்கள் குரலையும், பிரச்சாரத்தையும் தலைகீழாக மாற்றிக் கொண்டனர். '15 பேர் தானே இவர்கள். நாங்கள் 150 பேர் இருக்கிறோமே! இவர்கள் என்ன செய்ய முடியும்?'

என்று திசை திருப்பினர். அப்போது நிதியமைச்சராக இருந்த சி. சுப்ரமணியம் அவர்கள் கூட கேலி பேசினார். "இவர்கள் 15 பேரையும் எங்களிடம் உள்ள பெண் உறுப்பினர்களே கவனித்துக் கொள்வார்கள்" என்றார் அவர். ஆனால், அறிஞர் அண்ணா அவர்களின் கணிப்பே வேறு விதமாக இருந்தது. "15 பேர் தானே வெற்றி பெற்றனர் என்று கேலி பேசுகின்றனர். ஏளனம் செய்கின்றனர். தி.மு. கழகம் பெற்ற வெற்றி அதிகமா, குறைவா என்ற சர்ச்சையில் ஈடுபடுகின்றனர்.

அவர்களுக்கு நான் கூற விரும்புகிறேன். நாங்கள் பெற்ற வெற்றி குறைவானது தான் என்றாலும், முக்கியத்துவம் வாய்ந்ததாகும்" என்று முதன் முதலாக வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டு வழங்கிய சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் அறிஞர் அண்ணா முழங்கினார்கள்.

"15 பேர்தானே வெற்றி பெற்றோம் என்று கேலி பேசாதீர்கள். சிறந்த எதிர்க்கட்சி என்றாலே எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நாங்கள் அகில இந்தியாவுக்கும் உதாரணமாக விளங்குவோம்" என்ற முறையில், கேலி பேசிய வாய்களுக்குக் கடிவாளம் பூட்டினார், அறிஞர் அண்ணா. "கல்லடியும் சொல்லடியும் தாங்கிப் பழக்கப்பட்டுள்ள நமது கழகத்தவரை விட, எதிர்க் கட்சியாக பணியாற்ற வேறு யாரால் முடியும்?"

என்று அன்று கடற்கரையில் கூடியிருந்த லட்சோப லட்சம் மக்களைப் பார்த்துக் கேட்டார் அவர். அது மட்டுமா? 1905-ல் ஜார் மன்னனுக்கு எதிராகப் புரட்சி தோல்வியுற்ற போது, லெனின் எழுதிய ஆவேச எழுத்துக்களின் பாணியில் அறிஞர் அண்ணா அவர்கள் கேலி பேசுவோரை நோக்கிச் சொன்னார். "கேலி பேசுகிறவர்கள் தயவு செய்து நாங்கள் வெட்கப்படும் அளவுக்குக் கேலி பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 'நாற்பது இடங்களில் டெபாசிட் இழந்தவர்களே!'

என்று பேசுங்கள். அப்போது தான் எங்களின் ஆர்வம் மேலும் பெருகும்; திராணி மேலும் வளரும் தோல்விகளையும் தன் கட்சிக்காரர்களுக்கு உரமூட்டுவதற்கேற்ற சாதனமாக எடுத்து கொள்ளும் அறிஞர் அண்ணா எனும் பிறவித் தலைவரிடம் கேலி பேசிய வாய்கள் இதற்கு மேலும் என்ன சொல்ல முடியும். "சட்டசபையில் நாங்கள் 15பேர் தான் அமர்ந்திருக்கிறோம் என்றால், எங்களுக்குப் பின்னால் 17 இலட்சம் மக்களின் இதயம் இருக்கிறது" என்பதை ஆட்சியாளருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன்.

அதே போல், கழகத் தோழர்களுக்கும் நான் கூறுவேன். 'நமது வெற்றி சாதாரணச் சம்பவம் அல்ல; நாம் பெரியதோர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். நம்மை இன்று மற்றவர்கள் ஆராய்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது' 15 பேர் தானே என்று கேலி பேசுவோர்களுக்கும், 15 பேர் தான் என்று சலித்து போயுள்ள கழகத் தோழர்களுக்கும் ஒரு சேரப் பதிலளித்துப் பேச்சாலே வழி நடத்திய அந்தப் பெருந்தலைவர் அறிஞர் அண்ணாவின் பாங்கு யாருக்குத் தான் வரும்?

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து கழகம் பெற்ற வெற்றிகளைப் பற்றிய பல்வேறு முனைகளிலிருந்தும் விமரிசனங்கள் கிளம்பின. அவற்றில் பல நல்ல எண்ணத்தோடும் உண்மையான ஆதங்கத்தோடும் வெளியிடப்பட்டன. "அவர்கள் (தி.மு கழகத்தினர்) நடத்திய தேர்தல் கூட்டங்களில் எல்லாம் கண்ணியமான முறை கடைப் பிடிக்கப்பட்டு வந்தது. பேசிய தலைவர்கள் யாரும் வசை மொழிகளில் இறங்கவில்லை. தங்களை இடை விடாமல் தாக்கும் பெரியாரைக் கூட அவர்கள் மரியாதை குறையாமல் தான் மறுத்துப்பேசி வந்தனர்.

இதைப் பார்த்து மக்கள் வியந்தார்கள். சட்டசபையிலும் இனி ஒரு புது விழிப்பு ஏற்படும். கேள்விகளும், மந்திரிகளின் பதில்களும் காரசாரமாக இருக்கும். அண்ணாதுரை என்ன சொல்கிறார் என்பதைப் பொதுமக்கள் அக்கறையுடன் கவனிப்பார்கள். தமிழர் நலத்துக்கான காரியங்கள் போட்டி போட்டுக் கொண்டு செய்யப்படும். அம்முறையில் நமது அண்ணாதுரையின் வெற்றியை வரவேற்கிறோம். ஆளும் கட்சியினரும் நன்றாக வரிந்து கட்டிக் கொண்டு இவரை வரவேற்பார்கள் என்று நம்புகிறோம்" என்று 17-3-57 'ஆனந்த விகடன்' இதழ் பாராட்டுத் தெரிவித்தது.

மற்றும் 'தமிழ்நாடு" 'கல்கி' முதலிய மாற்றுக் கருத்து கொண்ட பிரபல ஏடுகளும், பல்வேறு தலைவர்களும் கழக வெற்றியைப் பாராட்- டினர். இந்த பாராட்டுதல்களின் மூலம், '15 பேர் தான் வெற்றி பெற்றிருந்தாலும், ஒன்றும் மோசமாகி விடவில்லை' என்று கழகத் தோழர்கள் சமாதானமடைந்தனர்.

'ஆனந்த விகடன்' தெரிவித்ததைப் போல், கழகத்தினரின் சட்ட மன்ற நுழைவினையொட்டி, ஆளும் கட்சியினர் வரிந்து கட்டி வரவேற்றார்களா என்பது பின்னால் நடந்த பல நிகழ்ச்சிகளின் மூலம் நாட்டுக்குத் தெரிந்தது என்றாலும், மக்களாட்சி முறையும் ஜனநாயக பண்பாடும்புதுப்பிறவி எடுத்தன என்பது உண்மை. தேர்தல்கள் அனைத்தும் முடிந்து 31-3-57 அன்று முதன்முதலாக அறிவகத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

அறிஞர். அண்ணா அவர்கள் கட்சித் தலைவராகவும், பேராசிரியர் அன்பழகன் துணைத் தலைவராகவும், நான் கட்சிக் கொறடாவாகவும், ஏ.கோவிந்தசாமி அவர்களும், எம்.பி. சுப்பிரமணியம் என்ற தோழரும் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். சட்டமன்றக் கட்சியின் பொருளாளராகத் திருமதி சத்தியவாணி முத்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று மாலை, சென்னைக் கடற்கரையில் எங்களுக்கெல்லாம் நாவலர் தலைமையில் பாராட்டு; பாராட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் மகிழ்ச்சி வெள்ளம் வங்கக் கடற்கரையில் வழிந்தோடிற்று.

மக்களின் மகிழ்ச்சியும், அவர்கள் முகத்தில் காணப்பட்ட நம்பிக்கை ஆகிய அனைத்தும் எங்களுடைய பொறுப்பையும், தொண்டுகளையும் நினைவூட்டிப் பயமுறுத்தின. அடுத்தடுத்துத் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலும் வெற்றி பெற்ற தோழர்களுக்கான வரவேற்பும், பாராட்டும் சங்கிலிக் கோவை போல் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற தோழர்களைத் தமிழகத்து மக்கள் அதிசயத்தோடும் ஆர்வத்தோடும் பார்க்க ஆங்காங்கு இலட்சக்கணக்கில் கூடினர்.

காங்கிரசைப் பரவலாக எதிர்த்தவர்கள் என்பது ஒன்று; காங்கிரசை எதிர்த்து வெற்றி கண்டவர்கள் என்பது மற்றொன்று. அந்த அளவுக்குக் காங்கிரசின் பலமும், தேர்தல் திருவிளையாடல்களும் மக்கள் உள்ளத்தில் ஒருவித மருட்சியை அதுவரையில் ஏற்படுத்தியிருந்தன. பாராட்டுக் கூட்டங்கள்தோறும் நாங்கள் காங்கிரசின் ஆணவத்தையும், கம்யூனிஸ்டுகளின் ஜனநாயக விரோதப் போக்கையும், காங்கிரசுக்கு எதிர்ப்பான சக்திகள் ஒன்றுபட வேண்டிய அவசியத்தையும் வற்புறுத்திச் சொன்னோம்.

அந்த நாளில் கட்சியைக் காட்டிலும் கம்யூனிஸ்டுக் கட்சியினரின் போக்குத்தான் எங்களை வியப்புக்குள்ளாக்கிற்று. கம்யூனிஸ்டுக் கட்சியின் முக்கியத் தலைவரும், நமது மதிப்புக்குப் பாத்திரமானவருமான தோழர் இராமமூர்த்தி அவர்களேகூட, அப்போதும் கழகத்தைப்பற்றி அபாண்டமான் கற்பனைப் பழிகளைச் சுமத்திப் பேசி வந்தார். தி.மு.கழகம் பாகிஸ்தானிடம் லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு தேர்தலில் ஈடுபடுவதாகக்கூட மனமறிந்த பொய் சொல்லி வந்தார்.

இந்திய இராணுவச் செலவுகளைக் குறைத்து, அந்தப் பணத்தை வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று கழகம் தெரிவித்த கருத்தையொட்டி அவர் இவ்வாறு ஊர்தோறும் பேசி வந்தார் அது மட்டுமல்ல; கழகம் தேர்தலில் ஈடுபடுவதையே ஓடுகிற பஸ் வண்டியில் ஏற முயலும் செயலாக அவர் வர்ணித்து வந்தார். காங்கிரசின் ஆணவம் அடங்குவதற்கு அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவதை விடுத்து, எதிர்க் கட்சிகளுக்குள்ளாகவே ஒருவருக்கொருவர் அபாண்டப் பழிகளைச் சுமத்திப் பேசி வருவது அண்ணா அவர்களுக்கும் எங்களுக்கும் பெரும் வருத்தத்தைக் கொடுத்தது.

தமிழகத்தில் கம்யூனிஸ்டுகளின் போக்கு இப்படி இருக்கையில்தான் கேரளத்தில் காங்கிரஸ் அல்லாத முதல் அரசாங்கம்-கம்யூனிஸ்டு கட்சி-அரசாங்கம் அமைந்தது. இதுபற்றி முதன் முதலில் மகிழ்ந்தவர்கள் தி மு. கழகத்தினர்தாம். காங்கிரஸ் ஆட்சியின் ஏகபோகத்தை உடைத்து, அதன் கோட்டையில் ஒரு விரிசலை ஏற்படுத்திவிட்ட கேரளத்து மக்களைக் கம்யூனிஸ்டுகளைக் காட்டிலும் கழகத்தவர்களே அப்போது பெருமளவு வாழ்த்தினர்.10 இலட்சம் வாக்குகளைக் கேரளத்தில் மொத்தமாகப் பெற்ற கம்யூனிஸ்டுகள், ஆட்சி அமைக்கும் நிலைமை ஏற்பட்டு, அதே நேரத்தில் 15 இலட்சம் வாக்குகளைத் தமிழகத்தில் பெற்ற தி.மு.கழகம் 15 இடங்களை மட்டுமே பெற்ற நிலைமையை விளக்கிச் சொன்ன பிறகும் கம்யூனிஸ்டுகள் தி.மு.

கழக எதிர்ப்பிலேயே காலங் கழித்தது வேதனையாக இருந்தது. அறிஞர் அண்ணா அவர்களே கூடச் சில நேரங்களில் கம்யூனிஸ்டுகளைப் பற்றிக் கடுமையாகப் பேசியிருக்கிறார் என்றால,. அப்போதைய கம்யூனிஸ்டுகள் தமிழகத்தைப் பற்றிச் செய்த பிரச்சாரத்தின் தன்மையைத் தெரிந்து கொள்ளலாம். "கம்யூனிஸ்டுகளின் தாறுமாறான பிரச்சாரத்திற்குத் தி.மு.கழகத் தோழர்கள் பதிலளிப்பதோ, எழுதுவதோ தேவையில்லை. மாலங்கோவ் பிரதமராக இருந்தபோது சொன்னேன்.

தி.மு. கழகந்தான் உண்மையான கம்யூனிஸ்டுக் கட்சி என்று; நம்முடைய கொள்கைகளுக்கு விரைவிலேயே கம்யூனிஸ்டுகள் வரவிருக்கிறார்கள். கேரளத்தில் பதவி ஏற்றுக்கொண்ட காரணத்தால். "துவக்கத்திலேயே அங்கு (கேரளத்தில்) மத்திய யதேச்சாதிகாரம் குறுக்கிடுகிறது. நிலைமை நீடிக்க-நெருக்கடி முற்றி-அமைச்சர் பதவியை விட்டு வெளியேறி-இந்திய அரசியல் சட்டத்தை அவர்கள் எதிர்க்கத்தான் போகிறார்கள். "கம்யூனிஸ்டுகள் தப்புக் கணக்குப் போட்டுப் போட்டுப் பின்னர் திருந்திக் கொள்வது அவர்களின் தலைசிறந்த கொள்கைகளிலே ஒன்றாக இருப்பதால், சீக்கிரத்தில் உண்மை நிலை உணர்ந்து திருந்துமாறு அவர்களை வேண்டுகிறேன்" என்று 24-4-57 அன்று பொன்மலையில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

அண்ணா. அறிஞர் அண்ணா அவர்களின் கணிப்பைப் போலவே, கேரளத்தில் கம்யூனிஸ்டு அமைச்சரவையின் நிர்வாகத்தில் மத்திய சாக்கார் நடந்து கொண்ட முறையும், கம்யூனிஸ்டுகள் அமைச்சரவை கவிழ்ந்ததும், கம்யூனிஸ்டுகள் அவசியமற்ற மாயையிலிருந்து விடுபட்டதும் அனைவரும் அறிந்த உண்மை. இதனை இப்போது குறிப்பிடுவதற்குக் காரணம், சமீப நாட்களாகத் தமிழகத்துக் கம்யூனிஸ்டுகளின் சிந்தனையும் 1957-க்குத் தாவியிருப்பது போல், அவர்களுடைய பேச்சும் கொஞ்சம் மாறியிருப்பதுவே காரணமாகும்.

கழகத்தைக் கேலி பேசிய காங்கிரசாரும், கம்யூனிஸ்டுகளும் பின்னர் அதற்காக வருத்தப்படும் அளவுக்குத் தமிழகத்தின் சட்டமன்றப் பணிகள் சிறப்பாக அமைந்தன. கழகம் எதிர்க்கட்சியாகப் பொறுப்பேற்றதும், சட்ட மன்றத்தில் எத்தனை பண்புகள், மரபுகள் உருவாகும் என்பது முதன் முதலாக அவைத்தலைவர் டாக்டர் கிருஷ்ணாராவ் அவர்களைப் பாராட்டி 30-4-57-ல் அறிஞர் அண்ணா உதிர்த்த பொன் மொழிகளிலிருந்து வெளிப்பட்டது. ஆம்; அன்று அண்ணா அவர்கள் பேசிய பேச்சின் ஒவ்வொரு வார்த்தையும் விலை மதிக்கவொண்ணா வைரக் கற்களாகும்.

பாராளுமன்ற வரலாற்றிலேயே அனைவரும் நெடுங்காலத்துக்குப் பாடம் செய்யப்பட வேண்டிய வாக்கியங்களாகும். அண்ணா பேச்சில் கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு-மனிதப் பண்பு ஜனநாயக ஆர்வம்-உறுதி அத்தனையும் ஒருசேரக் கலவையிட்டுக் கொப்பளித்தன. "நம் நாட்டில் ஜன நாயகம் குழந்தைப் பருவத்தில் இருக்கிறது. நாங்கள் இதுபோன்ற பாராளுமன்ற அமைப்புக்களின் நடவடிக்கைகளுக்குப் புதியவர்கள். தங்களுடைய புன்சிரிப்போடு கூடிய கட்டளையினால் எங்களைத் திருத்த வேண்டும்; பண்படுத்தப்பட்ட ஜனநாயகவாதிகளாக ஆக்க வேண்டும்.

இன்று இந்த நாட்டில் அரசியலில் பெருந்தன்மை மிகவும் அதிகமாகத் தேவைப்படுகிறது. அரசியல் பெருந்தன்மை என்பது கொடுத்து வாங்கப்பட வேண்டிய ஒன்றே தவிர, ஒரு வழி வியாபாரம் அல்ல. "நம் நாட்டில் சாதாரணமாக இரயில் வண்டியில் முன்னதாக இடம் பிடித்துக் கொண்டவர்கள், பின்னால் வருபவர்களுக்கு இடமில்லை என்று கூறுவதைக் காண்கிறோம். அதைப்போலவே அரசியலிலும் நிலைமைகள் இருக்கின்றன. நாங்கள் எப்படியோ தட்டுத்தடுமாறி சட்ட சபை என்ற இந்த இரயிலில் ஏறிவிட்டோம்.

"காலையும், கையையும் நீட்டிப் படுத்து, ஆதிக்கம் செலுத்துகிறவர்களை நாங்கள், 'எழுந்துகொண்டு எங்களுக்கு இடந்தாருங்கள்" என்று கேட்பதற்கு முன்னால், தாங்களே கையையும் காலையும் மடக்கிக் கொண்டு, 'இவர்களும் பிரயாணத்திற்குத் தகுதி படைத்தவர்கள்தான்' என்று கூறி எங்களுக்கு இடம் கிடைக்கச் செய்ய வேண்டுகிறேன்."

இந்தப் பேச்சின்படி கழகத்திற்குப் பின்னாளில் யார் இடம் கொடுத்தார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், அறிஞர் அண்ணா அவர்களின் முதல் சட்டமன்றப் பேச்சிலேயே வெளிப்பட்ட அடக்கமும்; உரிமை உணர்வும், அழுத்தமும் நாங்கள் அடுத்த ஐந்தாண்டுக் காலத்தில் எதிர்க்கட்சியாக ஆற்றிய பணிகளுக்கு அடித்தளமாக அமைந்தன. "ஆங்கிலேயனுக்கு ஒரே ஒரு விஷயந்தான் விளங்கும். அவனை எதிர்த்து நில்!"

1880-ல் மக்களைப் பார்த்து அந்நாட்டுப் புரட்சி வீரன் பார்னெல் இப்படிக் கூறினான். காங்கிரஸ் கட்சியைப் பற்றி அறிஞர் அண்ணா கொண்டிருந்த திடமான முடிவும் இதுதான். பார்னெல் ஆயுதமேந்தி எதிர்க்கத் துணிந்தவன்; அறிஞர் அண்ணா அறிவுப் படை கொண்டு மடக்க முனைந்தவர். எதிர்த்து நிற்பது ஒன்றைத்தான் புரிந்துகொள்ளக்கூடிய ஆங்கிலேயனை எதிர்த்து நின்ற காங்கிரஸ் கட்சிக்கு நாளாக நாளாக ஆங்கிலேயனுக்கிருந்த அத்தனைக் குணங்களும் உதிரத்தில் உறைந்து போய்விட்டிருக்கும் உண்மையை முதன் முதலில் புரிந்துகொண்ட பெருமை அரசியல் ரீதியில் அறிஞர் அண்ணா அவர்களுக்குத்தான் உண்டு.

வரலாற்றுப் பாடங்களை வரிசைப் படுத்திச் சுட்டிக் காட்டுவதோ, ஜனநாயக மரபுகளை உணர்த்தி நியாயம் கேட்பதோ, சராசரி மனித அறிவுக்கு எட்டக்கூடியதை எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பதோ. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் தொடர்ந்து தோல்வியைத் தான் கொடுத்து வந்திருக்கிறது. ஆகவேதான் அறிஞர் அண்ணா அவர்கள் 1957-ல் பார்னெல் பாணியைக் கையாண்டு, காங்கிரசின் ஆணவம் அத்தனைக்கும் ஊற்றுக்கால் எதுவோ, அதனுடைய கண்மூடித்தனமான காரியங்களுக்கு 'ஒப்புதல் முத்திரை' குத்தப்படும் இடம் எதுவோ, அதனுடைய எதேச்சாதிகாரப் பசிக்கு 'இரை' கொடுத்துக் கொண்டிருக்கும் அதிகாரப் பண்ணை எதுவோ அதனைக் குறிவைத்து மக்களின் பேராதரவோடு எதிர்த்தார்.

அந்த எதிர்ப்புத்தான் காங்கிரஸ் கட்சியும், காமராசரும் மிகச்சரியாக உணர்ந்துகொள்ளும் நிலைமையை ஏற்படுத்தியது. நாங்கள் 15 பேர் சட்ட மன்றத்திற்குள் நுழைந்து அதுவரையில் எடுப்பார் பிடிப்பார் இல்லாத அதிகாரக் குவியலில் மிதந்து கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியைக் குத்திக் கிளறிக் கேள்விகள் கேட்டுத் துளைத்தெடுக்க முனைந்ததைச் சாதாரணமாகக் காமராசராலும், காங்கிரஸ் கட்சியாலும் சகித்துக்கொள்ள முடியவில்லை.

நாங்கள் சட்ட மன்றத்தில் பொறுப்பேற்று அறிஞர் அண்ணா பேசிய பேச்சுக்கு அடுத்த நாளே, "யார் நீங்கள்?" "உங்கள் கட்சிப் பெயரென்ன?" "அந்தப் பெயரை மாற்றிக்கொண்டு அகில இந்திய அரசியல் பற

்றியும். அரசியல் சட்ட நுணுக்கம் பற்றியும் பேசுங்கள். ஏனென்றால், ஒருமைப்பாட்டுக்கு விரோதமாக ஒரு தனிநாட்டுப் பெயராக உங்கள் கட்சிப் பெயர் துவங்குகிறது" என்கிற ரீதியில் பொதுவாகக் காமராசரும், குறிப்பாக சுப்பிரமணியம் அவர்களும் விதண்டாவாதம் பேசத் துவங்கிவிட்டார்கள். "பெயரில் என்ன இருக்கிறது?"

என்று, கல்லக்குடி பெயர் மாற்றத்திற்காகவும், 'தமிழ் நாடு' எனப் பெயரிடக் கோரியும் கழகம் குரல் கொடுத்த போதெல்லாம் 'தத்துவம்' பேசித் திரிந்தவர்கள், கழகம் சட்டமன்றத்தில் தனது பணியைத் துவக்கியவுடன், 'கட்சிப் பெயர் சரியில்லையே?'

என்ற வேதாந்தக் குரல் எழுப்பினர். கழகத்திற்கு இருக்கும் 'திராவிட' என்ற முதல் வார்த்தையைச் சுட்டிக் காட்டிக் காட்டியே சட்டமன்றத்தில் காங்கிரஸ்காரர்கள் பேசத் துவங்கிய பேச்சுக்களில் தோய்ந்திருந்த நச்சுத் தன்மையை நாங்கள் இரண்டொரு நாட்களிலேயே சரியாக உணர்ந்து கொண்டோம். ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழினத்தைத் தற்காத்து வரும் நாகரிகங்கள் அத்தனைக்கும் பொதுவாக அமைந்த அந்தப் பெயரின் பெருமையிலேயே எங்களுடைய அரசியல் வாழ்வின் நீண்ட நாட்கள் இனிமையாக கடந்திருக்கின்றன.

கழகத்தின் முழுப் பெயரையும் உச்சரிக்கும் போதே இனம் சொல்ல முடியாத குதூகலம் எங்களுக்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏற்படுவது வாடிக்கையாகப் போய்விட்டதைக் காங்கிரஸ்காரர்கள் உணர வாய்ப்பில்லையே என்பதை நினைத்து வருந்தினோம். "நாங்கள் சாமானியர்கள். எங்கள் கட்சியும் சாமான்யக் கட்சி அதன் பெயரும் அப்படித்தான்" என்று பதில் சொல்வதைத் தவிர அறிஞர் அண்ணா அவர்கள் இந்தக் கட்சி பெயர் பற்றிய சர்ச்சையில் அதிகம் ஈடுபடுவதில்லை.

ஏனென்றால் அந்தப் பெயரை மாற்றச் சொல்லிக் காங்கிரஸ்காரர்கள் சொல்வதற்கு கூச்சப்படவில்லையே தவிர, அவர்கள் சொற்கள் 'நாராசமாக'க் காதில் விழுவதாகவே நாடு எடுத்துக் கொள்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். இயக்கத்தின் அந்தச் 'சாதாரணப்' பெயர் இந்த நாட்டில் செய்திருக்கும் அற்புதங்கள் கொஞ்சமா? அது தோற்றுவித்துள்ள உரிமை உணர்வுகளும், அது செப்பனிட்டுக் கொடுத்துள்ள அரசியல் முறைகளும் எத்தகு சிறப்பு வாய்ந்தவை?

1957-ல் கழகம் முதன் முதலாகச் சட்டமன்றத்தில் நுழைந்த போது தெரிவிக்கப்பட்ட இதே கட்சிப் பெயர் மாற்றப் பிரச்சினை தான், 1967-ல் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் சிலரால் கிளப்பப்பட்டது என்பதை நினைக்கும் போது, கழகத்தைக் காட்டிலும் அதன் பெயரை மறையச் செய்வதில் பலருக்குப் பெரு விருப்பு இருப்பது புலனாயிற்று. இந்தப் பெயர் மாற்றப் பேச்சுக்கள் அடிபடும் போதெல்லாம், எனக்கு அந்தக் காலத்துச் சமுதாய சீர்திருத்த மாநாடுகளின் பேச்சுக்களும், அந்தப் பேச்சுக்களுக்குத் தேர்ந்தெடுத்துக் கொண்ட மாவீரர்களின் பெயர் வரிசையும் நினைவுக்கு வரும்.

பிரான்ஸ் நாட்டுப் பெரும் பிரபு ரோஹன் என்பவர் கொடுத்த விருந்தொன்றில் எப்படியோ இடம் கிடைத்துக் கலந்து கொண்ட இளைஞன் வால்டேர், சுற்றியிருந்தோரிடம் சளசளத்துக் கொண்டிருந்தானாம். இதைக் கவனித்த ரோஹன் பிரபு, 'யார் இந்த இளைஞன்? இப்படிக் கூவிக் கொண்டிருக்கிறான்?"

என்று கேட்டாராம். அதற்கு வால்டேர் தானே முன் வந்து சுடச் சுடப் பதிலளித்தானாம். 'பெரும் பட்டமோ, பரம்பரைப் பெருமைப் பின்னணியோ கொண்டவனல்ல நான். ஆனால் எனக்கிருக்கும் சாதாரணப் பெயரே எல்லா விதப்பெருமைகளையும் உணர்ந்த மரியாதைகளையும் எனக்குக் கொண்டு வந்து சேர்க்கும் என்று நம்புகிறவன் நான். என்னுடைய பெயர் வால்டேர்."

பிரான்ஸ் நாட்டுப் பெரும் பிரபுவை நோக்கிச் சாதாரண வால்டேர் இப்படிச் சொன்னது இராஜ துரோகத்துக்கு ஈடானதாக எடுத்துக் கொள்ளப் பட்டதாம். தன் பெயரை வால்டேர் தெரிவித்த முறை அங்கு இராஜத் துரோகமாக அதிகார ஆணவம் கருதியது போல், இங்கு கழகத்தின் பெயரே தேச துரோகமானது என்று ஆணவ அரசியல்வாதிகள் புலம்பிக் கொண்டிருந்தனர். தனது சாதாரணப் பெயரினாலேயே உலகத்தார் பெருமைகளை ஒருசேர சம்பாதித்துக் கொள்ளும் தன்னம்பிக்கை படைத்திருந்த வால்டேரைப் போல், தன் இயக்கத்தின் சாதாரணப் பெயரிலேயே இந்நாட்டு ஜனநாயகத்தில் தன்னுடைய மகோன்னத முத்திரையைப் பதித்து விடும் தன்னம்பிக்கையோடு நாங்கள் சட்ட மன்றத்தில் ஈடு கொடுத்தோம்.

மக்கள் மன்றத்தில் சுழன்று பணியாற்றினோம்.