நெஞ்சுக்கு நீதி
குளித்தலையில் தேர்தல் பணி · 101 / 391
குளித்தலையில் தேர்தல் பணி கழகத்தின் ஆணையினைச் சிரமேல் ஏற்றுத் தேர்தல் பணி தொடங்கிட என் குழுவினருடன் குளித்தலை புறப்பட்டேன். என்னிடமிருந்த 1335 எண்ணுள்ள பியட் கார், 'முரசொலி' அலுவலகத்திலிருந்து ஒரு பழைய வேன், அச்சடிக்கப்பட்ட வேண்டுகோள் அடங்கிய துண்டுத் தாள், ஒரு டேப்ரிக்கார்டர் இவைதான் சாதனங்கள். திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் குளித்தலை, லாலாப் பேட்டை, கிருஷ்ணராயபுரம், மாயனூர் போன்ற ஊர்களைக் காரிலோ, ரயிலிலோ, பயணம் செய்தவாறு பார்த்தவர்கள் காவிரியின் கவின் மிகுந்த காட்சியினையும், பசுமை கொஞ்சும் செந்நெற் கழனிகளையும் கண்டு, எவ்வளவு வளமான தொகுதி கருணாநிதிக்குக் கிடைத்தது என்று தான் கருதினார்கள்.
ஆனால்,குளித்தலை தொகுதியில் வெள்ளியணை என்ற பகுதியும் சேர்க்கப்பட்டிருந்ததும், அது எவ்வளவு பிற்போக்கான நிலையில் அதுவரை ஆண்டவர்களால் வைக்கப்பட்டிருந்தது என்பதும் அங்கு போய் நேரடியாகப் பார்த்தவர்களுக்கே புரியும். மிகக் குறைவான கழகக் கிளைகள்; கழகக் கருத்துக்கள் பரவிட இயலாத பல சிற்றூர்கள்; கழகக் கொடி பறக்கக் காண முடியாத இடங்களே அதிகம். சிற்சில ஊர்களில் இருந்த திராவிடர் கழகத்தாரும் ஆதரிக்க முடியாத நிலை.
துணிச்சலோடு தான் குளித்தலைத் தொகுதியில் நுழைந்தேன். பராங்குசமும், பண்ணையும், கவிஞர் ஆனந்தமும், தென்னனும் அலுவலகப் பணிகளைக் கவனித்தனர். நிழல் போல் நீங்காமலிருந்து வாக்குச் சேகரிக்க உதவியவர்கள் முத்துக்கிருஷ்ணன், இளமுருகு, பொற் செல்வி, மற்றும் முத்து, முத்துசாமி, கிருஷ்ணன், சிவராஜ் ஆகியோர். நான் காலைச் சிற்றுண்டி முடித்ததும் குளித்தலையை விட்டு, சண்முக வடிவேல் ஓட்டிட என் பியட் கார் புறப்படும்.
மதிய உணவு, ஏதாவது மசால் வடை, ரொட்டி, தேநீர்! இரவு பொதுக் கூட்டமெல்லாம் முடிவு பெற்றுக் குளித்தலை திரும்பிட அதிகாலை இரண்டு மணிக்கு மேல் ஆகிவிடும். வெள்ளியணையில் இரண்டு முறை மேடை போட்டு, விளக்குகள் அமைத்து, ஒலிபெருக்கியும் ஏற்பாடு செய்து பார்த் தோம். கூட்டம் நடத்த இயலவில்லை. மக்களுக்குத் தி.மு.க என்றால் என்னவென்பதே தெரியவில்லை. இதில் ஒன்றும் வியப்பில்லை. எனென்றால், 1948-ஆம் ஆண்டு காந்தியடிகள் மறைந்த செய்தியை, 1957 வரை அறியாமலிருந்த மக்களும் சிலர் அப்பகுதியில் இருந்தனர்.
போக்குவரத்து வசதிகளே இல்லாத கிராமங்கள். விடாமுயற்சியுடன் மூன்றாவது முறையாக வெள்ளியணையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடத்தினோம். மக்கள் திரண்டனர். சில திராவிடர் கழகத் தோழர்களும் என் பக்கம் வந்தனர். என் பிரச்சார முறைக்குப் பிடிப்பும் ஏற்பட்டது. வாக்குகளே பெறமுடியாது என்று கருதியிருந்த அந்தப் பகுதியில் சரிபாதிக்கு மேல் வாக்குகள் கிடைத்தன இறுதியில்! 'நாடு பாதி, நங்கவரம் பாதி' என்ற பழமொழிக்கு இலக்காயிருந்த நங்கவரம் பண்ணை குளித்தலைத் தொகுதியில் தான் சேர்ந்திருந்தது.
அங்கிருந்த உழவர் பெருமக்கள் காலமெல்லாம் கையேர் வாரம், மாட்டேர் வாரம் போன்ற பிரச்சினைகளுக்காகப் போராடிக் கொண்டிருந்தனர். நங்கவரம், நெய்தலூர், கவுண்டன்பட்டி போன்ற ஊர்களில் தேர்தல் பிரச்சாரத்துக்காக நான் சென்ற போது உழவர் பெருமக்கள் மனமுவந்து என்னை வரவேற்றனர். அவர்கள் கோரிக்கைகளின் நியாயத்தை நன்றாகப் புரிந்துகொண்டேன். விவசாயத் தொழிலாளர்களுக்காக போராடி அவர்களுக்கு வெற்றியினை ஈட்டித் தருவேன் என்று சூளுரைத்தேன்.
நான் குளித்தலைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆன பிறகு, நங்கவரம் தொகுதி விவசாயிகளுக்காக அமைச்சர்களுடன் வாதாடியதும், அரசினரும், பண்ணையார்களும் இணங்கி வராத காரணத்தால் நங்கவரம் பெரிய விவசாயப் போராட்டக்களமாக உருவெடுத்ததும், நானே வயலில் இறங்கிக் கலப்பை பிடித்து ஏர் உழ முனைந்ததும், இறுதியில் பயங்கர நிலைக்குப் போராட்டம் வந்துவிட்டது கண்டு அஞ்சிய அரசும், பண்ணையும் விவசாயிகளின் உரிமைக் குரலுக்குப் பணிந்து வந்ததும், தமிழ் நாடே நன்கறிந்த வரலாறாகும். தேர்தலுக்கு நாம் புதியவர்களானாலும் நமது தேர்தல் பிரச்சார முறைகள் புதுமையும், கவர்ச்சியும் பொதிந்து விளங்கின.
அச்சிடப்பட்ட எனது வேண்டுகோளும். டேப் ரிகார்டரில் பதிவு செய்யப்பட்ட எனது சொற்பொழிவும், சுவர்களிலும், தட்டிகளிலும் மாயூரம் பீ. டி. ராஜன் தீட்டிய வண்ணம் பொலியும் வாசகங்களும், 'எங்கள் வீட்டுப் பிள்ளை மு. கருணாநிதி' என்று நண்பர்களால் தயாரிக்கப்பட்ட காலண்டரும், அனைத்துக்கும் மேலாக நாள்தோறும் ஒரு சிற்றூர் சென்று வீடுவீடாக நான் வாக்குக் கேட்ட முறையும், கழகக் கொள்கைகளை விளக்கிப் பேசியதால் மக்களுக்குப் புதிதாக மலர்ந்த ஆர்வமும், கழகத் தலைவராம் அண்ணாவிடமும் பிற முன்னணித் தலைவர்களிடமும் ஏற்பட்ட நம்பிக்கையும் நான் குளித்தலையில் வெற்றி பெறத் துணை செய்தன.
வெள்ளியணைப் பகுதியில் நான் துவக்கத்தில் கண்ட அசிரத்தையான போக்கு நாளடைவில் நமது பணியால் மாறி வந்தது. அரசியலில் பற்றின்றித் தேநீர்க் கடைகளில் வேகவைத்த வாத்து முட்டையில் மிளகாய்ப் பொடியைத் தூவிச் சிற்றுண்டியாக உண்பதும், உற்சாகமின்றி வாழ்வதுமாக இருந்த மக்கள், நல்ல விழிப்பும் தெளிவும் பெற்றனர். அவர்களது வளத்துக்காகக் குடகனாறு திட்டத்தை மேற்கொள்ள வேண்டுமென்று சட்டமன்றத்தில் நான் இடையறாது போராடியிருக்கிறேன்.
(இப்போது மேற்கொள்ளப்பட்டு விட்டது.) அப்பேர்ப்பட்ட பின்னடைந்து கிடந்த பகுதியினை முன்னேற்றுவதில் என் பங்கும் பெருமளவில் இருந்ததை எண்ணி எண்ணி இப்போதும் நான் பெருமிதம் கொள்கிறேன். குளித்தலைக்கு அருகிலுள்ள தண்ணீர்ப்பள்ளி என்ற ஊரில் பெண்களுக்காக வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வாக்குக்கூட விழவில்லை. தாய்மார்களுக்கென நான் விடுக்கும் தனியான கனிவு மிக்க வேண்டுகோள் நல்ல பலனை அளித்து வந்தது.
உதயசூரியன் சின்னத்தைக் கோலமாக அமைத்திட நான் ஒரு சொற் பொழிவில் கேட்டுக் கொண்டேன். அதன் பின்னர் நான் வாக்குக் கேட்கச் சென்ற இடமெங்கும் தாய்மார்கள் தமது வீட்டு வாசலில் நீர் தெளித்து, உதயசூரியன் கோலமிட்டு, என்னை வரவேற்பது வாடிக்கையாகிவிட்டது. என்னோடு குளித்தலையில் தேர்தல் பணியாற்றிய நண்பர்களெல்லாம் என் மீது கோபம் கொள்ளுமாறு. நான் ஒரு விஷயத்தில் நடந்து கொண்டேன். தவறு என்னுடையதும் ஆகாது.
நான் குளித்தலைத் தொகுதி வேட்பாளனாக நடந்து கொள்ள வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள். ஆனால் நானோ கழகத் தொண்டனாகவும் நடந்து தீரவேண்டியவனாக இருந்தேன். புரியவில்லையா? அருமை நண்பர்கள் நான் குளித்தலைத் தொகுதியி லேயே எப்போதும் தங்கியிருந்து தேர்தல் பணி ஆற்றிட வேண்டும் என்றார்கள். என்னால் அது முடியுமா? தமிழ்நாடு முழுவதும் நமது கழகத் தலைவர்களும் தொண்டர்களும் பல்வேறு தொகுதிகளில் போட்டியிட்டனர்.
அண்ணா காஞ்சியிலும், நாவலர் சேலத்திலும், பேராசிரியர் அன்பழகன் எழும்பூரிலும், ஆசைத்தம்பி ஆயிரம் விளக்கிலும், சத்தியவாணிமுத்து பெரம்பூரிலும், ப.உ.ச. திருவண்ணாமலையிலும், என். வி. என். பேசின் பிரிட்ஜிலும், இலட்சிய நடிகர் தேனீயிலும், கவிஞர் கண்ணதாசன் திருக்கோட்டியூரிலும், அன்பில் தர்மலிங்கம் லால்குடியிலும் கழகச் சார்பில் போட்டியிடும்போது, நான் சுயநலத்தோடு குளித்தலையை மட்டும் பார்த்துக் கொண்டால் போதுமா?
இந்தத் தொகுதிகள் அனைத்திற்கும் சென்று ஏராளமான கூட்டங்களில் கலந்து கொண்டேன். என் கடமையினைச் சரிவர ஆற்றிய திருப்தியும் பெற்றேன். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பதுபோல, என் தொகுதியிலும் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், இலட்சிய நடிகர் எஸ். எஸ். ஆர். ஆகியோர் எனக்காக ஒருநாள் வாக்குக் கேட்க வந்து சிறப்பித்தனர். தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கின.
நாவலர், கண்ணதாசன், அன்பில், ராஜேந்திரன் ஆகியோரின் தோல்விகள் எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் சங்கடத்தையும் ஏற்படுத்தின. என்றாலும் அண்ணா, அன்பழகன், ஆசைத்தம்பி, சத்தியவாணிமுத்து, ப. உ. ச. போன்றோர் வெற்றி பெற்று நாங்கள் சட்டமன்றத்தில் பதினைந்து பேரும், பாராளுமன்றத்தில் இரண்டு பேரும் முதன் முறையாகக் கழகத்தின் சார்பில் இடம் பெற்று அமர்ந்ததும், அடுத்த பத்தே ஆண்டுகளில் நமது ஈடு இணையற்ற தியாகம், தொண்டுகளின் மேன்மையால் ஆட்சிபீடத்தில் இடம் பெற்று அமர்ந்ததும், 1956-57-ஆம் ஆண்டுகளில் உலக வரலாற்று ஏடுகளில் சிறப்பான இடத்தை நிரப்பிடத் தக்கவை அல்லவா?
அண்மையில்கூட நான் குளித்தலை சென்றிருந்தேன். குடும்பப் பாசத்தினைப் பொழிந்து, தமக்குள் பற்பல கருத்து வேறுபாடுகள் காணப்படினும், என்னைக் காணும்போது அவற்றினை மறந்து, ஒன்றுபட்டு நின்று, அப்போது என்னோடு உறுதுணையாக இருந்து பணியாற்றியவர்கள் இன்று என்னருகேயிருந்து, ஊர் ஊராக நான் சென்று கண்டவர்கள், என்னை மறவாமல் காண வந்து, என்னைக் களிப்புக் கடலில் ஆழ்த்தினார்கள். நான் அதற்கு பிறகும் மூன்று முறை இரண்டு தொகுதிகளுக்குச் சொந்தக்காரனாகி விட்டாலும், குளித்தலைப் பகுதி மக்களுடன் நான் கொண்ட உறவு வெறும் தேர்தல் கால உறவாகவா இருந்தது?
இல்லையே! இந்தக் குடும்பப் பாசந்தானே நமது கழகத்தின் உயிர்ப்புச் சக்தியாக விளங்கி நம்மைக் காத்து வருகின்றது! 1857-ஆம் ஆண்டுதான் இந்தியத் துணைக் கண்டத்து மக்கள் வடக்கிலும்-தெற்கிலும் ஒருமுகமாகவும். தெளிவாகவும் தங்கள் அடிமை நிலையை உணர்ந்து, அந்நிய ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவதற்கு ஒன்றுபட்டுப் போராடினார்கள் என்று சொல்லப்படுகிறது. அதேபோல, அதற்குச் சரியாக ஒரு நூற்றாண்டுக்குப் பின்னால், 1957-ல் தான் இந்தநாட்டு மக்கள் தங்களுடைய முழு உரிமையையும், நாட்டின் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு தேர்தல் களத்தில் தங்கள் உணர்வுகளைக் காட்டிக்கொண்டனர் என்று சொல்லலாம்.
1857-ல் 'முதலாவது சுதந்திரப் போர்' என்றால், 1957-ல்'இரண்டாவது சுதந்திரப் போர்' நடந்த ஆண்டாகவே கொள்ள வேண்டும். 1857-ல் அப்போதிருந்த நிலைமைக்கேற்ப, அந்நியர்களை விரட்ட சில முடியரசுவாதிகளுக்கு ஆதரவாகவும், அரண்மனைச் சதிகாரர்களின் கைப்பாவையாகவும், சுதந்திரப் போர் வீரர்கள் துப்பாக்கியும் வாளுமேந்திக் களம் புகுந்தார்கள். 1957-ல் புத்துலக விழிப்புணர்வுகளுக்கேற்ப, ஜன நாயகத்தின் சார்பிலும், எதேச்சாதிகாரத்துக்கு எதிராகவும், வாக்குச் சீட்டை ஏந்திய கரத்தோடு தேர்தல் களத்தில் தங்கள் கருத்துக்களை நிலைநாட்டத் தலைப்பட்டார்கள்.
இந்தியத் துணைக் கண்டத்தின் ஜனநாயகப் பாரம்பரியமே 1957 இரண்டாவது பொதுத் தேர்தலிலிருந்துதான் முளைவிடத் தொடங்கிற்று என்றால், அது மிகைப்படச் சொல்வதாகாது. காங்கிரஸ் கட்சியின் எதேச்சாதிகாரத்திற்கு எதிர்க் குரல் கொடுத்து இந்த நாடு ஒரு கட்சிக்கு அல்ல; அதில் வாழும் அத்தனை கோடி மக்களுக்கும் சொந்தமானது என்பதை மெய்ப்பிப்பதற்குத் துடித்த தூயவர்கள் எல்லாம், அப்போதிருந்த அரசியல் விழிப்பற்ற மக்களால் சில சமயம் கேலி பேசப்பட்டார்கள்.
தூற்றப்பட்டார்கள். காங்கிரசை எதிர்த்து நிற்பதே நாட்டுக்குத் துரோகம் என்றுகூடப் பிரச்சாரம் செய்யப்பட்டது. என்றாலும், நாட்டு நலனில் அக்கறை கொண்ட நல்லறிவாளர்கள், எதிர்காலத் தலைமுறையினரின் ஜன நாயக வாழ்வையும், நாட்டின் முன்னேற்றத்தையும் கருதித் தங்களை ஜனநாயகப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டார்கள். இந்தியத் துணைக் கண்டத்தில் மேகம்போல் கப்ப முனைந்த எதேச்சாதிகாரத்தைக் கதிரவன் ஒளிபாய்ச்சி ஒழித்துக் கட்ட முனைந்த உத்தமர்களில் முதன்மையானவராக அறிஞர் அண்ணா விளங்கினார்.
இன்று, இந்தியத் துணைக் கண்டத்தில் காணப்படும் உரிமை உணர்வுகளுக்கும் ஜனநாயகப் பெருமைகளுக்கும் முன்னோடியாகக் குறிப்பிடப்பட வேண்டியவர் அறிஞர் அண்ணா அவர்கள் தாம் என்பதை இனி வருங்காலம் தெளிவாக உணர்த்தவே செய்யும். 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது பொதுத்தேர்தலில், முதன்முறையாக வேட்பாளர்களாகப் போட்டியிட்ட தி. மு. கழத்தினர் தாங்கள் எப்படியும் வெற்றி. அடைந்தாக வேண்டும்; பதவியிலே சென்று அமர வேண்டும்; எம்.
எல். ஏ. என்கிற பட்டத்தினைத் தங்கள் பெயரோடு ஒட்டிக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தின் காரணமாக அந்தப் போட்டியிலே ஈடுபடவில்லை. தங்களை யாரும் அசைக்க முடியாது என்று ஆணவ முரசம் கொட்டிக்கொண்டிருந்த காங்கிரசின் கோட்டைக்கதவில் சில கீறல்களை ஏற்படுத்தியாக வேண்டும்; இப்போது உண்டாக்குகிற அந்தக் கீறல், அடுத்தடுத்து நடைபெறும் மோதுதல்களில் கதவு தகர்ந்து கோட்டை பிடிபடும் சூழ்நிலையை உருவாக்கும் என்ற காலக் கணிப்போடுதான் அந்தப் போட்டியிலே கழகத்தினர் ஈடுபட்டார்கள்.
ஆகவே அவர்கள் வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படவில்லை. பணம், பரம்பரைக் கௌரவம், அதிகாரம் இவையெல்லாம் பயன்படுத்தப்பட்ட அந்தத் தேர்தலில், காசற்றவர்களாய், ஆனால் மனத்திலே மாசற்றவர்களாய் உறுதியோடு தேர்தல் களத்தில் நின்று காங்கிரஸ் கட்சியின் மூர்க்கமான பலத்திற்கு ஈடு கொடுத்தார்கள். பழங்காலத்தில் பாரசீகர்களை எதிர்த்து நின்ற கிரேக்கர்களைப்போல, ரோமானியர்களை எதிர்த்து நின்ற கீழ்த்திசை நாட்டவர்களைப்போல, வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல், காங்கிரசை எதிர்ப்பதையும் அதன் ஆணவத்தைக் குறைப்பதையும் தமது பிறவிக் கடன்களில் ஒன்றாக எண்ணியே கழகத் தோழரும் அந்தத் தேர்தலில் பணியாற்றினார்கள்.
"தேர்தலில் ஈடுபட்டுத்தான் அந்தஸ்து தேடிக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் அறிமுகம் இல்லாதவர்களல்ல தி. மு. கழகத்தில் இருப்பவர்கள். நாட்டிற்குப் புதியதோர் அந்தஸ்து தேடித் தருவதற்காகவே தி. மு. கழகம் தேர்தலில் ஈடுபடுகின்றது" என்று அறிஞர் அண்ணா அவர்கள் 10-2-57-ல் நடைபெற்ற தேர்தல் சிறப்பு மாநாட்டில் கூறியதற்கேற்ப, நாட்டுக்குப் புதிய அந்தஸ்தைத் தேடித்தரும் தூதுவர்களாகவே ஒவ்வொரு கழகத் தோழரும் பம்பரமெனச் சுற்றிப் பணியாற்றினார்கள்.
1957 தேர்தலில் தி. மு. கழகம் ஈடுபடும்போது அதற்கிருந்த வசதிகள் குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. பணம்! அது பற்றி வாழ்க்கையிலேயே கவலைப்படாத தி. மு. கழகத் தோழர்கள் தேர்தலிலும் கவலைப்படவே இல்லை! மற்றவை பிரச்சார வசதிகள் அது அவரவர்களுக்கு அண்ணன் கற்றுத் தந்த அரசியல் பாடமும். வாழ்க்கையில் கண்டு தேர்ந்த அனுபவப் படிப்புமே ஆகும். சிறப்பு மாநாட்டில் பேசிய தோழர்களில் சிலர் காங்கிரசுக்கு இருந்த பல்வேறு பலங்களை வருணித்து, அதற்குள்ள பண பலத்தையும் கூறி, அது நமக்கு இல்லையே என்று ஏங்கினார்கள்.
அவர்களுக்குப் பதில் சொல்லும் வகையில், "எதிர்த்துப் போட்டி இடுபவர்களின் பண பலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பணியாற்றுங்கள். வீட்டிலுள்ள தட்டுமுட்டுச் சாமான்களை விற்றேனும் அவசியமான செலவுகளைச் சரிக்கட்டித் தேர்தல் பணியாற்றுங்கள்" என்பது அறிஞர் அண்ணா இட்ட கட்டளை. வாழ்க்கைப் பிரச்சினைக்கே பணத்திற்காகத் திணறிக் கொண்டிருந்த கழகத் தோழர்கள், தேர்தல் பணிக்காகவும், பணத்திற்கு அலைந்ததை என்னால் மறக்க முடியாது.
இவை அனைத்தும் எதற்காக? அறிஞர் அண்
ணாவும், கழகமும் இட்ட கட்டளை என்பது ஒன்று. நாட்டில் ஜனநாயகம் தழைக்கவும், காங்கிரஸ் கட்சியின் சர்வாதிகாரம் சாயவும் எந்த விலையாவது கொடுத்துத் தீர வேண்டும் என்பது மற்றொன்று. இந்த இரண்டு கடமைகளுக்கும் இடையில் கழகத் தோழர்களுக்கு அன்றிருந்த வேறு பல இடைஞ்சல்களும் நெருக்கடிகளும் ஏராளம். கழகத்தை ஓர் அரசியல் இயக்கமாக ஒப்புக்கொள்வதற்கே மற்றவர்கள் அப்போது அஞ்சினார்கள். கழகம் அவ்வப்போது ஈடுபடும் பல்வேறு போராட்டங்களைப் போலவே, 1957 தேர்தலையும் ஒரு போராட்டக் களமாக நினைத்துப் பணியாற்றிய கழகத் தோழர்கள் தங்களுக்கிருந்த தடங்கல்களைப் பற்றி அவ்வளவாகச் சிந்திக்கவே இல்லை.
கழகம் அப்போதுதான் முதன் முறையாகத் தேர்தலில் ஈடுபடுவதால், அதற்கெனத் தனியாகத் தேர்தல் சின்னம் ஏதும் இல்லை! இப்போது கழகத்தின் சின்னமாக உள்ள உதய சூரியன் சின்னம் அப்போது சுயேச்சைச் சின்னம். "கூடுமானவரை உங்கள் தோழர்களுக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்குவதற்கு முயற்சி செய்கிறோம்" என்பதுதான் தேர்தல் அதிகாரிகள் கழகத்திற்கு அப்போது தெரிவித்த ஆறுதல் மொழி. கழகத்தின் பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னம் கிடைக்கவில்லை.
அவருக்கு ஒதுக்கப் பட்டது கோழிச் சின்னம். காஞ்சியிலும், குளித்தலையிலும் 'உதய சூரியனுக்கே வாக்களியுங்கள்' என்று ஓயாமல் பிரச்சாரம் செய்துவிட்டு, சேலத்திற்குச் சென்றதும் 'உதய சூரியனுக்கு வேண்டாம் (சேலத்தில் ஒரு சுயேச்சையாளருக்கு உதய சூரியன் சின்னம் வழங்கப்பட்டு விட்டது.)
கோழிக்கே உங்கள் ஆதரவைத் தாருங்கள்' என்று பிரச்சாரம் செய்த சங்கட நிலைமையை அப்போது சந்தித்தோம். அது மட்டுமா? தேர்தல் பணிகளின் அரிச்சுவடி கூட எங்களுக்குத் தெரியாத நேரம் அது. "நமக்குத் தொகுதிகள் எப்படி இருக்கின்றன என்பது தெரியாது. மாநாட்டுக்குத் திடல்களைப் பார்த்துத் தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும், அசட்டையுடன்தான் நாம் தொகுதிகளைத் தேர்ந்தெடுத்தோம், ஏனென்றால், தேர்தல் பணியில் நமது அனுபவம் அவ்வளவே" என்று அறிஞர் அண்ணா அவர்களே சொன்னதைக் காட்டிலும், அதிகமாக, 1957-60 கழகத்தவர்கட்கு இருந்த தேர்தல் பணித் திறமைகளைப் பற்றிச் சொல்வதற்கில்லை.
இதுபோன்ற எண்ணறற சங்கடங்களினூடே நாங்கள் 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டோம். கழகப் பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள். சேலத்தில் சிறு அளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக்கான வாய்ப்பினை இழந்தார். இது எங்கள் அனைவருக்கும் ஆறாத் துயரளித்தது. தோற்றுப் போன தோழர்கள்கூட, நாவலர் வெற்றியுறாததை நினைத்து வருந்தினர். "நாவலர் வெற்றி பெறவில்லையே" என்ற துக்கம் எங்களுக்கெல்லாம் இருந்தது. "நாங்கள் 15 பேர் சட்டசபைக்குச் செல்லும்போது ஈட்டி பாய்ந்த இதயத்துடன்தான் சென்றோம்.
நமது நாவலரையும் என்றைக்கு நாம் சட்டமன்றத்தில் அழைத்துக் கொள்கிறோமோ அன்றுதான் நாம் மன நிம்மதி பெற முடியும்" -என்று, வெற்றி பெற்றதும் முதன் முதலாகச் சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் பேசினார்கள். இந்தப் பேச்சு எங்கள் அனைவருடைய உணர்ச்சியையும் எதிரொலிப்பதாக இருந்தது. கழகச் சார்பில் 112 இடங்களில் போட்டியிட்டு 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டோம். "சுதந்திரத்தின் புதிய ஜோதி அணையாமலும், குடியரசு ஆட்சி முறையின் எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டும்.
இவற்றைப் பாதுகாப்பது நமது மக்கள் இடையறாத சோதனையின் வெற்றியையே பொறுத்திருக்கிறது" என்று 1757-ல் ஜார்ஜ் வாஷிங்டன் ஜனாதிபதியானதும் முதல் பேச்சில் குறிப்பிட்டார். இதே பாணியில் இதற்குச் சரியாக 150 ஆண்டுகள் கழித்துத் தென்னகத்தின் பெருந்தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் 1957 பொதுத் தேர்தலில் கழகம் செய்து பார்க்கும் சோதனையின் வெற்றியில் எதிர்கால நல்வாழ்வையும், குடியரசு ஆட்சி முறையின் சிறப்பையும் காப்பதற்கு முயற்சி எடுத்துக்கொண்டார்.
அன்றையத் தேர்தல், அறிஞர் அண்ணா அவர்களின் ஜனநாயகப பற்றுக்கும் எதிர்கால நல்வாழ்வுக்கும் அடித்தளம் அமைப்பதில் அவருக்கிருந்த ஆர்வத்துக்கும் ஒரு பரிசோதனைக் களமாகவே அமைந்தது. "யுத்தம் பூரணத்தின் ஒரு பகுதி; பூரணம் என்பது அரசியல்" என்று மாவீரன் லெனின் கூறியது போல, அறிஞர் அண்ணா அவர்களின் கணிப்பீட்டில் தேர்தல் என்பது பூரணத்தின் ஒரு பகுதி பூரணம் என்பது தென்னகத்தின் நல்வாழ்வு - தமிழ் மொழியின் பாதுகாப்பு - ஜன நாயகத்தின் வளர்ச்சி - மக்கள் அனைவரின் முகத்திலும் தோன்றும் புன்னகை என்பவைகளாகவே இருந்தன.
1957 பொதுத் தேர்தலில் கழகம் ஈடுபாடு கொண்டது. தேர்தலகளத்தில் கழகத் தோழர்கள் ஆற்றிய பணிகளையும், ஜனநாயகத்திற்குப் பாமர மக்களிடையும் கிடைத்த செல்வாக்கையும் இப்போது நினைத்துப் பார்க்கும்போது யாருக்கும் ஒரு பணிவு உணர்ச்சி வராமற் போகாது. பிற்காலச் சோழர்கள் ஆட்சிமுறை தமிழகத்தில் ஒரு பொற்காலத்தைத் தோற்றுவித்ததாகத் துல்லியமாக வரலாறு குறிப்பிடுவதைப் போல, 1957 பொதுத் தேர்தலைத் தொடர்ந்தும் தமிழகத்தில் ஒரு பொற்காலம் தோற்றுவிக்கப்பட்டது என்பது முற்றும் உண்மை.
நெடுந்தொலைவு பாலைவனத்தில் பிரயாணம் செய்துவிட்டு ஓரிடத்தில் குளிர்ந்த நீரோடையைக் காணும் பிரயாணியின் மகிழ்ச்சி ஒவ்வொருவரின் செயலிலும் ஆர்வத்திலும் அப்போது பிரதிபலித்ததை அரசியலைக் கூர்ந்து கவனித்தோர் உணரவே செய்தனர். நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் ஏற்றம் கொடுக்கத் திரண்டெழுந்த சக்திக்கும், அதனை எதிர்க்கும் எதேச்சாதிகாரத்துக்கும் ஏற்படும் மோதுதல்களின் தன்மையை 1957 பொதுத் தேர்தலின் வாக்குப் பதிவு நாட்களிலும், வாக்குகள் எண்ணப் பட்ட நாட்களிலும் தமிழகம சரியாகக் கண்டது.
ஜனநாயகத்துக்குள்ள பலவீனமான பகுதிகள் அனைத்தும் அப்போது காங்கிரஸ் கட்சியின் மொதத உடைமைகளாக இருந்தன. ஜனநாயகத்திறகு உள்ள சிறப்புக்கள் அனைத்தும் அறிஞர் அணணாவின் நம்பிக்கைக் கருவூலங்களாகத் திகழ்ந்தன. ஏழ்மை, வறுமை, படிப்பின்மை, சாதிப் பாகுபாடு ஆகிய அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் காலத்து வாக்குகள் காய்த்துத் தொங்கும் மரங்களாக வேரூன்றி வளர்ந்து கிடப்பதைக் கழகத் தோழர்கள் கண்ணாறக் காணும் நாட்களாக அவை இருந்தன.
காஞ்சியில், சேலத்தில், குளித்தலையில், சென்னையில் கழகத் தோழர்கள் போட்டியிட்ட தொகுதிகளிலெல்லாம் நடைபெற்ற வன்முறைகளும், ஜனநாயக விரோதச் செயல்களும் சொல்லும் தரமன்று! நண்பர் கண்ணதாசன் போட்டியிட்ட திருக்கோட்டியூர்த் தொகுதியில் சில வாக்குச் சாவடிகளில் வாக்குகள் எண்ணத் தலைப்பட்டபோது வாக்குப் பெட்டிகள் திறந்தே கிடந்தன. வைக்கப்பட்ட சீல்கள் என்னவாயின என்று நண்பர் கண்ணதாசனும், மற்ற வேட்பாளர்களும் கேட்ட கேள்விக்குப் பதிலே கிடைக்கவில்லை.
சிங்கம்புணரியில் காங்கிரசார் ஓட்டுக்குப் பணம் கொடுத்தபோது கழகத் தோழர்கள் கையும் மெய்யுமாகவே பிடித்துக் காட்டினார்கள். கழக வேட்பாளர்கள் வெற்றிபெற்ற இடங்களில் முடிவுகளை அறிவிப்பதில் அசாதாரணத் தயக்கம் காட்டப்பட்டது. அது ஏன் என்பதற்கு விடை கிடைக்கவே இல்லை. 1957 தேர்தலில் நடைபெற்ற மற்றொரு விசேஷம் கம்யூனிஸ்டுகள் நடந்து கொண்ட முறையாகும். "காங்கிரசுக்கே வாக்களியுங்கள்; ஆனால் கழகம் வெற்றி பெற வழிவிடாதீர்" என்பதுதான் அவர்களுடைய லட்சியமாக இருந்தது.
காஞ்சியிலும், சேலத்திலும் கம்யூனிஸ்டுகள் நடந்து கொண்ட முறை அவர்கள் போற்றும் கொள்கைகளுக்கே உகந்ததுதானா என்பதைப் பரிசீலனை செய்து பார்க்கும் நிலையில் அப்போது அவர்கள் இல்லை. இந்த இரு இடங்களில் கம்யூனிஸ்டுகள் ஜாமீன் தொகை கூட இழந்தார்கள் என்பதும் முக்கியமானதாகும். நான் போட்டியிட்ட 1957-ஆம் ஆண்டுத் தேர்தலில் குளித்தலையில் மொத்தம் ஏழு வேட்பாளர்கள் போட்டியிட்டோம். நான் 22, 785 வாக்குகளும், என்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திரு கே.
தர்மலிங்கம் 14, 489 வாக்குகளும் பெற்றோம். குளித்தலையில் செல்லாத வாக்குகள் நான்குதான்; இதிலிருந்தே தேர்தல் பணிகளைக் கழகத் தோழர்களும் மற்றக் கட்சியினரும் எப்படிச் செய்திருக்கிறார்கள் என்பது புலனாகும். பின்தங்கிய பகுதியான குளித்தலைத் தொகுதியில் மொத்தம் பதிவான 48, 163 வாக்குகளில் செல்லாதவை நான்குதான் என்றால், ஒவ்வொரு வாக்கும் எத்தகைய பொறுப்புணர்வோடும் பெருமதிப்போடும் சேகரிக்கப்பட்டிருக்கின்றது என்பதும், தோழர்களின் செயலாற்றலும் நன்கு வெளிப்பட்டன.
என் தொகுதியிலும் அப்போது கம்யூனிஸ்டுகள் தமது கைவரிசையைக் காட்டாமலில்லை. திரு எஸ். சண்முகம் என்ற சுயேச்சையை ஆதரித்துக் கம்யூனிஸ்டுகள் கழகத்தின் மீதும், என்மீதும் சுமத்திய அபாண்டங்கள் கொஞ்சமல்ல. ஆயினும், காஞ்சி, சேலம் போலவே குளித்தலையிலும் கம்யூனிஸ்ட் சார்பு வேட்பாளர் ஜாமீன் பறிகொடுத்தார். குளித்தலைத் தொகுதியில் மற்றுமோர் அதிசயம் நிகழ்ந்தது. தண்ணீர்பள்ளி என்ற கிராமத்தின் வாக்குச் சாவடியில் உதயசூரியனுக்குத் தவிர, மற்ற எந்தச் சின்னத்திற்கும் ஒரு வாக்குகூடப் போடப்படவில்லை!
இது ஓர் அகில இந்திய 'ரிக்கார்ட்' என்று பேசப்பட்டது. மேலும் எனக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் 22,785-ல் ஏறக்குறைய 12,580 வாக்குகள் தாய்க்குலம் வழங்கிய வாக்குகள்தாம். இது ஒரு தனிச் சிறப்பு என்பதாக அப்போது பேசப்பட்டது. இது போன்று பல்வேறு சங்கடங்கள், சிறப்புகளுக்கிடையே கழகச் சார்பாக 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டோம். மாவட்ட வாரியான கணக்குப்படி பார்த்தால் சென்னை-3; செங்கற்பட்டு-1; வடாற்காடு-4; தென் ஆற்காடு-4; சேலம்-2; திருச்சி-1 என்ற கணக்குப்படி 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், சரித்திரத்தில் மும்முடிச் சோழன் என்று சொல்லப்படுவதைப் போல, சேர-சோழ- பாண்டிய மண்டலங்களுக்கு நான் ஒருவனே பிரதிநிதி என்பதுபோல், தொண்டை நாடு, கொங்கு நாடு தவிர்த்த மற்றப் பகுதிகளில் நான் ஒருவன் மட்டுமே கழகச்சார்பாகத் தேர்தெடுக்கப்பட்டேன். இதுபற்றிச் சிலம்புச் செல்வர் ம. பொ. சி. அவர்கள்கூட வேடிக்கையாக, 'கழகம் தொண்டை நாட்டில்தான் வெற்றி பெற்றுள்ளது. மற்றப் பகுதிகளில் எங்கே காணோம்?'
என்று அப்போது கூறினார். அதற்குப் பதில் சொல்லும் வகையில் அண்ணா அவர்களும், "உண்மை தான். அவருக்கு நான் ஒன்று கூறுவேன். தொண்டை நன்னாடு சான்றோருடைத்து என்ற பழமொழியை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். சான்றோருடைய தொண்டை. நாட்டில் கழகத்திற்கு வெற்றி கிட்டியுள்ளது. இந்தச் சான்றோர் இதர நாடுகளிலும் வெற்றியைத் தேடித்தருவார்கள்" என்று கூறினார்.
