உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

1956-ம் 1957-ம் · 100 / 391

1956-ம் 1957-ம் பா ர்க்கப் போனால் 1956-57-ல் கழகம் தேர்தல் காலத்தில் போட்டியிட்டு ஜனநாயகக் கடமையாற்றத் துணிந்த நேரம். இயற்கையாகவே உலகம் ஒரு முன்னேற்றத்துக்குரிய கட்டத்தைக் கடந்து போகக் குறிப்பிட்டுக் கொண்ட காலமாகவே நாம் கொள்ளவேண்டும். இந்தியாவின் ஜனநாயகப் பாதுகாப்புக்கும் அதன் வளர்ச்சிக்கும், 1957 தேர்தலில் கழகம் ஈடுபட்டதன் மூலம் எத்தகு பலமும் வாழ்வும் கிடைத்தன என்பதை நான் சொல்வதைக் காட்டிலும் வருங்கால வரலாறு துல்லியமாகவும் சுவைபடவும் சொல்லும்.

1956-57-ல் உலகத்தில் எத்தனையோ பெரும் விளைவுகளும் விபத்துக்களும் நிகழ்ந்தன. அதேபோல், கழகத்தின் வரலாற்றிலும் விபத்துக்கள் நடைபெற்றிருக்கின்றன. தேர்தலில் கழகம் ஈடுபட்டதன் காரணமாகத் தமிழகத்தின் அரசியலுக்குக் குறிப்பாகவும், இந்திய அரசியலுக்குப் பொதுவாகவும், பெருஞ்சிறப்பு ஏற்பட்டது என்பதுடன், கழகத்திற்கும் தமிழகத்துக்கும் அப்போது நேர்ந்த விபத்துக்களையும் என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

1956 அக்டோபர் திங்களில் விருதை சங்கரலிங்கனார் தமிழ்நாடு என்று இந்த மாநிலத்திற்குப் பெயர் வைக்கவேண்டுமென்று கோரி உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார். நாங்கள் அழுதோம்; தமிழகம் அழுதது; தமிழ்நாட்டு அரசியல் பீடத்தை அலங்கரித்த காமராசரும், அவரது சீடகோடிகளும் கேலி பேசினர். "சங்கரலிங்கனாரைச் சாகடித்து விட்டீர்கள், உங்கள் அலட்சியப் போக்கினால், அவருடைய உள்ளத்தில் ததும்பிக் கொண்டிருந்த ஆசையில் ஒன்றே ஒன்றையாவது, தமிழ்நாடு என்று பெயர் தரும் காரியத்தையாவது செய்யக்கூடாதா என்று காங்கிரஸ் ஆட்சியைக் கேட்கும் அளவுக்காவது தமிழகம் செயல்படலாகாதா?"

என்று அண்ணா அவர்கள, 21-10-56 "திராவிட நாடு" இதழில் "தம்பிக்கு மடல்" குறிப்பிட்டு ஏங்கினார்கள். அவருடைய ஏக்கம், 1967-ல் கனியாகி, அவருடைய திருக்கரங்களாலேயே இந்த மாநிலத்திற்குத் 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டும் உத்தரவில் கையொப்பமிட்டார்கள்.

"தமிழ்நாடு" பெயர் சூட்டு விழாவில் தான் என் அருமை அண்ணா அவர்கள், கடைசியாக அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதை எண்ணுந்தோறும், தியாகி சங்கரலிங்கனாரின் நினைவும் எனக்குக் கூடவே தோன்றுவது வாடிக்கையாகி விட்டிருக்கிறது. அதே போல், தூத்துக்குடித் தங்கம்- கொள்கை வீரன் கே.வி.கே. சாமி 1956 செப்டம்பர் திங்களில் கொடியவர்களால் மிருகத்தனமாகத்தாக்கிக் கொலை செய்யப்பட்டார். இது தமிழகத்தின் துடிப்பான இளைஞர்களுக்குக் கொடியவர்கள் விடுத்த அறைகூவலாகவும் இயக்கத்திற்குப் பேரிடியாகவும் வாய்த்தது.

அதே போல், இந்திய அரசியல் சட்டத்தின் சிற்பிகளில் ஒருவரும் காலமெல்லாம் தாழ்த்தப்பட்ட பெருஞ்சமுதாயத்திற்குப் போராடுவதி லேயே வாழ்வைக் கழித்தவரும், பெருஞ் சூறைக்குப் பின், குளிர்ந்த தென்றல் வீசுவதற்கொப்ப, இந்த நாட்டின் சனாதன தர்மத்துக் கொடுமைகளிலிருந்து பெரும் பகுதி மக்களைக் காப்பாற்றப் பிறந்தவர் எனப் போற்றப்பட்டவருமான அம்பேத்கார் அவர்கள் 1956 டிசம்பரில் மறைந்தார். சாதாரணக் காற்றையே மரக்குழாயில் இறக்கியும் ஏற்றியும், அற்புத நாதம் எழுப்பித் தமிழகத்தை இசை மழையில் நனைய வைத்த நாதசுரப் பேரரசர் இராசரத்தினம் அவர்களின் மறைவு தமிழ் இயக்கத்திற்குப்பெரும் இழப்பு என்று எல்லாராலும் ஒருமுகமாக ஒப்புக் கொள்ளப்பட்டது.

அவர் பிரிவும் 1956 டிசம்பரில் நேர்ந்தது. குறிப்பான இவற்றை விடுத்து, அகில உலக அரசியலுக்குப் போனாலும்,1956-57-ல் பெரும் விளைவுகள்- மாறுதல்கள் நேர்ந்திருக்கின்றன! 1956 ஏப்ரலில் தான் கிழக்கு ஐரோப்பாவில்- குறிப்பாக ஸ்டாலின் வேய்ந்து வைத்திருந்த பலமான இரும்புத்திரை கிழிக்கப் பட்டது. உலகமே அதிர்ச்சியும் பயமும் கணந்தோறும் கொள்ளத்தக்க வகையில், வல்லரசுகளின் கெடுபிடிப் போரின் நடுநாயகமாக விளங்கிய இரும்புத்திரை 1956-ல் யூகோ அதிபர் டிட்டோவின் உறுதியால் கிழிபட்டது.

அந்த நாளில் ருஷ்யக் கம்யூனிஸ்டுக் கட்சிக்குப் பிறவி எதிரியாகக் கருதப்பட்ட யூகோஸ்லாவியக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர் டிட்டோ தாராள மனத்தோடும் கோலாகலமான வைபவங்களோடும் ருஷ்யாவுக்கு வரவழைக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியைப் போப்பாண்டவருக்குப் பெரும் எதிரியாக விளங்கிய எட்டாம் ஹென்றி, போப் ஆண்டவரைத் தனயனுக்குரிய மரியாதையோடு சென்று தரிசித்தால் எப்படி இருந்திருக்குமோ, அப்படி இருந்ததாக வரலாற்றாசிரியன் ஒருவன் வர்ணிக்கிறான்.

டிட்டோவினால் கிழிக்கப்பட்ட இரும்புத் திரை ஒழிந்ததற்குப் பின்னால், சர்வ தேச அரசியலில் வசந்த காலத் தென்றல் வீசும் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக, 1956 பிற்பகுதி அக்டோபரில் அங்கேரியை ருஷ்யா ஆக்ரமித்த செயலைக் கண்டு உலகம் மேலும் ஒருமுறை விம்மிக் குலுங்கிற்று. அதே போல், 1956-ல் தான், செஞ்சீனா, திபேத், நாட்டுச் சுதந்திரத்தில் ஆதிக்கம் செலுத்த துவங்கிற்று. 1956 ஜூலையில் தான் சூயஸ் கால்வாயை அதிபர் நாசர் சர்வதேச அரசியல் கொந்தளிப்புகளுக்கிடையில் தேசியமயமாக்கினார்.

அதற்கடுத்து, நவம்பர் திங்களில் அதே எகிப்தை, இஸ்ரேல் நாடு போர்க்களத்தில் தோற்கடித்தது. உலகில் பெரும் பரபரப்பையும், குருஷ்சேவுக்கு விளம்பரத்தையும் தேடித்தந்த 20-வது (ருஷ்ய சோவியத் கட்சியின்) காங்கிரஸ் 1956-ல் தான் நடைபெற்றது. இந்தக் காங்கிரஸ் கூட்டத்தில் தான் ஸ்டாலின் தன் பெருமைக்குரிய இடத்திலிருந்து மிகக் கீழ்த்தரத்திற்கு எறியப்பட்டார். செத்துப் போனவர்களையும் விடாமல் கம்யூனிசம் எப்படிப் பழிக்கும் ஏசும்-என்பதை 1955 திரையைக் கிழித்துக் காட்டிற்று.

1956 தான், இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் அறிவிக்கப்பட்ட நேரம். அந்தத் திட்டத்தில் தென்னகம் பாதிக்கப்பட்டதைக் கதைகதையாக பலரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கழகத்தின் சங்கநாதம், மாற்றுக் கருத்துக் கொண்டோராலேயே முழக்கமிடப்பட்டுக் கொணடிருந்தது. இந்தச் சூழ்நிலையில் தான் நான் குளித்தலைத் தொகுதியில் ஒவ்வொரு கிராமமாகச் சென்று தேர்தல் பணியாற்றிக் கொண்டிருந்தேன். 1957 பொதுத் தேர்தலையொட்டி 10-2-57 அன்று சென்னையில் தேர்தல் சிறப்பு மாநாடு நடைபெற்றது.

அதில் அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை எங்களுக்கெல்லாம் புதிய தெம்பையும் ஆர்வத்தையும் ஊட்டிற்று. கழகத்தின் முதன் முதலான தேர்தல் அறிக்கை அந்த மாநாட்டில் தான் பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த மாநாட்டில் நான் மிகக் குறைவாகவே பேசினேன்! அந்தப் பேச்சில்- "கண்ணீர்த் துளிகள் ஒழிய வேண்டும் என்கிறார் பெரியார். நாமும் அதைத்தான் சொல்கிறோம். நாட்டு மக்களின் முகத்தில் வழிந்தோடும் கண்ணீர்த் துளிகள் ஒழிய வேண்டும்.

மக்கள் முகத்தில் மகிழ்ச்சி பிறக்க வேண்டும் என்கிறோம் நாம்" என்ற பகுதி மட்டுமே அறிஞர் அண்ணா அவர்களின் மேற்பார்வையில் 'நம்நாடு' இதழில் வெளியிடப்பட்டது. 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்னும் இன்றைய நமது அரசின் குறிக்கோள் எவ்வளவு பொருத்தமானது! சிறப்பு மாநாட்டை அடுத்து, தேர்தல் பிரச்சாரம் தமிழகத்தில் கழகத்தாராலும், குறிப்பாக அறிஞர் அண்ணா அவர்களாலும், பெருஞ் சூடும் சுவையும் நிரம்பியதாக ஆயிற்று.

"காமராசரை விடத் தமிழகம் பெரிது என்பதை வாக்காளர் உணர வேண்டும்" என்பதைத் தான் அறிஞர் அண்ணா அவர்கள் அப்போதைய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் வலியுறுத்திச் சொல்வார்கள். காமராசரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று அப்போது பெரியார் உட்படப் பலரும் வற்புறுத்திக் கொண்டிருந்த நேரம்! அதற்கு அண்ணா அவர்கள், "அந்தக் கரம் வலுப்பெற்றால், தமிழரின் குரல் வளையை நெறிக்கும், அந்தக் கரம் வலுப்பெற்றால் கழகத் தலைவரையே தலையில் குட்டும், அந்தக் கரம் வடநாட்டவருக்குக் காவடி தூக்கும் கரம்: எனவே அந்தக் கரத்திற்கு வலுவூட்டாதீர்கள்" என்றும், "காமராசர் எதில் வல்லவர்?

தமிழ் மொழியைக் காப்பதில், வளர்ப்பதில்-வல்லவரா? தமிழர் தம் உரிமைகளைக் காப்பதில் வல்லவரா காமராசர்? / தமிழ் நாட்டின் எல்லைகளை காப்பதில் வல்லவராக இருந்தாரா காமராசர்? இல்லையே!" என்றும், 1957 பிப்ரவரி இறுதி வாரத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தொடர்ந்து அடுக்கிய வாதம் மக்களிடையில் விழிப்பூட்டியது. பிப்ரவரி இறுதியில் சென்னையிலும், காஞ்சியிலும் அறிஞர் அண்ணா அவர்கள் தெரிவித்த கருத்துக்களைக் கேட்டு மேலும், மேலும்நாள் தோறும் நான் குளித்தலையில் எனக்கிட்ட ஜனநாயகப் பணியைச் சிறப்பாக ஆற்ற வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டிருந்தேன்.

காமராசரின் கரம்- அவருக்குப் பின் கட்சியிலிருந்த பக்தவத்சலத்தின் கரம் எத்தனை பேருடைய கழுத்தை நெறித்தது என்பதை 1965-66-ல் நாடே கண்டதல்லவா, இந்தி எதிர்ப்புப் போரில்! 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நமது ஆதரவினை நாடியவர்களுக்காக வாக்கு கேட்டோம். ஆனால் நாமே தேர்தலில் ஈடுபடுவதும், நமக்காகப் பொது மக்களிடம் வாக்குக் கேட்பதும் புதுமையான அனுபவமாக இருந்தது.