நெஞ்சுக்கு நீதி
வெட்ட வெளியும் சட்ட சபையும் · 99 / 391
வெட்ட வெளியும் சட்ட சபையும் கழகப் பிரசாரம் பல முனைகளிலும் தீவிரமாக்கப்பட்டு, கழகத் தலைவர்கள் செல்லுகின்ற இடங்களில் எல்லாம் பல்லாயிரக்கணக்கிலே மக்கள் குழுமியிருந்து கருத்துரைகளைக் கேட்கும் நிலை நாடெங்கும் உருவாயிற்று. பட்டி தொட்டிகளில் எல்லாம் புதிய கிளைகள் உருவாயின. உறுப்பினர்களின் எண்ணிக்கை இலட்சத்தைத் தாண்டியது. ஏடுகள் வாயிலாகவும், மேடைகள் வாயிலாகவும் எழுச்சி மிகுந்த நாடகங்கள் வாயிலாகவும், சுவை மிக்க கலை நிகழ்ச்சிகள் வாயிலாகவும் கழகப் பிரசாரம் தீவிரமாக நடைபெற்றது.
சுதந்திரத்திற்குப் பிறகு ஏழை எளிய மக்களுக்குச் சுகவாழ்வு அளிப்பதாகப் பறை சாற்றிக்கொண்டு, ஆட்சி பீடமேறிய காங்கிரசார் அந்த வாக்குறுதியை மறந்துவிட்டு, அந்தஸ்து படைத்த சீமான்களின் அரவணைப்புப் பிள்ளைகளாக மாறி ஏழை எளிய மக்களிடம் எதேச்சாதிகார தர்பார் நடத்தியதை நாட்டு மக்கள் காட்சிபூர்வமாகக் கண்டு, தங்கள் கஷ்டங்களையே கழகத்தினரும் எடுத்து விளக்குகிறார்கள் என்பதை உணர்ந்து, கழகத்தினர்மீது பற்றும் பாசமும் கொண்டிடத் தொடங்கினர். அண்ணா அவர்களும், கழகத் தலைவர்களும் தமிழ்நாட்டில் சூறாவளிச் சுற்றுப் பயணங்களை நிகழ்த்தினர்.
காங்கிரஸ் கட்சியின் முழு வடிவம் கழகத்தின் பிரசாரத்தால் மூளியாகியது என்பதைப் புரிந்துகொண்டு, அதைச் சகிக்க முடியாத காங்கிரஸ் தலைவர் காமராசர், கழகத்திற்கு ஒரு பெரிய அறைகூவலை விட்டார். "வெட்டவெளியிலே நின்றுகொண்டு எங்களைப் பற்றிப் பேசுகிற கழகத்திற்கு மக்கள் செல்வாக்கு இல்லை. அப்படி மக்கள் இருந்தால் சட்டசபைக்கு வந்து கழகத்தினர் பேசத் தயாரா?"
இந்த அறைகூவலைக் காமராசர் பல கூட்டங்களில் கழகத்தை நோக்கி விடுத்தார். அதற்கு அண்ணா அவர்கள் சொன்ன பதில் வேடிக்கையானது; சுவை நிறைந்தது; ஆனால் ஆழ்ந்த பொருளுடையது. "கோவில் வாசலில் ஒருத்தி பூ விற்றுக்கொண்டிருந்தாள். அவள் அந்த வழியாகப் போகிற சாமியாரைப் பார்த்து, 'என்ன சாமியாரே? உமக்கு எப்போது கலியாணம்?'
என்று கேட்- டாள். சாமியார் முதலில் மௌனமாகப் போய்விட்டார். சாமியாரின் மௌனத்தைக் கண்ட பூக்காரி தினந்தோறும் சாமியார் அந்த வழியாகப் போகும்பொழுதெல்லாம், பூ விற்கிற வேலையைக் கூடக் கவனிக்காமல், 'என்ன சாமியாரே, எப்போது கலியாணம்?' என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தாள். ஒரு பெண் இப்படி அடிக்கடி கேட்டால் என்னதான் சாமியாராக இருந்தாலும் வீம்பு வந்துவிடாதா? "ஒரு நாள் அந்தப் பெண்ணைப் பார்த்து, 'கலியாணமா?
நான் தயார்! நீ தயாரா?' என்று திருப்பிக் கேட்டுவிட்டார். அந்தக் கதையைப் போலத்தான் காமராசரும் நம்மைப் பார்த்து "சட்டசபைக்கு வருகிறாயா, வர முடியுமா?' என்று அறை கூவல் விடுகிறார். சாமியார் பூக்காரிக்குச் சொன்ன பதிலைக் கழகமும் ஒரு நாள் காமராசருக்குச் சொல்ல நேரிடும்" என்று அண்ணா கூறினார்.
1957 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான ஆயத்தங்களில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டது. இதற்கிடையே 1956-ல் தி.மு.கழகம் திருச்சியில் தன்னுடைய மாநில மாநாட்டை நடத்தியது. இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடிய அந்த மாநாடு கழக வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை உண்டாக்கியது. கழகப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நாவலர் நெடுஞ்செழியன் அந்த மாநாட்டிற்குத் தலைமை வகித்தார். தலைவரை வழிமொழிந்து பலர் பேசினர்.
அண்ணா வழிமொழிந்து பேசும் பொழுது நீண்ட உரை எதுவும் ஆற்றவில்லை. "தம்பி, வா! தலைமையேற்க வா. உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறோம்! வா!" இதுதான் அண்ணா நாவலரை வழிமொழிந்து பேசிய பேச்சாகும். இதற்குப் பிறகு அந்தப் பேச்சுக்கான விளக்கத்தை மாநாட்டு இறுதி உரையில் அண்ணா தந்தார். "எனக்குத் தம்பியாக இருந்தாலும், நாமெல்லாம் பார்த்து ஒருவரைப் பொதுச் செயலாளராக ஆக்கிவிட்டுப் பிறகு அவர் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடப்பதும், அந்தத் தலைமையை மதிப்பதும்தான் கட்சிக் கட்டுப்பாட்டை வளர்க்கும்.
அப்படித் தலைமைக்கு மதிப்பளித்து நடக்கும் பழக்கத்தை நான் என் அரசியல் வாழ்க்கையில் பல ஆண்டுகளாக மேற்கொண்டிருக்கிறேன்!" என்று அண்ணா பெருந்தன்மையுடன் குறிப்பிட்டது, உள்ளத்தில் பசுமையாக இருக்கிறது. அந்த மாநாட்டில் அண்ணா அவர்கள் நாட்டு மக்களைப் பார்த்து ஒரு புதிய கேள்வியை எழுப்பினார். ஏழு ஆண்டு காலக் குழந்தையாக இருக்கிற இந்தக் கழகம் பொதுத் தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்று பொதுமக்களே தீர்ப்பளிக்க வேண்டுமென்று கூறிப் போட்டியிடலாம், அல்லது போட்டியிட வேண்டாம் என்ற தீர்ப்பை வாக்குச் சீட்டுகளின் மூலம் மாநாட்டிற்கு வந்த பொதுமக்கள் அளிக்க வேண்டும் என்பது அண்ணாவின் கருத்தாகும்.
அந்தக் கருத்தின் அடிப்படையில் மாநாட்டுப் பந்தலைச் சுற்றி பல்வேறு வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டன. இரண்டு பெட்டிகள் நுழை வாயிலருகே வைக்கப்பட்டன. தேர்தலில் போட்டியிடலாம் என்பதற்கு ஒரு பெட்டியும். தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்பதற்கு ஒரு பெட்டியும் இடம் பெற்றன. மாநாட்டிற்கு வந்திருந்த பொதுமக்கள் தங்கள் எண்ணங்களை வாக்குச் சீட்டின் மூலம் தெரிவித்தனர். குறிப்பிட்ட நாளில் மாநாட்டு மேடையில் வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட்டன.
சில ஆயிரம் பேர்தான் கழகம் பொதுத் தேர்தலில் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்தி வாக்களித்திருந்தனர். இலட்சத்திற்கு மேற்பட்டோர் கழகம் பொதுத் தேர்தலில் ஈடுபட வேண்டும் என்று வாக்களித்திருந்தனர். ஜனநாயகத் தேர்தலில் ஈடுபடுவதா வேண்டாமா என்று கருத்தறிய ஒரு ஜனநாயகத் தேர்தலை நடத்திய அண்ணா அவர்கள், அந்த மாநாட்டில் 1957 பொதுத் தேர்தலில் காங்கிரசை எதிர்த்துக் கழகம் போட்டியிடும் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை அறிவித்தார்கள்.
புதிய முறுக்கோடு கழகத் தலைவர்களும், செயல் வீரர்களும், தொண்டர்களும், மாநாட்டிலிருந்து கலைந்து சென்றார்கள். மலைமுகட்டில் பெய்த பெருமழை பேராறுகளாக ஆகி, அந்தப் பேராறுகள் சிற்றாறுகள் ஆகி, சிற்றாறுகள் வாய்க்கால்கள் வழியோடி, வயல் வெளிகளில் நீர்வளம் ஏற்படுத்தி, பயிர் செழிக்கச் செய்வது போல், மாநாட்டு மக்கள் பெருவெள்ளம், மாநாடு முடிந்து பட்டி தொட்டிகளுக்கெல்லாம் சென்று திருச்சி மாநாடு தந்த உணர்வினை மற்றவர்களுக்கு எடுத்துரைத்துக் கழகத்திற்குப் புதிய வலிவினைச் சேர்க்கத் தொடங்கியது.
1957-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் யார் யார் எங்கெங்கே போட்டியிடுவது என்ற கேள்வி எழுந்தது. நான் தஞ்சை மாவட்டத்தில் நாகைத்தொகுதியில் போட்டியிட வேண்டுமென்ற விருப்பத்தை அண்ணா அவர்களிடம் தெரிவித்தேன். "முதலில் தொகுதியைப் போய்ச் சுற்றிப் பார்த்துவிட்டு வா!"
என்று அண்ணா அவர்கள் என்னை அனுப்பினார்கள் கழக வேட்பாளர்கள் பட்டியலை அறிவிப்பதற்கு ஒரு வாரகாலமே மிச்சமிருந்தது. அதற்குள் நான் நாகைத் தொகுதியைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரப் புறப்பட்டேன். எல்லா இடங்களிலும் கழகத் தோழர்களும், பொது மக்களும் நான் அந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டுமென்ற கருத்தை மிகுந்த ஆவலோடு தெரிவித்தார்கள். ஒரு சிறு கிராமம்கூட விடாமல், அனைத்துப் பகுதிகளுக்கும் அத் தொகுதியில் சென்று, இறுதியாக நாகையில் நடைபெற்ற கழகத் தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு நான் பேசினேன்.
இரவு மணி பன்னிரண்டு இருக்கும். தொண்டர்கள் மத்தியில், பெருத்த ஆரவாரத்திற்கிடையே, நான் நாகைத் தொகுதியில் போட்டியிடப் போவதாக உறுதி செய்து அறிவித்தேன். அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு என்னைச் சென்னைக்கு வழியனுப்பி வைத்தனர். நாகையிலிருந்து சென்னை வரும் வழியில் அந்த இரவு முழுவதும் எனக்குக் காரிலே தூக்கமில்லை. நாகைத் தொகுதியில் நடைபெறப் போகும் தேர்தல், நான் போட்டியிட்டுக் காங்கிரசை எதிர்ப்பதற்கு உள்ள சாத்தியக் கூறுகள், இவைகளைப் பற்றியே எண்ணிக்கொண்டு வந்தேன்.
காலை ஒன்பது மணிக்கெல்லாம் சென்னை வந்து சேர்ந்தேன் அண்ணா அவர்களைக் காண நேராக அறிவகம் சென்றேன். அண்ணா அவர்கள் அறிவகத்தில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். நாவலரும், என். வி. என். அவர்களும் அறிவகத்தில் இருந்தார்கள். 'நம்நாடு' பத்திரிகை அச்சாகி வெளியூர்களுக்குப் போய்க் கொண்டிருந்தது. அதில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்களின் பட்டியல் அச்சேற்றப்பட்டிருந்தது. நான் அதைப் பரபரப்போடு எடுத்துப் படித்தேன்.
நான் குளித்தலைத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆச்சரியத்தோடு அருகில் ருந் தவர்களைப் பார்த்து, "நாகைத் தொகுதியில் போட்டியிடுவதாகச் சொல்லிவிட்டு வந்துவிட்டேனே. அவர்கள் இப்படி அறிவித்து விட்டார்களே!" எனறு கேட்டேன். "அண்ணா அவர்கள் இரவு நீண்ட நேரம் ஆழ்ந்து சிந்தித்த பிறகு, அவர்களே எடுத்த முடிவு இது" என்று என்.
வி. என். என்னிடம் விளக்கம் கூறினார். அண்ணா எடுத்த முடிவுக்கு அப்பீல் ஏது? நான் குளித்தலையில் நிற்பதாக அண்ணா அவர்களே அறிவித்தபடியால், நாகைத் தொகுதித் தோழர்களுக்குச் செய்தியை உடனடியாக அறிவித்து விட்டுக் குளித்தலைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினேன். அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்தில் போட்டியிட்டார்கள். நாவலர் நெடுஞ்செழியன் சேலத்தில் போட்டியிட்டார். என். வி. என். பேசின் பிரிட்ஜ் தொகுதியில் போட்டியிட்டார்.
பெரம்பூர்த் தொகுதியில் சத்தியவாணிமுத்து, எழும்பூரில் பேராசிரியர் அன்பழகன், ஆயிரம் விளக்கில் ஆசைத்தம்பி, திருவண்ணாமலையில் ப.உ ச., வளவனூரில் ஏ கோவிந்தசாமி-இவ்வாறு நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் கழகத் தலைவர்களும், கழகச் செயல் வீரர்களும் பொதுத் தேர்தலில் குதித்தார்கள். நான் போட்டியிடுவதாகத் திடீரென்று அறிவிக்கப்பட்ட குளித்தலைத் தொகுதியைக் காண்பதறகாகச் சென்றேன்.அந்தத் தொகுதியை ஒரு கரும்புக்குச் சமமாகச் சொல்லலாம்.
குளித்தலை பிர்க்கா அடிக்கரும்பைப் போல் வளமானது. அடுத்தது, மாயனூர் பிர்க்கா நடுக் கரும்பைப் போல் வளம் சற்றுக்குறைந்தது. மூன்றாவது, வெள்ளியணை பிர்க்கா நுனிக் கரும்பில் உள்ள தழைகளைப் போன்றது. தேர்தலில் அடிக்கரும்பை மாத்திரம் சுவைக்க முடியுமா? முழுக்கரும்பையும் சுவைத்தால்தானே தேர்தலில் வெற்றி நோக்கி செல்ல முடியும்? மொத்தக் கரும்பையும் கடித்துப் பார்த்து முழுச் சுவையையும் உணர்வதென்பது, சங்கடமான, பொறுமையைச் சோதிக்கும் வேலை தான்.
என்றாலும், அறிஞர் அண்ணா அவர்களின் கட்டளைக்கேற்ப நான் குளித்தலைத் தொகுதி முழுவதையும் ஆராய்ந்து தெளிந்து தேர்தல் பணியாற்றத் தொடங்கினேன். அது என்னுடைய முப்பத்து மூன்றாவது வயதுப் பருவமாகும். அரசியல் ரீதியாக நான் என்னுடைய இயக்கத்திற்கும் நாட்டிற்கும் என்னாலான தொண்டுகளைச் செய்வதற்கு 1957 தேர்தல் பணிகளின் தொடக்கம்தான் துவங்கி வைத்தது என்று கொள்ளலாம். குளித்தலைத் தொகுதியில் அண்ணா அவர்களின் கட்டளைக்கேற்பவும், ஜனநரயகக் கடமையாற்றவும், நான் போட்டியிட ஆயத்தமானபோது, என்னுடைய வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்ததாகவே கருதினேன்.
அதுவரையில் நாள் அரசியல் விழிப்பு உணர்வினைப் பரப்புகின்ற தொண்டனாகவே கருதிக்கொண்டிருந்த நிலை மாறி, ஆட்சி மன்ற அரசியல்வாதியாக உருவெடுக்கத் தொடங்கினேன் என்பது முக்கியமான கட்டமல்லவா? அந்த கட்டம் எனக்கும் என் போன்ற மற்றக் கழகத் தோழர்களுக்கும் எத்தகைய சங்கடத்தைக் கொடுத்தது என்பதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது! "என் தாய்த் தமிழைக் காப்பாற்ற என்னோடு தோள் கொடுத்துக் கஷ்ட நஷ்டமேற்க முன் வாருங்கள்".
"ஏமாந்த காலத்தில் ஏற்றங்கண்டு விட்ட ஒரு பகுதியின் ஆணவ ஆதிக்கத்தை முறியடிக்க எனக்கும், என் இயக்கத்திற்கும் ஆதரவு தாருங்கள்." "இல்லாமை-போதாமை-வறுமைகளை இல்லாதொழிக்க என் பின்னால் அணிவகுத்து நில்லுங்கள்." "சாதியின் பேரால், சமயத்தின் பேரால் நாம் சாய்ந்து போன நிலையை எண்ணி ஒவ்வொருவரும் வெட்கப்படுங்கள். துக்கப்படுங்கள்."
-என்றெல்லாம் நாள்தோறும் பல மணி நேரம் ஆயிரக்கணக்கான மக்களிடையே அறிஞர் அண்ணா அவர்களின் அரவணைப்பின் உறுதியோடு கொட்டி முழங்கியே இயக்கப் பணியாற்றிக் கொண்டிருந்த என் போன்ற கழகத் தோழர்களுக்கு ஒவ்வொரு வாக்காளரிடமும், "நான் தேர்தலில் நிற்கிறேன், உங்கள் வாக்கை எனக்கே அளியுங்கள்" என்று கேட்டுக்கொண்டு தேர்தல் பணியாற்றியது, ஒரு வகைச் சங்கடமாகவும் புது வகை அனுபவமாகவும் இருந்தது!
அறிஞர் அண்ணா அவர்கள் நாள்தோறும் முழக்கி வந்த சொற்பொழிவுகளும், தாம் தேர்தலில் போட்டுயிடுவது ஏன்? எதற்காக? என்கின்றவைகளுக்கு அளித்த விளக்கங்களும் நாளடைவில் என்சங்கட உணர்வுக்குச் சற்று ஆறுதல் அளித்தன. சுருங்கச் சொல்லப் போனால், காமராசரின் அறைகூவல் அரசியலும், அதன் காரணமாக அண்ணா அவர்களுக்கு ஏற்பட்ட சலிப்புமே எங்களைத் தேர்தல் களத்தில் நிறுத்தின. தேர்தலில் வெற்றி பெற்று எதைச் சாதிக்கப் போகிறோம் என்பது எங்களில் பலருக்கு வியப்புக் குறியாகவே இருந்தது.
ஏனென்றால், தமிழ்நாட்டு அரசியல் பீடம் டெல்லிக்குத் தபால் பெட்டி அந்தஸ்துடன் தான் நடத்தப்பட்டது. எதற்கெடுத்தாலும் ஆணையிடுகின்ற உரிமை ஆயிரம் மைலுக்கு அப்பாலிலுள்ள டெல்லிப் பட்டணத்தில் தான் தேங்கி வழிந்தது. இங்கு காமராசரின் அரசியலும் காங்கிரஸ் ஆட்சியின் பிடிவாதங்களும் நினைத்தாலே நெஞ்சத்திற்குச் சோர்வை அளித்துக் கொண்டிருந்த நேரம் அது. 'மாற்றாந்தாய்ப் போக்கு' என்பதற்கு முழு இலக்கணம் தமிழகத்தின் அரசியலைப் பொறுத்து டெல்லிப் பட்டணம் காண்பித்த மனப்பான்மையில் தெளிவாகத் தெரிந்த நேரம் அது.
பண்டித நேருவை எதிர்த்து ஒரு பார்வை பார்ப்பது கூடத் தேசத் துரோகம் என்று திட்டவட்டமாக ஆணையிட்டுக் கொண்டிருந்த நேரம் அது. மிகத் தீவிரமான கழகத் தோழர்களில் பலரும் திருச்சி மாநில மாநாட்டிலே கழகம் தேர்தலில் நிற்கக் கூடாது என்று வாக்களித்த கழக தோழர்களும், நாங்கள் அனைவரும் 'கடலில் உழுது கொண்டிருப்பதாகவே' அப்பட்டமாக நம்பினார்கள். பார்க்கப் போனால், இப்படிப் பேசியவர்களுக்கு அனுசரணையாகவே அப்போதிருந்த நிலவரம் துணை போயிற்று.
"இந்தியாவின் தென் பகுதி (தென்னாடு) தொழில் துறையில் பின்தங்கிக் கிடக்கிறது. எனவே எங்கள் உதவி பெறுவதில் அப்பகுதியே முதலிடம் பெறவேண்டும். சேலத்தில் அலுமினியத் தொழிற்சாலை நிறுவக் கடனும் உதவியும் தருகிறோம்" என்று 1955-ல் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்தருஷ்யத் தலைவர்கள் புல்கானினும், குருஷ்சேவும் ருஷ்யாவுக்குத் திரும்பியதும் டெல்லி சர்க்காருக்குத் தெரிவித்த உதவித் திட்டத்தில் குறிப்பிட்டவை பற்றி டெல்லி அரசு எத்தகைய நடவடிக்கை எடுத்தது என்பது அப்போது மூடுமந்திரமாகவே இருந்தது.
"இந்தியா முழுவதிலுமாகத் தொழிலபிவிருத்திக்குச் செலவிடப் பட்டுள்ள பணம் நபர் ஒன்றுக்கு ரூ.27 ஆகும். ஆனால் சென்னை மாநிலத்தில் செலவிடப்பட்டுள்ளதோ ரூ. 19 தான். தேசிய விகிதத்தைப் போல ஐந்தாறு மடங்கு வடபுலத்தில் செலவிடப்பட்டுள்ளது" என்று 1956 ஜூலையில் உதகைக்கு வந்த போது, பெரும் பொருளாதார நிபுணராகக் கருதப்பட்ட சி.டி.
தேஷ்முக் குறைப்பட்டுக
் கொண்டார். "பெரிய பெரிய தொழிற்சாலைகளும், வேலைத் திட்டங்களும் உருவாவதில் இந்த மாநிலத்திற்குரிய பங்கு தரப்படவில்லை என்று நாங்கள். அபிப்பிராயப்படுகிறோம்" என்று 1955 ஜன்வரியிலேயே பெரும் விளம்பரத் தடபுடலோடு கூட்டப்பட்ட ஆவடி காங்கிரசில் திருமதி அம்புஜம்மாள் அவர்கள் வரவேற்புரையிலேயே மனம் நொந்து குறிப்பிட்டதை எங்களால் மறக்க முடியவில்லை!.
"தொழில் அபிவிருத்தித் துறையில் தென்னாடு படுமோசமாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது" என்று நான் போட்டியிட்ட குளித்தலைத் தொகுதிக்கு அருகில்-திருச்சி நகரில் பிரபல தொழிலதிபர் அனந்த ராமகிருஷ்ணன் சில நாட்களுக்கு முன்னர் தான் பேசிவிட்டுப் போனார் என்று என் தொகுதி மக்களே என்னிடம் தெரிவித்தனர்.
"சென்னை மாநிலத்தில் என்ன செய்ய வேண்டும்-என்ன செய்யக் கூடாது? என்று மத்திய சர்க்கார் வர்த்தகத் தொழில் இலாகா கட்டளையிடுகிறது. சென்னை சர்க்கார் மத்திய சர்க்காரின் பாவாடை நாடாவில் கட்டுண்டு கிடக்கிறது" என்று அனல் தெறிக்கும் வாசகங்கள் கொண்ட துண்டறிக்கை ஒன்றினைக் காங்கிரஸ் சர்க்காரில் உணவு அமைச்சராகவும், தமிழகத்தின் முக்கியக் காங்கிரஸ் தலைவராகவும் அப்போது விளங்கிய தூத்துக்குடி ரோச் விக்டோரியா அவர்கள் 1956 செப்டம்பர் முதல் தேதியிட்டுத் தமிழகத்து அரசியல்வாதிகள் அத்தனை பேருக்கும் அனுப்பி வைத்தார்.
1957 தேர்தலில் இந்தத் துண்டுப் பிரசுரம் சற்றுச் சலசலப்பை உண்டாக்கிற்று. அறிஞர் அண்ணா அவர்கள் கூட இந்தத் துண்டுப் பிரசுரத்தைக் குறிப்பிட்டு, ரோச் விக்டோரியா அவர்கள், இல்லத்துப் பெயராலேயே சுகஸ்தான்வாசி" என்ற தலைப்பில் தம்பிக்கு முடங்கல் பகுதியில் "திராவிட நாடு" இதழில் கருத்துரை தீட்டினார்கள். "இந்தச் சூழ்நிலையில் நாம் சட்டமன்றம் நுழைந்து செய்யப் போவதென்ன?"
என்று 'தீவிரவாதிகள்' மட்டுமல்ல, எங்களை நாங்களே கூடச் சில சமயம் கேட்டுக் கொண்டதுண்டு. ஆனால், இன்று நினைத்துப் பார்க்கிறேன். அரசியல் நுழைவால் எங்கள் இயக்கம் எதைச் சாதிக்கவில்லை? அறிஞர் அண்ணா அவர்களின் அரசியல் தூய்மையும் தொலைநோக்கும் எங்கு, எப்போது, பழுதாகப் போயிற்று? கழகம் அரசியலில் ஈடுபட்டுப் பதினாறு ஆண்டுக் காலமும், கழகம் அரசினைக் கைப்பற்றி ஆறாண்டுக் காலமும் ஆகிவிட்ட இன்றைய நிலையிலும் மாறுபடாமல் இருக்கும் பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன.
அவற்றில் தலையானது மத்திய மாநில அதிகாரங்களின் தாரதம்மியும் இன்றளவும் தீர்க்கப் படாமலும், சர்ச்சைக்குரியதுமாகவே இருக்கிறது. அறிஞர் அண்ணா அவர்கள் எனக்கு ஊட்டிய அரசியல் அடிப்படையிலும், என் இயக்கத் தோழர்களும் நாட்டு மக்களும் என் பக்கத்தில் நிற்கிறார்கள் என்ற திருப்தியிலும் விரைவில் இந்தப் பிரச்னைகளுக்கும் ஓர் முடிவு கட்ட வேண்டும் என்று துணிந்து சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். என் நாட்டு மக்களின் தளராத ஆதரவும் ஓடிக்கொண்டிருக்கும் காலமுமே இதற்கு உற்ற பதில் சொல்ல வேண்டியவை.
