உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/விபத்துத் துணுக்குகள்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

விபத்துத் துணுக்குகள் · 98 / 391

விபத்துத் துணுக்குகள் ஒரு முறை நானும், நண்பர்களும் காஞ்சிபுரம் சென்று விட்டு இரவு காரில் திரும்பிக் கொண்டிருந்தோம். திருப்பெரும்புதூருக்கு அருகாமையில் ஒரு மாட்டு வண்டி கீழே சாய்ந்து கிடந்தது. பையன் உடம்பெல்லாம் காயத்தோடு உருண்டு கிடந்தான். வண்டி மாடுகளில் ஒன்று இறந்து கிடந்தது. வண்டியை ஓட்டி வந்தவன் அந்த இருளில், 'ஐயோ, ஐயோ' என்று அலறிக் கொண்டிருந்தான்.

அந்த வண்டியை மோதிக் கீழே தள்ளிவிட்ட லாரி ஒன்று பக்கத்தில் நின்று கொண்டிருந்தது. நாங்கள் கீழே இறங்கி அந்தக் காட்சியைக் கண்டபோது திகைப்பும், அதிர்ச்சியும் தாங்க முடியவில்லை. அந்த வழியாக வந்த இன்னொரு காரில் நாங்கள் ஏறிக்கொண்டு எங்கள் காரில் காயம் பட்டபையனை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல உதவி செய்தோம். ஆனால் அதே போல் ஒரு காட்சியை மறுமுறையும் நான் காண நேரிட்டது. சென்னையில் இரவு பன்னிரண்டு மணிக்குப் புறப்பட்டுக் கார் மூலம், நானும், செல்லமுத்துவும் சென்று கொண்டிருந்தோம்.

நான் காரில் பின்னால் படுத்து நன்றாக உறங்கிக்கொண்டிருக்கிறேன். கார் விழுப்புரத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. திடீரென்று ஒரு பெரும் சப்தம். நான் காரின் பின்சீட்டிலிருந்து கீழே விழுந்து கிடக்கிறேன். லேசாகக் கண்ணை விழித்துப் பார்க்கிறேன். எனக்கு எந்த அடியும் இல்லை. ஆனால் அந்த இருளில் 'ஐயோ, ஐயோ' என்று ஒரு சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

செல்லமுத்து என் அருகே வந்து என்னைத் தூக்குகிறார். எனக்கோ அவருக்கோ என் கார் டிரைவருக்கோ எந்த காயமும் இல்லை. எதிரே ஒரு வண்டி கவிழ்ந்து கிடக்கிறது. ஒரு பையன் லேசாகக் காயம்பட்டுக் கிடக்கிறான். வண்டிக்காரன் அலறிக் கொண்டிருக்கிறான். சில மரதங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் சாலையில் நான் பார்த்த அதே சம்பவம் என் கார் மோதியதால் இப்போது ஏற்பட்டிருப்பதை நான் பார்த்தபோது தூக்கக் கலக்கத்தில் இன்னும் அந்தக் காஞ்சிபுரம் சாலை நிகழ்ச்சியைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் நாம் என்றுதான் ஒரு கணம் தோன்றியது.

பிறகு அடிபட்ட பையனை விழுப்புரம் மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றோம் தேவையான சிகிச்சைகள் அளித்து அவனைக் காப்பாற்றிவிட்டோம். வண்டிக்கு ஏற்பட்ட நஷ்டத்தையும் ஈடு செய்தோம். விழுப்புரத்தில் உள்ள டாக்டர் தியாகராஜன் அந்தச் சம்பவத்தில் எனக்கு நிறைய உதவி செய்தார். ஏற்கெனவே அவரை எனக்கு நன்றாகத் தெரியும். விழுப்புரத்திற்கு அருகிலேயே தான் விபத்து ஏற்பட்டதால் பையனைத் தூக்கிக் கொண்டு வந்து, மருத்துவ மனையில் சேர்த்து விட்டு அவனுக்குக் காவலாகச் செல்லமுத்துவை வைத்துவிட்டு நான் டாக்டர் தியாகராஜன் வீட்டைத் தேடிக் கொண்டு சென்றேன்.

அவர் முன்பிருந்த வீட்டில் இல்லையென்றும், வேறு எங்கேயோ குடி போய்விட்டதாகவும். சொன்னார்கள். என்னுடைய உடைகளடங்கிய பெட்டி மாத்திரம் என் கையில் இருந்தது. ஒரு வண்டி பிடித்துக் கொண்டு அவர் வீட்டிற்குப் போகலாமென்றால், அந்த நேரத்தில் எந்த வண்டியும் கிடைக்கவில்லை. பெட்டியைத் தலையிலே வைத்துக் கொண்டு நடந்தே விழுப்புரத்தில் பல தெருக்களைச் சுற்றிக் கடைசியாக டாக்டர் தியாகராஜன் வீட்டைக் கண்டுபிடித்தேன்.

அதற்குப் பிறகு அவர் சிரமம் எடுத்துக்கொண்டு நான் சேலம் போவதற்கு வசதிகள் செய்து கொடுத்தார். இன்னொரு முறை நானும், கருணானந்தமும், சிவாஜிகணேசனும் காஞ்சிபுரம் சென்று அண்ணாவைப் பார்த்துவிட்டுச் சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறோம். அப்பொழுதுதான் 'பராசக்தி' படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வரும் வழியில் நல்ல மழை பெய்யத் தொடங்கியது. காரின் வெளிச்சம் வேறு மங்கலாகி விட்டது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகே வந்து கொண்டிருக்கும் பொழுது அந்தப் பகுதியில் ஒரு பாலம்வேலை நடைபெற்றுக் கொண்டிருந்ததால், மாற்று வழிக்குக் குறிப்புப் பலகை வைத்து சிவப்புத் துணி கட்டியிருந்தார்கள். விளக்கு வெளிச்சம் போதாததால் கார் டிரைவர் அதைக் கவனிக்காமல் மாற்று வழியில் செல்வதற்குப் பதிலாக நேராகச் சென்று விட்டார். உடனே நண்பர் கணேசன் கூச்சல் போடவே கார் டிரைவர் திடீரென்று பிரேக்கை அழுத்திவிட்டார்.

பிரேக் போடப்பட்ட வேகத்தில் மழைத் தண்ணீர் தேங்கியிருந்த சாலையில் காரின் சக்கரங்கள் வழுக்கி, ஒரு சுற்றுச் சுற்றி நின்றது. கார் எப்படியிருக்கிறது என்பதைக் காருக்குள்ளிருந்த நாங்கள் கவனித்தோம். கார் சக்கரம் ஓர் அங்குலம் நகர்ந்தால், நாங்கள் ஒரு செங்குத்தான பள்ளத்தாக்கில் காரோடு விழுந்து நொறுங்கிப் போய்விடுவோம். அப்படிப்பட்ட ஆபத்தான விளிம்பில் கார் நின்று கொண்டிருந்தது. காரில் இருந்த மூவரும் மெதுவாகக் காரை விட்டு இறங்கினோம்.

நாங்கள் இறங்குகிற நேரத்தில் கார் கொஞ்சம் அசைந்திருந்தாலும் படுபாதாளத்தில் நாங்கள் விழுந்திருக்க நேரிடும். மிக மெதுவாகக் காரை முன்னுக்குத் தள்ளி மாற்றுப் பாதை வழியாகச் சென்னை நோக்கிப் புறப்பட்டோம். மழை பொழிந்து கொண்டே யிருந்தது. சென்னைக்கு அருகில் 4, 5 மைல் தொலைவில் நாங்கள் வந்ததும் காரும் பழுதாகிவிட்டது. அந்தக் கார் நேஷனல் பிக்சர்ஸ் உரிமையாளர் திரு பி.ஏ. பெருமாளுக்குச் சொந்தமானது. காரைத் தள்ளிக் கொண்டே போய் விடலாம் என்று என்னைக்காரிலேயே உட்காரவைத்துவிட்டு சிவாஜியும், கருணானந்தமும் காரைத் தள்ளத் தொடங்கினார்கள்.

நான் எவ்வளவோ சொல்லியும் என்னைக் கீழே இறங்க விடாமல் தடுத்து விட்டார்கள். 4, 5 மைல்கள் அந்த மழையில் அந்தக் காரைத் தள்ளிக்கொண்டே வந்த நிகழ்ச்சியையும், அதுவும் என்னைக் காரில் உட்காரவைத்தே தள்ளிக்கொண்டு வந்த நிகழ்ச்சியையும், இப்போது கூட, நண்பர் கணேசன் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் வேடிக்கையாகச் சொல்லாமல் இருப்பதில்லை.