நெஞ்சுக்கு நீதி
கொள்ளிடத்து வெள்ளத்திடையே · 97 / 391
கொள்ளிடத்து வெள்ளத்திடையே ஒரு முறை தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளியில் காலையிலே ஒரு திருமணத்தில் கலந்துகொண்டு அன்று மாலை திருச்சி மாவட்டத்தில் அன்பிலுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பொதுக் கூட்டத்தில் பேசுவதாக ஒத்துக் கொண்டிருந்தேன். அந்தச் சுற்றுப்பயணத்தில் என்னுடன் மாறனும் வர ஆசைப்பட்டதால் அழைத்துக் கொண்டு போனேன். காலை திருக்காட்டுப்பள்ளித் திருமணத்திற்காக நான், மாறன், அன்பில் தர்மலிங்கம், பராங்குசம், பண்ணை முத்துகிருஷ்ணன் ஆகியோர் காரில் போய்க்கொண்டிருந்தோம்.
அந்தத் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று நடந்தே வந்து கொண்டிருந்த சில நண்பர்கள் என் காரைப் பார்த்ததும் எனக்கு முன்பே எப்படியாவது திருமணப் பந்தலுக்குச் சென்றிட வேண்டுமென்று பரபரப்படைந்தார்கள். எங்கள் கார் போவதும், அவர்கள் நடந்து செல்வதும் ஆற்றங்கரைப் பாதையாகும். நாங்கள் அதே கரையில் இரண்டொரு மைல் தூரம் சென்று, அதற்குப் பிறகு ஒரு பாலத்தைக் கடந்து, அடுத்தகரையிலுள்ள திருமண வீட்டிற்கு வந்தாக வேண்டும்.
அவர்கள் ஆற்றில் இறங்கிக் குறுக்கே சென்றால், நான் திருமண வீட்டிற்குச் செல்வதற்கு முன் சென்று விட முடியும். ஆற்றிலும் தண்ணீர் அதிகமாக இல்லை. ஆகவே, அவர்கள் ஆற்றைக் கடப்பதற்கு வேகமாக இறங்கி விட்டார்கள். எங்கள் கார் பாலத்தைச் சுற்றிக்கொண்டு ஆற்றின் அடுத்த கரையில் புகுந்து சிறிது தூரம் சென்றதும், ஆற்றின் கரையில் ஏராளமான கூட்டம் இருந்ததை எங்களால் காணவும் முடிந்தது. காரை நிறுத்திவிட்டு, அன்பில் தர்மலிங்கம் கீழே இறங்கி என்னவென்று விசாரித்தார்.
ஆற்றின் குறுக்கே இறங்கி நடந்து வந்த வாலிபர்களில் ஒருவனைக் காணவில்லை எனறும், தண்ணீரில் மூழ்கி விட்டதாகவும், அவனைத் தேடுவதாகவும் சொன்னார்கள். நாங்கள் அனைவரும் பதறிப்போய்க் கீழே இறங்கினோம். ஒரு மணி நேரத்திற்கு மேலாகத் தண்ணீரில் மூழ்கிய அந்த வாலிபனைத் தேடும் வேலை நடைபெற்றது. இறுதியாக அந்த வாலிபனைத் தண்ணீரிலிருந்து சிலர் கரைக்குத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். இருபத்தைந்து வயதுகூட நிரம்பாத அந்தக் கட்டிளங்காளை பிணமாக இருந்தான்.
அவனைப் பிழைக்க வைத்துவிடலாம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. உடனே காரில் தூக்கி வைத்துக் கொண்டு மருத்துவ மனைக்குச் சென்றோம். மருத்துவர்கள் எவ்வளவோ முயன்று பார்த்தும் முயற்சி பயனளிக்கவில்லை. அந்த வாலிபனுக்குத் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் தானாகிறது. கைக் குழந்தையுடன் அவன் மனைவி தாயார் வீட்டிற்குப் போயிருந்தாள். இவன் திருக்காட்டுப்பள்ளித் திருமணத்திற்கு வந்தவன். அவனது உயிரற்ற உடலை அவன் வீட்டிற்கு அனுப்புகிற ஏற்பாடுகளைச் செய்து விட்டுத் திரும்பினோம்.
அவன் உடலைக் கொண்டு போய் வீட்டிலே இறக்குவதற்கும், தாயார் வீடு சென்றிருந்த அவன் மனைவி திரும்பி வருவதற்கும் நேரம் சரியாக இருந்ததாம். அந்தச் சோக நிகழ்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாமல், திருமண வீட்டிற்குச் சென்று மணவிழாவிலும் கலந்து கொண்டு, வாழ்த்துரை எதுவும் கூறாமல், நானும் நண்பர்களும் கல்லணைக்குத் திரும்பி விட்டோம். மாலையில் கொள்ளிடம் ஆற்றைக் கடந்து அடுத்த கரையில் உள்ள கிராமத்தில் கழகக் கூட்டத்தில் பேசவேண்டும்.
கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் இல்லை. ஓரத்தில் மாத்திரம் முழங்கால் அளவு தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. காரைக் கல்லணையிலேயே விட்டுவிட்டு இரட்டை மாட்டு வண்டி ஒன்றில் ஆற்றின் குறுக்கே சென்று, குறிப்பிட்ட கிராமத்தை அடைவது என்று திட்டமிடப்பட்டது. அவ்வாறு மாலை ஆறு மணிக்குப் புறப்பட்டு, அந்த கிராமத்தை ஏழு மணிக்கெல்லாம் சென்று அடைந்தோம். இரவு கூட்டம் முடிய பத்தரை மணியாயிற்று. அதற்கு மேல் உணவு அருந்திவிட்டுப் பதினொன்றரை மணி சுமாருக்குக் கல்லணைக்குப் புறப்பட்டோம்.
அங்கிருந்தவர்கள், "மறுபடியும் இரட்டை மாட்டு வண்டியில் சென்றால் மூன்று மைல் சுற்றிக்கொண்டு போகவேண்டும். இந்தக் கிராமத்தில் இருந்தவாறே நேரே கொள்ளிடம் ஆற்றில் இறங்கினால் கல்லணை அதோ எதிரே தான் இருக்கிறது. விரைவில் போய்ச் சேர்ந்து விடலாம்" என்று குறிப்பிட்டார்கள்.
கூட இருந்த நண்பர்களும் அந்த யோசனையை ஒப்புக்கொள்ளவே, நானும் தலையை அசைத்து விட்டேன். கொள்ளிடத்தின் குறுக்கே இறங்கிக் கொஞ்ச தூரம் நடந்திருப்போம். திடீரென வானத்தில் இடி முழக்கம்; மின்னல் வெட்டுகள்; வேகமான காற்று; மழைத் துளிகள்; பாதி ஆற்றைக் கடந்திருப்போம். நாங்கள் சற்றும் எதிர்பாராத வண்ணம் இயற்கையின் உறுமலைக் கண்டு திடுக்கிட்டுப்போனோம். அதைவிடப் பயங்கரம் ஆற்றில் வெகு வேகமாகத் தண்ணீர் பெருக ஆரம்பித்துவிட்டது.
ஒரே இருள். மழை. ஓரத்தில் முழங்கால் அளவு ஓடிக் கொண்டிருந்த தண்ணீர் இடுப்பளவு என்று ஆறு முழுவதும் பெருகியது. சற்று நேரத்திற்கெல்லாம் மார்பளவு தண்ணீராகி விட்டது. பண்ணை முத்துகிருஷ்ணன் மிகவும் குள்ளமானவர். அவருக்கு உதட்டளவு தண்ணீர். உடனே அவரைப் பக்கத்தில் இருந்த ஒருவர் தூக்கிக் கொண்டார். மாறனை அன்பில் தர்மலிங்கம் தூக்கிக் கொண்டார். இரத்தினம் என்ற ஒரு தோழர் என்னைத் தூக்கிக் கொண்டார். நாங்கள் எங்கு போகிறோம் என்றே தெரியவில்லை.
ஆற்றுப் பிரவாகம் திடீரென்று ஏற்படும்பொழுது அதைச் சமாளிக்க முடியாமல் மனிதன் எப்படி மூழ்கிவிடுகிறான் என்பதை அன்று தான் நான் அனுபவ ரீதியாக உணர்ந்தேன். காலை அழுத்தமாக மணலில் ஊன்றினால் காலுக்கடியில் இருக்கும் மணலைத் தண்ணீர் பறித்துக்கொண்டு போய்விடுகிறது. காலுக்குக் கீழே ஒரு சிறு குழி ஏற்படுகிறது, உடல் ஒரு நிலையில் நிற்கமுடியாமல் ஆகிவிடுகிறது. அந்தச் சூட்சுமத்தை உணர்ந்து நண்பர்கள் உடனடியாக எங்களைத் தூக்கிக் கொண்டு ஆற்றில் வெள்ளத்தை எதிர்த்துப் பயங்கரமான போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்றாலும், எனக்கென்னவோ கரைபோய்ச் சேருவோம் என்ற நம்பிக்கையே இல்லை.
மாறனை வேறு அழைத்து வந்துவிட்டோமே என்ற கவலை என்னை உலுக்கியது. நீண்ட நேரம் ஆற்று வெள்ளத்தோடு போராடி நண்பர்கள் எங்களையும் காப்பாற்றித் தங்களையும் காப்பாற்றிக் கொண்டார்கள். நாங்கள் அடுத்த கரை வந்து சேர்ந்தபோது இரவு ஒரு மணிக்கு மேலிருக்கும். அதன் பிறகு நனைந்த உடைகளையெல்லாம் மாற்றிக் கொண்டு கல்லணையில் ஓய்வு எடுத்துக் கொண்டோம். கொஞ்சம் தவறியிருந்தால், எங்கள் அனைவருக்கும் நிரந்தரமான ஓய்வே கிடைத்திருக்கும்.
