நெஞ்சுக்கு நீதி
முதல் விபத்து · 96 / 391
முதல் விபத்து 'எ னது பயணங்கள்' என்று ஒரு தனிப் புத்தகமே எழுத வேண்டும் என்பது எனது நெடுநாளைய ஆசை. ஆனால் அதற்குரிய ஓய்வும் நேரமும்தான் கிடைக்கவில்லை. இந்த வாழ்க்கைக் குறிப்பின் தொகுப்பினூடே இடையிடையே அந்தப் பயண அனுபவங்களை எடுத்துச் சொல்ல முற்படுகிறேன். முகவை மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடியில் எனக்கு ஒரு பாராட்டு விழாப் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்தார்கள். சென்னையில் எனக்கு இருந்த அவசரப் பணிகளை முடித்துவிட்டு மாலை மூன்று மணிக்குத்தான் சென்னையிலிருந்து கார் மூலம் பரமக்குடிக்குப் புறப்பட்டேன்.
இது 1953-ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவமாகும். பரமகுடியில் மாலை ஆறு மணிக்கு நான் கலந்து கொள்ள வேண்டிய பொதுக் கூட்டத்துக்குச் சென்னையில் மாலை மூன்று மணிக்குக் காரில் புறப்பட்டால் குறித்த நேரத்தில் எப்படிப் போய்ச் சேர முடியும்? சென்னைக்கும் பரமக்குடிக்கும் முந்நூறு மைலுக்குக் குறையாது. கார் திருச்சியை நோக்கி வெகு வேகமாக விரைந்து கொண்டிருந்தது. மாலை 7-30 மணிக்குத் திருச்சிக்கு அருகில் எட்டுக்கல் தொலைவில் உள்ள சமயபுரத்தின் பக்கம் கார் வரும்போது கொம்பு நீளமாயுள்ள ஒரு கொடி ஆடு காரின் ரேடியேட்டரில் பாய்ந்ததால் ரேடியேட்டர் ஓட்டையாகிவிட்டது.
பிறகு அங்கிருந்து திருச்சிக்கு வந்து காரை உடனே பழுது பார்க்க முடியாத காரணத்தால் திருச்சியில் ஒரு வாடகைக் கார் எடுத்துக் கொண்டு பரமக்குடிக்குப் புறப்பட்டேன். என்னுடன் அன்பில் தர்மலிங்கம், பராங்குசம், தென்னன் ஆகியோர் வந்தார்கள். பரமக்குடி போய்ச் சேர இரவு மணி பன்னிரண்டு ஆயிற்று. எனக்காகக் கூட்டம் காத்துக்கொண்டிருந்தது. கூட்டத்தைக் கலைய விடாமல் மதுரை முத்து அது வரையில் பேசிக் கொண்டே இருந்தார்.
நான் போனதும் பேசத் தொடங்கினேன். இரவு ஒரு மணிக்குக் கூட்டம் முடிவுற்றது. அதன் பிறகு இரவு உணவை முடித்துக் கொண்டு திருச்சி நோக்கிப் புறப்பட்டோம். ஏனெனில் மறுநாள் காலை திருச்சி தேவர் மன்றத்தில் ஒரு சிறப்புக் கூட்டத்தில் நான் பேசுவதாக இருந்தது. வாடகை வண்டியோட்டி மிக வேகமாகக் காரைச் செலுத்திய நேரத்தில் எல்லாம் நான் எச்சரித்துக் கொண்டே வந்தேன். ஆனால் நானும் சற்று கண்ணயர்ந்து விட்டேன். என் கூட இருந்த நண்பர்களும் கண்ணயர்ந்து விட்டார்கள்.
திருச்சி வரும் வழியில் திருப்பத்தூரில் பயணிகள் விடுதிக்கு அருகில் திரும்ப வேண்டிய ஒரு சாலையில் காரைத் திருப்பாமல் காரோட்டிய தோழர் கொஞ்சம் கண்ணயர்ந்து விட்டதன் காரணத்தினால் நேராக விட்டு விட்டார். அது சாலை ஓரத்தில் இருந்த மைல் கல்லில் மோதி, அந்தக் கல்லும் உடைந்து, பயணிகள் விடுதியின் முன்புற வாயில் கதவில் போய் மோதிக்கொண்டு நின்றது. இதற்கிடையே காருக்குள் இருந்த நாங்கள் உருண்டு விட்டோம்.
நண்பர்களுக்குக் காயம் எதுவுமில்லை. ஆனால் என் மூக்குக்குள்ளேயிருந்து ரத்தம் குபுகுபுவென்று வந்தது. மயக்கமுற்று விட்டேன். உடனடியாக முதல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுக் காலை ஒன்பது மணிக்கெல்லாம் திருச்சி வந்து சேர்ந்தேன். மூக்கில் இரத்தப் பெருக்கு நின்று விட்டது. 'அறிவிக்கப்பட்டிருந்த சிறப்புக் கூட்டத்தில் பேச வேண்டிய தேவையில்லை. முகத்தை மாத்திரம் காட்டிவிட்டு வந்தால் போதுமானது' என்று நண்பர்கள் வற்புறுத்தவே, அங்கு சென்று சிறிது நேரம் பேசிவிட்டு, ஒரு மணி நேரம் திருச்சி திராவிடப் பண்ணையில் ஓய்வு எடுத்துக் கொண்டேன்.
அதன் பிறகு கன்யாகுமரி மாவட்டச் சுற்றுப் பயணத்திற்கு நான் புறப்படுவதற்குப் பழுதடைந்திருந்த என்னுடைய கார் தயாராகி விட்டது என அறிவிக்கப்பட்டது. அன்றே திருச்சியிலிருந்து நாகர்கோவில் புறப்பட்டேன். நாகர்கோவில் பகுதிகளில் இரண்டு நாள் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நண்பர் ஒருவர் வீட்டில் தங்கினேன். அப்போது தான் என்னுடைய மூக்கின் ஓரத்தில் சிறு வீக்கம் ஏற்படுவதை உணர்ந்தேன். சிறிது நேரத்திற்கெல்லாம் முகமே வீங்கிவிட்டது.
என்னுடைய இடது கண்ணிலும் லேசாக வலி தெரிந்தது. திருப்பத்தூரில் ஏற்பட்ட கார் விபத்தை நான் அலட்சியப்படுத்தி விட்டுத் திருச்சி நிகழ்ச்சியிலும், கன்யாகுமரி மாவட்ட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதன் விளைவை அப்போதுதான் உணர்ந்தேன். நாகர்கோவில் நண்பர் ஜான் அவர்கள், முகத்தில் ஏற்பட்ட வீக்கம் வடிவதற்கு ஏதேதோ மருந்துகள் போட்டார். ஆனால் விபத்தினால் ஏற்பட்ட காயம் மூக்கின் உள்ளேயும் கண்ணிலும் இருந்ததை அறிந்து கொள்ள அப்போது இயலவில்லை.
வரவர வலி அதிகமான காரணத்தினால் உடனடியாகச சென்னைக்குத் திரும்ப வேண்டுமென்று முடிவு செய்து புறப்பட்டோம். சென்னையில் மூக்கு வீக்கத்திற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டன. மூக்கிற்கு உள்ளே சீழ் பழுத்து இருந்தது. அது அகற்றப் பட்டது. கண்வலி நின்று விட்டபோதிலும், கண்ணில் அடிக்கடி சிவப்பு நிறம் பரவுவதும், உறுத்தல் உணர்ச்சி ஏற்படுவதும் இருந்து கொண்டே இருந்தன. அப்படி ஒரு மாதம் போக்கி விட்டேன். அதன் பிறகு என்னுடைய நண்பர் முல்லை சத்தியினுடைய பிடிவாதத்தால் வேலூர் மருத்துவமனைக்குச் சென்று என் கண்ணைப் பரிசோதித்துக் கொண்டேன்: நீண்ட நேரப் பரிசோதனைக்குப் பிறகு, டாக்டர் என்னைப் பார்த்து, "சில நாட்களுக்கு முன் ஏதாவது விபத்து ஏற்பட்டு, கண் பக்கம் அடிபட்டதா?"
என்று கேட்டார். நான் விவரத்தைச் சொன்னேன். கண்ணிற்குள் ஒரு சிறு நரம்பில் நுண்ணிய கீறல் ஒன்று ஏற்பட்டு இருப்பதாகவும், குறைந்தது ஆறுமாத காலத்திற்காவது எழுதவோ, கூட்டங்களில் பேசவோ, படிக்கவோ கூடாது என்றும், டாக்டர், கண்டிப்பாக வலியுறுத்திக் கூறினார். அப்போது அவரிடத்தில் நான் சரி என்று ஒத்துக்கொண்டதற்கிணங்க இரண்டொரு மாதங்கள் அவ்வாறே கடைப்பிடித்து வந்தேன். ஆனால் பொது வாழ்க்கையில் அப்படிப்பட்ட பத்தியங்களை உறுதியாகப் பின்பற்றுவது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல.
பொது வாழ்வில் வெளிப்பகட்டு இல்லாமல் உண்மையாக ஈடுபடுபவர்களுக்கு இக்கருத்து விளங்காமல் போகாது. டாக்டர் சொன்ன தவணைக்கு முன்பாகவே கூட்டங்களில் கலந்து கொள்வதும், எழுதுவதும் என்னால் தவிர்க்க முடியாததாகி விட்டன. அரசியலிலும் கலை உலகிலும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்களான இலட்சிய நடிகர் இராசேந்திரன், நடிகமணி நாராயணசாமி ஆகிய இருவரின் விருப்பத்தை நிறைவேற்ற அவர்களுடைய நாடகக் குழுவிற்கு எப்படியும் நான் ஒரு மாதத்திற்குள்ளாக ஒரு நாடகத்தை எழுதித்த வேண்டுமென்ற நெருக்கடிக்கு ஆளானேன்.
சென்னையில் ஓட்டல் ஒன்றில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அந்த நாடகத்தை இடைவிடாது எழுதிக் கொண்டிருந்தேன் அதுதான் 'மணிமகுடம்' நாடகத்தின் கடைசிக் காட்சிகளை எழுதிக் கொண்டிருக்கும்போது திடீரென்று என் இடது கண்ணில் ஒரு ஈட்டி பாய்ந்தது போன்ற வேதனை! கையில் இருந்த பேனாவையும், தாளையும் வீசி எறிந்து விட்டு, "ஐயோ!"
என்று அலறினேன். அறையின் வாசலில் உட்கார்ந்திருந்த என்னுடைய காரோட்டி ரெங்கன், உள்ளே ஓடிவந்து என்னைப் பிடித்துக் கொண்டு, உடனடியாகக் காரிலேற்றி, என்னை வீட்டிற்கு அழைத்து வந்தபோது, நடு வழியில் பெட்ரோல் இல்லாமல் அந்தக் காரும் நின்றுவிட்டது! நல்லவேளை, ஒரு சந்து முனை திரும்பினால் என் வீட்டிற்குப் போய் விடலாம். அப்போது நான் குடியிருந்த வீடு ராயப்பேட்டை பாலாஜி நகர் பகுதியில் இருந்தது. கண் வலி தாங்க முடியாமல் அலறிக்கொண்டிருந்த என்னைத் தன் முதுகிலே தூக்கிக் கொண்டு, ரெங்கன் வீடு நோக்கி நடந்தான்.
என் நிலையைக் கண்டு என் வீட்டார், 'ஓ' என்று கதறினார்கள். உடனடியாகக் கண் மருத்துவர் அழைக்கப்பட்டார். வீட்டிலேயே பத்து நாட்கள் வரையில் படுக்கையில் இருந்து கண் சிகிச்சை செய்து கொண்டேன். எந்தப் பயனும் தெரியவில்லை. இடது கண் பெரிதாக வீங்கிவிட்டன. குத்தல் வலி உயிரைப் பிளந்தது. 'தற்கொலை செய்து கொள்ளலாமா?'
என்று எண்ணுகிற அளவிற்குத் தாங்க முடியாத வேதனை. அதற்குப் பிறகு சென்னையில் மிகத் திறமையான கண் வைத்தியர் என்று பெயர் பெற்ற டாக்டர் முத்தையா அவர்களை அழைத்து வந்தார்கள். அவர் என் கண்ணைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு உடனடியாகக் கண் மருத்துவ மனையில் என்னைச் சேர்த்து சிசிச்சைகளைத் தொடங்கா விட்டால் நன்றாக இருக்கிற வலது கண்ணும் பாதிக்கப்பட்டு விடும் என்று எச்சரித்தார். அதுவரையில் பழைய முறையில் என் கண்ணுக்கு வைத்தியம் செய்து மேலும் கொஞ்சம் கெடுத்துவிட்டதாக, முதலில் வைத்தியம் பார்த்த டாக்டரைக் கண் மருத்துவர்கள் அனைவருமே குற்றம் சாட்டினார்கள்.
மறு நாள் காலையில் கண் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டேன் உடனடியாக அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. ஒன்றல்ல, இரண்டல்ல; பன்னிரண்டு முறை என்னுடைய கண்ணில் டாக்டர் முத்தையா அறுவைச் சிகிச்சை நடத்தினார். அதில் நான்கு அறுவைச் சிகிச்சைகள் பெரிய அளவில் நடைபெற்றன. எட்டு அறுவைச் சிகிச்சைகள் கண்ணிற்குள் கீறல் விழுந்திருந்த நரம்பில் தேங்கியிருந்த சீழை வெளிப்படுத்துவதற்காக நடைபெற்ற சிறிய அளவு அறுவைச் சிகிச்சைகளாகும்.
ஒவ்வொரு முறையும் அறுவைச் சிகிச்சை அறைக்குச் செல்வதற்கு முன்பு, கண் இமைகளை அசையாமல் செய்வதற்காகக் கன்னத்திலே ஒரு நெடிய ஊசியும், கண்ணின் இமைக்குக் கீழே ஓர் ஊசியும் போட்டு அந்தப் பகுதியை உணர்ச்சியில்லாமல் ஆக்குவார்கள். அறுவைச் சிகிச்சையைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஐயோ! அந்த ஊசிகளை இப்போது நினைத்தாலும் எனக்கு நடுக்கம் எடுக்கிறது! இப்படிப் பன்னிரண்டு முறை ஊசிகளைப் போட்டுக் கொள்வது என்றால் சாதாரண வேதனையா?
அன்று கண்ணில் ஊசி குத்திய வேதனை எனக்கு எப்போது குறைவாகத் தெரிகிறது தெரியுமா? என் மனப் புண்ணில் சில பேர் ஊசி குத்துகிறார்களே, அப்போது தான் அன்று கண்ணில் குத்தப்பட்ட ஊசியின் வேதனை எனக்குக் குறைவாகத் தென்படுகிறது. இந்தச் சிகிச்சையின்பொழுது ஒரு நாள் ஒரு வேதனையான வேடிக்கையும் நடந்துவிட்டது. அறுவைச் சிகிச்சை அறைக்கு முன்பு பல கண் நோயாளிகள் அமர்ந்திருப்பார்கள். என்னைப் பரிசோதிப்பதற்கு டாக்டர் முத்தையா அழைத்து வரச் சொல்லியிருக்கிறார்.
நான் அந்த நோயாளியோடு உட்கார்ந்திருந்த பொழுது உதவி டாக்டர் ஒருவர் என அருகே வந்து என் கன்னத்திலும், கண்ணிலும் இரண்டு ஊசிகளைப் போட்டுவிட்டார். அதற்குப் பிறகு என்னை அறுவைச் சிகிச்சை அறைக்கு உள்ளே அழைத்துப் போனார்கள். அறுவை நடை பெறும் பலகையில படுக்க வைத்தார்கள். டாக்டர் முத்தையா என் அருகே வந்தார். "இவரை ஏன் கொண்டு வந்தீர்கள்? இவருக்கு இன்று அறுவைச் சிசிச்சை கிடையாதே!"
என்று அவர் சொன்ன பிறகுதான் உதவி டாக்டர் செய்து விட்ட தவறு அனைவருக்கும் தெரிந்தது. எனக்கு இருந்த வேதனையில் அது ஒரு நல்ல துணை வேதனை! இவ்வாறு என்னுடைய கண் மருத்துவ மனை வாழ்வு ஆறு மாத காலம தொடர்ந்தது. அந்த ஆறு மாதமும், எழும்பூர் கண் மருத்துவ மனையில், சிறப்பு அறையில் வலி தாங்க முடியாமல் துடித்துக்கொண்டு படுக்கையிலே இருந்தேன் . கல்லக்குடிக்காகச் சிறைச்சாலையிலே ஆறு மாதம்! கண் சிகிச்சைக்காக மருத்துவமனையிலும் ஆறு மாதம்!
டாக்டர் முத்தையாவினுடைய திறமையினால் என் கண் பிழைத்தது. தாங்க முடியாத வேதனையில் இருந்து தப்பித்துக் கொண்டேன். கொஞ்சம் விஷம் கிடைக்காதா? நண்பர்களும், வீட்டாரும் என் பக்கத்திலே இல்லாத ஒரு நேரம் கிடைக்காதா? இந்த வலியிலிருந்து நாமே விடுபட்டுக்கொள்ளலாமே என்று நான் பல தடவை நினைத்தது உண்டு. எனக்கு ஆறுதல் கூறி, ஒரு சகோதர உணர்வோடு என் பிணி போக்கிய அந்த நல்லவர் முத்தையாவை என் குடும்பத்தார் வாழ்த்தாத நாளே.
இல்லை. என் அருகே இருந்து, வீட்டார் என்னைக் கவனித்துக் கொண்டதற்கு மேலாக, தோழர் கருணானந்தம் என்னை விட்டு ஒரு வினாடியும் பிரியாமல் அந்த ஆறு மாத காலமும் தன் விழிகளுக்குத் தூக்கம் என்கிற ஒன்றையே மறந்துவிடுகிற பயிற்சியை அளித்து, அல்லும் பகலும் பாடுபட்டார். அந்த ஆறு மாதமும் அவர் எனக்காகக் கண விழித்ததையெல்லாம் சரிக்கட்டுவதற்கீடாக இப்போது தூங்கிக் கொண்டிருக்கிறார் என்றால் இது கற்பனை அல்ல.
நெருங்கியவர்களுக்குத் தெரிந்த முழு உண்மை. தென்னன், மூர்த்தி ஆகியோரும் அவருடன் இருந்தனர். ஆறு மாத காலம் எத்தனையோ வேலைகள் கெட்டன. எவ்வளவோ பணம் செலவாயிற்று. கடமை தவறாமல் உழைக்க வேண்டிய மருத்துவத் துறையினரில் ஒரு சிலர் எவ்வளவு கடமை உணர்ச்சி அற்றவர்களாகவும், கடிய மனம் படைத்தவர்களாகவும் இருக்கிறீர்கள் என்பதை நான் அநதச் சகிக்க முடியாத சங்கடத்திலும் உணர்ந்து கொள்ள முடிந்தது. டாக்டா முத்தையா எனக்கு அறுவைச் சிகிச்சை முடித்துவிட்டு, கண்ணில் கட்டுப் போடுமாறு உதவி டாக்டரிடத்திலே சொல்லிவிட்டுப் போய்விடுவார்.
அந்த உதவி டாக்டர் என் கண்ணில் பஞ்சும், துணியும் வைத்துக் கட்டும்போது வேண்டுமென்றே கண்ணில் ஓர் அழுத்து அழுத்துவார். இப்படி இரண்டு தடவைகள் நடைபெற்றன. 'இப்படிக் கொஞ்சம் வசதி உள்ளவர்களுக்கே இந்தக் கஷ்டம் என்றால், ஏழை, எளிய நோயாளிகள், இந்த இரக்கமற்ற சிலரிடம் அகப்பட்டுக்கொண்டு என்ன பாடுபடுவார்களோ?'
என்றுதான் நான் கவலைப்பட்டேன். அந்த மருத்துவ மனையின் ஆர். எம். ஒ.வாக இருந்த ஆப்ரகாம் பிறகு அதே மருத்துவமனையில் சூப்பரின்டெண்டாக இருந்தார். அவர் அன்றைக்கே என்னிடத்தில் மிகுந்த அன்பு கொண்டு அடிக்கடி அக்கறையோடு கவனித்து வந்தார். முத்தையாவைப் போன்ற, ஆப்ரகாமைப் போன்ற நல்ல உள்ளங்கள் மருத்துவத் துறைக்குத் தேவை என்பதை நான் அன்றைக்கே உணர்ந்தேன். கழக ஆட்சியில் கண் சிகிச்சை முகாம்களில் டாக்டர் வெங்கடசாமியும், டாக்டர் ஆப்ரகாமும் ஆறறிய அரும்பணி அளவிடக்கூடியதா?
★
