நெஞ்சுக்கு நீதி
எரிச்சலாளர் ஏமாற்றம் · 95 / 391
எரிச்சலாளர் ஏமாற்றம் அதற்குப் பிறகு சென்னையிலே நடந்த முதல் மாநில மாநாட்டிற்காக மதுரையிலே நடந்த பொதுக்குழுவில் மாநாட்டுத் திறப்பாளர் யார் என்ற பிரச்னை வந்தபோது, குடந்தைப் பெரியவர் கே. கே. நீலமேகம் அவர்கள் மாநாட்டுத் திறப்பாளராகச் சம்பத்தின் பெயரை முன் மொழிந்தார். நானும் அரங்கண்ணல் அவர்களும் மாநாட்டுத் திறப்பாளராக நாவலர் நெடுஞ்செழியன் பெயரை முன்மொழிந்தும், வழிமொழிந்தும் சொன்னோம். நீலமேகம் அவர்கள் வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணிடக் கூடியவர்.
உடனே அண்ணா அவர்கள் குறுக்கிட்டு, "இரண்டு பேரும் வேண்டாம். மாநாட்டுத் திறப்பாளராகக் கே. கே. நீலமேகம் அவர்களே இருக்கட்டும்" என்று கூறினார்கள். முதல் மாநில மாநாட்டை அண்ணாவின் கருத்துப்படி கே.கே. நீலமேகம் தான் திறந்து வைத்தார். இதற்கு முன்பு நாகர்கோவிலில் நடைபெற்ற குமரிமாவட்ட மாநாட்டில் அந்த மாநாட்டை நடத்தியவர்களில் சிலர் தோழர் சம்பத்தின் நெருங்கிய நண்பர்கள் என்ற காரணத்தினால் அப்பொழுது கழகத்தின் கலைமணியாய் இருந்த கலைவாணர் என்.எஸ்.
கே. அவர்கள் மாநாட்டுப் பந்தலுக்குள் நுழைவதற்கே அனுமதி தர மறுத்து விட்டார்கள். தான் பிறந்த நாகர்கோவிலில் நடைபெறும் மாநாட்டிற்குத் தனக்கே அனுமதி இல்லையா என்று ஏங்கிய கலைவாணர் என்னிடமும் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களிடமும் கண்ணீர் விட்டு அழுதார். அப்படிக் கலைவாணரைத் தடுக்கின்ற துணிவு அவர்களுக்கு ஏன் ஏற்பட்டது? அண்ணாவுக்கும் கலைவாணருக்கும் இடையே கடுமையான அபிப்பிராய பேதம் இருப்பதாகக் கழகப் புல்லுருவிகளின் தலைவர் ஒரு கதை கட்டி விட்டார்.
இருவருக்குமிடையே அவர் கலகம் செய்யவும் முயற்சி செய்தார். அந்தக் காலத்தில் கலைவாணர் சற்று மயங்கினாலும், அண்ணா அவர்கள் மிக விழிப்புடன் இருந்து கலைவாணருக்கும் தமக்கும் பகை ஏதும் வராமல் தடுத்துக் கொண்டார். சென்னையில் மாநில மாநாட்டிற்கான வேலைகள் இரவும் பகலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அண்ணாவும் நாங்- களும் இரவு பகல் எல்லாம் மாநாட்டுப் பந்தலிலேயே அமர்ந்து மாநாட்டு ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.
இரவு பதினோரு மணி இருக்கும்; பந்தலில் பரப்புவதற்காகக் கொட்டப் பட்டிருந்த மணல் மேட்டில் அண்ணா அவர்களும் நானும் வேறு சில நண்பர்களும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் கலைவாணரின் நிலையையும், நினைப்பையும் அண்ணாவிடத்திலே எடுத்துக் கூறி, அவர் சில தோழர்களின் நடவடிக்கைகளால் மனம் புண் அடைந்து ஒதுங்கியிருப்பதையும் குறிப்பிட்டு, அவரைச் சென்னை மாநில மாநாட்டில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்ற கருத்தினை அறிவித்தேன்.
உடனடியாக அண்ணா அவர்கள் என்னைப் பார்த்து, "நீ இப்போதே சென்று அவரை இங்கு அழைத்து வா" என்றார்கள். நான் உடனடியாகக் கலைவாணர் இல்லம் வந்து அண்ணா அழைப்பதாகச் சொன்னதுதான் தாமதம்; கலைவாணர் அருவி போல் கண்களில் நீரைப் பொழிந்து கொண்டு காரிலே ஏறி உட்கார்ந்தார். எஸ். ஐ. ஏ.ஏ. திடலில் மாநாட்டுப் பந்தலுக்கருகே அண்ணா அமர்ந்திருந்த மணல் மேட்டில் கலைவாணர் ஏறி வந்து அண்ணாவைக் கட்டிக்கொண்ட காட்சியும், அண்ணா தழுதழுத்த குரலில் அவரை வரவேற்ற காட்சியும் என்றும் மறக்க முடியாததாகும்.
"என்ன அண்ணா! இந்த மாநாட்டில் நான் கிடையாதா?' இது கலைவாணரின் கேள்வி. "மாநாடு உங்கள் வில்லுப் பாட்டோடுதானே துவங்குகிறது?" -இது அண்ணாவின் பதில். கலைவாணரும் அண்ணாவும் கட்டித் தழுவியதைக் காணச் சகிக்காத கலகக்காரர்கள் அதை விட்டு மெல்ல நகர்ந்தனர். ஏற்கெனவே அவர்களுக்கு என் மீது இருந்த எரிச்சல் மேலும் ஆயிரம் மடங்கு அதிகமாயிற்று. எரிச்சல்காரர்கள், நொந்து போனவர்கள் எதையும் கட்சிக்கு என்று செய்யாமல் தமக்கு எந்த இடம் என்பதில் மட்டும் அக்கறை காட்டுபவர்கள்.
எந்தப் பெரிய கட்சியினுடைய பலத்தையும் குலைக்கிற அளவுக்கு அதன் தலைவர்களிடையே பிளவு உண்டாக்குவதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அதைப் புரிந்து கொண்டு கட்சியின் வளர்ச்சியைப் பெரிதாக எண்ணுபவர்கள் இடையிலே இருந்து, அந்தத் தலைவர்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்குவதில் விழிப்போடு முயற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுக்கப்பட்ட முயற்சியின் காரணமாகத் தான் அரசியல் தலைவர் அண்ணா அவர்களுக்கும், கலைத் தலைவர் கலைவாணர் அவர்களுக்கும் இடையே பகை மூட்ட எண்ணியவர்களின் வஞ்சகக் கோட்டை தூள் தூளாக ஆயிற்று.
அண்ணா ஒரு முறை ஓர் எழுத்தாள நண்பரைப் பார்த்துச் சொன்னார்: "மாற்றாருக்கு எரிச்சல் உண்டாகும் என்று எண்ணிக் கொண்டு நீ எழுதுகிறாய். அவர்களுக்கு எரிச்சல் வருகிறதோ இல்லையோ. நீ எரிச்சலை வரவழைத்துக் கொண்டு எழுதுகிறாய். இந்த எரிச்சல் மாற்றாரை அழிப்பதற்குப் பதிலாக உன்னையே வீழ்த்திவிடும்!"
இந்தப் பொன்மொழியை உணராத சில எரிச்சல்காரர்கள் ஏடுகளில் ஏதேதோ எழுதினார்கள்; மேடைகளில் ஜாடைமாடையாகப் பேசினார்கள்! 1960-ல் உச்ச கட்டமாக "அண்ணாவின் மன்னன்" என்ற எரிச்சல் மிகு கட்டுரையை எழுதுகிற அளவிற்கு இடைக்காலமான ஏழு, எட்டு ஆண்டுகளில் விட்டு விட்டும், தொடர்ந்தும், அண்ணாவையும், பிறரையும் மறைமுகமாகத் தாக்குகிற பாணியில் ஏதேதோ எழுதிக்கொண்டு வந்தார்கள். அதைத்தான் அவர்கள் தங்களது கழகப் பணியாகக் கருதினார்கள்.
கட்டுகிற வீட்டிற்கு ஒரு செங்கல்லும் எடுத்து வைக்க முயலாதவர்கள், கட்டப்பட்ட வீடுகளுக்குப் பழுது சொல்ல முன் வந்த கதையைப் பார்த்த கழகத் தொண்டர்கள் எல்லாம் அவர்களை ஒதுக்கி வைக்கத் தொடங்கினார்கள். அண்ணா எதை எழுதினாலும், எதைப் பேசினாலும் அது கழகத்தில் உள்ள புல்லுருவிகளான தங்களையே குறிப்பிடுவதாக அவர்கள் பறைசாற்றித் திரிந்தனர். கழகத்தில் கலைஞருக்கு இடம் தரலாகாது என்பதைத் தங்களுடைய கோஷங்களில் ஒன்றாக ஆக்கினார்கள்.
காஞ்சிபுரத்தில் நடந்த பொதுக் குழுவில் நாவலர் நெடுஞ்செழியன் மீது தோழர் சம்பத் கண்டனத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். அது நாவலரை மட்டுமல்ல; அண்ணாவையும் கூட மறைமுகமாகக் கண்டித்திடும் வகையில் அமைந்த தீர்மானமாகும். 1951-ல் நடைபெற்ற அந்தக் காஞ்சிபுரம் பொதுக் குழுவின் முடிவினைக் கழகத்தினர் ஆவலோடு எதிர்பார்த்தனர். கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தவரைப் பொதுக் குழு உறுப்பினர்களுடைய கேள்விகளிலிருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அண்ணாவுக்கு ஏற்பட்டது.
கண்டனங்களுக்கெல்லாம் அமைதியான முறையில் தகுந்த பதில் அளித்து; அந்தத் தீர்மானத்தை அண்ணா அவர்கள் திரும்பப் பெறச் செய்தார். இப்படி எரிச்சல்காரர்களின் கழகப் பணி இந்த விதமாக ஒருபுறத்தில் நடந்து கொண்டிருந்த போது, கழகத்தினைக் கட்டிக் காக்க வேண்டும் என்று எண்ணிய கடமை வீரர்களின் பணி இன்னொரு பக்கக்தில் கண்ணியம் தவறாமல், கட்டுப்பாடு குலையாமல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கழகப்பணி புரியக் கடும் பயணம் மேற்கொண்டோம் என்று கூறுகிற நேரத்தில்.
அந்தப் பயணம் என்ற சொல் பயணத்தின் கடுமையை மாத்திரம் விமரிசிக்கின்ற சொல் அல்ல. கால் நடையாகவும், வண்டியிலும், காரிலும், ரயிலிலும் மேற்கொண்ட நமது கழகத்தினரின் பயணங்களையும் குறிப்பிடுவதாகும்.
