நெஞ்சுக்கு நீதி
கோவில்பட்டி மாநாடு · 94 / 391
கோவில்பட்டி மாநாடு கழகம் தொடங்கியவுடன் நடந்த மாவட்ட மாநாடுகளில் கோவில்பட்டியில் நிகழ்ந்த நெல்லை மாவட்ட மாநாடு குறிப்பிடத்தக்க ஒரு மாநாடு ஆகும். அந்த மாநாட்டில் தலைமை ஏற்கும் பணி எனக்கு அளிக்கப்பட்டிருந்தது. மாநாட்டுத் தலைவன் என்ற முறையில் கழகத்தின் அமைப்புகள், சிற்றூர்க் கிளை, நகரக் கிளை, வட்டக் கிளை, மாவட்டக் கிளை, தலைமைக் கழகம் என்கின்ற அளவில் பரவலாக்கப்பட வேண்டுமென்றும், ஒவ்வொரு அமைப்புக்கும் தொடர்பு இருக்க வேண்டுமென்றும், தலைமைக் கழகத்தின் தாக்கீதுகள் பிறப்பிக்கப்பட்ட உடனேயே அவைகள் சிற்றூர்க் கிளைகளுக்குச் சென்றடைகிற அளவிற்கு எல்லா மட்டத்திலும் உள்ள அமைப்புகளுக்கு இடையே ஒரு சங்கிலித் தொடர்பு இருக்க வேண்டுமென்றும், அத்தகைய நிலையை இன்னும் நாம் உருவாக்காமல் இருப்பது வருந்தத்தக்கது என்றும் குறிப்பிட்டேன்.
அத்துடன் தமிழகம் புறக்கணிக்கப்படுவதைச் சுட்டிக் காட்டி, இந்தி ஆதிக்கத்தை எதிர்ப்பதன் அடையாளமாகக் கழகம் போராட்டங்களை வகுக்க வேண்டுமென்றும் எடுத்துச் சொன்னேன். என்னுடைய தலைமை உரையைக் கண்டித்துத் தோழர் ஈ. வி. கே. சம்பத் அந்த மாநாட்டிலேயே வெளிப்படையாகப் பேசினார். "நேற்று வந்தவர்கள், இன்று வந்தவர்கள் எல்லாம் கழகத்திற்குத் திட்டங்கள் சொல்லுகிறார்கள். நாம் வளர்ந்து இருக்கின்ற ஒழுங்கிற்கு இப்போது உள்ளதே போதும்" என்று குறிப்பிட்டார்.
மாநாட்டினர் அவரது சுடுமொழிகளை ஏற்கவில்லை. மாநாட்டில் இறுதியாகப் பேசிய அண்ணா அவர்கள் என்னுடைய தலைமை உரையில் குறிப்பிட்ட குறைபாடுகளை எல்லாம் ஏற்றுக் கொண்டு, நான் கேட்டுக் கொண்டவாறு போராட்டத் திட்டங்களை அந்த மாநாட்டிலேயே வெளியிட்டார். அண்ணா பேசி முடித்த பிறகு யாரும் பேசுவது இல்லை என்றாலும் மாநாட்டினரிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அண்ணாவின் உரைக்குப் பிறகு சில நிமிடங்கள் தலைமை முடிவுரையைப் பேசினேன்.
அப்போது நான் குறிப்பிட்டது இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது பசுமையாக. "சர்வாதிகாரத் தலைவன் ஒருவனின் தலைமையிலே நான் இருந்திருந்தால், 'தலைவரே திட்டம் கொடுங்கள்' என்று கேட்கும்போது. 'நேற்று வந்தவன், இன்று வந்தவன் எல்லாம் திட்டம் கேட்பதா? என்று அந்தச் சர்வாதிகாரத் தலைவர் கேட்டிருப்பார். ஆனால் நமது அண்ணா ஜனநாயகத்தின் காவலர். ஆகவேதான் நான் கேட்ட போராட்டத் திட்டத்தினை ஏற்றுக் கொண்டார்."
இதை நான் பேசி முடித்ததும் மாநாட்டினர் பெருத்த கையொலி செய்து எனக்குப் பாராட்டுத் தெரிவித்தனர். அப்போது நமக்குள்ள கருத்துப் பத்திரிகையும் செய்திப் பத்திரிகையும் 'திராவிட நாடு' இதழ்தான். அந்த இதழ் நடத்தும் பொறுப்பினைத் துணை ஆசிரியராக இருந்த சகோதரர் அரங்கண்ணல் கவனித்து வந்தார். அண்ணா அவரை அழைத்து, "அரங்கண்ணல்! சம்பத்தின் பேச்சையும் மாநாட்டில் கருணாநிதியின் தலைவர் முடிவுரையையும் பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டாம்" என்று ஆணையிட்டார்.
