உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/அண்ணாவுக்கும் கோபம் வரும்.
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

அண்ணாவுக்கும் கோபம் வரும். · 93 / 391

அண்ணாவுக்கும் கோபம் வரும். அண்ணா சில நேரங்களில் என்னிடம் கோபித்துக் கொண்டிருக்கிறார். அந்தக் கோபத்தின் காரணமாக வாரக் கணக்கில், ஏன் மாதக் கணக்கிலே கூட என்னிடம் சரியாகப் பேசாமல் இருந்திருக்கிறார். அந்தக் கோபமும் வருத்தமும் நான் கட்சி வேலைகளைச் சரியாகக் கவனிக்கவில்லை என்பதற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ அல்ல; கழகம் நடத்துகிற போராட்டங்களில் தீவிரம் காட்டப்பட வேண்டும் என்பதிலும், போர்முறைகளை எந்த வகையில் வகுக்கப்பட வேண்டும் என்பதிலும் அண்ணா அவர்களின் கருத்துக்கு எதிரான கருத்துக்களை நான் சொல்ல நேரிடுவதை ஒட்டித்தான் அவருடைய செல்லக் கோபத்திற்கு நான் ஆளாகிவிடுவேன்.

அவர் என் மேல் ஆத்திரமுறுகிற எந்த நேரத்திலும் என்னிடம் வைத்திருந்த அன்பில் அணு அளவையும் அவர் குறைத்துக் கொண்டது கிடையாது. கல்லக்குடிப் போராட்டத்தில் டால்மியாபுரம் பெயர்ப் பலகையின் மீது கல்லக்குடி என்று அச்சடிக்கப்பட்ட தாளை ஒட்டி விட்டுத் திரும்ப வேண்டுமென்றும், ரெயில் நிறுத்தப் போராட்டத்தில் அபாயச் சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்த வேண்டுமென்றும்தான் அண்ணா அவர்கள் திட்டம் தீட்டித் தந்தார்கள்.

ஆனால் கல்லக்குடி என்ற தாளை நான் ஒட்டியதும் போலீசார் என்னைக் கைது செய்யாமல் அலட்சியப்படுத்தியதை நான் உணர்ந்தவுடண், புகைவண்டியின் முன்னால் படுப்பது என்ற திட்டத்தினை அந்த இடத்திலேயே நான் வகுத்தேன் அதற்கு ஏற்பத் தொண்டர்களும் என்னைப் பின்பற்றினார்கள். அதன் காரணமாக நடந்த துப்பாக்கிப்பிரயோகம், அதிலே இழந்த இரண்டு உயிர்கள் தொடர்பாக எனக்கும் தோழர்களுக்கும் கிடைத்த ஆறுமாதச் சிறைவாசம் இவைகள் எல்லாம் அண்ணா அவர்களின் உள்ளத்தை உருக்கின என்றாலும், நான் திடீரென்று கல்லக்குடிக் களத்தில் தீவிரமான ஒரு திட்டத்தினை வகுத்துக் கொண்டு அறப் போர் நடத்தியதை அவர் விரும்பவில்லை என்பதை வெளிப்படையாகவே சொல்லி என்னிடம் கோபித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அண்ணாவின் கோபத்தைப் பயன்படுத்தி அண்ணாவிடமிருந்து என்னைப் பிரித்து விடுவதற்குக் கழகத்திலே சில முக்கியமானவர்கள் இதுதான் சமயம் என்று முயன்று பார்த்தார்கள். அண்ணா என்னைக் கோபித்துக் கொண்டது இதற்கு மேலும் நான் தீவிரமாகப் போய் விடக் கூடாது என்று தடுப்பதற்காகத்தானே தவிர, அப்பொழுது தீவிரமாகப் போனதற்காக அல்ல என்பதையும், கழகத்தில் தீவிரவாதிகள் மீது அவர் உள்ளூர எந்த அளவிற்கு அன்பு வைத்திருந்தார் என்பதையும் அறிய மாட்டாதவர்கள் அண்ணாவிற்கும் எனக்கும் இடையே பகை வளர்க்கும் ஏற்பாட்டில் சில நாட்கள் வெற்றி வீரர்களாகத் திகழ்ந்து, நாளா வட்டத்தில் அவர்களாகவே வீழ்ந்து விட்டார்கள்.

1942-ல் வார்தாவில் கூடிய அகில இந்தியக் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் காந்தியடிகள் நேருவைத் தனது வாரிசு என்று குறிப்பிட்டுப் பேசிய முக்கியமான சொற்பொழிவில் ஒன்றைக் குறிப்பிட்டார். "நானும் ஜவஹர்லாலும் எதிரிகளாகிவிட்டதாகச் சிலர்சொல்கிறார்கள் அபிப்பிராய பேதம் மாத்திரம் எங்களுக்கிடையே வருத்தத்தை வளர்க்கப் போதுமானதல்ல. என் பாஷை ஜவஹர்லாலுக்கும், அவர் பாஷை எனக்கும் புரியவில்லை என்கிறார்கள்.

ஆனால் உள்ளங்கள் ஒன்று பட்டுவிட்டால் பாஷை வித்தியாசம் என்ன செய்யும்? நான் போன பிறகு அவரே என் பாஷையைப் பேசுவார் என்பது எனக்குத் தெரியும்." இதுபோல் காந்தியடிகள் பேசினார். காந்திஜியின் இடத்திலே அண்ணாவை வைத்துப் பார்க்கிறேன். ஆனால் நேருவின் இடத்தில் நான் இருப்பதாக என்னால் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை. ஆயினும் ஒரு தலைவனுக்கும், அந்தத் தலைவனது ஆருயிர்த் தொண்டனுக்கும் இடையில் கருத்து வித்தியாசங்கள் இருக்கலாம்.

எங்கள் உள்ளங்கள் ஒன்றுபட்டு விட்டால் அந்த வித்தியாசங்களைப் பயன்படுத்தி எங்களுடைய விரோதத்தை வளர்க்க எந்த வித்தகர்- களாலும் முடியாது என்பதற்கான எடுத்துக்காட்டுதான் காந்தியடிகளின் வார்தாப் பேச்சு என்பதை நான் அடிக்கடி எண்ணிக்கொள்கிறேன். கருத்து மாறுபாடுகள் ஒரு கட்சியின் நலனை முன்னிட்டு இருந்திட வேண்டும். அந்தக் கட்சியை வளர்ப்பது எப்படி என்ற பொது நலத்தின் அடிப்படையில் அமைந்திட வேண்டும்.

கட்சிக்கு நாம் என்ன செய்தோம்; இன்னும் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியின் அடிப்படையில் கருத்து வேறுபாடுகள் எழுதுவது இயற்கை; அனுமதிக்கக் கூடியது; அதன் காரணமாகப் பிளவுகள் என்றுமே எழாது. ஆனால் கட்சி தனக்கு என்ன செய்தது; தனக்குக் கட்சி என்னென்ன செய்ய வேண்டும் என்ற தன்னல அடிப்படையில் எழுகின்ற கருத்து வேறுபாடு அனுமதிக்கத் தக்கதும் அல்ல; அது கட்சியை வளர்ப்பதற்குப் பயன்படக் கூடியதும் அல்ல.

காந்தியடிகள் தொடங்கிய தனி நபர் சத்தியாக்கிரகம் ஆங்கிலேய அரசாங்கத்தைச் சற்றும் அசைக்கவில்லை என்ற விமரிசனத்திற்குக் காந்தியடிகள் பதில் கூறும்போது குறிப்பிட்டார்: "இயக்கத்தின் இந்த வேகமும், நடையும், போக்கும் எனக்குத் திருப்தி தருவதாக இருக்கின்றன. அதன் வேகத்தை அதிகரிக்கச் செய்ய நான் விரும்பவில்லைக் அகிம்சை வழியிலேயே அது தானாகவே வேகம் பெறும். அதிசயம் நிகழ வேண்டும் என்று மக்கள் விரும்புவதற்காகவே அது நிகழ்ந்து விடாது."

இதே கருத்தினைத்தான் அண்ணாவும் அறப் போராட்டக் காலங்களில் வலியுறுத்தினார். அதனைத் தொடக்கத்தில் ஏற்றுக் கொள்வது என்னைப் போன்றவர்களுக்குக் கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் பிறகு மெல்ல மெல்ல அண்ணாவின் கருத்திற்கே ஆக்கம் அளிக்கத் தொடங்கினோம். 1961-ஆம் ஆண்டு கழகத்தையும், அண்ணா அவர்களையும் தாக்குகின்ற அளவிற்கு எதிர்முகாம் அமைத்துவிட்ட புல்லுருவிகள் திடீரென்று தங்கள் உருவத்தைக் காட்டினார்கள் என்று என்னால் சொல்ல முடியாது.

அவர்களுடைய உருவம் வெளியாவதற்கான கால கட்டத்தைக் கணக்கிட வேண்டுமானால், 1960-க்குப் பத்துஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.