நெஞ்சுக்கு நீதி
காத்திருந்து பெற்ற வெற்றிக் கனி · 92 / 391
காத்திருந்து பெற்ற வெற்றிக் கனி இவ்வாறாக என் வாழ்க்கைக் குறிப்புகளில் அதிக இடத்தைப் பிடித்துக் கொண்ட நிகழ்ச்சிகளில் முக்கியமானவைகளான கல்லக்குடிப் போராட்டம், சிறை வாழ்க்கை ஆகியவை பற்றி நான் தொடர்ந்து இதழ்களில் எழுதிக் கொண்டு வர நேரிட்டது. டால்மியாபுரம் பெயரைக் கல்லக்குடியென மாற்றும் உத்தரவை மத்திய அரசு பிறப்பித்து அதன் காரணமாகத் தமிழகமெங்கும் கல்லக்குடி 'வெற்றி விழா' நடைபெற்றுக் கொண்டாடப்பட்டது.
பல ஆண்டுகட்கு முன்னர் தொடங்கிய தமிழனின் தன்மானப் போருக்கு வெற்றி கிடைத்து விட்டது. கழகத்தினரைப் பார்த்து அண்ணா அடிக்கடி கூறுவதுண்டு: "என் முன்னால் லட்சக்கணக்கான மக்களைக் காட்டுகிறீர்கள், உயர உயரக் கொடிகளை ஏற்றிக் கட்டுகிறீர்கள். வான்முட்ட வாழ்த்து முழக்குகிறீர்கள். கோபுர உயரம் மாலைகள் குவிக்கிறீர்கள். இவைகளை மட்டும் நான் டில்லிக்காரர்களிடம் காட்டினால் அவர்கள் இறங்கி வருவார்கள் என்று எண்ணுகிறீர்களா?
என் பின்னால் எத்தனை சட்ட மன்ற உறுப்பினர்கள்? எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள்? எத்தனை நகராட்சித்தலைவர்கள்? என்ற கணக்கல்லவா ஜனநாயகத்தில் தேவை என்கிறார்கள்!" -இப்படி அண்ணா குறிப்பிட்டது எவ்வளவு உண்மை என்பதற்குக் கழகம் ஆட்சி பீடம் ஏறிய பிறகு பெற்ற வெற்றிகளே தக்க சான்றுகளாகும். 1953-ல் கல்லக்குடி என்ற தமிழ்ப் பெயருக்காகப் போராடிப் பலர் சிறை புகுந்து, பலர் அடக்கு முறைகளை ஏற்று, சிலர் உயிர் இழந்து, அதன் பிறகு 1967-ல் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று மூன்று ஆண்டு காலம் டில்லியை இடைவிடாமல் வற்புறுத்தி இறுதியில் வெற்றிக்கனியைப் பெற்றிருக்கிறோம்.
"முதலில் தொடங்குவது தெற்கு; இறுதியாகப் பிந்திக் கொள்வதும் அதுதான்!" -என்பது வியட்நாம் நாட்டின் பிரபலமான பழமொழி. இதனை அந்நாட்டுப் புரட்சி வீரன் 'ஹோசிமின்' அடிக்கடி சொல்லத் தவறுவதே இல்லை. அவர் கருத்துப்படி தெற்குப் பகுதி விடுதலை பெறவில்லையாதலால், இறுதிவரை அந்தப் பழமொழியை நினைவூட்ட அவர் மறக்கவே இல்லை. எதனையும் தொடங்குவதில் தெற்குத் திசைக்கு இருக்கும் உயிர்ப்புச் சக்தி பற்றி வியட்நாம் பழமொழி கூறும் பொருள் இருக்கட்டும்; நமது தென்னகத்தில் 1953 ஜூலை மும்முனைப் போராட்டத்திலிருந்து "முதலில் தொடங்குவது தெற்கு; தொடங்கியதைத் தொடர்ந்து முடிப்பதும் அதுதான்" -என்பது உறுதியாகிவிட்டது.
கட்டுப்பாடான போராட்ட முறையும், தட்டுத் தடங்கலில்லாத மக்கள் ஆதரவும், நெடிதுயர்ந்த தலைமையும் எத்தகு அற்புதங்களைச் சாதிக்கும் என்பது தெளிவாக உணரப்பட்ட முதல் சம்பவமே தி. மு. கழகத்தின் மும்முனைப் போராட்டந்தான்! காங்கிரசின் விடுதலைப் போராட்ட நாட்களில் தென்னகததைப் பொறுத்த வரையில் களங்களுக்கான தளபதிகள் உருவாக்கப்பட்டார்களே தவிர, மக்கள் தலைவர்கள் யாரும் உருவாகவில்லை. அறிவார்ந்த திறமையாளர்கள் இருந்தனர்.
மக்களின் இதயத்தோடு பேசும் தலைவர்கள் இல்லை. எதிரியிடம் வாதிட்டுப் போர் புரிவதில் வல்லவர்கள் இருந்தனர். மக்களை வயப்படுத்தும் மாமனிதர்கள் அப்போது இல்லை. தெற்குக்கு இருந்த அந்தக் குறை பெரியார் பாசறையில் தயாரான அறிஞர் அண்ணா அவர்களின் அரசியல் நுழைவால் நீங்கி, மும்முனைப் போராட்ட நாட்களில் நிறைவு கண்டது. மும்முனைப் போராட்டத்தின்போது நாட்டின் அரசியல் நிலையும் மக்களின் மன நிலையும், அதிகாரம் வகித்தோரின் அலட்சிய மனப்பான்மையும், ஜனநாயகத்திற்கு இருந்த அவக்கேடும் யாராலும் சரியாக உணரப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
பொதுவாக நமது ஜனநாயக அரசியல் சட்டம் 1933-க்கு முன்பு ஜெர்மனியில் வீமர் குடியரசின் அரசியல் சட்டத்தைப் போலவே மதிப்புப் பெற்றிருந்தது. அரசியல் சட்டத்தைக் காட்டிலும் காங்கிரஸ் கட்சியின் விதி முறைகள் கவனமாக நாட்டில் படிக்கப்பட்டன. இந்தோனேசியாவில் சுகர்ணோ செய்ததைப் போல் இந்தியாவிலும் ஜனநாயகத்திற்குக் கட்டுப்பாடும், காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்- புகளுக்கேற்ப அரசியல் சட்டங்களும் உருவாக்கப்படும் சூழ்நிலையும் நிலவிற்று.
சமுதாயத்தின் முற்போக்குக் கருத்துக்களைப் பண்டித நேரு பரப்பிக் கொண்டிருந்தாலும், மற்ற காங்கிரஸ்காரர்கள் மனு மாந்தாதா காலம் திரும்பாதா, என்று பேராசை பிடித்து அலைந்தனர். இந்தியா என்பது புது டில்லியின் அரசியல் புழுதியில் மூடி மறையக் கூடிய நிலப் பகுதியாகவே கருதப்பட்டது. காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் வெற்றி என்பவைகளைத் தவிர, நாடு மற்ற தலைவர்களையோ மற்ற கட்சிகளையோ, மற்ற கருத்துக் கொண்ட மக்களையோ கொண்டிருப்பதாக அரசியல் அதிகாரம் பெற்றோர் அப்போது கருதவில்லை.
இந்நிலையில்தான் அறிஞர் அண்ணா அவர்கள் அரசியல் சமுதாயம்- தமிழ்ப் பற்று ஆகியவைகளை உள்ளடக்கிய நாடு தழுவிய பெரும் போர் முனைகளை, ஒரே நாளில் நடைபெறுவதாக அறிவித்து உருவாக்கினார்கள். போராட்ட முடிவுகளைப் பற்றி யாருக்கும் ஐயப்பாடு இல்லை. ஆனால் விளைவுகள் மிகப் பயங்கரமாக இருக்கும் என்று எதிர்பார்த்தே பல்லாயிரக்கணக்கானவர் களம் புகுநதனர். "ஈண்டுச் செல்லும் மக்காள், நீவீர் ஸ்பார்ட்டா சென்று பகர்வீர்.
நாங்கள் பணியை முடித்துப் படுத்தோம்!" -என்று ஸ்பார்ட்டானிய மாவீரன் ஒருவன் கூறிக் கொண்டே களத்தில் மடிந்ததாக அவன் மாண்ட இடத்தில் நடப்பட்டுள்ள கல்வெட்டின் வீர வரிகளை எண்ணிக் கொண்டே நாங்கள் போர்க்களம் செனறோம். அந்த வீரன் தன் பணியை முடித்துப் படுத்ததாக நடுகல்லிலே எழுதப்பட்டதாக வரலாறு முழங்குகிறது. ஆனால் கல்லக்குடிப் போராட்டத்திலே நாங்கள் படுத்துப் 'பணி' முடிக்கச் சென்றோம். கல்லக்குடி வெற்றி விழாவின் போது நான் தலை வைத்துப் படுத்திருந்த அந்தத் தண்டவாளத்தைச் சென்று பார்த்தேன்.
அன்று படையின் முதல்வனாகச் சென்றேன், போலீசார் புடைசூழ. இன்று தமிழக முதல்வனாகச் சென்றேன்; அதே போலீசார் புடைசூழ! அன்றிருந்த மகிழ்ச்சி இன்றில்லை. ஆனால் வெற்றிப் பூரிப்பு சாதாரணமானதல்லவே! மும்முனைப் போர் நடந்த அந்த 1953-ஆம் ஆண்டில் உலகில் எத்தனையோ நிகழ்ச்சிகள்! எகிப்து மன்னன் பரூக் விரட்டப்பட்டுப் பிரதமராகப் பொறுப்பேற்ற நகீபுக்குத் துணைப் பிரதமராக நாசர் பொறுப்பேற்றுக் கொண்டது 1953-ல்தான்.
அந்த ஆண்டு மார்ச் திங்களில் ரஷியாவில் ஸ்டாலின் காலமானார். தொடர்ந்து டிசம்பர் 23-ஆம் நாள் ரஷ்யாவில் பெரியா சுட்டுக் கொல்லப்பட்டார். ஹில்லாரி, டென்சிங் நார்கே ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தில் முதன் முதலாக மனிதர்களின் காலடியைப் பதித்த ஆண்டும் அதுதான்! அந்த ஆண்டு நவம்பர் 21-ஆம் நாள் திருச்சி சிறையிலிருந்து நானும் முல்லை சத்தி, கஸ்தூரி, குமாரவேல், குழந்தைவேல் ஆகியோரும் விடுதலை பெற்றோம். சிறை வாசலில் தலைமைக் கழகப் பொறுப்பாளர் திரு ஏ.
கோவிந்தசாமி அவர்கள் மாலையணிவித்து வரவேற்றார். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் என்னைக் கட்டித் தழுவி, கண்ணீர் மல்கிட வரவேற்றார். அன்று எங்களுக்குப் பாராட்டு விழாக் கூட்டம் நடத்தத் திருச்சி டவுன் ஹால் மைதானத்தில் அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. தென்னூர்ப் பகுதியில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. மறுநாள் திருவாரூரில் பாராட்டு விழாக் கூட்டம் நடைபெற்றது. நவம்பர் 29-ஆம் நாள் சென்னையில் வரவேற்பு.
அப்போது சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் தோழர் கண்ணபிரான் எங்களை வரவேற்க மகத்தான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்க முடியாத அளவுக்கு மக்கள் குழுமியிருந்தனர். வண்டியிலிருந்து கீழே இறங்கியதுதான் தெரியும்; எத்தனையோ பேரின் தோள் மீது பந்து போல் உருண்டு கொண்டேயிருந்தேன். வாழ்த்து முழங்கியவாறு என்னைக் கசக்கியெறியும் கூட்டத்திலிருந்து விடுவிப்பதற்காக மதுரை முத்து பட்டபாடு கொஞ்சமல்ல!
பிறகு அங்கிருந்து பெரியதோர் ஊர்வலம் புறப்பட்டது. மவுண்ட் ரோடு வழியாக அந்த ஊர்வலம் வந்தபோது, போக வழியில்லாமல் ஒரு பிரபல அமெரிக்கரின் கார் தடைப்பட்டு நின்று விட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு என் ஊர்வலத்தைக் கண்டு அது பற்றி விசாரித்தறிந்தவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார். அவர்தான் நிக்சன். இருபது ஆண்டுகட்கு முன் கல்லக்குடி களம் சென்று சிறை மீண்டு வந்த நான், இன்று கல்லக்குடி வெற்றி கண்டு மகிழும் வகையில் தமிழகத்தின் முதல்வனாகப் பொறுப்பேற்றிருக்கிறேன்.
தமிழகத்தின் இந்த ஜனநாயக ஒளியை வழங்கியவர் அண்ணா என்பதில் ஐயமுண்டோ? அந்த மக்கள் தலைவன் தெற்குப் பகுதியில் தொடங்கிய அமைதியான புரட்சியை யார்தான் மறக்க இயலும்? என்னுடன் சிறையிலிருந்த குமாரவேலன் சிறையிலேயே நோய்- வாய்ப்பட்டிருந்து, விடுதலை பெற்ற சில நாட்களுக்கெல்லாம் உயிர் இழந்ததையும், அடுத்து சில மாதங்களுக்குப் பிறகு குழ்ந்தைவேலன் உயிர் இழந்ததையும் என்னால் மறக்கவே இயலாது. சிறைப்பட்ட சிங்கங்கள், உயிர் நீத்த தங்கங்கள் அனைவரும் ஈட்டித் தந்ததன்றோ இந்த இணையற்ற வெற்றி என எண்ணும் போதெல்லாம் நெஞ்சம் நெக்குருகுகிறது.
1953-ஆம் ஆண்டு மும்முனைப் போராட்டங்கள் முடிவுற்று சிறைப்பட்ட தலைவர்களும், தொண்டர்களும் விடுதலை பெற்ற பிறகு, கழகப் பணி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் அமைந்தது. பிரச்சாரப் பணியில் சிலர்; கழகத்திற்குப் பொருளீட்டும் பணியில் சிலர்; கழகத்தின் மீது போடப்பட்டிருந்த வழக்குகளை நடத்துகின்ற பணியில் சிலர்- இவ்விதம் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர் கழகத்தினர்.
