நெஞ்சுக்கு நீதி
சிறைச் சீர்திருத்தம் செய்தோம் · 91 / 391
சிறைச் சீர்திருத்தம் செய்தோம் சி றையிலேயே கைதிகளின் அவல நிலைமைகளை எண்ணிடும் போதில், எப்போதாவது அவர்களுக்குச் சில நலன்களைப் புரிந்திட நம்மால் இயலுமா என நான் சிந்திப்பதுண்டு. ஆனால் கழகம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றிடும் நன்னாள் ஒரு நாள் வரும் என்றோ, பேரறிஞர் அண்ணா அவர்களோ அல்லது நானே முதலமைச்சர் பொறுப்பிலே அமர்வோம் என்றோ நான் அப்போது எண்ணிப் பார்த்ததில்லை. 1967-ஆம் ஆண்டு கழகம் மக்களின் பேராதரவோடு ஆட்சிக்கட்டிலில் அமர்த்தப்பட்டவுடன் முன்னாள் கைதிகளான எங்கள் மனத்தில் நம்மால் முடிந்த அளவு சிறைச்சாலைகளைச் சீர்திருத்திட வேண்டுமென்று பேரார்வம் மூண்டெழுந்தது.
இந்த ஐந்தாறு ஆண்டுகளில் சில குறிப்பிடத்தக்க மாறுதல்களைச் செய்துள்ளோம். 'சி' வகுப்புக் கைதிகளும் தங்கள் சொந்தச் செலவில் சோப்பு, எண்ணெய், பற்பசை, பல்துலக்கும் தூரிகை, பவுடர் ஆகியவைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். 'ஏ' வகுப்பு, 'பி' வகுப்புக் கைதிகளைப் போல் 'சி' வகுப்புக் கைதிகளும் கடிதத் தொடர்பு கொள்ளவும், வெளியிலிருந்து வருபவர்களை நேரில் பார்க்கவும் அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாகக் கைதிகளிடையே இருந்த ஏற்றத் தாழ்வுகள் அகற்றப்பட்டன.
சிறைச்சாலையின் கண்காணிப்பாளரால் அனுமதிக்கப்பட்ட செய்திப் பத்திரிக்கைகளையும், வார, மாத, இதழ்களையும் படித்திட 'ஏ' வகுப்பு 'பி' வகுப்புக் கைதிகள் அனுமதிக்கப்பட்டனர். மத்திய சிறைச் சாலையில் உள்ள கைதிகளுக்கும், பார்ஸ்டல் பள்ளிக் கூடத்தில் உள்ளவர்களுக்கும் பொங்கல் நாளன்று அதிக உணவு அளிக்கப்பட்டது. இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டையொட்டிக் கைதிகளின், தண்டனைக் காலங்கள் வெவ்வேறு தர அளவில் குறைக்கப்பட்டன.
இதனால் 2,784 கைதிகள் விடுதலையடைந்ததுடன், 11,488 கைதிகள் பயனடைந்தனர். சிறை கைதிகள் எழுதிய கவிதைகளைத் தொகுத்து 'சிறை தரும் தேன் கவிதை' என்ற நூல் வெளியிடப்பட்டது. பெண் கைதிகளின் குழந்தைகளைப் பராமரிப்பதற்காக வேலூரில் ஒரு குழந்தை வளர்க்குமிடமும் ஒரு குழந்தை காப்பிடமும் கட்டப்பட்டன. கோடைக் காலத்தில் வெம்மையைத் தணித்துக் கொள்வதற்காகப் பனைமட்டை விசிறிகள் கைதிகளுக்கு வழங்கப்பட்டன. கைதிகள் ஓய்வு நேரங்களில் கேரம்.
செஸ் விளையாட அனுமதிக்கப்பட்டனர். அரசின் செலவிலேயே அரசாங்கத் தேர்வுகளுக்குச் செல்ல கைதிகள் அனுமதிக்கப்பட்டனர்.. பார்ஸ்டல் பள்ளிக்கூடத்திலுள்ளவர்கள் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். எல்லா வகுப்புக் கைதிகளும் விரும்பும் வரை, மாத இதழ்களை வாங்கிப் படிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவ்விதழ்கள் மதிப்பிற்குரியவைகளாக இருக்க வேண்டும். அரசாங்கச் செலவில் 100 கைதிகளுக்கு ஒரு பத்திரிகை வீதம் தினமணி, சுதேசமித்திரன், நவமணி ஆகிய பத்திரிகைகள் வழங்கப்பட்டன.
இவ்வசதிகள் துணைச் சிறைச்சாலைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டன. கைதிகள் பரிசுச் சீட்டுகள் வாங்க அனுமதிக்கப்பட்டனர். மூன்று கைதிகள் பரிசும் பெற்றுள்ளனர். காந்தி நூற்றாண்டு விழாவையொட்டிக் கைதிகளின் தண்டனைக் காலங்கள் பல்வேறு தர அளவில் குறைக்கப்பட்டன. இதனால் 2,687 கைதிகள் விடுதலை செய்யப்பட்டதுடன், 9,561 கைதிகள் பயனடைந்தனர். 12-11-68-க்கு முன்பு மரண தண்டனை பெற்றவர்கள் அனைவருக்கும் இந்திய அரசு முடிவின்படி மரண தண்டனை நீக்கப்பட்டு, வாழ்நாள் தன்டனை அளிக்கப்பட்டது.
இதனால் 111 கைதிகள் தூக்கு மரத்தில் ஏற்றப்படுவதிலிருந்து தப்பினர். தஞ்சாவூருக்கு அருகில் நீலகிரி என்ற இடத்தில் 114 ஏக்கர் திறந்த வெளிச் சிறைச்சாலை அமைக்கப்பட்டது. திறந்த வெளிச் சிறைச்சாலையில் குறைந்த அளவு கண்காணிப்பே இருந்தாலும், இதுவரை யாரும் தப்பித்துச் செல்லவிலலை. அங்கு கைதிகள் கிணறு வெட்டுதல், நிலம் திருத்துதல், உழுதல், பயிரிடுதல் ஆகிய பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள கைதிகளுக்கு நாளொன்றுக்கு 50 கிராம் அரிசி அதிகமாகக் கொடுக்கப்படுகிறது.
அவர்களுக்கு நாளொன்றுக்கு 25 பைசா கூலியும் கொடுக்கப்படுகிறது ஆறு நாள் வேலை செய்தால் ஒரு நாள் தண்டனைக் காலம் குறைகிறது எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு மாதமொன்றுக்கு 90 கிராம நல்லெண்ணெயும் 45 கிராம் சிகைக்காய்த் தூளும் கொடுக்கப்படுகின்றன. நான் முதலமைச்சரான பின்னர் கல்வி சம்பந்தமான ஒலி பரப்புகளைக் கேட்டுக் கைதிகளும் பயனடைய வேண்டும் என்பதற்காகக் கோயமுத்தூர், சேலம், சென்னை மத்திய சிறைகளுக்குப் புதிய வானொலிப் பெட்டிகள் வழங்கப்பட்டன.
சிறைச்சாலைகளில் செய்யப்படும் மனைத் துணைப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டு மரங்களை வளமாக்கும் நிலையமொன்று வாங்கப்பட்டது. நாட்டு மரங்களைத் தேக்கு மரங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தியதால், திருச்சி மத்திய சிறையில் குறிப்பிடத் தகுந்த அளவு செலவு குறைந்தது. புதுக்கோட்டையிலுள்ள பார்ஸ்டல் பள்ளிக்கூடத்திற்குப் புதிய தச்சுப் பட்டறை வாங்க ரூபாய் 36,000 அனுமதிக்கப்பட்டது. சேலம் மத்திய சிறைச்சாலையில் உள்ள அலுமினியத் தொழிற்சாலைக்குச் சுழலும் கடைசல் பொறி வாங்கப்பட்டதால், அலுமினியப் பொருள்களின் உற்பத்தி விலை குறைந்ததுடன், உற்பத்தியும் பெருகியது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் 61-ஆவது பிறந்த நாள் விழாவை யொட்டி 15-9-69 அன்று 15 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலம் தண்டனை அனுபவித்தவர்கள் இரக்கம் காட்டும் குறிப்பாக விடுதலை செய்யப்பட்டனர். இதனால் 21 கைதிகள் பயனடைந்தனர். புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளிக் கூடத்தில் உள்ளவர்களில் சிலர், புதுக்கோட்டையில் உள்ள தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நாள்தோறும் சென்று பயிற்சி பெற்றுத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்குப் புத்தகம் வாங்க ரூபாய் 54 அனுமதிக்கப்பட்டது. புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளிக்கூடம்,சேலம், திருச்சி மத்திய சிறைச்சாலைகள் மற்றும், சில துணை சிறைச்சாலைகளில் நீரால் எளிதில் தூய்மைப் படுத்தப்படுகிற கழிப்பிடம் கட்டுவதற்காக ரூ.2,69,000 அனுமதிக்கப்பட்டுள்ளது. அவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மூன்று திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் பண்ணை வேலை செய்து வரும் கைதிகளுக்கும், மாதவரம் பால் பண்ணையில் கிணறு தோண்டும் வேலையில் ஈடுபடும் கைதிகளுக்கும் தண்டனைக் குறைப்பு, கூலி, பீடிகள்.
எண்ணெய், சிகைக்காய்த்தூள் முதலியன வழங்கப்பட்டன. துணைச் சிறைச்சாலைகளில் உள்ள எல்லாக் கைதிகளுக்கும் தங்கள் சொந்தச் செலவில் சோப்பு, எண்ணெய், சிகரெட், பீடிகள், புகையிலை முதலியவைகள் வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. துணைச் சிறைச் சாலைகளில் உள்ள கைதிகள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்குத் தலைக்கு 28 கிராம் நல்லெண்ணெய், 28 கிராம் சிகைக்காய்த் தூள் வீதம் மாதந்தோறும் அளிக்கப் படுகிறது. எல்லா மத்திய சிறைச்சாலைகளிலும் உள்ள குற்றவாளிக் காவலர்களுக்கு (Convict Warders) தனிச் சமையற்கூடமும், சாப்பிடும் இடமும் அளிக்கப்பட்டுள்ளன.
அவை தொடர்ந்து நிரந்தரமாகவும் ஆக்கப்பட்டன. மத்திய சிறை, துணைச் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் தங்கள் துணிகளைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக ஒவ்வொருவருக்கும் மாதத்திற்கு அரை பார் துணி சோப்பு வழங்கப்பட்டது. சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு விலங்கிடுவதை மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டதாகக் கருதி, அம்முறை விலக்கப்பட்டது. நீரினால் எளிதில் தூய்மைப்படுத்தப்படுகிற கழிப்பிடங்களை வேலூர், பாளையங்கோட்டை, கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலைகளிலும், சேலம், கொக்கிரக்குளம் ஆகிய இடங்களில் ஆண்களுக்காக உள்ள தனித் துணைச் சிறைச்சாலைகளிலும், மூன்று ஆண்டுகளில் படிப்படியாகக் கட்டி முடிக்க 2,28,200 ரூபாயும், சென்னை மத்திய சிறையில் மூன்று ஆண்டுகளில் படிப்படியாகக் கட்டி முடிக்க 3,20,000 ரூபாயும் தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது.
கடலூர் மத்திய சிறைச்சாலையில் ரூ.60,000 செலவில் இவ்வகைக் கழிப்பிடங்களைக் கட்டும் திட்டம் அரசின் கவனிப்பில் உள்ளது. வேலூர் மத்திய சிறையில் தொழு நோயால் பாதிக்கப்பட்ட கைதிகளுக்குச் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், எல்லாச் சிறைச்சாலைகளிலும் உள்ள தொழுநோய்க் கைதிகளையும் வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு மாற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளிக்கூடங்களுக்குச் சமையலாளர் நியமிக்க அனுமதிக்கப்பட்டனர்.
கைதிகளுக்குக் கல்வி வாய்ப்பினை ஏற்படுத்த வேலூர் மத்திய சிறையில் முதல் முதலாக இரவுப் பள்ளிக்கூடம் துவக்கப்பட்டது. படித்த குற்றவாளிகளை ஆசிரியர்களாக்கி இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இத்திட்டத்தின்படி மாலை 7 மணி முதல் 9 மணி வரை இரவுப் பள்ளிக்கூடம் நடத்தப் படுகிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தேர்வு நடத்தி முடிவும் ஆய்வும் செய்யப்படுகின்றன. சிறைத் தண்டனை அனுபவித்து விடுதலை அடைந்த முன்னாள் குற்றவாளிகளுக்கு அரசாங்கத்தில் வேலை வாய்ப்பு அளிக்கக் கூடாது என்று இருந்த தடையை அகற்றி அவர்களுக்கு வேலை வாய்ப்பு நல்கி மறு வாழ்வு அளிக்க வேண்டும் என்பதற்காக, முன்னாள் குற்றவாளிகள் எந்தச் சூழ்நிலையில் குற்றம் செய்தார்கள் என்ற உண்மையின் அடிப்படையில் ஆய்ந்து, தகுந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க விதியைத் தளர்த்தலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் முன்னாள் குற்றவாளிகள் அரசாங்க வேலைகளில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
