உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/எனது சிறைப் பொழுதுபோக்கு
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

எனது சிறைப் பொழுதுபோக்கு · 90 / 391

எனது சிறைப் பொழுதுபோக்கு சி றைச் சாலைக்கு வந்த சில நாட்களுக்கெல்லாம் எனதருமைத் திருவாரூர் தோழர்கள் வந்து சேர்ந்தார்கள். எனது மைத்துனர் தெட்சணாமூர்த்தியும் வந்தார். எனக்குப் பக்கத்து அறைகளிலேயே அவர்களும் இடம் பிடித்துக்கொண்டனர். ராம சுப்பையா அவர்களுக்குச் சரியான ஜோடியாக திருவாரூர் நாகப்பன் இருந்தார். அவர்களிருவரையும் பார்த்து நாங்கள் "கிழவர்களே!"

என்று கூப்பிடுவோம். ராம சுப்பையாவுக்கு உள்ளபடியே அதில் கொஞ்சம் வருத்தம்தான். திருவாரூர்தென்னன்- அவரைப் பற்றி நான் ஒன்றும் அதிகமாகச் சொல்லவேண்டாம். நான் சிறையிலிருக்கும் போது அவர் வெளியே இருக்க முடியாது. ஒருவர்தான் தப்பித் தவறி வெளியே இருந்து விட்டார். சி.டி. மூர்த்தி என்பார்- தென்னன் பெயரும் தட்சிணாமூர்த்திதான்! இவரும் தட்சிணா மூர்த்தி, இரண்டு தட்சிணாமூர்த்திகளும் இரண்டு கண்கள் போல நட்புக்கு.

அந்தத் தென்னன்தான் எமது சாப்பாட்டு விவகாரங்களைச் சரி பார்த்துக் கண்காணித்து வந்தார். குளிப்பதற்குச் செல்வோம். வேணு ஓடி வருவார், தண்ணீர் மொண்டு ஊற்ற. அவர் தான் என்னைக் குளிப்பாட்டி விடுவார் என்றே வைத்துக் கொள்ளுவோமே! எண்ணெய் தேய்த்து முழுகப் போகிறோம் என்று தெரிந்தால் போதும். எப்படித் தான் தெரியுமோ ராம சுப்பையாவுக்கு? அவர் எண்ணெய் தேய்த்து விடாமல் குளிக்க முடியாது. முடியாதென்ன? கூடாது. அவருடைய திருக்கரங்களால் எண்ணெய் தேய்த்துச் சிகைக்காய் தேய்த்துக் குளிப்பாட்டும் போது என் அன்னையின் பொற்கரங்களின் ஸ்பரிச உணர்ச்சியையே கண்டேன் நான்.

குளித்து விட்டு அறைக்கு வருவோம். வீட்டிலே மனைவி கூட அவ்வளவு ஒழுங்காக உடைகளை எடுத்துத் தந்து உபசரிக்க முடியாது. அத்துணை அழகாக உடைகளை எடுத்து வழங்குவார் தோழர். கஸ்தூரி. உடை இலாகாவை அவரிடம் தான் ஒப்படைத்திருந்தோம். உடனே தென்னன் காலை உணவுடன் எங்கள் அறையில் நுழைவார். சிறைச் சாப்பாட்டுக்கும் ஓர் இலக்கணம் வகுத்து கொண்டு நம்மோடு ஒட்டி வராவிட்டால் அதோடு நாம் ஒட்டிப் போவோம் என்ற தத்துவார்த்தச் சிகரமாக எம்முடன் ஒருவர் இருந்தார்.

அவர் தான் திருவாரூர் டாக்டர் விசயராகவன். சிறையிலே தரப்படும் கடலை உருண்டை என்றால் அவருக்கு எவ்வளவு பிரியம் தெரியுமா? ஒருநாள் அவர் கடலை உருண்டைக்காக இன்னொரு தோழருடன் பந்தயம் கட்டி நூறு 'பஸ்கி' போட முனைந்தார். பந்தயத்தில் தோற்றதால் கடலை உருண்டை கிடைக்கவில்லை. தொடை முழுதும் கடலை உருண்டைபோல் வீங்கிவிட்டது. இரண்டு, மூன்று நாள் மருத்துவ மனையில் இருந்தார். ஜெயில் சாப்பாட்டைச் சாப்பிட்டு விட்டு 'ஜாம்பவான்' வேலைக்கெல்லாம் போகலாமா?

இப்படி வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் சிறைச்சாலையின் கொடுமைகளை விரட்டிக் கொண்டிருக்க உதவி புரிந்த அருமைத் தோழர்கள் எல்லாம் எங்களை விட்டுப் பிரியும் காலம் வெகு விரைவில் வந்து விட்டது. காங்கிரஸ் ஆட்சி எனக்கு ஆறு மாதத் தண்டனை கொடுத்தது பெரிதல்ல. என் அன்புத் தோழர்களை என்னோடு சேர்த்து வைத்து, அவர்கள் பிரிந்து செல்லும் வேதனையை அடிக்கடி உண்டாக்கியதே, அதுதான் பெரிய தண்டணையாக இருந்தது. தோழர் என்.வி.என்.

அடக்குமுறையின் கோரப் பொறியில் அகப்படுவதற்கு முன்பு, எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். "வெளியில் என்ன நடக்கிறதோ என்று கவலைப்படுவீர்கள். வளர்கிறோம், வளர்கிறோம், மகிழ்ச்சியடையுங்கள்" என்று! சிறைச்சாலையில் என்னைச் சந்திக்க வந்த அண்ணா அவர்களும் சொன்னார்கள்: "வெளியுலகைப் பற்றி நினைத்து மனத்தை அலட்டிக் கொள்ளக் கூடாது" என்பதாக. இருந்தாலும் முடிகிறதா? நாங்கள் பிரிந்து வரும்போதே தமிழகம் இரத்தக் காடாகவல்லவா இருந்தது?

"என்ன ஆயிற்றோ?" என்று ஏங்கிக் கொண்டுதான் கிடந்தோம். கல்லக்குடியிலே போராட்டம், அண்ணன் சிற்றரசு அவர்களின் தலைமையிலும், திருச்சி தீரர்களின் மேற்பார்வையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அண்ணாவும் மற்றவர்களும் சிறைக்குள்ளே அனுப்பப்பட்டு விட்டார்கள். "தலைவர்களை விடுதலை செய்" என்ற முழக்கம் நாடெங்கும் கேட்கிறது. அக்டோபர் முதல் நாள் ஆந்திர அரசு அமைகிறது. அதைத் துவக்கி வைக்கப் பண்டித நேரு அழைக்கப்பட்டிருக்கிறார்.

மொழி வழி மாகாணத்திற்காக ஆந்திராவில் கிளம்பிய நாற்பது வருடக் கிளர்ச்சிக்கு ஒரு முடிவு (?) ஏற்படுகிறது. கட்சி மாறிய பிரகாசம் காங்கிரசில் சேர்க்கப்படுகிறார். ஆந்திராவின் முதல் பிரதமராகிறார். ஆந்திர அரசு துவக்க நாளிலே மகிழ்ச்சி ஆரவாரத்துடனே தலைவர்கள் பேசுகிறார்கள். பிரதமர் நேரு பண்டிதர் பேசுகிறார். சென்னை முதல்வர் ராஜாஜி பேசுகிறார். ஆந்திரப் பிரகாசம் பேசுகிறார். ஆந்திர ராஜ்யத்தைத் துவக்கி வைத்துவிட்டுச் சென்னை, கோவை மதுரை, மாமல்லபுரம், பவானி முதலிய இடங்களிலே சுற்றுப் பயணம் நடத்தினார் பண்டித நேரு.

தமிழகத்தின் தலைவர்கள் சிறையிலே! ஐயாயிரவர் அடக்குமுறைக்கு ஆளாயினர்! பிணங்கள் வீழ்ந்தன! சதி வழக்குகள் கிளம்பின! இந்த நிலைமையிலே கொதித்துப் போயிருந்த மக்கள், தங்கள் அதிருப்தியைக் காட்ட நேருவுக்கு எல்லா இடங்களிலும் சுறுப்புக்கொடி காட்டினர். .அவரது பொதுவாழ்விலே அதுவரையில் காணாத எதிர்ப்பை அவர் கண்டார். கறுப்புக் கொடி காட்டுவது ஒரு வகை; நேருவுக்கும் தெரியாததல்ல. தமிழரை 'நான்சென்ஸ்' என்று இருமுறை இகழ்ந்தார்.

ஒரு முறை மன்னித்தோம். பெரிய மனிதர் என்பதற்காக; மீண்டும் சொன்னார். மதுரையிலே நேருவுக்குக் கறுப்புக் கொடி காட்டிய கிளர்ச்சியில் தோழர் முத்து, மற்றும் பல தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். சென்னையிலும் முப்பது பேருக்கு மேல் கைதாயினர். சென்னையிலே கண்ணபிரான், பார்த்தசாரதி மற்றும் பலர் தடியடிக்காளாயினர். செங்கற்பட்டிலே அண்ணாமலை தலைமையிலே கருங்கொடி நிகழ்ச்சி வெற்றி கண்டது. நாள்தோறும் நமது தோழர்கள் சில றச்சாலைக்குச் சென்று கொண்டிருப்பதும், நாடெங்கும் கிளர்ச்சித் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதும் தேனினுமினிய செய்திகளாக எங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருந்தன.

எல்லோரும் போய்விட்ட காரணத்தால், மிச்சமிருந்த ஐம்பதுக்குட் பட்ட தோழர்களை ராம சுப்பையா அவர்கள் வசம் ஒப்படைத்துவிட்டு நான் சிறிது ஓய்வு பெற்றேன். பேச்சு மன்றமும் கிடையாது. எதையாவது படிப்பது, எதையாவது எழுதுவது. மீதி நேரங்களில் வேப்ப மரத்தடி! அங்கே சத்தியும் நானும்! எத்தனையோ இன்பக் கதைகளை அந்த வேப்ப மரம் கேட்டிருக்கிறது. பேச்சின் ஒலிக்கு மாத்திரம் சக்தியிருக்குமானால் அந்த வேப்ப மரம், இனிப்பு மரமாக மாறியிருக்கும்.

அவ்வளவு தித்திப்பான கதைகள். ஒரு நாள் நீண்டு உயர்ந்த மதிலுக்கு உள்ளே ஒரு சிறிய பந்து வந்து விழுந்தது. வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் கையிலிருந்து தப்பி, அது எங்கள் கையில் சிக்கியது. உடனே ஒரு திட்டம் போட்டோம். ஒரு பழைய வேட்டியைக் கிழித்து வலைபோலக் கட்டினோம். எங்கள் கைகளைப் பந்தடிக்கும் மட்டை ஆக ஆக்கிக்கொண்டு தினந்தோறும் விளையாட ஆரம்பித்தோம். அந்த விளையாட்டுக்குப் பந்தயம் எல்லாம் கட்டுவதுண்டு.

தோழர் வேணு, தனக்கு வந்த கடலை உருண்டைகளையெல்லாம் பந்தயத்தில் இழந்து, துவரையை இழந்து, சோற்றையும் ஒரு நாள் இழந்து, தரும மகாராஜன் போல நின்று கொண்டிருந்தார். தோழர் ராம சுப்பையா பந்து விளையாட்டில் என்னுடைய கட்சி. வருகிற பந்தையெல்லாம் சாமர்த்தியமாக அடித்துவிடுவார். ஆனால் ஒரு குறை; பந்து வலையைத் தாண்டி அப்புறம் போகாது! அவ்வளவுதான். கஸ்தூரி, சத்தியின் கட்சியிலேயிருந்து விளையாடுவார். பந்து தானாகவே போய் அவரது கையில் மோதி எங்களிடம் திரும்பி வரும் காட்சி அற்புதமாக இருக்கும்; அவ்வளவு கஷ்டப்பட்டு விளையாடுவார்.

அந்த விளையாட்டிலும், இடையே தொய்வு ஏற்பட்டு விட்டது. ஜெயில் ஆகாரத்தைச் சாப்பிட்டு விட்டு இம்மாதிரி வேலைகளை யெல்லாம் எங்களைப் போன்ற பலசாலிகள் செய்யலாமா? எல்லாருக்கும் உடம்பு வலி, உட்கார முடியாது. நிற்க முடியாது; நான் ஊசியும் போட்டுக்கொண்டேன். பிறகு, மீண்டும் ஆசை பிறந்தது விளையாட. ஆனால் விளையாட்டுக்கு விரைவில் முடிவு ஏற்பட்டு விட்டது. காரணம், கல்லக்குடிப் பட்டாளத்தை நோக்கி விடுதலை வந்து விட்டது.

விடுதலைக்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே ராம சுப்பையா கண்ணீர் விட ஆரம்பித்து விட்டார். விடுதலை நாளும் வந்தது. அக்டோபர் 15-ஆம் நாள் காலையிலே அவர்களும் எம்மைப் பிரிந்தார்கள். சிறைச்சாலையிலே அகப்படும் பூக்களைக் கொண்டு ஒரு மாலை சூட்டினார்கள். பிரிவுரை கூறினார்கள். கோவெனக் கதறி அழுதார்கள். அவர்கள் வாய்விட்டுக் குழந்தை போல அழுத காட்சியை இப்போது நினைத்தாலும் கண் கலங்குகிறது. "வேணு போலப் பறந்து பணியாற்றிட யாரால் முடியும்?"

"இனிமேல் ராம சுப்பையா போல் எண்ணெய் தேய்த்து விட யார் ஓடி வருவார்கள்?" "கட்சிச் செய்திகளைக் கேட்டிட ஆர்வமுடன் அடிக்கடி வந்திட மலைக்கோட்டை ரத்தினம் போல யாருளர் இங்கே?" "எது கேட்டாலும் சிரித்துக் கொள்ளும் எத்திராஜ்!" இப்படி ஒவ்வொருவரையும் பற்றி எண்ணினேன். என் பின்னே அணி வகுத்து வந்த கல்லக்குடிப் படை வரிசை கண்ணீரைக் கொட்டியபடி நிற்பதையும் கண்டேன். "நேசமுள்ள நண்பர்களே; பாசம் நிறைந்த தோழர்களே!

என் ஆசைக் கண்மணிகளே!" என்றேன். அதற்கு மேல் பேச முடியவில்லை. "போய் வருக" என்று கையால் ஜாடை காட்டினேன். ராம சுப்பையா கட்டிக்கொண்டு கதறிவிட்டார். பிரிவு, பிரிவு, கட்டிக் காத்த குடும்பப் பாசத்தில் குறுக்கிட்ட பிரிவு, அவர்களை எங்களிடமிருந்து விடுதலை என்னும் சொல் பிரித்துக் கொண்டு போய் விட்டது!