நெஞ்சுக்கு நீதி
சிறையில் போட்டி மன்றம் · 89 / 391
சிறையில் போட்டி மன்றம் எங்கள் ராஜ்யம் குறையின்றி நடந்து கொண்டிருக்கும் போது சென்னையில் அடைபட்ட அறப்போர்த் தலைவர்களும், தொண்டர்களும், வரிசை வரிசையாக விடுதலை பெற்றுக் கொண்டேயிருந்தார்கள். அண்ணாவும் அன்றையத் துணைச் செயலாளர்கள், நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன் இருவரும் சிறையிலேயிருந்த காரணத்தால், கழகத்தின் காரியங்களைக் கவனிக்கும் பொறுப்பாளர் பதவியைத் தோழர் ஏ. கோவிந்தசாமி, எம். எல். ஏ. அவர்கள் ஏற்றுக் கொண்டார்.
இது நமது கழக வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டம் எனறு கூறலாம். தோழர் கோவிந்தசாமி பொதுத் தேர்தலில் காங்கிரசை எதிர்த்து நின்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பந்தக் கையெழுத்திலே கையெழுத்திட்டு அதன் ஆதரவு பெற்று வெற்றி மாலை சூடியவர். ஜெயபோதையிலே மக்களை மறந்து விட்டுப் பதவி வெறியிலே அற்பர்களாக மாறிவிடும் ஒரு சில அரசியல் மோசடிக்காரர்கள் உலவும் தமிழகத்திலே, அவர்களுக்கும் தன் பொன்னான செயல் மூலம் சாட்டையடி கொடுத்தவர் கோவிந்தசாமி.
கழகத்தின் முக்கியமானவர்கள் எல்லாம் சிறைக் கூண்டுகளிலே! வெளியிலேயிருந்த ஒரு சில தலைவர்களும் நாடெங்கும் மின்னல் வேகததில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார்கள். இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் தலைமைக் கழகப் பொறுப்புகளைத் தாங்கி நடத்திட, கோவிந்தசாமி போன்ற தகுதி மிக்கவர் தான் தேவை. பொறுப்பேற்ற கோவிந்தசாமி கழகத்திலே பல ஆண்டு காலம் இருந்து பழக்கப்பட்ட ஒருவரைப் போலவே கழக வேலைகளை மும்முரமாகக கவனித்திடவும் துவங்கினார்.
கழகத்திற்கு அவர் ஒரு தூணாக மாறியதுமல்லாமல், தி. மு. க. வின் தேர்தல் கொள்கையை நையாண்டி செய்து வந்த கம்யூனிஸ்டு, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு அசைக்க முடியாத பதிலாகவும் தன்னையாக்கிக் கொண்டார். கழகம் மக்கள் மனத்திலே விசாலமான இடத்தையும், சரித்திரத்திலே நிலையான இடத்தையும் பெற்றுக்கொண்டு, தென்னகத்தின் வீதிதோறும் புது நடை போட்டு வளர்கிறது என்ற இன்பம் தேனூறும் செய்திகளாக உருவெடுத்திடுவது கேட்டுப் புளகாங்கிதமுற்றிருந்தது எமது சிறை ராஜ்யம்!
நான் முன்பே கூறியிருக்கிறேன். எங்கள் ராஜ்யம் இரண்டு மாத காலம் தான் பரந்து கிடந்தது என்றும், அதன் பிறகு சிறுகச் சிறுகத் தேய்ந்து விட்டது என்றும்! அந்தத் தேயும் நிலை ஆரம்பமாகி விட்டது. ஆகஸ்ட் 24-ஆம் நாள் முதன் முறையாக எங்கள் ராஜ்யம் குறையத் தொடங்கிவிட்டது. முதலில் இருபதுக்கு மேற்பட்டோர் எம்மைப் பிரிந்து சென்றார்கள். அடுத்த இரண்டு நாட்களில் பொறையாறு அபூபக்கர் முதலிய பல தோழர்கள் ராஜ்யத்தை விட்டு வெளியேறினார்கள்.
எஞ்சியுள்ள தோழர்களுக்கு விடுதலை உணர்ச்சியைக் கிளப்பிவிடக் கூடிய அந்தப் பிரிவுகளால் ராஜ்யம் சோபையிழந்து விடக்கூடாதென்பதற்காகப் பேச்சு மன்றம் முன்னிலும் வேகமாகப் பணியாற்றியது. அந்த ஒன்றரை மாதத்திற்குள்ளாகவே சில நல்ல பேச்சாளர்கள் தயாரானார்கள். பல தரப்பட்ட பொருள்களின் மீது விவாதம் நடத்திப் பேச்சாற்றலை விளக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டது. பேச்சு மன்றம் புதிய புதிய கருத்துக்கள் பற்றி விவாதிக்கவும், விளக்கம் பெறவும், விரிவுரை நிகழ்த்தவும் தன்னைத் தயாராக்கிக் கொண்டது.
"குறளோவியம்" பற்றி இரண்டு மூன்று நாட்கள் தோழர்கள் உரையாற்றிய பின் நான் முடிவுரை கூறினேன். குறளின் காமத்துப் பாலின் சுவையைத் தோழர்களிடம் கூறும் போது சிறையிலிருக்கிறோம் என்ற எண்ணத்தையும் சில நிமிடங்கள் மறந்து குறளாசிரியரின் வர்ணனையிலே ஆழ்ந்தார்கள். ஒரு தோழர் பேசும்போது குறிப்பிட்டார்: "குறளுக்குச் சிறப்புச் சொல்ல வந்த யாரோ ஒருவர் வாமனாவதாரன் உலகை இரண்டடியால் அளந்தான். வள்ளுவனும் இரண்டடியாக அளந்தான் என்பதாகப் பாராட்டியிருக்கிறார்" என்று!
அது பற்றி நான்குறிப்பிட்டேன் : "வாமனன் இரண்டடியால் உலகை அளந்து விட்டு, மூன்றாவது அடியை மாபலி என்ற மனிதன் தலையிலே வைத்து அழுத்தினான். ஆனால் வள்ளுவன் மனிதன் தலையிலே ஏறிக் கொள்ளவில்லை. மனிதனுக்காக நீதி வகுத்தான்" என்று விளக்கிச் சொன்னேன்.
'நாற்காலி' என்னும் பொருள் பற்றி ஒரு நாள் உரையாற்றினோம். இப்படி எத்தனையோ சொற்பொழிவுகள்! சிறைக்குச் சென்றாலும் அது விடுகிறதா என்ன! நாமெல்லாம் மொழிப் பித்துக் கொண்டு அலைகிறோம் என்று அரசியல் எதிரிகள் குற்றம் சாட்டுகிறார்களே; அது எவ்வளவு தூரம் உண்மையென்று ஒரு நாள் விவாதித்தோம், "மொழிப்பற்றா ? பித்தா?"
என்ற தலைப்பின் கீழ். 'மொழியிலே பற்று? அல்லது பித்தா?' என்று ஆராய்வதற்கு முன்பு பற்று என்பதற்கும் பித்து என்பதற்கும் உள்ள வேறுபாட்டை உணர வேண்டும். பற்றின் உச்சநிலைதான் பித்து. அந்தப் பித்து தானே உண்டாவதில்லை. பற்று வைக்கப்பட்ட பொருளுக்கு ஆபத்து வரும்போது அப்பொருளின் மீது பித்து ஏற்படுகிறது. குழந்தையின் மீது தாய்க்கு அளவற்ற பற்று. குழந்தை திடீரென நோய்வாய்ப்படுகிறது. இறந்து விடுமென மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தாய்க்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது. அதை யாராவது தடுக்க முடியுமா? பற்று பித்தாக மாறுகிறது. தாய்க்குக் குழந்தையை விட ஒரு சமுதாயத்துக்கு மொழி மிகவும் உயர்ந்தது. அந்த மொழி மீது பற்று வைக்காதவர் யாரே உளர்! பற்றுக் கொண்டோர் பித்தர்களாக மாறுவது தவறு! அந்தப் பித்து ஏறபட அடிப்படை எது? பற்றை அறுக்க முனைவது தானே? அந்த வேலையைச் செய்வது யார்? மொழியிலே நாம் பற்று வைக்கிறோம். அதை அறுத்து நம்மைப் பித்தர்களாக்குகிறார்கள்.
ஆகவே பித்துப் பிடிப்பது நம் தவறல்ல! இந்த முடிவுக்குப் பேச்சு மன்றத்தினர் வந்தோம். மொழிக்காக உயிர் கொடுத்த தாளமுத்து, நடராசன் இருவரின் கல்லறையிருக்கும் திசையைப் பார்த்து வீர வணக்கம் செலுத்தினோம். லத்தீன் மொழியின் ஆதிக்கம் ஐரோப்பாவெங்கும் பரவி வேறு நாட்டுத் தாய் மொழிகள் எல்லாம் தலையெடுக்காமல் அழுத்தியிருந்த காலத்தில் தாய் மொழிப் பித்துக் கொண்டு, "இனி லத்தீனில் எழுதுவதில்லை. எமது பிரஞ்சு மொழியிலே தான் எழுதுவோம்" என்று சபதம் எடுத்துக் கொண்டு கிளம்பிய பிரஞ்சு நாட்டு இளம் எழுத்- தாளர்களை, 16-ஆம் நூற்றாண்டின் மொழிக் காவலர்களைப் பெருமையோடு நினைத்துக்கொண்டோம்.
அந்தச் சரித்திரத்தையும் படித்து விட்டு இப்போது தாய் மொழியை மறந்து ஆதிக்கக்காரர்களின் மொழியாம் இந்திக்கு ஆலவட்டம் சுழற்றும் ஆஷாடபூதிகளின் வரலாற்றையும் பார்க்கின்றபோது எவ்வளவு வேதனையாயிருக்கிறது என்று கண்ணீரும் விட்டோம். எம்மை அறியாமலே மொழிப் பித்து ஏற்பட்டுவிட்டது. "தமிழென்று தோள்தட்டி ஆடு! அந்தத் தமிழ் வெல்க! வெல்க என்றே தினம் பாடு!"
-என்று பேரொலி எழுப்பினோம். "கிளம்பிற்றுக் காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம் கிழித்தெறியத் தேடுது காண் பகைக் கூட்டத்தை" -என்று சூளுரைத்தோம். சிறைச்சாலையில் ஒரு நாள் பேச்சு மன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மன்றத்து மத்தியிலே நான் அமர்ந்திருக்கிறேன். வெள்ளுடை அணிந்த ஒரு நர்ஸ் அங்கு வந்தாள். தான் கல்லக்குடிக்குப் பக்கமுள்ள ஆஸ்பத்திரியில் வேலை பார்த்ததாகவும், போராட்டத்தில் காயம் பட்டவர்களுக்கெல்லாம் தானே சிகிச்சை செய்ததாகவும் கூறினாள்.
அவள் பேச்சிலிருந்து நமது இயக்க அனுதாப முடையவள் என்று புரிந்தது. நல்ல சிவப்பு! குறுகுறுப்பான பார்வை! கவரும் சக்தி படைத்தவள்! "கருணாநிதி எங்கே?" என்று என்னையே கேட்டாள். "நான்தான்" என்றேன். "ஓகோ, அரும்பு மீசை புதிதாகையால் அடையாளமே புரியவில்லை" என்றாள். போய் விடுவாளாக்கும் என்று எதிர்பார்த்தேன். போகவில்லை. நின்று கொண்டேயிருந்தாள். சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு கிழவரும் வந்தார் அவர் அவளுடைய தந்தையாம்.
"அப்பா! இவர் தான் கருணாநிதி!" என்று அவருக்கு என்னை அறிமுகப்படுத்தினாள். ஏன் இருவரும் அங்கு வந்தார்கள் தெரியுமா? அந்த 'நர்ஸ்' என்னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமாம்! திடீரென்று என்னைப் பார்த்துச் சொன்னாள்: "நான் உங்களைக் காதலிக்கிறேன்!"
நான் திடுக்கிட்டுப் போனேன்! பேச்சு மன்றம் கொல்லென்று சிரித்துவிட்டது. நர்சுக்கு அப்போதுதான் நாணம் பிறந்தது. தந்தையை அழைத்துக்கொண்டு போய்விட்டாள். நான் வெட்கத்தால் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தேன். இத்தோட முடிந்தது? ஒரு தயிர்க்காரிக்கும் தோழர் சத்திக்கும் தகராறு! தயிர்க்காரி தன் கணவனிடத்திலே சத்தியின் விஷமத்தைப் பற்றிக் கூறிவிட்டாள். அவள் கொஞ்சம் இள வயதுக்காரி. சத்தியும் மணமாகாத பிள்ளை!
ஏதோ தவறு நடந்துவிட்டது! அதைப் பேச்சு மன்றத்திலே சிரிப்பாய்ச் சிரிக்க வைத்துவிட்டாள் அந்தப் பொல்லாத தயிர்க்காரி. தோழர் ராம சுப்பையா, அவளிடம் மோர் வாங்கிக்கொண்டு கடன் சொல்லி ஏமாற்றி விட்டாராம். சிறையிலே அவர் காசுக்கு எங்கே போவார்? அதையும் பெரிய குற்றச்சாட்டாக்கி காரைக்குடியாரின் நாணயத்தைப் பற்றி வெளுத்து வாங்கிவிட்டாள். என்ன, மூக்கிலே விரலை வைக்கிறீர்கள்? சிறைச்சாலையிலே பெண்கள் எப்படி வந்தார்கள் என்றுதானே ஆச்சரியப்படுகிறீர்கள்?
பேச்சு மன்றத்திலே நடந்த (Fancy Dress Competition) மாறு வேடப் போட்டியின் போது கூடப் பெண்கள் வராமலிருந்தால் சுவைக்குமா என்ன? பெண்கள் மட்டுமா வந்தார்கள்? ஒரு குடு குடுப்பைக்காரன் கூட வந்தான். "குடு குடு குடு குடு! நல்ல காலம் பிறக்குது; தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பிறக்குது! அந்த மூலையிலே ஒருத்தன் அய்யோன்னு போறான் துரோகம் பண்ணினவன் தொலையப் போறான்! காலையிலே கூடச் சொன்னேன், சுரண்டிப் பிழைக்கிறவன் சுருக்குன்னு போறான்.
குடு குடு குடு! ஒரு பழைய துணி இருந்தால் குடு குடு குடு!" நரிக் குறவனும் குறத்தியும் தோன்றினார்கள், "ஆயாலக் குறி- ஆயாலக்குறி" என்று பாடியபடியே. வயிறு புடைத்த ஒருவரும் வறுமையிலடிப்பட்ட நெசவாளியும் வந்தார்கள். குமரர்கள் கிழவர்களாக மாறி வந்தார்கள். ஆண்கள் பெண்களாக மாறி வந்தார்கள், அழகிகளாகக்கூட! சிறைச்சாலையிலே ஏதோ ஒரு பெரிய மைதானத்தை ஒதுக்கிக் கொடுத்து அதிலே மாறு வேட விழா நடத்துங்கள் என்று யாரும் அனுமதி தரவில்லை.
வேலையில்லாத ஒரு ஞாயிற்றுக் கிழமையில் தோழர்களின் சொந்த முயற்சியிலேயே பல வேடங்களில் தோன்றிப் பாடி மகிழ்வித்தார்கள். சிறைச்சாலையிலே பூத்திடும் மலர்கள்; நான் மேலே போட்டிருந்த பச்சைத் துண்டு போன்ற ஆடைகள்; முடிவெட்டும்போது கத்தரித்த ரோமங்கள்; அடுப்பின் கரிகள் ஆகிய பொருள்களைக் கொண்டு அலங்கார அணிகளும், ஆடைகளும், மீசைகளும், தாடிகளும் தயார் செய்து, யாரும் எதிர்பார்க்காத அளவுக்குப் பிரமாத வெற்றியுடன் நடத்தப்பட்ட அந்தப் போட்டியிருக்கிறதே அது, "வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்" என்பதைத்தான் நினைவூட்டியது.
போட்டியின் நீதிபதிகளாக மன்னை நாராயணசாமி, ராச மாணிக்கம். பேராவூரணி வடிவேல், வைத்தீசுவரன் கோயில் முருகையன், கலைமணி ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். திருச்சி கமலன் முதற் பரிசும், நாராயணசாமி இரண்டாம் பரிசும், கம்பர்நத்தம் கடல்வண்ணன் மூன்றாம் பரிசும், பெரியசாமி நான்காவது விசேடப் பரிசும் பெற்றார்கள். அவர்களுக்குக் "கல்லக்குடிப் பதக்கம்" பரிசளிக்கப்படும் என்றும், அந்தப் பரிசளிப்பு விழாவினை மணப்பாறையில் தோழர்கள் நடத்துவதென்று விரும்பியதன் பேரில், அங்கு விழா நடக்குமென்றும் அறிவிக்கப்பட்டது.
இன்னொரு ஞாயிற்றுக்கிழமை. ஒப்பித்தல் போட்டி, முல்லை சத்தி, திருவையாறு மணி, மாயூரம் கிட்டப்பா, திருவாரூர் விசயராகவன், கரூர் முருகேசனார் ஆகியோரை நீதிபதிகளாகக் கொண்டு நடைபெற்றது. அதில் பாரதிதாசன் கவிதைகளும், திரு.வி.க.வின் உரை நடைகளும், அண்ணாவின் பொன்மொழிகளும், நமது திரைப் படங்களின் உரையாடல்களும், புறநானூற்றுச் செய்யுட்களும், போர்வாள் முதலிய நாடக வசனங்களும் பல தோழர்களால் ஒப்பிக்கப்பட்டன.
அதில் முதல் பரிசு பெரியசாமிக்கும், இரண்டாம் புரிசு அடைக்கலத்திற்கும், மூன்றாம் பரிசு எஸ். எம். வைத்தியலிங்கத்திற்கும், நான்காவது சிறப்புப் பரிசு நாராயணசாமிக்கும் கிடைத்தது. அந்தப் பரிசளிப்பு விழாவை ஜெயங்கொண்ட சோழபுரத்தில் நடத்துவதாகத் தோழர் வேணுகோபால் அனுமதி வாங்கிக் கொண்டார். ஒரு நாள் இசைப் போட்டியும் நிகழ்வுற்றது. தோழர்கள் உள்ளிக் கோட்டை சிங்காரவேலு, திருவாரூர் தென்னன், கரூர் நாராயணன் ஆகியோர் நீதிபதிகளாய் அமர்ந்தனர்.
மாயவரம் செபாஸ்டின் முதற்பரிசும், நன்னிலம் நடராசன் இரண்டாம் பரிசும், அறந்தாங்கி ஓவியர் கருணா மூன்றாம் பரிசும் சக்கரசாமம் அப்பாசாமி நான்காவது தனிப் பரிசும் பெற்றர்கள். இவர்களுக்குப் பரிசளிப்பு விழாவை மன்னை நாராயணசாமி நடத்துவதாகக் கேட்டுக்கொண்டார். மன்றமும் இணங்கியது. கடைசியாக ஒரு ஞாயிறன்று பேச்சு மன்றத்தின் அறுவடையைக் கணக்குப் பார்க்கும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அதுதான் பேச்சுப் போட்டி.
திருவையாறு ஆர். எஸ். மணி அழகான கருத்துக்களை அள்ளிச் சொறிந்து முதற் பரிசை அடைந்தார். ராமசாமி பெருமிதமான வார்த்தையோட்டத்தால் இரண்டாம் பரிசைத் தட்டிவிட்டார். உள்ளிக்- கோட்டை சிங்காரவேல் எடுத்துக் கொண்ட பொருளை எழில் ததும்பச் சொல்லி மூன்றாம் பரிசுக்குரியவரானார். பேராவூரணி வடிவேல் நகைச்சுவை வழியப் பேசி சிறப்புப் பரிசை ஏற்றார். அந்தப் போட்டிக்கு நீதிபதிகளாக நானும், தோழர்கள் ராம சுப்பையா, அடைக்கலம், நாகை பாப்பையன், பி.
சாமிநாதன் ஆகிய நால்வரும் அமர்ந்து தீர்ப்பு வழங்கினோம். அவர்களுக்குப் பரிசளிக்கும் விழாவை மாயவரத்தில் நடத்துவதற்குத் தோழர் கிட்டப்பா கேட்டுக் கொண்டு, மன்றத்தின் இணக்கம் பெற்றார். "மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை-எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை" என்ற கவிஞரின் பாடலை உரக்கப் பாடினோம். உற்சாகம் கொப்பளிக்கப் பாடினோம். நானூற்றுக்கு மேற்பட்டோரின் மொத்த வாழ்க்கை சிறையில் எப்படி நடைபெற்றது என்பதை விவரித்து விட்டேன்.
என் வாழ்வு எப்படி ஓடியது என்பதைக் கூறாமலிருக்க முடியுமா?
