உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/சிறைச்சாலை விதிகள்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

சிறைச்சாலை விதிகள் · 88 / 391

சிறைச்சாலை விதிகள் சி றைச்சாலை ஒரு கிராமம் போலவே எல்லா வசதிகளும் உடையது என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? சலவைச்சாலை உண்டு; தொழிற்சாலை உண்டு; பள்ளிக்கூடம் உண்டு; தோட்டங்கள் உண்டு என்றெல்லாம் படித்தீர்கள் அல்லவா? அவைகளைப் பற்றி முதலில் விளக்குகிறேன். சலவைச்சாலை இருக்கிறது என்பது உண்மைதான். சலவைச்சாலை என்றதும் எல்லாக் கைதிகளும் தங்கள் உடைகளைப் போட்டு அடிக்கடி சலவை செய்து கொள்ளலாம் என்று தானே நினைக்கிறீர்கள்?

அதுதான் தப்பு! சினிமாப் படத்திலே சலவைசாலையொன்றைக் காட்டி, அதிலே ஏராளமான துணிகளையும் வெளுக்கிறார்கள் என்பதைக் காட்டும் போது, எப்படி நாம் பார்த்துக் -கொண்டிருக்கலாமோ அதுபோலத் தான் சிறையிலுள்ள சலவைச் சாலையையும் பார்த்து ரசிக்கலாம். அங்கே எல்லாக் கைதிகளின் ஆடைகளையும் சலவை செய்ய மாட்டார்கள். கான்விக்ட் வார்டர்களின் உடைகள், மருத்துவ மனைத்துணிகள், 'பி' வகுப்புக் கைதிகளின் உடைகள் ஆகியவற்றைத்தான் சலவை செய்து கொடுப்பார்கள்.

இந்தக் குறையைக் களைய ஏற்பாடு நடைபெறுகிறது இப்போது! தொழிற்சாலையிருக்கிறது. திருச்சி சிறையைப் பொறுத்த வரையிலே நெசவுத் தொழில் முக்கியமானது. ஒவ்வொரு கைதியும் நாளொன்றுக்கு இத்தனை கஜம் தர வேண்டுமென்று உத்தரவு போடப்படுகிறது. திருச்சியில் தயாராகும் மருத்துவமனைக்குத் தேவையான 'பேண்டேஜ்' துணிகள் பெரும்பாலும் திருச்சி சிறைக்கு மட்டுமின்றி, மாகாணமெங்குமுள்ள சிறைகளுக்கும் அரசாங்க மருத்துவ மனைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

இது போலவே மாகாணமெங்கும் உள்ள சிறைகளில் முக்கியமான பொருள்கள் கைதிகளின் உழைப்பைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. சேலம் சிறைச்சாலையில் தயாரிக்கப்படும் இரும்புச் சாமான்களும், பெரிய பாத்திரங்களும், அலுமினியம் தட்டு-குவளைகளும் மாநிலத்தில் உள்ள எல்லாச் சிறைகளுக்கும் உபயோக- மாகின்றன. அதுபோக மீதியை அரசுத் துறை சம்பந்தப்பட்ட மற்ற நிறுவனங்களும் பயன்படுத்துகின்றன. கோவையில் உள்ள சிறையில் பெட்ஷீட்டுகளும், வார்டர்கள், காவல் துறையினர் முதலியவர்களுக்கு உடுப்புத் துணிகளும் தயார் செய்யப்பட்டு, எல்லாச் சிறைச்சாலைகளுக்கும், மீதி அரசாங்க அலுவலர்களுக்கும் உபயோகமாகின்றன.

வேலூரில் தயாரிக்கப்படும் செருப்புகள், பூட்ஸ்களும் அரசாங்க அலுவலர்களுக்கும் எல்லாச் சிறைச்சாலைகட்கும் உபயோகமாகின்றன. ராஜமகேந்திரபுரம் சிறைச் சாலையில் நல்ல கம்பளிகள் தயாரிக்கப்படுகின்றன. இப்படி முக்கியத் தொழில்களும், சில்லறைத் தொழில்களும் சிறைக் கைதிகளாலேயே செய்யப்படுகின்றன. சர்க்கார் அலுவலகங்களில் இருக்கின்ற மரச் சாமான்கள் பல, கைதிகள் சிறைகளில் தயாரித்தவை. சென்னைச் சிறையில் அச்சகம் அமைக்கப்பட்டு-எல்லாச் சிறைகளுக்கும் தேவையான அச்சு வசதிகள் கவனிக்கப்படுகின்றன.

தண்டனை பெற்று வந்துள்ள கைதிகள் உழைக்காமல் இருக்கவே முடியாது. தோட்டி வேலைகளையும் அவர்களில் சிலரே செய்ய வேண்டும். 'கூட்டும் கேங்' என்ற குழு, கைதிகள் நிறைந்ததாயிருக்கும். அவர்கள் சிறைச்சாலை முழுவதையும் சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். குப்பையில்லாவிட்டாலும், கூட்ட வேண்டும்! அதற்குத்தான் 'ஜெயில் வேலை' என்று பெயர்.

பாதைகளில் முளைத்திருக்கும் புற்களையெல்லாம் அகற்றும்படி உத்தரவிடுவார்கள். மண்வெட்டி கொண்டு விரைவில் செதுக்கியும் விடலாம். செதுக்கிவிட்டால்-பிறகு வேலையிருக்காதே? அதற்காகப் புல்லைப் பிடுங்கச் சொல்வார்கள். அவர்களும் மிகவும் சுறுசுறுப்பாக(!) ஆளுக்கொரு நுனிப் புல்லாகப் பிடுங்குவார்கள். அந்தப் புல் வளரும்- அவர்கட்கும் வேலையிருக்கும்! இதற்கும் 'ஜெயில் வேலை' என்று தான் பெயர்.

சிறை நிர்வாகத்தை நடத்துவதற்காக முக்கிய அதிகாரிகளும், கைதிகளைக் கண்காணிப்பதற்காக வார்டர்களும் இருக்கிறார்கள். மற்ற எல்லா வேலைகளையும் கைதிகளே செய்கிறார்கள். சிறையில் குற்றம் செய்யும் கைதிகள், சிறை அதிகாரிகளால் தண்டிக்கப்படுகிறார்கள். கால்விலங்கு பூட்டுதல், கைவிலங்கு பூட்டுதல், நிலவிலங்கு மாட்டி வெயிலில் நிற்க வைத்தல் போன்ற கொடிய தண்டனைகளும் கைதிகளுக்கு அளிக்கப்படுமாம். -முன்பு! சிறைக்குள்ளேயே திருடுபவர்கள், வேலைக்குப் பயந்து ஒளிந்து கொள்பவர்கள், சிறைச் சட்டங்களை மீறி நடப்பவர்கள் உடனடியாகத் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள், மாடு போல ஏற்றங்களை இழுத்துத் தண்ணீர் பாய்ச்சுகிற வேலைகளையும் அவர்கள் தான் செய்ய வேண்டும்.

எவ்வளவு குளிர் அடித்தாலும் சரி; ஒரு கால் சட்டை, ஓர் அரைக்கைச் சட்டை, ஒரு குல்லாய் இவைகளால் தடுத்துக் கொண்டுதான் படுத்துக் கொள்ளவேண்டும். நாங்கள் சிலர் 'பி' வகுப்புக் கைதிகளாயிருந்தாலும் கூடக் கடுங்காவல் தண்டனை பெற்றவர்களாதலால் நாங்களும் குல்லாய் அணிந்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், நாலு நாலு பேராய் File-ல் உட்கார வேண்டும். சாப்பிடப் போனாலும், குளிக்கப் போனாலும், வேலை செய்யப் போனாலும், காலை முதல் மாலை வரையில் பல தடவை File-ல் உட்கார்ந்த பிறகுதான் போக வேண்டும்.

அப்படி File-உட்காரத் தவறுவது பெருங்குற்றம் ஏன்; தப்பித்து ஓடுவதற்கு எத்தனித்த குற்றமாகக்கூட ஆகிவிடலாம், அதற்கெல்லாம் பெருந்தண்டனைகள் கிடைக்கும். தினந்தோறும் குளிப்பதற்கு அனுமதியுண்டு. ஆனால் அவர்களுக்குத் தரப்பட்ட உடைகளை வாரம் ஒரு முறைதான் அவர்கள் துவைத்து உடுத்துகிறார்கள். அது இவர்களின் சோம்பேறித்தனமோ, அல்லது சிறையின் உத்தரவு அப்படியோ தெரியவில்லை. சிறை அதிகாரிகள் நல்லவர்கள். ஆகவே சிறை உத்தரவாயிருக்க முடியாது.

மாதா மாதம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து முழுகலாம். அதற்கு அளவு எண்ணெய் கொடுக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை உண்டு. அன்றைய தினம் வேலை கிடையாது. அதற்காக இஷ்டம் போல் சுற்றவும் முடியாது. அவரவர்களின் இருப்பிடத்தில் இருக்க வேண்டியதுதான். நான் முதலில் சிறைச்சாலை ஒரு கிராமம் போலிருக்கிறது என்று சொன்னதும் "பூ! இவ்வளவுதானா?"

என்று நினைத்தவர்களுக்கெல்லாம் இப்போது கொஞ்சம் நடுக்கம் ஏற்படுகிறதல்லவா? ஆனால் இத்தகைய சிறைச்சாலையைத் தங்கள் ஜீவிய பூமியாக்கிக் கொண்டிருப்பவர்களும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். முதன்முறை சிறைக்கு வந்தவனுக்கு 'வெள்ளைக் குல்லாய்' என்று பெயர்.

பல முறை வந்தவனுக்குக் "கறுப்புக் குல்லாய்" என்று பெயர். சிறையில் கறுப்புக் குல்லாய்களுக்குக் குறைவேயில்லை. நிறைய இருக்கிறார்கள். குழந்தைப் பருவம் முதல் சிறையிலேயே இருக்கிற கைதியையும் திருச்சியில் கண்டேன். எங்கள் பிளாக் 'ஹெட் வார்டர்' அவனைத் தஞ்சை இளங்குற்றவாளிகள் சிறைப் பள்ளியில் (Borstal School) சிறு பையனாக இருக்கும் போது பார்த்தாராம். அவனுக்கு இப்போது ஐம்பது வயது இருக்கலாம். கண்டமாலை நோய் ஏற்பட்டுக் குணமடைந்தவனானபடியால் அவனுக்குக் 'கண்ட' மாலை' என்று பெயர் சூட்டி அழைத்தார்கள்.

அவனுடைய தாயார். அவனைச் சிறையிலே பெற்றெடுத்துதாகவும் சொல்கிறார்கள். சுமார் ஐம்பதாண்டு காலத்திலே அவன் ஐந்து ஆண்டுகள் கூட வெளியுலகத்திலே இருந்திருக்க முடியாதென்று அங்குள்ள கைதிகள் சொன்னார்கள். அவனைப் பற்றி அவ்வளவு விவரம் தெரிந்த கைதிகள் எவ்வளவு சிறை அனுபவஸ்தர்களாயிருக்க வேண்டுமென்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்! சிறையில் கறுப்புக் குல்லாய்க்காரர்கள் காலத்தைச் சுலபமாகக் கழித்துவிடுகிறார்கள், பழைய அனுபவத்தை வைத்துக் கொண்டு.

வெள்ளைக் குல்லாய்கள்தான் மிகவும் வேதனைப்படுகிறார்கள். சிறையிலே வேதனையில்லாமல் ராஜபோகமாக இருக்குமா என்று கேட்கலாம். வேதனை இருக்க வேண்டியதுதான். முதலில் வந்த கைதிகள் எச்சரிக்கப்பட வேண்டியவர்கள். ஆகவே அவர்களின் கஷ்டத்தைக் கொஞ்சம் குறைத்து, உணவு முதலியவற்றில் சலுகை காட்டும் முயற்சியில் உடனடியாகக் கவலை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறைக்கு வந்த மூன்று நாட்களுக்கெல்லாம் ஜெயிலர் என்னைக் கூபபிட்டனுப்பினார்.

ஆங்கிலத்தில் 'டைப்' செய்யப் பட்ட சில காகிதங்களைக் கொடுத்து, அதைத் தமிழில் "உங்கள் நடையில் மொழி பெயர்த்துக் கொடுங்கள்' என்றார். அவைகளை நான் தமிழில் எழுதிக் கொடுத்தேன். கடுங்காவல் தண்டனை பெற்ற கைதி யாயிற்றே; மறுக்கக் கூடாது. நான் எழுதியதை மாயவரம் ஓவிய நண்பர் பி. டி. ராசன் சிறையிலுள்ள "குவாரண்டைன்" என்னுமிடத்தில் அழகிய முறையில் வர்ணத்தால் சுவரில் தீட்டிக் கொடுத்திருக்கிறார். அவைகளைப் படித்துப் பார்த்தால் சிறையில் உள்ள வசதிகள், சட்டதிட்டங்கள் எல்லாமே தெளிவாகும் என்று நம்புகிறேன்.

சிறையில் வார்டர்களுக்கு அடுத்தபடியாகப் பதவி வகிப்பவர்கள் காணிக்கை வார்டர்கள் தான். இவர்களுக்கு சம்பளம் கிடையாது; வெள்ளை உடையும் வெள்ளைத் தொப்பியும் உண்டு. வார்டர்கள் வேலை முடிந்ததும் வெளியிலே செல்வது போல் இவர்கள் செல்ல முடியாது. காரணம் இவர்களுக்கு வேலை முடிவதேயில்லை. காணிக்கை வார்டர் என்பது உங்களுக்குப் புதிராக இருக்கிறதல்லவா? கான்விக்ட் வார்டர் (Convict Warder) என்பதுதான் இப்படித்திரிந்து, தேய்ந்து, காணிக்கை வார்டராகியிருக்கிறது.

மூன்று, நான்கு வருடங்களுக்கு மேல் தண்டனை பெற்ற கைதிகள் தங்களின் நன்னடத்தையால் சிறைச்சாலையில் பெறுகிற உத்தியோகமிது! நீண்ட நாள் தண்டனை பெற்ற ஒரு கைதி, மெல்ல மெல்ல ஒரு மேற்பார்வையாளனாகப் பதவி பெற முடியும். 'ஓவர்சீயர்' என்று அந்த உத்தியோகத்துக்குப் பெயர்.

வெள்ளைத் தொப்பியும், கால் சட்டையும், அரைக்கைச் சட்டையும் அவனது உடுப்புகள், அவனது பார்வையிலே பல கைதிகள் கண்காணிக்கப் படுவார்கள். சிறுகச் சிறுக ஓவர்சீயருக்குப் பதவி உயர்ந்து, அழகான வெள்ளைத் தொப்பியும், வெள்ளைக் கோட்டும், நீண்ட வெள்ளைக் காலுறையும் தரப்பட்டு கான்விக்ட் வார்டராக மாறிவிடுகிறார். ஓவர்சீயர், இரவு நேரத்தில் கூண்டிலே அடைபட வேண்டும். கான்விக்ட் வார்டர்-அதாவது கைதி வார்டர் கூண்டிலே அடைபடத் தேவையில்லை.

ஆனால் இரவு நேரங்களில் மாறி மாறிக் குறிக்கப்பட்ட கால அட்டவணைப்படி பிளாக்குகளில் காவல் புரிய வேண்டும். திருச்சி சிறையிலுள்ள கான்விக்ட் வார்டர்கள் பெரும்பாலும் ஆயுள் தண்டனை பெற்றவர்கள்தான். ஆயுள் தண்டனை என்பது இருபது ஆண்டுகள். ஆனால் அவர்கள் நடந்து கொள்ளும் முறை-திருந்திய நட வடிக்கை-அயராத உழைப்பு-இவைகளின் காரணமாக அவர்களுக்கு 'நாட் கழிவு' தரப்பட்டு, இருபதாண்டுகட்குள்ளாகவே விடுதலையாகி விடும் வாய்ப்பு இருக்கிறது.

ஆயுள் தண்டனை பெற்றவர்களும் பெரும்பாலும் தூக்கு மேடையிலிருந்து திரும்பியவர்கள் தான்! தூக்கு மேடைக்குச் செல்லும் கைதிகளுக்காக ஒரு தனி இடம் இருக்கிறது. அதற்குப் பெயர். 'கண்டம்' என்கிறார்கள். அதுவும் திரிந்து தெளிந்த பெயர்தான் Condemned Prison என்பதுதான் 'கண்டம்' என்று மாறியிருக்கிறது.

அங்கு வந்த மனிதனுக்கு ஒரு கண்டம் இருக்கிறது என்பதை அது குறிப்பதால், திரிந்த பெயரும் ஒருவாறு பொருந்தும். அந்தக் கண்டத்தில்தான் ஒரு காலத்தில் அண்ணாவும் பெரியாரும் வேறு இடமில்லாத காரணத்தால் பத்து நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார்கள். கண்டத்திலேயிருக்கும் கைதிகள் தனித் தனியே தான் வைக்கப்படுவார்கள். ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு காவல் உண்டு! அதற்குப் பக்கத்திலேயே சிறிது தூரத்தில் தூக்கு மேடையுமிருக்கிறது.

நாங்கள் சென்ற பிறகு எட்டுக் குற்றவாளிகள் அந்த மேடை மூலம் உலக விடுதலை பெற்றிருக்கிறார்கள். மிகவும் சோகமான செய்தி யொன்று; ஒரு குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை கிடைத்திருந்தது. அவன் அதையும் மறுத்து அப்பீல் செய்தான். அப்பீலில் அவனுக்குத் தூக்குத்தண்டனை கிடைத்துவிட்டது. அவன் நிலைமை எப்படியிருக்குமென்பதை நீங்களே யோசித்துப் பார்த்துக்கொள்ளுங்கள். அக்டோபர் மாதம் 15ஆம் தேதி சூரியனைக் காணாமலே அவன் தூக்குக் கயிற்றை முத்தமிட்டுவிட்டான்.

கொலைக் குற்றத்தில் ஈடுபட்டு ஆயுள் தண்டனை பெற்ற கான்விக்ட் வார்டர்கள் சிறைச்சாலைக்குள்ளேயே மற்றவர்களோடு மிகவும் நன்றாகப் பழகுகிறார்கள். திருந்தி நடக்க வேண்டும் என்ற ஆசையோடு காலக்தைக் கழிக்கிறார்கள். குடிவெறியில் கொலை செய்தவர்கள் - கற்பு தவறிய மனைவியைக் கொலை செய்தவர்கள் - பங்காளிகளைக் கொலை செய்தவர்கள் - நிலத்தகராறுகளால் கொலைச் செயலில் ஈடுபட்டவர்கள் - எதிரிகள் கொடுத்த தொல்லையால் கொலை வெறிக்குத் தூண்டிவிடப்பட்டவர்கள்- ஆகியவர்களைத்தான் அதிகமாகக் காண முடிகிறது சிறைச்சாலைகளில்.

இருபது ஆண்டு சாதாரணமானதா? இளைஞனாக இருந்தால் வனப்பும் வசீகரமும் நிரைந்த வாலிபம் சிறைச்சாலையிலேயே முடிந்து விடுகிறது. நாற்பது வயதிற்கு மேற்பட்ட மனிதனாகத்தான் அவளை வெளியே பிரசவிக்கிறது சிறைச்சாலை. வாலிபத்தைக் கடந்த நிலையிலே உள்ளவன் ஆயுள் தண்டனை பெற்றால், வாழ்வின் சுகத்தை இனிமேல் அனுபவிக்க முடியாது என்ற பருவத்திலே சக்கை மனிதனாக அவனைச் சிறைச்சாலை வெளியே உமிழ்கிறது! ஆயுள் தண்டனையை விட மரணதண்டனை எவ்வளவோ மேல்தான்!

ஆனால் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் வெளியில் வந்த பிறகு புதிய மனிதர்களாக மாறிக் கொலை வெறியைத் தடுக்கும் கொள்கைக்காகப் பாடுபட்டார்களேயானால், ஒரு கொலையால் வந்த பழியைப் பல உயிர்களைக் காப்பாற்றுவதன் மூலம் போக்கிக் கொள்ளலாம். அதை விட்டு வெளியில் வந்ததும், "என்னிடம் யாரும் வாலாட்டக் கூடாது. நான் கொலை கேசில் ஜெயிலுக்குப் போனவனாக்கும்!"

என்று மீசையை முறுக்கித் தோளைத் தட்டிக்கொண்டு நின்றால், அது வீரமுமாகாது: விவேகமுமாகாது. கோழைத்தனத்தின் கூக்குரலாகவே கருதப்படும்.