நெஞ்சுக்கு நீதி
புதிய ராஜ்யம் · 87 / 391
புதிய ராஜ்யம் நா ங்கள் அங்கே ஒரு புதிய ராஜ்யத்தை அமைத்து விட்டோம். அந்த ராஜ்யம் இரண்டு மாத காலம் மிக அற்புதமாக நடை பெற்றது. அதற்குப் பிறகு நூறாகி-ஐம்பதாகி-ஐந்தாக மாறி விட்டோம். இரண்டு மாதம் நடைபெற்ற எமது ராஜ்ய நிர்வாகத்தைச் சொல்லாமலிருக்க முடியவில்லை. முதலில் ராஜ்ய அமைப்பைக் கூறுகிறேன். சி.பி. பிளாக் எனப்படும் - நாங்கள் அடைக்கப்பட்டிருந்த இடம் நான்கு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு பகுதியிலும் நூறு பேருக்கு மேல் அடைக்கப்பட்டிருந்தோம். ஒவ்வொரு பிளாக்குக்கும், அதாவது சராசரி நூறு பேருக்கு ஒரு துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். நானூறு பேரும் வசதியாகக் குளிப்பதற்கும், குடிப்பதற்குமான தண்ணீரைப் பெற 'ஜல ஸ்தாபன மந்திரி' ஒருவர் நியமிக்கப்பட்டார். உணவு மந்திரி ஒருவர். கடிதப் போக்குவரத்து, உள்நாட்டு விவகாரங்களைக் கவனித்து ஜெயில் அதிகாரிகளிடம் தொடர்பு வைத்துக் கொள்ள ஓர் உள்நாட்டிலாகா மந்திரியும் உண்டு.
மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லுதல், தனி உணவுகளை நோயுள்ளவர்களுக்குப் பெற்றுத் தருதல் போன்றவைகளுக்குச் சுகாதார மந்திரி ஒருவர்; மக்கள் மன்றம் அமைத்தல்-கூட்டுதல் -கலைத்தல் - தலைமை நிலையத்திலிருந்து இல்லை-ஆட்சி பீடத்திலிருந்து -வெளியாகும் அறிக்கைகளை உடனுக்குடன் அறிவித்தல் - முதல்வர் எனப்படும் தலைவருக்கு ராஜ்ய நிலைமையை எடுத்துரைத்தல் - ஆகிய காரியங்களுக்காக ஒரு பிரதமச் செயலாளர் உண்டு. ஒவ்வொரு பிளாக் தலைவருக்கும் ஒரு துணைத் தலைவர் உண்டு.
பிளாக் தலைவர்கள் ஒவ்வொருவரும் நூறு பேரைக் கட்டிக்காத்தல், அவர்களுக்கு ஆவன செய்தல், இது போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டும். மக்கள் மன்றம்-பேச்சு மன்றம் என்றும் அழைக்கப்படும். அது நாள் தோறும் கூடும். மன்றத்தின் ஒவ்வொரு அலுவலரும் தேர்தலில் வெற்றி பெற்றவர்களே தான்! மன்றத்தின் அனுமதியோடு பொறுப்பேற்றுப் பணியாற்றுகிறவர்கள். அவர்கள் வருமாறு :தலைவர் :மு. கருணாநிதி துணைத் தலைவர் :மன்னை நாராயணசாமி முதல் பிளாக் தலைவர் :பேராவூரணி அடைக்கலம் துணை :வடிவேலு இரண்டாம் பிளாக் தலைவர் :தஞ்சை பட்டு துணை :பக்கிரிசாமி, கிருஷ்ணன் மூன்றாம் பிளாக் தலைவர் :மாயவரம் கிட்டம்பா துணை :வள்ளுவதாசன் நாலாம் பிளாக் தலைவர் :ராம சுப்பையா துணை :கோபால்சாமி உணவு மந்திரி :ராம சுப்பையா உள்நாட்டு இலாகா :முல்லை சத்தி சுகாதார மந்திரி :புகாரி சாகிப் ஜல ஸ்தாபன மந்திரி :அய்வநல்லூர் வேலு பிரதமச் செயலாளர் :வேணுகோபால் மேற்கண்டவாறு இலாகாக்கள் பிரிக்கப்பட்டு எல்லோரும் பதவி யேற்றனர்.
உணவு பரிமாறுதல்-தேவைகளைக் கேட்டல்-சிகிச்சைக்கு அனுப்புதல் முதலிய எல்லாக் காரியங்களையும் சிறைச்சாலை வார்டர்கள் கவனித்து வந்தார்கள். எங்கள் ராஜ்யத்தில் மட்டும் மேற்கண்ட எல்லாப் பொறுப்புக்களையும் எமது மந்திரி சபையும், மக்கள் மன்றமும் ஏற்றுக் கொண்டன. எமது ராஜ்யத்தின் ஒரு நாள் நடவடிக்கைகளை முதலில் விளக்குகிறேன். சிறப்பான நிகழ்ச்சிகளைத் தனித்தனித் தலைப்புகளின் மூலம் பிறகு விவரிக்கிறேன்.
காலை ஆறு மணிக்கு எங்கள் கூண்டுகளின் கதவுகள் திறக்கப்படும். காலைக் கடன்களை முடித்து விட்டுக் கஞ்சி உணவுக்குப் பிரஜைகள் தயாராகி விடுவார்கள். நான்கு பிளாக் தலைவர்களும் வேப்ப மரத்தடியில் கூடி, இன்றைய தினம் யார் யார் கஞ்சி பரிமாறுவது, எந்த பிளாக்கிலிருந்து ஆரம்பிப்பது என்பது போன்ற அலுவல்களை ஆலோசிப்பார்கள். அதற்குள் கஞ்சி அண்டாக்கள் வந்துவிடும். அந்தப் பெரிய அண்டாக்களை அங்குள்ள கிரிமினல் கைதித் தோழர்கள் தான் தூக்கி வருவார்கள்.
ஒவ்வொரு பிளாக் பிரஜை களும் 'க்யூ' வரிசையில் நின்று கஞ்சியை வாங்கிக் கொண்டு போவார்கள். கஞ்சி ஒரு நாளைக்குக் கெட்டுப் போயிருந்தால் உடனே தலைவரிடம் நாலு பிளாக் தலைவர்களும் அறிக்கை சமர்ப்பிப்பர். தலைவர் அதை வார்டரின் கவனத்திற்குக் கொண்டு போவார். ஜெயில் அதிகாரம் உடனடியாகக் குறையைக் கவனிக்க முயற்சி எடுத்துக் கொள்ளும். கஞ்சி முடிந்த பிறகு, குளிக்கும் இடத்தில் பிரஜைகள் கூடுவர். ஐம்பது பேர் ஒரே, காலத்தில் குளிக்க வசதியுடைய தண்ணீர்த் தொட்டி.
அதில் நானூறுக்கு மேற்பட்டோரைச் சௌகரியமாகவும். எல்லோரும் குளிக்கக் கூடிய அளவுக்குத் தண்ணீரைச் சேதப்படுத்தி விடாமலும் குளிக்க வைத்திடும் பொறுப்பை 'ஜல ஸ்தாபன மந்திரி' தானே நேரில் நின்று கவனிப்பார். ஒவ்வொருவரும் எத்தனை குவளைகள் ஊற்றிக் கொண்டார்கள் என்ற கணக்குப் பார்த்து, அளவுக்கு மேலாகிவிடாத நிலையில் அங்குமிங்கும் ஆடியோடி, கட்டுப்படுத்தித் தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் பார்த்துக் கொள்வார்.
"நீர் மேல் நடக்கலாம்" என்று தாயுமானவர் பாட்டுப் படித்திருக்கிறோம். அப்படி நடந்து காண்பித்தவர் தோழர் வேலு. ஆமாம்! ஜல ஸ்தாபன மந்திரி! தண்ணீர்த் தொட்டியின் மேலேயே காலை முதல் பிற்பகல் மூன்று மணி வரையிலே நடை பழகுவார். அவர் போட்டிருந்த பனியனுக்குட்பட்ட பாகமெல்லாம் சிவப்பாகவும் மற்ற இடமெல்லாம் கறுப்பாகவும் மாறி ஆளே இரு வண்ண மனிதனாகத் தோன்றினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன், அவர் பட்ட கஷ்டத்தை!
கஞ்சிக்கும் குளியலுக்குமிடையிலே, பிளாக் வாசல்களில் ஒரு ஒலி கிளம்பும். "ஆஸ்பத்திரி! ஆஸ்பத்திரி!" என்ற ஒலி. அது போன்ற சத்தம் நமது ஊர்த் தெருக்களிலே கிளம்பினால் 'சரிதான், சான்ஸ் எதுவும் கிடைக்காமல் யாரோ ஒரு டாக்டர், ஆஸ்பத்திரியை விலை கூறுகிறாராக்கும்!'
என்று நினைப்போம். சிறை ராஜ்யத்திலே வரும் இந்த ஒலி வேறு. சுகாதார மந்திரி புகாரி சாகிப் தன்னுடைய தேன் கூடு வடிவமுள்ள தாடியைத் தடவியபடி, "ஆஸ்பத்திரிக்கு யாராவது வருகிறீர்களா?" என்று கூவுவார். அவர் ஓர் ஐம்பது பேரையாவது தினந்தோறும் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று திரும்புவார். வந்த பத்திரிகையை எடுத்துக்கொண்டு பிரதமச் செயலாளர் வேணு ஓடுவார். நான்கு பிளாக்குகளுக்கும் பத்திரிகைகளை அனுப்பி அவற்றை பத்திரமாக எடுத்து வரும் வேலையை அவர் விரிவாகக் கவனிப்பார்.
பிற்பகல் ஒரு மணிக்குள்ளாகவே அநேகமாக உணவு வந்து விடும். வெள்ளைத் துணியால் மூடப்பட்டு நீண்ட கட்டில் எனப்படும் ஒன்றை நாலு பேர் தூக்கி வருவார்கள். முன்னே சட்டி வரும். அதிலே குழம்பு வரும். இப்படி நாலைந்து பெரும் சட்டிகளும், நாலைந்து கட்டில்களும், ஓர் அண்டாவில் மோருமாக எங்கள் ராஜ்யத்து உயிர் வாழும் பொருள்-உணவு என்னும் தண்டனை-வந்து சேரும். சிறையிலே தரப்படும் பெரிய தண்டனை உணவு தான்! சிறையிலே பெருங்குற்றம் எனக் கருதப்படுவது அதைச் சாப்பிட மறுப்பதுதான்!
சாப்பாடு முடிந்ததும் சிறிது நேரம் களைப்பாறும் படலம். உடனே உள்நாட்டு இலாகா மந்திரி சத்தியின் வேலை துவங்கும். மாதம் இரண்டு முறை தபால் கார்டு கொடுப்பார்கள். அவைகளைக் கணக்குப் பார்த்து, எழுதியவைகளை வாங்கி அதிகாரிகளிடம் அனுப்பி, எழுதாதவைகளை எழுதச் சொல்லி, கார்டு வராதவர்களுக்குக் கார்டு வாங்கிக் கொடுத்து அந்த அலுவல்களைக் கவனிப்பார். புத்தகம் வேண்டுமென்பவர்களுக்குப் புத்தகமளித்துப் படித்தவைகளை வாங்கிக் கணக்குச் சரிபார்த்து, வாசகசாலையில் ஒப்படைக்க முயற்சி எடுத்துக் கொள்வார்.
இதற்குள் 'இண்டர்வியூ' வரும். சிறையில் உள்ள தோழர்களைச் சந்திக்க நண்பர்களோ, உறவினர்களோ வருவர். அந்தத் தகவலை எடுத்துக் கொண்டு வேணுகோபால் ஓடுவார். நானூறு பேரில் அவர்களைச் சிரமப்பட்டுக் கண்டு பிடித்து 'இண்டர்வியூ' வுக்கு அனுப்பிவைப்பார். புகாரி சாகிபின் 'ஆஸ்பத்திரி'க் கூவல் மீண்டும் கிளம்பும். மாலை நான்கு மணிக்கு மக்கள் மன்றத்தை கூட்டும் பொறுப்பை வேணுகோபால் சரிவரச் செய்து முடிப்பார். அந்தந்த பிளாக் தலைவர்களும், தங்கள் தோழர்களுடன் மக்கள் மன்றத்திற்கு வந்து சேருவார்கள்.
மக்கள் மன்றம் நாள் தோறும் தலைவரின் தலைமையிலே தொடங்கும். சிறைச்சாலையில் நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றியும் கழகத்தின் கடமை கட்டுப்பாடு பற்றியும் சொற்பொழிவு நிகழ்த்தப்படும். தினம் ஒரு பொருளின் மீது பல தோழர்கள் உரையாற்றுவார்கள். இறுதியில் தலைவரின் முடிவுரையுடன் மன்றம் கலையும். சிறு குற்றம் செய்தவர்களும் மன்றத்தில் விசாரிக்கப்பட்டுப் பெரும்பான்மையோர் எண்ணத்திற்கு இணங்க மன்றத்தின் முன்பு மன்னிப்புக் கேட்டுக்கொள்வார்கள்.
மாலை 5-30 மணிக்கெல்லாம் இரவு உணவு வந்துவிடும். அப்போது சோளக்களி வராது. அரிசிச் சோறு அளவில் கொஞ்சம் பெரியதாய் விடும். மோர் வராது. கடலை உருண்டை வரும். குழம்பு உண்டு. சாப்பாடு முடியும். மாலை ஆறு மணிக்கெல்லாம் மூன்று மூன்று பேராகக் கூண்டுகளில் அடைக்கப்படுவார்கள். நாங்கள் 'பி' வகுப்புக்காரர்கள். தனித் தனியே ஒவ்வொருவராகத்தான் அடைக்கப்படுவோம். சில கூண்டுகளிலேயுள்ள ஆண் குயில்கள் பாட ஆரம்பிக்கும்.
அந்த மகுடித் தொனி கேட்டுப் பாம்புகள் வந்துவிடும். பாம்புகளுக்கு வேறு 'டூட்டி' (Duty) இருந்தால் தேள்களையாவது அனுப்பி வைக்கும். அந்தத் தேள்கள் நமது தோழர்கள் பலரை முத்தமிட்டிருக்கின்றன. இரவு பத்து மணிக்கு அநேகமாக எமது ராஜ்யம் அடங்கிவிடும். ஆறு மணிக்குத் தோழர்கள் அடைக்கப்பட்டதும், கைதிகளின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்று பார்க்க'ஹெட் வார்டர்' எல்லா பிளாக்கிற்கும் சென்று சுற்றிப் பார்த்து வருவார்.
கடைசியாக எங்கள் நாலாம் பிளாக்கிற்கு வருவார். 'உம். கணக்கு வந்து விட்டது' என்போம் நாங்கள். சிறைச்சாலை முழுதும் பல இடங்களிலே சுவர்களில் ஒரு வகையான சாவி பொருத்தப்பட்டு, அத்த இடங்களுக்கு ஒரு மணிக்கு ஒரு தரம் வார்டர் சென்று, தன்னிடமுள்ள கெடிகாரத்திற்கு அந்தச் சாவியைப் போட்டுவிட்டு வரவேண்டும். வார்டர்; எங்கும் நிற்கமுடியாது. சுற்றியபடியே காவல் காக்க வேண்டும். நின்றால், அவரிடமுள்ள கடிகாரம் காட்டிக் கொடுத்துவிடும்.
அவர் இரவு நேரத்தில் கையில் ஒரு விளக்குடன் போய்க்கொண்டிருப்பது எங்களுக்குத் தெரியும். அவரைப் பார்த்து நாங்கள் · மணி தெரிந்து கொள்ளுவோம் அதற்காகத் தானோ என்னவோ, சிறையில் அவர் போனால், "கடிகாரம் போகுது" என்கிறார்கள்! நாங்களும். "கணக்கு வருது! கடிகாரம் போகுது!"
என்றுதான் சொல்லுவோம். இப்படி எங்கள் ராஜ்யம் நடந்து கொண்டிருக்கும்போதுதான் சென்னையில் ராஜாஜி வீட்டு முன் மறியல் அறப்போரில் தலைமை வகித்த தோழர்களான முனிசாமி, வி. டி. அண்ணாமலை. எஸ். அப்பாவு. சி. வி. எம். அண்ணாமலை, ஏ. கே. சாமி, அப்போதைய வடார்க்காடு மாவட்டச் செயலாளர் ஏ.எல். சி. கிருஷ்ணசாமி. சம்பந்தம். இன்மொழியன், நடராசன், அரசு ஆகியோரும் முன்னூருக்கும் மேற்பட்ட தோழர்களும் கைது செய்யப்பட்டார்கள். பொதுச் செயலாளர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், சம்பத், மதி, என்.
வி. என். ஆகிய ஐவரும் நிபந்தனையின்றிச் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது. டால்மியாபுரப் போராட்டம், புதுக் கல்வித் திட்ட எதிர்ப்புப் போராட்டம், ரயில் நிறுத்தப் போராட்டம் முதலியவற்றைத் தூண்டிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடைபெறத் துவங்கியது. அந்த வழக்கு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நடைபெற்றாலுங் கூடப் பெரிதும் நமக்குப் பயன்பட்ட வழக்காகவே இருந்தது.
நம்மைப் பற்றிய முழு விவரங்களைப் பொது மக்களும் மாற்றுக் கட்சிகளும் புரிந்து கொள்ளக்கூடிய விதத்திலேயே வழக்கு அமைந்தது. இலட்சத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம் என்பதும், கட்டுப்பாடு, கண்ணியம், அமைதி முதலியவை தி. மு. க. வின் இலட்சியம் என்பதும், ஆயிரத்துக்கு மேற்பட்ட கிளைகளையுடைய பெரும் இயக்கம் என்பதும், தமிழகத்தில் காங்கிரசுக்கு எதிராக நிற்கும் மாபெரும் தேசியக் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்பதும் அரசாங்கத்தைச் சேர்ந்த அதிகாரி- களின் சாட்சியங்களின் வாயிலாகவே நாட்டுக்குத் தெரிவிக்கப்பட்டன.
ஐவர் மீது தொடரப்பட்ட வழக்கு இத்தகைய கணிசமான புள்ளி விவரத்தை மக்கள் மன்றத்திற்குத் தந்திட உதவியது. கிளர்ச்சிகளைத் தூண்டிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு ஐவரும் மூன்று மாத வெறுங்காவல் தண்டனை பெற்றார்கள். சிறை சென்றவர் செங்கோலோச்சுவதும், செங்கோலேந்திகள் சிறை செல்வதும் சகஜமாகிவிட்ட நாட்களிலே நாம் வாழ்கிறோம். சிறையிலேயிருக்கும் போதுதான் அந்தச் செய்திகளும் நமக்குக் கிடைத்தன. 'ஈரான் பூமியிலே ஷா ஓட்டம், முசாதிக் வெற்றி' என்ற செய்தி முதல் நாள் வந்தது.
'மூன்றாம் நாள் முசாதிக்-கைது. ஷா ஆட்டம்' என்று செய்தி கிடைத்தது. கர்ச்சித்துக் கொண்டிருந்த காஷ்மீரத்துச் சிங்கம் ஷேக்அப்துல்லா முதல் நாள் பிரதமர், மறுநாள் கைதி. சிக்கலைத் தவிர்க்க முடியாத சிலோன் பிரதமர் சேனநாயகா, சிகிச்சையும் ஓய்வும் தேவையென்று அரசு கட்டிலை விட்டு இறங்கி விட்டார். இப்படிச் சுற்றியுள்ள நாடுகளிலே சூறாவளி அடித்தது கண்டோம் நாம். ஆனால் இங்கு சூதர்கள் சிலர் அந்தச் சூட்ச மத்தை உணராமல், அந்தச் சாம்ராஜ்ய அதிகாரம் சதமென எண்ணியிருந்தார்கள்.
நல்ல மரங்களிலேயே புல்லுருவி பாயும்போது, இந்தக் கள்ளிக்காடுகளா இருந்து வாழப் போகின்றன? அந்த நம்பிக்கை நிறைந்த ஆறுதலோடுதான் அண்ணாவும் ஐயாயிரவரும் சிறைப்பட்டிருந்த கொடுமையை ஒருவாறு சமாளித்துக் கொண்டோம், சிறையிலிருந்தபடியே. இனி எமது ராஜ்யத்தின் நிலைமைகளைப் பற்றிக் கொஞ்சம் கவனிப்போம்.
