நெஞ்சுக்கு நீதி
மத்திய சிறை நுழைவு · 86 / 391
மத்திய சிறை நுழைவு சே ர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தோம். உயர்ந்த பலமான மதில்களையும் கோட்டை போன்ற முகப்பையும் உடைய திருச்சி மத்திய சிறையின் வாயிலிலே போலீஸ் வண்டி நின்றது. நாங்கள் இறங்கினோம். அகாலமாகி விட்டதால், மறுநாள் காலையில் தான் எங்களை விழுங்க முடியும் என்று கூறி விட்டது சிறை! "சரி, ஏதோ ஓர் இடத்தில் படுங்கள்" என்று சிறைக்கு வெளியே உள்ள ஒரு மண்டபத்தைக் காட்டினர்.
அதில் யோகாசனங்களும்- கராத்தே வித்தைகளும் கற்றவர்கள் தான் படுக்கலாம். மழை நீர் கணுக்கால் அளவு தேங்கி இருந்தது. நீர் மேல் படுக்கும் பயிற்சி எங்களுக்குக் கிடையாது. ஆகையால் தயங்கி நின்றோம்; கால் வலி எடுக்கும் வரையில் நின்றோம். பிறகு கருணை பிறந்தது. "சரி இங்கே படுங்கள்" என்று 'இண்டர்வியூ' பார்க்குமிடத்திற்கு வெளியே உள்ள தாழ்வாரத்தைக் காட்டினார்கள்.
அங்கு போய்- உட்கார்ந்தோம். மழைச் சாரல் நிற்கவில்லை. குளிரும் கோடி கோடித் தேளென மாறிக் கொட்டியது. கண்ணைத்திறக்க முடியாத மின்னல்; 'புளூரசி' நோயினால் பீடிக்கப்பட்டவன். நான். அதற்குக் குளிர் ஆகாது. தொலைந்து போன நோய் மீண்டும் தொடர்ந்து விடுமோ 'இந்தக் குளிரால்' எனப் பயந்தேன். அவ்வளவு குளிர். நண்பர் முல்லை சத்தி என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். அந்தக் கதகதப்பில் கொஞ்சம் கண்ணயர்ந்தேன். கைகளைத் தேய்த்துக் கொண்டு சூடு உண்டாக்கியபடியும் முழங்கால்களுக்கிடையே கைகளைப் போர்த்திக் கொண்டு சுருண்ட நிலையிலும், எல்லாத் தோழர்களும் அந்த பயங்கர இரவை கஷ்டப்பட்டுத் துரத்திக் கொண்டிருந்தனர்.
"வா! வா!" என்று வாழ்த்துப் பாடி அழைத்த கதிரவன் வந்தான் ஜூலை 18ம் - ஆம் நாள் பிறந்தது. சிறைச்சாலையின் முன்னாலுள்ள சிறிய கதவு திறந்தது. இரவெல்லாம் குளிரால் வாடிய எங்களுக்கு ஒரு சிறு கோப்பையில் அரைக் கோப்பை தேநீர் யாராவது தரமாட்டார்களா என்ற ஆசை பிறந்தது. ஆவல் துடித்தது. 15ஆம் நாள் காலையிலே அதுவும் அவசரத்திலே, நல்ல சாப்பாடு சாப்பிட்டவர்கள். மூன்று நாட்களாக வயிறு காலி! பசியோ கொல்லுகிறது. நாவோ காய்ந்து விட்டது.
"ம்! உள்ளே செல்க!" என்ற உத்தரவும் பிறந்துவிட்டது. ஒவ்வொருவராக உள்ளே போய்க் கொண்டிருக்கிறார்கள். நாலைந்து பேர் வெளியே மிச்சம். அந்த நேரத்தில் ஒரு புதையல் கண்டெடுத்தோம். "சார்...சார்... கொஞ்சம் நில்லுங்கள்" என்றபடி ஒரு தோழர் எங்களை நோக்கி ஓடி வந்தார்.
பார்த்தோம். ஒரு கோப்பை தேநீர்! ஆமாம், பாலைவனத்திலே பசுந்தரை! ஆளுக்குக் கொஞ்சம் சுடச்சுடச் சாப்பிட்டோம். நாக்கு வெந்து போனது கூட பிறகுதான் தெரிந்தது. அந்தத் தேநீர் தந்த தோழருக்கு எப்படித்தான் வாழ்த்துக் கூறுவது என்று புரியவில்லை. சிறைவாயில் எங்களை அழைத்தது. வெளியுலகை எங்களால் இனி ஆறு மாதத்திற்குப் பிறகு தான் பார்க்க முடியும் என்பதால் ஆசை தீர ஒருமுறை பார்த்தோம். பிறகு அடியெடுத்து வைத்தோம் உள்ளே.
எங்களை உள்ளே தள்ளியவுடன் அந்தச் சிறிய உதடுகள் மூடிக்கொண்டன. எங்கள் ஒவ்வொருவருக்கும் அடையாள எண்கள் தரப்பட்டன. ஆமாம். எங்கள் வேட்டிகளில் எழுதப்பட்டன. வீட்டிலே என்னுடைய எண் மூன்று! மூன்றாவது பிள்ளை நான். "தவமிருந்து பெற்ற பிள்ளை இப்படிச் சூனாமானாவாகி விட்டதே?"
என்று சுற்றத்தார் சொல்வார்கள் முன்பெல்லாம். பள்ளிக்கூடத்திலே என்னுடைய எண்-மறந்து விட்டேன். எஸ் எஸ்.எல்.சி. தேர்விலே என்னுடைய எண்-சொன்னால் அந்த எண்ணுக்கு அவமானம், ஆகையால் சொல்ல வேண்டாம்! சிறைச்சாலையிலே எனக்கு மாட்டி விடப்பட்ட சிங்காரப் பதக்கத்தில் எண்: 5779. இன்னும் எத்தனை எண்களைச் சந்திக்க வண்டுமோ; ஆனாலும் அந்த முதல் முறையாகப் பெற்ற எண்ணை மறந்துவிடமுடியாது. C.P. என்று சொல்லப்படும் (Close Prison) என்ற இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டோம்.
முன்னூற்றுக்கு மேற்பட்ட நமது தோழர்கள், "வருக! வருக" என அழைத்தார்கள். 1865-ம் ஆண்டு கட்டப்பட்ட அந்தச் சிறைச்சாலையில் அப்போது மூட்டி விடப்பட்ட அடுப்பு இன்னும் அணையவில்லையாம். தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது. ஒரு சிறு கிராமத்துக்குள் நுழைந்தது போலவேயிருந்தது எங்களுக்கு. சலவை செய்யப்படும் இடம் உண்டு. தலையலங்காரம் முக அலங்காரம் செய்வோர் உண்டு. வைத்திய சாலை உண்டு. பள்ளிக் கூடம் உண்டு. வாசகசாலை உண்டு.
பள்ளிக்கூடம்-மருத்துவமனை இரண்டைத்தவிர, பிற எல்லாத் தொழில்களையும் அங்குள்ள கைதிகளே நடத்துகிறார்கள், கைதிகளுக்காகக் கைதிகளால் நடத்தப்படும் ஒரு சின்னஞ்சிறு ராஜ்யத்திற்குள் பிரவேசித்திருப்பதாகவே நாங்கள் உணர்ந்தோம். உள்ளேயிருந்து அண்ணாந்து பார்த்தோம், நீலக் கண்ணம் கவிழ்த்தது போல வானம். சுற்றிலும் பெரிய மதிற் சுவர்கள், கைதி என்பதைச் சுட டிக் காட்ட! உள்ளே வேப்ப மரங்கள், சிறை வாழ்வின் சுவையை உணர்த்திட!
மதிற்சுவருக்கு வெளியே பொன்மலை - பொறுப்புகள் உனக்கு அது போலத்தான் காத்திருக்கின்றன வெளியுலகத்தில் என்பதை எடுத்துச் சொல்ல! மொழி உணர்வுப் போரில் சிவப்பாக்கப்பட்ட இலட்சியச்சாலையில் எங்கள் கால்களும் பதிந்திடுகின்றன என்ற அடங்காத பூரிப்போடு உள்ளிருந்து அழைத்த தோழர்களுடன் ஐக்கியமானோம். உள்ளே வந்ததும் நாங்கள் கண்ட முதல் காட்சி என்ன தெரியுமா? நமது தோழர்கள் "கஞ்சிப் போர்" நடத்திக் கொண்டிருந்தார்கள்!
ஜெயிலர் நிற்கிறார். அவரைச் சுற்றித் தோழர்கள் நிற்கிறார்கள். மன்னை நாராயணசாமி கழகத்தின் பலமான அரணாக இருப்பவர்- தஞ்சை மாவட்டப் பகுதியில் உடல் வளத்திற்கேற்ற உள்ள வளமும் பெற்றவர். அமைதியெனும் பண்பிலிருந்து அணுவும் நழுவாதவர். அவருடைய தலைமையிலேதான் ஜெயிலரைச் சுற்றித் தோழர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். ஜெயிலர், அவர்களுக்குச் சமாதானம் கூறுகிறார். "அரசாங்க உத்தரவை எம்மால் மாற்ற முடியாது. காலையில் கஞ்சி தரும்படியாகத்தான் எங்களுக்குச் சட்டமிருக்கிறது.
நானென்ன செய்வது?" இது ஜெயிலர்! "அதற்காக இவ்வளவு மோசமான கஞ்சியா?" இது தோழர்கள்! ஜெயிலர் சிரிப்பைத்தான் பதிலாகத் தர முடிந்தது. நான் குறுக்கிட்டேன். மன்னை நாராயணசாமியும் என்னுடன் ஒத்துழைத்தார். "அரசாங்கத்திடம் நேர்மையை எதிர்பார்க்க முடியவில்லை என்று தானே அறப்போர் துவங்கியிருக்கிறோம். ஆலகால மரத்தையே ஆணி வேரோடு பிடுங்கும் ஆரம்பப் போராட்டத்தில் குதித்திருக்கிற நாம், இந்தச் சிறுசிறு கிளைகளைப் பற்றிக் கவலைப்படக் கூடாது.
கஞ்சியை வாங்கிக் கொள்ளுங்கள்" என்றேன். தோழர்கள் உடனே பறந்தனர், கையினில் தட்டுடன்! அந்தக் கண்ணியம் நிறைந்த கட்டுப்பாடு கண்டு ஜெயிலர் அதிர்ச்சி அடைந்து விட்டார். புதிதாகப் போன எங்களுக்கு 'எங்கே தட்டு?' என்று கேட்டோம்! 'உங்களுக்குக் கஞ்சி தட்டு' என்றார்கள்.
புரியவில்லை முதலில்! நாங்கள் வருவது முன்பே தெரிவிக்கப்படாததால் காலை ஆகாரம் எங்களுக்குத் தயார் செய்யப்படவில்லையாம்! 'அரியலூர்' எங்களுக்குக் கடைசியாகப் பொழிந்த கருணை அதுபோலும்! 15-ஆம் நாள் காலையிலே சாப்பிட்டவர்கள். 18-ஆம் நாள் பிற்பகல்தான் ஒரு பட்டை வெள்ளைச் சோற்றைக் கண்டோம். "அச்சடித்த சோறே! அவுன்ஸ் குழம்பே! வேப்ப மரத்து நிழலே! வெல்லம் போட்ட கடலையே! வெண்ணெய் எடுக்கா மோரே!"
இது அந்த ராஜ்யத்தின் நாட்டுப் பாடல்! அங்கே நாங்களும் பிரஜைகளானோம். முன்னூறு பேராயிருந்தவர்கள் இரண்டொரு நாட்களில் ஐநூற்றைத் தொடுமளவுக்கு- நானூற்றைத் தாண்டிய தொகையினரானோம்.
