உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/அரியலூரில் விசாரணை
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

அரியலூரில் விசாரணை · 85 / 391

அரியலூரில் விசாரணை எங்கள் வண்டிக்குப் பின்னால் ஒரு மோட்டார் கார். அது சிறிது தூரம் எங்களைத் தொடர்ந்து வந்தது. உள்ளிருந்து இரண்டு மூன்று பேர் வணக்கம் தெரிவித்தனர். அந்தக் காரில் சகோதரர் அரங்கண்ணலும் இருந்தார். அவர் தன் அன்புக் கரத்தை நீட்டிச் 'சென்று வருக!'

என்று அறிவித்தார். அவர் பற்றிய நினைவு என்னை எங்கேயோ அழைத்துச் சென்றது. -நீண்ட சிந்தனை. போலீஸ் வண்டி புழுதியை இறைத்தபடி போகிறது. பின்னால் வந்த மோட்டார் புழுதியில் மறைந்து வேறு பக்கம் திரும்பி விட்டது. ஆனால் 'அரங்கு' என் மனத்தை விட்டு மறையவில்லை. 1940-ஆம் ஆண்டு-திருவாரூர் பள்ளியிலே படித்துக்கொண்டிருக்கிறேன். அப்போது படிப்பிலே கவனம் சென்றதை விட அதிகமாக இயக்கத்திலேதான் சென்றது. என்னுடைய துணையாக இருந்தும் இணையாக இருந்தும் இயக்கத் தொண்டு புரிந்தவர் வ.

கோ. சண்முகம் என்ற 'மாவெண்கோ.' பள்ளிப் பருவத்தில் எனக்குப் பரம விரோதியாக இருந்தவர் ஒருவர்! பெயர் ரங்கசாமி. என்னைக் கண்டால் அவருக்கு வேப்பங்காய் போலத்தான்! அழுத்தமான கதர்ச் சட்டையும்-சட்டையிலே காங்கிரஸ் சின்னமும் அணிந்து கொண்டிருந்த அந்த இளம் நண்பர் -பள்ளித் தாழ்வாரத்திலே நடந்து செல்வதைப் பார்த்தாலே போதும் -அவரது குழுவினரோடு சேர்ந்து கொண்டு பரிகாச வார்த்தைகளைக் கொட்டிக் கும்மாளம் போடுவார்.

சில நேரங்களில் சிறு கல்லும் வீசுவார். ஏன் தான் இந்த ரங்கசாமிக்கு என் மீது இவ்வளவு காய்ச்சலோ தெரியவில்லையென்று எனக்கு நானே ஆச்சரியப்படுவேன்-வருத்தப் படுவேன். ஆனால் ஆத்திரப்படமாட்டேன். அதன் காரணமாகத்தான் ரங்கசாமி அவ்வளவு விரைவில் அாங்கண்ணலாக மாறிட முடிந்தது. நாங்கள் தமிழ் மாணவர் மன்ற நிதிக்காக முதன் முதல் நடித்த 'பழனியப்பன்' என்ற நாடகத்தில் தோழர் ரங்கசாமி-இல்லை-சகோதரர் அரங்கண்ணல்-டாக்டர் வேடம் தாங்கி நடித்தார்.

ரங்கசாமி அரங்கண்ணலானார். அரங்கண்ணல் நாடக டாக்டரானார்-இப்போது குடிசை மாற்றுவாரியத்தின் சார்பில் குடிசைப் பகுதி மக்களின் நலிவு போக்கும் டாக்டர்களில் ஒருவராகி விட்டார். அரங்குவைப் பற்றிய என் ஆழ்ந்த சிந்தனையோட்டத்தை "அரியலூர் வந்து விட்டோம்" என்ற குரல் தடுத்து நிறுத்தியது. அரியலூர் சப் ஜெயில் வாசலில் ஒரே கூட்டம். நாங்கள் வரப்போகிறோம் என்பதைத் தெரிந்து மக்கள் திரளாகக் கூடியிருந்தனர். வண்டியிலிருந்து இறங்கினோம்.

குழுமியிருந்தோரை வணங்கினோம் வாழ்த்தினோம். உள்ளே அழைத்துச் செல்லப்பட்டோம் அரியலூர் சப் ஜெயிலில் இருபதுக்குட்பட்ட கைதிகளையே வைக்க முடியுமாம். அங்கு எங்களுக்கு முன்பே வேறு வகைக் கைதிகள் பலர் இருந்தனர். நாங்களும் போன பிறகு மொத்தம் அறுபதுக்கு மேற்பட்டவரானோம். எங்கள் முப்பத்தாறு பேருக்கும் நாலைந்து கூண்டுகளை ஒதுக்கிக் கொடுத்தார்கள். ஒரு கூண்டில் இரண்டு பேர் தான் சௌகரியமாக இருக்க முடியும்.

எழு பேர் எட்டுப் பேரை ஒவ்வொரு கூண்டிலும் போட்டு அடைத்தார்கள் நான் - சத்தி - கஸ்தூரி - ராம சுப்பையா - வேணுகோபால் - மலைக்கோட்டை ரத்தினம் - அரியலூர் எத்திராஜ் - மற்றுமொரு நண்பர் ஆகிய எட்டுப் பேர் அடைக்கப்பட்டோம். காலடியால் சுமார் பத்து அடி நீளமும் எட்டு அடி அகலமும் உள்ள அந்தக் கொட்டடியில் எட்டுப் பேர்! அதிலும் பாதிக்கு மேல் பயன்படுத்த முடியாத இடம். பெண்கள் அடைபட்டிருந்த கூண்டு. நாங்கள் சென்றதும் அவர்களை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு அந்த இடத்தை எங்களுக்கு அளித்தார்கள் சிறுநீர் கழிக்கப்பட்டு - எங்கள் மூக்குகளை எல்லாம் கம்பிக்கு வெளியே தான் நீட்டிச் சுவாசிக்க வேண்டும் என்ற் நிலைமையிலே-அங்கு துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது.

மாலை ஐந்து மணிக்கு எங்களைத் திறந்து விட்டார்கள், மலஜலம் கழிப்பவர்கள் போகலாம் என்று. 'கக்கூஸ்' என்று சொல்லப்படும் ஓர் இடத்தைக் காண்பித்தார்கள். 'லாங் ஜம்ப்' தெரிந்தவர்கள் தான் உள்ளே சென்று அமர முடியும். காரணம் கால் வைப்பதற்காகப் போட்டிருந்த அந்தக் கற்கள் ஒன்றுக் கொன்று இடையே அவ்வளவு தூரத்திலிருந்தன. பிறகு சாப்பிடுவதற்குக் கூப்பிட்டார்கள். குப்பையும் கூளமும் சேர்ந்த ஒரு தரையிலே-ஆமாம் புழுதி மண்ணிலே-உட்காருங்கள் என்றார்கள்.

உட்கார்ந்தோம். உணவு வந்தது. இல்லை - இல்லை ஆளுக்கொரு சட்டி வந்தது. மண் சட்டி! பிறகுதான் உணவு வந்தது. அறுசுவை உணவு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அறுசுவை உணவு என்றால் அறுவகை ருசி நிறைந்த சாப்பாடு என்று தான் அர்த்தம். சொல்லக் கேட்டிருக்கிறோம். அரியலூரிலே எங்களுக்குத் தந்த அறுசுவை உணவுக்கு ஒரு புது அர்த்தமுண்டு. அறுசுவை=சுவை அறுந்த; உணவு=சாப்பாடு எனப்படும் கொடுமை!

சுவை அறுந்து போன கொடுமையை மண் சட்டிகளில் கொட்டினார்கள். மஞ்சள் வண்ணச் சோறு! பஞ்ச வண்ணக் குழம்பு! உப்பிலும்-புளியிலும்-காரத்திலும் சேராமல் சுயேச்சையாக வந்து விழுந்த பரங்கிக்காய்த் துண்டை எடுத்து வாயில் வைத்தோம்! எப்படியோ எதிர் நீச்சல் போட்டு அது வயிற்றுக்குள் போய்விட்டது. எல்லாத் தோழர்களும் சோற்றைத் தொடாமலே என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். "உம், சாப்பிடுங்கள்" என்று கூறிவிட்டு நான் சோற்றைக் கிள்ளி வாயில் போட்டுக் கொண்டேன்.

"அண்ட சராசரங்களும் சுழலு- தன்ணே; அடிவயிற்றிலிருந்து குமட்டுதண்ணே" என்று நாங்கள் பாடவில்லை. அகத்தின் அழகை முகத்தில் காட்டாமல் இருக்க முடியவில்லை. சோற்று உருண்டைகளைக் கீழே கொட்டிவிட்டுச் சட்டிகளைக் கழுவி வைத்து விட்டு-முப்பத்தாறு பேரும் அணி வகுத்தோம்; நாலு நாலு பேராக! பிறகு பழையபடி கூண்டுகளில் அடைக்கப்பட்டோம். எங்கள் 'கல்கத்தா இருட்டறை'யில் எட்டுப் பேர்! இரவு வந்தது. இரண்டு நாள் சரியான உணவு இல்லாத எங்களுக்குத் தூக்கமாவது வந்ததா?

அதுவுமில்லை! வந்தால் தான் படுப்பதற்கு இடமேது! பூச்சிகள் வந்தன. கொசுக்கள் வந்தன. வராதவைகளில் முக்கியமான ஒன்று காற்று-எட்டுப் பேர்-வியர்வையோ கொட்டுகிறது-சட்டையைக் கழற்றினால் கொசுவோ துளைக்கிறது! மூலையில் உட்கார்ந்து தூங்கினர் மூவர்! வேணு, ரத்தினம், எத்திராஜ்! ஆபாசமாயிருந்த பகுதியில் காலை மட்டும் நீட்டிக்கொண்டு உடலைப் புழுப்போல் சுருட்டிக் கொண்டார் சத்தி. அவர் கால் புறத்திலே தலையை வைத்து வளைந்து கிடந்தார் கஸ்தூரி.

கலங்கிய கண்களுடனே இராம சுப்பையா என்னைப் பார்த்து. "என் மடியில் சாய்ந்து கொள்ளுங்கள்" என்றார். முயன்றேன், முடியவில்லை. பிறகு ஒரு வழி கண்டு பிடித்தேன். காற்றும் லேசாக வரும். உடம்பையும் உருட்டாமல் இருக்கலாம் என்ற எண்ணத்துடன் சிறைக் கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்றுகொண்டே சிறிது நேரம் தூங்கினேன். இரவு இரண்டு மணி இருக்கலாம். சரியாகத்தான் நேரம் தெரிய முடியாதே! டிப்டி சூப்பரின்டெண்டெண்ட் வந்தார்.

"ஏன் நிற்கிறீர்கள். தூங்க வில்லையா?" என்றார். "பரவாயில்லை" என்றேன். போய் விட்டார். எப்படியோ வாழ்க்கையிலே அதுவரையில் தொட்டறியாத கஷ்டத்தை அந்த இரவு வேளையில் அரியலூர் சிறையில் அனுபவித்தோம். படாத பாடுபட்டு இரவை நகர்த்தினோம். காலையிலே அரிசிக் கஞ்சி கொடுத்தார்கள். குடலைக் காய விடாமல் பார்த்துக் கொண்டோம்: மறுபடியும் அடைத்து விட்டார்கள். அன்றைய தினம் ஜூலை 17-ஆம் தேதி! சென்னை மறியலிலே அருப்புக் கோட்டை தந்த வீரர் கவிஞர் எம்.

எஸ். ராமசாமி அவர்கள் தலைமையில் முப்பதுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்கள். கல்லக்குடியிலே தாக்குண்டு வைத்தியசாலையிலிருந்த கவிஞர் கண்ணதாசனும் கைது செய்யப்பட்டார். வெளியிலே என்ன நடக்கிறதோ தெரியவில்லையே என்ற ஆவலுடன் அடைந்து கிடந்தோம் கூண்டுக்குள். பிற்பகல் உணவுக்காகத் திறந்து விட்டார்கள். எங்களைத் திறப்பதற்காக வார்டர் கொஞ்ச தூரத்தில் வருவது எங்களுக்கு முன்பே தெரிந்துவிடும். அவர் கையிலுள்ள சாவிக் கொத்திலிருந்து எழும்பும் ஒலியைக் கேட்டதும் இராம சுப்பையா சொல்லுவார், திறக்கப் போகிறார்கள் என்று!

பிற்பகல் அங்குள்ள மற்றக் கைதிகளை நாங்கள் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது. வயதான நாலைந்து தாய்மார்கள் சிறையிலிருந்தார்கள். சாராய வழக்கிலே கைது செய்யப்பட்டவர்கள். சுமார் இருபத்தைந்து வயதுள்ள வாலிபனைக் கண்டோம். கள்ளக் காதலின் காரணமாகக் காதலியின் கணவனைக் கொன்று விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவன். கட்டுமஸ்தான தேகம் படைத்த இளைஞன். அவனுடைய காதலியும் அங்கே வேறு கூண்டில் அடைபட்டிருந்தாள். அவள் மீது அவன் கொண்ட பாசமும் அவன் மீது அவள் கொண்ட பாசமும்-கணவனைக் கொல்வது என்ற மோசத்திலே கொண்டு போய் விட்டதாக வழக்கு!

அந்த இளைஞன் சொன்னான், "நானும் அவளும் ஆசைக் காதலர்கள்" என்று! அவனுக்சோ வயது இருபத்தைந்து இருக்கும். அவன் ஆசை ஜோடிக்கோ - அறுபதுக்குள் தான் இருக்கும். புனிதமான காதல்! பொருத்தமான காதல்! 'காதலுக்குக் கண்ணில்லை என்கிற போது வயது மாத்திரம் எதற்காக?'

என்ற கேள்வியின் 'சரியான பதிலாக நின்றார்கள் அந்த இளங் காதலர்கள் - இல்லை கிழக் காதலர்கள். அதுவுமில்லை - பழுப்புத் தளிர்க் காதலர்கள். சாராயத் தொழிலைக் குடிசைத் தொழிலாகக் கொண்ட இன்னும் சில ஆண் மக்களும் அங்கே கைதிகளாக இருந்தனர். அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே பிற்பகலில் உணவு வந்துவிட்டது. அருமையான சோளக்களி. சோளத்தின் மாவிலே செய்யப்பட்ட சுவையான உணவு(?); அதன் தலையிலே கொஞ்சம் குழம்பு என்று சொல்லப்பட்ட ஏற்பாட்டையும் ஊற்றித் தொலைத்தார்கள்.

எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்ட லிங்கப் பெருமான் போல சோளக்களி நின்று கொண்டிருந்தது சட்டியிலே! "சோறு எதுவும் கிடையாதோ?" என்றோம். "மாலையிலே தான் மஞ்சள் சோறு" என்றார்கள். "மோர் உண்டு இப்போது" என்றார்கள் "கொடுங்கள், கொடுங்கள்" என்று குவளையை நீட்டினோம்.

மோர் சாப்பிட்டதோடு பிற்பகல் உணவு முடிந்தது சோளக் களியை யார் தொட முடியும்? அது தான் தொட்டாலும் அசையாத நிலையில் இருந்ததே! மீண்டும் பூட்டினார்கள். மாலை மூன்று மணிக்குக் கொஞ்சம் மணிலாக் கொட்டையைக் கொடுத்து எல்லோரும் சாப்பிடுங்கள் என்று அன்பு பொழிந்தார்கள். பிறகு மாஜிஸ்டிரேட் வந்தார். "இன்றைய தினமே உங்கள் விசாரணை இருக்கிறது" என்று கூறிவிட்டுப் போனார்.

சிறிது நேரத்தில் எங்களை அழைத்தார்கள். சென்றோம். நீதி மீன்றம்; அங்கே நாங்கள் ஐவர் முதலில் விசாரிக்கப் பட்டோம். பின்னர் இராம சுப்பையாவும் முப்பது தோழர்களும் விசாரிக்கப்பட்டனர். டால்மியாபுரம் பெயரை மாற்ற வேண்டுமென்று வரி கொடுக்கும் பிரஜைகளின் சார்பாகக் கிளர்ச்சி நடத்தியது குற்றமாம்! கல்லக்குடி எனும் தமிழ்ப் பெயரை விரும்பியது தகாத செயலாம்! ஆகவேதான் நாங்கள் ஈடுபட்ட அறப் போருக்குக் களங்கம் கற்பிக்கப்பட்டது.

"நீங்கள் குற்றம் செய்திருக்கிறீர்கள் அல்லவா?" "குற்றமல்ல-குறிக்கோளை நிறைவேற்றக் கையாண்ட அமைதியான முறைதானிது!" "உங்கள் செயல் குற்றமாகத்தான் கருதப்படுகிறது." "சட்டப்படி இருக்கலாம்-நியாயப்படி அல்ல." நீதி மன்றம் தீர்ப்பு வழங்கத் தயாராகிவிட்டது. வெளியிலே நூற்றுக்கணக்கான மக்கள் தீர்ப்பை எதிர்பார்த்து நின்றனர், மழைக்கிடையிலேயுங்கூட! இராம சுப்பையாவும் முப்பது தோழர்களும் இரண்டு மாதம் கடுங்காவல் அனுபவிக்க வேண்டும்.

முப்பத்து ஐந்து ரூபாய் அபராதம். கட்டத் தவறினால் ஒரு மாதம் சிறை! மொத்தம் மூன்று மாதத் தண்டனை! சட்டம் கொட்டிவிட்டது அவர்களை! எங்கள் பக்கம் திரும்பியது சட்டம்! ஆறு மாதத் கண்டனை! கடுங்காவல் தண்டனை! ஒரே குற்றம் - இரண்டு விதத் தண்டனை! போராட்டத் தலைவன் என்ற முறையில் எனக்கும் எனனுடன் சேர்ந்த நால்வருக்கும் ஆறு மாதம். அடுத்த படை வரிசையென்ற முறையில் மற்றவர்களுக்கு மூன்று மாதம். அதுவும் தவறு-அவர்களில் ஆறு பேர் முதல் படை வரிசையிலே கைது செய்யப்பட்டவர்கள்.

எப்படியோ; சட்டம் ஆறு மாதம், மூன்று மாதம் என்று பரிசுகளை அளித்து மகிழ்ந்தது! 17-ஆம் நாள் மாலை 6-30 மணி சுமாருக்குத் தண்டனை பெற்றோம். தமிழர் மானத்துக்காகப் போராடியதற்குப் பரிசு பெற்றோம். "என்ன சார், அவர்களுக்கு மூணு மாதம். நமக்கு ஆறு மாதம்?'

என்று சிரித்துக்கொண்டே கேட்டார் முல்லை சத்தி. "ஆமாம், நமக்கு ஆறு மாதம் தான்" என்றேன். "ஏன் அப்படி?" என்றார் வேணுகோபால். "அதற்கு மேல் தண்டனை தர அரியலூர் கோர்ட்டுக்கு அதிகாரமில்லை" என்றேன். தீர்ப்பைக் கேள்வியுற்ற அரியலூர் மக்கள் மாஜிஸ்டிரேட் கோர்ட்டுக்கு முன்பு திரளாக நின்றிருந்தனர். கூட்டம் கலைந்த பிறகு எங்களை அனுப்ப வேண்டும் என்ற திட்டத்துடனோ என்னவோ கோர்ட் வாசலிலேயே நல்ல இருட்டில் எங்களை உட்கார வைத்துவிட்டனர்.

ஆகாகா! ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டேனே? மாலையில் எங்களுக்கு மஞ்சள் சோறு போட்டுத்தான் பிறகு தீர்ப்புக் கூறினார்கள். ஆறு மாதமென்ன - ஆறு வருடமே போடட்டும்; அரியலூர் நரகத்திலிருந்து மன்னிக்கவும், நகரத்திலிருந்து வேறு சிறைச்சாலைக்கு அனுப்பப் போகிறார்களே என்ற மகிழ்ச்சி எங்கள் எல்லோருக்கும். மூன்று மாதத் தண்டனை பெற்றவர்களுக்கெல்லாம் முகம் சுருங்கி விட்டது. வாடிவிட்டது. வதங்கி விட்டது!

காரணம், எங்களுக்கு ஆறு மாதம் கிடைத்து விட்டதாம். அந்தப் பொறாமையால் தான் - வேறென்ன? இரவு எட்டு மணி சுமாருக்கு எங்களில் இருபத்தைந்து பேரை ஏற்றிக் கொண்டு போலீஸ் வண்டி புறப்பட்டது. மிச்சம் பதினொரு தோழர்களுக்கு வண்டியில்லாததால், "பிடியுங்கள் சாபம்! இன்னும் ஐந்தாறு நாட்கள் அரியலூர் ஜெயிலில் இருங்கள்" என்று அங்கேயே அவர்களை மட்டும் வைத்துக் கொண்டனர்.

நாங்கள் இருந்த வண்டி இருட்டையும், இடையிடையே தோன்றிய மின்னலையும், மழையையும் கிழித்துக் கொண்டு திருச்சி நோக்கிப் புறப்பட்டது. வெளியிலே எவ்வளவு மழை பொழிகிறது என்பதை எங்களால் கணக்கிட முடிந்தது. எப்படியென்கிறீர்களா? பெய்த மழை முழுதும் எங்கள் தலையிலேதான் பெய்தது. அரியலூருக்கும் திருச்சிக்கும் இடையே உள்ள சாலை இருக்கிறதே, அடடா, தார் ரோடுதான். (20 ஆண்டுகளுக்கு முந்திய நிலை). (தார் என்றால் வண்டிக்காரர்கள் மாடுகளைக் குத்த உபயோகிப்பார்களே அந்தத் தார் எனப் பொருள் கொள்க.

வாழைத் தார் எனக் கொள்ளினும் கொள்க.) மேலே வானத்திலே இடி! கார் போகும் வேகத்திலே இங்கே ஒருவர் மேல் ஒருவர் இடி! ஒரு தோழர் பாடினார். அவரையறியாமலே 'பிர்க்காக்கள்' உருண்டன. அவ்வளவு அசைவற்ற நிம்மதியான கார் சவாரி! எவ்வளவு தொல்லைகள் இருந்தால் என்ன, அந்த அரியலூர் காராக்கிரகத்தையும் கக்கூசையும் விட்டு வந்தோமே என்ற ஆறுதல் எல்லாத் தோழர்களுக்கும் ஏற்பட்டது. வானம் உறுமிக் கொண்டேயிருந்தது. சூடேறியிருந்த எங்கள் உடலிலே மழைத் துளி பன்னீர் போலக் கொட்டிக் கொண்டேயிருந்தது.

மழை-தமிழகத்தின் வளப்பத்தைச் சொல்லிற்று! இடி-தமிழரின் மனக் குமுறலுக்கு அடையாளமாயிருந்தது! இரவு ஒரு மணிக்குத் திருச்சி வந்து சேர்ந்தோம். மழை நின்றபாடில்லை. திருச்சியில் தெருவெல்லாம் மழை நீர் ஓடிக் கொண்டிருந்தது. மலைக்கோட்டையின் உச்சியிலே பச்சை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நகர் முழுவதும் பூரண அமைதி நிலவிக்கொண்டிருந்தது. நட

ுநிசியிலே, நகர் அடங்கிய நேரத்திலே-நாங்கள் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்ட அந்தக் காட்சியைச் சித்திரிக்க இயலாதுதான். நனைந்து போன ஆடை; நடுங்கும் உடல்; ஆனால் தெளிந்த உள்ளம்- இவைகளோடு எங்கள் பயணத்தின் கடைசிப் பகுதியை முடித்தோம். ஈரத்தின் கனத்தையும் தூக்கிக் கொண்டு அதோ எங்கள் இலட்சியக் கொடிகள் பறந்து கொண்டிருக்கின் றன. அவை காட்டிய வழியிலே நாங்களும் பயணம் நடத்திக் கொண்டிருக்கிறேம். மலைக் கோட்டையின் பச்சை விளக்கு மறைந்து விட்டது.