நெஞ்சுக்கு நீதி
களம் புகுந்தேன்! · 84 / 391
களம் புகுந்தேன்! ஆயிரக்கணக்கான மக்கள் களம் காண வந்து விட்டனர், கல்லக்குடிக்கு. பாசறையிலிருந்து முதல் படை கிளம்பியது. நான் முன்னே-என் பின்னே 24 பேர்கள்-எம்மைச் சுற்றி ஆயிரமாயிரம் தோழர்கள். தமிழ்த் தாயின் தலையிலே சூட்டப்பட்ட அவமானக் கிரீடத்தைக் கழற்றி எறியக் 'கிளம்பிற்று காண் தமிழ்ச் சிங்கக்கூட்டம்! கிழித்தெறியத் தேடுது காண் பகைக் கூட்டத்தை!'
என்றிடும் வண்ணம் நடந்தனர் வீரர்கள்; பல தெருக்களைக் கடந்தனர் தீரர்கள்! குருடர்களும் பார்த்தனர்! கூனர்களும் நிமிர்ந்தனர்! செவிடர்களும் கேட்டனர்! ஊமைகளும் வாழ்த்தினர்! களம் வந்தது. செந்தமிழ் அன்னை புறக்கணிக்கப்பட்ட இடம் வந்தது. பெருமைக்குரிய தாய், புலம்பிக் கொண்டிருந்த இடம் வந்தது. எங்களைச் சீராட்டிப் பாராட்டிச் செந்தமிழ் ஊட்டிய சிலம்பணிந்த செல்வி-மணிமேகலா தேவி-மாணிக்கக் குறள் ஒலிக்கும் மாதா- வளையாபதியுடைய குண்டலகேசி!
வஞ்சகர் பூட்டிய விலங்கால் வாட்டமுற்றுக் கிடந்தாள்! நாங்கள் விலக்க வந்த விலங்கிற்குத் துப்பாக்கி வேலி போட்டனர்- துடித்தழும் மாதாவைத் தூரத்திலேயிருந்து பார்! தொடாதே! அவள் தொல்லையுறுவதை! ரசி என்றது அரசாங்கம். கோழைகள் கேட்பர் - மோழைகள் பின்னடைவர் - நாங்கள் வாழைக்குக் கன்றல்ல-ஆலுக்கு விழுதுகள் - அன்னைத் தமிழுக்கு மக்கள் - இப்படிப் பதில் தந்தோம்! ஒடினோம் அன்னையிடம். 'டால்மியாபுரம்' என்ற பெயரை மறைத்தோம்.
'கல்லக்குடி' என்ற பெயரை அந்தப் பலகை மீது ஒட்டினோம். அலறியவாறு புகை வண்டியும் வந்தது! வந்த புகை வண்டி புறப்பட ஆயத்தமானது. என் படையில் இருந்த 25 பேரை ஐந்து பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியினரும் புகை வண்டியின் முன்னே படுப்பது என்று, தலைவன் என்ற முறையில் கட்டளையிட்டேன். முதலில் ஐவர்! நான், சத்தி, கஸ்தூரி, குமாரவேல், குழந்தைவேல்-தண்டவாளத்தைத் தலையணையாக்கிக் கொண்டு இருப்புப் பாதையைப் பஞ்சு மெத்தையாக்கிப் புகை வண்டிக்குப் பக்கத்திலே சாய்ந்தோம்.
கூடி நின்ற ஆயிரமாயிரம் உள்ளங்களும் துடித்தன. ஒரே அமைதி! என்ன நடக்கப் போகிறதோ என்று மக்கள் வெள்ளம் அலையடங்கிக் கிடந்தது. துப்பாக்கி ஏந்திய ரிசர்வ் போலீசார் வளையம் வளர்ந்தது. கலெக்டர், டி. எஸ். பி., சர்க்கிள், சப் இன்ஸ்பெக்டர்கள், மாஜிஸ்டிரேட், சார்ஜண்ட் எல்லாரும் எங்கள் பக்கம் வந்தனர். "ஏன் இப்படிப் படுத்திருக்கிறீர்கள்?"
என்றனர். "எங்கள் இலட்சியத்தை எடுத்துச் சொல்வதற்காக!" என்றேன். "இது பொதுஜனங்களுக்கும், பிரயாணிகளுக்கும் இடையூறான காரியம் அல்லவா?" "அப்படி நீங்கள் கருதினால் வருந்துகிறோம். ஆனால் இந்தப் பொது ஜனங்களைக் கேளுங்கள். அல்லது வண்டியிலுள்ள பிரயாணிகளைக் கேளுங்கள். அவர்கள் சொல்லட்டும், "டால்மியாபுரமே இருக்க வேண்டும், இந்தப் போராட்டம் கூடாது' என்று.
நாங்கள் உடனே எழுந்துவிடுகிறோம்" என்று படுத்துக்கொண்டே பதில் சொன்னோம். பக்கத்தில் ரயில் எஞ்சின் கொதித்துக் கொண்டிருந்தது. நாங்களும் தான்! எங்களைச் சுற்றி நின்ற மக்களுந்தான்! "டால்மியாபுரம் வேண்டாம் என்றால், அதற்கு மேலிடத்திற்கு எழுதுங்களேன்!"
"எல்லா முயற்சிகளும் முடிந்துவிட்டன. தீட்டிய கடிதங்கள் எவ்வளவு! தீர்மானங்கள் எத்தனை! தில்லியின் திருநோக்குப் படவில்லை எம்மீது! ஆகவே அவர்கள் கவனத்தை இழுக்க இம்முறையைக் கையாள்கிறோம்." "இப்படிச் செய்வதால் வெற்றி கிடைத்துவிடுமா?" "எங்களுக்கு முன்னே நிற்க வைக்கப்படும்-இந்த ரயிலின் 'கிரீச்' என்ற சப்தமோ-அல்லது ரயில் எம்மீது ஏறி எமது எலும்புகள் 'மளுக் மளுக் என்று முறியும் சப்தமோ -தில்லி ஆட்சி பீடத்தின் காதில் எட்டுமோ எட்டாதோ?
மக்கள் மன்றத்துக்கு எட்டும். நிச்சயமாக எட்டும். அது இந்த ஆதிபத்தியக்காரரை ஆயிரம் தேள்போலக் கொட்டும். அது போதும், எங்களுக்கு!" "சொல்கிறோம்-கேளுங்கள், உடனே எழுந்து விடுங்கள்!" 'நிபந்தனை வேண்டும்-டால்மியாபுரத்தை மாற்றி விடுகிறோமென்று!"
"அதுதான் 'கல்லக்குடி' என்று ஒட்டிவிட்டீர்களே?" "ஒட்டுவதென்ன, எங்கள் ஓவியர்களை விட்டு எழுதியே தருகிறோம், கல்லக்குடி என்ற பலகையை! ஆனால் ஆட்சி, அதிகாரபூர்வமாகச் சொல்ல வேண்டும்!" அதிகாரிகளின் கேள்விகளும், என் பதில்களும் அதோடு முடிந்து விட்டன. "All right" என்று கூறிவிட்டு அதிகாரிகள் அப்பால் நகர்ந்தார்கள்.
புகை வண்டி 'கூ' என்று ஊளையிட்டது. எஞ்சினில் ஒலி கிளம்பியது. சக்கரங்கள் சுழன்றன. ஓரத்திலே நின்றிருந்த மக்கள் கண்களை மூடிக் கொண்டனர். படுத்திருந்த நாங்களும் எங்களைத் தயார் படுத்திக் கொண்டோம். தேசத் தொண்டர்கள் நடத்தும் தியாக யாத்திரைக்குத் தயாராகிவிட்டோம். கடைசியாக ஒரு முறை கதிரவனைப் பார்த்தேன். கல்லக்குடியைப் பார்த்துக்கொண்டேன். என்னைச் சீராட்டிய தமிழ் மாதாவை ஆசை தீரப் பார்த்துக்கொண்டேன்.
எதிரே நின்றவர்களையும் பார்த்துக் கொண்டேன். எல்லாம் நொடியில் முடிந்தது. கண்ணை மூடிக்கொண்டேன். சாவின் இன்ப முத்தத்திற்குக் கன்னத்தைத் தயார் படுத்திக் கொண்டோம் எல்லோரும்-ஆம்-ஐவரும். கடகட வெனக்கிளம்பிய புகை வண்டி நகர்ந்ததை உணர்ந்தேன். 'தமிழ் வாழ்க!'
என இருதயம் உச்சரித்தது. ஒரு சப்தம் மீண்டும். கண்ணைத் திறந்தேன். உயிரோடிருந்தேன். அதை உணர்ந்தேன். சிறிது தூரத்திலிருந்து புகை வண்டி என் உடலை ஒட்டினாற்போல் நின்றுகொண்டிருந்தது. மீண்டும் அதிகாரிகள் வந்தனர். "முடிவென்ன?" என்றனர். "முடிவைத்தான் எதிர்பார்க்கிறோம்!"
என்றேன். "சரி, எல்லோரும் கைது செய்யப்படுகிறீர்கள்" என்றார்கள். எழுந்தோம். உடனே மிச்சமுள்ள நண்பர்கள்-என் படை வரிசையினர் படுத்தனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர். . இருபத்தைந்து பேரும் போலீஸ் வண்டியில் ஏற்றப்பட்டோம். பொது மக்கள் பொங்கும் எரிமலை போல் ஆயினர். 'அணையுடைத்தெழும் நீத்தம்' போலக் காட்சி தந்தனர். மாணவர் - தொழிலாளர்-இளைஞர் - பெரியோர் - மங்கை நல்லார் அனைவரும் கனலும் கண்ணீரும் சிந்தினர்.
"கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு" என்று உரக்கக் கூவினேன். "காப்போம் அதை!" என்று மக்கள் சமுத்திரம் எதிரொலித்தது. நகரும் கிளிக் கூண்டு நகர்ந்தது. பொது மக்களிடமிருந்து-அழகு மிகும் தமிழகத்து வீதிகளிலிருந்து - பிரிக்கப்பட்டோம். பின்னர் கல்லக்குடிப் பாதுகாப்பு நிலையத்தில் அடைக்கப்பட்டோம். மணி பத்து அடித்தது. சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அவசரமாகப் போலீஸ் ஸ்டேஷனுக்குள் வந்தார். எங்களைத் தவிர, பதினாலு பேரை எழுந்து நிற்கச் சொன்னார்.
எழுந்தனர். "நீங்கள் கைது செய்யப்படவில்லை. வெளியே போங்கள்" என்றார். போய்விட்டனர். அடுத்த வண்டி வரும் நேரமாகிவிட்டது. இந்த முறை என்ன நடைபெறுமோ என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். இரண்டாவது படை புறப்பட்டுக் களத்தை நோக்கித் தெருவிலே செல்லும் பேரொலி எங்களுக்குக் கேட்டது. இனி வெளியுலகச் செய்திகளை எப்போதாவது கேட்கத்தானே முடியும்? பார்க்கத்தான் முடியாதே? இரண்டாம் படையின் தலைவர் இராம சுப்பையா.
அவர் தலைமையிலே படை போகிறது. உழைப்பு-ஓர் உருவம் பெற்று அது ஓடியாடி வேலை செய்துகொண்டிருக்கும் அதிசயத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பார்க்கவில்லையானால் இராம சுப்பையாவைப் பாருங்கள். அந்த உழைப்புப் பெற்ற உருவம்தான் அவர். தொண்டருக்குத் தொண்டர் என்று யார் யாரோ எவ்வெப்போதோ வர்ணிக்கக் கேட்டிருக்கிறோம், யார் யாரையோ பற்றி; அது உண்மையோ பொய்யோ தெரியாது. இதோ உண்மையின் ஒளி காரைக்குடி இராம சுப்பையாவை நம்முன், காட்டுகிறது.
அவர் கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் குனிர்தரு-தருநிழல்-நிழல் தந்த சுகம். திருச்சி சிறைச்சாலையிலே நாங்கள் நானூற்றுக்கு மேற்பட்டோர் அமைத்த ராஜ்யத்திற்கு அவர்தான் உணவு மந்திரி. தாயுள்ளம் படைத்தவர். பேயுள்ளமும் இரங்கும்படி பேசுபவர். இன்று நேற்றல்ல, என்றைக்கோ, என்னை மட்டுமல்ல; இயக்கத்தின் முன்னணி வீரர்கள் அனைவரையும் கவர்ந்தவர். அவருடைய தலைமையிலே சென்ற படை, களத்திலே எங்களைப் போலவே அறப்போர் புரிந்து அதிகார வர்க்கத்தினரால் பிடிக்கப்பட்டது.
அவர்கள் எங்களுடன் வந்து கலந்தனர். அந்த இருபத்தைந்து பேரிலே முதலில் எங்களிடமிருந்து சர்க்கிள் இன்ஸ்பெக்டரால் பிரிக்கப் பட்ட பதினாலு தோழர்களும் இருந்தனர். போலீஸ் ஸ்டேஷனில் நாங்கள் ஐவரும் (கருணாநிதி - சத்தி - கஸ்தூரி - குமாரவேல் - குழந்தை வேல்) தனியாகப் பிரிக்கப்பட்டு, உட்கார் வைக்கப்பட்டோம்; மற்ற 31 பேர்களும் இராம சுப்பையா உட்படத் தனியாகப் பிரிக்கப் பட்டனர். அவர்கள் வருமாறு: இராம சுப்பையா, ஜெயங்கொண்டம் வேணுகோபால், மலைக்கோட்டை ரத்தினம், அரியலூர் எத்திராஜ், தமிழ் முத்து, முனுசாமி, மருதமுத்து, பாண்டியன், கலைமணி, முருகேசன், டி.எ.கமலம், பரமானந்தம், முருகேசன், ராமு, தங்கவேல், சின்னையா, சத்தி, அனீப், இராவணன், நல்ல மணியன், காளிதாஸ், சக்ரபாணி, சோமசுந்தரம், மருதநாயகம், வளர்மதி, முகமதலி கிருஷ்ணமூர்த்தி, பாண்டு, ராமன், சின்னதுரை, நடராசன் ஆகியோர்.
போலீஸ் கூடத்திலே, அனைவரும் அமர்ந்திருந்தோம். அந்த ஸ்டேஷன் சப்-இன்ஸ்பெக்டர் எங்களைப் பாதுகாத்தபடி, எங்கும் போகாமல், அங்கேயே அமர்ந்து விட்டார். முப்பத்து ஒன்று என அவர்களை எண்ணி முடிப்பார். பிறகு எங்களை எண்ணுவார். மீண்டும் சந்தேகம் வரும், மீண்டும் எண்ணுவார். "ஒன்-டூ-த்ரீ சொல்லுங்கள்" என்பார். சொல்லுவோம். முப்பத்து ஆறு முடியும். "யாராவது இரண்டு முறை சொல்லியிருந்தால் என்ன செய்வது?"
என்பார். "சரி, எல்லோரும் கை தூக்குங்கள்" என்று கைகளை எண்ணுவார். 'யாராவது இரண்டு கையையும் தூக்கியிருந்தால் என்ன ஆவது?" என்பார். மீண்டும் எண்ண ஆரம்பிப்பார். அவரும் இப்படி எண்ணிக்கொண்டேயிருந்தார். நாங்களும் எண்ணிக் கொண்டேயிருந்தோம்; ஆட்களை அல்ல, ஆதிக்கக்காரர்கள் அரசோச்சும் நாட்களை! மூன்றாவது படை, நடுப் பகலில் கவிஞர் கண்ணதாசன் தலைமையில் புறப்பட்டுச் செல்லும் ஒலி கேட்டது. போலீசாரின் பாதுகாப்பில் (காவலில்) தான் இருந்தோமென்றாலும் கூடப் பிற்பகல் உணவைத் தோழர் அம்பிலும் மற்ற தோழர்களும் கொண்டு வந்துதான் எங்களுக்கு அளித்தார்கள்.
உணவருந்திக் கொண்டிருந்தோம். சப்-இன்ஸ்பெக்டர் நின்றுகொண்டு எங்களைச் சரி பார்த்தபடி இருந்தார். பந்தியில் உட்கார்ந்திருந்தபோதும், எங்களை ஒரு முறை எண்ணிட அவர் தவறவில்லை. அரசாங்கக் கடமையை அவர் அவ்வளவு ஒழுங்காகவும் ஜாக்கிரதையாகவும் செய்தார். சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதே யாரோ ஒருவர் ஓடி வந்து சப்-இன்ஸ்பெக்டரிடம் ஏதோ மெல்லிய குரலில் சொன்னார். எங்களுக்குப் புரிந்துவிட்டது. அடுத்த விநாடியே, களத்திலே துப்பாக்கிப் பிரயோகம் நடைபெறுகிறது என்று!
உணவு பரிமாறிக் கொண்டிருந்த அம்பில் முதலியோரை, உடனே போகும்படி அனுப்பினேன். பிறகு சாப்பிட முடியுமா எங்களால்? சர்க்காரின் துப்பாக்கி ரவைகளுக்குத் தோழர்களின் சதைகளை-இரத்தத்தை எலும்பை-இருதயத்தை-மண்டை ஓடுகளைத் தீனியாகத் தருகிறது "டால்மியாபுரம்" என்று கேள்விப்பட்ட பிறகு சாப்பாடு என்ன சாப்பாடு?
அடுத்த மாதம் திருமணம். பெண்ணெல்லாம் பார்த்து வைத்து விட்டாள் பெற்றவள். வருங்காலத்தை எண்ணியபடி பிரயாணம் செய்து கொண்டிருக்கிறான் வாலிபன். "வாழ்க்கைக்குத் துணையாகப் போகும் வனிதாமணி எப்படியோ? எப்படிப்பட்டவளோ? நான் கனவு காணும் கட்டழகியாகவே வாய்த்து விடுவாளோ?'
அம்மா போய்ப் பெண் பார்த்தால மகனுக்குப பிடிக்காத பெண்ணாகவா பார்ப்பார்கள்? திருமணம்-ஆகா, எவ்வளவு இன்பமான சொல்! எத்தனை தித்திப்பு அந்த வார்த்தையிலே! வாழ்விலோர் திருநாள் வாழ்வுக்குத் துணையமையும் நாள்தான்! திருமண தினத்தன்று என் சுந்தராங்கியின் சுண்டு விரலைத்தான் தொட முடியும்-பிறகு... நினைக்கவே இனிக்கிறதே! முதல் இரவு வரும். வாழ்விலே என்றைக்கும் திரும்பப் பெற முடியாத இரவு. காராக்கிரகத்துக் கைதிக்குக் கடைசி இரவும் கலியாணமான ஜோடிக்கு முதல் இரவும், ஆகா!
அனுபவிக்காமலேயே அதைப்பற்றி எவ்வளவு கற்பனையூறுகிறது எனக்கு. 'வருவார், வருவார்... என்று பஞ்சணை தேடும்; வந்து வரைவார், இன்ப இலக்கிய ஏடும்' என்ற புரட்சிக் கவிஞரின் பொன்னெழுத்துக்களை நினைப்பேனா? 'கலவி நடுப் பாதையிலே காதல் பேசி' என்று வர்ணித்த பாரதியைப் பாராட்டுவேனா?"
அடுத்த மாதம் நடக்கப் போகும் திருமணத்தைப் பற்றி இப்படி யெல்லாம் எண்ணிக்கொண்டு ரயில் வண்டியினுள் மேல் பலகையில் படுத்திருக்கிறான் அந்த வாலிபன். அவன் பெயர் கேசவன். "அடுத்த நாள் திரும்பி வந்து விடுகிறேன்" என்று அம்மாவிடம் சொல்லிவிட்டுப் போனவன்.
அம்மா வீட்டிலே காத்திருக்கிறார்கள். வியாபாரத்துக்குப் போன மகனை இன்னும் காணோமே என்று! ஆளொருவன் ஓடி வருகிறான் தாயிடம். கேசவன் இறந்து விட்டான் என்று சொல்லுகிறான். எந்தக் கேசவன்? அடுத்த மாதம் திருமணம் என்பதைப் பற்றி எண்ணிக் கோட்டைகள் பல கட்டிக்கொண்டு போனானே, அந்தக் கேசவன்! தாய் அழுதாள்; துடித்தாள்; "ஐயோ மகனே!"
என அலறி விழுந்தாள். இதையெல்லாம் சொல்லவும் வேண்டுமா? "என் மகனுக்குக் கலியாணம் பண்ணப் பெண்ணெல்லாம் பார்த்தேனய்யா. அதற்குள் இப்படிப் 'போக்காளி' போய் விட்டானய்யா!" என்று ஒரு தாய்-பெற்ற தாய்-அடிவயிறு எரிய எரிய- இருதயம் குமுறக் குமுறத்-தலை சுழலச்-சுழலக் கண்ணீர் வழிய வழிய- வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்தாளென்றால் யாரால்தான் அதைச் சகிக்க முடியும். எதிர்காலத்தை எண்ணியபடி படுத்திருந்தான்.
அவன் மண்டையிலே ஒரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது, புகை வண்டியைப் பொத்துக் கொண்டு! பஞ்சணையிலே வாலிபன் படுத்திருப்பான். தலையிலே விரலால் ஒரு 'தட்டு' விழும். திரும்பினால் காதலி நிற்பாள். இப்படி வாழ்வின் ருசியைப் பற்றி எண்ணிக் கொண்டு படுத்திருந்த இளைஞனின் தலையிலே மென்மையான ஒரு 'தட்டு' விழவில்லை. துப்பாக்கிக் குண்டு விழுந்தது! மண்டை பிளந்தது. தலை சிதறிப் போய்விட்டது. 'வரப்போகும் இல்லாள் மெல்லிய விரல்களால் வருடுவாள் இந்தத் தலையை' என்று நினைத்துக் கிடந்தானே; அந்தத் தலையைத் துப்பாக்கிக் குண்டு சுக்கல் சுக்கலாக்கிவிட்டது.
அவனால் இனி நினைக்க முடியாது! மூளை சக்கை சக்கையாகிவிட்டது! வாயை மாத்திரம் 'ஆவ் ஆவ்' என்று பிளந்தானாம் ஆயிரம் முறை! என்ன சொல்வதற்காகப் பிளந்தானோ? எப்படி வேதனையிருந்ததோ! அம்மாவுக்குக் கடைசிச் செய்தி சொன்னானோ, அல்லது 'அடப் பாவிகளே! என்னையேன் என் தாயிடமிருந்து பிரித்தீர்கள்?'
என்று கதறுவதற்காக வாயைப் பிளந்தானோ தெரியவில்லை. சாவைத் தழுவி விட்டான்; கோமள வல்லியைத் தழுவப் போவதை நினைத்து மகிழ்ந்தவன்-கொடியோர் வீசியெறிந்த சாவைத்தழுவி விட்டான். கல்லக்குடிக் களத்திலே, பிணக்கோலம் பூண்டான். மணக்கோலம் பூண வேண்டியவன்! ஒரு பிணம் விழுந்தது! ஆனால் பிண வரிசை முடியவில்லை! இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலே 1938-ல் தாளமுத்துவுடன் நடராசன் என்ற ஒரு தோழனைப் பறிகொடுத்தோம் சிறைச் சாலையிலே!
இதோ இன்னொரு நடராசன் லால்குடி வீரன்-கழகத்தீரன்- களப்பலியானான், கல்லக்குடி அறப் போர் முனையிலே! போராட்டத்திலே பட
ை வரிசையிலே சேர்ந்து கொள்ள ஓடோடி வந்தானாம். ஐநூறுக்கு மேற்பட்ட தொண்டர்கள் பதிவு செய்யப்பட்டுக் களத்திற்கு வர வேண்டிய நாளும் குறிக்கப்பட்டு விட்டதால், அந்தப் பட்டியல் முடிந்த பிறகுதான் நடராசனுக்கு இடம் கிடைக்குமென்று சொல்லப் பட்டதாம். மனம் நொந்து திரும்பியிருக்கிறான் ஊருக்கு. போகும் வழியிலே புகை வண்டியிலே பிணமானான்! கையிலே 'நம்நாடு' இதழ். படித்தானோ படிக்கவில்லையோ? இதழிலே 'நம்நாடு' என உச்சரித்த படியே இறந்து விட்டான்!
ஐயோ! இல்லையில்லை, சாகடிக்கப் பட்டான்! தையல் தொழிலாளி, தாறுமாறாகக் கிழிக்கப்பட்டு விட்டது அவன் கழுத்து! பாய்ந்து வந்த குண்டு அந்தப் பருவ இளைஞனின் கழுத்துச் சதையைக் கொத்திக் கொண்டு போய் விட்டதாம்! "யார் பெற்ற பிள்ளையோ?" என்று ரயிலிலிருந்தவர்கள் பதறியிருப்பார்கள். அந்தப் பிள்ளையைப் பெற்றவர்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள். அம்மா! தமிழ்த் தாயே! இதோ நீ பெற்றெடுத்த நடராசன்! பொன்னையும் மணியையும் வாரி வழங்கும் அன்னையே!
நீ சாவின் கோரக்கரங்களிலே நடராசன் போன்ற தியாகச் செல்வங்களையும் வாரி வழங்குகிறாயே; நியாயந்தானா? உன் மடியை ரத்தத்தால் நனைத்திருக்கும் இந்தப் பிணத்தைப் பாரம்மா! தொண்டர் நடராசனைப் பாரம்மா! கோடிக் கணக்கிலே பிள்ளைகளைப் பெற்றாய்! அவர்களுக்கு அரைகுறை வயதிலே கொள்ளி வைக்க ஏனம்மா விட்டாய்? ஓடியாடி உழைத்த உத்தமன்- தரணி செழிக்க பரணி பாடிய வாலிபன்- சாய்ந்து கிடக்கிறான் பார்! தாயே, அழு! அழு! நன்றாக அழு!
நீ அழுதால் தான், கண்ணீர் விட்டால்தான் இந்தக் கயவர் ஆட்சியை ஒழித்துக்கட்டப் படை தயாராகும். அம்மா! உன் மடியிலே கிடக்கும் நடராசனைப் பார்! அவன் ஒளி தங்கிய விழி எங்கே? உணர்ச்சி தங்கிய மொழி எங்கே? அசையாத உன் மைந்தனின் கரம் ஆடாதம்மா! அவன் ஆணிப்பொன் மேனி புது மழலை பேசிய உன் புத்திரனுக்குப் புதை குழி தயாராகி விட்டது. யாரால்? யாரால்? யாரால்? தாயே; யாரால்? பிணவரிசை முடியவில்லை. குடி! குடி! ரத்தம் குடி!
வயிறு நிரம்பி வழிகிற வரையில் குடி இரைப்பை புடைக்க எலும்புகளை மென்று தின்று விழுங்கு நரம்புகளை! வயதானால் என்ன- வாலிபமென்றால் என்ன- சரியான மாமிசத் தீனி- மனித மாமிசம் சாதாரணமானதா?- அதுவும் போர்க்களத்திலே திடீரெனச் சாயும் பிணம், ருசி கெடாது! புசி! புசி! அது ஜீரணமாக ரத்தம் குடி! குடி! இப்படி அடக்குமுறை வேங்கைக் குரலெடுத்து, வெறி பிடித்து ஆடி, அகலமான வாயைத் திறந்து, குடி குடி குருதியைக் குடி என்ற வண்ணம் கல்லக்குடியிலும் தூத்துக்குடியிலும் குதியாட்டம் போட்டது.
இரண்டு குடி இந்நாட்டுத் தமிழர் குடி! இரண்டு குடியிலும் இரும்பு நெஞ்சு அடக்கு முறைக்குச் சரியான உதிரக் குடி! டால்மியாபுரம் போரின் எதிரொலியாக, டெல்லி மூலவர் எம்மை இழித்து சுடுச்சொல் வீசியதைக் கண்டிப்பதற்காக, இதோ ரயில் நிறுத்தம் என்றது தமிழகம்-ஜூலை 15-ல்! தூத்துக்குடியிலும் ரயில் நிறுத்தப்பட்டது. வயதேறிய இருவர்-வாலிபர் இருவர்அடக்குமுறை வேங்கையின் சொர சொரப்பான நாக்கிற்குக் கூர்மையான கோரப்பல்லுக்கு இரையாக்கப்பட்டார்கள்.
உச்சி மாகாளி என்ற இளைஞனின் உடலைக் கிழித்துக் குடலை மாலை போட்டுக் கொண்டது உதிரப்பசி எடுத்த அடக்குமுறை வேங்கை! கணபதி என்ற இளைஞன் - அவனை நரநரவென்று மென்று தின்று நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு "நாலு பிணம் போதாது இன்னும் தேவை" என்று சீறிப் பாய்ந்தது சீனுவாச பிள்ளை என்ற கிழவர் மீது.
அவரை வளைத்து வாயில் போட்டுக் கொண்டு மந்திர நாடாரின் உயிரையும் துளைத்தது. ஆறு பிணம்- ஆறவில்லை பசி, அடக்கு முறைகளுக்கு; தமிழ்த் தாயே! பாடைகள் ஆறு உன் பாலகர்களுக்கு. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு! ஒரே நாளில் ஆறு பிணம்-ஆறு மக்களைக் காட்டுக்கு, அனுப்புகிறாய். அழு: தாயே அழு! ஒரு காலத்தில் சிரித்துச் செழித்த என் செந்தமிழ்த் தாயே! அழு! கண்ணீர் சிந்து! ரத்தக் கண்ணீர் சிந்து! ஆனால், இந்தக் கண்ணீர் வீண் போகாதம்மா!
தூக்கிக் கொடு ஆறு மைந்தர்களை; கண்ணீரால் குளிப்பாட்டிக் கொடு உன் கண்மணிகளை; அவர்களைச் செந்நீரால் குளிப்பாட்டியவர்கள் செல்லட்டும் சிரிப்போடு! ஆனால் தாயே! அந்தச் சிரிப்பு நீடிக்காது. நீடிக்க விட மாட்டோம். மிஞ்சியுள்ள உன் கொஞ்சு மொழி மைந்தர். உயிரோடு ஆறு பேரை விழுங்கிய உதிரவாய்க் "காளி"க்கு வயிற்றிலே கொஞ்சம் இடம் காலி. அதற்காகக் கல்லக்குடியிலே சந்தனம் ஜோசப்பின் இடது கை முழுவதையும் முறித்துப் போட்டுக் கொண்டது.
அப்போதும் கொஞ்சம் இடம் காலி. தூத்துக்குடி ஆசிரியர் குருசாமியின் இடது காலை, வாழைப் பழம் போல் எடுத்து வயிற்றுக்குள் போட்டுக் கொண்டது. ரத்த விருந்து முடியவில்லை. பதினாறு வயது இளைஞன் ராமச்சந்திரன் பச்சைத் தொடைக் கறி- வாலிபன் சண்முகத்தின் கணுக்கால் சதை- ரங்கநாதன் குடல், கறி கோம்பன், கிருஷ்ணன், செல்லையா, சேர்மன், வேணு, லிங்கம், சுடலை, முனுசாமி, ரத்தினம், ஈசுவரன், சதாசிவம், அண்ணாமலை, முனுசாமி, நாராயணன், செபாஸ்டியன் ஆகியோரிடம் ஆளுக்குக் கொஞ்சம் எலும்பு, ரத்தம், சதை இவ்வளவும் சாப்பிட்டான பிறகு தான் ஆறு பேரை அகிம்சாப் "பிடாரி" விட்டாள்.
குதித்தாள். சித்தம் கலங்கிச் சிரித்தாள். ஆறு உயிரோடு விட்டாளா? அநேகர் குருதியோ() நின்றாளா? அகப்பட்ட போதே இரையைத் தேடிக் கொள்வோமென்று ஐயாயிரம் தோழரை அகிம்சாக் குகைக்குள் அள்ளிப் போட்டாள். ஒரே நாள் - ஜூலை -15. ஆறு உயிர். அநேகர் சித்திரவதை. ஐயாயிரம் பேர் சிறைகளில்......! தான் படைக்கும் அந்தி வானத்தையும் வெற்றி கொள்ளும் சிவப்பு நிறத்தைப் பூமியிலே கண்ட சூரியன் வெட்கித் தலைகுனிந்து மறைந்தான்.
போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள்ளே- கல்லக்குடியில் நாங்கள் கிடந்தோம்- இந்தச் ச்சாகச் செய்திகளைக் காதில் வாங்கியபடி! இரவு 12 மணிக்கு மேலிருக்கும். அரை மசால் வடைத்துண்டும் கால் கோப்பைத் தேநீரும் கொண்டு வந்து தந்தனர் மணியும், முத்துவும், மற்ற நண்பர்களும்! அதுதான் எங்களுக்குச் சரியான காலத்தில் கிடைத்த அருமையான இரவு உணவு. ஒருவர் காலை ஒருவருக்குத் தலையணையாக அமைத்துக் கொண்டு முப்பத்தாறு பேரும் தூங்கினோம்.
கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. துப்பாக்கி சகிதம் ரிசர்வ் போலீஸ் காவல் நின்று கொண்டிருந்தது. எங்களுடனேயே இருந்த சப் இன்ஸ்பெக்டர் அந்த நடு நிசியில் திடீரென எங்களை எண்ணிட ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்! முப்பத்தாறு பேரும் சரியாக இருந்தோம். வழக்கம்போல் இரண்டு மூன்று முறை எண்ணிய் பிறகு அவருடைய கணக்கு முடிவு பெற்றது. புயலுக்குப் பின்னுள்ள அமைதியோடு மறுநாள் பொழுது புலர்ந்தது! கவிஞர் கண்ணதாசன் முதலிய நண்பர்கள் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி கிடைத்தது.
திருச்சி கலைமகள் பிரஸ் தோழர் ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்: அவர் என்ன ஆனார் என்று பார்க்கச் சென்ற தோழர் ஐ. எம். ஷரீபும் காவலில் வைக்கப்பட்டார். தூத்துக்குடி செயல்மணிகளும்- எதையும் தாங்கும் இதயங்கொண்ட சிங்க ஏறுகளும், கண்ணியம்- கட்டுப்பாடு- கடமையுணர்ச்சிகளில் கடுகளவும் வழுவாத கழகத்தின் கண்மணிகளுமான தோழர்கள் எம். எஸ். சிவசாமி, கே. வி. கே. சாமி முதலிய எண்பதுக்கு மேற்பட்ட தோழர்களும் சதி வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட வேண்டும் என்ற திட்டத்தோடு கைது செய்யப்பட்டார்கள்.
சென்னையிலே மறியல் நடத்துவதற்காகச் சென்ற ஐம்பதுக்கு மேற்பட்ட தோழர்களும், அந்த அணிவகுப்புக்குத் தலைமையேற்று நடத்திய திருமதி சத்தியவாணிமுத்து அம்மையாரும், காஞ்சி ராசகோபாலும் ஜூலை 14ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்கள். 15ஆம் தேதி மறியல் போராட்டத்திற்குத் தலைமை வகித்த வேதாசலம் முதலிய ஐம்பதுக்கு மேற்பட்ட தோழர்களும் கைது செய்யப்பட்டார்கள் சென்னையிலே! 16ஆம் நாள்- ஆயிரம் இடர் அடுக்கிவரினும் அசையாத மன உறுதி படைத்தவரும்- வடாற்காடு மாவட்டத்தில் கட்சிக்கோர் படை போன்றவருமான போளூர் சுப்பிரமணியம் தலைமையில் ஐம்பதுக்கு மேற்பட்ட நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிறை நிரம்புகிறது- நிரம்பி வழிகிறது என்ற செய்திகள் செவிநிரம்ப- சிந்தையிலே துடிப்பு நிரம்ப-நாங்கள் காவலுக்கிடையே அமர்ந்திருந்தோம். 16ஆம் தேதி - காலை 10 மணிக்கு டி. எஸ்.பி. வந்தார். எங்களை யெல்லாம் உடனே அரியலூருக்கு அனுப்பும்படி சொல்லிவிட்டுப் போனார். பிற்பகல் 12 மணிக்குப் போலீசார் செலவில் சாப்பாடு போடப்பட்டது. நாங்கள் கடைசியாக இலை போட்டுச் சாப்பிட்ட சாப்பாடு அது தான்! சாப்பாடு முடிந்தது-போலீஸ் வண்டி வந்து நின்றது.
எல்லோரும் அதில் ஏறி அமர்ந்தோம் வண்டி அரியலூர் நோக்கிப் புறப்பட்டது. ஆம். எங்களுடைய சிறை யாத்திரை துவங்கிவிட்டது.
