உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/பரப்பிரம்மம்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

பரப்பிரம்மம் · 83 / 391

பரப்பிரம்மம் நா ன் எழுதிய 'பராசக்தி' படம் தமிழ் நாட்டில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி நூறு நாட்களுக்கு மேல் ஓடிக் கொண்டிருந்த போது 'தினமணி கதிர்' இதழில் 'பராசக்தி' படத்தின் கருத்துக்களையும், வசனங்களையும் - கடுமையாகத் தாக்கி மிக நீண்டதொரு விமரிசனம் எழுதப்பட்டிருந்தது. பத்துப் பக்கத்திற்குக் குறையாமல் எழுதப்பட்ட அந்த விமரிசனத்தில் வரிக்கு வரி நான் தாக்கப் பட்டிருந்தேன். என்னையும் 'பராசக்தி' படத்தையும் கண்டித்து.

காங்கிரஸ் கட்சி கண்டனக் கூட்டங்கள் பலவற்றை நடத்தியது. கண்டன விமரிசனம் வந்திருந்த 'தினமணி கதி'ரின் அட்டையில் பராசக்தியைக் கிண்டல் செய்வது போல் ஒரு கேலிச் சித்திரமும் வரையப்பட்டிருந்தது. ஆடை குலைந்த நிலையில் ஒரு பெண்ணின் ஓவியம் வரைந்த விளம்பரம்! அந்த விளம்பரத்தின் தலைப்பு 'பரப்பிரம்மம்' என்பதாகும். அதன் கீழே "கதை-வசவு தயாநிதி என்றும் எழுதப்பட்டிருந்தது. இதுதான் அந்தப் பத்திரிகையின் அட்டைப் படக் கேலிச் சித்திரமாகும்.

(இதே நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த 'தினமணி கதிர்' தான். ஆனால் ஆசிரியர் குழு முழுவதும் வேறு!) அதைப் பார்த்து நான் ஆத்திரப்படவில்லை. என்னைக் கிண்டல் செய்து அவர்கள் போட்டிருந்த அதே 'பரப்பிரம்மம்' என்ற தலைப்பை வைத்து ஒரு நாடகம் எழுதினேன். முழுக்க முழுக்கக் கட்சிப் பிரசாரம் நிறைந்த இந்த நாடகத்தைப் பல ஊர்களில் நடித்துக் காட்டினோம். சென்னையில் 'பரப்பிரம்மம்' நாடகத்தினை முடித்து விட்டு ஜூலை 12-ஆம் தேதி காலை சென்னையில் தாயிடமும், துணைவியிடமும், குழந்தைகளிடமும் விடைபெற்றுக் கல்லக்குடிக் களம் செல்லத் திருச்சிக்குப் புறப்பட்டேன்.

ஜூலை 13-ஆம் நாள் நான் எங்கிருந்தேன் என்று போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை. கல்லக்குடியிலேதான் போலீசாரிடம் சிக்க வேண்டும் என்பதற்காக 13-ஆம் தேதி முழுவதும் யார் கண்ணிலும் படாமல் இருந்துவிட்டு, 14-ஆம் நாள் காலையில் திருவாரூர் சென்று, அங்கிருந்து புறப்பட்டு, அன்றிரவு லால்குடியில் நடை பெறும் பொதுக் கூட்டத்திற்குச் சென்றேன். செல்லும் வழியிலேயே பொதுச் செயலாளர் அண்ணா அவர்களும், நாவலர் நெடுஞ்செழியன், என்.

வி. நடராசன் முதலியோரும் செயற் குழுக் கூட்டத்தில் பேரலீசாரால் கைது செய்யப்பட்டார்கள் என்ற செய்தி எனக்குக் கிடைத்தது. ஜூலை 15: போர் நாள் பற்றிய கடைசிக் கூட்டம் ஜூலை 14, இரவு லால்குடியில் நடைபெற்றது. அதற்குச் சில மாதங்களுக்கு முன்பு அதே லால்குடியில் நடைபெற்ற மாநாட்டில்தான் டால்மியாபுரத்தைக் கல்லக்குடி என்று மாற்ற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேறியது. அந்த லால்குடிதான் கல்லக்குடிக் களத்திலே பிணமாகிப் போன நடராசனைப் பெற்றெடுத்த பெருமை படைத்த பூமியாகும்.

பொதுக் கூட்டத்திற்கு திரு. பழனியாண்டி எம். எல். ஏ. தலைமை தாங்கினார். அவர் டால்மியா தொழிலாளர் சங்கத்தின் தலைவர். கல்லக்குடிப் போராட்டம் எவ்வளவு அவசியமானது என்பதை அவர் விளக்கினார். கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே கவிஞர் கண்ணதாசனும், காரைக்குடி இராம. சுப்பையாவும் மேடைக்கு வந்தார்கள். இருவரும் என்னுடன் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருப்பதாகக் கூட்டத்தில் முழங்கினார்கள். கூட்டம் முடிந்து இரவு இரண்டு மணிக்கு, மறு நாள் போராட்டத்திற்கான தொண்டர்களின் அணிவகுப்பைப் பார்வையிட்டோம்.

போராட்டத்தில் எப்படியெப்படி அமைதியோடும், கண்ணியத்தோடும், கட்டுப்பாட்டோடும் நடந்து கொள்ள வேண்டுமென்று தொண்டர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. ஜூலை 15! விடிவெள்ளி முளைத்தது! சேவல் "கொக்கரக்கோ" எனக் கூவிற்று! அது எல்லோரும் 'புறப்படுங்கோ!'

என்பது போல் கூவிற்று. செங்கதிரோன் எழுந்தான். வெங்குருதி தனிற் கமழ்ந்து வீரம் செய்கின்ற மூச்சோடு தமிழகமே எழுந்தது. கடலின் கொந்தளிப்பு உள்ளத்திலே! காலைக் கதிரவனின் நிறம் கண்களிலே! சேவலின் மிடுக்கு நடையிலே! தமிழர் பட்டாளம் எழுந்தது; எவரும் எமக்கு இணையில்லை எனக் கூறி எழுந்தது. கண்ணீரும் கனலும் சேர்ந்து கிளம்பும் விழியுடை வீரர்கள் எழுந்தனர். பறந்தனர் படை முகாம்களுக்கு. வீரர்களின் அடிச்சுவடுகளை வீணர்கள் அழித்து விட்டிருக்கலாம்!

ஆனால் காலம் அவைகளைக் காப்பாற்றித்தான் வைத்திருக்கிறது. அதையும் ஒழித்துக் கட்ட முயலும் தமிழ்நாட்டு ஓதியமிலார்கள் ஒழிந்திடுக என உயர்ந்திட்டது போராட்டக்கொடி. கறுப்பும் சிவப்பும் கலந்த கொடி, தமிழ் நாட்டுத் தெருவெல்லாம் நிறைந்தது. கல்லக்குடியிலே-டால்மியா தொழிற்சாலையிலே புகை கிளம்பிற்று புரட்சி எரிமலையிலும் புகை எழும்பிற்று. சூலை 15: அன்றைய ஆட்சிக்காரரின் நெஞ்சிலே எஞ்சியிருந்த இரக்கமும் உலர்ந்த நாள்: ஆனால் ஆணவத்தின் தலையிலே இடி விழுந்த நாள்.