நெஞ்சுக்கு நீதி
முரசு அதிர்ந்தது · 82 / 391
முரசு அதிர்ந்தது பதினொரு வயதிற்கு உட்பட்டவர்கள் பள்ளியில் மூன்று மணி நேரம் படித்தது போக, மீதி நேரத்தில் வீட்டிற்குச் சென்று தந்தையின் தொழிலைப் பயில வேண்டும், பள்ளியிலேயே தொழில் கல்வி போதிக்கப்படுகிறது என்று சொன்னாலும், அதிலே அர்த்தம் இருக்கிறது. தொழில் கல்விகூட மேல் நாடுகளில் எப்படிப் போதிக்கப்படுகிறது? சிறுவர்களுக்கு எந்த வேலையின் மீது ஆசை விழுகிறது என்பதை ஆராய்ந்தறிந்து, அந்தத் துறையிலேயே அவர்களைப் பழக்கிடும் தொழிற் கல்வி முறைதான் சிறந்தது என்று கொள்ளப்பட்டு, அவ்வழியிலே மேல்நாடுகள் சென்று மேன்மையுறுகின்றன.
ஆளும் வர்க்கம்- பாதுகாக்கும் வர்க்கம்- தொழில் வாணிபம் முதலிய வர்க்கம்- என அரசியலிலே மூன்று முக்கியமான பிரிவுகளைப் பிரித்துக் காட்டிப் பிறப்பின் காரணமாக இல்லாமல், சிறப்பின் காரணமாக அந்தந்த வர்க்கத்தில் இடம் பெற எந்த மனிதனுக்கும் உரிமையுண்டு என்பதையும் எடுத்துக் காட்டி, அத்தகைய மூன்று பிரிவிற்கும் தேவையான கல்வியை அவர்களுக்கு. இளமையில் போதிக்க வேண்டு மென்றும்-யார் எந்தப் பிரிவுக் கல்வியை விரும்புகிறார்கள் என்று பார்த்து அந்தத் துறைக் கல்வியை அவர்களுக்கு வழங்க வேண்டுமென்றும் உலகக் கல்வித் திட்டத்திற்குக் கைகாட்டியாக இருந்த பேரறிஞன் பிளாட்டோ எழுதி வைத்திருக்கிறான்.
அதற்கு மாறாகக் காங்கிரஸ் அரசு, ராஜாஜியின் தலைமையில் கொண்டு வந்த புதிய கல்வித் திட்டத்தினால், பூத்து வரும் புதிய சமுதாயம் பொட்டல் காடாகி விடும் என்று நாடு எச்சரித்தது. நல்லோர் எச்சரித்தனர். திட்டம் தந்தவரின் கட்சிக்காரர்களே கூட எதிர்த்தனர் எதிர்ப்பை அலட்சியப்படுத்தியதன் காரணமாக ஜூன் திங்கள் 21-ஆம் நாள், நாடு முழுவதும் புதிய கல்வித் திட்டத்திற்கெதிராகக் கழகத்தின் சார்பில் கண்டனக் குரல் எழுப்பப் பட்டது.
கண்டனக் கூட்டங்கள் முடிவுற்ற பிறகு, கல்லக்குடிப் போராட்டத்திற்கும், புதிய கல்வித் திட்ட எதிர்ப்புப் போராட்டத்திற்கும், தமிழ்த் தலைவர்களை 'நான்சென்ஸ்' என்று நேரு கூறியதைக் கண்டிப்பதற்கான போராட்டத்திற்கும் முரசறைவதற்காக ஜூன் 4, 5 ஆகிய இரு நாட்களில் சிதம்பரத்தில் தி.மு.க.
மாநாடு கூடிற்று. புதுக் கல்வித் திட்ட எதிர்ப்புப் போராட்டத்திற்குத் தோழர் ஈ. வி. கே. சம்பத் தலைவரானார். கல்லக்குடிப் போராட்டத் தலைவனாகிய நானும் அவரும் மாநாட்டில் பேசிய பிறகு மாநாட்டில் பேரறிஞர் அண்ணா முழங்கினார். "ஒரு தம்பியைக் கல்வித் திட்டப் போருக்கு அனுப்புகிறேன். மற்றொரு தம்பியைக் கல்லக்குடித் தளத்திற்கு அனுப்புகிறேன். களம் இரண்டோடு முடிவதில்லை. நண்பர்களே! ஜூலை 15-ஆம் நாள் கல்லக்குடிக் களத்திலே கருணாநிதி நிற்கும் போது அந்தப் போராட்டத்தின் அறிகுறியாகவும், தென்னாட்டுத் தலைவர்களை 'நான்சென்ஸ்' என்று இகழ்ந்து பேசிய நேருவைக் கண்டிப்பதற்கு அறிகுறியாகவும், தமிழகமெங்கும் உள்ள தமிழர்கள் புகை வண்டிகளை நிறுத்தப் போகிறார்கள்" என்று அண்ணா சொன்னதுதான் தாமதம், மாநாட்டுப் பந்தலாகவா இருந்தது அது?
வேலோடு வேல் உராய்ந்ததோ, வாளோடு வாள் மோதியதோ என்னும் விதத்தில் கையொலியும் அதை மிஞ்சும் நாவொலியும் எழுந்தன. பேனாவை ஒரு போர் வாளாக்கிய அந்தத் தமிழ்த் தளபதியின் கரம் உயர்ந்தது; நாவோ வீர முரசம் கொட்டியது. கனல் கிளம்பியது அவர் கண்களில், "போர் முனைக்குச் செல்க!"
என்றார் பொதுச் செயலாளர் அண்ணா. எடுத்துச் செல்ல வேண்டிய கருவிகளையும் குறிப்பிட்டார். "கடமையெனும் வாள்-கண்ணியமெனும் கேடயம்-கட்டுப்பாடெனும் கவசம்-மூன்றும் எடுத்துச் செல்க!" என்றார், மூன்றெழுத்துச் செல்வர் அண்ணா. முரசு அதிர்ந்தது! "கல்லக்குடி எனும் பெயரிருக்க வேண்டிய இடத்தில் டால்மியாபுரம் எனும் பெயரா? தமிழுக்குச் செய்யப்படும் துரோகம்!"
என்று முரசு அதிர்ந்தது. "முத்தமிழ்ப் படைகெட-முன்னேற்றம் தடைபட-இனி விடோம் விடோம்!" என முரசு அதிர்ந்தது. "எதிரிகள் கோடி இட்டழைப்பினும்-தொடோம்! தொடோம்!" என முரசு அதிர்ந்தது. "ரத்தக் கடல்கள்-கொத்தும் இடர்கள்-எதையும் தாங்கும் இதயம் கொண்டோர்-எழுந்தார்!"
என முரசு அதிர்ந்தது. ஜூலை 15-ஆம் தேதி மும்முனைப் போராட்டத்திற்காக நாள் குறிப்பிடப்பட்டுவிட்டது. அதற்கிடையிலே சென்னையில் ஜூலை 11, 12 தேதிகளில் மாவட்ட மாநாடு நடைபெற்றது. 11 - ஆம் தேதி இரவு மாநாட்டில் நான் நடித்த 'பரப்பிரம்மம்' நாடகம்; 'பரப்பிரம்மம்' என்ற பெயர் புதிராகத் தோன்றுகிறதல்லவா?
