நெஞ்சுக்கு நீதி
திருச்சி மாவட்ட எழுச்சி · 81 / 391
திருச்சி மாவட்ட எழுச்சி ஜூ ன் 15-ஆம் நாள் கழகத்தின் நாள் ஏடு 'நம் நாடு' திரு பொன்னம்பலனார் அவர்கள் நிர்வாகத்தின் கீழ் துவங்கப்பட்டது. அந்நாள் முதலேதான் "டால்மியாபுரம்" பெயர் அகற்றும் போராட்ட விளக்கக் கூட்டங்கள் நடைபெறத் துவங்கின. முதல் நாள் முரசம், மணல்மேட்டில் அதிர்ந்தது. மணல்மேடு, அழகான சிறு கிராமம். கண்கவரும் தோப்புகள். அங்கே பண்பாடும் சிறுவர்கள். அரசியல் கொந்தளிப்புகளைத் தொட்டுப்பார்க்கும் வாய்ப்புள்ளவாறு சேலம்.
திருச்சி சாலையோரத்திலே அந்தச் சிற்றூர் அமைந்திருந்தது. மாலை ஆறு மணிக்கெல்லாம் நான், மணி, முத்து, சத்தி எல்லோரும் அந்த ஊருக்குச் சென்று விட்டோம். அந்தச் சிறிய ஊராம் மணல்மேடு சரிந்து விடுமோ என்கிற அளவுக்குப் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து குழுமினர்; கண்டனர்-கேட்டனர்-பயன் பெற்றனர். பலமும் தந்தனர். இரவு உணவை முடித்து விட்டு, முசிறி வழியே வந்து, அங்கு தோழர்களைச் சந்தித்துப் பேசி விட்டுச் சரியாக 1-30 மணிக்குத் திருச்சி மீண்டோம்.
அடுத்த நாள் மணப்பாறையிலே கூட்டம். அதற்காகப் புறப்பட்டுக் கொண்டிருந்தோம். அப்போது மாவட்டச் செயலாளர் அன்பில் தர்மலிங்கம் வந்து சேர்ந்தார். அன்பில் என்பது திருச்சி மாவட்டத்திலே உள்ள சிற்றூர். மைனர் பஞ்சாயத்து. அங்கே ஓர் உயர் நிலைப் பள்ளியும் உண்டு. அன்பில் என்று சொன்னால் நமது இயக்கத்தினருக்கு அந்த ஊரின் பெயர் ஞாபகம் வராது. தர்மலிங்கத்தின் பெயர்தான் எதிர் வந்து நிற்கும். அன்பில் வந்தார்-போனார்-என்றே எல்லோரும் பேசுவார்கள்.
வந்தார்-போனார்-என்கிறேனே, அதிலே கூட அர்த்தம் இருக்கிறது. ஓர் இடத்தில் சில மணி நேரங்கள் அவர் இருப்பது கஷ்டமான காரியம். அவ்வளவு வேலை அவருக்கு. நான் அவரைத் தேடிக்கொண்டிருப்பேன்; என்னிடத்தில் வந்து, ":அவரைக் கண்டீர்களா?" என்று கேட்பார்கள். இயக்கக் காரியங்கள் மட்டுமல்ல; மற்றவர்களுக்கும் நலம் பயக்கும் ஒத்தாசைகள் புரிய வேண்டுமென்பதிலும், அதற்காக அலைவதிலும், முயற்சி எடுப்பதிலும் அலாதியான சுவை அவருக்கு.
யாராவது தேர்தலிலே ஜெயிக்க வேண்டுமா? அங்கே அன்பில் இருப்பார். ஊதியமில்லாமல், கொள்கைக்கு முரண் ஏற்படாமல் யாரையும் எளிதில் நம்பிவிடுவார். அதன் காரணமாக நம்பிக்கை மோசத்திற்கு ஆளாகிப் பிறகு தன்னையே நொந்து கொள்கிற காட்சி நமக்கே பரிதாபமாயிருக்கும். லால்குடி மாநாட்டிலே ஏறத்தாழ ஏழாயிரம் ரூபாய் மிச்சப்படுத்தி அந்த மாநாடு ஓர் எழுச்சி ஏடு என்ற மதிப்புரையை மாவட்டத்திற்குத் தந்த பெருமை தோழர் அன்பிலைத் தலைவராகப் பெற்ற வரவேற்புக் குழுவிற்குத்தான் சாரும்.
அவர், நான், மணி, சத்தி, முத்து ஆகியோர் மணப்பாறைக் கூட்டத்திற்குப் புறப்பட்டோம். எங்களை இளமுருகனாரும் பொற்செல்வி அம்மையாரும் கழகத்தோழர்களும் வரவேற்றனர். பொற்செல்வியும் இளமுருகும் காதற் கலப்பு மணம் புரிந்தவர்கள் என்பதும், "காதலிலே, கவிதையிலே களம் போகும் பேச்சு கணவனுக்கும் மனைவிக்கும் தாயகமே மூச்சு" என்ற கவிதைக்கு இலக்கணமானவர்கள் என்பதும் நாடறிந்த ஒன்று. ஊரிலே பல இடங்களில் கொடியேற்று விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஒரு மாடி வீட்டிலே-மாடியின் உச்சியிலே-கழகக் கொடியை ஏற்றி வைக்க என்னை அழைத்தார்கள். கொஞ்சம் ஆச்சரியத்தோடு நான் தோழர் இளமுருகைப் பார்த்தேன். அவர் சொன்னார், "இந்த வீட்டுக்காரர் புதிதாகக் கட்சிக்கு வந்துள்ள வாலிபர். பிரபல காங்கிரஸ்வாதியான பொன்னம்பலக் கவுண்டர் இவருக்குச் சித்தப்பா; லால்குடி மாநாட்டிற்குப் பிறகுதான் இவருக்குக் கட்சிப் பற்றே ஆரம்பம்" என்றெல்லாம். பிறகு கொடியேற்று விழாக்கள், ஊர்வலம், ஒரு முஸ்லிம் நண்பர் தலைமையிலே மாபெரும் பொதுக்கூட்டம் எல்லாம் இனிது நடைபெற்றன.
பின்னர் அந்தக் கட்சிக்குப் புதியவர் வீட்டிலே சாப்பாடு. கட்சிக்குப் புதியவர் எங்களோடு பேசவே நாணமடைந்தார். நானும் நண்பர் சத்தியும் அவரைப் பார்த்த போது ஒருவருக்கொருவர் ஆச்சரியப்பட்டுக் கொண்டோம். அதை விட ஒரு பெரிய ஆச்சரியத்தை அவர் எங்களுக்கு உண்டாக்கிவிட்டார்! லால்குடி மாநாட்டுக்குப் பிறகு கட்சிக்கு வந்த அந்த இளந்தோழர் கல்லக்குடிப் போராட்டத்துக்கு முதல் நாள் இரவு இரண்டரை மணிக்குத் தொண்டர் முகாமில் தன்னையும் படை வரிசையில், அதுவும் முதல் படையில், சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று துடியாய்த் துடித்தார்.
வயதான தாய், இளம் மனைவி, தன்னைத் தவிர வேறு யாரும் துணையில்லாத வீடு எதைப் பற்றியும் கவலைப்படாமல், "எழுதிக் கொள்ளுங்கள் என் பெயரையும் அணிவகுப்பில்" எனக் கர்ஜித்தார். கட்சிக்குப் புதிய அந்த மனிதர் கறுத்த மேனியும், சிரித்த முகமும் படைத்தவர். கழகத்தின் உயிரான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மூன்றையும் பெற்றவர்; படையில் இடம் பெற்றார். சிறையில் ஆறு மாதம் பரிசும் பெற்றார். எங்கள் ஐவரில் ஒருவர் கஸ்தூரி ராஜ் என்னும் கட்சிக்குப் புதிய காளை.
அவருடைய விருந்துபசாரத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு இரவு திருச்சிக்கு இரண்டு மணிக்கு வந்தோம். தூக்கத்தையும் வருந்தி அழைத்தோம். மூன்றாம் நாள் அன்பிலில் ஒரு நாடகம் நடைபெற்றது. அதற்குத் தலைமையேற்றதோடு, கல்லக்குடி போர் பற்றிய விளக்கவுரையாற்றிப் போராட்டத்திற்கு ஆதரவு தருகிறோம் என்று வாக்களித்த பொதுமக்களைப் பாராட்டி, இரவே திருச்சி திரும்பினோம். மறுநாள், ஜூன் மாதம் 18-ம் நாள் குளித்தலையிலே கூட்டம்.
கூட்டம் மாத்திரமல்ல; டால்மியாபுரம் போராட்டச் செயற்குழுவும் அங்கு கூடுவதாயிருந்தது. அந்தச் செயற்குழுவின் முடிவைத் திருச்சி மாவட்டம் மட்டுமல்ல; தமிழகமே எதிர்பார்த்தபடி இருந்தது. அதிலே தான் போராட்டத் தேதி குறிக்கப்படும் என்ற செய்தி பரவிற்று. மாலை நான்கு மணிக்குச் செயற்குழு உறுப்பினர்கள், நான், அன்பில், மணி, இளமுருகு, தம்புசாமி, மாணிக்கம், குளித்தலை ராசா, ஆகிய ஏழு பேர் கூடி இரண்டு மணி நேரத்திற்கு மேலாகப் போராட்டச் சூழ்நிலைகளைப் பற்றி யோசித்தோம்.
வெளியிலே ஏராளமான தோழர்கள் குழுவின் முடிவை ஆவலோடு எதிர்பார்த்த வண்ணமிருந்தனர். பொதுக் கூட்டத்தில் வெள்ளமெனத் திரண்டிருந்த பல்லாயிரவரும் குழுவின் முடிவைச் சொல்ல எப்போது வெளியே வருவோம் என்று வழிமேல் விழி வைத்துக் காத்துக் கிடந்தனர். நம் கோரிக்கை கவனிக்கப்படா விட்டால் ஜூலை மாதம் 15-ஆம் நாள் போராட்டத்தைத் துவங்குவதாகவும், அதற்குப் பொதுச் செயலாளர் அண்ணாவின் அனுமதியைக் கோருவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
செயற்குழுவில் முடிவான செய்தியைச் சொன்னதும் கூடியிருந்தோர் ஆடியதும், பாடியதும். அடடா! நேரில்தான் காண வேண்டும்! வார்த்தையேது வர்ணிக்க "போர்" என்றேன்; "புறப்பட்டோம்" என்றார்கள் விழியால். "ஜூலை 15" என்றேன்; "அவ்வளவு நாளா!" என்றார்கள் பெருமூச்சால். கழகப் பெரும்படையின் முதற்களம் அமையும் வாய்ப்பைக் கல்லக்குடி பெற்றது என்றலும், நாள் குறித்த இடம் என்ற பெருமையைக் குளித்தலை பெற்று விட்டது. குளித்தலை இன்பம் கொஞ்சும் பேரூர்.
சிந்து பாடும் காவிரியின் ஓரத்திலே செழிப்பைச் சுமக்க முடியாமல், சேரன் ஏற்றிய கல்லைத் தூக்க முடியாமல் தலைகுனிந்த கனக விசயர்களைப் போல வளைந்து நிற்கும் வாழை மரச் சோலைகள், வளம் நிறைந்த பூமிகள், வாட்கண்ணும் வற்றாத வீரமும் படைத்த மறவர்கள் உலவும் வீதிகள். குளிரை இன்பம் என்று கூறுவர். குளிர் தழைத்த இடம் தான் குளிர்த் தழையாகி குளித்தலையாகி விட்டதோ என்னவோ என்று ஐயுறும் வகையில் அமைந்த நல்லூர்.
தமிழகத்தில் எத்தனையோ குளித்தலைகள் இருக்கின்றன. இயக்கத்தின் வளர்ச்சிக்காகத் தக்கது ஏதாவது செய்ய வேண்டும் என்று எப்போதும், எந்நேரமும் எண்ணிடும் சீலங் கெரண்டவர் தோழர் முத்துக்கிருஷ்ணன். இவர் மட்டுமின்றி எண்ணிறந்த தோழர்களை வீரர்களாகப் பெற்றிருக்கிறது குளித்தலை. குளித்தலை போன்ற பல ஊர்கள் இருக்கின்றன. உழைத்திடும் உத்தமர்களும், உரம் வாய்ந்த உள்ளங்கொண்டோரும் நிறைந்து கிடக்கும் பட்டி, தொட்டிகள் பல உண்டு.
அவைகள் எல்லாம் நமது பாசறை ஆக வேண்டும். சில பாசறைகளில் போர்க்கருவி அதிகமிருக்கும். அதைக் கையாள வீரர்கள் குறைவாயிருப்பார்கள். வீரர்கள் அதிகமாகவும், போர் கருவிகள் குறைவாகவும் பாசறைகளும் உண்டு. கருவிகளை அதிகமாக்கவும், கருவிக்கேற்றபடி வீரர்கள் தொகையைப் பெருக்கவும், அந்தந்த ஊர் முன்னணி வீரர்கள் முன் வரவேண்டும். போர்க் கருவிகள் என்று கழக உறுப்பினர்களையும், வீரர்கள் என்று செயற்குழு உறுப்பினர்களையும்தான் குறிப்பிடுகிறேன்.
அச்சத்தால் அல்ல; அரசியலில் கடைப்பிடிக்க வேண்டிய கண்ணியத்தால். வெஞ்சமர் வராத நேரத்திலும் வீரர்களுக்குப் பாசறைகளில் வேலையுண்டு. வேலின் கூர்மையை மழுங்காமல் பார்ப்பதும், வாளின் வலிமையைச் சோதித்துப் பார்ப்பதும், பயிற்சி பெறுவதும், படையைப் பெருக்குவதும் - இன்னோரன்ன பல கடமைகளில் கழகப் பாசறைகளும் ஈடுபட வேண்டும். அறப்போர்களில் கலந்து கொள்ள மட்டும் வீரர்களின் பட்டியல் பெருக வேண்டுமென்பதில்லை.
ஆக்க வேலைகள் பல இருக்கின்றன. அவர்களுக்குக் கழகத்தின் பெயரால் நடத்தப்படும் அல்லது கழகத்தின் தலைமையிலிருந்து அறிவிக்கப்படும் ஆக்க வேலைகளில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டுமென்பது அல்ல. நகரத்து மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளில் கூடப் பொது நலத் தொண்டு புரியும் பண்பு, கழக வீரர்களுக்கு ஏற்பட வேண்டும். அத்தகைய படைகள் பட்டினங்களிலும், குக்கிராமங்களிலும் பெருகிட வேண்டும். கழகக் கொள்கைகட்குக் குந்தகம் விளையாத முறையிலே கழக வீரர்களிடத்திலும், கழகத்திடத்திலும், மக்கட்கு அன்பு வளர்கின்ற அளவிலே, அந்தத் தொண்டு செய்யும் நன்மை தொடர்ந்திட வேண்டும்.
சுற்றுப் பயணத்தின் பொழுது தோழர்கள் உடனிருந்தால் அலுப்பே தெரிவதில்லை. திடீரென வெடிக்கும் வேடிக்கை நிகழ்ச்சிகள் அதன் விளைவாக விழும் கிண்டல்கள், கேலிகள் வயிறு வலிக்கப் பேசவும் பயன்பட்டுப் பயணம் உற்சாகம் குலையாமல் அமைந்திட வழியும் ஏற்படும். ஒருமுறை வடஆர்க்காடு மாவட்டத்தில் என் சுற்றுப் பயணம் நடைபெற்றது. மாவட்டச் சார்பில் அமைக்கப்பட்ட வாடகைக் கார் ஒன்றில் நான், கவிஞர் கண்ணதாசன், முல்லை சத்தி, மற்றும் சிலர் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்.
எங்களுக்காக அமர்த்தப்பட்ட கார் மிகவும் பழைமையானது. 'டடட' என்ற ஒலியுடன் புறப்பட்டதேயானால், மாதம் போம் காத வழி! அதுவும் 'டயர்' பொத்துக் கொள்ளாமல், எண்ணெய் அடைத்துக் கொள்ளாமல், எஞ்சினுக்கு வலிப்பு நோய் வராமல் இருந்தால் தான்! "இந்தக் கார் எத்தனை ஹார்ஸ் பவர்?"
என்று கேட்டார் கண்ணதாசன்; "ஒரே 'ஹார்ஸ் பவர்' தான்; அதுவும் தெனாலிராமன் ஹார்ஸ் பவர்!" என்றேன் நான். வயதான காலத்திலும் இப்படித் துன்பப்படுத்துகிறார்களே என்று பெருமூச்சு விட்டபடி, புகைச்சலைக் கக்கிக் கொண்டு, கார் போய்க் கொண்டிருந்தது. வழியிலே ஒரு திருப்பம். எதிரெதிரே வரும் வண்டிகள் தவறாமல் ஒலி முழங்கினால்தான் பத்திரமாக அந்தத் திருப்பத்தைக் கடந்து செல்ல முடியும். எதிரே ஒரு பஸ் வந்தது. எங்கள் காரும் சென்றது.
இரண்டும் பெரிய விபத்துக்குள்ளாகி நொறுங்கிப் போய்விட வேண்டிய பெரிய ஆபத்திலிருந்து ஒரு நூல் இழையில் நாங்கள் தப்பித்துக் கொண்டோம். காரணம், எதிரே வந்த பஸ் டிரைவர் 'ஹாரன்' செய்யாமல் வந்து விட்டார். அதனால் வந்த பயங்கரம். அந்த பஸ்ஸில் ஒரு சப்-இன்ஸ்பெக்டரும் சில போலீசாரும் இருந்தார்கள். எங்கள் டிரைவர் கோபமாகக் கீழே இறங்கினார். பஸ் டிரைவரைப் பார்த்தார். "ஏனய்யா ஹாரன் பண்ணாம வர்றே? நான் வேறே பிரேக் இல்லாம வர்றேன்!"
என்று கத்தினார் ஆத்திரமாக! பஸ் போய் விட்டது. ஆனால் எங்களுக்குச் சிரிப்பால் ஏற்பட்ட வயிற்றுவலி போகவில்லை. கல்லக்குடிப் போராட்டத்திற்காக நடைபெற்ற சுற்றுப் பயணத்திலும் இது போன்ற பல்வேறு நகைச்சுவை நிகழ்ச்சிகள் எங்கள் களைப்பைப் போக்கிட உதவின. ஜூன் 21-ஆம் நாள், தமிழகம் எங்கும் ராஜாஜி அவர்கள் கொண்டு வந்த கல்வித் திட்டத்தை எதிர்த்துக் கழகத்தின் சார்பில் கண்டன நாள் கூட்டங்கள் நடத்துமாறு அறிவிக்கப்பட்டது.
மூன்று மணி நேரம் சிறுவர்கள் படித்தால் போதும். மீதி நேரத்தில் அவரவர்களின் தகப்பனார் தொழில்களைக் கற்றுக் கொண்டால் போதுமானது என்பதே அந்தக் கல்வித் திட்டமாகும். சிறுவர்கள் தொழில் துறையில் முன்னேற வேண்டும் என்பதை யாரும் மறுக்கவில்லை. எந்த வயதுச் சிறுவர்கள், எப்படித் தொழில் கற்றுக் கொள்வது என்ற கேள்விகளுக்குக் கிடைத்த பதில்தான் விமரிசனத்திற்கு உரியது.
