உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/விண்ணிலே மிதந்தோம்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

விண்ணிலே மிதந்தோம் · 80 / 391

விண்ணிலே மிதந்தோம் கல்லக்குடியிலே களம். அதற்கு நான் படைத் தலைவன். அந்த இன்பச் சேதி கேட்டு என்னுடன் தொடர்ந்த முல்லை சத்தி, இருவர் இருதயமும் அந்நிலையை அடைய இதை விட வேறு காரணம் என்ன தேவை? வீதிக்கு வீதி பல வீட்டுப் புலித் தமிழர் வில்லேந்தி வாழ்ந்தனர் என்று நமது புறநானூறு பேசுகிறது. மலர் தூவிய மஞ்சத்திலே இருப்பார்களாம். போர் முரசின் ஒலி கிளம்புமாம். கடைசி முத்தமாயிருப்பினும் இருக்கும் எனக் களிப்புடன் கூறிக் கண்ணீர் நிறைந்த காதலியரின் கன்னங்களிலே அன்பைப் பதித்து விட்டு மறவர்கள் தோள்தட்டி ஓடுவார்களாம்.

எஞ்சியுள்ள தமிழரின் வீரக் கவிதைகள் அந்தத் தித்திப்பான செய்திகளை நமக்குச் சொல்லித்தான் வைத்திருக்கின்றன. அவ்வழி வந்தோர், போர் தவிர, புனிதமான முறை எதையும் கண்டு வழிக்கு வர மறுக்கும் பொல்லாதவர்களை எதிர்த்து முரசு கொட்டுக எனத் தலைவரிடமிருந்து உத்தரவு கிடைத்து விட்டது எனப் கேட்டு, அந்த உத்தரவை முத்தமிட்டுக் களம் நோக்கி முரசு கொட்டச் செல்கிறார்கள் என்றால், ஏன் உவகை கிளம்பாது? உற்சாகம் மோதாது?

உல்லாசப் பண் எழும்பாது? "சூடேறிச் சுழன்றோடும் ரத்த ஓட்டத்திலே-முறுக்கேறி நிற்கும் நரம்புகளிலே-வீங்கிய மலைத் தோள்களிலே தம்பிமார்களின் ஆற்றல் நிறைந்த யுத்த முறைகளிலே தங்களுக்கு நம்பிக்கையில்லையா அண்ணா?" என்று கேட்டுப் பெற்ற 'வரம்' அல்லவா அது? புதிய உரம் பெற்றோம், போர் முனை நோக்கிப் பறந்தோம். இறக்கைகள் ஆகாயக் கப்பலுக்கா அல்லது, எங்களுக்கா என்றே புரியவில்லை. அவ்வளவு மிகுதியான வேகத்தை உணர்ந்தோம்.

போராட்டம் தொடங்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதைத் திருச்சி மாவட்டத்திலே உள்ள பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக மாவட்டம் முழுவதும் சுற்றுப் பயணம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஜுன் 14-ஆம் நாள் சென்னையிலே ஒரு கல்லூரியின் நிதி விழா நாடகத்திலே நடிக்க வேண்டிய பொறுப்பு இருந்தது. தமிழ்ச் சமுதாயத்தின் விழிப்புக்கும் புதிய பாதை காணும் எழுச்சிக்கும் வித்திட்ட வர் மணிவிளக்காம் தியாகராயப் பெரியாரின் பெயரால் அமைந்த தியாகராயர் கல்லூரியின் நிதிக்காகத்தான் நாடகம்.

'பரப்பிரம்மம்' நாடகம்; ஏராளமான வசூல். நானும் சிவாஜி கணேசன் அவர்களும் நடித்தோம். இரவு நாடகத்தை முடித்து விட்டு மறு நாள் திருச்சி சுற்றுப் பயணத்தைத் துவக்க வேண்டிய முக்கியத்துவம் கருதி ஆகாய வழியைத் தேர்ந்தெடுத்தோம். விமானப் பிரயாணிகள் எதை எதை எண்ணிக்கொண்டிருந்தார்களோ தெரியாது; நானும் சத்தியும் மேலிருந்தபடியே பூமியை நோக்கினோம். பச்சைப் பட் டாடை உடுத்திய தமிழகத் திருமாதா, தன்நதிக் கரங்களால் உழவர் பெருமக்களைச் சீராட்டிப் பாராட்டிக் கொண்டிருந்தாள்.

கம்பீரமான தோற்றம்; கனிவு நிறைந கண்கள்; கருணை பொழியும் வதனம்; எழிலாடும் எங்கள் தாய்க்கு அணிகலன்களாக இருந்தன பக்கத்திலே ஒரு பாவையும், அகம் அழுவதை முகத்தால் காட்டிக்கொண்டிருந்தாள். விமானப் பிரயாணிகளை உபசரிக்கும் பொறுப்பு வாய்ந்த அலுவலில் ஈடுபட்டிருக்கும் அந்த இள நங்கை ஏனிப்படி வாட்டமாயிருக்கிறாள் என்பது முதலில் புரியத்தானில்லை. விபத்துக்களைப் பற்றி எண்ணம் வராமல் கண்ணியமான புன்னகை காட்டி, பவ்யமாகப் பத்திரிகைகளை நீட்டி, பழ ரசம் தந்து, பணி சில புரிந்து பாதுகாத்திட வேண்டிய பதவியிலுள்ள அந்தப் பாவை ஏனிப்படித் துன்பக் கேணியில் தள்ளப்பட்டிருக்கிறாள் என்ற கேள்விக் கணைகள் என்னை விட அதிகமாக என் நண்பர் சத்தியையே துளைத்தெடுத்தன "என்ன சார் விஷயம்?"

என்று அவருக்கே இயல்பான துடிப்பு நிறைந்த சொற்களால் என்னைக் கேட்டார். கேட்டுக் கொண்டேயிருந்தார். பிறகு அவரே காரணத்தை எனக்கு விளக்கிடும் அளவுக்குத் தெளிவும் பெற்றார். அவளது சிவந்த கரங்களிலே சில கடிதங்கள் இருந்தன. நான் கடிதமென்று சொல்லுகிறேன். அதை அவள் பொற் சுரங்கமென்பாளோ; புதையல் எடுத்த தனமென்பாளோ; நானறியேன். ஏனெனில், அவைகள் அவள் காதலனின் கடிதங்கள். எங்கேயோ தூரத்தில் இருக்க வேண்டும் அந்தத் துடியிடையாளைத் துணைவியாகப் பெற்றிடத் துடித்தவன்.

அவன்தான் இப்போது அவளிடம் அந்தப் பழைய ஒலைகளின் மூலம் பேசிக் கொண்டிருக்கிறான். நினைவு எத்தனை இன்பமான வேதனை அளிக்கக்கூடியது? அதற்கு அவள் மட்டும் விதி விலக்கா? அவள் கையிலே பழைய கடிதங்கள் நெஞ்சிலே புதிய புதையல்கள். அது போலத்தான்- எங்கள் நினைவினிலே தமிழரின் பழைய வரலாறுகள். நிலைமையோ பூகம்பம் - எரிமலை - பிரளயம்! மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு விரையே, கரும்பே, தேனே என்ற விதத்தில் வர்ணிக்கப் பட்டிருக்கும் காதலனின் கடிதத்தில்...

பொன்னும் முத்தும் பொதிகைச் சந்தனமும் எகிப்துக்கும் ஏதென்சுக்கும் ஏற்றிச் செல்லப்பட்டன என்ற கதையைச் சொல்லும் கடிதமாகக் கூட ஆகும் பாக்கியம் பெறாத தமிழர் முன்னாள் பெருமை. "மலையிடைப் பிறவா மணியே என்கோ யாழிடைப் பிறவா இசையே என்கோ" என்ற கருத்திலே பண்பாடியிருப்பான் கடிதம் தீட்டிய அவள் காதலன். "அக்பர் நுழையா அவனியே யென்கோ கனிஷ்கர் நுழையாத் தரணியே யென்கோ" என்ற புகழ்ச் சிந்தை ஆயாசத்தோடு பாடினோம் நாங்கள்.

ஆகா! நாங்கள் என்று சொல்லிக் கொள்வதிலே இப்போது எவ்வளவு பெருமையிருக்கிறது! மொழி காத்திடும் அணிவகுப்பில் நாங்களும் பெயர் தந்தோம். நாங்களும் என்பது எத்தகைய உணர்ச்சியோடு சொல்லப்படுகிறது தெரியுமா?... விளக்க முடியாத உணர்ச்சி சோக நிலையிலுங்கூட, அந்தப் பெண்மணி தன் அலுவலை, கடமையைச் சரிவரத்தான் செய்தாள். அது போலவே நாங்களும் கடமையைச் செய்யச் சிறகடிக்கும் புறாக்களாகப் பறந்து கொண்டிருந்தோம். மேகங்களை மிரண்டோடச் செய்தபடி பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென்று - பயந்து விடாதீர்கள் - விபத்து ஒன்றுமில்லை!- திருச்சி எல்லையைத் தொட்டு விட்டது.

திருச்சியிலே மத்திய சிறைச் சாலை இருக்குமிடத்திற்கு அருகிலேயேதான் விமான நிலையமும் இருக்கிறது. போராட்டத்திலே ஒரு வேளை நாம் கைது செய்யப் பட்டால், நாம் வரவேண்டிய இடம் அருகிலேதான் இருக்கிறது என்று பேசிக் கொண்டே இறங்கினோம். இருவர் எங்களை இன்முகம் காட்டி எதிர்கொண்டழைத்தனர் - திராவிடப் பண்ணை முத்துக் கிருஷ்ணன், திருச்சி செயலாளர் மணி இருவரும். எம். எஸ். மணியை முன்பெல்லாம் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது.

காரணம் நான் எப்போது திருச்சி சென்றாலும முத்துக் கிருஷ்ணரின் திராவிடப் பண்ணையின் மாடியிலிருந்த கழக அலுவலகத்தில் அமர்ந்து கணக்குப் பார்ப்பதும், கடிதங்கள் எழுதுவதும் ஆகிய இந்த வேலைகளை அவருக்கே உரித்தான சுறுசுறுப்போடு செய்து கொண்டிருப்பாரே தவிர, என்னோடு சரியாகப் பேசக்கூட மாட்டார். பிறகு திருச்சி கழகத்திலே எனக்குத் தொடர்பு அதிகம் வலுப்பட, தோழர் மணி எனக்கு மிகவும் பிடித்தமானவராகி விட்டார்.

கடமையிலே அவருக்கிருந்த கருத்தும், அதற்காக அவர் எடுத்துக் கொண்ட சிரமங்களும் என் அனுதாபத்தை என்னை அறியாமலேயே பெற்றுக் கொண்டு போய் மணியின் கழுத்தில் மாலையாக்கிப் போட்டன. பத்து நாளோ, இருபது நாளோ குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படாமல் கட்சிப் பணிகள் புரிந்தபடி இருப்பார். திராவிடப் பண்ணையின் மாடியிலே தலையணைகூட இல்லாத நிலையில் சுருண்டு படுத்திருப்பார். அவரது மகன்-பெயர் மறந்து விட்டேன். (இப்போது அவனுக்குத் திருமணம் கூட நடந்து விட்டது.

என் தலைமையில்) நான் 'மங்கிணி' என்று கூப்பிடுவேன். அவன் வந்து நிற்பான். "அம்மா கூப்பிட்டார்கள்" என்று கூறியபடி, "மாலையில் வருகிறேன்" என்று கூறி அனுப்புவார். மாலை வரும். ஆனால், கழகப் பணி புரியக் கிளம்பி விடுவார் வேறு ஊருக்கு. இப்படி ஓர் இளம் இயந்திரம் திருச்சிக் கழகத்திற்குக் கிடைத்திருந்தது. முத்துவும் மணியும் வரவேற்றிட, நாங்கள் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டோம். கார் போய்க் கொண்டிருந்தது.

வழியிலே பராங்குசத்தைச் சந்தித்துப் போக முடிவு செய்தோம். பராங்குசத்தைச் சந்திப்பதா? அவர் என்ன, விமான நிலையத்துக்கு வரவில்லையா?" என்று திடீரெனக் கேட்கத் தோன்றுகிறதல்லவா அவருடன் பழகிய தோழர்களுக்கு? ஆமாம், எங்கள் விமானம் இறங்குவதற்குள்ளாகவே, வானத்தில் கொஞ்ச தூரம் பறந்து வந்து, கொஞ்சும் குரலில் "வாங்கே, வாங்கே" என்று ஏகாரத்தை இழுத்தாற் போலக் கூவியழைத்திடும் ஆர்வமும், அன்பும் பெற்ற அந்த நண்பரை நாங்கள் சந்திக்கப் போனதற்குக் காரணம் இல்லாமலில்லை.

மாவட்ட மாநாட்டின் ஓயா உழைப்பின் காரணமாக உடற் கூறுகள் நலிவடைந்து கடுமையான நோயினால் பீடிக்கப்பட்டு 'பிழைப்பாரா?' என்ற சந்தேகத்திற்கிடையே மருத்துவ மனையில் படுத்திருந்தார் பராங்குசம். மருத்துவ மனையில் என்னைக் கண்டதும் கண்ணீர் வடிததார். தன் உடல் நிலை பற்றிய கவலையால் அல்ல; தானும் போர் முரசு தட்ட வர முடியவில்லையே என்று. ஆறுதல் படலம் முடிந்தது. பிறகு விடை பெற்று எங்கள் பிரயாணத் திட்டத்தை நிறைவேற்றத் துவங்கினோம்.