நெஞ்சுக்கு நீதி
மும்முனைப் போராட்டம் · 79 / 391
மும்முனைப் போராட்டம் ரா ஜாஜியினுடைய ஆட்சிக் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மிகப் பெரும் போராட்டங்களில் ஈடுபட நேர்ந்தது. 'முன்னேற்றக் கழகத்தை மூட்டைப் பூச்சி நசுக்குவது போல் நசுக்கிவிடுவேன்' என்று அன்றைய முதலமைச்சர் ராஜாஜி முழக்கமிட்டார்.
அவர் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்திற்குத் தமிழ்நாட்டில் எதிர்ப்பு ஏற்பட்டது. ராஜாஜியின் கல்வித் திட்டத்தை எதிர்த்து ஒரு முனையிலும், பண்டித நேரு தமிழர்களை 'நான்சென்ஸ்' என்று கூறி விட்டார் என்பதைக் கண்டித்து இரண்டாவது முனையிலும், டால்மியாபுரம் புகைவண்டி நிலையத்தின் பெயரை மாற்றிக் 'கல்லக்குடி' எனத் தமிழ்ப் பெயரிடவேண்டும் என்று மூன்றாவது முனையிலும் திராவிட முன்னேற்றக் கழகம் போர்க்களங்களை அமைத்தது.
அந்த அறப் போரில் கல்லக்குடிக் களத்திற்கு நான் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். 1953, ஜூலை 14-ஆம் நாள் குலக் கல்வித்திட்டத்தை எதிர்க்கும் போராட்டம்; ஜூலை 15-ஆம் நாள் கல்லக்குடிப் போராட்டம் என்று நாட்கள் குறிப்பிடப்பட்டன. கல்லக்குடிப் போராட்டம் என் பொது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் ஆகும். ஜூன் 15-ஆம் நாள் காலையில் சென்னையிலிருந்து திருச்சி நோக்கிப் புறப்பட்ட ஆகாய விமானம் என்னையும் தோழர் முல்லை சத்தியையும் தூக்கிக் கொண்டு பறந்தது.
தேவையான, வழக்கமான வேகத்தில் விமானம் பறந்து சென்றாலும்கூடக் காற்றையும் முகில்களையும் அளவுக்கு மீறிய வேகத்துடன் அது கிழித்துச் செல்வதாகவே நாங்கள் எண்ணினோம். உண்மையில் அந்தப் பறக்கும் இயந்திரத்தில் அவ்வளவு வேகமில்லை. எங்களின் மனோவேகம்தான் அப்படியிருந்தது. என்றுமில்லாத புத்துணர்ச்சி; தோளிலே தினவு; உள்ளமெல்லாம் உவகைக் கூத்து. காரண்ம் என்ன?
