உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/முதலாவது மாநில மாநாடு
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

முதலாவது மாநில மாநாடு · 78 / 391

முதலாவது மாநில மாநாடு -ம் ஆண்டு இந்தியாவில் முதல் பொதுத் தேர்தலுக்கான தீவிர ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பொதுத் தேர்தலைப் பற்றி யோசிக்கவும் கழகத்தின் எதிர்காலத் திட்டங்கள் செயல் முறைகள் பற்றி விவாதிக்கவும், 1951-ம் ஆண்டு நவம்பர் திங்கள் 17-ஆம் நாள் காலை மதுரையில் தி. மு. க பொதுக் குழு உறுப்பினர் கூட்டம் அண்ணா அவர்கள் தலைமையில் கூடியது. காலையில் கூடிய பொதுக் குழு மறுநாள் காலையிலேதான் முடிவுற்றது.

இடைவேளையே இல்லாமல் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றன. சென்னையில் நடைபெறும் மாநில மாநாட்டிற்குத் தலைவர், திறப்பாளர் ஆகியவர்களின் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. கே. கே நீலமேகம் அவர்கள் மாநாட்டுத் திறப்பாளருக்குத் தோழர் ஈ. வி. கே. சம்பத்தின் பெயரை முன் மொழிந்தார். நான் மாநாட்டுத் திறப்பாளருக்கு நாவலர் நெடுஞ்செழியன் பெயரை முன் மொழிந்தேன். அதற்கிடையே அண்ணா அவர்கள் மாநாட்டுத் திறப்பாளராக கே.கே.

நீலமேகம் அவர்களே இருக்கட்டும் என்று முடிவு கூறினார்கள். ஆகவே சென்னை மாநாட்டுத் தலைவராக அண்ணா அவர்களும், திறப்பாளராகப் பெரியவர் நீலமேகம் அவர்களும், கண்காட்சித் திறப்பாளராக அண்ணன் சி. பி. சிற்றரசு அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். முதல் பொதுத் தேர்தலில் கலந்து கொள்வதைப் பற்றி நீண்ட நேர விவாதத்திற்குப் பிறகு கீழ்க்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டது: "திராவிடர்களின் கருத்தையறியாமலும். திராவிடர்களின் ஜீவாதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும், ஒரே கட்சியாரின் எதேச்சாதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தைத் தி.

மு. கழகம் கண்டிப்பதன் அறிகுறியாக 1952-ல் நடை பெறும் முதல் பொதுத் தேர்தலில் தி. மு. கழகம் தன்னுடைய வேட்பாளர்களை நிறுத்துவதில்லை. "தி. மு. கழகம் இந்தத் தேர்தலில் கம்யூனிஸ்டுகளையும், காங்கிரஸ் அல்லாத நாணயமுள்ள திறமைசாலிகளான முற்போக்குக் கருத்தினரையும் ஆதரிப்பது; இந்த ஆதரவு கோரி தலைமை நிலையத்திற்கு வேட்பாளர் மனுக்களை அனுப்பி, தி.மு.க. தலைமை நிலையம் குறிப்பிடும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுகின்ற - பொதுச் செயலாளர் அங்கீகாரம் பெற்றுள்ள -வேட்பாளரை ஆதரிப்புது" என்றும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கம்யூனிஸ்டுகள் மறுத்துவிட்டனர். காங்கிரசும், கம்யூனிஸ்டும், தி. மு. க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வேட்பாளரும் போட்டி போட்ட இடங்களில் கழகம், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களை ஆதரித்தது. காங்கிரசும் கம்யூனிஸ்டும் மட்டும் நேரடியாகப் போட்டி இட்ட இடங்களில், கழகம் கம்யூனிஸ்டை ஆதரித்தது. திராவிடக் கழகத் தலைவர் பெரியார் அவர்களும், முதல் பொதுத் தேர்தலில் காங்கிரசை எதிர்த்து, கம்யூனிஸ்டுக்கும், முற்போக்குச் சுயேச்சைக்கும் தம்முடைய ஆதரவை நல்கினார்.

மதுரைப் பொதுக் குழுவின் முடிவுகளின் அடிப்படையில் 1951 - ஆம் டிசம்பர் திங்கள், 13, 14, 15, 16, ஆகிய நாட்களில் சென்னை எஸ். ஐ. ஏ. ஏ. மைதானத்தில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. தமிழகத்தின் வளம் அனைத்தையும் காட்டக்கூடிய ஓவியக் கண்காட்சி ஒன்று மாநாட்டிற்குத் தனிச் சிறப்பை அளித்தது. டிசம்பர் 13-ஆம் நாள் மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாகச் சென்னை அறிவகத்திலிருந்து மாபெரும் ஊர்வலம் புறப்பட்டு, மாநாட்டுப் பந்தலை வந்தடைந்தது.

பல்வேறு வாத்தியக் கருவிகள் முழங்கக் கழகப் பொதுச் செயலாளர் அண்ணா அவர்கள் கழகத்தின் இரு வண்ணக் கொடியை ஏற்றி வைத்தார்கள். மறுநாள் நீலமேகம் அவர்கள் மாநாட்டைத் திறந்து வைத்துச் சொற்பொழிவு ஆற்றிய பின்னர் மாநாட்டைத் தலைமையேற்று நடத்தித் தருமாறு அண்ணா அவர்களைத் திரு என். வி. என். அவர்கள் முன் மொழிந்தார்கள். அதனை வழிமொழிந்து பேசியவர் பட்டியலில் நாவலர் நெடுஞ்செழியன், சம்பத், சிற்றரசு, டாக்டர் தர்மாம்பாள், மதியழகன், தில்லை வில்லாளன், பராங்குசம், சத்தியவாணிமுத்து, அன்பில் தர்மலிங்கம், சிவசாமி, பழனிச்சாமி, ராசமாணிக்கம், கே.

ஆர். ராமசாமி, முல்லை வடிவேலு, நாஞ்சில்மனோகரன்,.சி.வி.எம். அண்ணாமலை ஆகியோர் பெயர்களும் என் பெயரும் இருந்தன. அண்ணா அவர்களை வழி மொழிந்து நான் பேசியது இது தான் : "வாழ்வு மூன்று எழுத்து; வாழ்விற்குத் தேவையான பண்பு மூன்று எழுத்து; பண்பிலே பிறக்கும் அன்பு மூன்று எழுத்து; அன்பிலே சுரக்கும் காதல் மூன்று எழுத்து; காதல் விளைவிக்கும் வீரம் மூன்று எழுத்து; வீரர் செல்லும் களம் மூன்று எழுத்து; களத்திலே பெறும் வெற்றி மூன்று எழுத்து; அந்த வெற்றிப் பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும் அண்ணா மூன்று எழுத்து.

அந்த அண்ணனைத் தலைமையேற்க வழிமொழிகிறேன்." பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு அண்ணனைத் தலைமை ஏற்க வழிமொழிந்து பேசியதை நானும் மறக்கவில்லை; யாரும் மறக்கவில்லை. அந்த அண்ணன் என்னைத் தலைமையேற்கச் சொல்லாமல் சொல்லிவிட்டு, இன்று எங்கோ மறைந்துவிட்டார். இல்லையில்லை; எங்கும் மறையவில்லை; இங்குதான் இருக்கிறார்; நம் இதயத்தின் துடிப்பே அவர்தானே? நடந்து முடிந்த 1952 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெருவாரியான வெற்றியைப் பெற முடியாமல் ஆட்சி அமைப்பதற்கு இழுபறியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது.

அப்போது சென்னை மாநிலத்தின் எல்லை இன்றையத் தமிழ் நாட்டின் அளவை விடப்பெரியது. ஆந்திரா தமிழகத்துடன் இணைந்திருந்தது. தேர்தலில் இழுபறிநிலை ஏற்படவே அரசியலில் சற்று ஒதுங்கியிருந்த ராஜாஜியிடம் சென்று காங்கிரஸ் மந்திரி சபை அமைக்க வேண்டுமென்று காங்கிரசார் முறையிட்டனர். அந்தத் தூதுக் குழுவில் காமராசரும் இருந்தார். ராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வெடித்துக் கிளம்பிக்கொண்டிருந்த நேரம் அது.

ராஜாஜி இல்லையேல் காங்கிரஸ் மந்திரி சபை அமைக்க முடியாது என்ற ஒரு நெருக்கடியான கட்டம் உருவாகிவிட்டது. முதலமைச்சர் பொறுப்பிற்கு ராஜாஜியும் ஒத்துக்கொண்டார். உழைப்பாளிக் கட்சி, காமன்வீல் கட்சி என்ற இரு கட்சிகளைக் காங்கிரசோடு இணைத்துக்கொண்டு அந்தக் கட்சிகளின் தலைவர்களான திரு. எஸ். ராமசாமி படையாச்சி, திரு. எம்.ஏ. மாணிக்கவேலர் இருவருக்கும் தமது மந்திரி சபையில் இடம் அளித்தனர்.