நெஞ்சுக்கு நீதி
கறுப்புக் கொடி · 77 / 391
கறுப்புக் கொடி மத்திய அரசுப் பொறுப்பிலே இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் உயர் பதவிகளிலே உள்ளவர்கள் அனைவருக்கும் கறுப்புக் கொடி காட்டுவது என்று கழகம் எடுத்த முடிவிற்கிணங்க, 1950-ஆம் ஆண்டு மத்திய மந்திரி திவாகர் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்தபோது, சென்னை, காஞ்சி ஆகிய இடங்களில் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. கழகத்தினர் பலர் கைது செய்யப்பட்டார்கள். 1951-ஆம் ஆண்டு ஜனவரித் திங்களில், சென்னை, கோவை, திருச்சி மதுரை ஆகிய இடங்களுக்கு வருகை தந்த அரிகிருஷ்ண மகதாபிற்கு ஆயிரக் கணக்கில் கறுப்புக்கொடிகள் காட்டப்பட்டன.
ஏராளமான தோழர்கள் கைது செய்யப்பட்டனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவையாற்றுக்கு, அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி அவர்கள் வருகை தர இருந்தார்கள். அவர்களுக்குக் கறுப்புக் கொடி காட்ட வேண்டும் என்று அண்ணா அவர்களிடம் நானும், நண்பர்களும் விவாதித்தோம்! பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்றையத் தஞ்சை மாவட்டச் செயலாளரான குடந்தை கே. கே. நீலமேகம் அவர்களைக் கலந்து கொண்டு முடிவிற்கு வாருங்கள் என்று எங்களை அனுப்பி விட்டார்கள்.
நானும் மன்னை நாராயணசாமி அவர்களும், குடந்தை கே. கே. நீலமேகம் அவர்களின் இல்லத்திற்குச் சென்றோம். நீலமேகம் அவர்கள் எதையும் அமைதியாகச் சிந்திக்கும் பெரியவர். தஞ்சை மாவட்டத்தில் போதிய அளவிற்கு முன்னேற்றக் கழகம் வளரவில்லை என்பது அவரது வாதம். ஆகவே கறுப்புக் கொடி நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைய முடியாது என்று எங்களுக்கு முடிவு கூறினார். முடிவை மாற்றிக்கொள்ள வேண்டுமென்றும், தஞ்சை மாவட்டத்தில் பரவலாகக் கழக நண்பர்கள் ஆயிரக்கணக்கில் சிதறிக் கிடக்கிறார்கள் என்றும், அவர்களை எல்லாம் திரட்ட வேண்டுமென்றும் நாங்கள் அவரிடம் வலியுறுத்தினோம்.
பெரியாருக்கு மிகுந்த ஆதரவுள்ள மாவட்டம் தஞ்சை மாவட்டமாகும். அங்கேதான் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தைக் கட்டிக் காப்பதற்கு மனவலி படைத்த மாயவரம் நடராசனும், நாகை மணியும், பட்டுக்கோட்டை அண்ணன் அழகிரிசாமியும், திருவாரூர் ரெங்கராசனும், நாகை காளியப்பனும் தூண்களாக விளங்கினார்கள். முன்னேற்றக் கழகம் உருவான பிறகும், தஞ்சை மாவட்டம் பெரியாரின் திராவிடர் கழகக் கோட்டையாகவும், அதே நேரத்தில் மிட்டா மிராசுகளின் ஆதிக்கம் நிறைந்த காங்கிரஸ் கட்சியின் அரணாகவும் விளங்கி வந்தது.
அங்கே நாங்கள் ஊடுருவிக் கழகப் பணிகளை மேலோங்கச் செய்வதற்கு எடுத்த முயற்சிகள் ஏராளம். அந்த முயற்சிகள் உடனடியாகப் பலனளிக்கா விட்டாலும் மெல்ல மெல்ல- ஆனால் உறுதியாகப் பலனளிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கெல்லாம் இருந்தது. அதனால்தான் பெரியவர் நீலமேகத்திடம் எப்படியும் கறுப்புக் கொடி நிகழ்ச்சிக்கு அனுமதி தர வேண்டுமென்று பிடிவாதம் செய்தோம். இறுதியாக அவர் சம்மதித்து, நிகழ்ச்சிக்கு முன்பு ஒரு மாதம் தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து கூட்டங்கள் நடத்தினால்தான் கறுப்புக் கொடி நிகழ்ச்சிக்கான எழுச்சியை உருவாக்க முடியுமென்றும், பல்வேறு பகுதிகளிலிருந்து கழகத் தொண்டர்களைத் திரட்ட முடியுமென்றும் கூறினார்.
அதற்கு ஒத்துக் கொண்டு நாங்கள் புறப்பட்டோம். மறுநாள் முதல் தஞ்சை மாவட்டத்தில் என்னுடைய சுற்றுப் பயணம் தொடர்ந்தது. 26 நாட்கள் மாவட்டம் முழுமையும் இரவு பகலென்று இல்லாமல் நூற்றுக்கணக்கான கூட்டங்கள்; கறுப்புக் கொடி நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெறும் என்பதற்கான முழு நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுவிட்டது. தொடர்ந்து பல நாட்கள் தஞ்சை மாவட்டத்தில் அல்லும் பகலும் சுற்றியதால் எனக்கு உடல் நலிவு ஏற்பட்ட போதிலும், என் தலைமையில் கறுப்புக் கொடி நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
நிகழ்ச்சிக்கு முதல் நாளே எங்களையெல்லாம் கைது செய்துவிடப் போலீசார் முயன்றார்கள். நான் திருவாரூரிலிருந்து தஞ்சைக்கு ரெயில் மூலம் முதல் நாள் இரவே புறப்பட்டேன். தஞ்சையில் ரெயில் நின்றதும், கீழே இறங்கிய நான் உடனடியாகக் கைது செய்யப்படுவேன் என்பதைப் புரிந்து கொண்டு, கூட்டத்தோடு கூட்டமாக வேறு பக்கமாக வெளியேறி, சட்டைடைக் கழற்றிவிட்டுத் தலையில் ஒரு முண்டாசு கட்டிக் கொண்டு, ரெயில் தண்டவாளத்தின் மீதே நடந்து ஒரு மைல் தூரம் அப்பால் சென்று, மாட்டு வண்டி பிடித்துக் கொண்டு, கரந்தையிலுள்ள நண்பர் வீட்டிற்குச் சென்று விட்டேன்.
ரெயிலடியில் என்னைக் காணாது திகைத்த போவீசார் என்னுடன் வந்த மன்னை நாராயணசாமி, மற்றும் பல தோழர்களைக் கைது செய்து அழைத்துப் போயினர். எப்படியும் முன்கூட்டிக் கைதாகாமல் கறுப்புக் கொடி பிடிக்கப்படும் இடத்திற்குச் சென்று விட வேண்டு என்பதிலேயே என் கவனம் எல்லாம் இருந்தது. அற்குள் போலீசார் கரந்தையிலுள்ள புலவர் ஏ. கே. வேலனை தங்கள் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு, "கருணாநிதி இருக்குமிடத்தைக் காட்டு" என்று வற்புறுத்தியிருக்கிறார்கள்.
அவரும் ஜீப்பில் பல இடங்கள் சுற்றி, 'அவர் இருக்குமிடம் எனக்குத் தெரியாது" என்று கைவிரித்து விட்டார். மறுநாள் காலை ராஜாஜி தஞ்சையிலிருந்து வெண்ணாற்றின். கரையிலுள்ள பள்ளி அக்ரகாரம் என்ற ஊரின் வழியாகத் திருவையாறு செல்கிறார் என்று கேள்விப்பட்டதும், கறுப்புக் கொடி பிடிக்க வந்த தொண்டர்களை எல்லாம் ராஜாஜி செல்லும் வழியான பள்ளி அக்ரகாரத்தில் அணிவகுக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டது. இரவு வரையில் போலீசார் கண்ணில் படாமல் மறைந்திருந்த நான், மறுநாள் காலை வண்டி வாகனங்களில் சென்றால் இடையிலேயே கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில், தங்கியிருந்த இடத்திலிருந்து குறுக்குப் பாதை வழியாக நடந்தே சென்று கறுப்புக் கொடி காட்டும் தொண்டர்களின் அணி வகுப்பிலே திடீரென நுழைந்தேன்.
என்னைக் கண்டதும் போலீசார் திடுக்கிட்டு விட்டார்கள். அந்த இடத்தில் என்னைக் கைது செய்தால் பரபரப்பான சூழ்நிலை ஏற்படும் எனக் கருதி, அந்த நடவடிக்கையைக் கைவிட்டு விட்டார்கள். வெற்றிகரமாக நடக்குமோ என்று ஐயப்பட்டுக் கொண்டிருந்த குடந்தை கே. கே. நீலமேகம் அவர்கள் மகிழ்ச்சியடையத் தக்க வண்ணம், கறுப்புக் கொடி நிகழ்ச்சி அமைதியாகவும் அருமையான வெற்றியோடும் முடிவுற்றது. பள்ளி அக்ரகாரத்திலிருந்து தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலமாகவே தஞ்சை ரெயிலடி வரையில் சென்றது.
அந்த ஊர்வலத்திற்கு நானே தலைமை வகித்து நடந்து சென்றேன். ஊர்வல முடிவில், தஞ்சை ரெயிலடிக்கு அருகில் அனைவருக்கும் நன்றி கூறி உரையாற்றினேன். டி.கே. சீனிவாசன் போன்ற நண்பர்களிடம் விடை பெற்றுக் கொண்டு திருவாரூர் செல்ல ரெயில் ஏறும்போதே கடுமையான காய்ச்சலால், உடலெல்லாம் கொதித்தது. இரண்டு விலாப்புறங்களிலும் பொறுக்க முடியாத வலி வேறு. அத்துடன் திருவாரூர் சென்று படுத்தவன்தான்; ஆறு மாதம் படுக்கையை விட்டு எழவில்லை.
விலாவின் இரு புறங்களிலும் 'புளூரசி' வியாதி தாக்கிப் பிழைப்பதே கடினம் என்ற அளவிற்கு நிலைமை முற்றிவிட்டது. என் உடல் நலம் விசாரிக்க அண்ணா அவர்களும், நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ஆர். அவர்களும், அன்பில் தர்மலிங்கம் அவர்களும் திருவாரூரில் வந்து என்னைப் பார்த்ததும் நெஞ்சுருகிப்போயினர். அருகாமையிலேயே அண்ணா அவர்கள் நீண்ட நேரம் உட்கார்ந்து எனக்குத் தைரியமும் ஆறுதலும் கூறினார். அத்துடன், "ஏன் இப்படி ஒரு மாதம் தொடர்ந்து கூட்டங்களில் பேசுகிறாய்?'
என்றும் கண்டித்தார். என் நினைவைவிட்டு அகலாத காட்சிகளில் என்றுமே அதுவும் ஒன்று.
