உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/இந்தி எதிர்ப்பில் தந்தையும் நானும்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

இந்தி எதிர்ப்பில் தந்தையும் நானும் · 76 / 391

இந்தி எதிர்ப்பில் தந்தையும் நானும் மு ன்னேற்றக் கழகத்தின் பிரச்சார சக்தி தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் பயனளிக்கத் தொடங்கியது கண்டு, திராவிடர் கழகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களும் தமது இயக்கத்தை முடுக்கிவிட முயன்றார். இன்னமும் தன்னைப் பின்பற்றுவோரையும் முன்னேற்றக் கழகம் ஈர்த்துவிடக்கூடாது என்பதில் அவர் அதிக அக்கறை காட்டினார். திராவிடர் கழகத்தில் பிளவு ஏற்பட்டு, தி.மு. கழகம் தோன்றிய போது, ஒரு பகுதியினர் பெரியாருடன் இருந்துவிட்டார்கள் என்றால், அதற்கு அவர்களது கொள்கைப் பிடிப்புத்தான் காரணம் என்று கூறுவதை விட, அவர்களுக்கும் பெரியாருக்கும் இடையே ஏற்பட்ட பாசப் பிணைப்புத்தான் முழு முதற் காரணம் என்றால் அது மிகையாகாது.

அங்ஙனமாயின், அண்ணா போன்றவர்கள் பெரியாரிடம் வைத்திருந்த பாசமும் பற்றும் குறைவானவை என்றும் பொருளல்ல. அண்ணாவும், அவர் தம்பிமார்களும் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியும், அரசியல் சூழ்ச்சிகள் பற்றியும் தங்கள் சிந்தனையைத் திருப்பினார்கள். தூத்துக்குடி சாமி போன்றவர்கள் பெரியாரின் அன்பு அரவணைப்புக்கு ஆளானவர்கள். திராவிட நாட்டின் கவர்னர் ஜெனரலாக வரவேண்டியவர் கே.வி.கே. சாமி என்று பெரியார் அவர்கள் மன நிறைவோடு பாராட்டியதையும் மறந்துவிட்டு, தோழர் சாமி, முன்னேற்றக் கழகத்தில் ஈடுபட்டுத் தன் உயிரையும் ஈந்தார் என்றால் அறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கிய கழகத்தின் கவர்ந்திழுக்கும் கொள்கையின் மேன்மையை விளக்கவும் வேண்டுமோ?

தி.மு.க. வின் வேகமான வளர்ச்சி கண்டு பெரியார் சோர்ந்து போய்விடவில்லை. நாட்டின் கவனத்தை ஈர்க்கத்தக்க போர்க்களங்கள் சிலவற்றை அமைத்தார். அவைகளில் முக்கியமானது வடநாட்டுக் கடை மறியல்! அடுத்தது சாதிப் பெயர் தாங்கிய உணவு விடுதிகளின் முன் மறியல்! ஏற்கெனவே பெரியார் துவக்கிய கிளர்ச்சியின் காரணமாகப் புகை வண்டி நிலைய உணவு விடுதிகளில் சாதிப் பெயர் எழுதப்பட்ட பலகைகள் அகற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து சாதி ஒழிப்புக்கு அவர் நடத்திய அடுத்த கிளர்ச்சியிலும் அவர் வெற்றி பெற்றார்.

வடநாட்டுக் கடை மறியல் சில மாதங்கள் தொடர்ந்து நடை பெற்றுப் பிறகு நிறுத்தப்பட்டது. புகை வண்டி நிலையப் பெயர்ப் பலகைகளில் ஊரின் பெயர் இந்தியில் முதல் வரிசையில் எழுதப்பட்டிருப்பதை எதிர்த்துப் பெரியாரும், திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் தனித் தனியே போர்க்கொடி உயர்த்தினர். நாடெங்கும் உள்ள புகை வண்டி நிலையங்களில் முதல் வரிசையில் உள்ள இந்தி எழுத்துக்களைத் தார் கொண்டு அழிப்பது என்ற இயக்கம் தொடங்கப் பெற்றது.

பெரியாரும் அவரது தொண்டர்களும், அதேபோல் அண்ணாவும் அவரது தம்பிமார்களும் ஒரே நாளில் அந்தப் போரில் குதிக்கும் நிலை உருவாயிற்று என்றாலும், அணிகள் தனித் தனியாகவே செயல்பட்டன. அறிஞர் அண்ணா, நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி, நண்பர் ஈ.வே.கி. சம்பத் ஆகியோர் கோவை ரயிலடியில் இந்தி எழுத்துக்களை அழித்தனர். எனக்கு அந்தப் போராட்டத்தில் ஒரு பெரும் நல்வாய்ப்பே கிடைத்தது. திருச்சி ரயிலடியில் பெரியாரும், நானும் இந்தி எழுத்துக்களை அழித்தோம்.

ரயிலடிக்களம் முடிந்து நானும் ஆயிரக்கணக்கான கழகத் தோழர்களும் கொடி ஏந்தியவாறு திருச்சி நகர வீதிகள் அனைத்திலும் நடந்து சென்றே ஊர்வலம் நடத்தினோம். தெப்பக்குளம் வழியாக ஊர்வலம் வந்தபோது, காரில் சென்று கொண்டிருந்த பெரியார் அவர்கள் இறங்கி, எங்களை வாழ்த்தி வழி அனுப்பினார். இரு வேறுபட்ட கட்சிகளாகப் பிரிந்த பிறகு ஏற்பட்ட இந்தத் திடீர்ச் சந்திப்பில் பாசமும் பற்றும் பட்டுப் போகவில்லை என்ற உண்மை ஒளிவிடலாயிற்று.

பெரியாரின் காரைக் கடந்து எங்கள் ஊர்வலம் நகர்ந்தபோது என் கண்களில் தெப்பக் குளத்துக்கு அருகே உள்ள அஞ்சல் நிலையம் தென்பட்டது. அத்துடன முதல் வரிசையில் மின்னிய இந்தி எழுத்துக்களையும் ஆத்திரத்துடன் நோக்கினேன். ஆனால் அந்தப் பலகை சுலபமாக அழிக்கக்கூடிய எட்டும் தொலைவில் இல்லை. கட்டடத்தின் உச்சியில் இருந்தது. ஏறுவதற்கும் வசதியில்லை. ஏறினாலும் பலகையிடம் செல்வதற்கு இயலாத நிலையில், சறுக்கலான கூரை வேறு!

எப்படியும் அதனை அழித்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தேன். இரண்டு தோழர்களின் தோளிலே ஏறி, கட்டடத்தின்மீது தாவி ஏறினேன். சறுக்கலான பகுதியில் படுத்தவாறு முன்னேறி அஞ்சல் நிலையத்தின் இந்திப் பலகையை அணுகினேன். 'டென் சிங்' இமாலயச் சிகரத்தில் ஏறியபோதுகூட அவ்வளவு மகிழ்ந்திருக்க மாட்டான். அதையேன் சொல்ல வேண்டும்? முதன் முதலில் 'ஆம்ஸ்ட்ராங்' சந்திரனில் காலடி எடுத்து வைத்தபோதுகூட என்னைப் போல மகிழ்ந்திருக்க மாட்டான்.

அந்தச் சிறிய கட்டடத்தின் சறுக்குப் பகுதியில் ஏறி, இந்தி எழுத்துக்களை அழித்ததை நான் அவ்வளவு மகிழ்ச்சியோடும், உணர்ச்சியோடும் கொண்டாடினேன். என்னதான் கூட்டங்கள். போராட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தினாலும் திருச்சி நகரில் தி மு. கழகத்தின் வளர்ச்சி, திராவிடர் கழகத்தின் வளர்ச்சியை வெற்றி காண முடியவில்லை. இரண்டுக்கும் மேலாகக் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவும் திருச்சி விளங்கிற்று. இதற்கிடையே திருச்சியில் கழகத் தோழர்களிடம் உள்ளூர வளர்ந்த கசப்பு உணர்ச்சி வெளிப்படையாகவும் பரவத் தொடங்கியது.

தோழர் சாம்பு, சம்பத்தின் நண்பர். அதனால் திருச்சியில் சாம்புவின் வீடு அண்ணா அடிக்கடி வந்து தங்கும் வீடாயிற்று. அதன் தொடர்பாகச் சாம்பு வீட்டுப் பையன் ஒருவன் அண்ணா வீட்டிலேயே சாப்பிட்டுக் கொண்டு சென்னையில் படித்துக்கொண்டிருந்தான். பிறகு அவன் காங்கிரசுக்குப் போய் அண்ணாவிற்குச் செலுத்த வேண்டிய நன்றியை, அவரைத் தரக்குறைவாகப் பேசுவதன் மூலம் செலுத்தத் தொடங்கினான். இப்படிப்பட்ட நன்றியுள்ள மனிதர் பலரை அண்ணாவும், நானும் எங்கள் வாழ்வில் அதிகமாகச் சந்தித்திருக்கிறோம்.

(நான் இன்னும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்!) சாம்பு வீட்டுக் குடும்ப நண்பராக அண்ணா இருந்தபோது திருச்சியில் உள்ள கழகத் தோழர்களுக்கும், சாம்புவின் நண்பர்களான கழகத் தோழர்களுக்கும் மாற்சரியங்கள் பெருமளவில் வளர்ந்தன. 'நண்பர் வேறு-கட்சி வேறு' என்ற கொள்கையில் அண்ணா அவர்கள் திருச்சியில் பிரச்னைகளை அணுகினார்கள். இருதரப்பாரிடமும் ஒற்றுமையை ஏற்படுத்த அண்ணா அவர்கள் எவ்வளவோ முயன்றும் பலனில்லாமல் போயிற்று.

திருச்சியைத் திருத்த அண்ணா கடைசியாக ஒரு வழியைக் கையாண்டார். அதுதான் அண்ணா அவர்கள் திருச்சிக்கு வருவதில்லை என்பது! எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைத்தபோதெல்லாம் அவர் மறுத்து விட்டார். இரு குழுவினரின் சச்சரவில் கழக வளர்ச்சி குறைந்துவிட்டது என்பது அவருக்குள்ள அளவு கடந்த வேதனை. திருச்சியில், காங்கிரசும், கம்யூனிஸ்டுக் கட்சியும், திராவிடர் கழகமும் வேகமாக வளர்ந்தன. தி.மு.க. சரியத் தொடங்கியது.

திருச்சியைப் பற்றிக் கவலை கொண்ட நண்பர்கள் அன்பில் தர்மலிங்கம், பொன்மலை பராங்குசம், எம்.எஸ். மணி, புண்ணை முத்துகிருஷ்ணன் ஆகியோர், எப்படியும் அண்ணாவை அழைத்துத் திருச்சியில் ஒரு கூட்டம் நடத்திவிடத் துடித்தனர். அதற்கான தூதுவராகத் தோழர் பராங்குசத்தைச் சென்னைக்கு அனுப்பினர். சென்னையிலிருந்து நானும், பராங்குசமும், செழியன், வாணன் ஆகியோரும் காஞ்சிக்குச் சென்றோம். பராங்குசம், அண்ணாவிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார்.

நாங்களும் அவருக்காக அண்ணாவிடம் நீண்ட நேரம் பரிந்து பேசினோம். பயனில்லை. அண்ணா கண்டிப்பாக மறுத்துவிட்டார். "திருச்சியில் உள்ள உள்சண்டையின் காரணமாகக் கழகத்தையே குலைத்துவிட்டீர்கள். அதைச் சரி செய்து என்னிடம் காட்டும் வரையில் நான் திருச்சி நகரக் கூட்டத்தில் பேசமாட்டேன்."

இது அண்ணாவின் பதில் "நீங்கள் வந்து பேசினால்தானே அண்ணா, எல்லாம் சரியாகும்?" இது பராங்குசத்தின் வேண்டுகோள். "முதலில் கருணாநிதியை வைத்து நகரில் கழகக் கூட்டங்களை நடத்து! கழகத்திற்கு உயிர் இருக்கிறது என்று தெரிந்தால் நான் வருகிறேன்!"

இது, அண்ணாவின் முடிவான வார்த்தை. பராங்குசம் அழுது கொண்டே புறப்பட்டு விட்டார். "என்ன அண்ணா, இப்படிச் சொல்லிவிட்டீர்களே?" என்று நாங்கள் கேட்டதற்கு, "இதுதான் நல்ல விளைவைக் கொடுக்கும்" என்று அண்ணா விடையிறுத்தார். அண்ணாவின் திட்டவட்டமான கண்டிப்பு நிறைந்த பதிலைக் கேட்ட திருச்சித் தோழர்கள் மிகவும் நொந்து கழகத்திலிருந்தே ஒதுங்கி விடலாமென முடிவு செய்திருப்பதாக எனக்குச் செய்தி வந்து, உடனே நான் திருச்சிக்கு ஓடினேன்.

கழகத் தோழர்கள் அனைவரையும் கூட்டி வைத்துப் புண்பட்டுப் போயிருக்கிற அண்ணாவின் உள்ள உணர்ச்சிகளை அவர்களுக்கு விளக்கினேன். "நீங்கள் கட்டிக் காக்கிற ஒற்றுமையும், வளர்த்துக் காட்டுகிற கழக வளர்ச்சியும், அணணாவைத் தானாகவே கூப்பிட்டு வரச் செய்யும்" என்று உறுதியளித்தேன்.

ஒரு சில நண்பர்கள் தங்களோடும், கழக அமைப்போடும். ஒத்துப்போக மறுப்பதையும் முரண்பட்டு நடப்பதையும் சுட்டிக்காட்டி, அதற்கு என்ன செய்வது என்று அமைப்பினர் அங்கலாய்த்தனர். "நீங்கள் அமைப்பு ரீதியாகக் கழகப் பணிகளைத் தொடர்ந்து செய்தால். இறுதியில் அண்ணாவின் தீர்ப்பு, நியாயவாதிகளின் பக்கம் தான் இருக்கும்" என்பதை அவர்களுக்குச் சுட்டிக் காட்டினேன். சோர்ந்துபோன தோழர்களிடம் புதிய சுறுசுறுப்புத் தோன்றியது 'அண்ணா வாழ்க!'

என்று ஆர்த்தெழுந்தனர். அடுத்த வாரமே திருச்சி நகரில் ஐம்பது இடங்களில் நான் கொடிகளை ஏற்றி வைப்பது என்றும், ஐந்தாறு கூட்டங்களில் பேசுவது என்றும் திட்டம் தீட்டப் பெற்றது. தொடர்ந்து சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நகர் எங்கும் தோரணங்கள்! ஐம்பது இடங்களில் கொடியேற்று விழாக்கள்! ஆட்டோ ரிக்‌ஷா ஒன்றில் என்னை உட்கார வைத்து ஐம்பது இடங்களுக்கு ஊர்வலம் விட்டனர். திருச்சியில் ஏற்பட்ட அந்த உற்சாகமும், பரபரப்பும் எல்லா ஊர்களுக்கும் பரவின!

சேலத்தில் அறுபது கொடி! கோவையில் எழுபது கொடி! இப்படி எனக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடாயின. கொடியேற்று விழாக்கள் ஒரு புதுமையான பிரச்சார சாதனமாக விளங்கத் தொடங்கின! திருச்சி மாவட்டம் எங்கும் சூறாவளி வேகத்தில் கழகத் தோழர்களின் சுற்றுப் பயணங்கள்! ஓராண்டு காலத்தில் திருச்சி நகரம் ஒப்பற்ற வளர்ச்சி கண்டது. அண்ணா மகிழ்ந்தார். தேங்கிக் கிடந்த கைத்தறித் துணிகளை விற்பதற்காக தி.மு.க. ஒரு நாள் குறித்தது. திருச்சியில் யார் விற்பது என்ற கேள்வி எழுந்த போது, "நான் விற்கப் போகிறேன்!"

என்று ஒரு குரல் ஒலித்தது. ஆம்! அது அண்ணாவின் குரல்தான்! கனிவு ததும்பப் பேசியே பல வெற்றிகளைக் கண்ட அண்ணன். கண்டிப்புக் காட்டியதன் மூலம் திருச்சி நகரில் கழகத்திற்குப் பெரும் வெற்றியைத் தேடித் தந்தார். எங்கே தனது மனத்தைச் சிரமப்பட்டுக் கல்லாக்கிக்கொண்டு கழகக் காவலர்களிடம் அண்ணா அவர்கள் கடுமையாக நடந்து கொண்டார்களோ, அதே திருச்சியிலேதான் 1956-ஆம் ஆண்டு கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்துவதற்கு ஒப்புதல் அளித்தார்கள்.

அண்ணாவின் சோதனைகளுக்கு ஆளானவர்களோ, அல்லது ஆளான அமைப்புக்களோ, வெகு விரைவில் அவரது அன்புக்கும் அரவணைப்புக்கும் உரித்தாகி விடும் என்ற நிகழ்ச்சிக்கு இது ஒன்றே தக்க எடுத்துக்காட்டாகும். திருச்சி நகரவீதிகளிலே அண்ணா அவர்கள் கைத்தறி ஆடைகளை விற்றதுபோல், கழக முன்னணியினர் அனைவரும் தமிழகத்தில் பல்வேறு நகரங்களிலும், சிற்றூர்களிலும் கைத்தறி மூட்டைகளைத் தலையிலும், தோளிலும், முதுகிலும் சுமந்து தெருத் தெருவாக விற்றனர்.

"செந்தமிழ் நாட்டுக் கைத்தறி நெசவுச் சேலைகள், வேட்டிகள் வாங்குவீர்; நம் திராவிட நாட்டினர் சேமம் வேண்டிச் சிங்கார ஆடைகள் வாங்குவீர்!" என்ற உடுமலை நாராயணக் கவியின் பாடலை முழக்கியவாறு கழகத்தினர் ஒரு நாள் அடையாள பூர்வமாகக் கைத்தறி ஆடைகளை விற்றனர். அப்படி விற்ற மொத்தத் தொகை ஒரே நாளில் ஒருலட்சம் ரூபாய்! சென்னையில் நான் விற்பனையை மேற்கொண்டேன். இருபதாயிரம் ரூபாய்க்கு விற்பனையாயிற்று. சந்தை இல்லாமல் தேங்கிக் கிடந்த கைத்தறி ஆடைகள், அந்த ஒரு நாள், கழகத்தினர் செய்த பிரச்சார முயற்சியின் காரணமாக சுறுசுறுப்புடன் சந்தையைப் பிடித்துக்கொண்டன.

நெசவாளர்களின் கண்ணீர் துடைக்கப்பட்டது. கழகத்தினர் அனைவரும் கைத்தறித் துணிகள்தான் அணிய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவுக்குப் பிறகு கைத்தறிக்குப் புதிய செல்வாக்கே உதயமாயிற்று. கழகத்தின் இரு வண்ணக் கொடி போட்ட வேட்டிகளும், சேலைகளும் இன்று ஆயிரக் கணக்கில் விற்பனையாவதற்கும், நாடெங்கும் கைத்தறியின்மீது புது மோகம் ஏற்படுவதற்கும் கழகத்தினர் செயல்தான் காரணம் என்பதை நெசவாளர்கள் மறக்கவே மாட்டார்கள்.

நெசவாளர்களின் துயர் துடைத்ததைத் தஞ்சையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துயர் துடைக்கும் பணியைத் தி.மு. கழகம் ஏற்றுக் கொண்டது. தஞ்சையில் வீசிய புயல், கடற்கரையோரத்தில் நாகை, வேதாரண்யம் போன்ற இடங்களில் பெரும் சேதத்தை விளைவித்து இருந்தது. மீனவப் பெருமக்கள் பெருத்த இழப்புக்கு ஆளாகியிருந்தனர். உடுப்பதற்கு உடையுமின்றித் தவியாய்த் தவித்தனர். அப்படிப் பட்டவர்களுக்கு உடை வழங்குவதற்காகத் தஞ்சை அல்லாத வேறு மாவட்டங்களில் நிதி வசூலிப்பது என்று கழகச் செயற் குழுவில் முடிவெடுக்கப்பட்டது.

அந்த நிதிக் குழுவின் தலைமைப் பொறுப்பைக் கழகம் எனக்குத் தந்தது, பணியினை விரைவிலேயே முடிக்குமாறு கட்டளையிட்டது. 25,000 ரூபாய் வசூலிக்க வேண்டும் என்று செயற்குழு முடிவெடுத்திருந்த போதிலும் 35 000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகை வசூலிக்கப் பட்டது. அந்தத் தொகைக்குத் கைத்தறித் துணிகள் வாங்கப் பெற்று, அவைகளை, அரசாங்கச் சார்பில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறு தரப்பட்டது. இந்தத் தொகையினைத் திரட்டிட உண்டியல் ஏந்தியும், நாடகங்கள் ஆடியும் கழகம் எடுத்துக் கொண்ட முயற்சி சாதாரணமானதல்ல.